privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்நீதிக்கு குரல் கொடுத்தால் வழக்கறிஞர்களுக்கு ஆயுள் தடையா ?

நீதிக்கு குரல் கொடுத்தால் வழக்கறிஞர்களுக்கு ஆயுள் தடையா ?

-

வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாக தண்டிக்கப்படுவதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

துரை வழக்கறிஞர்கள் மீதான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பொழுது, வழக்கறிஞர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக வழக்கறிஞர் மில்டன், பார்த்தசாரதி இருவருக்கும் வழக்கறிஞர் தொழில் புரிய வாழ்நாள் தடையும், வழக்கறிஞர் மகேந்திரனுக்கு மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-posterஏற்கனவே மதுரை வழக்கறிஞர்கள் 5 பேருக்கு தொழில் புரிய‌ வாழ்நாள் தடையும், 8 பேருக்கு 3 ஆண்டுகளும் தடை விதித்து தீர்ப்பளித்திருந்தனர்.

இந்த அநீதியான தீர்ப்பை கண்டித்தும், தடையை நீக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் 18-10-2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திரளாக வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். தங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.

***

வாழ்நாள்தடை தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களின் கருத்துக்கள்

கண்டன ஆர்ப்பாட்டத்திலிருந்து….

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-1”இது ஒட்டுமொத்த வழக்கறிஞர்களை மிரட்டுவதற்கு போடப்பட்ட தீர்ப்பு!”

”வாழ்நாள் தொழிற்தடை என்பது பொருளாதார தடை. இது மரண தண்டனைக்கு இணையானது என்கிறது உச்சநீதிமன்றம்.

கோஷமிடுவது என்பது மரணதண்டனைக்கு இணையான குற்றமா? இது ஒட்டுமொத்த வழக்கறிஞர்களை மிரட்டுவதற்கு போடப்பட்ட தீர்ப்பாகும். இத்தீர்ப்பை வன்மையாக கண்டிக்கிறேன்!

வழக்கறிஞர் பாரதி

****

”இப்பொழுது போராடவில்லையென்றால் இதுவே தான் நாளை நமக்கும்!!”

”இன்று மில்டன். பார்த்தசாரதி. நேற்று மதுரை வழக்கறிஞர்கள். இப்பொழுது போராடவில்லையென்றால் இதுவே தான் நாளை நமக்கும்! இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து பெரிய அளவில் கொண்டு செல்லவேண்டும்”

வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், நூலகர்

****

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-2”காலில் விழுந்தால் தண்டனை குறைப்பு. வழக்கை நடத்தினால் ஆயுட்கால தடை!”

”தீர்ப்பை படித்துப்பார்த்தேன். உண்மையில் சட்டவிரோதமான தீர்ப்பு. கோசம் போட்டது தான் அனைவர் மீதும் உள்ள குற்றச்சாட்டு. இதில் காலில் விழுந்தால் தண்டனை குறைப்பு. வழக்கை தீவிரமாக நடத்தினால் ஆயுட்கால தடை என்று யூகிக்கும் அளவிற்கு தீர்ப்பு எழுதியது வன்மையாக கண்டிக்ககூடியது! ”

வழக்கறிஞர் குமணராஜா

****

”தடையை நீக்கும்வரை போராட தவறினால் வரலாறு நம்மை மன்னிக்காது!”

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-3வரலாற்றில் மக்கள் விரோத அரசுகளாலும் அதிகார வர்க்கங்களாலும் கடுமையான தண்டனைகளை போராளிகள் அனுபவித்தும், அனுபவித்து கொண்டும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் போராளிகளான மில்டனும், பார்த்தசாரதியுனுடைய வாழ்நாள் தடையானது வழக்கறிஞர்களின் உரிமைகளுக்காக போராடியதன் விளைவாக வழக்கறிஞர்களின் உரிமைகளை நசுக்கும் விதமாக தண்டித்துள்ளனர்.

