யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்? | ஹிமான்ஷு குமார்

அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான்.

சத்தீஸ்கரில் பஸ்தர் மாவட்டத்தின் ஜகதால்பூரில் அக்டோபர் 17 அன்று 210 மாவோயிஸ்டுகள் சரணடைந்ததாக ஊடகங்களில் வெளியான புகைப்படம்

(குறிப்பு: 1967 நக்சல்பாரி எழுச்சியின் விளைவாக இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) பிறப்பெடுத்தது. பின்னாளில், இக்கட்சி பல்வேறு மா-லெ குழுக்களாக பிளவுற்றது. அதில் சில குழுக்கள் இணைந்து உருவான ஒரு கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்). அக்கட்சியைத்தான் நக்சல்பாரி இயக்கம் என்றும் மாவோயிஸ்ட் தோழர்களை நக்சல்பாரிகள் என்றும் இக்கட்டுரையின் ஆசிரியரான ஹிமான்ஷு குமார் குறிப்பிட்டுள்ளார்.)

***

யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்?

– ஹிமான்ஷு குமார்

நக்சல்பாரி இயக்கத்தின் தோல்வியானது, இந்திய விவசாயிகளின் வெற்றியாக மாறிவிட்டதா? தொழிலாளர்களின் வெற்றியாக மாறிவிட்டதா? பழங்குடியினப் பெண்களின் வெற்றியாக மாறிவிட்டதா? இல்லை. இது, முதலாளிகளுக்குக் கிடைத்த வெற்றி; நீர், நிலம், காடுகளைச் சூறையாடி இந்தியாவை வறுமையில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்குக் கிடைத்த வெற்றி.

***

ஹிமான்ஷு குமார்

இன்று, அக்டோபர் மாதத்தின் மென்மையான குளிரில், பஸ்தரில் இருநூற்று ஐம்பது நக்சல்பாரி போராளிகள் தங்கள் ஆயுதங்களை அரசியல் தலைவர்களிடமும் போலீசாரிடமும் ஒப்படைத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு மூத்த நக்சல் தலைவரான வேணுகோபால், மகாராஷ்டிர முதல்வரின் கைகளில் தனது துப்பாக்கியை ஒப்படைத்தார். அதற்கு ஈடாக, முதலமைச்சர் ஃபட்னாவிஸ் அரசியலமைப்பின் (Constitution) நகலை அந்த நக்சல் தலைவரிடம் வழங்கினார்.

நக்சல் தலைவரை விட முதலமைச்சர் ஃபட்னாவிஸுக்குத்தான் அரசியலமைப்பு தேவை என்று நான் உணர்ந்தேன். ஏனென்றால், சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு மோசடியான தேர்தலில் வெற்றி பெற்று ஃபட்னாவிஸ் முதலமைச்சரானார். மகாராஷ்டிராவின் மல்ஷிராஸ் (Malshiras) என்ற கிராமத்தில் உள்ள மக்கள், மோசடிகள் நிறைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முடிவுகளை ஏற்க மறுத்து, வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பதாக அறிவித்தபோது, ​​இந்த முதலமைச்சர் அங்கு போலீசை நிறுத்தி, ஊரடங்கு உத்தரவை விதித்து, கிராம மக்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்தார்.

மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான வேணுகோபால் ராவ் மகாராஷ்டிர முதலமைச்சர் ஃபட்னாவிஸ் முன்னிலையில் அக்டோபர் 14 அன்று சரணடைந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்தரில் ஒரு நக்சல் தலைவருடன் நடந்த கலந்துரையாடலின் போது, ​​மக்கள் போராட்டங்களில் அகிம்சைப் பாதையா அல்லது வன்முறைப் பாதையா என்பதைப் பற்றி அவர் என்னிடம் கேட்டார்: “நீங்கள் வன்முறையின்றி அகிம்சை முறையில் போராடுகிறீர்கள். நீங்கள் என்ன சாதித்தீர்கள்? மேதா பட்கர் என்ன சாதித்தார்? நர்மதா அணை கட்டப்பட்டுவிட்டது; வாழிடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்” என்றார்.

எரிச்சலுடனும் விரக்தியுடனும் நான் பதிலளித்தேன், “துப்பாக்கிகளுடன் சண்டையிட்டு நீங்கள் என்ன சாதித்தீர்கள்?”

எப்படியிருந்தாலும், நாங்கள் இரவு முழுவதும் ஒன்றாகத் தங்கினோம்; ஒன்றாக உணவருந்தினோம்; காலையில் நேசத்துடன் பிரிந்தோம்.

அந்த விவாதத்தில் நாங்கள் இருவரும் எங்கள் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்தினோம் என்று நினைக்கிறேன். அதனால்தான் மற்றவரது பாதை தவறு என்று நிரூபிக்க முயற்சித்தோம். உண்மை என்னவென்றால், சமூக மாற்றத்திற்கான போராட்டங்கள் பெரிய இலக்குகளையும் இலட்சியங்களையும் தேடித் தொடங்குகின்றன. பல தலைமுறைகள் முழுவதும் தியாகங்களை உள்ளடக்கிய ஒரு நீண்ட செயல்முறைக்குப் பிறகு, நாம் ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடைகிறோம். பெரும்பாலும் நாம் கனவு காணும் சரியான இலக்கை அடைவதில்லை. ஆனால், நமது போராட்ட செயல்முறையானது சமூகத்தில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது.

உதாரணமாக, நர்மதா பச்சாவ் இயக்கத்தால் அணை கட்டப்படுவதைத் தடுக்க முடியவில்லை என்றாலும், அது பெரிய அணைகள் கட்டப்படுவதை மறுபரிசீலனை செய்வதற்கான உலகளாவிய செயல்முறையைத் தொடங்கியது. இதன் காரணமாக, வெற்றிகரமான போராட்ட இயக்கங்களால் சில ஆறுகள் சுதந்திரமாகப் பாய்ந்தோட அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், நீர்வாழ் உயிரினங்களைக் காப்பாற்ற பல பெரிய அணைகள் உடைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், நக்சல் இயக்கம் காரணமாக, பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகள் ஓரளவுக்குக் குறைந்துள்ளன. நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கங்களுக்கு ஏற்பட்டது. மேலும், புகையிலையை மடிக்கவும், பீடிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் தெண்டு இலைகளுக்கான (Tendu Leaf) விலைகளும், அவற்றைப் பறிக்கும் விவசாயிகளின் கூலியும் அதிகரித்தன.

புதிய தலைமுறையினருக்கு நக்சலைட்டுகள் என்போர் யார், அவர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும். அரசாங்கம் நமக்குச் சொல்வது போல, நக்சல்கள் நாட்டின் துரோகிகளா? இல்லை. அவர்கள் ஒருபோதும் துரோகிகளே அல்ல.

நம்மில் சிலர் சமூகத்தில் பரவியுள்ள அநீதிக்கு எதிராகப் போராடுகிறோம். ஆனால், சிலர் அந்த அநீதியால் மிகவும் கலக்கமடைந்து அமைதியற்றவர்களாகி, அதை முடிவுக்குக் கொண்டுவரத் துடிக்கிறார்கள். ஒடுக்குபவரின் ஆயுதங்களை எடுத்துப் போராடுகிறார்கள். ஒடுக்குபவரின் கொடூரத்தை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். எனவே, இந்த நாட்டு மக்களுக்காக தங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பதால், நக்சல்பாரிகள் நம்மை விட உயர்ந்த தேசபக்தர்கள் என்று நீங்கள் கூறலாம்.

இந்தியாவின் நிலையைப் பாருங்கள்: நாட்டில் உள்ள எண்பது சதவீத தலித்துகள் நிலமற்றவர்கள்; எனவே அவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். ஒருவரின் சாதி காரணமாக ஏழைகளாக இருப்பதென்பது, சமூக-பொருளாதாரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வறுமையின் காரணமாக, தலித்துகள் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். இன்றும்கூட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். இந்த நிலைமைகள் யாரையும் சங்கடப்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு இந்த சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லையா என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.

