privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்இந்த அரசு இனியும் நீடிக்கலாமா ? திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

இந்த அரசு இனியும் நீடிக்கலாமா ? திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

-

“புதிய கட்டணத்தை கொடுக்க மறுப்போம். பழைய கட்டணத்தையே கொடுப்போம்”  என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகமெங்கும் பிரச்சாரமும் ஆா்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது.  திருச்சியில் 31.1.2018 மாலை 6.00 மணி அளவில் பறை இசையுடன் கண்டன ஆா்ப்பாட்டம் தொடங்கியது.

ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் பேசுகையில் , “கட்டண உயர்வை கண்டித்து அனைத்து தரப்பு மக்களும் போராடுகிறார்கள். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து மக்கள் அதிகாரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்திய பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அதை தடுக்கிறது போலீசு. ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூட அனுமதிப்பதில்லை. இதை வேற சுதந்திர நாடுன்னு சொல்றாங்க. போராடுற மாணவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. விவசாய மாணவர்கள். மீனவர்கள், தொழிலாளர்கள் யாரையும் பாதுகாக்க துப்பில்லாத ஆளத்தகுதியிழந்த இந்த அரசு கட்டமைப்பை எதிர்த்து போராட வேண்டும். மதுரை விவசாயிகள் போராட்டம், சாராய கடைக்கு எதிராக போராட்டம் போன்ற அதிகாரத்தை செலுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா பேசுகையில், “போக்குவரத்து நஷ்டத்துக்கு காரணம் யாரு? அமைச்சரும் அதிகாரிகளும் தான? அவங்கள வைச்சி நஷ்டத்த ஈடுகட்ட முடியாதா? 5 லட்சம் பேர் பேருந்து பயணத்தை தவிர்த்து உள்ளனர். அனைவரும் ரயில் நோக்கி ஓடுகின்றனர். நாம் ஏன் ஓட வேண்டும்? எதிர்த்து கேட்க வேண்டும். பெட்ரோல், டீசல் பராமரிப்பு விலை ஏறுகிறது என்கிறார்கள். டீசல் வரியை ஏன் குறைக்க முடியாதா? அமைச்சரின் சொத்த எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டியது தானே” என்று கூறினார்.

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி திருநாவுக்கரசு பேசுகையில், “33 ஆண்டுகளாக நான் இந்த வேலையில இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். ஒரு நாள் லீவ் வேணும்னா சரக்கு, காசு லஞ்சமா கொடுத்தா தான்  கிடைக்கும். ஆப்சண்ட் போட்டா 6 மாசத்துக்கு சம்பள உயர்வு கிடையாது. கும்பகோணம் மேனேஜர் ஒரு கோடி கட்டி வேலைக்கு வர்றான். அப்போ அவன் ஒரு கோடிக்கு மேல சம்பாதிக்க தான் நினைப்பான். எனக்கு இன்னும் நிலுவை இருக்கு. ஆனா பேப்பர்ல நிலுவையை எடப்பாடி கொடுத்துட்டாருன்னு சொல்றாங்க. ஆர்.டி.ஐ போட்டு இவனுங்க பண்ற பித்தாலாட்டத்த எடுத்து வச்சிருக்கேன். போக்குவரத்து துறை நஷ்டத்துக்கு இவங்க அமைச்சர் தான் காரணம். எனவே போராட்டம் தொடர வேண்டும்” என்றார்

குடும்பத் தலைவி மேரி பேசுகையில், ”இது என்ன அரசு? 200 ரூபாய்க்கு விக்குது டிக்கெட். மோடி அரசு வந்தா காசு செல்லாதுன்னு அவன் ஒரு வகையில கஷ்டப்படுத்துறான். ரேசன் கடைய வேற மூடுறாங்க. குடிகாரங்க ஓட்டுப்போட்டு குடிகார ஆட்சி,கொள்ளை ஆட்சி நடக்குது. குடிச்சிப்புட்டு வறாங்க வயசு புள்ளைங்க ரோட்டுல போக முடியல. மக்கள சித்ரவதை பண்றானுங்க. நீ ஆட்சிய விட்டு போ. மாணவர்களும், மாணவிகளும் ஆளட்டும். ஜல்லிக்கட்டுல போராடுனாங்க அவ்வளவு பேரு. அப்பவே நீ கம்மென்று இருந்த. மாட்டுக்கறி திங்க்க் கூடாதுன்னு சொல்றான். இவன் யாரு மாட்டுக்கறி திங்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு. நான் சாப்பிடுறத நீ ஏன்டா எட்டிப் பாக்குற. ரொம்ப வேதனபடுத்துறாங்க. வீட்டு வேலைக்கு, கட்டிட வேலைக்கு காச ஏத்துறாங்களா? ஓபிஎஸ்-ம், ஏபிஎஸ்-ம் மம்பட்டி புடிச்சு வேலை பார்க்க சொல்லனும். அவன் பொண்டாட்டி, புள்ளைங்கள வேலை பாக்க சொல்லனும். அப்பதான் கஷ்டம்னா என்னன்னு தெரியும்” என்றார்.

