ன்னாட்டு முதலாளிகளே வாருங்கள், உங்கள் விருப்பம் போல தமிழகத்தையும் தமிழக மக்களையும் கொள்ளையடித்துச் செல்லுங்கள் என்று அறைகூவியழைத்து, பார்ப்பன பாசிஸ்டுக்கே உரித்தான அருவருக்கத்தக்க சுயவிளம்பரத்துடன் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என்ற ஒரு ஆபாசக் கூத்தை அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடத்தியிருக்கிறார்.

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு

சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழகத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்க பாசிச ஜெயலலிதாவால் நடத்தப்பட்ட அருவருக்கத்தக்க சுயவிளம்பரக் கூத்து.

ஏற்கெனவே பல மாநில அரசுகள் இத்தகைய மாநாடுகளை நடத்தியுள்ளபோதிலும், நாலாந்தர நடிகைக்கே உரித்தான ‘அறிவுக்கூர்மையுடன்’, ஆபாசக் குத்தாட்டங்களுடன் இம்மாநாட்டில் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுத்து ஜெயலலிதா வரவேற்றுள்ளார். தனது இச்சாதனையை அங்கீகரித்து, தன்னைப் போற்றிப் புகழ வேண்டுமென்ற வக்கிரத்துடன், மின்னணு தொழில்நுட்பத்தில் பறக்கும் குதிரை ஜெயலலிதா காலில் மண்டியிடுவது போன்ற காட்சியைத் தனது அடிமைகளைக் கொண்டு ஏற்பாடு செய்து ரசித்துப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

உலகெங்கும் சுற்றி ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை பிரதமர் மோடி கொண்டுவந்தார் என்றால், உள்ளூரில் இருந்துகொண்டே ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டுவந்துவிட்டதாகவும், மோடியைவிட லேடிதான் டாப் என்றும் அவரது துதிபாடிகள் மார்தட்டுகின்றனர். இம்மாநாட்டையொட்டி தற்போது ஆரவாரமாக அறிவிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மதிப்பு 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் என்ற புள்ளிவிவரக் கணக்கு அடிமைகளால் நடத்தப்பட்ட இன்னுமொரு கேலிக் கூத்து. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 என்பதை வைத்து 24,2 என்று வருமாறு இத்தொகையை நிர்ணயித்துள்ளனர்.

ஆனால், கடந்த 2008-ம் ஆண்டிலிருந்தே அமெரிக்க – ஐரோப்பிய பொருளாதாரங்கள் தேக்கத்திலும் நெருக்கடியிலும் சிக்கி, சந்தை வற்றிப்போய் அந்நாடுகளின் ஏகபோக ஆளும் வர்க்கமே தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அந்நாடுகளின் ஏகபோக முதலாளிகள் தமிழகத்தில் வந்து முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது கேழ்வரகில் நெய்வடிந்த கதைதான்.

ஏற்கெனவே காங்கிரசு கூட்டணி ஆட்சியை விஞ்சும் வகையில் தொழிலாளர் சட்டத் திருத்தம், காடுகளையும் கனிமவளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் தடையின்றிச் சுரண்டுவதற்கேற்ப சுற்றுச்சூழல் விதிகள் திருத்தம், வங்கி, காப்பீடுதுறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்குத் தாராள அனுமதி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகைள் – என இந்தியாவைத் தாரைவார்த்துக் கொடுப்பதாக மோடி கும்பல் உலகமெங்கும் சுற்றி கூவிக்கூவி அழைத்த போதிலும், எதிர்பார்த்தபடி அந்நிய முதலீடுகள் வரவில்லை. மோடி கும்பலால் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட “மேக் இன் இந்தியா” திட்டமே புஸ்வாணமாகி நிற்கும்போது, மோடி கும்பலையே விஞ்சிவிட்டதாக மாய்மாலம் செய்கிறது ஜெ.கும்பல்.

எல்லாவற்றுக்கும் மேலாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றால் வரும், ஆனா வராது கதைதான். புரிந்துணர்வுதானே தவிர, உடனே யாரும் முதலீடு செய்யப் போவதில்லை. ஏன் முதலீடு செய்யவில்லை என்று யாரும் கேட்கவும் முடியாது. செயலாக்கத்துக்கு வருமா என்று யாருக்கும் தெரியாது. ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் ஜெயா ஆட்சியில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன என்று பார்த்தாலே இதன் யோக்கியதை விளங்கிவிடும்.

