டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடக்கவிருந்த உணவுத் திருவிழாவில் மாடு மற்றும் பன்றிக்கறியை பரிமாற புதன‌ன்று டெல்லி உயர்நீதி மன்றம் தடைவிதித்துள்ளது. இனி பல்கலைக்கழக வளாகத்தில் இவற்றை பரிமாறவும் சாப்பிடவும் தடை செய்ய வேண்டும் என நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளது.

உணவு உரிமைத் திருவிழா என்ற பெயரில் சில முற்போக்கு மாணவர்கள் வரும் 28 ஆம் தேதி ஒரு உணவுத் திருவிழாவுக்கு திட்டமிட்டுள்ளனர். அதில் மாடு மற்றும் பன்றிக்கறி பரிமாறப்படும் என்று ஏற்கெனவே அறிவித்தும் இருந்தனர். இதுபற்றி பாஜக வின் மாநில தலைவர் விஜேந்திர குப்தா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2050 இல் மாவோயிசக் குழுக்கள் எல்லாம் இணைந்து ஆயுதம் மூலம் இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட மாவோயிஸ்டுகள் டெல்லியில் உள்ள 9 மாவட்டங்களில் 7 இல் செல்வாக்கு பெற்றிருக்கின்றனர். இத்தகைய தேசவிரோத சக்திகளில் இணைந்துள்ள சில மாணவர்கள் இணைந்து உணவுத் திருவிழா என்ற பெயரில் பசுவை உணவாக பரிமாற உள்ளனர். இதனை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் அவர்களைக் கண்காணிக்கவும் வேண்டும். இல்லாவிடில் பின்விளைவுகள் மோசமாக இருக்கும். அசாம் போல இன்னொரு கலவரம் ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.

மாட்டுக்கறிஇந்நிலையில் உணவுத் திருவிழாவுக்கு தடைகோரி ஆர்.எஸ்.எஸ் சார்பு ராஷ்டிரிய கோரக்ஸா சேனா சார்பில் விமல் வத்வன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில்  விழாவை அறிவித்த மாணவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்க வாய்ப்புள்ள 1994 ஆம் ஆண்டு டெல்லி விவசாய கால்நடைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மற்ற மாணவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக இச்செயல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பொதுநல வழக்காக தொடுக்கப்பட்ட இம்மனுவில் மத்திய உள்துறை அமைச்சகமும் காவல்துறையும் இத்தகைய சமூக விரோத சக்திகளை குறிப்பாக தேசவிரோத மாவோயிஸ்டுகளை கண்காணித்து, விழாவை தடைசெய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

வ‌ழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏகே சிக்ரி மற்றும் நீதிபதி ராஜீவ் சகாய் அடங்கிய உயர்நீதி மன்ற பெஞ்ச் அரசு தரப்பையும் பல்கலைக்கழக தரப்பையும் விசாரிக்கையில் 17 ஆம் தேதியே தாங்கள் தடைசெய்து விட்டதாக பல்கலைக்கழகம் சொல்லி விட்டது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜீவ் மேஹரா சட்டப்படி தாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மாணவர் பேரவைத் தேர்தலில் இத்திருவிழாவை ஏற்பாடு செய்த மாணவர்களில் ஒருவரான அபய்குமார் பேரவைத் தலைவர் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தார். தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களில் பலரும் இவரை ஆதரித்துள்ளனர். பேரவைத் தேர்தலில் இத்திருவிழாவை முன்வைத்தே பிரச்சாரம் செய்து குறிப்பிடத்தக்க வாக்குகளையும் அவர் பெற்றுள்ளதுதான் சங்க பரிவாரங்களின் கலக்கத்திற்கு காரணம். அபயகுமாரைப் பொறுத்தவரை தாங்கள் ஒரு விவாதத்தை துவக்கி வைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது எனும் பார்ப்பனத் திமிர் வட இந்திய மாநிலங்களில் இன்னும் எத்தனை செல்வாக்கோடு உள்ளது என்பதை இந்தச் செய்தி காட்டுகிறது. அதே நேரம் ஜேஎன்யூ போன்ற பல்கலைக் கழக மாணவர்கள் இதை எதிர்த்து போராடுவதை நாம் வரவேற்க வேண்டும்.