
16.11.2025
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?
பத்திரிகை செய்தி
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு நவம்பர்-14 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமான 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான NDA கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
பீகார் தேர்தலை NDA கூட்டணி தேர்தல் ஆணையத்தின் துணையோடு எதிர்கொண்டது.
காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் தங்களுக்குள் தொகுதிகளை பிரித்துக் கொள்வதிலும் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதிலும் இறுதிவரை இழுபறி நீடித்தது. தேஜஸ்வி யாதவ் 100 தொகுதிகள் மட்டுமே பிரச்சாரத்தை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் RJD-யும் போட்டியிட்டுள்ளன. இத்தகைய குளறுபடிகளுடன்தான் இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்கொண்டுள்ளன. தேர்தலில் கூட பி.ஜே.பி-யை முறியடிப்பதற்கு இவர்களிடம் ஒற்றுமையில்லை என்பதையே இது காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாகவும் “ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற ஒரு தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியவில்லை” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், பீகார் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை ஏமாற்றமாக இருக்கிறது என்றும் NDA அதிக கட்சிகளைக் கொண்ட பெரிய கூட்டணியாகவும், இந்தியா கூட்டணி குறிப்பிட்ட சில சாதிகளை குறிவைத்து தேர்தலை எதிர்கொண்டதும், “முக்யா மந்திரி மகிளா ரோஸ்கர் யோஜனா” என்ற திட்டத்தின் மூலம் பெண்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தது போன்ற மூன்று காரணங்கள் தான் இந்தியா கூட்டணியின் தோல்விக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்கள் பலரும் பி.ஜே.பி இந்த தேர்தலில் செய்த தேர்தல் முறைகேடுகள் குறித்து விமர்சித்து வருகின்றனர்.
SIR-யை அமல்படுத்தியது மட்டும்தான் எதிர்க்கட்சிகளின் தோல்விக்கு காரணமா?
கொஞ்சம் நஞ்சம் மீதி இருந்த, வெட்டி சுருக்கப்பட்ட ஜனநாயகத்தையும் குழிதோண்டி புதைத்து ஒட்டுமொத்தமாக அரசுக் கட்டமைப்பையே பாசிச கட்டமைப்பாக மோடி அமித்ஷா கும்பல் மாற்றி வருகிறது.
தேர்தல் ஆணையர் நியமன சட்டம், தொகுதி மறு வரையறை, SIR போன்ற பாசிச நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக தன்னுடைய இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஒட்டுமொத்த தேர்தல் கட்டமைப்பையும் மறுவார்ப்பு செய்து வருகிறது பி.ஜே.பி கும்பல்.
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசிய பி.ஜே.பி கட்சி தற்போது எதிர்க்கட்சிகளே இல்லாத இந்தியாவாக, எதிர்க்கட்சிகளின் மக்கள் அடித்தளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இதைத்தான் ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் தற்போது பீகார் தேர்தலின் மூலமாக நிறைவேற்றி வருகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளோ இத்தகைய பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவித மக்கள் போராட்டங்களையும் கட்டி அமைப்பதில்லை, மாற்று குறித்தும் சிந்திப்பதில்லை.
பி.ஜே.பி-யை தேர்தலில் முறியடிக்க வேண்டும் என்றால் கூட மக்கள் போராட்டங்களைத்தான் கட்டி அமைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் எதிர்க்கட்சிகளோ இந்த கட்டமைப்புக்குள்ளேயே பி.ஜே.பி-யை தோற்கடித்து விட முடியும் என்ற மாயையை மக்களுக்கு உருவாக்குகிறார்கள். இதன் மூலம் தங்களை நம்பும் மக்களுக்கும் கூட துரோகம் இழைக்கிறார்கள்.
உண்மையில் இந்த கட்டமைப்பில் தேர்தலில் கூட பி.ஜே.பி-யை வீழ்த்துவது, இனி சாத்தியமில்லை என்ற நிலையை பி.ஜே.பி உருவாக்கி வருகிறது.
பாசிச எதிர்ப்பு சக்திகளே மாற்று குறித்து சிந்திப்போம், மக்கள் போராட்டங்களை கட்டி அமைப்போம். பாசிச சக்திகள் தேர்தலில் பங்கேற்க முடியாத பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு உருவாக்குவதை நோக்கி முன்னேறுவோம்.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





