privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கமீனவர் தூக்கு ரத்து: இது நரேந்திர மோசடி!

மீனவர் தூக்கு ரத்து: இது நரேந்திர மோசடி!

-

போதை மருந்து கடத்தியதாகப் பொய்வழக்கு சோடிக்கப்பட்டு, கடந்த 2011 நவம்பரிலிருந்து இலங்கைச் சிறையில்அடைக்கப்பட்டு, தூக்குத் தண்டனை வரை போய், அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள், இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள். ஒருபுறம் பொய்வழக்கு என்ற சதி; இன்னொருபுறம் மீட்பு, விடுதலை என்ற நாடகம் என்பவைதான் இதன் பின்னுள்ள உண்மைகள்.

நரேந்திர மோசடிநாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரசு கூட்டணி அரசு தமிழக மீனவர் பிரச்சினையில் அலட்சியம் காட்டுவதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த நிலைமையை மாற்றியமைப்போம் என்றும் மோடி சவடால்அடித்தார். மோடி ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுடுவதில்லை என்பதைக் காட்டி, மோடியைக் கண்டு இலங்கை அரசு அஞ்சுவதாக ஒரு மாயத் தோற்றத்தை இந்துவெறி கும்பலும் பார்ப்பன ஏடுகளும் உருவாக்கின. மீனவர்களைச் சுடாதீர்கள், படகுகளை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் என்று ராஜபக்சேவிடம் கூறியுள்ளதாக சு.சாமி திமிராகப் பேசினார்.இதன் அடுத்த கட்டமாக, தூக்குத் தண்டனை விதித்து தமிழக மீனவர்களைஅச்சுறுத்தும் கிரிமினல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது

இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் மரண தண்டனையும் உள்ளடங்கியிருந்தாலும், 1976-க்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு அரசுத் தலைவர் பொதுமன்னிப்பு வழங்கி அது ஆயுள் தண்டனையாக்கப்படுவதுதான் வழக்கமாக உள்ளது. கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள் போதைமருந்து வைத்திருந்ததற்கான எவ்வித ஆதாரத்தைக்கூட காட்டமுடியாத நிலையிலும், வேண்டுமென்றேதான் இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியிருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீதான பொய்வழக்கை ரத்து செய்யவும், அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மோடி அரசின் வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வழக்குரைஞர் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழக அரசுதான் ரூ 20 லட்சத்தை இந்திய வெளியுறவுத்துறையின் மூலம் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனாலும், சிறையிலுள்ள மீனவர்களைச் சந்தித்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தூதரக அதிகாரி மேற்கொண்டாரென்றும், பிரதமர் மோடி அவர்களைத் தமிழகச் சிறைக்கு மாற்றக் கோரி ராஜபக்சேவிடம் தொலைபேசியில் பேசியதாகவும் மோடி அரசின் ஆத்மார்த்த முயற்சியால்தான் அவர்களை ராஜபக்சே விடுதலை செய்துள்ளதாகவும் துதிபாடுகின்றன, பார்ப்பன ஏடுகள்.

விடுதலையான மீனவர்களை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு சென்று பின்னர் சென்னைக்குக் கொண்டுவந்திருப்பதும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் என்று பா.ஜ.க. சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக பா.ஜ.கவின் நாடகத்தை அம்பலமாக்கியிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்தப் பொய்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசு மறுத்துள்ளது. ஒரே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பினருக்கு விடுதலையும் மற்றொரு தரப்பினருக்கு தூக்குத் தண்டனையும் அளிக்கப்படும் வினோதமும் இந்த நாடகத்தில் நடந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, விடுவிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தினார்கள் என்ற அவதூறு – அவமானக்கறை இன்னமும் நீங்கிவிடவில்லை. அவர்கள் ராஜபக்சேவின் கருணையினால் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளே அன்றி, நிரபராதிகள் அல்ல என்கிறது இலங்கை அரசு. சிங்கள கடற்படையை யோக்கியவான்களாகவும், தமிழக மீனவர்களைக் கிரிமினல் குற்றவாளிகளாகவும் காட்டும் இந்த அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொண்டுதான் இம்மீனவர்களை மீட்டுவந்துள்ளது மோடி அரசு.

எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்கள் அடைபட்டு வதைபடுகிறார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமே சிதைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இரண்டு விசைப்படகுகள் பழுதடைந்து கடலில் தத்தளித்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து கொக்கரிக்கிறது.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு, அனகாரிக தர்மபாலா என்ற சிங்கள இனவெறி புத்த பிட்சுவுக்கு அஞ்சல் தலைவெளியீடு, இலங்கை கடற்படை துணைத்தளபதி ஜெயந்த் பெரோராவுக்கு இந்தியக் கடற்படை அணிவகுப்பு மரியாதை, சிங்கள கடற்படைக்கு இந்திய அரசு அளித்துவரும் பயிற்சி, மீண்டும் அதிபர் பதவியில் அமர ராஜபக்சேவுக்கு மோடிதெரிவித்திருக்கும் வாழ்த்து – இவையனைத்தும் தமிழின விரோதப் போக்கில் மோடி அரசு, காங்கிரசு அரசை விஞ்சுவதையே காட்டுகின்றன. மோடியைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்த வீடணர்கள், இப்போது அவர் வாலைக்குழைத்துக்கொண்டு அந்தப் பக்கம் போவதைப் பார்த்து, இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவர்கள் போல நடிக்கிறார்களே, இந்த நாடகம் மோடி நடத்தியிருக்கும் தூக்குமேடை நாடகத்தையே தூக்கியடிக்கிறது.

– பாலன்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________