SIR பணிச்சுமையால் ரயில் முன் பாய்ந்து பி.எல்.ஓ. தற்கொலை

எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது தேர்தல் ஆணையம். மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.

SIR பயங்கரவாதம்! | பதிவு 7

கேரளா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த இரண்டு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLOs – Booth Level Officers) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) அதீத பணிச்சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூரில் பள்ளி அலுவலக பணியாளராக பணியாற்றி வந்த 44 வயதான அனீஸ் ஜார்ஜ் கடந்த நவம்பர் 16 அன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது குடும்பத்திடம் விசாரித்ததில், பி.எல்.ஓ-வாக நியமிக்கப்பட்ட ஜார்ஜ்க்கு குறுகிய காலத்தில் கடுமையான பணிச்சுமை கொடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

அனீஸ் ஜார்ஜ் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் ஒன்றியத்தில் உள்ள 18-வது வாக்குச்சாவடிக்கு அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், அது அவருக்கு பழக்கப்படாத ஊராக இருந்ததால் எஸ்.ஐ.ஆர். படிவங்களை கொடுப்பதிலும் பெறுவதிலும் மிகுந்த சவால்களை எதிர் கொண்டதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். இன்னொரு நண்பர் தெரிவிக்கையில், ஜார்ஜ் அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் உதவிக் கோரியதாகவும், ஆனால், அவர்கள் உதவவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால், ஜார்ஜ்க்கு குறிப்பிட்ட இலக்கு, காலக்கெடு, அழுத்தம் எதுவும் கொடுக்கப்படவில்லை என நிர்வாகம் கூறியுள்ளது. ஜார்ஜின் உயிரிழப்புக்கும் எஸ்.ஐ.ஆர். பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று சரியாக கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஜார்ஜுக்கு மேலதிகாரிகளிடமிருந்து அதிகமான வேலை அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது; அதனை சமாளிக்க முடியாமலேயே அவர் இம்முடிவிற்கு வந்துள்ளார் என்று பஞ்சாயத்து தலைவர் எம்.பி.சுனில் குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.


படிக்க: உத்தரப்பிரதேசத்தில் பி.எல்.ஓ-கள் தற்கொலை: பாசிச பா.ஜ.க-வின் பச்சைப் படுகொலை!


இதுபோல, அதே நவம்பர் 16 அன்று ராஜஸ்தானில் நாஹ்ரி கா பாஸில் வசித்துவரும் 45 வயது பள்ளி ஆசிரியர் முகேஷ் ஜான்கிட், பிந்தயக்கா ரயில்வே கிராசிங்கில் ரயிலின் முன்னால் குதித்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

எஸ்.ஐ.ஆர். வேலை இலக்குகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கவில்லை என்றால் இடைநீக்கம் செய்து விடுவேன் என மேலதிகாரி தன்னை மிரட்டியதாகக் ஜாங்கி கடிதம் எழுதி வைத்திருந்தார் என ஜாங்கிட்டின் சகோதரர் கஜானந்த் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஜாங்கிட் மரணம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மேலும், எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபடும் களப்பணியாளர்கள் மீது அதிகரித்துவரும் அழுத்தம் குறித்து அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ராஜஸ்தான் தொடக்க மற்றும் இடைநிலை பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் விபின் பிரகாஷ் சர்மா கூறுகையில், “மாநில, மாவட்ட மற்றும் துணைப்பிரிவு மட்டங்களில் எஸ்.ஐ.ஆர். தரவரிசையில் முதலிடத்தில் வருவதற்கான போட்டியில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது அதிகப்படியான அழுத்தம் சுமத்தப்படுகிறது” என்றார். மேலும், “பள்ளி அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருக்கும் நிலையில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மீது மேலதிகாரிகள் தேவையற்ற அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற கடைநிலை ஊழியர்களே பி.எல்.ஓ-களாக நியமிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு போதிய வழிக்காட்டுதல், பயிற்சி கொடுக்காமல் கடுமையான வேலைப்பளுவை சுமத்துகிறது தேர்தல் ஆணையம். எதார்த்தத்திற்கு புறம்பாக குறுகிய காலத்திற்குள் வேலைகளை முடிக்க கட்டாயப்படுத்துவது, மிரட்டுவது, பொய் வழக்குகளை பதிவு செய்து கைது செய்வது என நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறது. மேலும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, போலி வாக்காளர்களை சேர்க்க கட்டாயப்படுத்தப் படுவதும் அம்பலமாகி வருகிறது.

இதனால், நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ-கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், பணியிடத்திலேயே நெஞ்சுவலியால் செத்து மடிகின்றனர். இவையெல்லாம், தேர்தல் ஆணையம் – பாசிச பா.ஜ.க-வால் நிகழ்த்தப்படும் பச்சைப் படுகொலைகளாகும்.

மூலக்கட்டுரை: தி வயர்


மொழியாக்கம்: அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க