privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்பிரவீன் மன்வர் : ஐ.ஐ.டி பெற்றெடுத்த ஒரு பயங்கரவாதி

பிரவீன் மன்வர் : ஐ.ஐ.டி பெற்றெடுத்த ஒரு பயங்கரவாதி

-

றுமையின் காரணமாக தம் பிள்ளைகள் சோற்றைத் திருடித் தின்ற அவலத்தைக் கண்டோ, வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாத நெருக்கடியின் காரணமாகவோ குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள். குடும்பம் ஏழ்மையின் பிடியில் இருப்பதால், குடும்பத்தலைவனது வாழ்வு கேள்விக்குள்ளாக்கப்படும் போது குடும்ப உறுப்பினர்களின் இருப்பும் பிரச்சினைக்குள்ளாகிறது.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
பிரவீன் மன்வருக்கு சில்பா என்கிற மனைவியும், சர்வரி – வயது 9, பரிநீதி – வயது 2 என இரண்டு பெண் குழந்தைகள்.

ஆனால் அத்தகைய பொருளாதார பிரச்சினை ஏதும் இல்லாமல் வறட்டு கௌரவத்திற்காகவும் படித்த மேதாவித்தனத்தாலும் ஒருவன் தனது குடும்பத்தை கொலை செய்ய முயன்றான் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

மத்திய பிரதேசத்தின் கஜூராகோ அருகில் உள்ள சாத்தர்பூர் எனும் ஊரில் வசிக்கும் பிரவீன் மன்வர் ஐ.ஐ.டி.யில் படித்துவிட்டு பொதுத் துறை நிறுவனம் ஒன்றில் மாதம் சில லட்சங்களில் சம்பளம் வாங்கக் கூடியவர். இவருக்கு சில்பா என்கிற மனைவியும், சர்வரி – வயது 9, பரிநீதி – வயது 2 என இரண்டு பெண் குழந்தைகள் உண்டு.

சாமானியர்களுக்கு எளிதில் கிடைக்காத ஐ.ஐ.டி படிப்பு; ஆறிலக்கச் சம்பளம்.. அடுத்து என்ன? இன்பங்களைப் புதிது புதிதாக தேடி அனுபவிக்க வேண்டும் என்கிற நுகர்வு வெறி இவ்வர்க்கத்தின் பொதுப் பண்பு. அதுவே பாலியல் வெறியாக மாறி மன்வரை உந்தித் தள்ளுகிறது. தில்லியில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் புதிய இன்பங்களைத் தேடி அலைந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் மன்வருக்கு வாயில் புண் வந்திருக்கிறது உடலும் மெலிந்திருக்கிறது.

மன்வர் தற்கொலை கதை
விபச்சார விடுதிக்கு சென்று வந்ததால் தனக்கு எய்ட்ஸ் வந்திருக்குமோ என்று பயந்தார் மன்வர்.

விபச்சார விடுதிக்கு சென்று வந்ததால் தனக்கு எய்ட்ஸ் வந்திருக்குமோ என்று பயந்த மன்வர், வாய் புண்ணும் உடல் மெலிவும் எந்த நோய்க்கான அறிகுறி என்பதை அறிந்து கொள்ள கூகுளில் தேடியிருக்கிறார். இணைய தளங்களின் அரைகுறை அலோசனைகளின்படி தனக்கு வந்த வாய்ப்புண் எய்ட்ஸ்க்கான அறிகுறி என பீதியடைந்துள்ளார்.

வீட்டில் யாருக்கும் சொல்லாமல் பக்கத்து நகரமான சாத்தர்பூரில் உள்ள ஒரு பாடாவதி இரத்தப்பரிசோதனோ நிலையத்திற்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்திருக்கிறார். சாதாரணமாக இவர்கள் உயர்தர பரிசோதனை ஆய்வு மையத்திற்குத்தான் செல்வார்கள். சாதாரண ஆய்வகத்திற்கு சென்றால் அது ஏன் தவறு என பட்டியல் போடுவார்கள். இங்கோ எய்ட்ஸ் என்பதால் வெளியே தெரியக்கூடாது என்று சிவராஜ் வைத்தியரிடம் வரும் கோயிந்துகள் பாணியில் ரகசியமாக ஏதோ ஒரு டூபாக்கூர் ஆய்வகத்திற்கு சென்றிருக்கிறார். பரிசோதனை முடிவில் அவருக்கு எய்ட்ஸ் இருப்பதாகத் தெரியவந்ததுள்ளது.