இத்தடையை நீக்கும்வரை போராட்டங்களை தொடரவில்லையென்றால் வரலாறு நம்மை மன்னிக்காது!

– வழக்கறிஞர் பார்வேந்தன்

****

”நமது உரிமைகளுக்காக போராடியதாலேயே மில்டன், பார்த்தசாரதிக்கு இந்த வாழ்நாள்தொழில் தடை தண்டனை!”

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-4வழக்கறிஞர்களாகிய நமது உரிமைகளுக்காக போராடியதாலேயே மில்டன், பார்த்தசாரதிக்கு இந்த வாழ்நாள்தொழில் தடை தண்டனை. இதனை நாம் எல்லோரும் தான் சுமக்கவேண்டும். என் சார்பாக போராட்ட நிதியாக ரூ.10000 தருகிறேன்.

– வழக்கறிஞர் ஆரோக்கியதாஸ்

****

வழக்கறிஞர்களுக்கு தொழில் புரிய வாழ்நாள் தடை சட்ட விரோதமானது

– மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு

https://www.facebook.com/prpcmilton/videos/350054122003571/

****

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-5சமூக வலைதளங்களிலிருந்து…

The punishments of removal from the rolls of Bar Council of Tamil Nadu and Puducherry imposed against 2 High Court lawyers and against 5 Madurai lawyers by Karnataka Bar Council are highly excessive, disproportionate and unjust. The lawyers community as a whole has to ponder over all past developments, unite together and take appropriate decisions to explore all legal and democratic means to set aside the orders and restore the practice of the affected lawyers.

C.Vijayakumar,
President,
Lawyers Centre for Democracy &Social Causes.

****

என்ன செய்யலாம்.. இனிய நண்பர்களே…?

இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவில் தமிழக வழக்கறிஞர்கள் கொடூரமாக நசுக்கப்படுகிறார்கள்.

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-6ஏழு வழக்கறிஞர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் செய்யக் கூடாது என்று தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு வழக்கறிஞர் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்தபின்பும் இன்னமும் தொழில் செய்யக் கூடாது என்று தடைசெய்யப்பட்டுள்ளார்.

ஒன்பது வழக்கறிஞர்கள் மூன்று வருடம் தொழில் செய்யக்கூடாது என்று தண்டிக்கப்பட்டுள்ளனர்.அதுவும் ஏற்கனவே ஓராண்டு காலமாக தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர்களுக்கு, அந்த ஓராண்டு காலத்தை கழிக்காமல் மொட்டையாகமூன்று. வருடம் என்றால் ஆக மொத்தம் நான்கு வருடங்கள் பணிநீக்க தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள்.

இன்னமும் விசாரணை முடியாமல் தற்காலிக பணிநீக்கத்தில், தண்டனைக் கத்தி தலைக்குமேல் தொங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் பலர்.

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-7என்னதான் செய்தார்கள் இவர்கள்..? ஏன் இவ்வளவு கொடூரமாகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்..?

ஏறத்தாழ எழுபதாயிரம் வழக்கறிஞர்கள் உள்ள தமிழ்நாட்டில் ஏன்.. இவர்கள் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்..?

கற்றறிந்த வழக்கறிஞர் பெருமக்களே இவர்கள் செய்த குற்றம்என்ன…?

பறவைகள் அற்றுப்போன நகரத்தில்கூட ஒரு காக்கைக் குஞ்சு இறந்துவிட்டால் போதும் எங்கிருந்து எப்படி தகவல் தெரிந்து வருகின்றன என்று தெரியாது அவ்வளவு பெரிய காக்கைக் கூட்டத்தினை நம்மால் பார்க்க முடியும்.. அதுகளின் அலறல் நம் அடி நெஞ்சை கலக்கிஎடுத்துவிடும்

எங்கே போயின நமது எழுபதாயிரம் கறுப்புப் பறவைகள்..?

எப்படி இது சாத்தியமாயிற்று..? சட்டங்களை எல்லாம் கரைத்துக் குடித்துள்ள சட்ட ஜாம்பவான்கள் உள்ள நம் மத்தியில் வானத்திற்கு கீழ் உள்ள எந்த பிரச்சனை என்றாலும் வாருங்கள் நியாயத்தை, உரிமையை அதன் சட்டையை பிடித்து உலுக்கிவாங்கித் தந்துவிடுவோம் என்று வழக்காடிகளிடம் எக்காளமிட்டு பணம் வாங்கி.. ஏகபோகமாக தொழில் நடத்திக்கொண்டிருக்கும் கற்றறிந்த வழக்கறிஞர் பெருமக்களே இவர்கள் செய்த குற்றமென்ன..?

highcourt-advocates-demo-in-support-of-barred-lawyers-8நமது சொந்த வழக்கறிஞர் சமூகத்திற்கே நியாயத்தை பெற்றுத் தர முடியாத நமது பலஹீனமான சட்ட மனசாட்சி நம்மைப் பார்த்து கைகொட்டிச சிரிக்கிறது நண்பர்களே….

இவர்கள் யாரும் தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனையின் அடிப்படையிலோ, தனிப்பட்ட ஒழுங்கீனமான காரணத்திற்காகவோ, வழக்காடிகளை ஏமாற்றி பணம்பறித்த குற்றத்திற்காகவோ, தண்டிக்க்கப்படவில்லை.

சங்கத்தின் பொதுக்குழு கூடி, தீர்மானங்கள் நிறைவேற்றி அதன்அடிப்படையில் போராடியவர்கள், போராட்டத் தலைமையேற்றவர்கள்… இன்னும் சொல்லப்போனால் சங்கத்தின் தலைவர்கள், செயலாளர்கள், உபதலைவர், உதவிச்செயலாளர் என்று சங்கநிர்வாகிகள்…

பின் ஏன்… கைவிட்டீர்கள்… கற்றறிந்த வழக்கறிஞர் பெருமக்களே…பின் ஏன்.. கைவிட்டீர்கள்..?

எதிரியின் எக்காளத்தினைவிட நண்பர்களின் மௌனம் ஒருவரை கொடூரமாகக் கொன்றுவிடும்..மௌனத்திற்கான காரணம் என்ன?

கற்றறிந்த வழக்கறிஞர்களே…. தீர்ப்பு சரிதான் என்கிறீர்களா..? தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான் என்கிறீர்களா..? நமக்கெதற்கு என்ற பச்சைப் பயமா..? யாரும் எக்கேடும கேட்டுப்போகட்டும் நாமுண்டு நம்தொழில் உண்டு என்ற வயிற்று வாதமா..? முன்னது இரண்டு என்றால் வாருங்கள் விவாதிக்கலாம்… பின்னது இரண்டு என்றால்… பாவம் முத்துக்குமார்… நம்மைப் போராளிகள் என்று நம்பி நம்மிடம் தனது பிணத்தைக் கொடுக்கச் சொன்னானே… அவன் இப்பொழுதுதான்… ஈரக்குலை கருகி செத்திருப்பான்….

என்ன செய்யாலாம் இனிய நண்பர்களே…

விசாரணையும், தீர்ப்பும், தண்டனையும், தேர்வு செய்து தரம் வாரியாக தண்டிக்கப்பட்டவர்களும்… எதோ இயல்பானதோ.. சாதாரணமானதோ..இல்லை..

அன்புடன்.
பெ. கனகவேல்,
வழக்கறிஞர், மதுரை

*****

“அச்சநிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக தரப்பட்ட தீர்ப்பு”

“மில்டனும், பார்த்தசாரதியும் உறுதிமிக்க தோழர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஒரு அச்சநிலையை உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்டதேயன்றி, அது நிரந்தரமில்லை. அவர்கள் மீது போராடியது தவிர வேறெந்த குற்றச்சாட்டுமில்லை”.