நிலமற்ற தன்மையும் வறுமையும், அதன் விளைவாக இந்தியாவின் அரசியல் அமைப்பில் தலித்துகளின் பலவீனமான நிலை, தொழிலாளர்களின் மீதான முதலாளித்துவ சுரண்டல், தந்தைவழி ஆணாதிக்க அடக்குமுறை மற்றும் பெண்களின் சமத்துவமற்ற நிலை – இவை அனைத்தும் பல அரசியல் இயக்கங்களுக்கு வழிவகுத்தன. காந்தியவாதிகள், இடதுசாரிகள், அம்பேத்கரியவாதிகள் – என அனைவரும் தங்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

ஒடுக்குமுறைக்கு எதிராக சமூகத்தை மாற்ற முயற்சித்தபோது, ​​ஒடுக்குபவர்களிடம் – வலிமை வாய்ந்தவர்களிடம் – ஆயுதங்கள், குண்டர்கள், போலீசு மற்றும் அரசு அதிகாரம் இருந்தது; இவற்றின் உதவியுடன் அவர்கள் சமூகத்தை மாற்ற முயற்சிப்பவர்களைத் தாக்கினர்; அவர்களைக் கொன்றனர்; சிறையில் அடைத்தனர். எனவே இந்த ஆயுதமேந்திய ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால், நம்மிடமும் ஆயுதங்கள் இருக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்கள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.விடம்தான் அதிக ஆயுதங்கள் உள்ளன. எனவே, நக்சல்பாரி கட்சியை மட்டுமே ஆயுதம் ஏந்திய கட்சி என்று முத்திரை குத்துவது உண்மைக்கு மாறானது.

மேற்கு வங்கத்தில் 1967-ஆம் ஆண்டு நக்சல்பாரி கிராமத்தில் நடந்த எழுச்சிக்குப் பிறகு, விவசாயிகள் நிலப்பிரபுக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தபோது, இந்த இயக்கம் நக்சல்பாரி இயக்கம் என்று அழைக்கப்பட்டது. ஆனால் தெலுங்கானா பகுதியில், சுதந்திரத்திற்கு முன்பே விவசாயிகளின் இயக்கங்கள் தொடங்கியிருந்தன. அதனுடன் கூடவே, வங்காளத்தின் தேபாகா இயக்கமும் நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த விவசாயிகளின் போராட்ட இயக்கமாகும்.

சுதந்திர இந்தியாவில், காந்தியைக் கொன்ற கொலைகாரர்களான கோட்சே மற்றும் நானா ஆப்தே (நாராயணன் ஆப்தே) தூக்கிலிடப்பட்ட பிறகு, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு தலித் விவசாயிகளான கிஷேகவுடாவும் சித்தராமையாவும், ஒரு நிலப்பிரபுவைக் கொன்று அவரது நிலத்தை நிலமற்றவர்களுக்குப் பகிர்ந்தளித்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டனர். அதாவது, தலித் விவசாயிகள் இந்திய அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தனர்.

நக்சல்பாரி இயக்கத்திலிருந்து தலித்துகளைப் பிரிக்க, காங்கிரஸ் ஆட்சியாளர்கள், 1971-இல், முதன்முதலாக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலைகளை நிறுவத் தொடங்கினர்; “அரசுடன் போராட வேண்டாம்; இந்த வழியில் வாருங்கள்” – என்று தலித்துகளுக்கு சமிக்ஞை செய்யும் வகையில், அரசியலமைப்பை மார்பில் ஏந்தி நாடாளுமன்றத்தை நோக்கி விரலை நீட்டிக் கொண்டிருப்பதாக அம்பேத்கர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன – என்று பகத்சிங்கின் அண்ணன் மகனாகிய பேராசிரியர் ஜக்மோகன்சிங் மதிப்பிடுகிறார்.

