டப்பாடியும் தினகரனும் ஒருவரையொருவர் 420 எனக் குற்றஞ்சுமத்திக் கொண்டனர். சமீபத்தில் அமைச்சர் காமராஜ் மீது இ.த.ச. பிரிவு 420 -இல் மோசடிக் குற்றத்துக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் 420 என்பதற்கு விளக்கம் தேவையில்லை.

தேரா சச்சா சவுதாவின் புனித பூமியை வணங்குவதாக 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார் மோடி. அவ்வாறு பேசியபோதும், சுவச் பாரத் இயக்கத்தை பாபா வெகு சிறப்பாகக் கொண்டு செல்கிறாரென்று டுவிட்டரில் பாராட்டியபோதும், ராம் ரகீம் ஒரு வல்லுறவுக் குற்றவாளி, கொலைகாரன் என்பது மோடிக்குத் தெரியும். அந்தப் பாராட்டு என்பது ராம் ரகீமுடைய பக்தர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்கான ஜூம்லா – மோசடி.

சுவச் பாரத் விளம்பரத்துக்காகத் துடைப்பம் ஏந்திய போதும், தனது திரைப்படங்களில் இந்து தேசிய அரசியலைப் பிரச்சாரம் செய்தபோதும், அவையெல்லாம் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காக, தான் அரங்கேற்றும் ஏமாற்று வேலைகள் என்பது ராம் ரகீமுக்கும் தெரியும்.

இருப்பினும், இருவருக்குமிடையில் வேறுபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ராம் ரகீம் சிங் கைது செய்யப்பட்டவுடன் அரியானாவில் அரங்கேறிய வன்முறை, அப்படியே 2002 குஜராத் வன்முறையின் கொடூரக் காட்சிகளை ஒத்திருந்தது. இருப்பினும் சிர்சாவில் மனிதர்கள் கொளுத்தப்படவில்லை. குருநாதர்தான் வன்புணர்வுக் குற்றமிழைத்தாரேயன்றி, குஜராத்தைப் போல குருநாதரின் பரிவாரங்கள் அத்தகைய குற்றத்தில் ஈடுபடவில்லை.

மற்றபடி 2002 -இல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட ராம் ரகீம், அந்த வழக்கை முடக்குவதற்கும் தண்டனையிலிருந்து தப்புவதற்கும், ஆன முயற்சிகள் அனைத்தையும் செய்து பார்த்தும் வெற்றி பெற முடியவில்லை. அதே 2002 -இல் குஜராத் இனப்படுகொலைக்காகக் குற்றம் சாட்டப்பட்ட மோடியோ, தனக்கெதிரான வழக்குகளை முறியடிப்பதில் வெற்றி பெற்றுவிட்டார். இவை நாம் அலட்சியப்படுத்த முடியாத வேறுபாடுகள்.

ராம் ரகீமின் சாதிஒழிப்பு நடவடிக்கையும் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் ஏறத்தாழ ஒரேவிதமானவை. ஆதிக்க சாதியினரின் சாதிப்பட்டங்களை அகற்றுவதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்ட சாதியினருடைய சாதிப் பட்டங்களை அகற்றச் சொல்லி, அதற்குப் பதிலாக இன்சான் (மனிதன்) என்ற புதுப் பட்டத்தை வழங்கி, சாதி ஆதிக்கம் ஒழிந்துவிட்டதைப் போன்றதொரு மயக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்தினான் ராம் ரகீம்.

பணமுதலைகளின் கருப்புப் பணத்தைப் பறிப்பதற்குப் பதிலாக, மக்களின் வெள்ளைப்பணத்தையும் செல்லாததாக்கி, பண மதிப்பழிப்பு நடவடிக்கை மூலமாக கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதைப் போன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தினார் மோடி. ராம் ரகீமின் சாதியழிப்பு நடவடிக்கை அம்மக்களுக்குப்  புதியத் துன்பத்தை தோற்றுவிக்கவில்லை என்பது முக்கியமான வேறுபாடு.

மோடி உருவாக்க விரும்பும் இந்து ராஷ்டிரத்தின் ஸ்மார்ட் சிட்டியும் புல்லட் ரயிலும், தேரா சச்சா சவுதா வளாகத்துக்குள் ராம் ரகீம் உருவாக்கியிருக்கும் ஈபில் கோபுரம், கிரெம்ளின் மாளிகை போன்றவற்றின் மட்டரகமான நகல்களைப் போலவே காட்சியளிக்கின்றன. ராம் ரகீமின் கோமாளி உடைகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது இந்த மனிதனைக் கடவுளின் தூதன் என்று எப்படித்தான் மக்கள் நம்பினார்களோ என்ற வியப்பு ஏற்படுகிறது. சோப்புக்குமிழிகளைப் போல பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே அன்றாடம் ஊதிவிடும் ஒரு மனிதனை,  பிரதமர் என்று ஏற்கக்கூடிய நாட்டில், ராம்ரகீம் கடவுளாவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது.

கடவுளின் அவதாரம் என்று பக்தர்களை நம்பச் செய்வதற்கு மட்டுமின்றி, தனக்குத்தானே அத்தகைய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கணினி வரை கலைத் திரைப்படங்கள் மூலம், தனக்கு ஒரு பேராற்றல் மிக்க பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு, அந்த மாயக்காட்சியில் தானே மயங்கினான் ராம் ரகீம். சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அழுது புரண்ட தருணத்தில்தான் அவனுக்கும் அவனது பக்தர்களும் அவதார மயக்கம் தெளிந்திருக்கும். அத்தகைய தெளிவு ஏற்படுத்தும் தருணம் இன்னமும் மோடிக்கு வாய்க்கவில்லை.

– தொரட்டி

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி