
07.11.2025
பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில்
கருத்துரிமையை குழி தோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!
மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்
பத்திரிகை செய்தி
கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசல், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு பிறகு அரசியல் கட்சிகளின் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் பரப்புரைகளுக்கு வழிமுறைகள் விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் தமிழ்நாடு அரசின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
5,000 முதல் 10,000 பேர் வரை என்றால் ரூ.1 லட்சம், 10,000 முதல் 20,000 பேர் வரை ரூ.3 லட்சம், 20,000 முதல் 50,000 பேர் வரை ரூ.8 லட்சம், 50,000 பேருக்கு மேல் என்றால் ரூ.20 லட்சம் காப்புத் தொகை செலுத்த வேண்டும்.
ரோடு ஷோவின்போது, சிறப்பு அழைப்பாளர் பேசும் இடத்தில் இருந்து 500 அடி தூரத்துக்கு நிகழ்ச்சி அமைப்பாளர் தடுப்பு அமைக்க வேண்டும். நிர்ணயித்த இடத்தில் மட்டுமே பேச வேண்டும். வழியில் வேறு எங்கும் உரைநிகழ்த்தக் கூடாது. சாலையோரம் மக்கள் ஒரே இடத்தில் நிலையாக கூடியிருந்து, வாகனம் சென்றதும் கலைந்து சென்றுவிட வேண்டும். சிறப்பு அழைப்பாளரின் வாகனத்தை பின்தொடர்ந்து மக்கள் செல்வதை தவிர்க்க, கூட்டத்தை தன்னார்வலர்கள் ஒழுங்குபடுத்த வேண்டும்.
நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கட்சியின் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி 10 நாட்கள் முன்பாகவும், 15 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும். மற்ற இடங்களுக்கு 21 நாட்கள் முன்பாகவும், 30 நாட்களுக்கு மிகாமலும் மனு அளிக்க வேண்டும்.
கூட்டத்தினரின் பாதுகாப்பு, ஒழுங்குபடுத்துவதற்கு ஒருவர், அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டு அவர்களது விவரங்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அரசின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட எந்த கட்டுப்பாடுகளும் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டங்களுக்கும் ‘மரபு’ப்படி நடத்தப்படும் மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கும் கூட்டங்களுக்கும் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்துமே கருத்துரிமையை குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் நடவடிக்கைகளே.
வைப்புத் தொகை கட்ட வேண்டும் என்பது ஏற்கெனவே ஊழலில் திளைக்கும் கட்சிகளுக்கு மட்டுமே சாத்தியமே தவிர உழைக்கும் மக்களுக்காக போராடக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜனநாயக சக்திகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கிற குறைந்தபட்ச கருத்து உரிமையையும் மறுப்பதற்கான ஒன்றாகும்.
தெருமுனைப் பரப்புரைகள், தெருமுனை கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே போலீசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து ஜனநாயக சக்திகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பரப்புரையை தடுத்து வருகிறது.
மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வழங்கப்படும் பரிந்துரை ஆனது மக்களுக்கான அரசியலை ஒழித்துக் கட்டி ஆளும் வர்க்கங்களின் குறிப்பாக பாசிச சக்திகளுக்கு மக்களை இரையாக்குவதற்கான திட்டமாகும். மக்கள் கூடும் இடங்களில் அரசியல் பரப்புரையை மேற்கொள்ளாமல் வேறு எங்கே அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை மேற்கொள்ள முடியும்?
ஆக பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வருகின்ற 10ஆம் தேதிக்குள் கருத்துகளை கூறுமாறும் தெரிவித்துள்ளது.
இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. ரோடு ஷோ போன்ற தனிமனித துதிக்கான நிகழ்வுகள் தடை செய்யப்பட்டு அனைத்து வகையான பரப்புரைக்கும் மிக எளிதாக அனுமதி வழங்கிடும் வகையிலும், மக்கள் அனைவரையும் எளிதாக சென்றடையும் வகையிலான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