அதன் பிறகு, ஏராளமான பழங்குடியினர் நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்ததால், அது முதன்மையான ஒரு பழங்குடி இயக்கமாகக் கருதப்படத் தொடங்கியது. எவ்வாறாயினும் பீகாரில், தலித்துகளுக்கான நிலத்தைப் பெறுவதில் நக்சல்பாரி இயக்கம் மிகச் சிறப்பாகப் பணியாற்றியது. பல தலித் தோழர்கள் இந்த இயக்கத்தில் தங்களைத் தியாகம் செய்தனர்.

1991-ஆம் ஆண்டு தனியார்மய – தாராளமய – உலகமயமாக்கலுக்குப் பிறகு, கார்ப்பரேட் மூலதனமானது, இந்தியாவின் பழங்குடியினர் பகுதிகளில் கனிமங்களைக் கைப்பற்ற முயற்சிக்கத் தொடங்கியது. மேலும் இந்தப் பகுதிகள், பாதுகாப்புப் படைகளால் நிரம்பியிருந்தன. பின்னர் நக்சல்பாரி இயக்கமானது, போராட்டத்தை முடுக்கிவிட்டு, பழங்குடியினருடன் இணைந்து அவர்களின் நீர், நிலம், காடுகளைப் பாதுகாக்கப் போராடியது. இறுதியில் அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தது, 2004-ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச அரசுக்கும், மக்கள் யுத்தக் குழு, ஜனசக்தி குழு ஆகியவற்றுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. ஆனால், நிலப்பிரபுக்களின் நிலங்களை நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்க மறுத்ததால், பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

இந்த நேரத்தில் மக்கள் யுத்தக் (People’s War) குழு, கட்சி ஒற்றுமைக் (Party Unity) குழு, மாவோயிஸ்ட் கம்யூனிச மையம் (MCC) ஆகிய குழுக்கள் ஒன்றிணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கின. ஓராண்டுக்குப் பிறகு, மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டுவதன் பெயரால், சட்டிஸ்கரில் உள்ள பா.ஜ.க. அரசாங்கமானது 2005-இல் சல்வா ஜூடும் என்ற ஆயுதமேந்திய நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில், பழங்குடியினரது கிராமங்கள் அரசால் எரிக்கப்பட்டன; பழங்குடிப் பெண்கள் மீது பெருமளவிலான பாலியல் வன்கொடுமைகள் நடந்தன; பழங்குடியினர் கோரமாகக் கொல்லப்பட்டனர். 2011-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சல்வா ஜூடும் என்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது, ஆனாலும் இன்னமும் இந்த அடக்குமுறை தொடர்கிறது.

என்னுடன் பணியாற்றும் சக தோழர்களுடன், நான் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பஸ்தரில் கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆக்கபூர்வமான காந்தியப் பணிகளைச் செய்து கொண்டிருந்தேன். பழங்குடியினர் மீதான மனித உரிமைகளைப் பறிக்கும் மிருகத்தனமான அடக்குமுறைக்கு எதிராக நான் குரல் எழுப்பியபோது, ​​பா.ஜ.க. அரசு என்னைக் கொல்ல முயற்சித்தது; 2009-இல் எங்களது பதினாறு ஏக்கர் காந்திய ஆசிரமம் புல்டோசர்களால் இடித்துத் தள்ளப்பட்டது; நான் சட்டிஸ்கரில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

