privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகொரிய தீபகற்பம் : அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா ?

கொரிய தீபகற்பம் : அமெரிக்காவின் அடுத்த போர்க்களமா ?

-

டந்த மார்ச் முதலாக கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவுகிறது. தென்கொரியாவும் அதற்கு ஆதரவாக அமெரிக்காவும் பெரும்படைகளையும் ஆயுதங்களையும் குவித்துப் போர் ஒத்திகைகளை நடத்தி வருவதால், தென்கொரியா மீது போர்ப்பிரகடனம் செய்து வடகொரியாவும் போர் ஒத்திகைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவிடமும் அமெரிக்காவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளதால், ஒருக்கால் போர் தொடங்கிவிட்டால் அதன் விளைவுகள் மிகக் கோரமாக இருக்கும் என்பதால் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் பெரும் பீதியில் உள்ளன.

கொரிய தீபகற்பம்வடகொரியா 2006 மற்றும் 2009-இல் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியுள்ளதோடு, கடந்த 2012 செப்டம்பரிலும் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. கடந்த பிப்ரவரியில் நிலத்தடி அணுகுண்டு சோதனையையும், ஏவுகணைச் சோதனையையும் நடத்தியுள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பதாகவும், அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென்கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் பாதுகாப்புக்காகவும் என்று கூறிக் கொண்டு அணுகுண்டு வீசும் பி-52 ரக போர் விமானங்களைக் கொண்டு கடந்த மார்ச் முதலாக தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா நடத்தி வருகிறது. இக்குண்டுகள் 1945-இல் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட 75 மடங்கு அதிக ஆற்றல் கொண்டவையாகும். இரண்டு குண்டுகள் வடகொரியா நாட்டின் மீது போடப்பட்டால், அவை அந்நாட்டை மயான பூமியாக்கிவிடும்.

ஏன் இந்தப் பதற்ற நிலை ?

ஜப்பானின் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரிய மக்கள், கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையைக் கட்டியமைத்து அன்றைய சோசலிச சோவியத் படைகளின் உதவியுடன் கொரியாவின் வடபகுதியை 1945-இல் விடுதலை செய்து சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர். தென்பகுதியில் அனைத்து கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ-வூன்- கியூங் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால், ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், தென்கொரியாவை ஆக்கிரமித்துக் கொண்டு தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்கி, லியூ-வூன்-கியூங்கைப் படுகொலை செய்து சைங்மான் ரீ என்ற கம்யூனிச எதிர்ப்புச் சர்வாதிகாரி தலைமையிலான அமெரிக்க விசுவாச பொம்மையாட்சியை நிறுவினர்.

இதனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடகொரியாவில் சுதந்திர தேசிய அரசும், தென்கொரியாவில் அமெரிக்காவின் பொம்மையாட்சியுமாக 38-வது அட்சரேகைக்கு தெற்காகவும் வடக்காகவும் 1948-இல் தென் கொரியாவும் வடகொரியாவும் பிளவுபட்டன. அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட பொம்மையாட்சி நிலவும் நாடாக உள்ளதால், அதனை ஒரு சுதந்திர நாடாகவே அங்கீகரிக்க முடியாது என்பதால், 1950-இல் “நம் தேசத்தை ஒன்றிணைப்போம்!” என்ற முழக்கத்துடன் தென்கொரிய பொம்மையாட்சியாளர்களை எதிர்த்து வடகொரியா படையெடுத்துப் பல பகுதிகளைக் கைப்பற்றியது. இதற்கெதிராக அமெரிக்கா தலைமையில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கம்யூனிச அபாயத்தை முறியடிப்பது என்ற பெயரில் போரில் குதித்தன. பல்லாயிரக்கணக்கானோரைப் பலிகொண்ட இப்போரைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரே தேசிய இனத்தவரான கொரிய மக்கள் வடகொரியா மற்றும் தென்கொரியா எனத் தனித்தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

கொரியா போர் விமானம்
தென் கொரியா மற்றும் ஆசிய,பசிபிக் பிராந்திய நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கானது என்ற பெயரில், தென் கொரியாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் அதி நவீன பி-52 ரக அணுகுண்டு தாக்குதல் போர் விமானம்.

