லோபதி மருத்துவத்தின் வர்த்தக வேட்டையில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு பரிச்சயப்பட்ட பெயர் “ஹோமியோபதி”. தமிழகத்தில் கூட முற்போக்கு வட்டாரத்தில் இம்மருத்துவ முறை அதிகம் பிரபலபமானது. இருப்பினும் அறிவியல் ரீதியாக ஹோமியோபதியை எப்படி வரையறுப்பது? அலோபதி மருத்துவம் கார்ப்பரேட் பிடியில் இருந்தாலும் அது முற்றிலும் அறிவியலால் வரையறுக்கப்பட்டது. இதர மருத்துவ முறைகளை அப்படிச் சொல்ல முடியுமா? அப்படி வரையறுக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன வழிமுறை?

ஹோமியோபதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடி மருத்துவ முறை. ஹோமியோபதி மருத்துவர்களும் நோயாளிகளும் அதற்கு குணப்படுத்தும் திறன் இருப்பதாக நம்புகின்றனர். இன்று ஜனாதிபதிகள், பிரபல பாப் பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டு இலட்சக் கணக்கானோர் ஹோமியோ சிகிச்சையைப் பயன்படுத்துகின்றனர்.

இங்கிலாந்தின் ஓய்வுபெற்ற பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது கால் காயத்திலிருந்து குணமடைய ஹோமியோபதி உதவியதாக குறிப்பிட்டுள்ளார். விக்டோரியா மகாராணி காலத்திலிருந்து பிரிட்டனின் அரச குடும்பத்தினர் ஹோமியோபதியின் பயனர்களாக உள்ளனர்.

சாமுவேல் ஹானிமேன்

ஆனாலும், அறிவியல்ரீதியாக ஹோமியோபதி இன்னும் ஒரு புதிர் தான். பதினெட்டாம் நூற்றாண்டில் சாமுவேல் ஹானிமேன் (1755-1843) என்பவரால் உருவாக்கப்பட்ட அதன் அடிப்படை வழிகாட்டும் கோட்பாடுகளில் சில இன்றும் புதிராகவே உள்ளன. புதிர் என்பதன் பொருள் அதை அறிவியல் ரீதியாக விளக்குவது சாத்தியமில்லை.

ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படையாக இரண்டு கோட்பாடுகளை கூறுவார்கள். முதலாவது “ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்”. ஒவ்வொரு நோயும் ஒருவித அறிகுறியை ஏற்படுத்துகின்றன எனபதை நாம் அறிவோம். குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளை ஏற்படுத்தும் மருந்துகள் அந்த நோயை குணப்படுத்தும். அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்று. அதனால் ஹோமியோபதியில் நோய்குறிகளைக் கொண்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒவ்வாமை காய்ச்சலுக்கு (hay fever) அலியம் செபா (allium cepa) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இது வேறொன்றுமில்லை வெங்காயம் தான். அதிகப்படியாக வெங்காயத்தை உரிக்கும் போது ஏற்படும் விளைவுகள் நம் அனைவருக்குமே தெரியும். மூக்கிலும் கண்களிலும், நீர் வழிந்தோடும், கண் எரியும், தும்மல் ஏற்படும். அதனால், இந்த விளைவுகளை ஒத்த நோய்க்குறிகளைக் கொண்ட ஒவ்வாமை காய்ச்சலுக்கு இம்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த கோட்பாடு ஆயிரக்கணக்கான வெவ்வேறு பொருட்களை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு வழிகோலுகிறது. அதாவது, இந்த பூமியிலுள்ள எதையும் ஹோமியோ மருந்தாக மாற்றலாம். அவற்றுள் சில மிக விநோதமானவை; உயிர்கொல்லி நச்சுத் தாவரங்கள், விலங்குகள், பாம்பின் விசம், கனிமங்கள் மற்றும் உலோகங்கள், காசநோயால் பாதிப்படைந்த மாட்டின் நிணநீர் சுரப்பி என்று எதையும் ஹோமியோ மருந்தாக மாற்றலாம். இவற்றில் பெரும்பாலானவை மிகக் கொடிய விசத் தன்மையுள்ளவை. அவற்றை நேரடியாக எடுத்துக் கொள்வது உடனடி மரணத்தை விளைவிக்கும்.

