07.09.2025

தூத்துக்குடி: சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பாசிச பா.ஜ.க. கும்பல் நடத்திய பாசிச  தாக்குதலை தூத்துக்குடி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது!

கண்டன அறிக்கை

செப்டம்பர் 5-ஆம் தேதி வ.உ.சி-யின் பிறந்தநாளை முன்னிட்டு, சி.ஐ.டி.யூ., தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பாக மக்கள் ஒற்றுமை பிரச்சாரம், வ.உ.சி-யின் பிறந்த ஊரான ஓட்டப்பிடாரத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

செப்டம்பர் 5, 6 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த பிரச்சார இயக்கத்தின் அடுத்த கட்டமாக, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் வ.உ.சி. சிலைக்கு முன்பு, இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி போட்டதை கண்டித்தும், இந்திய இறையாண்மை குறித்தும் சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ரசல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பா.ஜ.க-வின் சசிகலா புஷ்பா தலைமையில் அங்கு வந்த பா.ஜ.க. ரவுடி கும்பல்,  “சனாதனம், இந்துத்துவம், சாதிவெறி மற்றும் மோடியை பற்றி பேசக்கூடாது” என தகராறு செய்து தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் ஈடுபட்ட பாசிச கும்பலை கைது செய்ய வேண்டும். இந்த பாசிச கும்பலின் கொலை வெறித் தாக்குதலை தூத்துக்குடி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இது உணர்ச்சிவசப்பட்டு நடந்த நிகழ்வு அல்ல. தோழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். தொடர்ச்சியாக தூத்துக்குடி பகுதியில் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச கும்பலின் தாக்குதலானது நடைபெறுகிறது. இதை போலீசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. போலீசிடம் அனுமதி பெற்று நடத்தப்படும் இந்நிகழ்வுகளில் பாசிசக் கும்பல் தாக்குதல் நடத்தும் போது, அக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல், இரு பக்கமும் வழக்கு பதிவு செய்து சட்டம் ஒழுங்கை ‘பாதுகாத்து’ போலீஸ் தன் ‘கடமையை’ ஆற்றுகிறது‌. இதன் மூலம் பாசிசக் கும்பலுக்கு போலீஸ் சேவை செய்கிறது.

சங்கி கும்பலால் பெரியார் மையம் தாக்கப்பட்டது; வி.வி.டி. சிக்னலில் போலீஸ் அனுமதியோடு தி.க. தோழர்கள் நடத்திய மும்மொழி கொள்கைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. கும்பல் உள்ளே புகுந்து கலாட்டா செய்தது; முத்தையாபுரத்தில் வஃக்ப் வாரிய திருத்தச் சட்டத்தை கண்டித்து தாயக மக்கள் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரிவாளுடன் புகுந்து கலவரம் செய்ய முயற்சித்ததோடு, கஞ்சா கும்பல் போர்வையில் மறைமுகமாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பல் கொலை வெறித் தாக்குதலை நடத்தியது; 2022-இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசிய அண்ணாமலையை கண்டித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவனுக்கு, “வீட்டை விட்டு வெளியே வரும்போது கால் இருக்காது, பேசுவதற்கு நாக்கு இருக்காது” என பா.ஜ.க-வின் சசிகலா புஷ்பா பாசிச திமிருடன் கொலை மிரட்டல் விடுத்தது என பா.ஜ.க. கும்பலின் அராஜகம் தொடர்கிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் ஆதிக்கச் சாதி சங்கங்களை கையில் எடுத்து தலித் மக்கள் மீதான சாதி வெறியை தூண்டி விடுவதன் மூலம் தங்களை வேரூன்றிக்கொள்ளத் துடிக்கிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்மயமாக்கும் பாசிச மோடி கும்பல், நாடு முழுவதும் கலவரங்களை தூண்டிவிடுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை அதானி கைப்பற்றியிருக்கும் சூழலில், தூத்துக்குடியிலும் திட்டமிட்டு இதுபோன்ற தாக்குதலை ஜனநாயக சக்திகள் மீது நடத்துகிறது பாசிசக் கும்பல். மேலும், மக்களை சாதி, மத ரீதியாக தூண்டிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கிறது.

மேற்படி தாக்குதல் நிற்கப் போவதில்லை. இந்த தாக்குதல் செயல் உத்தியை பாசிச கும்பல் வளர்த்தெடுக்கவே செய்யும். ஜனநாயக சக்திகள் ஒன்றிணையாமல் இத்தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலை வீழ்த்த உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம். இந்த பாசிச கும்பலை இந்த மண்ணிலிருந்து விரட்டி அடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு அமைக்கக் களம் இறங்குவோம்!


பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க