(கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட “The Politics of Corporations in ‘New’ India” என்ற நூலிலிருந்து ஒரு பகுதி “தி வயர்” (The Wire) இணையதளத்தில் “How the Rise of Hindutva and the Rise of Wealth Concentration Are Linked” என்ற தலைப்பில் வெளியானது. அதன் தமிழ் மொழியாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.)
***
இந்துத்துவத்தின் எழுச்சியும் பெருகும் செல்வக் குவிப்பும்:
ஓர் அரசியல் – பொருளாதார ஆய்வு
மேல்தட்டு எதிர்ப்பு எனும் பாசிச வேடம்
சங் பரிவார் தன்னை “மேல்தட்டு வர்க்கத்திற்கு” எதிரானதாக (Anti-elite) காட்டிக்கொண்டு பெருந்திரளான மக்களின் ஆதரவைத் திரட்டியுள்ளது. இது, அன்றைய பாரம்பரிய ஜெர்மன் மேல்தட்டு வர்க்கத்தை வீழ்த்தப்போவதாகக் கூறி மக்களிடம் ஆதரவு திரட்டிய நாஜி கட்சியின் உத்தியைப் போன்றதேயாகும்.
அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளை எடுத்துக்கொண்டால், அங்குள்ள கோடீஸ்வரர்களின் நிதியில் இயங்கும் தீவிர வலதுசாரி இயக்கங்கள், பாசிச சிந்தனைகளை எதிர்க்கும் அறிவுஜீவிகளைத் தாக்குவதற்கு “எலைட்” (மேல்தட்டு வர்க்கம்) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஆனால், அச்சொல்லை அவர்கள் சம்பந்தப்பட்டவர்களின் பொருளாதாரப் பின்னணியைக் குறிக்கப் பயன்படுத்துவதில்லை; மாறாக, தங்கள் அரசியல் எதிரிகளை முத்திரை குத்தவே பயன்படுத்துகின்றனர்.
இதே பாணியில், தாராளவாத அறிவுஜீவிகள், சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு ஊடகங்கள் ஆகியோரை “லுட்யன்ஸ் டெல்லி கும்பல்” (Lutyens’ Delhi elite) என்று சங் பரிவார் ஏளனப்படுத்துகிறது. (டெல்லியின் அதிகார மையமான ‘லுட்யன்ஸ்’ பகுதியில் வசிக்கும் ஆங்கிலம் பேசும் பழைய அதிகார வர்க்கத்தினர், சாமானிய மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்துவதே இதன் நோக்கம்). இப்படி ஒரு மேல்தட்டு எதிர்ப்புச் சொல்லாடலை கட்டமைப்பதன் மூலமே இந்துத்துவா தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்கிறது. ஆனால் மறுபுறம், உண்மையான பொருளாதார மேல்தட்டு வர்க்கமான உள்நாட்டுப் பணக்கார முதலைகள் மற்றும் கார்ப்பரேட்டுகளுடன் மிக இணக்கமான கள்ளக்கூட்டினைப் பேணுகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால், இந்துத்துவா என்பது மேல்தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் என இரு தரப்பினரையும் ஈர்ப்பதில் வெற்றி கண்டுள்ளது. தற்போதைய இந்துத்துவா ஆட்சி மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மேல்தட்டு வர்க்கத்தின் நலன்களைத் தீவிரமாக முன்னெடுக்கும் அதே வேளையில், வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் இலவச ரேஷன் போன்ற அற்பச் சலுகைகள் மூலம் அடித்தட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்கிறது.
வறுமையும் பாசிச உளவியலும்: ‘கட்டமைக்கப்பட்ட திரள்’
ஒரு பாசிச ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவானது, அவர்கள் தங்கள் சொந்த உரிமைகளையும் பொருளாயத நலன்களையும் (material interests) புறக்கணிப்பதைக் காட்டுகிறது என்று ஹன்னா அரெண்ட் வாதிட்டார். இக்கருத்தாக்கத்தை நாங்கள் இன்னும் சற்று நுட்பமாகப் பரிசீலிக்கிறோம். இந்துத்துவ ஆதிக்கம் குறித்த எங்களது பார்வையில், அடித்தட்டு மக்கள் தங்கள் பொருளாயதச் சூழலைப் புறக்கணிப்பதாக நாங்கள் கருதவில்லை.
