privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபணிந்தது பாஜக ! வென்றனர் மராட்டிய விவசாயிகள் !!

பணிந்தது பாஜக ! வென்றனர் மராட்டிய விவசாயிகள் !!

-

ராட்டிய விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த ஜூன் 1, 2017 முதல் கடந்த 11 -நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டங்களின் தொடக்கத்தில் இது எதிர்க்கட்சிகளின் சதி எனக் கூறி விவசாயிகளை உதாசீனப்படுத்தியது பாஜக அரசு. விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையவே, புறவாசல் வழியாக அவர்களது போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பல்வேறு வழிமுறைகளையும் கையாண்டது.

பாலையும், தக்களியையும் சாலையில் கொட்டி போராடும் விவசாயிகள்

அதனை உணர்ந்த விவசாயிகள், உடனடியாகத் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். எதிர்க்கட்சிகளும், ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனையும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கின. மராட்டிய மாநில விவசாயிகளின் போராட்டம், அருகில் உள்ள மத்தியப் பிரதேச விவசாயிகள் மத்தியிலும் பரவியது. மத்தியப் பிரதேசத்தில் போராட்டம் கடுமையான போது சவுகான் தலைமையிலான பாஜக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது. 6 விவசாயிகள் பலியாகினர். உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றிய இராஜஸ்தான் விவசாயிகள் சங்கம், தங்களது நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்தது.

ம.பி.யில் தொடரும் போராட்டத்திற்கு, தீர்வு கொடுக்கத் திராணியில்லாத ‘வியாபம்’ சவுகான், தானும் ஒரு விவசாயி தான், பேச்சுவார்த்தை நடத்தத் தயார் எனக் கூறி நீலிக் கண்ணீர் வடித்தார். விவசாயிகள் அதற்கு ஏமாறவில்லை. உடனே சவுகான், ‘அமைதி வேண்டி’ ஒரு காலவறையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். பசி வயிற்றைப் பிடுங்கியதோ என்னவோ, மறுநாளே (11/06/2017) அந்த நாடகத்தை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில், மராட்டியத்தில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தைக் கண்டு மிரண்ட ஃபட்னாவிஸ் தலைமையிலான மாகாராஷ்டிர பாஜக அரசு, இன்று (12/06/2017) விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயக் கடன்களை இரத்து செய்வதாக அறிவித்தது. இதற்கு முன்னால் குறு விவசாயிகளின் கடன்களை மட்டுமே இரத்து செய்யமுடியும் என அரசு அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய ஒத்துக் கொண்டுள்ளது.

விவசாயிகளின் தடையை மீறி சென்ற வாகனங்களில் இருந்து பொருட்களைப் பறிமுதல் செய்யும் விவசாயிகள்

மராட்டியத்தில், மொத்தமுள்ள 1.36 கோடி விவசாயிகளின் மொத்தக் கடன் தொகை 1.14 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆனால் விவசாயம் அல்லாத, அதன் சார்புத் தொழில்களுக்காக வழங்கப்பட்ட விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யமுடியாது என்றும், பெரும் விவசாய வணிக நிறுவனங்களின் கடன்களும் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் பாஜக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தள்ளுபடி செய்யப்படும் மொத்தக் கடன் தொகை சுமார் 30, 500 கோடி ரூபாய்க்கும் குறைவானதாகவே இருக்கும் என அறிவித்துள்ளது.  இதனை மராட்டிய விவசாயிகள் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இது தவிர விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கும் பாஜக அரசு ஒத்துக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் வரும் ஜுன் 20 முதல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.28 முதல் ரூ.30 வரை விலையேற்ற முடிவெடுத்துள்ளது.

மராட்டிய விவசாயிகளின் விடாப்பிடியான போர்க்குணமிக்கப் போராட்டங்களுக்கு அடிபணிந்தது மராட்டிய பாஜக அரசு. இன்னமும் போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் மத்தியப் பிரதேச அரசிற்கு அம்மாநில விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு, “கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. “மயிலே! மயிலே!” என்றால் எந்த மயிலும் இறகு போடாது, பிடுங்கினால் தான் இறகு கிடைக்கும் என்பது மராட்டிய விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது, சாதித்திருக்கிறார்கள். ஆனால் தமிழக விவசாயிகளோ, மயிலுக்கு மனுக் கொடுத்து விட்டுக் காத்திருக்கிறார்கள். இறகு அல்ல, மயிரு கூடக் கிடைக்காது என்பது தான் எதார்த்தம்!

மேலும் :