17.11.2025
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு
சிவப்பஞ்சலி!

பத்திரிகைச் செய்தி

ன்பார்ந்த தோழர்களே, ஜனநாயக சக்திகளே, உழைக்கும் மக்களே!

எமது அமைப்பான, மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-யின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சை பலனளிக்காத நிலையில் 17-11-2025 மதியம் 02.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.

நீண்டகாலமாக அவருக்கு இருந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தின் காரணமாக, அவரது சுவாசக் குழாயும், இரத்த நாளங்களும் பலவீனமடைந்து விட்டன. இவற்றைச் சீர்செய்யும் சிகிச்சைகளின் போது தான், ஏற்கெனவே அவரது உணவுக்குழாயில் புற்றுநோய்க் கட்டிகள் உருவாகி அவை தீவிரநிலையை அடைந்திருந்ததையும், அவை வேகமாக உள்ளுக்குள் பரவிவருவதையும் அறிய முடிந்தது. அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்வதற்குக் கூட, அவரது நுரையீரல், இரத்த நாளங்கள் ஒத்துழைக்காத நிலைமை ஏற்பட்டுவிட்டது. நுரையீரலுக்கும் புற்றுநோய்க் கட்டிகளுக்கும் இடையிலான போராட்டத்தில், புற்றுநோய்க் கட்டிகள் வேகமாக நெஞ்சுப்பகுதி முழுவதும் பரவி அவரது உயிரைக் குடித்துவிட்டன.

புரட்சிகர அரசியலில் 50 ஆண்டு காலம் பணியாற்றிய தோழர் சம்பத், செயல்பட முடியாமல் உடல்நலம் குன்றிவிட்ட கடந்த அக்டோபர் மாதம் வரை, தொடர்ந்து அமைப்புப் பணிகளில் ஊக்கமாகச் செயல்பட்டார். வயது முதிர்ச்சி, சியாட்டிக் நரம்புப் பிரச்சினை மற்றும் அல்சர் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் இருந்த போதும் அவர் தனது அமைப்புப் பணிகளை நிறுத்திக் கொண்டதில்லை.

புரட்சிகர அரசியலை ஏற்று ஊழியராக செயல்படத் தொடங்கியது முதல் அவர் திருமணம் குறித்து சிந்தித்ததில்லை. கட்சி, தோழர்கள், அமைப்புப் பணிகள் என்று தன் வாழ்நாள் முழுவதும், இறுதி மூச்சிருக்கும் வரை மக்களுக்காகவும் புரட்சிக்காகவும் அயராது உழைத்தார்.

1975 காலகட்டத்தில் கல்லூரி மாணவராக இருந்த போது, அவசரநிலை ஆட்சிக்கெதிரான மாணவர் போராட்டங்களில் ஊக்கத்துடன் பங்கெடுத்துக் கொண்டார். இதனூடாக, இ.பொ.க.(மா-லெ)-யின் மேற்குப் பிராந்தியக் குழு அறிக்கையை ஏற்று (அன்றைய தற்காலிக அமைப்புக் கமிட்டி உருவாகும் முன்பே) நக்சல்பாரி அரசியலுக்குள் வந்தார். அந்த இளம் வயதிலேயே புரட்சிகர அரசியலில் முழுநேர ஊழியராக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

மாநில அமைப்புக் கமிட்டி உதயமான பின்னர், 1980-களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பிளவின் போது, அன்றைய வலது சந்தர்ப்பவாதப் போக்குக்கு எதிராக மா.அ.க.வின் பக்கம் உறுதியாக நின்று போராடினார்.

1985-இல், வெகுஜன அரசியல் பத்திரிகையான “புதிய ஜனநாயகம்” இதழின் தொடக்கம் முதல் சுமார் 30-ஆண்டுகளுக்கும் மேலாக அதன் ஆசிரியராக செயல்பட்டார். பத்திரிகையில் பணியாற்றிய தோழர்களின் எண்ணிக்கை குறைந்து பத்திரிகை ஆட்பற்றாக்குறையை எதிர்கொண்ட போது, ஆசிரியர் பணியுடன் அச்சாக்கம் செய்வது, பார்சல் செய்து பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது, கணக்குகளைப் பராமரிப்பது என அனைத்துப் பணிகளிலும் பொறுப்பெடுத்துக் கொண்டு நிறைவேற்றுபவராக இருந்தார். அத்துடன், வாசகர்கள், முகவர்களின் பல கேள்விகளுக்கும் முறையாக உடனுக்குடன் பதில் அளித்தும் வந்தார். தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ”புதிய ஜனநாயகம்” இதழ் இன்றும் உயர்ந்து நிற்கிறது எனில், அதன் உடலாகவும் இரத்த ஓட்டமாகவும் தோழர் நீக்கமறக் கலந்திருந்தார் என்றால் அது மிகையல்ல.