மாறாக, கடுமையான வறுமை, சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஆணாதிக்கம் மற்றும் வேர்மட்ட அளவில் ஜனநாயகம் அற்ற நிலை ஆகியவை அவர்களது எதிர்பார்ப்புகளையே சுருக்கி விடுகின்றன. அரசால் வழங்கப்படும் குறைந்தபட்ச சலுகைகளுக்கு (உதாரணமாக, இப்போது வழங்கப்படும் 5 கிலோ இலவச உணவு தானியம்) அப்பால் அவர்களால் சிந்திக்க முடிவதில்லை.
ஜெய்ரஸ் பனாஜி குறிப்பிடுவதைப் போல, இங்கு மக்கள் திரளானது “செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட உதிரிகளின் தொகுப்பாக” உள்ளது. அதாவது, மக்கள் தாமாக ஒன்றிணைந்த ஒரு வர்க்கமாக இல்லாமல், செயலற்ற, மந்தமான, சிதறுண்ட தனிநபர்களாகவே உள்ளனர். இந்தச் சிதறுண்ட நிலையில்தான், பாசிஸ்டுகள் அந்தத் தொகுப்பின் மீது வேலை செய்து, தங்களுக்குத் தேவையான முடிவுகளை உருவாக்குகிறார்கள். இதன் மூலம், சிதறிய மக்கள் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்ட இந்துத்துவக் குழுக்களின் கையாளுதல்களுக்கு எளிதில் பலியாகிறது. தனிநபர்களாகச் சுருக்கப்பட்ட இந்த (ஒழுங்கமைக்கப்படாத) மக்கள் திரளின் மீது, அரசு எந்திரத்தைக் கைப்பற்றியதன் மூலம் சங் பரிவார் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்கிறது.
கார்ப்பரேட் – இந்துத்துவக் கூட்டணி: அதிகாரத்தின் இயல்பு
ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் என்பது அடிப்படையில் சாதியமும், ஆணாதிக்கமும், ஜனநாயக விரோதமும் கொண்டது. அரசு இயந்திரங்கள் மீதான கட்டுப்பாடு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பெருமூலதனத்தின் இறுக்கமான பிடியை வலுப்படுத்த இந்துத்துவத்திற்கு உதவுகிறது. இப்பெருமூலதனத்தின் நலன்கள், சமூகத்தில் உள்ள மேல்தட்டு வர்க்கங்கள் மற்றும் ஆதிக்கச் சாதிகளின் நலன்களோடு ஒன்றிணைந்துள்ளன.
குஜராத் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் மோடி மேற்கொண்ட நடவடிக்கைகள், ஆதிக்கச் சாதிகளும் வர்க்கங்களும் இந்திய அரசியலைக் கட்டுப்படுத்தவே வழிவகை செய்துள்ளன. இப்போக்கு, சமத்துவமின்மையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போதைய ஆட்சி, மேல்தட்டு வர்க்கத்தின் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எந்த அதிகாரச் சமத்துவமின்மையை எதிர்ப்பதாக சங் பரிவார் பறைசாற்றுகிறதோ, அதே சமத்துவமின்மையால் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ அதிகார வர்க்கத்தின் அங்கமே இப்புதிய ஆட்சியாளர்கள்.
பழைய அதிகார வர்க்கத்தின் தொடரும் கட்டுப்பாடு நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது: பாசிச அரசியல் புதிய வழிகளில் அரக்கத்தனமானதாகவும் வன்முறையானதாகவும் இருந்தாலும், அதில் பல விசயங்கள் யாவும் விதிவிலக்கற்றதாகவும் (unexceptional) மற்றும் அன்றாட நடைமுறையாகவும் (routinized) உள்ளன.
ஊடகப் பிரச்சாரமும் காவி அடியாட்களும்
இந்துத்துவப் பிரச்சாரத்தைத் தக்கவைப்பதில் கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. தற்போதைய இந்துத்துவப் பிரச்சாரம் நவீனக் கருவிகளைப் பயன்படுத்துவதோடு, ‘பயங்கரவாத எதிர்ப்பு’, ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு’, ‘டிஜிட்டல்மயமாக்கல்’ மற்றும் ‘வளர்ச்சி’ ஆகியவற்றின் உத்திகளையும் சொல்லாடல்களையும் கையாள்கிறது. அதேசமயம் ஓவியங்கள், காலண்டர் கலை, நாட்டுப்புற நாடகம் மற்றும் சினிமா ஆகியவற்றில் உள்ள இந்து மதத்தின் பழைய பிம்பங்களையும் அது பயன்படுத்திக் கொள்கிறது.