இந்த பிரச்சினை ஹோமியோபதியின் இரண்டாவது அடிப்படைக் கோட்பாட்டை அளிக்கிறது. “மருந்தை வீரியப்படுத்துதல் – மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க (Dilute) வீரியம் (Potency) அதிகரிக்கும் – என்பது ஹோமியோ உலகில் பிரபலம். இதற்கு ஹோமியோ மருந்தாளர்கள் பயன்படுத்தும் முறை ‘தொடர் செறிவுக் குறைத்தல்’ (Serial Dilution) எனப்படுகிறது.

பாம்பின் விசமோ அல்லது கந்தக அமிலமோ, எந்த மூலப்பொருளாக இருப்பினும் அதன் ஒரு துளி, 99 துளி நீர் அல்லது ஆல்கஹாலுடன் சேர்க்கப்படும். பின்னர் இந்தக் கலவை தனிச்சிறப்பான முறையில் கடுமையாக குலுக்கப்படுகிறது. இதன் மூலம் இக்கலவை 100 மடங்கு செறிவுக் குறைதலுக்கு (Dilute) உள்ளாக்கப்படுகிறது. இது 1சி (1C) கரைசல் எனப்படுகிறது.

அடுத்தகட்டமாக, இந்த 1சி கரைசலின் ஒரு துளி, 99 துளி நீரில் கலந்து குலுக்கப்படுகிறது. இது 2சி, 10,000 மடங்கு செறிவு குறைத்தலாகும். இந்த செயல் தொடர்ந்து 6சி நிலைக்குச் செல்லும் போது ஒரு இலட்சம் கோடி மடங்கு செறிவு குறைத்தல் என்றாகிறது. அதாவது, ஆறு நீச்சல் குளத்தில் ஒரு சொட்டு மருந்து என்பதற்கு சமம். மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க (Dilute) வீரியம் (Potency) அதிகரிக்கும் என்பதால், இந்த செயல்முறை இன்னும் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.

மருந்தின் செறிவைக் குறைத்து வீரியம் அதிகப்படுத்துவாக சொல்லும் ஹோமியோபதி முறையை விளக்கும் படம்.

அடுத்த ஆறு தொடர் நிலைகளில் (12சி), வங்கக்கடலில் ஒரு துளி மருந்தை கலப்பதற்கு சமமான நிலையை எட்டிவிடும். ஆனால், பெரும்பாலான ஹோமியோபதி மருந்துகளுக்கு இது போதாது. பொதுவான அடிப்படை மருந்து 30சி செறிவுக் குறைத்தலில் இருக்கும். இது பூமியிலுள்ள மொத்த கடற்பரப்பில் ஒரு துளி மருந்தை கலப்பதற்கு சமம். இந்த முறையில் தீவிர செறிவு குறைக்கப்பட்ட கரைசலின் சில துளிகள் மட்டுமே சர்க்கரை உருண்டைகளின் (மாத்திரைகள்) மீது ஊற்றி மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன.

சில நோய்க்குறிகளுக்கு அலோபதி மருத்துவமும், ஹோமியோபதி மருத்துவமும் ஒரே மருந்தை தான் பரிந்துரைக்கின்றன. ஆனால், வீரியமிக்க மருந்த்து என்ற பெயரில் ஹோமியோபதி மீசெறிவுக் குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை மருந்தாக தருகிறது.

