“வேறு சாதியில் காதலித்து திருமணம் செய்ததால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. எங்கு சென்றாலும் தவறாகப் பேசுகின்றனர். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு ஊரில் வாழவே முடியவில்லை”
-கும்மிடிப்பூண்டி பெரிய ஓபுலாபுரம் கிராமத்தில் வசிக்கும் 23 வயதான பானுமதி கூறிய வார்த்தைகள் இவை.
இதே கிராமத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததற்காக ஊரைவிட்டே தங்களை ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஊர்ப் பிரமுகர்களின் தூண்டுதலின்பேரில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கடந்த 17 ஆம் தேதியன்று காவல்நிலையத்தில் பானுமதி புகார் அளித்துள்ளார்.
ஆனால், ‘இவை முற்றிலும் தவறான குற்றச்சாட்டுகள்’ என ஊர்ப் பிரமுகர்கள் பிபிசி தமிழிடம் மறுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பெரிய ஓபுலாபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ள இந்தக் கிராமத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள் வசிக்கின்றனர்.
இதே கிராமத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மீனவ சமூக குடும்பங்கள் வசிக்கின்றன. இச்சமூகத்தைச் சேர்ந்த பானுமதியை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பிரேம்குமார் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர் இதே ஊரில் இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் பணியைச் செய்து வருகிறார்.
“ஐந்தாண்டுகளாக காதலித்து 2022 ஆம் ஆண்டு பானுமதியை திருமணம் செய்து கொண்டேன். வேறு சாதியில் திருமணம் செய்ததால் ஊருக்குள் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஒரு வருடமாக வெளியில் வசித்து வந்தோம்” எனக் கூறுகிறார் பிரேம்குமார்.
ஊருக்குள் தனக்கு சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் நேர்ந்ததாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“சாதி தான் அனைத்துக்கும் காரணம்”
“முதல் குழந்தை பிறந்த பிறகு வாடகை கொடுக்க முடியாததால் மீண்டும் பெரிய ஓபுலாபுரம் கிராமத்துக்கு வந்தோம். நாங்கள் திரும்பி வந்ததை ஊர்ப் பெரியவர்கள் ஏற்கவில்லை. எங்களை ஊரைவிட்டே ஒதுக்கிவிட்டனர்” என்கிறார் அவர்.
கிராமத்துக்குள் நடக்கும் திருமணம், இறப்பு என எந்த நிகழ்வுகளிலும் தங்களால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரேம்குமார், “ஊருக்குள் நாங்கள் வந்த பிறகு இளைஞர்களைத் தூண்டிவிட்டு சிலர் அடிக்கச் சொல்கின்றனர். இரவில் வீட்டின் மீது கற்களை எறிகின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் சமாதானம் பேசி அனுப்பிவிடுகின்றனர்” என்கிறார்.
“சாதி தான் அனைத்துக்கும் காரணம்” எனக் கூறும் பிரேம்குமாரின் மனைவி பானுமதி, “வெளியில் எங்கு சென்றாலும் தவறாக பேசுகின்றனர். வெளியில் தலைகாட்ட முடியவில்லை. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஊரில் வாழவே முடியவில்லை” எனவும் தெரிவித்தார்.
தொடர் பிரச்னைகளால் கிராமத்தில் வசிக்கும் தனது பெற்றோரும் கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
‘ஊர்க்கட்டுப்பாடு எனக் கூறி ஒதுக்கிவிட்டனர்’

இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதியன்று பெரிய ஓபுலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்ற இளைஞர் மரணமடைந்தார். இதையறிந்து பிரேம்குமாரின் மனைவிவழி உறவினர்கள் சிலர் மாலை அணிவிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஆனால், மாலை அணிவிப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “அப்போது அவர்களை சிலர் அடித்துள்ளனர். அடிவாங்கிய நபர்கள் என் வீட்டுக்கு வந்துவிட்டனர். சிறிதுநேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் என் வீட்டுக்கு வந்து என்னையும் அவர்களையும் அடித்தனர்” என்கிறார் பிரேம்குமார்.
இதன் பின்னணியில் ஊர்ப் பிரமுகர்கள் உள்ளதாகக் கூறும் பிரேம்குமார், தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார். அதில், இளைஞர்களை சிலர் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
மற்றொரு காணொளியில் வீட்டின் கதவு உடைக்கப்பட்ட காட்சியும் போலீசார் முன்னிலையில் சிலரை அடிப்பது போன்ற காட்சிகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
“எங்களைத் தாக்கியதைப் பார்த்து போலீஸ் வந்ததாக நினைத்தோம். ஆனால், சம்பவ இடத்தில் போலீசாரும் எங்களைத் தாக்கினர். அவர்களால் நாங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறியும் கேட்காமல் அடித்தனர்” என்கிறார் பிரேம்குமார்.
தாக்குதல் தொடர்பாக 17 ஆம் தேதியன்று இரவு ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் பிரேம்குமாரின் மனைவி பானுமதி புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில், ‘எங்கள் திருமணத்துக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு இல்லை. மீனவ சமுதாயப் பெண்ணை திருமணம் செய்த காரணத்துக்காக ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் என் கணவரை ஒதுக்கி வைத்துள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

‘கூட்டாக சேர்ந்து தாக்கினர்’
ஜனவரி 17 ஆம் தேதி நடந்த சம்பவம் குறித்துப் புகார் மனுவில் கூறியுள்ள பானுமதி, ‘ரஞ்சித் இறப்புக்கு சென்ற எனது அண்ணனை ஊரைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து தாக்கியுள்ளனர். எங்கள் வீட்டுக்கு வந்து கதவு, கட்டில், வீட்டு உபயோக பொருட்களை அடித்து நொறுக்கினர்’ எனக் கூறியுள்ளார்.
‘இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணமான கேசவன், சந்திரன், மூர்த்தி மற்றும் சதீஷ் ஆகியோர் எங்களை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்’ எனவும் புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.
பானுமதி அளித்த புகாரின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புச் சட்டம் (PROHIBITION OF HARASSMENT OF WOMEN ACT, 2002) உள்பட ஒன்பது பிரிவுகளில் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
“முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தாலும் எங்களை அடித்தவர்கள் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனக் கூறுகிறார் பிரேம்குமார்.
பெரிய ஓபுலாபுரம் கிராமத்தில் செல்லியம்மன் கோவில், பெருமாள் கோவில், மதுரை வீரன் கோவில் என மூன்று கோவில்கள் உள்ளன. இங்கு நடக்கும் விழாக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் வரி வாங்குவது வழக்கமாக உள்ளது.
“நான் வேறு சாதியில் திருமணம் செய்ததால் கோவில் வரியை வாங்க மறுத்துவிட்டனர். கடந்த ஆண்டு திருவிழாவுக்கு வரி வாங்க மறுத்ததால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தேன்” எனக் கூறுகிறார் பிரேம்குமார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். “ஆனால், வரியை வாங்க மாட்டோம் என ஊர்ப் பிரமுகர்கள் கூறிவிட்டனர்” என்கிறார் அவர்.
“வேலைக்குப் போனால் தான் வீட்டில் சாப்பாடு சாப்பிட முடியும். நான் சாதி மாறி திருமணம் செய்ததால் தொடர்ந்து பிரச்னை நீடிக்கிறது. இதனால் சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை” என்கிறார் பிரேம்குமார்.
(ஜனவரி 23, 2026 அன்று பிபிசி தமிழ் வலைத்தளத்தில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி)
நன்றி: பிபிசி தமிழ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram





