23.09.2025

கிருஷ்ணகிரி: விவசாயிகளின் துயரமும் அரசின் அலட்சியமும்!
வேண்டும் ஜனநாயகம்!

பத்திரிகைச் செய்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த சொப்புக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியப்பா. இவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் முட்டைக்கோஸ் பயிரிட்டு இருந்தார். அது 90 நாட்கள் கடந்து அறுவடைக்குத் தயாரானது.

ஆனால் இவர் தோட்டத்தில் விளைந்துள்ள முட்டைக்கோஸ்கள் வழக்கமான எடை இல்லாமல் அதாவது ஒரு முட்டைகோஸ் முக்கால் கிலோ, ஒரு கிலோ, அதிகபட்சம் ஒன்றரை கிலோ வரை எடை இருக்கும். ஆனால் இவரது தோட்டத்தில் விளைந்த முட்டைக்கோஸ் சுமார் ஐந்து கிலோ, ஆறு கிலோ மேல் எடை இருப்பதாலும் முட்டைக்கோஸ் கெட்டித் தன்மை இல்லாமல் இருந்ததாலும் உணவுக்கு உகந்ததாக இருக்காது எனக் கூறி, தமிழ்நாட்டின் பல மாவட்ட வியாபாரிகள் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநில வியாபாரிகள் இந்த முட்டைக்கோஸ்களை கொள்முதல் செய்யாமல் நிராகரித்து உள்ளனர்.

இதனால் 2 லட்சத்துக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார் விவசாயி முனியப்பா.

இதுகுறித்து விவசாயி முனியப்பா கூறுகையில், சூளகிரி பகுதியில் உள்ள தனியார் நர்சரி தோட்டத்தில் அவர் கேட்ட அரிராணி என்ற நாற்றுக்கு பதிலாக, போலியான நாற்றுகளைக் கொடுத்து தன்னை ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, தேன்கனிக்கோட்டை அருகே காடு உத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்ற விவசாயி 2 ஏக்கர் நிலப்பரப்பில் கேரட் சாகுபடி செய்திருந்தார். இவரது நிலத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த கேரட் அதிக எடையுடன் இருந்துள்ளது.

வழக்கமான கேரட் 100 கிராம் முதல் 120 கிராம் வரை இருக்கும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக, தற்போது இவரது தோட்டத்தில் விளைந்த கேரட் எடை ஒவ்வொன்றும் 200 கிராம் முதல் 260 கிராம் வரை இருந்துள்ளது.

அதிக எடையுடன் இருந்த கேரட்டை கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வியாபாரிகள் கொள்முதல் செய்யாமல் நிராகரித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த விவசாயி தனது 2 ஏக்கர் தோட்டத்தில் விளைந்த அதிக எடை கொண்ட கேரட்டை டிராக்டர் ஓட்டி அழித்துள்ளார். இதனால் அவர் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் நட்டத்தைச் சந்தித்துள்ளார்.

இப்போக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் கதையாகி உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் விற்பனை பிரிவு, விவசாயப் பிரச்சினை பற்றி எந்த ஆய்வும் செய்யாமல் செயலிழந்து உள்ளது.

குறிப்பாக, விவசாயிகள் பயிரிடும் பயிர்களை அழிக்கும் வனவிலங்குகளின் பாதிப்பு ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் தனியார் நர்சரி, விதை விற்பனை நிலையங்கள் மூலம் போலியான விதைகள் காரணமாக ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருக்கிறது.

அது மட்டுமில்லாமல், விளைவிக்கும் காய்கறிகளுக்கு விலை இல்லாமல் நட்டத்தைச் சந்திக்கும் விவசாயிகள் பிரச்சினை தொடர்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை நிர்வாகமானது, தனியார் விவசாய பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் விதை, நாற்று உற்பத்தி நிறுவனங்களை உடனடியாக ஆய்வு செய்து போலியான விதைகள், நாற்றுகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் வேளாண் விற்பனை, வணிகத்துறை மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாய உற்பத்தி பொருட்கள், விதை, நாற்றுக்களை அரசே கொள்முதல் மற்றும் விற்பனை செய்யவேண்டும்.

தனியார் விதை விற்பனை நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்யாமல், விவசாயிகளின் நட்டத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலியான நாற்றுகள் காரணமாக நட்டமடைந்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு கொடுக்க வேண்டும்.

அதே சமயம், கார்ப்பரேட் நலனை முதன்மையாக நடைமுறைப்படுத்தும் இந்த அரசுக் கட்டமைப்பில் விவசாயிகள் பிரச்சினையை ஒரு போதும் உத்தரவாதப்படுத்த முடியாது என்பதை நாம் உணர வேண்டியுள்ளது.

விவசாயிகள் நலனை மையப்படுத்திய, அவர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை, பொருளாதார நலனை உத்தரவாதப் படுத்துகின்ற மாற்று அரசியல், பொருளாதார கொள்கைகளை முன்வைத்துப் போராட வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.

பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசே ஒரே மாற்று!


தோழர்.இரஞ்சித்,
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க