இங்குதான் ஹோமியோபதியின் அறிவியலுடனான முரண்பாடு துவங்குகிறது. எந்தப் பொருளையும், கலவையையும் செறிவுக் குறைப்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. கரைசலின் ஒரே ஒரு மூலக்கூறு மீதமிருக்கும் நிலைவரை நாம் அதை செறிவுக் குறைக்கலாம். அதற்கு மேல் சென்றால் அந்த ஒரு மூலக்கூறும் கூட இல்லாமல் போய் கரைசல் வெறும் நீர் ஆகிவிடும். ஒரு ஹோமியோ மருந்தில் மூலக்கரைசலின் மூலக்கூறுகள் எத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்க்க முடியும். இதற்கு அறிவியல் அளிக்கும் பதில் ‘முற்றிலும் இல்லை’ என்பது தான். நிகழ்தகவின் அடிப்படையில் கூட ஒரு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியக்கூறு 100 கோடியில் ஒரு வாய்ப்புக்கும் குறைவு. அதாவது ஹோமியோபதி மருந்தில் உண்மையில் மருந்தில்லை.

ஒரு குப்பி மாத்திரைகளின் மூலம் மூலமருந்தின் ஒரு மூலக்கூறுகூட நமது உடலில் சேருவதில்லை. நவீன உடற்கூறியல் மற்றும் மருந்தியலின் படி மனித உடல் மற்றும் நுண்கிருமிகளுடன் வினையாற்ற ஒரு குறிப்பிட்ட மருந்தின் ஒரே ஒரு மூலக்கூறாவது உட்செல்ல வேண்டும். ஒரு மூலக்கூறை உடலில் சேர்ப்பதற்கே பல ஆயிரம் குப்பிகளை விழுங்க / சப்ப வேண்டும். அதுவே ஒரு துளி மூலமருந்தை உடலில் சேர்க்க இந்தப் புவியளவை விட அதிக மாத்திரைகளை சப்ப வேண்டியிருக்கும்.

மூலமருந்தின் வேதிஆற்றல் தனிச்சிறப்பான தொடர் செறிவுகுறைப்பு முறையின் மூலம் குணப்படுத்தும் ஆற்றலாக நீருக்கு மாற்றப்படுகிறது என்கின்றனர் ஹோமியோபதிகள். (இனி நாம் ஹோமியோ மருத்துவர்கள், ஆதரவாளர்களை “ஹோமியோபதிகள்” என்று அழைப்போம்.)

ஆனால், முதற்பார்வைக்கே இது வேதிஅறிவியலுடன் முரண்படுகிறது. ஒரு கரைசலின் செறிவு (concentration) அதிகமாக இருக்கும் போது தான் வினைத்திறன் அதிகம் என்பது வேதியியலின் அடிப்படை விதி. மேலும், மூலப்பொருட்கள் அதாவது அணுக்கள், மூலக்கூறுகள் நேரிடையாக ஆற்றலாக மாறுவதாகக் கொண்டாலும், அதற்கு அணுக்கரு பிளவு, பிணைப்பு போன்ற வினை நிகழ்ந்தாக வேண்டும். இந்த தொடர் செறிவுக்குறைப்பு முறையின் மூலம் பொருட்களை நேரிடையாக ஆற்றலாக மாற்றவும் முடியாது. ஏனெனில் ஒரு குடுவையைக் குலுக்குவதன் மூலம் அணுக்கரு பிளப்போ இல்லை பிணைப்போ நடக்காத ஒன்று.

ஹோமியோபதி மருத்துவர்கள் தங்கள் மருந்துக்கு குணப்படுத்தும் திறன் இருப்பதாக கூறுகின்றனர். மறுபுறம், அறிவியல் ஹோமியோ மருந்தில் தண்ணீரைத் தவிர எதுவுமில்லை என்கிறது.

பின்னர், ஹோமியோபதி சொல்வது முற்றிலும் சரி என்று கண்டறிந்து சொன்னார் பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி ஜாக்ஸ் பென்வெனிஸ்டே. அவர் அப்போது அறிவியல் துறையில் சூப்பர் ஸ்டாராக இருந்தார். நோபல் பரிசை வெல்வார் என்று கூடப் பலரும் எதிர்பார்த்தனர்.