2020-இல் மா.அ.க.வில் நவீன கலைப்புவாதக் கும்பல் மறைந்திருந்து சீர்குலைவு வேலைகள் செய்த போது, மா.அ.க.வின் பக்கம் நின்று, நவீன கலைப்புவாதக் கும்பலுக்கு எதிராக உறுதியுடன் போராடினார். அதன் பின்னர், 2022-இல் நவீன அராஜகவாதக் கும்பலின் சதி, சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாகப் போராடி முறியடிப்பதிலும் ஊக்கமாகப் பங்காற்றினார்.

மா.அ.க.வின் வலது திசைவிலகல் போக்கின் காரணமாக, 25-ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும் கொண்டுவர இயலாமல் இருந்த “புரட்சிப் புயல்” இதழை, 2021-இல் மீண்டும் கொண்டுவரத் தீர்மானித்த போது, அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்று செயல்பட்டார். கடந்த ஐந்தாண்டுகளாக “புரட்சிப் புயல்” காலாண்டிதழாகத் தங்கு தடையின்றி வெளிவந்து கொண்டிருப்பதில், அவரது அயராத பங்களிப்பு முதன்மையானது.

நக்சல்பாரி இயக்கத்தின் அடிப்படைகளையும் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படைகளையும் உயிராகப் பாதுகாத்து, மா.அ.க.வின் பிரதிநிதியாக பிற மா-லெ குழுக்களுடனான சித்தாந்தப் போராட்டத்தில் ஊக்கமாகப் பங்கேற்றார். மா.அ.க.வின் மக்கள் திரள் வழியை உயர்த்திப் பிடித்தார். பல மா-லெ குழுக்களில் நிலவும் இடது தீவிரவாதம், வலது சந்தர்ப்பவாதம், கலைப்புவாதம் மற்றும் பல்வேறு அராஜகவாதப் போக்குகளுக்கு எதிராக உறுதியாகப் போராடினார்.

2023-இல் எமது அமைப்பில் நடந்த, இந்தியப் புரட்சியின் பாதை – நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என 1980-களில் வகுத்துக்கொண்ட நவீன அராஜகவாதத்தை நிராகரித்து, பேரெழுச்சிப் பாதை என திருத்தி அமைத்தல்; நிரந்தரத் தேர்தல் புறக்கணிப்பு என்ற நவீன அராஜகவாதப் போக்கை நிராகரித்து, தேர்தலை ஒரு போராட்ட வழிமுறையாகப் பாவித்தல்; எமது போர்த்தந்திர-செயல்தந்திரக் கண்ணோட்டத்தில் நிலவிய நவீன அராஜகவாதக் கண்ணோட்டத்தை முறியடித்தல்; இந்தியப் பாசிசம் குறித்த எமது 2021 வரையறையில் இருந்த குளறுபடிகளைத் திருத்தி அமைத்தல் ஆகிய – சித்தாந்தப் போராட்டங்களின் போது, மா-லெ அடிப்படைகளில் தவறு நேராமல் பாதுகாக்க விரும்பினார்; அதற்காக உறுதியாகப் போராடினார்.

ஏகாதிபத்தியவாதிகளையும் ஆளும் வர்க்க ஆதரவாளர்களையும் அவர் என்றைக்குமே சகித்துக் கொண்டதில்லை. ஆடம்பரமான வார்த்தை ஜாலங்களுக்கு எப்போதும் மயங்கியதும் இல்லை. உழைக்கும் வர்க்கத்தின் மீதான தாக்குதல், புரட்சியாளர்கள் மீதான அரசின் தாக்குதல்களை ஈவிரக்கமின்றி விமர்சித்து வந்துள்ளார். அதற்கு, “புதிய ஜனநாயகம்”, “புரட்சிப் புயல்” இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகளே சான்றாதாரங்களாக உள்ளன.

