
07.01.2026
திருப்பரங்குன்றம்:
இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு!
கண்டன அறிக்கை
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்து இருந்தார். அதற்கு எதிராக தமிழ்நாடு அரசு இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தது. மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பானது நேற்று வெளியானது.
ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அளித்திருந்த தீர்ப்பைப் போலவே எவ்வித சான்றுகளும் இன்றி இந்து மதவெறி கும்பலின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே இந்த இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவும் அமைந்துள்ளது. இதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றியதற்கான எந்த சான்றையும் ராம.ரவிக்குமார் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிஸ்டுகள் நீதிமன்றத்தின் முன்பு கொடுக்கவில்லை. ஆனாலும் நீதிமன்றம் நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றாமல் இருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடம் இல்லை என்பதற்கான வலுவான ஆதாரங்களை மாநில அரசின் அதிகாரிகளும் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா தரப்பிலும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தர்காவுக்கு அருகே உள்ள கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு ஆகம விதிகளில் இடம் உண்டு என்பதை நீதிமன்றத்தில் யாரும் நிரூபிக்கவில்லை. இதை நீதிபதிகள் எங்கேயும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்த கருத்தை மறுத்துள்ள நீதிபதிகளின் தீர்ப்பானது கீழ்க்கண்ட கருத்தினை உள்ளடக்கியதாக உள்ளது.
“நிச்சயமாக, இதுபோன்ற ஒரு குழப்பம் அந்த அரசாங்கத்தாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். தங்களின் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்தவொரு அரசாங்கமும் அந்த அளவுக்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.” இது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்தாகவே உள்ளதை அனைவராலும் அறிய முடியும்.
அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.
எவ்வித சான்றுகளும் இன்றி நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் இது போன்ற தீர்ப்புகள், முன் தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டால் நாட்டில் மக்களுடைய சொத்துகளை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாட முடியும் என்ற மிக மோசமான ஒரு நிலை ஏற்படும்.
திருப்பரங்குன்றம் மலை என்பது தமிழர் மலை. இங்கே சிக்கந்தனுக்கும் கந்தனுக்கும் சமணருக்கும் இடமுண்டு என்பதைத் தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் கார்ப்பரேட்டுக்கும் காவிகளுக்குமான மன்றங்களாக மாறி உள்ள இந்த சூழலில் மத நல்லிணக்கத்தையும் மதச்சார்பின்மையையும் உயர்த்திப் பிடிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் கடமையாகும்.
மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகளின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டையும் தமிழரையும் திட்டமிட்டு வஞ்சிக்கும் பாசிச மோடி அரசுக்கு எதிராக நம்முடைய போராட்டங்கள் தொடர வேண்டும். அதன் வழியாகத்தான் தமிழ்நாட்டின் பெருமையையும் மத நல்லிணக்கத்தையும் காப்பாற்ற முடியும். அதையே 2026 ஆம் ஆண்டு தீர்மானமாக தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