ஜாக்ஸ் பென்வெனிஸ்டே

பென்வெனிஸ்டே ஒவ்வாமை துறையில் நிபுணர். 1988-ம் ஆண்டு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை மனித செல்களின் மீது ஆய்வு செய்து வந்தார். அப்போது, செறிவுக் குறைக்கப்பட்ட வேதிக் கரைசல் மனித செல்களில் ஒவ்வாமையை தூண்டியதை கண்டறிந்தார். இதையடுத்து அந்தக் கரைசலை ஹோமியோ மருந்து தயாரிப்பு முறையை ஒத்த செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சோதித்ததில் அவை ஒவ்வாமையைத் தூண்டின.

இது நீர் அதிலிருந்த வேதிப்பொருட்களை நினைவில் வைத்திருந்ததை ஒத்திருந்தது. அதனால் இதை ‘நீரின் நினைவாற்றல்’ என பென்வெனிஸ்டே அழைத்தார். இப்போது ஹோமியோபதிக்கு அறிவியல் அடிப்படை கிடைத்துவிட்டது.

அறிவியல் சமூகம் ஒப்புக் கொள்ளும் வரையில் இது ஒரு ஆய்வுமுடிவே அல்ல. அது வரை அது குளியலறையில் பாடும் ஒரு ஓபரா பாடகரை ஒத்தது. அதனால், தனது ஆய்வு முடிவுகளை இயற்கை (Nature) என்ற மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழில் வெளியிட அனுப்பி வைத்தார் பென்வெனிஸ்டே.

அப்போது அந்த ஆய்விதழின் ஆசிரியராக இருந்த சர் ஜான் மடோக்ஸ், நீரின் நினைவாற்றல் என்பது விஞ்ஞானத்தை பொறுத்தவரை ஒரு அபத்தம் என்றே அறிந்திருந்தார். அதே சமயம் பிரபலமான விஞ்ஞானியின் ஆய்வை மறுக்கவும் முடியவில்லை. அதனால், ஒரு நிபந்தனையுடன் பென்வெனிஸ்டேவின் ஆய்வறிக்கையை நேச்சர் இதழில் வெளியிட்டார் மடோக்ஸ். அதாவது, ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமானால், தனது ஆய்வகத்தை நேச்சர் குழுவின் சோதனைக்குட்படுத்த பென்வெனிஸ்டே ஒப்புக்கொள்ள வேண்டும்.

சர் ஜான் மடோக்ஸ்

அதன் படி, தனது குழுவுடன் பென்வெனிஸ்டேயின் ஆய்வகத்திற்கு சென்றார் மடோக்ஸ். அறிவியலாளரும், மோசடிகளை அம்பலப்படுத்துபவருமான வால்டர் ஸ்டீவர்ட், மந்திர வித்தைக்காரரும், அமானுட நடவடிக்கைகளை அம்பலப்படுத்துபவருமான ஜேம்ஸ் ராண்டி ஆகிய இருவரும் மடோக்சின் குழுவில் இருந்தனர்.

இந்தச் சோதனையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஹோமியோபதி நீர் (மருந்து) ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரண தண்ணீரில் இருந்து வேறுபட்டால், ஹோமியோபதி முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.

***

மடோக்சின் குழு, பென்வெனிஸ்டேயின் குழுவுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டது. கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளுடன் (Controlled Samples) ஹோமியோ மருந்து ஒப்பிடப்பட்டது. இதற்காக வேதிப்பொருளின்றி வெறும் நீரை தொடர் செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சில மாதிரிகளும், மூலவேதிப்பொருள் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சில மாதிரிகளும், மிக சுத்தமான சோதனைக் குழாய்களில் தயாரித்து எடுத்துக் கொள்ளப்பட்டன.

முதல் கட்ட ஆய்வில் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உட்பட்ட வேதிப்பொருள் கலவை சாதாரண நீர் ஏற்படுத்தும் விளைவுகளில் இருந்து மாறுபட்டிருந்தது.

இரண்டாம் கட்டமாக கடுமையான, கறாரான சோதனைகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. எந்தக் குடுவை சாதாரண நீர், எது மருந்து என்பதற்கு மறைகுறியீடுகள் கொடுக்கப்பட்டு அவை யாரும் அறியாதிருக்க உரையிலிட்டு சோதனைச் சாலையின் மேற்கூரையில் ஒட்டப்பட்டது.

