
23.11.2025
மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் உச்சநீதிமன்ற கருத்துரை!
மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்
பத்திரிகைச் செய்தி
மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கருத்துரை (advisory opinion) வழங்கியுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஏப்ரல் 8, 2025 அன்று உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறுநிறைவேற்றம் செய்து அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்ததுடன், “சட்டமன்றத்தில் நிறைவேற்றம் செய்து அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். மறுநிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை புரட்சிகர – ஜனநாயக சக்திகள் பெரிதும் வரவேற்றிருந்தனர்.
இந்நிலையில், இத்தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய மோடி அரசு மேல்முறையீடு செய்வதற்குப் பதிலாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூலம் (அரசியலமைப்பின் 143-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி) ‘தீர்ப்பு குறித்து விளக்கம் கோருவதாக’ (Presidential reference) மே 2025-இல் நயவஞ்சகமான முறையில் 14 கேள்விகளை உச்சநீதிமன்றத்திடம் எழுப்பியிருந்தது.
இதை விசாரித்து விளக்கம் அளித்த நீதிபதி கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வானது, அரசியலமைப்பின் பிரிவு 200 மற்றும் 201-இன் கீழ் அளிக்கப்படும் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஒப்புதல்களுக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது என்று தனது கருத்துரையை வழங்கியுள்ளது.
இக்கருத்துரையானது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மேலான அதிகாரத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. தற்போது இருக்கும் குறைந்தபட்ச மாநில அதிகாரங்களைக் கூட ஒழித்துக்கட்டுவதாக உள்ளது. மாநில உரிமைகளுக்கு சவக்குழி வெட்டும் இக்கருத்துரையை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பாசிச பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களுக்கு இருந்த குறைந்தபட்ச அதிகாரமும் வெட்டி சுருக்கப்பட்டு மாநகராட்சிகளைப் போல் மாற்றப்பட்டு வருகின்றன. மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆர்.என்.ரவி போன்ற பாசிசத்தின் அடியாட்களைக் கொண்டு கட்டுப்படுத்திப் பணியவைக்கும் பாசிச நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அரிதிலும் அரிதாக மாநில உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் அளிக்கப்பட்ட ஏப்ரல் 8 தீர்ப்பையும் உச்சநீதிமன்றத்தின் இக்கருத்துரை ஒன்றுமில்லாமல் செய்துள்ளது.
அதேபோல், ஆளுநர் அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டவர் என்றும் அவருக்கென தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை என்றும் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளையும் இக்கருத்துரை ஒழித்துக்கட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது.
ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றம் மேற்குறிப்பிடப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒப்புதலுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில், தற்போதைய உச்சநீதிமன்றத்தின் கருத்துரை அம்மசோதாக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இக்கருத்துரை மாநில உரிமைகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் பேசியும் எழுதியும் வரும் நிலையில், ஆளும் தி.மு.க. அரசு, இக்கருத்துரையால் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்று பசப்பி வருகிறது; பாசிச அபாயத்தை மக்களிடத்தில் அம்பலப்படுத்தாமல் மக்களைக் குழப்பியும் பாசிசத்திற்கு பலிகொடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
பாசிசமயமாகிவரும் இந்த அரசுக் கட்டமைப்பையும் அரசியலமைப்பையும் பயன்படுத்தி மாநில உரிமைகள் உள்ளிட்ட எந்த உரிமையையும் நிலைநிறுத்த முடியாது என்பதையே இந்த உச்சநீதிமன்ற கருத்துரை தெளிவு படுத்துகிறது. எனவே, உரிமைகளை நிலைநாட்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை அமைப்பதற்கான போராட்டங்களை மேற்கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மக்கள் அதிகாரக் கழகம் தீர்க்கமாக முன்வைக்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