அதிர்ச்சியடைந்த மன்வர் வீட்டிற்கு வந்து எய்ட்ஸ் பற்றி மேலும் விபரங்களை தேடிக் கொண்டிருந்திருக்கிறார். பித்து பிடித்த அவரது மனதிற்கு, அவரது மனைவியிடமும் எய்ட்ஸ் நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக தோன்றவே, நடந்த அனைத்தையும் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
“உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம் எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்”

இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மனைவி சில்பா கதறி அழுது சண்டை போட்டிருக்கிறார். அடுத்த இரண்டு நாட்களுக்கு அவருடன் பேசாமல் இருந்திருக்கிறார். பிறகு மனைவியிடம் எப்படியோ பேசி சமாதானப்படுத்திய மன்வர், “உயிரோடு இருந்து நோய் முற்றினால் அது குடும்பத்திற்கே அவமானம் எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம்” என்று பேசி மனைவியை தனது தற்கொலைத் திட்டத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார்.

குற்றம் செய்தவன் அதற்கு தொடர்பே இல்லாத குடும்ப உறுப்பினர்களை மரிக்கச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை சில்பா உயிரோடு இருந்து இந்த எய்ட்ஸ் ரகசியத்தை கூறிவிடுவார் என்ற பதட்டம் காரணமாக இருக்கலாம். மேலும் மன்வரின் சேமிப்பு, சொத்து என்பவையெல்லாம் சில்பாவுக்கும் குழந்தைகளுக்கும் போதுமானதாகவே இருக்கும் என்பதால் இங்கே பொருளாதாரம் காரணமாக இல்லை. வட இந்திய பார்ப்பனிய சமூகத்தின் ஆணாதிக்க மனோபாவமே இப்படி மனைவியை வற்புறுத்தி சாவதற்கு தயார் செய்ய முடியும்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
குழந்தைகளை எப்படி வலியில்லாமல் சாகடிப்பது என்று யோசித்த மன்வர் அதற்கான வழியை கூகுளில் தேடியிருக்கிறார்

தற்கொலை செய்து கொள்ளத் தயாரான போது குழந்தைகளை எப்படி வலியில்லாமல் சாகடிப்பது என்று யோசித்த மன்வர் அதற்கான வழியை கூகுளில் (மீண்டும்!) தேடியிருக்கிறார். அப்படி ஒரு வழிமுறையும் கிடைக்காததால் தானே சுயமாக சிந்தித்து ஒரு வழியை கண்டுபிடித்தார்.

அதன்படி மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான அமராவதிக்கு பிப்ரவரி 28-ம் தேதி காரில் சென்றிருக்கிறார். மூன்று நாட்கள் அமராவதியில் இருந்துவிட்டு நான்காவது நாளான மார்ச் 4-ம் தேதி ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள்.

அமராவதியிலிருந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த வழியில் காரை ஒரு பள்ளத்திற்குள் கொண்டு போய் வீழ்த்துவது தான் தற்கொலைத் திட்டம். அதன்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் கார் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. ஆனால் காயம் ஏற்பட்டதே தவிர யாரும் சாகவில்லை. அனைவரும் மயக்கமடைகின்றனர்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
ஒரு தாய் என்கிற வகையில் சில்பாவால் தனது குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுவதை ஏற்கமுடியவில்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு மன்வருக்கு மட்டும் மயக்கம் தெளிந்து கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்து பார்க்கிறார் யாரும் சாகவில்லை என்பது தெரிகிறது. உடனே சிறிதும் யோசிக்காமல் அடுத்த திட்டத்தை அமுல்படுத்துகிறார். பெட்ரோல் டேங்கிற்கு தீ வைத்து  தானும் காருக்குள் செல்கிறார். காரில் இருந்த மனைவியும் குழந்தைகளும் மயக்கம் தெளிந்து கதறுகின்றனர். ஆனால் ஒரு தாய் என்கிற வகையில் சில்பாவால் தனது குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுவதை ஏற்கமுடியவில்லை.