பின்னர், எந்தெந்த குடுவைகள் ஒவ்வாமையை தூண்டுகின்றன என்று சோதித்து குறித்துக் கொள்ளப்பட்டது. இறுதியாக, குறியீடுகள் நீக்கப்பட்டு குடுவைகளில் இருக்கும் தொடர்புடைய கரைசல்கள் குறித்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வாமையைத் தூண்டிய குடுவைகளில் பெரும்பாலானவை, மூலவேதிப்பொருள் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவையாக இருந்தால் பென்வெனிஸ்டேயின் ‘நீரின் நினைவாற்றலுக்கு’ நிரூபணம் கிடைத்துவிடும்.

ஆனால், பென்வெனிஸ்டேயின் குழுவினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக முடிவுகள் கிடைத்தது. மடோக்சின் குழு, நீரின் நினைவாற்றல் என்பது மாயை என்ற தமது ஆய்வறிக்கையை நேச்சர் இதழில் வெளியிட்டது. இது பென்வெனிஸ்டேக்கு அறிவியல் துறையில் இருந்த நற்பெயரை கெடுத்து போலி அறிவியலாளர் (Pseudo-scientist) என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.  ஹோமியோபதி மீண்டும் அறிவியலுடன் முரண்படும் நிலைக்கு சென்றது. ஆனால், இது ஹோமியோபதியின் செல்வாக்கைக் குறைக்கவில்லை, மாறாக அதிகரித்தது.

அறிவியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஹோமியோ மருந்துகள் தம்மைக் காப்பாற்றியதாக பலர் கூறுகின்றனர். அறிவியல் ரீதியாக ஹோமியோபதி ஒரு அபத்தம் என்றால், அதனால் பலர் எப்படி குணமடைகின்றனர்?

இயற்கையாக உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மற்றும் சுய குணமாக்கும் சக்திகளை (Self-Healing Power) தூண்டுவதன் மூலம் ஹோமியோதி குணப்படுத்துவதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது பொய்மருந்து விளைவு (Placebo Effect) என்கிறது அறிவியல். அதாவது, மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மருந்தற்ற சர்க்கரை மாத்திரைகள் கொடுக்கப்படும் போது அது நோயாளிகளிடம் உளவியல்ரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்தி குணப்படுத்தும்.

அலோபதி மருத்துவர்களில் கூட மக்களிடம் பெயர் எடுக்கம் மருத்துவர் என்னவாக அறியப்படுகிறார்? கை ராசி டாக்டர், அவரிடம் போனால்தான் நோய் குணமாகும் என்றே மக்கள் நம்புகிறார்கள். அந்த மருத்தவர் கொடுக்கும் அதே மருந்தை இன்னொரு மருத்துவர் கொடுத்தாலும் முன்னவர் போல பின்னவரிடம் குணம் கிடைக்காது என்றே மக்கள் கருதுகின்றனர்.

ஹோமியோபதிகள் தமது நோயாளிகளிடம் மற்ற எந்த மருத்துவ முறையைவிடவும் அதிகமாக உரையாடுகின்றனர். இது உளவியல்ரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்தி கச்சிதமான பிளாசிபோ விளைவால் குணப்படுத்துகின்றது.

ஆனால், பிளாசிபோ விளைவில் சிறியதை விட பெரிய மாத்திரைகள் அதிக பலனையும், வெள்ளையை விட வண்ண மாத்திரைகள் அதிக பலனையும் கொடுப்பதை அறிவியல் பதிவு செய்துள்ளது. மேலும், பிளாசிபோ விளைவு எனில், தாம் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறோம், மருந்தை உட்கொள்கிறோம் என்பதையே அறியாத குழந்தைகள் மற்றும் விலங்குகளில் ஹோமியோ மருந்து வேலை செய்யக்கூடாது. ஆனால், ஹோமியோ மருந்துகள் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் நோயையும் குணப்படுத்துகின்றன என்கின்றனர் அதன் ஆதரவாளர்கள். இதையெல்லாம் எப்படி நிரூபிப்பது?