ஸ்ட்ரீமிங் சேவைகளைத் தணிக்கை வரம்பிற்குள் கொண்டுவருவது போன்ற தொடர்ச்சியான கொள்கைகள் மூலம், டிஜிட்டல் கண்காணிப்புக்கான ஒரு கட்டமைப்பை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. இணையத்திலும் வீதிகளிலும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளும் வன்முறைக் கும்பல்கள், டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களைக் குற்றவாளிகளாக்கத் தண்டனைச் சட்டங்களை வரம்புமீறிப் பயன்படுத்துவது ஆகியவை இக்கொள்கைகளுக்குத் துணைநிற்கின்றன.
தகவல் தொடர்பு நுட்பங்கள் மீதான இந்தக் கட்டுப்பாடு, இந்துச் சடங்குகளை ஆக்ரோஷமான வெகுஜன – அரசியல் வெறியாட்டங்களாக மாற்றியுள்ளது. இவை மதம் மற்றும் தேசியவாதத்தின் பெயரில் ‘மற்றவர்களை’ (சிறுபான்மையினரை) அச்சுறுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, இந்துத்துவ சக்திகள் தங்கள் செய்தியைப் பரப்பப் பிரபலமான இசை வடிவங்களைத் திட்டமிட்டுப் பயன்படுத்துகின்றன.
பண்பாட்டுப் போர்: வரலாற்றை அழித்தல்
ஏற்கனவே உள்ள பண்பாட்டுப் படிமங்கள் (Cultural imagery) அமைந்திருக்கும் இடங்களை மாற்றியமைப்பதன் மூலமும், புதியவற்றை உருவாக்குவதன் மூலமும், இந்துத்துவம் தனது கருத்துக்களைப் பரப்ப நினைவுச் சின்னங்களைப் பயன்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக மசூதி இருந்த இடத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது அத்தகைய கருத்தை நிறுவுவதற்கு ஒரு முதன்மையான சான்றாகும்.
குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிற நினைவுச் சின்னங்களை உள்ளடக்கிய ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் மற்றொரு உதாரணமாகும். டெல்லியைப் பெரும்பான்மைவாத இந்துத்துவ வரலாற்று வரைவியலின் அடிப்படையில் மறுவடிவமைப்பதற்கான ஒரு முயற்சியே இத்திட்டம் என்று செயற்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இத்தகைய குறியீட்டு அரசியல் வெகுஜனப் பண்பாட்டுக் களத்திலும் நீள்கிறது; அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றப்பட்டது இதற்குச் சான்றாகும். இந்தியாவின் முஸ்லிம் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சிகளாக நகரங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றப்படுவதிலும் இதே போக்கு தெரிகிறது. உதாரணமாக: அலகாபாத் – பிரயாக்ராஜ், குர்கான் – குருகிராம், முகல்சராய் சந்திப்பு – பண்டிட் தீன் தயாள் உபாத்தியாய சந்திப்பு.
“எதிரி”யை உருவாக்குதல்: ஹிட்லரின் வழியில்…
“பாசிஸ்டுகளுக்குத் தங்கள் ஆதரவாளர்களைத் திரட்ட, பேயுருவம் கொடுக்கப்பட்ட ஓர் எதிரி (Demonized enemy) தேவை”. இதில், முஸ்லிம்களை இந்துத்துவா ‘அன்னியர்களாக’ (Othering) கட்டமைப்பது, நாஜி கட்சியின் யூத வெறுப்பை ஒத்திருக்கிறது. தேசியம், நவீனமயமாக்கல் மற்றும் ஜனநாயகம் என்ற போர்வையில் வன்முறையான அன்னியப்படுத்தலை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதால் இந்துத்துவா மிகவும் நயவஞ்சகமானதாக உள்ளது. அது கடந்தகாலத் தப்பெண்ணங்களைக் கையகப்படுத்தி, அவற்றை புதியவற்றுடன் இணைக்கிறது. ‘பழைய உண்மைகளைப் போலத் திறமையாக வேடமணிந்து, மிகவும் நவீன ஊடக நுட்பங்கள் மூலம் அந்தக் கலவையை ஒளிபரப்புவதன்’ வழியாக அது செயல்படுகிறது. இந்தச் சூழல்களும் உத்திகளும், சங் பரிவார் தனக்கான ஒரு ‘வன்முறை அடியாள் படையை’ (ஜெர்மன் நாஜிக்கள் உருவாக்கிய Storm Troopers போன்றது) திரட்டிக்கொள்ள உதவியுள்ளன; முஸ்லிம்களே இவர்களின் முதன்மை இலக்காக உள்ளனர்.