2011-ல் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக ஜெ. அரசு அறிவித்தது. ஆனால், அவற்றில் வெறும் 238 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்துள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெறும் 0.3 சதவீதம்தான்.

2012-ல் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கப்படவுள்ளதாகவும் பிரம்மாண்ட அறிவிப்பு செய்தது ஜெ. கும்பல். அப்புறம் அந்த அறிவிப்பு காற்றோடு கலந்துவிட்டது.

ஏற்கெனவே தமிழகத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெரும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் நோக்கியாவும் ஹூண்டாயும். சென்னை அருகே இருங்காட்டுக் கோட்டை பகுதியில் விவசாய நிலங்களைப் பறித்து, தடையற்ற மின்சாரத்துடன் வரிச்சலுகைகளை வாரியிறைத்தும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளையும் பறித்தும் கொண்டுவரப்பட்ட இந்நிறுவனங்களால் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. ஏரிகள்-குளங்களை ஆக்கிரமித்தும், கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் இத்தகைய அந்நிய முதலீட்டாளர்களால் பேரழிவுகளும் பகற்கொள்ளையும்தான் நடந்திருக்கிறது.

நோக்கியா, பி.ஒய்.டி. போன்ற நிறுவனங்களின் சட்டவிரோதக் கதவடைப்பால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இன்னும் பல சிப்காட் தொழிற்பேட்டைகளில் எவ்வித உரிமையுமின்றி, தொழிலாளர்கள் சட்டவிரோதமாகக் கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றிப் பணியாற்ற வைப்பதன் மூலம் பலர் படுகாயமடைந்து உடல் உறுப்புகளை இழந்து நிற்கும் கொடுமையும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நோக்கியா இயங்கிய 8 ஆண்டுகளில் பல ஆயிரம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சுரண்டிக் கொழுத்ததோடு, வரி ஏய்ப்பு செய்து பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிக் கொண்டது. பிறகு சட்டவிரோதமாக ஆலையை மூடி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்தது. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்பட்ட அந்நிய முதலீட்டின் மகிமை.

நோக்கியாவுக்கு முன்னதாக 2013-ல் மோட்டரோலா தனது சூறையாடலை முடித்துக் கொண்டு தனது நிறுவனத்தை மூடிவிட்டது. சென்னையில் தனது பிரிவை மூடிவிட்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம், தனது ஆலையின் விரிவாக்கத்தை உ.பி. குஜராத் மற்றும் ஆந்திராவுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனமும், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனமும் மூடப்படும் நிலையில் உள்ளன. தமிழ்நாடு பெட்ரோப்ராடக்ஸ் நிறுவனம், திருச்சி டிஸ்டிலரீஸ் நிறுவனம், தூத்துக்குடி அல்கலின் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஆகியன ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. இவற்றின் விளைவாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவிக்கின்றனர்.

தமிழகத்தைச் சூறையாடுவதற்காக கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பெருமிதம் கொள்வதைப் போலத்தான், அன்றைய தமிழக முதல்வரான கருணாநிதி, தமிகத்தின் தொழில்வளர்ச்சி – வேலைவாய்ப்புக்காக நான்தான் நோக்கியாவைக் கொண்டுவந்தேன் என்று மார்தட்டிக் கொண்டார். நோக்கியாவால் தமிழத்துக்கு என்ன கதி ஏற்பட்டது என்பதைப் பற்றி வாய்திறக்க மறுக்கும் கருணாநிதி, கடந்த நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது திடீரென சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி ஒரு நாடகத்தை நடத்துவதாக ஜெ. கும்பலைச் சாடுகிறார்.

தமிழகத்தைச் சூறையாடும் இத்தகைய பேரழிவுப் பாதையைத்தான் எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஊடகங்களும் ‘வளர்ச்சி’ என்ற பெயரில் நியாயப்படுத்தி வருகின்றன. ஏதோ ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மையால்தான் அந்நிய முதலீடுகள் வராததைப் போலவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதைவிட இன்னும் அதிகமாக அந்நிய முதலீடுகளை கொண்டுவந்து தமிழகத்தை வளப்படுத்தப் போவதாகவும் ஜெயா ஆட்சிக்கு எதிராகப் புழுதி அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

– மனோகரன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________