– பெரியார் வேந்தன்,
வழக்கறிஞர், மதுரை

*****

I condemn the order of dismissal of Advocates from roll.

Although I have some difference of opinion with Milton and Parthasarathy, I seriously condemn the order of Bar council in dismissing both of them permanently making their legal practice at stake. The fact that they have raised slogans near the court hall is not a grave offence to dismiss them from the Bar. Raising slogans is followed for decades by our legal fraternity and on the alleged day, several lawyers have raised slogans, but taking action only against the these young bar members is suspicious. The Bar council should reconsider its way.

Even though the term of the office bearers of MHAA has come to an end , I request the secretary to convene an EC Meeting and invite M/s Milton, Parthasarathy and Mahendran for the meeting and to get their valuable inputs for preferring an appeal.

G. Rajesh, Advocate, Chennai

*****

“வாழ்நாள்தடை தீர்ப்பு: எரிகிற நமது நெஞ்சில் இன்னும் எண்ணெயை ஊற்றுவது”

“The news about the debarring of advocates Milton and Parthasarathy by our Tamil Nadu Bar Council is adding oil to the fire already burning our hearts due to the debarring of Madurai advocates by Bar Council of Karnataka …

I tried to talk to P.T.R. but he is abroad. I talked with Thanjai Sivasubramanian and he told me that P.T.R. will be back in India in the next week and we will call for a meet to discuss and take all necessary steps in this regard…

The sentence is disproportionate and exorbitant to the acts committed …It is the view of majority of advocates…”

– Tamil Rajendran,
Advocate

****

வழக்கறிஞர்களுக்கு தண்டனை…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மில்டன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய இருவரும் வாழ்நாள்முழுவதும் வழக்கறிஞர் பணி செய்யக்கூடாதென தமிழ்நாடு பார்கவுன்சில்
தண்டனை விதித்துள்ளது..

மேற்கூறிய வழக்கறிஞர்கள் இருவருமே பண்பாடு காத்து பழகுபவர்கள். தமிழ் மொழி உரிமை, ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிர்ப்பு, வழக்கறிஞர்கள் உரிமை தொடர்பான போராட்டங்களில் முன்நின்று குரல் கொடுத்தவர்கள்.

மதுரை வழக்கறிஞர்கள் மீது விசாரணை நடத்தும்போது வெளிப்படையாக நடத்தவேண்டும் என்றும் தங்களை விசாரணை நடந்த நீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியதற்காக வழக்கறிஞர் பணி செய்யக்கூடாது என்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

வழக்கறிஞர் சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

– அருள்மொழி, வழக்குரைஞர்
****

”உள்ளாட்சி தேர்தலுக்கு தனி அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் பதவிகாலம் முடிந்த பார்கவுன்சிலுக்கு ஏன் மாற்றை அமுல்படுத்தவில்லை?

குற்றம் சுமத்தபட்டவர்கள் மீது அந்த குற்றத்திற்கான சரியான காரணம் இல்லையெனில், சட்டத்தை அதிகாரம் கையில் எடுத்து கொள்கிறது. இது ஒரு அசிங்கமான அதிகாரம். கண்டனத்துக்கு உரியது.

– MHAA Muruga Velu, Advocate, Chennai

****

தோழர் மில்டன், தோழர் பார்த்தசாரதியை வழக்கறிஞர் சமூகம் பாதுக்க வேண்டும்

– Thambi Prabakaran, Advocate, Chennai

****

வன்மையாக கண்டிக்கத்தக்கது….., உள்ளாட்சி தேர்தல் பதவிகாலம் முடிந்ததால் அதற்கு மட்டும் தனி அதிகாரிகளை நியமிக்க உத்திரவிட்ட நீதிமன்றம் ஏன் பதவிகாலம் முடிந்த பார் கவுன்சிலுக்கு மாற்றை அமல்படுத்தவில்லை.?

Sasin Kumar, Advocate, Thirunelveli

பூக்களை வெட்டிவிடலாம்!
வசந்தகாலத்தை?