தென்கொரிய சுதந்திர அரசைப் பாதுகாப்பது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டுவது என்று பசப்பிக் கொண்டே, இப்பிராந்தியத்தில் தனது போர்க்கப்பல்களையும் போர்விமானங்களையும் கொண்டு அடுத்தடுத்து போர் ஒத்திகைகளை நடத்தி வடகொரியாவையும் சீனாவையும் அமெரிக்கா ஆத்திரமூட்டி வருகிறது. அமெரிக்காவை எதிர்த்து சீனாவும் வடகொரியாவும் நவீன ஆயுதங்களுடன் அணு ஆயுதச் சோதனை நடத்தி எச்சரிப்பதைக் காரணங்காட்டி, தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிக் கொண்டு அந்நாடுகளில் இராணுவத் தளங்களை நிறுவி, அமெரிக்கா தனது ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது. மறுபுறம், வடகொரியாவைப் பயங்கரவாத நாடு, சர்வதேசச் சட்டங்களை மதிக்காத போக்கிரி நாடு என்று குற்றம் சாட்டி, பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தி வருகிறது.

ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கம்

இப்பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதையும் அமெரிக்க நட்பு நாடுகளை இணைத்துக் கொண்டு கூட்டுத் தாக்குதல் தொடுப்பதையுமே அமெரிக்க வல்லரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைக் கப்பல் மூலம் மியான்மர் (பர்மா) வரை கொண்டுவந்து, பின்னர் மியான்மரிலிருந்து நிலத்தடிக் குழாய் வழியாக சீனாவுக்குக் கொண்டுசெல்லும் திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதனைத் தடுப்பதற்காகவே, மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது என்ற பெயரில், அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டை சீனாவின் செல்வாக்கிலிருந்து மீட்டுத் தன்பக்கம் வளைத்துக் கொண்டது. இதனால் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயைக் கப்பல் மூலம் கொண்டு செல்வதற்கான ஒரே வழியாக மலாக்கா நீரிணை மட்டுமே இருப்பதால், இப்பகுதியிலுள்ள நாடுகளைத் தனது கூட்டாளிகளாக மாற்றிக் கொண்டு இராணுவத் தளங்களை அமைத்து சீனாவை அமெரிக்கா எச்சரிக்கிறது.

போலி சோசலிச நாடான வடகொரியா, ஏறத்தாழ இரண்டரைக் கோடி மக்களைக் கொண்ட சிறிய, வறிய நாடு. மறைந்த வடகொரியாவின் தேசியத் தலைவரான அதிபர் கிம்-இல்-சுங் குடும்பத்தின் இளம் வாரிசு அதிபரான கிம்-ஜாங்-உன் தலைமையில், ஒருகட்சி இராணுவ சர்வாதிகாரத்துடன் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை அந்நாடு பின்பற்றி வருகிறது. அந்நாட்டின் இராணுவ ஆட்சியாளர்கள், அமெரிக்காவின் அச்சுறுத்தலைக் காட்டி நாட்டின் பொருளாதாரத்தையே இராணுவ மயமாக்கியுள்ளனர். போர் அச்சுறுத்தல்கள் மூலம் வடகொரியாவின் ஆட்சியைக் கவிழ்ப்பதை அமெரிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளதால், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளைப் பின்வாங்கச் செய்வதற்காக அணுகுண்டுத் தாக்குதலை நடத்தப் போவதாக எச்சரிக்க வேண்டிய இக்கட்டான நிலைமையில் வடகொரியா உள்ளது.

தனது வணிகத்துக்கும் எரிபொருளுக்கும் சீனாவையே வடகொரியா பெரிதும் சார்ந்துள்ளது. எனவே சீனா, வடகொரியாவுக்கு நிர்ப்பந்தங்களைக் கொடுக்க வேண்டும், ஒரு பொறுப்பான உலக சக்தியாக சீனா நடந்து கொள்ள வேண்டும், வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட சீனா ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்திக்கிறது. மறுபுறம், சீனப் பொருளாதாரம் அமெரிக்காவுக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்வதைச் சார்ந்துள்ளது. அமெரிக்காவின் பொதுக் கடன் பத்திரங்களை 1.6 டிரில்லியன் டாலர் அளவுக்கு சீனா வாங்கி வைத்துள்ளதால், இன்றைய நிலையில் அமெரிக்காவை சீனா பகைத்துக் கொண்டால், சீனாவின் பொருளாதாரம் பெருத்த பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், கொரிய விவகாரத்தை நெளிவுசுழிவாகக் கையாள சீனா முயற்சிக்கிறது. மேலும், போர் மூண்டால் அண்டை நாடான வடகொரியாவிலிருந்து ஏராளமான அகதிகள் சீனாவுக்குள் பெருகுவார்கள் என்பதால், சீனா இந்த நெருக்கடியைத் தவிர்க்கவே விரும்புகிறது. வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்துக்கு ஆதரவாக சீனா வாக்களித்துள்ள போதிலும், வடகொரியாவில் தற்போது நிலவும் அமெரிக்க எதிர்ப்பைக் கொண்ட ஆட்சி கவிழ்ந்தால், அது சீனாவுக்குப் பாதகமாக அமையும் என்பதால், வடகொரியாவை அவ்வளவு எளிதில் கைவிடவும் சீனா தயாரில்லை.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
தென் கொரியாவின் ஜின்ஹே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள “யு எஸ் சான்பிரான்சிஸ்கோ” எனும் அதிநவீன அணுகுண்டு வீசும் திறனுடைய அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்.

