கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

ர்மயோகி ஜக்கி வாசுதேவ் கம்பெனி தயாரித்துள்ள வானுயர்ந்த சிவன் சிலையைத் திறந்து வைக்க வரும் 2017 பிப் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கோவைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஈஷா ஆசிரமம் என்ற பெயரில் ஜக்கி வாசுதேவ் என்னும் கார்ப்பரேட் சாமியார் பல பத்தாண்டுகளாக இயற்கையின் மீதும் மக்களின் மீதும் நடத்திவரும் யுத்தம் இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மோடியை வரவேற்பதற்காக மட்டுமே கோவையில் 6000-த்துக்கும் அதிகமான விளம்பர ஹோர்டிங்ஸ் வைக்கப்பட்டுள்ளது என்றால் மொத்த ஏற்பாட்டின் பணமதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஆனால் இந்த ஈஷா யோகா மையம் பற்றியும், சத்குரு என்னும் இந்த மோசடி பேர்வழியின் ஆசிரமத்துக்குப் பிரதமர் வருவதற்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பு குறித்தும் எந்த ஊடகமும் பேச மறுப்பது ஏன்? ட்விட்டரில் கமல்ஹாசன் ஆய் போனால் கூட பிரேக்கிங் நியூஸ் போடும் இவர்கள் அதேச் சமூக வலைதளங்களில், சத்குரு-மோடி-கோவை வருகைக் குறித்து எண்ணற்ற எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதுகுறித்து கண்டுகொள்ளாதது ஏன்? ’அதற்கான தகுதி தங்களுக்கு இல்லை’ என உளப்பூர்வமாக உணர்ந்து குற்றவுணர்ச்சியில் குனிந்துகொண்டே கடந்து செல்கிறார்களா? அப்படி அவசரப்பட்டு தப்புக்கணக்குப் போடத் தேவையில்லை. அவர்களின் ஒரிஜினல் கணக்கு வேறு.

கழனியை அழித்த சிவன் – கட்டுமானத்திற்கும் முன்பும் பின்னும்

ஏன் மீடியா பேச மறுக்கிறது? விளம்பரங்களை அள்ளித் தருகிறார்கள் என்பது ஒரு கோணம். அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் இப்போது மோடியின் வருகையை ஒட்டிதான் ஜக்கி விளம்பரம் டி.வி.யில் வருகிறது. இதற்கு முன்பு ஈஷா நிகழ்ச்சிகளுக்கான அவ்வப்போதைய விளம்பரம்தானே தவிர, அட்டிகா கோல்ட் கம்பெனி போலவோ, லலிதா ஜூவல்லரி போலவோ தொடர் விளம்பரங்கள் ஈஷாவில் இருந்து வருவது இல்லை. எனவே விளம்பரம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. மாறாக இந்த கார்ப்பரேட் சாமியார் முன்வைக்கும் யோகா ஆன்மீகத்தில் இவர்கள் லயித்துப் போகிறார்கள். அதில் உண்மையாகவே மன அமைதி கிடைப்பதாக நம்புகின்றனர். அப்படி நம்ப வைப்பதற்காக வெள்ளியங்கிரி ஈஷா ஆசிரமத்தில் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்பு யோகா சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அதனால் தான் சத்குரு மனைவியின் மர்ம மரணம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் அதைப்பற்றி எந்த மீடியாவும் பேச மறுக்கிறது. ஈஷாவில் தங்களின் இரண்டு மகள்களை வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக கடந்த ஆண்டு வெளிவந்த ஒரு பெற்றோரின் கண்ணீர் பேட்டிகள் பரபரப்பான ஊடக விவாதமாக மாறாமல் அந்த நேரத்து துணுக்குச் செய்தியாக மாறிப்போனதன் பின்னே உள்ளது இதுதான்.

எனவே தற்போது ஜக்கி வாசுதேவின் அட்டகாசம் குறித்தும், விதிகளை மீறி காடுகளை ஆக்கிரமித்து அழித்துள்ளது குறித்தும், யானைகளின் வழித்தடம் அழிக்கப்படுவது குறித்தும் எந்த ஊடகமும் பேசப்போவது இல்லை. நேர்ப்பட பேச்சு, ஆயுத எழுத்து, கேள்வி நேரம், காலத்தின் குரல் என எந்த நிகழ்ச்சியிலும் ஜக்கியைக் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். மோடி என்னும் பெரிய கேடியே ஆசீர்வாதம் செய்ய வரும்போது சின்னக் கேடியைப் பற்றி இவர்கள் வாய் திறப்பார்களா என்ன? அப்படி வாய் திறக்கும் யோக்கியத் தன்மை எந்த மீடியாவுக்காவது இருக்கிறதா?

கங்கைக் கரையில் டபுள் ஸ்ரீ ரவிசங்கரின் இயற்கை அழிப்பு மநாட்டிற்குச் சென்ற மோடி, கோவைப் பகுதியில் காடு கழனிகளை அழிக்கும் ஜக்கியின் நிகழ்ச்சிக்கு வருகிறார்.

தென் தமிழ்நாட்டு கடலோரத்தின் மணல் வளத்தை வெட்டி கூறுபோடும் கொள்ளையன் வைகுண்டராஜன் நடத்தும் நியூஸ் 7 சேனலுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா, வைகுண்டராஜனின் தேசிய வெர்ஷன்; நாட்டை கொள்ளை அடிப்பதில் இரண்டு தலைமுறை அனுபவம் கொண்ட ரிலையன்ஸ் அம்பானி நடத்தும் நியூஸ் 18, பொத்தேரி என்னும் பத்து ஏரிகள் நிறைந்த ஊரை கபளீகரம் செய்து எஸ்.ஆர்.எம் கல்வி கொள்ளை வளாகத்தை நிறுவி இன்று அதை நாடு தழுவிய அளவில் விஸ்தரித்துள்ள புதிய தலைமுறை, ஆளும் வர்க்கத்துக்கு கூழை கும்பிடு போட்டு அண்டிப் பிழைப்பதைப் பெருமையென கருதும் தந்தி டி.வி… என யாரும் இதுகுறித்துப் பேசப் போவது இல்லை.

மற்ற நேரத்தில் தங்களுக்குள் போட்டி இருப்பதைப் போலக் காட்டிக்கொள்ளும் இவர்கள், டி.ஆர்.பி.யை பிக்-அப் செய்யும் நோக்கத்தில் கூட ஜக்கியின் பக்கித்தனத்தைப் பற்றிப் பேசமாட்டார்கள். நொடிக்கு ஒரு தரம் பிரேக்கிங் நியூஸ் போட்டு பார்வையாளர்களை எந்நேரமும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் இவர்கள், பல புதிய பிரேக்கிங் செய்திகளுக்கு வாய்ப்பு இருந்தும் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள். மாறாக வரும் 24-ம் தேதி மோடியின் கோவை வருகையைப் போட்டிப் போட்டுக்கொண்டு லைவ் கவரேஜ் செய்வார்கள். தங்கள் ஓபி வேன்களை நிறுத்தி நிருபர்களை லைவில் கதறவிட்டு அந்த பரபரப்பின் வெளிச்சத்தில் ஜக்கியின் மொத்த பித்தலாட்டங்களையும் மறக்கடிப்பார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி தினத்தில் நடுக்குப்பம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்குள் புகுந்த போலீஸ் வெறியாட்டம் நடத்தியது. அதற்கு முந்தைய கணம் வரைக்கும் இடைவிடாமல் லைவ் செய்தவர்கள், போலீஸ் அடிக்கத் தொடங்கிய அந்த நொடி முதல் கேமராவை வேறுபக்கம் திருப்பிவிட்டார்கள். ஒரு வார காலமாக மல்டி கேமரா செட்-அப்புடன், ஜிம்மி-ஜிப் எல்லாம் போட்டு கடற்கரையே கதி என கிடந்த தமிழக தொலைகாட்சிகள், குப்பத்து மக்கள் அடித்து நொறுக்கப்படுவதைக் காட்ட மறுத்தன. போலீஸ், லத்தியால் மக்களின் மண்டையைப் பிளந்தது என்றால் மீடியாக்கள் தங்களின் கேமராக்களை வேறுபக்கம் திருப்பி அந்த மக்கள் அடிபட்டு சாவதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கியது. அந்தச் சதியின் கூட்டுப் பங்காளிகளாக இவர்கள் இருந்தார்கள். நடுக்குப்பம் வன்முறையை ஒட்டி மீடியாவில் வெளிவந்த காட்சிகள் மிக, மிகக் குறைவு. மாறாக அங்கே இருந்த தனிநபர்கள் தங்கள் செல்போன் வழியே எடுத்து பதிவேற்றிய காட்சிகளே அதிகம். அவற்றைக் கூட எந்த தொலைகாட்சியும் எடுத்து ஒளிபரப்பவில்லை.