தோழரிடம் எந்த விசயத்தைப் பற்றியும் எப்போதும் விளக்கம் கேட்டுக்கொள்ளலாம் என்னுமளவுக்கு நடப்பு விசயங்கள், வரலாற்று நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்களிலும் அவர் மிகத் தெளிவான விவர அறிவுடன் இருந்தார். அது, ரசியப் புரட்சியின் வரலாறாக இருக்கலாம்; ஏதாவது ஒரு நாட்டின் சிறந்த திரைப்படமாக இருக்கலாம்; இசைத்துறை சார்ந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களாக இருக்கலாம்; ஒரு நாட்டின், மக்களின் குறிப்பான இனம், பண்பாடு, பழக்க வழக்கம், மொழி தொடர்பானவையாக இருக்கலாம்… இவை எது குறித்தும் அவரிடம் விவாதிக்கலாம், கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற அளவிற்கு பல்துறை அறிவுடன் இருந்தார். இவை குறித்த தனது அறிவை தொடர்ந்து வளர்த்தும் வந்துள்ளார்.

கலை, இலக்கிய ரசனையும் அழகியல் உணர்ச்சியும் கொண்டவர். சோவியத் யூனியனின் போர் பாடலான “கேட்யுஷா”வின் வரலாறையும் அதன் நயம் – அது வெளிப்படுத்தும் நாட்டுப்பற்றுணர்வையும் அவருக்கு விளக்கவும் தெரியும். “சிவாஜி” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ”பல்லேலக்கா” பாடல் ஏன் உலகப் புகழ் பெற்றது என அவரால் எடுத்துக்கூறவும் முடியும்.

எந்த நேரத்திலும் எந்த தோழரும் அவருடன் பேசத் தொடங்கும் போது, நாம் அறிய வேண்டிய உலகம் மிகப் பெரியது என்பதை அவரது பேச்சுக்களே நமக்கு உணர்த்திவிடும்.

இளந்தோழர்களை ஊக்குவிப்பதில் அவரது பங்களிப்பு மகத்தானது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரிடமும் எளிதில் பழகிவிடும் இயல்பு கொண்டவர். அவர் மிகவும் நினைவாற்றல் கொண்டவர். அவர் அறிந்த தோழர்களின், தோழர்களின் நெருங்கிய உறவினர்களின் குறிப்பான பிரச்சினைகள், சரி தவறுகளை கேட்டு அறிந்து கொள்வார். அவர்களைப் பற்றி, அவற்றைப்பற்றி மறவாமல் நலம் விசாரித்துத் தெரிந்து கொள்வார்.

தனக்காக அவர் எதையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. ஓரிரு சட்டைகள், ஒரு பேண்ட் ஆகியவற்றைக் கொண்டே எளிமையாக வாழ்ந்தார். அவசியமற்ற எந்தச் செலவுகளையும் செய்யமாட்டார். சில சிறிய செலவுகளுக்கும் கூட முறையாகக் கணக்குகளை வைத்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்; சுய ஒழுங்கை மேற்கொள்வதில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

எதிலும் ஒழுக்கம், நேர்த்தி போன்றவை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உயர்ந்த பண்புகள். இளந்தலைமுறை தோழர்களின் விட்டேத்தித்தனம், ஒழுங்கின்மை அவரை கடுமையான கோபத்திற்குள்ளாக்கினாலும், அவற்றைத் திருத்தி அமைப்பதில் ஊக்கமாகச் செயல்பட்டார். மேலும், பொறுமை, நிதானம் ஆகியவை அவரது இயல்பாக இருந்தன.

ஐம்பது ஆண்டுகள் அவர் புரட்சிகர அரசியலில் இருந்திருந்தாலும் இறுதி வரை, அவரது சொந்த ஊர், உறவினர்கள் குறித்து யாருக்கும் சொன்னது இல்லை, யாருக்கும் தெரியாது. அமைப்பில் அவரை “சம்பத்” என்று அழைக்கத் தொடங்கியது முதல் அவர் “தோழர் சம்பத்” ஆனார். அவர் உடல்நலிவுற்ற பின்னர், மருத்துவம் பார்க்க “ஆதார்” அட்டை எடுக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்ட போதுதான், அவரது பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை அறிய முடிந்தது. அந்த அளவிற்கு அமைப்புக் கட்டுப்பாட்டை உயர்த்திப் பிடித்தவர்.