ஒரே தேசிய இனத்தவரைக் கொண்ட இரண்டு கொரியாக்களும் ஒரே நாடாக ஐக்கியப்படவும், கொரிய தீபகற்பத்தில் அமைதியும் சமாதானமும் நீடிக்கச் செயவும் இரண்டு கொரிய அரசுகளோடு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003-ஆம் ஆண்டில் ஆறு நாடுகளின் பேச்சுவார்த்தைகள் நடந்தன. வடகொரியா தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதெனவும், இதற்கு ஈடாக பொருளாதாரத் தடைகளை நீக்கி வடகொரியாவுக்கு எரிபொருள் உதவியளிப்பது எனவும் முடிவாகி, அனைத்துலக அணுசக்தி முகமையின் மூலம் வடகொரியாவின் அணுசக்தித் திட்டங்களைச் சோதனையிட்டு கண்காணிப்பதும் நடந்தது. இருப்பினும், அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் வெளியுறவுச் செயலரான கண்டலீசா ரைஸ் ஆகியோரின் அடாவடிகளால் இப்பேச்சுவார்த்தைகளை வடகொரியா முறித்துக் கொண்டது. அதன் பிறகு அமைதி,சமாதானம் என்ற பசப்பல்களுடன் அதிபர் ஓபாமா ஆட்சிக்கு வந்தபோதிலும், ஆறுநாடுகளின் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, ஏவுகணைத் தாக்குதல், கூட்டுப் போர் பயிற்சிகளை நடத்திக் கொண்டு வடகொரியாவை மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறார்.

பனிப்போருக்குப் பின்னர் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைந்ததைப் போல, வட-தென் கொரியாக்கள் இணைய வேண்டுமென்று ஏகாதிபத்தியவாதிகள் பசப்பினாலும், உண்மையில் அது அவர்களின் ஆதிக்க நலன்களுக்கு எதிரானது. இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவினால், அமெரிக்க இராணுவம் இப்பிராந்தியத்திலிருந்து வெளியேற வேண்டியதாகிவிடும். தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக பசிபிக் கடற் பகுதியிலும், குறிப்பாக சீனாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் ஜப்பானின் ஒக்கினவா தீவிலும் நிரந்தரமாகத் தனது படைகளைக் குவித்து வைப்பது அமெரிக்க மேலாதிக்கவாதிகளுக்கு அவசியமாக உள்ளது. மேலும், கொரிய பிரச்சினையை வைத்து தென்கொரியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆயுத வியாபாரம் செய்வதற்கும், ஆசிய பசிபிக் கடல் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்வதற்கும் அமெரிக்காவுக்கு கொரிய பிரச்சினை அவசியத் தேவையாக உள்ளது. இவற்றாலேயே இன்னமும் கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பவில்லை. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012-இல் வெளியேறும் என்ற ஒப்பந்தமும் நிறைவேறவில்லை.

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் நாட்டாமை

கிம் ஜாங்-உன்
அமெரிக்காவின் மேலாதிக்கப் போர் அச்சுறுத்தலை முறியடிக்க, இராணுவத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்-உன்.

உலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடலின் ஊடாக நடப்பதாலும், தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாக இருப்பதாலும், இப்பகுதியானது போர்த்தந்திர முக்கியத்துவம் வாந்த குவிமையமாக உள்ளது. மேலும், தென்சீனக் கடல் பிராந்தியத்தில் ஆளில்லாத் தீவுகளாக 200-க்கும் மேற்பட்ட சிறிய தீவுக் கூட்டங்கள் உள்ளன. எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் கடலுணவு வளமும் நிறைந்துள்ளதால் இத்தீவுகளுக்கு உரிமை கோரி வடக்கே சீனா மற்றும் தைவான், கிழக்கே பிலிப்பைன்ஸ், மேற்கே வியட்நாம், மலேசியா மற்றும் புருணை, தென் கிழக்கே இந்தோனேசியா என இவ்வட்டாரத்திலுள்ள நாடுகள் உரிமை கோருகின்றன.