ஹோமியோ மருந்தில் மூலக்கரைசலின் ஒரு மூலக்கூறுகூட இல்லை என்பதை ஹோமியோபதிகள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாக வாதிடுகின்றனர்.

ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோவைச் (Glasgow) சேர்ந்த மருத்துவர் டேவிட் ரெய்லி ஒவ்வாமை காய்ச்சல் நோயாளிகள் 35 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஒரு பிரிவினருக்கு ஹோமியோ மருந்தையும், மற்றொரு பிரிவுக்கு மருந்தற்ற சர்க்கரை மாத்திரைகளையும் கொடுத்து சோதித்தார். அதில், ஹோமியோ மருந்து கொடுக்கப்பட்டவர்களிடம், சர்க்கரை மாத்திரை கொடுக்கப்பட்டவர்களை விட அதிக முன்னேற்றம் இருந்தது. இதே சோதனையை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளிடம், வெவ்வேறு நோய்களுக்கு செய்து பார்த்தார். ஆனால், அறிவியல் உலகம் அவரது ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏனெனில், ஹோமியோ மருந்துகள் குணப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு இதில் அறிவியல் விளக்கம் எதுவுமில்லை. அதாவது, சுத்தமான நீர் எப்படி குணப்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் விளக்கம் எதுவுமில்லை.

2000-01ம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் மேடலைன் எனிஸ் மற்றும் பெல்ஜியத்தின் ராபர்ஃபிராய்ட் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஹோமியோ மருந்தைச் சோதித்து பார்ப்பது என்று முடிவெடுத்தனர். அவர்கள், பென்வெனிஸ்டே பின்பற்றிய அதே சோதனை முறைகளைப் பின்பற்றினர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் பென்வெனிஸ்டே முன்வைத்த ‘நீரின் நினைவாற்றல்’ என்ற அதே முடிவை வந்தடைந்தனர். ஆனால், இம்முறையும் அறிவியல் உலகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீருக்கு நினைவாற்றல் இருக்கிறதென்றால் அது எப்படி, எவ்வாறு இருக்கிறது என்பதை இது விளக்கவில்லை.

இந்நிலையில், பென்வெனிஸ்டேயின் ஆய்வகத்தை 1988-ல் சோதித்த நேச்சர் குழுவில் இடம் பெற்றிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மந்திர வித்தைக்காரரும், அமானுட நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் ஜேம்ஸ் ராண்டி “நீரின் நினைவாற்றலை” அறிவியல்பூர்வமாக நிரூபிப்பவர்களுக்கு 1 மில்லியன் (10 இலட்சம்) அமெரிக்க டாலர்கள் பரிசளிப்பதாக தனது வலைத்தளத்தில் அறிவித்தார்.

BBC.Horizon-Homeopathy.The.Test-2002

2002-ம் ஆண்டு பிபிசி-யின் அறிவியல் ஆவணப்பட பிரிவான ஹரிசான் (Horizon) இந்த சவாலை ஏற்று 1 மில்லியனுக்கான போட்டியை நடத்த முன்வந்தது. இதற்காக அக்குழு முதன் முறையாக, அறிவியல் ஆய்வை சொந்தமுறையில் நடத்திப் பார்க்க முடிவு செய்தது. உலகின் மிகப் பெருமைமிக்க அறிவியல் நிறுவனமான பிரிட்டனின் ராயல் சொசைட்டியின் துணைத்தலைவர் சோதனையை மேற்பார்வையிட்டு நடத்திக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அதற்கு சாட்சியாக ராண்டி அமெரிக்காவிலிருந்து அழைக்கப்பட்டார்.

ஜேம்ஸ் ராண்டி

இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் பீட்டர் மோப்ஸ் கலவை மாதிரிகளையும், கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளையும் உருவாக்கித்தந்தார். இவை, மூடி மறைகுறியாக்கம் செய்யப்பட்டு, இலண்டன் கைஸ் மருத்துவமனை மற்றும், ராயல் மருத்துவமனைகளின் ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டன.

தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தூய நீருக்கும், தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வேதிப்பொருளுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அதாவது ஹோமியோ மருந்திற்கும், தண்ணீருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றன ஆய்வு முடிவுகள்.

ஒட்டுமொத்த ஹோமியோபதி – அறிவியல் முரண்பாடும், இந்த சோதனையும் ஆவணப் படமாக பதிவு செய்யப்பட்டு பி.பிசி-யில் ஒளிபரப்பப்பட்டது. ஜேம்ஸ் ராண்டி அறிவித்த அந்தப் பரிசுத் தொகை இன்றுவரை யாராலும் வெல்லப்படாமலேயே உள்ளது.

***

மீநுண் தொழில்நுட்பம் (Nano Technology) மற்றும் துகள் இயற்பியல் (Quantum Physics) மூலம் ஹோமியோபதிக்கு அறிவியல் விளக்கம் அளிக்க சிலர் முயன்று வருகின்றனர். ஹோமியோ மருந்தில் மூலவேதிப்பொருளின் மீநுண் துகள்கள் இருப்பதாகவும், அவையே குணப்படுத்தும் ஆற்றலை வழங்குவதாகவும் சில ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, 2010-ம் ஆண்டு பாம்பே ஐ.ஐ.டி-யின் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையத்தைச் (IRCC) சேர்ந்த ஒரு குழு உலோகம் சார்ந்த ஹோமியோ மருந்துகளில், மூல உலோகங்களின் மீநுண் துகள்கள் இருப்பதாக ஒரு ஆய்வை வெளியிட்டது.

ஆனால், அறிவியல் உலகம் இந்த ஆய்வை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. ஏனெனில், இந்தச் சோதனை கட்டுப்படுத்தப்படாத முறையில் நடத்தப்பட்டதோடு, கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகள் சோதிக்கப்படவில்லை. அதாவது, ஹோமியோ மருந்துக்கடைகளில் இருந்து வாங்கப் பெற்ற மருந்துகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன, சொந்தமாக தயாரிக்கப்படவில்லை. அதோடு, மருந்தில்லாத தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தூய நீர் ஒப்பீட்டு சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

துகள் இயற்பியலில் அடிப்படை துகள்கள் ஆற்றல் தாங்கிகளாக (Carrier) இருக்கின்றன. அப்படிப்பட்ட அடிப்படை துகள்கள், மூல வேதிப்பொருளின் ஆற்றலை குணப்படுத்தும் சக்தியாகத் தாங்கி கடத்துகின்றன என்கின்றனர் சிலர். துகள் இயற்பியல் என்பது அணுவின் அடிப்படை துகள்களான குவார்க்குகள் (Quarks), லெப்டான்கள் (Leptons), போசான்கள் (Bosons) போன்ற மீநுண் அளவில் பொருட்களின் செயல்பாடுகளை விவரிக்கிறது. அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் ஆற்றலை இத்தகைய அடிப்படை துகள்கள் கடத்துவதில்லை என்பதால்  அறிவியல் இதை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

இணையத்திலும், ஆய்விதழ்களிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுமுடிவுகள் ஹோமியோபதிக்கு அறிவியல் விளக்கம் அளிப்பதாக காணக் கிடைக்கின்றன. ஆனால், இதுவரை அறிவியல் விதிகளால் நிரூபிக்கப்படாத அசாதரண கூற்றுகளுக்கு, மிக மிக உறுதியான சான்றுகள் தேவை. அறிவியலில், அயராது திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளில் முடிவுகள் மறு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாதிரிகளில் திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளிலும் சரி, வெவ்வேறு மாதிரிகளில்  திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளிலும் சரி முடிவுகள் மறுஉறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் நிறுவனங்களின் ஆய்வுக் குழுக்களின் முன் சோதனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் மறுஉறுதி செய்யப்பட வேண்டும். இவை தான் மரபுரீதியான அறிவியலால் நிரூபிக்கப்படாத அசாதரண கூற்றுகளை நிறுவுவதற்கு அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளும் வழி. ஹோமியோபதிக்கு அப்படிப்பட்ட நிரூபணம் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது உண்மை.

