privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஏ.டி.எம் தருணங்கள் : பாரதி தம்பி

ஏ.டி.எம் தருணங்கள் : பாரதி தம்பி

-

ஏ.டி.எம். வரிசையில் எனக்குப்பின் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கையில் ஒரு 100 ரூபாய்த் தாளும் ஒரு ஏ.டி.எம். அட்டையும் இருந்தது. முகத்தில் கலக்கம். விழிகள் அலைபாய்ந்தபடி இருந்தன. நான் அவரைப் பார்த்ததும், ‘இந்த ஒரு நோட்டுதான் தம்பி இருக்கு. பொண்ணுக்கு வைரல் ஃபீவர். இருந்த காசை வெச்சு டாக்டர்கிட்ட காட்டிட்டேன். மருந்து வாங்கணும்னா 200, 300 ஆகும். அதான் எடுக்க நிக்கிறேன்’ என்றார். பரிதாபமாக இருந்தது.

chennaiவரிசை அசைந்து நகர்ந்தது. ஏ.டி.எம். காவலாளி, ஒருவர் ஓர் அட்டையை மட்டும் பயன்படுத்தி பணம் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தபடி இருந்தார். அவர், இதை உறுதியான குரலில் அழுத்திச் சொன்னால் என்ன நடக்கும் என்பதை முந்தைய நாள் வேறொரு ஏ.டி.எம்-மில் கண்டேன். அந்தக் காவலாளியை ஆங்கில மற்றும் தமிழ் கெட்டவார்த்தைகளால் திட்டினார் ஒரு நடுத்தர வர்க்க ஆசாமி. அதைப்போன்ற அனுபவம் இவருக்கும் இருக்கக்கூடும். அதனால், இவரது குரலில் பணிவு கூடுதலாக இருந்தது.

எந்த நிமிடமும் பணம் தீர்ந்துவிடக்கூடும் என்ற பதற்றம் எல்லோருக்கும் இருந்தது. எனக்குப்பின்னே நின்ற பெண் கையில் இருந்த 100 ரூபாயை இறுக்கி கசக்கிப் பிடித்திருந்தார். நாட்டின் பொருளாதாரத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கருப்புப் பணத்துக்கு எதிரான போரில் தானும் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. இருப்பினும் நின்றுகொண்டிருந்தார். மீண்டும் அவரைப் பார்த்தேன். பேரிடர் நேரங்களில் புதிய மனிதர்களுடன் உரையாடுவதற்கு மனிதர்களுக்கு காரணங்கள் தேவைப்படுவது இல்லை.

‘புள்ளைய மாமியார்கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்ப்பா. அது பாவம், மாவு கடை வெச்சிருக்கு. கடையைப் பாக்குமா? உடம்பு சரியில்லாத புள்ளையப் பாக்குமா? நானும் பணம் எடுக்க இந்த ஏரியா பூரா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு ஏ.டி.எம்-முலயும் துட்டு இல்ல. துட்டு இருந்தா இவ்வளவு கூட்டம்’ என்றார்.

பிறகு வரிசை நகர்ந்து, எனக்குமுன்னே நான்கு பேர்களாக இருந்தபோது பணம் முடிந்துபோய் அனைவரும் வேறுவேறு ஏ.டி.எம்.களைத் தேடி வெவ்வேறு திசைகளுக்கு ஓடினோம். அந்தப் பெண் கேவலமான கெட்டவார்த்தைகளால் இந்த நாட்டின் தலைமை அமைச்சரை திட்டியபடி நகர்ந்தார்.

செல்லும் இடம் எல்லாம் செல்லாக்காசு விவகாரத்தில் ஏதேனும் பாதிப்பா என்பதை விசாரிக்கிறேன். என் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டுக்கறி கடைக்காரரிடம், நவம்பர் 14ஆம் தேதிவாக்கில் விசாரித்தபோது, பாதிக்குப் பாதி விற்பனை குறைந்துவிட்டதாகச் சொன்னார். வார நாட்களில் நாள் ஒன்றுக்கு நான்கு ஆடுகள் விற்பனைசெய்யும் நிலையிலிருந்து, வெறும் ஒரு ஆடு என்ற நிலைக்கு வந்தார். ‘இந்த யாவாரமும் ஆயிரம், ஐநூறு வாங்குறதுனால… இல்லேன்னா இதுவும் இருக்காது’ என்றவர், கடந்த நான்கு நாட்களுக்குமுன்பு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற வார நாட்களில் முழுமையாக கடையை மூடிவிட்டார்.