தற்போது, ​​மத்தியிலும் சட்டிஸ்கர் மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க.வானது, கூச்சநாச்சமற்ற முதலாளித்துவ ஆதரவுக் கட்சியாகும். தடையேதுமின்றி முதலாளிகளின் சூறையாடலுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கவும், பழங்குடியினர் பகுதிகளில் உள்ள நீர், நிலம், காடுகளை விற்பதற்கும், எதிர்ப்புகளை நசுக்குவதற்கும் பா.ஜ.க.வின் ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித் ஷா, மார்ச் 31, 2026-க்குள் பஸ்தரில் நக்சல்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டு ஏறத்தாழ இரண்டாயிரம் பழங்குடியினரும் நக்சல்பாரி இயக்கத்தின் ஊழியர்களும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த இரத்தக்களரியை நிறுத்த, பல நக்சல்பாரி தலைவர்களும் போராளிகளும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, வன்முறையற்ற அரசியல் செயல்முறைகள் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்காகப் பாடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், ஆயுதங்களைக் கையளிக்கும் இந்த செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாவோயிஸ்ட் கட்சியில் உள்ள பலர் இன்னும் ஆயுதங்களைக் கைவிட உடன்படவில்லை; சாகும்வரை தொடர்ந்து போராடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இன்று, பஸ்தர் டாக்கீஸ் (Bastar Talkies) எனும் யூ-டியூப் சேனலில், பத்திரிகையாளர் விகாஸ் திவாரி உடனான உரையாடலில், நக்சல்பாரி தலைவர் ரூபேஷ், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளுக்காகப் பாடுபட உள்ளதாகக் கூறினார்.

இது சாத்தியமா? இந்தியாவில் அரசாங்கத்திற்கு எதிராக ஒருவர் அரசியல் செய்ய முடியுமா? பஸ்தர் நிலத்தை அதானியிடம் அமித் ஷா ஒப்படைத்தால், அதற்கெதிராக இந்த நிராயுதபாணியான நக்சல்பாரி தலைவர்கள் ஜனநாயக ரீதியாக பழங்குடி மக்களைப் போராட்டத்தில் ஒருங்கிணைத்தால், அமித் ஷா அதை பொறுத்துக்கொள்வாரா? – என்பதுதான் கேள்வி.

பா.ஜ.க.வானது, எதிர்க்கட்சியே இல்லாத இந்தியாவை உருவாக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், நக்சல்பாரி சித்தாந்தத்தைக் கொண்டுள்ள நிராயுதபாணியான செயல்வீர்ர்களை பஸ்தரில் பணியாற்ற அக்கட்சியின் அரசாங்கம் அனுமதிக்குமா? பழங்குடி இளைஞர்களின் நிராயுதபாணியான அமைப்பான “மூல்வாசி பச்சாவ் மன்ச்”-ஐ (Mulvasi Bachao Manch) அரசாங்கம் தடை செய்தபோது, ​​அந்த அமைப்பு அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் எதிர்ப்பதாகவும் காரணம் காட்டி, அரசின் தடையுத்தரவில் கூறப்பட்டது.

பா.ஜ.க.வை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்களை பல ஆண்டுகளாக சிறையில் அடைத்துள்ள அரசாங்கம், அவர்களை “நகர்ப்புற நக்சல்கள்” என்று அழைக்கிறது. ஆயுதங்களை கீழே வைக்கும் நக்சல்பாரி தலைவர்கள் மக்களிடையே பணியாற்ற இந்த அரசாங்கம் அனுமதிக்கும் என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை.

எனவே கேள்வி என்னவென்றால், இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதையும் ஏழைகள் சுரண்டப்படுவதையும் எதிர்த்து நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்றால், உண்மையில் யார் வெற்றி பெறுகிறார்கள்?

ஜனநாயகம் வென்றது என்று பாஜக அரசு சொல்லும்.

ஆனால் இதை திருடப்பட்ட வாக்குகளின் மூலம் சட்டவிரோதமாக வெற்றி பெற்ற அரசாங்கத்தின் வெற்றி என்றோ ஜனநாயகத்தின் வெற்றி என்றோ யாரால் சொல்ல முடியும்?

நக்சல்பாரி இயக்கத்தின் தோல்வியானது, இந்திய விவசாயிகளின் வெற்றியாக மாறிவிட்டதா? தொழிலாளர்களின் வெற்றியாக மாறிவிட்டதா? பழங்குடியின பெண்களின் வெற்றியாக மாறிவிட்டதா? இல்லை.