சமீபத்தில் இயற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), முஸ்லிம்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கீழ்ப்படுத்தும் இக்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய உதாரணமாகும். அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து 2014-க்குள் வந்த இந்து, பௌத்த, சமண, கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் பார்சி சமூகத்தினரை ‘துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினர்’ என்று இந்தச் சட்டம் அடையாளப்படுத்துகிறது. ஆனால் இது முஸ்லிம்கள், யூதர்கள், பஹாய்கள் மற்றும் நாத்திகர்களை அதன் வரம்பிலிருந்து விலக்கி, இந்திய அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை மீறும் ஒரு மத ரீதியான பிரிவினையை அறிமுகப்படுத்துகிறது.
ஒழுங்குமுறை அரசு அல்ல, ‘தரகர்’ அரசு
நியோ-லிபரலிசத்தின் (தனியார்மய – தாராளமயம்) உண்மையான பயங்கரத்திலிருந்து மக்களைத் திசைதிருப்பவே, முஸ்லிம்களைப் பற்றிய பீதியூட்டும் மாயத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம், மேல்தட்டு வர்க்கத்திற்குச் செல்வம் மாற்றப்படுவதையும், அதிகரித்து வரும் சமத்துவமின்மையையும் மறைக்க இந்துத்துவா முயற்சிக்கிறது. மக்கள் இத்தகைய அடையாளப் போட்டிகளிலும் காட்சிகளிலும் மும்முரமாக இருக்கும் வேளையில், அரசாங்க ரீதியான இந்துத்துவா அதன் கார்ப்பரேட் ஆதரவாளர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது.
2004-க்குப் பிறகு, காங்கிரஸ் ஆட்சி பெருவணிகத்தை ஆதரிக்கும் ஒரு ஒழுங்குமுறை அரசாக செயல்பட்டது என்றால், பாஜக அரசு அரசை ஒரு தரகர்-அரசாக மாற்றியுள்ளது. அதாவது, அரசு மக்களுக்கும் முதலாளிகளுக்கும் பொதுவான நடுநிலையாளராகச் செயல்படாமல், ஒரு தரகரைப் போலச் செயல்பட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்பந்தங்களை முடித்துக் கொடுக்கும் ஏஜென்ட்டாக மாறிவிட்டது.
தொழிலாளர் விரோதச் சட்டங்கள்:
2014-க்குப் பிறகு, வணிகங்களுக்கு உதவும் வகையில் பல தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
- உதாரணமாக, ஜூலை 2017-இல் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1986-இல் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்திருத்தம், ‘ஆபத்தானவை’ என்று பட்டியலிடப்பட்டிருந்த தொழில்களின் எண்ணிக்கையை 83-லிருந்து வெகுவாகக் குறைத்துவிட்டது. சுரங்கம், வெடிபொருட்கள் மற்றும் தொழிற்சாலைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டுமே இனி ஆபத்தானவை என்று அப்பட்டியல் சுருக்கப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 2020-இல், மக்களவை மூன்று தொழிலாளர் மசோதாக்களை நிறைவேற்றியது. இவை முதலாளிகளுக்கு விரிவான அதிகாரத்தை வழங்குவதன் மூலம் முறைசாரா தொழிலாளர்களின் பாதிப்பை அதிகரிக்கின்றன.
