ஓட்டகோவில்பட்டி, செக்கடிப்பட்டி, சேக்கிபட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்:
மக்களின் உறுதியான போராட்டத்திற்கும்
இயக்கங்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி!
கடந்த அக்டோபர் மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் மேலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை கிராம சுற்றுவட்டாரங்களில் பல வண்ண கிரானைட் கற்களை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தது.
சேக்கிப்பட்டி, ஓட்டக்கோவில்பட்டி மற்றும் செக்கடிப்பட்டி ஆகிய கிராமங்களில் ஏலம் விடப்படவுள்ள பாறைகள் அமைந்துள்ளன. இந்த மூன்று கிராம மக்களும் கிரானைட் ஏலத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க சென்ற போது மாவட்ட ஆட்சியர் கிராம மக்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. வேறு அலுவலரிடம் மனுவை கொடுக்கச் சொல்லி விவசாயிகளை அவமதிப்பு செய்து அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 26 – 27 தேதிகளில் தொடர் காத்திருப்பு போராட்டம் சேக்கிப்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் நடந்த மக்களின் தொடர் போராட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றனர். போராட்டம் குறித்து பல்வேறு தளங்களிலும் செய்திகள் வெளியானது. இதனால், அரசு ஏலத்தை நவம்பர் 30-ஆம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக அறிவித்தது. மக்களும் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நவம்பர் 30 அன்று நடக்கவிருக்கும் ஏலத்தை ரத்து செய்வது பற்றி எந்த அறிவிப்பும் நவம்பர் 26 வரை வராததால் ஓட்டகோவில்பட்டி, செக்கடிப்பட்டி சேக்கிபட்டி மக்கள் நவம்பர் 27 அன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தைத் துவங்கினர். போராட்டத்தை ஆரம்பித்த உடனே மேலூர் வட்டார தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி ”இன்று மாலை 3 மணிக்கு நல்ல அறிவிப்பு வரும்; போராட்டத்தை கைவிடுங்கள்” என அறிவித்தார். மூன்று மணிக்கு அறிவிப்பு வரவில்லை என்றால் பந்தல் போட்டு நிரந்தரமாக அமரவிருப்பதாக மக்கள் அறிவித்தனர்.
மூன்று மணிக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. அதிகாரிகளின் அறிவிப்பு ஏமாற்றானது என்பது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டது. அதைத் தொடர்ந்து மக்கள் போராட்ட பந்தலை அமைத்தார்கள். கடும் வெயிலிலும், இடையிடையே மழை குறுக்கிட்டாலும் தொடர்ந்து போராடினார்கள். இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு போராடியது ஓட்டகோவில்பட்டி பெண்களும் இளைஞர்களும் தான். ஊரில் உள்ள பெரியவர்களும் தொடர் போராட்டத்தை ஆதரித்து நின்றனர். அரசு அதிகாரிகள் ”ரத்து” என்று அறிவிப்பை வெளியிடாமல், தொடர்ந்து பேச்சுவார்த்தை என ஏமாற்ற முற்பட்டாலும் மக்கள் உறுதியுடன் இருந்தனர். கிரானைட் ஏலம் ரத்து என்ற அறிவிப்பைத் தாண்டி வேறு எதையும் ஏற்க மக்கள் தயாராக இல்லை. மக்கள் காட்டிய இந்த உறுதிதான் அதிகார வர்க்கத்தைப் பணிய வைத்துள்ளது.
படிக்க: கிரானைட் குவாரி ஏலத்தை இரத்து செய்யக்கோரி போராடிய தோழர் செல்வராஜ் மீது பொய் வழக்கு!
இதைத் தொடர்ந்து நவம்பர் 28, 29 ஆகிய இரு தேதிகளிலும் போராட்டம் தொடர்ந்தது. 28-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் கம்பூர் செல்வராஜ் அவர்களை இரவு ஒரு மணி அளவில் போலீசு தேடிவந்தது. போராட்ட பந்தலில் படுத்திருந்த மக்களிடம் ”வெளியூரில் இருந்து வந்தவர்கள் எல்லாம் யார்?” என அச்சுறுத்தும் வகையில் வினவியது.
இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் மீறி இளைஞர்களும் பெண்களும் போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்தனர். இடையிடையில் வந்த போலிசு “பந்தல் போட அனுமதி வாங்கினீர்களா? மைக் செட் வைக்க அனுமதி வாங்கினீர்களா? நாளைக்கு ஏதாவது ஒரு விஷயம் என்றால் எங்களிடம் தான் நீங்கள் வரவேண்டும்” என பல வகைகளில் அச்சுறுத்தினாலும் அதை மக்கள் உறுதியாக எதிர்கொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள், கிரானைட் கொள்ளை யால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளையும் பாதிப்புகளையும் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கினர்.
கிரானைட் ஏலம் நவம்பர் 30-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பிறகு, மதுரையில் மக்கள் அதிகாரம் சார்பாக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்பட்டது. கிரானைட் ஏலத்தை ரத்து செய்ய கோரியும், தோழர் செல்வராஜ் மீது CrPC 110-இன் கீழ் போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் பல்வேறு இயக்கங்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்த பறம்பு மலை பாதுகாப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்டம், மேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பல்வேறு ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்த போராட்டம், போராட்டத்தின் இறுதி நாளான நவம்பர் 29 அன்று மதுரையில் மக்கள் இயக்கங்கள் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு என தொடர்ந்து கிரானைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த இயக்கங்களும் களத்தில் இறங்கினர். கருத்து ரீதியாக பல வேறுபாடுகள் இருந்தாலும் கிரானைட் ஏலத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், மலைகளை இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை அனைவரும் ஆதரித்து நின்றனர்.
இறுதியாக, நவம்பர் 29-ஆம் தேதி மக்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாத அரசைக் கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து இரவு ஒட்டுமொத்த கிராம மக்களும் போராட்ட பந்தலிலேயே ”இனி என்ன செய்யலாம்” என்ற ஒரு ஜனநாயக கருத்துக்கணிப்பை நடத்தினர். இதில் பெருவாயான மக்கள் காத்திருப்பு போராட்டத்தை கிரானைட் ஏலம் ரத்து செய்யப்படும் வரை தொடர வேண்டும் என முடிவு செய்து போராட்ட பந்தலில் அறிவித்தனர்.
இந்த உறுதியான மக்களின் போராட்டத்திற்கு பணிந்து தான் அரசு நவம்பர் 29-ஆம் தேதி இரவு “கிரானைட் ஏலம் ரத்து” என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பை ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகுந்த உற்சாகத்துடன் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.
ஆரம்பத்திலிருந்தே வெளியூர்க்காரர்கள் போராட்டத்திற்கு வரக்கூடாது என மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தது உளவுத்துறை போலீசு. அதையெல்லாம் முறியடித்து மக்களுடன் நிற்பவர்களை மக்கள் அரவணைத்து ஏற்றுக் கொண்டனர்.
இந்த ஏல அறிவிப்பு ரத்து என்பது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. ஆனால் கிரானைட் கொள்ளையர்களும் அரசும் தற்காலிகமாகத்தான் பின்வாங்கியுள்ளார்கள். 2012-இல் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு முயற்சித்தது போல் மீண்டும் வருவார்கள். ஏனென்றால் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை சுருட்டுவதற்கான அவர்களின் தாகம் அடங்காதது. அதை எச்சரிக்கையுடன் நின்று முறியடிக்க ஓட்டகோவில்பட்டி, செக்கடிப்பட்டி, சேக்கிப்பட்டி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.
கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டம் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் என அனைத்திற்கும் மக்களின் ஒற்றுமையும் இயக்கங்களின் ஒற்றுமையும் அவசியமானது என்பதையே இந்த கிரானைட் எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றி பறைசாற்றுகிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம்.
97916 53200, 78268 47268
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube