மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி அருகிலுள்ள கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் செல்வராஜ் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக களத்தில் நின்று குரல் கொடுப்பவர், போராடுபவர்.
தற்போது மதுரை மாவட்டத்தில் மீண்டும் கிரானைட் குவாரிகள் இயங்குவதற்கு அரசு ஏல தேதியை அறிவித்தது. அதை எதிர்த்து சேக்கிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் அனைவரும் கிரானைட் ஏலத்தை இரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். சேக்கிப்பட்டியின் அருகில் உள்ள ஊர்தான் அலங்கம்பட்டி மற்றும் கம்பூர். கம்பூரை சேர்ந்த தோழர் செல்வராஜ் கிரானைட் குவாரிக்கு எதிரான சேக்கிப்பட்டி மக்களின் உடன் நின்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
சேக்கிப்பட்டி மக்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் காரணமாக கிரானைட் ஏலத்திற்கான தேதியை நவம்பர் 30-க்கு மாற்றி வைத்தது மாவட்ட நிர்வாகம். இந்நிலையில், தேதியை மாற்றி வைத்துவிட்டு இந்தப் போராட்டத்தை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என அரசும் கிரானைட் கொள்ளையர்களும் இணைந்து செயல்படுகின்றனர்.
ஒருபுறம், ஊர் மக்கள் மற்றும் ஊர் தலைவர்கள் மத்தியில், “வெளியூர்களிலிருந்து வரக்கூடிய அமைப்புகளை சேர்ந்தவர்களை உள்ளே விடாதீர்கள், அவர்கள் தீவிரவாதிகள்” என அரசின் ஏவல் துறையான கியூ பிரிவு போலீசு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. மற்றொருபுறம், தோழர் செல்வராஜ் மீது ‘பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்’ என CRPC 110 பிரிவின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனை நியாயப்படுத்த தோழர் செல்வராஜ் மீதான இரண்டு வழக்குகளை கணக்கு காண்பிக்கிறார் வட்டாட்சியர். அதில் ஒரு வழக்கு சாணிப்பட்டி எனும் ஊரில் சாராயக்கடையை திறப்பதற்கு எதிராக மக்களுடன் நின்று போராடியதற்காக போடப்பட்ட வழக்கு. மற்றொன்று, மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பிட சான்றிதழ் கேட்டுச் சென்ற மாணவர்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளை எதிர்த்து போராடியதற்காக போடப்பட்ட வழக்கு. இந்த இரண்டிலுமே பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது யார்? டாஸ்மார்க் கடையை திறப்பது பொது மக்களுக்கு நன்மையா? இல்லை மூடுவது நன்மையா?
லஞ்சம் ஊழல் முறைகேடுகளை தட்டி கேட்பது சரியா? இல்லை அமைதியாக வேடிக்கை பார்த்துவிட்டுப் போவதா?
படிக்க: மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!
உண்மையில் சாராயக் கடை திறந்தும், லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டும் இந்த சமூகத்தின் பொது அமைதியை கெடுப்பதே இந்த அரசுதான். கிரானைட் கொள்ளையர்களுக்காக கூட கிராமப்புறங்களை அழிக்கும் வேலையை செய்தது யார்? இனிமேலும் செய்ய துடியாய் துடிப்பது யார்? இந்த கேடுகெட்ட அரசுதான்.
இந்த 110 பிரிவின் கீழ், வட்டாட்சியரிடம் இனிமேல் எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ள மாட்டேன் என நன்னடத்தை சான்றிதழ் வாங்க வேண்டுமாம். ஒரு லட்சம் ரூபாய் நன்னடத்தை பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டுமாம்.
கிரானைட் கொள்ளையர்கள் அரசுக்கு ஏய்த்த வரி ஏய்ப்பு விதிமுறைகளை மீறி கற்களை வெட்டி எடுத்தது ஆகியவற்றின் மதிப்பு மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேல் என்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். இந்த வரி ஏய்ப்புக்கு எதிராக பணத்தை வசூல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அதிகார வர்க்கம் ஒரு பைசா ரூபாயை கூட பி.ஆர்.பி. போன்ற கொள்ளையர்களிடம் வசூலித்தது கிடையாது. ஆனால், போராட போனால் ஒரு லட்ச ரூபாய் அபராதமாம்? இது என்ன ஒரு கேலிக்கூத்து?
சட்டம், ஜனநாயகம் இதெல்லாம் கேலிக்கூத்து என்பதை நிரூபணம் செய்துவிட்டார்கள். கொள்ளையர்களுக்கு ஆதரவாக உள்ள இந்த அரசிடம் நமது கோரிக்கையை கெஞ்சிப் பெற முடியுமா? இல்லை மிஞ்சிப் பெற முடியுமா?
படிக்க: 🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!
எப்படியாவது இந்த போராட்டங்களை ஒழித்துக் கட்டி தங்கள் எஜமானர்களான கொள்ளையர்களுக்கு சேவை செய்ய வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அரசு. அதற்காக எந்தவித ஒடுக்குமுறையையும் ஏவத் தயார் என்பதையே தோழர் செல்வராஜ் மீதான அடக்குமுறை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, கிரானைட் குவாரி ஏலத்தை இரத்து செய்யும்வரை உறுதியான போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே நமது குறைந்தபட்ச உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.
யானைமலையை பாதுகாத்த மக்கள் போராட்டமும் அரிட்டாபட்டி மலைகளை பாதுகாத்த மக்கள் போராட்டமும் நம் கண் முன்னே சாட்சிகளாய் நிற்கின்றன. திருடர்களையும் கூட்டுக் களவாணிகளையும் எதிர்த்து உறுதியாக களத்தில் இறங்கி நிற்போம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube