
16.12.2025
நீதிபதி செம்மல் மீதான இடைநீக்க நடவடிக்கை
இயற்கை நியதிக்கும் அறத்திற்கும் எதிரானது!
பத்திரிகைச் செய்தி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீதிபதியாக செயலாற்றிவந்த ப.உ. செம்மல் மீதான இடைநீக்க நடவடிக்கையானது இயற்கை நியதிக்கும் அறத்திற்கும் எதிரானது என்று மக்கள் அதிகாரக் கழகம் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட நீதிபதியாக நீதிபதி செம்மல் பணியாற்றி வந்த போது, எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்கை முறையாகவும் சரியாகவும் விசாரிக்காத டி.எஸ்.பி மீது கைது நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு எதிராக போலீசு துறை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்றது. மாவட்ட நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பின்னர் செம்மல் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டு அதனடிப்படையில் தற்பொழுது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் முடிவு செய்தால் தொழிலாளர் சட்டப்படி அவருக்கு அறிவிக்கை கொடுக்கப்பட வேண்டும். அந்த அறிவிக்கையில் உள்ள குற்றச்சாட்டிற்கு அவர் உரிய பதில் அளிப்பதற்குக் கால அவகாசம் வழங்கி அவர் அளித்த பதிலைக் கேட்ட பிறகு தான் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். இதுதான் இயற்கை நீதி கோட்பாடு. அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் மீதான குற்றச்சாட்டிற்கு எழுத்துப் பூர்வமாகப் பதில் தர அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு தான் அவர் மீது நடவடிக்கை எடுப்பதா கூடாதா என்பதை நிர்வாக முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் நீதிபதி செம்மல் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் அப்படிப்பட்ட எந்த இயற்கை நீதி கோட்பாடும் கடைப்பிடிக்கப்படவில்லை.
நீதிபதி செம்மல் மீதான இடமாற்ற நடவடிக்கையைக் கண்டித்து மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக போலீசு செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதற்காகவே ஒரு நீதிபதி பழிவாங்கப்படுகிறார் என்பது இன்றைய அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பதற்கான சான்றாகும்.
ஆகவே தமிழ்நாடு அரசு, நீதிபதி செம்மல் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் இரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