இது குறித்து ஹோமியோபதி மருத்துவர்களிடம் விவாதித்தால் “ஹோமியோபதியை ஆய்வு செய்யும் உங்கள் கண் அல்லது அறிவியல் கருவி தவறானது” என்கிறார்கள். அதாவது வேறு ஒன்றை ஆய்வு செய்யும் முறையால் தங்களை ஆய்வு செய்வது நியாயமா என்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது? அறிவியல் ஆய்வைப் பொறுத்தவரை ஆள் பார்த்து செய்யப்படும் ஒன்றல்ல. அதன் அடிப்படை விதிகள் அனைத்திற்கும் பொதுவானவை. தண்ணீரில் மருந்தில்லை என அறிவியல் நிரூபித்துவிட்டது. மாறாக இருக்கிறது என்று நிரூபியுங்கள் கேட்டால் ஹோமியோபதிகள் இப்படி குதர்க்கமாக வாதிடுகிறார்கள்.

தங்களது கடவுளின் இருத்தலை நிரூபிக்கும் அளவுக்கு அறிவியல் இன்னும் வளரவில்லை என்று இதையே தான் மதவாதிகள் வேறு வார்த்தைகளில் சொல்லி வருகின்றனர். ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்தவ முறைகள் பலரிடமும் இப்படிப்பட்ட Cult போன்ற கடுங்கோட்பாட்டு மதப்பிரிவாகவே நம்பப்படுகிறது.

இந்தப் பிரச்சினையை இப்படியும் பார்க்கலாம். ஒரு விசயத்தை கோட்பாட்டால் புரிந்து கொள்வதும், அனுபவத்தால் புரிந்து கொள்வதும் ஒன்றல்ல. ஹோமியோ உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகள் பல முன்னோடிகளின் அனுபவத்தால் உருவாக்கப்பட்டவைதான். இது ஆரம்பகால அலோபதிக்கும் பொருந்தும். பிறகு அறிவியல் வளர வளர அலோபதி மருத்துவமும் சேர்ந்து வளர்ந்தது. மற்ற முறைகள் அப்படி அறிவியலுக்குள் செல்லவில்லை.

ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்கு பஞ்சர் போன்ற மருத்துவ முறைகள் அறிவியல் ரீதியாக புடம்போடப்படும் போதுதான் அவற்றின் பயன்கள் பெருமளவு அதிகரிக்கும். இன்று பல நாடுகள், மாற்று மருத்துவ முறைகளை அரசு ரீதியாகவே அங்கீகரிப்பதில்லை. இந்தியாவிலும் மாற்று மருத்துவ முறைகளை அங்கீகரிக்கக் கூடாது என்று சில அலோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அலோபதியினர் கூறுவது போல இதை இன்னொரு எதிர்த்தரப்பிற்கு கொண்டு போவதால் பாரம்பரிய அனுபவத்தின் நேர்மறை பலன்களை மறுப்பதாகிவிடும். மாறாக அதை அறிவியல் ரீதியாக வளர்ப்பதே சரியானது. கீழா நெல்லி இன்று அலோபதி மருத்துவர்களாலேயே பரிந்துரைக்கப்படுகிறது.

எனினும் ஹோமியோபதி மருந்துத் துறையினர் அறிவியல் சோதனையில் தேர்வு பெறுவது என்பது ஏதோ மற்றவர்கள் அங்கீகாரம் கொடுக்கும் பிரச்சினையல்ல. சரியாகச் சொன்னால் அறிவியலின் கேள்விகளுக்கு ஹோமியோபதி விடையளிக்கும் போது மட்டுமே ஹோமியோபதியை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

-நாசர்
_____________
மேலும் படிக்க:

இந்த மருத்துவ – அறிவியல் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்! உங்கள் ஆதரவு எங்களது முயற்சிகளுக்கு தோள் கொடுக்கும். நன்றி!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி