Monday, May 5, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஆதார் அட்டை கட்டாயமல்ல - உச்சநீதி மன்றம்

ஆதார் அட்டை கட்டாயமல்ல – உச்சநீதி மன்றம்

-

23-09-2013 அன்று உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.சௌகான், எஸ்.எ. போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வில் ஆதார் அடையாள அட்டைக்கு எதிரான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. கர்நாடக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு.புட்டசுவாமி அவர்கள் உச்சநீதி மன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்த மனுவும், மும்பை உயர்நீதி மன்றத்தில் ஆதாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவும், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் எமது மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி. ராஜு பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை (படம் : நன்றி தி இந்து)

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2011 டிசம்பரில் நாங்கள் தாக்கல் செய்திருந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இறுதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில் உச்சநீதிமன்றம் முன்பு திரு.புட்டசாமி வழக்கு தாக்கல் செய்ததால், எமது வழக்கும் உச்சநீதிமன்றம் முன்பாக விசாரணைக்கு மாற்றக் கோரி எம் சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது.

மத்திய அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் நாகஸ்வரராவ்,மோகன் பராசரன் ஆஜரானார்கள். “ஆதார் அட்டை கட்டாயமில்லை, ஆர்வமுள்ளவர்கள் மட்டும் எடுத்து கொள்ளலாம்” என வாதிட்டனர். திரு.புட்டசுவாமி சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அனில் திவான், “ஆதார் அடையாள அட்டை அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது, கருவிழி கைரேகை எடுப்பது தனிநபர் சுதந்திரம், சமத்துவத்திற்கு எதிரானது. அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது, எனவே ஆதார் எடுக்கும் பணிக்கு தடை விதிக்க வேண்டும்” என கூறியுள்ளார். “பொது மக்கள் ஆதார் அட்டை வாங்குவது கட்டாயமல்ல, அவர்களது விருப்பம் தான்” என மத்திய அரசு சார்பில் மீண்டும் கூறப்பட்டது.

எம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலன் பூங்குன்றன், “கேஸ் இணைப்பு, அரசாங்கத்தின் மானியம் ஆகியவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என நடைமுறையில் அரசாங்கத்தால் அமல்படுத்தபட்டு வருகிறது” என வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், “அது சம்பந்தமான விபரங்களை தாக்கல் செய்யுங்கள்” என கூறினர். “மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் சமையல் எரிவாயு, வங்கி கணக்குகளுக்கு, ஏன் திருமண பதிவுகளுக்கு கூட ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை உயர்நீதிமன்ற பதிவாளர் உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிபதிகள் ஆதார் என்ணை வழங்க வேண்டும், அப்போது தான் சம்பளம் வழங்க முடியும் என சுற்றறிக்கை அனுப்பியதை” வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் கூறியுள்ளனர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ஆதார் அட்டை எடுத்தால் தான் பொது மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைக்கும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தக் கூடாது. ஆதார் அடையாள அட்டை எடுப்பது கட்டாயமல்ல” என உத்தரவிட்டனர். மேலும் “சட்ட விரோதமாக குடியேறியவர்கள், அகதிகளுக்கு ஆதார் அட்டை வழங்க கூடாது” எனவும் கூறினர். வழக்கானது இறுதி விசாரணைக்கு பட்டியலிட நாள் குறிப்பதற்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் மத்திய அரசின் பாதி உண்மை, பாதி பொய் கலந்த பிரச்சாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாமல் நந்தன் நீல்கேனி மூலம் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 122 கோடி மக்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறேன் என பிரச்சாரம் செய்து இதற்காக சுமார்ரூ. 50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.

ஆதார் என்பது 12 டிஜிட் அடையாள எண் தான். இதனால் எந்த அட்டையையும் வழங்க மாட்டோம் என்ற உண்மையை கூட மக்களுக்கு அரசாங்கம் சொல்லவில்லை. ’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. மக்களை உளவு பார்க்க மட்டுமே ஆதார் அடையாளம் பயன்படும். நலத்திட்டங்கள் தருவதற்கு என்பது மோசடியானது என்பதை உச்சநீதிமன்றம் முன்பும், மக்கள் நீதிமன்றம் முன்பும் அம்பலப்படுத்தி ஆதார் திட்டத்தை நிரந்தரமாக தடை செய்ய தொடர்ந்து போராடுவோம்.

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு