01.10.2025

கிருஷ்ணகிரி: விவசாயத்தை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளும்
வனத்துறையின் அலட்சியமும்

பத்திரிகை செய்தி

விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டையில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக செப்டம்பர் 29 அன்று, மாநாடு நடைபெற்றது. இதையொட்டி, கெலமங்கலம் சாலையிலிருந்து மாநாட்டுத் திடல் வரை பேரணியும் நடைபெற்றது.

இம்மாநாட்டில் “கிராமப்புறங்களில் அதிக அளவில் உள்ள காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, காய்கறி உள்ளிட்ட பயிர்களைத் தின்று, உழைப்பை வீணாக்குவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கின்றன. எனவே, காட்டுப்பன்றிகளை ஒழிக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

வனத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து, பயிர் பாதுகாப்புக்கான பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

வனவிலங்குகளிடமிருந்து பயிர்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விவசாயிகள் ராகி, கடலை உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவது இப்பகுதிகளில் வழக்கம். இச்சமயங்களில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கும். கடந்த காலங்களிலும் இதேபோன்று, காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தக் கோரி, விவசாயிகள் வனத்துறையிடம் கோரிக்கைகளை எழுப்பியே வருகின்றனர்.

இதனடிப்படையில், வன எல்லையில் பள்ளம் பறிப்பது, லேசான மின் அதிர்வு கொண்ட இரும்புக் கம்பிகள் அமைப்பது போன்ற ஒரு சில நடவடிக்கைகளை வனத்துறை எடுத்தது. ஆனால், பள்ளம் பறித்த நடவடிக்கையானது, விவசாயிகள் கால்நடைகளை வனத்திற்கு மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல தடையாகத்தான் இருந்ததே தவிர, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவில்லை. இரும்புக் கம்பி வேலியும் பலனளிக்கவில்லை.

தமிழ்நாட்டில் வன உயிரினங்களால் குறிப்பாக, யானை, காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கும் அதற்கான தீர்வினைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் விவசாயப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, அறிவியல் நிபுணர்கள், தன்னார்வலர்கள், வன உயிரின ஆர்வலர்கள் என மொத்தம் 19 பேர் அடங்கிய சிறப்புக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழ்நாடு வனத்துறையின் கொள்கைக் குறிப்பு கூறுகிறது. கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சர்க்கரை என்று தாளில் எழுதி வைத்து அதை நக்கினால் இனிக்குமா என்ன?

நடைமுறையில் ஒரு சில கண்துடைப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, ஒருங்கிணைந்த முறையில் காட்டுப்பன்றிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற வகையில் வனத்துறை செயல்படுவதில்லை.

இன்னொரு பக்கம், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், தொழில் வளர்ச்சி என்ற பெயரிலும், சாலை விரிவாக்கம் என்ற பெயரிலும், கல்குவாரி மாஃபியாக்களாலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகள் படிப்படியாக அழிக்கப்படுவது முக்கியமான காரணமாகும். இது அரசின், வனத்துறையின் துணையோடுதான் நடக்கிறது. இதன் காரணமாக, யானை வழித்தடங்கள் குறுக்கப்பட்டு, வேறு வழியில்லாமல் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதும், மனிதர்களைத் தாக்குவதும் நடக்கிறது. இதுதான் காட்டுப்பன்றிப் பிரச்சினைக்கும் மூலகாரணமாகும்.

எனவே, இப்பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த வகையில் வனத்துறை தீர்வு காண வலியுறுத்தியும், வளர்ச்சி என்ற பெயரில் வனங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கக் கோரியும் ஒருங்கிணைந்த வகையிலான மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே தீர்வை நோக்கி நகர முடியும்.

வனத்துறையே!
விவசாயத்தை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துக!


மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க