வழக்கறிஞர்கள் மில்டன், பார்த்தசாரதி
கொண்ட கொள்கையில் இருவரும் இரட்டையர்கள்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
உயிர் துறந்த கட்டபொம்மனின் ஊர்காரர்கள்.

யார் இவர்கள்?

‘மூடு டாஸ்மாக்கை’ என பாடிய‌
மக்கள் பாடகர் கோவனை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்த பொழுது
அரசின் மூக்கை உடைத்ததில் முக்கியமானவர்கள்.

குடி கெடுக்கும் டாஸ்மாக் கடைகளை நொறுக்கிய‌
மாணவர்களையும் பொதுமக்களையும்
சிறையிலிருந்து மீட்க‌
இரவும் பகலும் உழைத்தவர்கள்.

‘சுதந்திர’ தினத்தன்று தங்களின் உரிமைகளுக்காக‌
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட
157 தொழிலாளர்களை மீட்க‌
விடுமுறை நாளான ஞாயிறன்றும்
நீதிமன்றத்தை இயங்க வைத்தவர்கள்.

சமச்சீர் பாடப்புத்தகங்களை
ஜெயலலிதா தடை செய்த பொழுது
புத்தகங்களை கொடு என
போராடிய மாணவர்களோடும், மக்களோடும் களத்திலும்,
உச்சநீதிமன்றம் வரை உறுதியோடு போராடியவர்கள்

மக்களின் போராட்டங்களில் முன்நின்றவர்கள்
ஊழல் நீதிபதிகளை சந்திக்கு இழுத்த‌
சக வழக்கறிஞர்கள் இழிவுபடுத்தப்படுவதை
எதிர்த்து குரல் கொடுத்த
‘குற்றத்திற்காக’

ஆந்திராவிற்கு ஓடிப்போன,
ஒளிந்துகொண்டு அம்பு வீசுகிற
இராமனின் ‘தம்பிகளும்’
பார்கவுன்சிலில் அதிகாரத்தில் இருக்கும்
எட்டப்பன்களும் இணைந்து
கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு
வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்திருக்கிறார்கள்.

மில்டனும் பார்த்தசாரதியும்
சத்தியத்தின் துணையோடும்,
மக்களின் துணையோடும்,
சக வழக்கறிஞர்களின் துணை கொண்டும்
சதிகள் உடைத்து மீண்டும் எழுவார்கள்.

துரோகிகளும் எதிரிகளும்
ஒன்றை மறந்து போகிறார்கள்.
அவர்கள் பூக்களை வெட்டிவிடலாம்.
வசந்தகாலம் வருகிறது!
என்ன செய்வார்கள்?
*****

குறிப்பு: ஊழல் நீதிபதிகளை அம்பலப்படுத்தி ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் நடத்திய மதுரை பேரணியில், கலந்துகொண்ட ‘குற்றத்திற்காக’ 5 வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய வாழ்நாள் தடையும், 8 வழக்கறிஞர்களுக்கு 3 ஆண்டுகளும் தடை விதித்திருக்கிறார்கள்.

சென்னையில் வழக்கு நடந்த பொழுது, வழக்கறிஞர்களை இழிவாக நடத்தியதை எதிர்த்து நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் குரல் கொடுத்தார்கள். அதில் 7 பேரை மட்டும் திட்டமிட்டு தேர்ந்தெடுத்து, ஓராண்டு வழக்கு நடத்தி, இப்பொழுது மில்டன், பார்த்தசாரதி இருவருக்கும் தொழில் செய்ய வாழ்நாள் தடையும், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் தடையும் விதித்திருக்கிறார்கள்.

நன்றி : “பூக்களை வெட்டிவிடலாம், வசந்த காலத்தை?” கடனாய் தந்த மக்கள் கவிஞர் பாப்லோ நெருதாவிற்கு!

– செல்வம் ராம்கி

*****