இது, முதலாளிகளுக்கும் கொள்ளையடிப்பவர்களுக்கும் கிடைத்த வெற்றி; நீர், நிலம், காடுகளைச் சூறையாடி இந்தியாவை வறுமையில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது, ஜனநாயகத்தை கொலை செய்யும் சக்திகளின் வெற்றி; பாலியல் வன்கொடுமை செய்பவர்களைப் பாதுகாக்கும் சக்திகளின் வெற்றி.

அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான். மேலும், இதன் விளைவாக தீவிரமான கோபமும், எதிர்ப்பும், போராட்டமும் சண்டையும்தான் ஏற்படும். தலித்துகள், பழங்குடிகள், தொழிலாளர்கள், பெண்கள், வேலையில்லாத இளைஞர்கள், மாணவர்கள் – என இந்தியாவில் பலதரப்பட்ட பிரிவுகள் போராட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர். அவர்கள் போராடுவார்கள்; இல்லையெனில், அவர்கள் அழிந்து போவார்கள்.

எனவே, போராட்டம் முடிவடையாது; மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கான பாதையும் மூடப்படாது. யாருடைய வெற்றியும் இறுதியானது அல்ல; யாருடைய தோல்வியும் இறுதியானது அல்ல.

சமூகத்தை மாற்ற மூன்று வழிகள் உள்ளன என்று அருட் தொண்டரான வினோபா கூறினார்: சட்டம், இரக்கம் அல்லது கொலை.

சட்டம் நீதியை வழங்காவிட்டால், சமூகத்தின் இரக்கம் விழித்தெழவில்லை என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் கொலை செய்யும் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று வினோபா கூறினார். அதனால்தான், கொலை செய்யும் பாதையில் செல்வதிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற, மக்களிடையே இரக்கம் உணர்வைத் தூண்ட நான் பாடுபடுகிறேன்.

நான் வினோபாவுடன் நெருக்கமாக இருந்து, நீண்ட காலமாக வினோபாவின் கருத்துக்களை நாடெங்கும் பயணித்துப் பரப்பி வந்தேன். எனவே, சமூகம் கொலை செய்யும் பாதையில் செல்வதைத் தடுக்க, நானும் மக்களின் இரக்கத்தை விழித்தெழச் செய்ய விரும்புகிறேன்.

***

குறிப்பு:

இது, “கிரவுண்ட்சீரோ” (https://www.groundxero.in) என்ற இணயதளத்தில் “Who lost, the Naxals — but who won?” என்ற தலைப்பில் அக்டோபர் 17, 2025-இல் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமாகும். இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள் என்பதை இந்த இணையதளம் தெரிவித்துக் கொள்கிறது.

ஹிமான்ஷு குமார் (Himanshu Kumar), நன்கு அறியப்பட்ட காந்தியவாதியும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமாவார். இவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் (தற்போது சுக்மா மாவட்டம்) பழங்குடியினர் மத்தியில் சமூகப் பணியாற்றினார். வனவாசி சேத்னா ஆசிரமத்தை 1992 முதல் 2009 வரை நடத்தி வந்தார். இந்த ஆசிரமம், 2009 மே 17-ஆம் தேதியன்று போலீசாரால் இடித்துத் தள்ளப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளில் சட்டிஸ்கரில் போலி மோதல் படுகொலைகள், பாலியல் வல்லுறவு, சூறையாடல்கள் முதலான குற்றங்களில் ஈடுபட்ட போலீசு, துணை இராணுவப் படையினர் மீது 519 மனுக்களை இவர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்துள்ளார். சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பசுமை வேட்டை (operation green hunt) நடவடிக்கையின்போது, 2009-ஆம் ஆண்டில் தந்தேவாடா மாவட்டத்தில் 17 பழங்குடியினர் கொல்லப்பட்டதை எதிர்த்து, இவரும் 12 பழங்குடியினரும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்தனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க