“குழந்தைகள் எந்த வகையிலும் இந்த தவறுக்கு பொறுப்பு இல்லை எனவே அவர்களை மட்டுமாவது காப்பாற்றுங்கள்” என்று கணவரிடம் கெஞ்சியிருக்கிறார்.

அதன்படி காரைவிட்டு இறங்கிய மன்வர் கொழுந்து விட்டு எரியும் தீயினுள் சென்று குழந்தையை வெளியே எடுக்க முயன்றுள்ளார். நெருப்பின் வெப்பம் அதிகரிக்கவே தயங்கி நின்று விட்டார். மீண்டும் நெருப்புக்குள் செல்லத் தயாராக இல்லை. மரண பீதியில் காரை விட்டு விலகி நின்று கொண்டு மூவரும் கொதிக்கும் நெருப்பில் கதறி, துடிதுடித்து சாவதை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார். அவர்கள் கருகி சாம்பல் ஆகும் வரை அங்கேயே இருந்து விட்டு பிறகு வீடு திரும்பியுள்ளார்.

பிரவீன் மன்வர் தற்கொலை கதை
கார் எரிந்து கிடக்கும் பகுதியில் இறுதிச் சடங்குகள் செய்யும் சில்பா குடும்பத்தினர்.

இந்த சம்பவத்தை பற்றி யாரிடமும் கூறாமல் நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சில நாட்கள் சுற்றி திரிந்து விட்டு கடைசியாக தன் நண்பர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். விசயத்தை கேட்டு அதிர்ந்த நண்பர்கள் உடனடியாக போலீசில் சரணடைந்து விடுமாறு கூறியுள்ளனர். அதன்படி என் மனைவி குழந்தைகளை நான் கொன்றுவிட்டேன் என்று கூறி போலீசில் சரணடைந்துள்ளார். போலீசின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதாகவும் இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருப்பேன் என்று தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் சில்பாவின் அண்ணன் தனது தங்கையை மன்வர் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பிக்கப் பார்க்கிறான் என்று புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை ஆய்வாளர் எஸ்.கே கில், மன்வர் கூறுவது உண்மையா என்பதை அறிய அவருக்கு மீண்டும் இரத்தப்பரிசோதனை ஒன்றை செய்திருக்கிறார். பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்கிற முடிவு வந்திருக்கிறது. மன்வர் முன்பு பரிசோதனை செய்த நிலையத்தில் எய்ட்ஸைக் கண்டறிய போதுமான வசதிகள் இல்லாததாலேயே தவறான பரிசோதனை முடிவைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது விசாரணைகளில் தெரிய வருகிறது.

மன்வருக்கு எய்ட்ஸ் இல்லை என்கிற தகவல் அவரிடம் சொல்லப்பட்ட போது அதிர்ச்சியடையாமல் அமைதியாக கேட்டுக் கொண்டார் என்று டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. அப்போது உண்மையில் மன்வரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?

குற்றம் குறித்த வருத்தமா, பெருங்குற்றம் புரிந்து விட்டு வரும் படிப்பினையா, இல்லை குற்றத்தை மிஞ்சிய காரியவாதமா, எய்ட்ஸ் இல்லை என்பதால் இனி சிவப்பு விளக்கிற்கு பாதுகாப்புடன் போவது குறித்த எச்சரிக்கை உணர்வா, இல்லை சில்பாவின் அண்ணன் கூறியது போல மனைவியைக் கொன்றுவிட்டு கிடைக்கும் ஆதாயம் பறிபோய்விட்டது என்ற பதட்டமா?