தென் சீனக்கடலில் உள்ள இத்தீவுகள் யாருக்குச் சோந்தம் என்பதை அந்த வட்டார நாடுகள்தான் தங்களுக்குள் பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் தலையிட்டு நாட்டாமை செய்வதற்கு அமெரிக்காவுக்கோ அல்லது பிற ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கோ எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், அவ்வாறு தலையிடுவதற்கான முகாந்திரத்தைத் தேடுவதற்காகவே, தனது நட்பு நாடுகளின் பெயரால் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது. பொருளாதார நெருக்கடிகள் முற்றி வருவதால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீது குறி வைத்து, சீனாவின் செல்வாக்கைத் தடுத்து இப்பிராந்தியத்தில் மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்றன.

கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன. எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய உரிமை என்று சீனாவும் தைவானும் ஜப்பானை எதிர்க்கின்றன. பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை வியட்நாமும் தைவானும் உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இன்னும் சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய வல்லரசானது, கடந்த 2010-இல் வோஸ்டாக் எனும் பெயரில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மிகப் பெரிய போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க விசுவாச நாடுகளுக்குத் தனது இராணுவ வல்லமையை வெளிக்காட்டி எச்சரிக்கும் நடவடிக்கையே ஆகும். இதை ஜப்பான் எதிர்த்த போதிலும், அடுத்தடுத்து இது போன்ற போர் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும், புதிதாக நவீன அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல்களை இப்பகுதியில் இயக்கப் போவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

தென் கொரியா மக்கள்
“பயங்கரவாத அமெரிக்காவே, கொரியத் தீபகற்பத்திலிருந்து வெளியேறு!” : தென் கொரிய ஆட்சியாளர்களையும் அமெரிக்க வல்லரசையும் எதிர்த்து தென் கொரிய மக்கள் நடத்தும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தென்சீனக்கடல் பகுதியில் பாரம்பரிய உரிமையுள்ள தனது நாட்டின் சில தீவுகளுக்கு வியட்நாம் உரிமை கோருவதால், வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் துரப்பணப் பணிகளில் இந்தியா ஈடுபடக் கூடாது என்கிறது சீனா. இருப்பினும், கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா வியட்நாமுக்குச் சென்று திரும்பியதோடு, இந்தியாவின் எண்ணெய் எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) எண்ணெய் அகழ்வாய்வு மற்றும் துரப்பணப் பணிகளில் வியட்நாமுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார். இவற்றை சீனா தடுக்க முற்பட்டால் பதிலடி கொடுப்போம் என்கிறார், இந்தியக் கடற்படைத் தளபதி. ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கூலிப்படையாக இந்திய இராணுவத்தை அனுப்பியுள்ள இந்திய அரசு, இப்போது அமெரிக்க விசுவாச நாடான வியட்நாமுக்கு ஆதரவாக தனது கடற்படையை அனுப்பி தாக்குதல் தொடுக்கத் துடிக்கிறது.

கொரிய தீபகற்பத்தில் தற்போது நிலவும் பதற்றமும் போர்ச்சூழலும் வடக்கே ஜப்பானிலிருந்து தெற்கே ஆஸ்திரேலியா வரையிலான பசிபிக் கடற்பகுதியில் ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு இடையிலான மேலாதிக்கப் போட்டா போட்டியின் ஒரு வெளிப்பாடுதான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகள், ரஷ்யா, சீனா, இந்தியா, மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளுடன் சம்பந்தப்பட்டதாக கொரிய விவகாரம் உள்ளதால், இதனை வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சினையாகக் குறுக்கிப் பார்க்க முடியாது.

தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவிலிருந்து அமெரிக்க மேலாதிக்க வல்லரசு வெளியேறாதவரை கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவாது என்பதையும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிடுவதிலும் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதிலும் ஏகாதிபத்திய வல்லரசுகளிடையே போட்டாபோட்டி நிலவும்வரை போர்களும் பதற்றநிலையும் குறையாது என்பதையும், ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் எடுபிடி ஆட்சியாளர்களுக்கும் எதிராக அனைத்து நாட்டு மக்களும் போராட வேண்டிய அவசியத்தையும் படிப்பினையாக உணர்த்திவிட்டு கொரிய தீபகற்பம் தீராத போர்ப் பதற்றத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

– பாலன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________