122 அடி சிலை உருவாக்குவதற்கு அழிக்கப்பட்ட மக்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன?

எனவே இந்தத் தொலைகாட்சிகள் காட்டும் பரபரப்பின் பரப்பு மிகவும் ஆபத்தானது. அது நம்மை பரபரப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. மாறாக உண்மையாகவே மக்கள் பாதிக்கப்படும் காட்சிகள், அது எவ்வளவு பரபரப்புத் தன்மை கொண்டதாயினும் இவர்கள் அதைக் காட்டப்போவது இல்லை.

ஜக்கி வாசுதேவ் என்னும் ஆன்மிகக் கொள்ளைக்காரனின் வன ஆக்கிரமிப்பை, ஈஷா என்ற பெயரில் தமிழகத்தில் நடத்திவரும் ஒரு கருத்தியல்-பொருளியல் சூறையாடலை வெளிப்படையாக விவாதிக்கும் துப்பு தமிழகத்தின் எந்த மீடியாவுக்கும் இல்லை. ஜெகத்குரு, சங்கர்ராமனை கழுத்தறுத்தபோது மௌனம் காத்த இவர்கள், இப்போது சத்குரு வெள்ளியங்கிரி மலைக்காட்டை வெட்டி கூறுபோடும் போதும் தங்கள் நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட மீடியாக்கள் தாங்கள் மக்களின் பக்கம் இருப்பதாகவும், நடுநிலையோடு நட்ட நடு சென்டரில் நிற்பதாகவும் அடித்துக்கொள்ளும் ஜம்பம் மட்டும் தாங்க முடியவில்லை.

ஆனால் இது பேச வேண்டிய தருணம். இன்னும் இரண்டு நாட்கள். இன்று தேதி 22. வரும் 24-ம் தேதி மோடி கோவை வருகிறார். இப்போது தொடங்கி இன்னும் இரண்டு நாட்களுக்கு நாம் ஜக்கி வாசுதேவ் என்னும் கொள்ளைக்காரனின் திருட்டுப் பக்கங்களையும், இதற்கு ஆசீர்வாதம் அளிக்கவரும் பெரிய கேடி மோடியைப் பற்றியும், இவை எவற்றையும் பேசாத தமிழக ஊடகங்களையும் அம்பலப்படுத்தி தொடர்ந்து எழுதுவோம்; பேசுவோம்; விவாதிப்போம். இதை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாற்றுவோம். மெய்நிகர் உலகின் சூடு மெய்யுலகை தழுவட்டும்.

ஜக்கியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்! மோடியே திரும்பிப் போ! பேச மறுக்கும் மீடியாவே பேசு!

– முத்து