காலை நேரத்தில் கூட்டம் நிரம்பி வழியும் சூளைமேடு பெரியார் பாதை மீன் சந்தை வெறிச்சோடிக் கிடக்கிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைவிட வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களும் ‘500, 1000 வாங்குறோம். இல்லேன்னா இதுவும் இல்ல’ என்கிறார்கள். இது நீண்டகாலம் நீடிக்க முடியாது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான இறுதித் தேதி டிசம்பர் 30 என்பதால், டிசம்பர் 15 தேதிக்குப்பிறகு பழைய 500, 1000 வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள். இந்த குறைந்த வியாபாரமும் முடங்கிப்போகும்.

சட்ட நீதிக்கும், இயற்கை நீதிக்கும் பொருந்தாத இந்த செல்லாக்காசு நடவடிக்கையால் பெரும்பான்மை மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பத்தில் உழல்கின்றனர். நான் உழைத்துச் சேர்த்த செல்வத்தை செலவு செய்யக்கூடாது என்று சொல்ல நீ யார்? இந்த அரசாங்கம் உண்மையில், இந்திய மக்களிடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்திருக்கிறது.

bharathi-thambi
பாரதி தம்பி

மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இவர்கள், இருக்கும் வேலைவாய்ப்பையும் பறித்துக்கொண்டுவிட்டார்கள். பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. சின்னஞ்சிறிய தொழிலகங்கள் தற்காலிமாக உற்பத்தியை நிறுத்திக்கொண்டுவிட்டன. இவற்றில் பணிபுரிந்து வேலையிழந்திருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் சொந்த கிராமங்களுக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். எந்தப் புள்ளியிலிருந்து அவர்கள் கிளம்பினார்களோ அந்தப் புள்ளிக்கே திரும்பியிருக்கிறார்கள். பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வெறுங்கையுடன் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது உருவாக்கப்போகும் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். உதிரித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கீழ்நிலை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, டிமாண்டைவிட சப்ளை அதிகரித்து, அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படுவதைக் காட்டிலும் கூலி குறைத்து வழங்கப்படும். இந்தப் போக்கு, கிராமப்புற பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கப்போகிறது.

இப்போதே, ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய். மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி என பல கை மாறித்தான் இந்த 10 ரூபாய். அப்படியானால், இதில் விவசாயிக்குக் கிடைப்பது எவ்வளவு? மற்ற காய்கறிகளுக்கும் இது பொருந்தும். பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கப்படும் மற்ற காய்கறிகளும்கூட, செல்லாக்காசு காரணமாக அல்லது அதைக் காரணம்காட்டி கொள்முதல் செய்யப்படும் இடங்களில் மிகக் குறைந்த விலைக்கே எடுக்கப்படுகின்றன. போட்ட முதல்கூட எடுக்க முடியாது.

இப்படி இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மிக நேரடியாக பாதிக்கக்கூடிய இவ்வளவு மோசமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ள இந்த பாஜக அரசை விமர்சிக்கும்போது நாம், அதன் முழுமையில் இருந்து மதிப்பிட வேண்டும். ‘மோடி அரசு, மோடி அரசு’ என்று விமர்சிப்பதை சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது. ஏனென்றால், மோடி என்ற நபரும் பெயரும் ஒரு முகமூடி. பின்னுள்ள காவி கும்பல்தான் உண்மையான சூத்திரதாரி. நாளை இந்தப் பிரச்னை கைமீறிப் போகும்போது, தங்கள்மீது பழிவராமல் இருக்கவும் மக்களின் கோபத்தை ஆற்றுப்படுத்தவும் மோடி என்ற பிம்பத்தை பலி கொடுக்கத் தயங்க மாட்டார்கள். மொத்தப் பிரச்னைக்கும் காரணம், தனி ஒரு நபர்தான் என்பதைப்போல சிக்கலை சுருக்கி, தங்கள் இருப்பைத் தக்கவைக்க முயற்சிப்பார்கள். எனவே, இதை மோடி அரசு என்ற வரம்பைக் கடந்து உற்று நோக்கவேண்டியிருக்கிறது.

பாரதி தம்பி

கட்டுரையாளர் குறிப்பு: பாரதி தம்பி, பத்திரிகையாளர். நியூஸ் 18 தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பிரிவின் பொறுப்பாளராக இருக்கும் இவர் ‘தவிக்குதே தவிக்குதே ’- ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’- ‘குடி குடியை கெடுக்கும்’ எனும் நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’ மாற்றுக் கல்வி ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூலாகும்.

நன்றி: