மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினரும் புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியருமான தோழர் சம்பத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். தனது வாழ்நாளில் 50 ஆண்டு காலத்தை புரட்சிகர அரசியலுக்கு அர்ப்பணித்துக் கொண்ட தோழர் சம்பத், கட்சி, தோழர்கள், அரசியல், அமைப்புப் பணிகள் என்றே தன் வாழ்நாளை செலவிட்டார்.
தனக்கென எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் கம்யூனிஸ்ட்களுக்கே உரிய எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தோழர் உயிரிழந்த போது அவரிடம் ஓரிரு சட்டை – பேண்ட்களும், பத்திரிகை வேலைக்கு அடிப்படையான சில பொருட்களுமே இருந்தன.
இவ்வாறு, தனது இறுதி மூச்சிருக்கும் வரை மக்களுக்காகவும் புரட்சிக்காகவும் அயராது உழைத்த தோழர் சம்பத்தின் மறைவானது புரட்சிகர அரசியலுக்கு பேரிழப்பாகும். தோழர் மறைந்தாலும் அவரது உயர்ந்த கம்யூனிசப் பண்புகளையும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் தோழர்களின் மனதில் உரமாக்கி சென்றுள்ளார்.
இதனை உயர்த்திப்பிடிக்கும் விதமாகவும் தோழர் சம்பத்தை மக்களிடத்தில் கொண்டுசென்று சேர்க்கும் விதமாகவும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்துவது, தோழரின் புகைப்படத்தை வைத்து சிவப்பஞ்சலி செலுத்துவது, சுவரொட்டி ஒட்டுவது என தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தோழர் சம்பத் உயிரிழந்த அன்றிரவு, சிவப்பஞ்சலி சுவரொட்டிகளை குரோம்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், சென்ட்ரல், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தரமணி, வேளச்சேரி, பூந்தமல்லி, மதுரவாயல் என சென்னை முழுவதும் தோழர்கள் ஒட்டினர். மிக சொற்ப எண்ணிக்கையிலான தோழர்களாக இருந்தாலும் அன்றிரவு முழுவதும் தூங்காமல் சுமார் 1,200 சுவரொட்டிகளை ஒட்டினர். இத்தோழர்கள் யாவரும் முந்தைய நாள் வரையில் தோழர் சம்பத்தின் மருத்துவ சிகிச்சை தொடர்பான வேலைகளிலும், பிற வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டிருந்த இளம் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இரு நாட்களில் தமிழ்நாடு முழுவதுமுள்ள தோழர்கள், மதுரை, கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், உளுந்தூர்பேட்டை, உசிலம்பட்டி, ராணிப்பேட்டை, விருத்தாச்சலம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்ட, நகரப் பகுதிகளில் தோழர் சம்பத்தின் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் அமைப்பின் ஆதரவாளர்களாக இருப்பவர்களும் தாமாக முன்வந்து சுவரொட்டி ஒட்டும் பணியில் உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக, ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கத்தின் மகள் சிறுமி தேன்மொழி, மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி இணைச்செயலாளர் தோழர் அருணின் மகள் சிறுமி சஞ்சனா ஆகிய இரண்டு இளம் தோழர்களும் தாமாக முன்வந்து, உணர்வுப்பூர்வமாக தோழர் சம்பத்தின் சுவரொட்டிகளை ஒட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மக்கள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. அவர்கள் தோழர் சம்பத்தின் மறைவு குறித்து அமைப்புத் தோழர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்து, இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தங்களால் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவிப்பதுடன், தோழர் சம்பத் உடனான தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், தோழர் சம்பத்தின் சுவரொட்டிகள் இணைய போஸ்டர்களாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அவற்றை பத்தாயிரக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர். பின்னூட்டங்களில் ஆயிரக்கணக்காணோர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தியுள்ளனர். பலர் இவற்றை பகிர்ந்து தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
***

மதுரை கிழக்கு

மதுரை மேற்கு

உளூந்தூர்பேட்டை

விருத்தாச்சலம்

சென்னை

கோவை

கிருஷ்ணகிரி

புதுச்சேரி

நெல்லை

திருவாரூர்

![]()
வினவு களச்செய்தியாளர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