- இந்தியத் தொழிலாளர் சட்டங்களில் ஏற்பட்ட இந்த மாற்றம் நாஜி ஜெர்மனியுடன் சில வரலாற்று ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது:
“இதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால், லாபம் செங்குத்தாக உயர்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், கூலியோ சரிந்து கொண்டிருந்தது. பெருநிறுவனங்கள், வங்கிகள் எனத் தங்கள் கூட்டாளிகளின் லாபம் விண்ணைத் தொடுவதற்காக, நாஜிக்கள் திட்டமிட்டே கூலியை அடிமட்டத்தில் முடக்கி வைத்தனர். நாஜிக்கள் ஆற்றிய இந்தச் சேவையின் பலனாக, சமூக உற்பத்தியின் பெரும்பகுதியை, தொழிலாளர்களின் இழப்பில் ஜெர்மன் மூலதனம் அபகரித்துக் கொண்டது.”
இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல்:
கூடுதலாக, சுரங்கத் துறையில் பெருநிறுவனங்களை ஆதரிக்க பாஜக அரசால் பல சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.
- மார்ச் 2015-இல், நிலக்கரிச் சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, தேசியமயமாக்கப்பட்டிருந்த நிலக்கரித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டதோடு, நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் தொகுப்புகளை ஏலம் விடுவதற்கும் விற்பனை செய்வதற்குமான விதிமுறைகளையும் வகுத்தது.
- மே 2016-இல், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது, ஏலத்தில் விடப்பட்ட சுரங்கக் குத்தகைகளைத் தனிநபர்களுக்கு மாற்றுவதற்கு (மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு உட்பட்டு) அனுமதி அளித்தது.
- 2014-இல் பதவியேற்ற முதல் மூன்று மாதங்களுக்குள், மோடி அரசு 41 திட்டங்களில் 33 -க்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது; இதன் மூலம் சுரங்கம், கட்டுமானம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக 7,000 ஹெக்டேருக்கும் அதிகமான வன நிலங்கள் தாரை வார்க்கப்பட்டன. இந்த நிலங்களின் பெரும்பகுதி தனியார் பெருநிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டது.
வனங்களை அழிக்கும் சட்டங்கள்:
பெருநிறுவனங்களின் நலன்களை முன்னெடுக்கும் வகையில் பிற மசோதாக்களின் வரிசையும் அமைந்தன.
- உதாரணமாக, ஜூலை 2016-இல், நாடாளுமன்றத்தில் ‘இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதிச் சட்டம்’ (CAMPA Act) நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம், கிராம சபைகள் மற்றும் பிற காடுவாழ் மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையைத் தந்திரமாகப் புறக்கணிப்பதோடு, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் தோட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.
- மார்ச் 2018-இல், சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட வரைவு தேசியக் கொள்கையானது, ‘வளம் குன்றிய வனப் பகுதிகளை’ (40 சதவீதத்திற்கும் குறைவான மர அடர்த்தி கொண்ட பகுதிகள்) தனியார் தோட்டங்களுக்கும், பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டங்களுக்கும் வழங்க முன்மொழிந்தது. இத்திட்டத்தின் மூலம் 34 மில்லியன் ஹெக்டேருக்கும் அதிகமான வன நிலங்கள் இம்முறையில் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது
தனியார்மயமாக்கல் மற்றும் வரிச்சலுகைகள்:
- இதே பாணியில், ஜூலை 2019-இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை 51%-க்கும் கீழாகக் குறைக்க விரும்புவதாகவும், 1.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தனியார்மயமாக்கல் (பங்கு விற்பனை) இலக்கையும் அறிவித்தார். ஏர் இந்தியா, ஓ.என்.ஜி.சி, பாரத் பெட்ரோலியம், பி.எஸ்.என்.எல் மற்றும் எல்.ஐ.சி ஆகியவை இதில் அடங்கும்.
- வணிக நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக, இந்தியாவின் கடற்கரைகளைத் திறந்துவிட டிசம்பர் 2019-இல் கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிக்கையை அரசாங்கம் வெளியிட்டது. கிராமப்புற கடலோரப் பகுதிகளில், முன்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்த 200 மீட்டர் ‘கட்டுமானத் தடை மண்டலத்தில்’ கட்டிடங்கள் கட்ட இது அனுமதிக்கிறது.
- 2019-இல், பா.ஜ.க அரசு அடிப்படை கார்ப்பரேட் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கார்ப்பரேட் வரியின் விகிதத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.
ரயில்வே துறையிலும் தனியார்மயம்:
- டிசம்பர் 2019-இல், தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு 150 பயணிகள் ரயில்களை இயக்குவதற்காக 100 ரயில் தடங்களை அரசாங்கம் அடையாளப்படுத்தியது.