1956-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி சரஸ்வதி-சிவசாமி இணையருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். அவருக்கு அண்ணன் ஒருவர் இருந்ததாக சிலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், ஒருமுறை கூட அவர்களைப் பார்க்க முயற்சித்தது இல்லை. அமைப்புப் பணிகள், புரட்சிகர வாழ்க்கையையே அவர் எப்போதும் நேசித்தார். தோழர்களையே தனது குடும்பமாக, உறவுகளாகப் பாவித்தார்.

மேலே குறிப்பிட்டிருப்பவை, தோழரின் கம்யூனிசப் பண்புகள், புரட்சிக்கான அவரது பங்களிப்புகளில் முக்கியமான அம்சங்கள் மட்டுமே. 1980-களில் துவக்கத்தில் கட்சிரீதியாகத் தொகுக்கப்பட்ட ஆவணங்கள், அதன் பிறகு வந்த மொழிபெயர்ப்பு நூல்கள் என பல்வேறு துறைகளிலும் தோழரின் பங்களிப்புகள் இருந்து வந்துள்ளன. இத்தனை வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் கூட, இவற்றை வைத்து ஒருபோதும் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் அல்ல என்பது அவரது குறிப்பிடத்தக்க உயர்ந்த பண்பு.

அவர் உணவு எடுத்துக்கொண்ட அளவைவிட பீடி அல்லது சிகரெட், தேநீர் ஆகியவற்றையே பெரிதாகச் சார்ந்திருந்தார். மருத்துவம் எடுத்துக் கொள்வதைக் கூட தேவையற்றது எனக் கருதி, மருத்துவம் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்தார். தோழரின் இந்த அராஜகப் பழக்க வழக்கங்களையும் கண்ணோட்டத்தையும் மாற்றியமைக்கும் எமது போராட்டத்தில் இறுதியாக அவை ‘வெற்றி’ பெற்று, தோழரின் உயிரை எடுத்துக்கொண்டு விட்டன.

கம்யூனிசப் பண்புகளுக்கும் உணர்வுக்கும் முன்மாதிரியாக இருந்து வாழ்நாள் முழுவதும் புரட்சிப் பணிகளையே முதன்மையாகக் கொண்டும், மக்களுக்காகவே சிந்தித்தும் செயல்பட்ட அத்தோழரின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு “உடல்தானம்” செய்யப்படுகிறது. இதன் மூலம், அவரது உடல் சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

தோழர் சம்பத், மா.அ.க.வின் வரலாற்றில் பொறுப்பில் இருந்த காலத்தில் மறைந்த முதல் தலைமைக் குழு தோழர் ஆவார். எனவே, அவரது மறைவை ஒட்டி ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கம்யூனிசத் தத்துவம் தெளிந்த நீரோடை போன்றது; அதை சமூகத்தின் எல்லா நிலைமைகளுக்கும் பொருத்தி சரியான நிலைப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும்; மாறிவரும் புதிய நிலைமைகளுக்கு ஏற்ப புதிய நிலைப்பாடுகளை வகுக்க வேண்டும்; புதிய இளம் தலைமுறையினரை அதிகளவில் கட்சிக்குள் கொண்டு வரும்போதுதான் இதையெல்லாம் விரைவாகச் சாதிக்க முடியும் என  தோழர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் மா.அ.க.வில் செயல்பட்ட காலத்தில் முன்மாதிரியாக இவற்றை நிறைவேற்றி வந்தோம். புதிய இளந்தலைமுறையினர் அமைப்பில் இணைவதை ஊக்கமாக வரவேற்று மகிழ்ந்தார். அவர் மறைந்தாலும் அவரது கனவை நனவாக்குவதற்கான எமது போராட்டங்கள் தொடரும்.

ஐம்பது ஆண்டுகள் நக்சல்பாரிப் புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து, அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணித்துக் கொண்டு, கடும் போராட்ட அனுபவங்களைப் பெற்ற தோழரின் நினைவுகள், இந்தியப் புரட்சி வானில், மக்கள்திரள் பாதையை உயர்த்திப் பிடித்த நக்சல்பாரி இயக்க வரலாற்றில் மற்றுமொரு நட்சத்திரமாகத் திகழும்! அவரது புரட்சிகரப் பண்புகளை வரித்துக்கொண்டு இந்தியப் புரட்சியை சாதிக்க உறுதியேற்போம்!

தோழர் சம்பத்துக்கு செவ்வணக்கம்!

இவண்,
மாநில அமைப்புக் கமிட்டி,
இ.பொ.க.(மா-லெ),
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க