ஊடகக் குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.!

நியூஸ் தமிழ் செய்திக் குழுவை மிரட்டி காரில் கடத்திக் கொண்டுபோய் குவாரி அறையில் அடைத்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சமூக ஆர்வலர் சுடலைக்கன்னு செய்திக் குழு தாக்கப்பட்டது குறித்து தெரிவித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

0

ரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் சிவாயம் பகுதியில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டவிரோத முறையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை ஆய்வு செய்வதற்காக ஜனவரி 30-ஆம் தேதியன்று “நியூஸ் தமிழ்” செய்தி ஊடகத்தின் திருச்சி மண்டல பத்திரிகையாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு, வழக்கறிஞர் திருமலை ராஜன் மற்றும் அவரின் உதவியாளர் ராஜமாணிக்கம் என மொத்தம் ஐந்து பேர் கொண்ட குழுவினர் குவாரிக்கு சென்றுள்ளனர். குளித்தலை – மணப்பாறை நெடுஞ்சாலையில் குவாரிக்கு எட்டு கிலோமீட்டருக்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட்டு டிரோன் மூலம் குவாரியை படம் பிடித்துள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனியாண்டி மற்றும் 50 குண்டர்கள் கேமராக்கள், டிரோன்களை, ஒளிப்பதிவு உபகரணங்கள், செல்போன்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அத்துடன் செய்திக் குழுவை மிரட்டி காரில் கடத்திக் கொண்டுபோய் குவாரி அறையில் அடைத்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சமூக ஆர்வலர் சுடலைக்கன்னு செய்திக் குழு தாக்கப்பட்டது குறித்து தெரிவித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இரண்டு மணிநேரமாக குழுவினரைத் தொடர்பு கொள்ள முடியாததால் நியூஸ் தமிழ் ஊடக குழு போலீசில் புகார் அளித்துள்ளது. குழுவினரை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்ட போலீசார் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் குளித்தளை போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்துள்ளது. ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் பெரிதுபடுத்த வேண்டாம் என்று செய்தி குழுவினரிடம் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளது. நீண்ட நேரத்திற்குப் பின்னரே கதிரவன் மற்றும் செபாஸ்டியன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று நியூஸ் தமிழ் தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவப் பரிசோதனையில் கதிரவனுக்கு தலையில் பலத்த காயமும், செபாஸ்டியனுக்கு செவித்திறனில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செய்திக் குழுவினர் தாக்கப்படும் போது அவர்கள் வலியால் கதறியதையும், ‘அண்ணே உங்களை எனக்குத் தெரியும்’ என்று பத்திரிகையாளர் கதிரவன் வலி தாங்க முடியாமல் பேசுவதையும் ஆடியோவாக நியூஸ் தமிழ் வெளியிட்டுள்ளது. அதனைக் கேட்டும் போதே நெஞ்சம் பதறுகிறது.

செய்திக் குழுவினர் மீதான கொலைவெறித் தாக்குதலை அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் செய்திக் குழுவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் பத்திரிகையாளர்கள் மீதான பழனியாண்டியின் கொலைவெறித் தாக்குதல் குறித்து பெரும்பாலான ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடவில்லை.

தி.மு.க. அரசு தற்போது வரை பழனியாண்டி மற்றும் அவரின் குண்டர் படையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

இதற்கிடையில் செய்திக் குழுவைத் தாக்கிய பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பதிவான ஒரு மணிநேர சி.சி.டி.வி. காட்சிகளை அழிக்கும்படி பங்க் உரிமையாளரிடம் பழனியாண்டியின் மகன் விமலநாதன் பேசுவதையும், இருவரிடம் கையில் கீறிக்கொண்டு மருத்துவமனையில் சேரும்படியும் பேசுவதையும் ஆடியோவாக நியூஸ் தமிழ் வெளியிட்டுள்ளது.

சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்!

கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரியில் நடக்கும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக சமூக ஆர்வலர் ஜகபர் அலி குவாரி கும்பலால் லாரி ஏற்றி படுகொலைசெய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அச்சம்பவம் நடந்து ஒரு ஆண்டிற்குப் பின்பு முறைகேடுகளைப் படம்பிடிக்கச் சென்ற செய்திக் குழுவினரைத் தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ.-வின் குண்டர் படை தாக்கியிருப்பதானது கல்குவாரியில் நடக்கின்ற முறைகேடுகளைத் தடுப்பதற்கு சிறு துரும்பைக் கூட தி.மு.க. அரசு அசைக்கவில்லை, முறைகேடுகளை எதிர்த்துக் குரல் எழுப்புகின்ற பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கவில்லை என்பது தற்போது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

எனவே, செய்திக் குழுவைத் தாக்கிய எம்.எல்.ஏ. பழனியாண்டி மற்றும் அவருடைய குண்டர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். படுகாயமடைந்த செய்திக் குழுவினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சட்டவிரோதமாகச் செயல்படுகின்ற கல்குவாரிகளைக் கண்டறிந்து அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஊடகவியலாளர்களும், பத்திரிகையாளர்களும் தி.மு.க. அரசை வலியுறுத்த வேண்டும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க