- ஜனவரி 2020-இல், இந்திய ரயில்வே அதன் உற்பத்தி அலகுகள் தனியார்மயமாக்கப்படும் என்றும், நாடு முழுவதும் 750 ரயில் நிலையங்களை நிர்வகிக்கத் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்தது.
பெருவணிகக் கும்பலுக்கு வாரி வழங்கப்பட்ட மற்றொரு சலுகை, 2020-இல் கொண்டுவரப்பட்ட இழிப்புகழ் பெற்ற மூன்று வேளாண் சட்டங்களாகும்:
- விவசாய விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதல்) சட்டம்.
- விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாட்டு ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.
- அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம்.
விவசாயிகளின் கடுமையான போராட்டங்கள் காரணமாகவும், தீர்மானகரமான உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டும் இச்சட்டங்கள் இறுதியில் திரும்பப் பெறப்பட்டன.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
“2023, டிசம்பர் 12 அன்று, ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. இவை, ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்தியத் தண்டனைச் சட்டம் – 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் – 1872 ஆகியவற்றை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக முறையே பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா (BSB) ஆகியவற்றைத் திணித்துள்ளன.
ஜனநாயகத்தை வெற்றுக்கூடாக்கிச் சிதைப்பதற்குத் தேவையான முழுமையான அதிகாரத்தை இம்மசோதாக்கள் அரசாங்கத்திற்கு அளிக்கின்றன. ஜனநாயகவாதிகள் (Democratic opponents), மாற்றுக் கருத்துடையோர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் மீதான கைது, தடுப்புக்காவல், வழக்குத் தொடுத்தல் மற்றும் சிறைப்படுத்துதல் ஆகியவற்றை அசுர வேகத்தில் அதிகரிக்க இப்புதிய சட்டங்கள் அரசிற்கு அதிகாரமளிக்கின்றன.
சட்ட அமைப்பை காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், உண்மையில் குடிமக்கள் மீதான அரசின் பிடியை இறுக்குவதன் மூலம், இச்சட்டங்கள் காலனியத் தன்மையையே மீண்டும் சட்டப்பூர்வமாக்குகின்றன.
மோடி அரசின் ஆதரவும் புதிய ஏகபோகங்களும்
“பா.ஜ.க அரசு பெருநிறுவனங்களை ஆதரிக்கப் புதிய சட்டங்களை இயற்றியுள்ள போதிலும், மிகக்குறிப்பாக, மோடி அரசுக்குத் தீவிர ஆதரவளிக்கும் அதானி மற்றும் அம்பானி ஆகிய புதிய ஏகபோகக் குழுமங்களின் நலன்களை அது முன்னெடுத்துள்ளது.
உதாரணமாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராகத் தொடுத்திருந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து, DRI-இன் தீர்ப்பளிக்கும் அதிகாரி கே.வி.எஸ். சிங் உத்தரவிட்டார். மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் தலைப்புகளின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பை உயர்த்திக் காட்டியதாக இந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அப்பொருட்களுக்கு 0 அல்லது 5 சதவீதத்திற்கும் குறைவான வரியே உள்ள நிலையில், ஏறத்தாழ 3,974 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்ததாகக் கூறப்பட்டது.
அக்டோபர் 2018-இல், நாடு முழுவதும் குழாய் வழி இயற்கை எரிவாயு வலைப்பின்னல்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களை அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 126 ஒப்பந்தங்களில், அதானி குழுமம் 25-ஐக் கைப்பற்றியது. ஏல நடைமுறையில் ஒரு தனி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
அதேபோல, அகமதாபாத், குவஹாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களும் (மார்ச் 2019-இல்) அதானி குழுமத்திற்கே வழங்கப்பட்டன.
கூட்டாளி முதலாளித்துவம் அல்ல – இது பாசிச ஏகபோகம்
இருப்பினும், இச்சலுகைகளை வெறும் ‘கூட்டாளி முதலாளித்துவம்’ (Crony capitalism) என்று மட்டும் சுருக்கிப் பார்த்துவிடக் கூடாது. அப்படிப் பார்ப்பது, ஏகபோக மூலதனத்திற்கும் பாசிசத்திற்கும் இடையே உள்ள உறவின் தனித்துவத்தைத் தவறவிடுவதாகும். சொல்லப்போனால், எல்லா முதலாளித்துவமுமே கூட்டாளி முதலாளித்துவம்தான். ஏனெனில், கார்ப்பரேட்டுகளுக்கு ஒப்பந்தங்களை வாரி வழங்குவதிலும், அவர்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை வளைப்பதிலும் அரசு எப்போதும் தனது விருப்பத் தேர்வை பயன்படுத்தவே செய்கிறது.
‘கூட்டாளி முதலாளித்துவம்’ என்ற பதத்தைப் பயன்படுத்துவதில் உள்ள கோளாறு என்னவென்றால், குறிப்பிட்ட வணிக நிறுவனங்களுக்குச் சாதகமாக இல்லாத ஒரு ‘தூய’ முதலாளித்துவம் இருக்க முடியும் என்று அது நம்ப வைக்கிறது. மேலும், முதலாளித்துவம் இயல்பாகவே ஒரு ‘தீங்கற்ற பாதையில்’ (Benign path) செல்லக்கூடியது என்றும், கூட்டாளி முதலாளித்துவம் என்பது அதிலிருந்து விலகிய ஒரு விதிவிலக்கு என்றும் அது தவறாகக் கட்டமைக்கிறது.
இந்தக் கண்ணோட்டம், முதலாளித்துவத்தின் அடிப்படைப் பண்பாக இருக்கும் ஏகபோகப் போக்கை (Monopoly tendency) மறைக்கிறது. உண்மையில், இந்த ஏகபோகப் போக்குதான் பாசிசத்தை ஆதரிப்பதிலும், அதிலிருந்து பயனடைவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏகபோக முதலாளித்துவத்தின் கீழ், பெருமுதலாளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானதாக மாறுகிறது. இது இன்றைய ‘கார்ப்பரேட் – இந்துத்துவக் கூட்டணியில்’ (Corporate-Hindutva nexus) மிகத் தெளிவாகத் தெரிகிறது.
ஏழைகளின் அவலம்
இந்தக் கார்ப்பரேட் – இந்துத்துவக் கூட்டணியின் விளைவாக, அடித்தட்டு வர்க்கங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன. அவர்களின் வாழ்க்கை, அதிகரித்து வரும் வறுமையாலும் பசியாலும் சூழப்பட்டுள்ளது. 2011-12 மற்றும் 2017-18 ஆண்டுகளுக்கு இடையில், கிராமப்புற இந்தியாவில் அனைத்துப் பொருட்களின் மீதான தனிநபர் நுகர்வுச் செலவு, அதன் உண்மையான மதிப்பில் 9 சதவீதம் சரிந்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. சுதந்திர இந்தியாவின் சாதாரண காலங்களில் இதுபோன்றதொரு நிகழ்வு எப்போதும் நடந்ததில்லை.
ஏழைகள் தேக்கமடைந்திருக்கும் அல்லது மேலும் ஏழ்மையடைந்திருக்கும் அதே வேளையில், பணக்காரர்கள் முன்னெப்போதையும் விடப் பெரிய லாபத்தை ஈட்டுகின்றனர். சமீபத்திய ஆக்ஸ்ஃபாம் (2023) அறிக்கையின்படி:
‘மிகப்பெரிய பணக்காரர்களான 10 சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் 72 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்திருக்கிறார்கள்; முதல் ஐந்து சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட 62 சதவீதத்தையும், முதல் ஒரு சதவீதத்தினர் மொத்த செல்வத்தில் கிட்டத்தட்ட 40.6 சதவீதத்தையும் வைத்திருக்கிறார்கள். 228.9 மில்லியன் ஏழைகளுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஏழைகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. மறுபுறம், இந்தியாவில் உள்ள மொத்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2020-ல் 102-லிருந்து 2022-இல் 166-ஆக அதிகரித்துள்ளது.’
எப்போதெல்லாம் அதிக சமத்துவமின்மையும், ஆழமான மற்றும் எளிதில் தூண்டி விடக்கூடிய சமூகப் பிளவுகளும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றனவோ, அப்போதெல்லாம் பாசிசம் செழித்து வளர்கிறது; இந்தியாவின் நிலையும் அதுவே.
கட்டுரையாளர்: ரோஹித் வர்மன்
தமிழாக்கம்: சந்திரசேகர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