இதை போலீசிடம் கூறியது என்றபடி பார்த்தால் அவர் ஏதோ கொஞ்சம் குற்ற உணர்வு அடைந்திருப்பதாக தெரிகிறது. சில்பாவின் அண்ணன் கூறியபடி பார்த்தால் நாடகமென்றும் தெரிகிறது. எனினும் தவறே செய்யாத தனது மனைவி, குழந்தைகளை கொல்லும் தைரியம் குற்ற உணர்வு உள்ள ஒருவனுக்கு இருக்காது என்றே தோன்றுகிறது. இது திட்டமிட்ட வக்கிரத்தின் பால் வரும் கொலைவெறி.

அடுத்த கல்யாணத்திற்கு இந்த வழக்கும் அதன் விவரங்களும் எந்தளவுக்குத் தடையாக இருக்கும் என்ற கணக்குகள் கூட அந்தக் கண நேரத்தில் மன்வருக்கு ஓடியிருக்கலாம்.

இறந்து போன சில்பாவையும் அந்தக் குழந்தைகளையும் பற்றியுமே நமது மனம் பதைபதைக்கிறது. பாலியல் வெறிபிடித்த தன் கணவர் செய்த தவறுக்காக அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டதுடன் அவனுக்காக தனது உயிரையும் கொடுக்க முன்வந்திருக்கிறாள் சில்பா.. அவளுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளதா என்ன? மேற்குலகைப் போல் முதலாளித்துவ விழுமியங்கள் வளர்ந்த சமூகமென்றால்.. தனது கணவன் வேசிகளிடம் சென்றான் என்றுக் கேட்ட கணத்தில் அவள் தூக்கியெறிந்திருப்பாள்.

பார்ப்பனிய ஆணாதிக்க மதிப்பீடுகள் கோலோச்சும் நமது சமூகத்தில் மனைவி எனப்பட்டவள் கணவனின் செருப்பாகத் தானே மதிக்கப்படுகிறாள்? ஊர்மேயும் கணவனை தலைக்கூடையில் சுமந்தவள் தானே நம் ஊரில் பத்தினி. இப்படிப்பட்ட பத்தினிகளாக நம் பெண்கள் இருக்க வேண்டும் என்பது தானே ஆர்.எஸ்.எஸ் மோகன் பாகவத்திலிருந்து காஞ்சி சங்கராச்சாரி வரையிலானவர்கள் நம் பெண்களுக்கு உபதேசிக்கிறார்கள்?

மருத்துவ மாணவி நிர்பயாவைக் பாலியல் கொடூரங்களுக்கு ஆளாக்கிப் பின் கொன்ற முகேஷ் சிங் பி.பி.சி ஆவணப்படத்தில் பேசியதற்கும் மன்வரின் நடவடிக்கைகளுக்கும் ஏதும் வேறுபாடு இருக்கிறதா?

பார்ப்பனியம் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் உருவாக்கி வளர்த்துள்ள இந்தக் கிரிமினல்தனம் தற்போது மறுகாலனியாக்க கலாச்சார சூழலோடு கைகோர்த்துள்ளது. உண்மையில், இவையிரண்டும் ஜாடிக்கேற்ற மூடிகள். வளர்ச்சியும் பார்ப்பன பயங்கரவாதமும் மோடியின் உருவில் ஒரே வடிவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம்.

இந்தக் கள்ளக் கூட்டின் பொருளாதார விளைவை நம் தூக்கில் தொங்கும் விவசாயிகளின் உடல்களாகவும், ராணிப்பேட்டையில் இரசாயனச் சகதியில் அமிழ்ந்த வடநாட்டுத் தொழிலாளிகளின் உடல்களிலும் , முகலிவாக்கத்தில் தகர்ந்து வீழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் கீழ் நசுங்கிச் செத்த ஆந்திரத் தொழிலாளிகளின் உடலிலுமாகக் காண்கிறோம். அதன் சமூகக் கலாச்சார விளைவை நிர்பயாவாகவும், சில்பாவாகவும் காண்கிறோம்.

– அஜிதா

மேலும் படிக்க