கல்லூரி மாணவர் சுரேஷ், “நான் பாதிக்கப்பட்டேன். அதனால எங்க காலேஜ்ல 6 நாள் போராடினோம். கடைசி நாள் எடப்பாடிக்கு பாடை கட்டி போராடினோம். அரசு கல்லூரியில பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் தான் படிக்கிறாங்க. பொண்ணுங்க வீட்ல, நீ படிக்க வேணாம். நீயும் வேலைக்கு வா, இல்லன்னா கல்யாணம் பண்ணி வச்சிருவோம்ன்னு சொல்றாங்க. அரசியல்வாதி, அமைச்சர் எல்லாம் நம்மளோட வரிப்பணத்துல நல்லா தான் இருக்கான். அப்புறம் சம்பள உயர்வுன்னு வேற ஏத்துறான். நான் ஆஸ்டல்ல இருக்கேன். ஊருக்கு போக 200, 300 ரூபா ஆகுது. எங்க அப்பா, அம்மாவே வூட்டுக்கு வர வேணாம்ன்னு சொல்றாங்க “என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

லால்குடி வட்டத்தை சேர்ந்த விவசாயி மணியரசன், “எங்க ஊருல குடிமராமத்து பணிய அரசு செய்யல. மக்கள் அதிகார தோழர்களும், நாங்களும் சேந்து தான் செஞ்சோம். குடிமராமத்து பணிக்கு 100 கோடி அரசு ஒதுக்கி அதை அவனே சாப்பிட்டுட்டான். கிட்டத்தட்ட 5000 ஏக்கர் விவசாயம் நடக்குன்னா அதுக்கு காரணம் மக்கள் அதிகாரம் தான். அன்னைக்கு அவங்க தூர் வார்னது தான் காரணம். யார் வேணா வாங்க காட்டுறோம். இதையும், மக்கள் அதிகாரத்தால தான் மாத்த முடியும் ” என்றார்.

மேலும், தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ம.ப.சின்னதுரை, பெ.தி.க மாவட்ட செயலர் கமலக்கண்ணன் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

மக்கள் அதிகார மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், “ஸ்ரீரங்கம் கோவில் கட்டும் போது திருமங்கை ஆழ்வார்ன்னு ஒரு திருடன் இருந்தது போல இன்று அரசு திருட்டுத்தனம் செய்கிறது, கிரிமினல் அட்சி தான் நடக்கிறது. சட்டம், நீதிமன்றம், போலீசு எல்லாம் மக்களுக்கானது அல்ல. நீதித்துறை 60% மக்களுக்கு நீதி வழங்குவதில்லை. 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதித்துறைக்கு எதிராக பேசுகிறார்கள். தமிழ்நாடு கொந்தளிப்பான நிலைமையில் உள்ளது. போராடுகிற மாணவர்களை கைது செய்து உள்ளே வைக்கின்றனர். 7 ஆண்டுக்கும் குறைவாக தண்டிக்கக் கூடிய குற்றவழக்குகளுக்கு கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் சொல்லியும் தொடர்ந்து கைது செய்கிறது. இது தான் சட்டத்தின் ஆட்சி. சம்பளம், கிராஜுவிட்டி, சொசைட்டி, இன்சுரன்ஸ் எல்லா பணத்தையும் ஏப்பம் விட்டானுங்க. தனியார் பேருந்து இலாபமாக ஓடும் போது அரசு போக்குவரத்தை இலாபமாக நடத்த முடியாது? 12 மணி நேரத்திற்கு மேல் உழைப்பது கண்டிரக்டர், டிரைவர்,மெக்கானிக். அவர்களுக்கு சம்பளம் குறைவு தான் ஆனா, ஒரு டெப்போவில் இருக்கிற மேனஜருக்கு ஆரம்ப சம்பளமே ஒரு லட்ச ரூபாய். அவனுக்கு கீழே ஏகப்பட்ட அதிகாரிகள். அவர்களுக்கும்  இதே போல சம்பளம். போக்குவரத்துத் துறையின் பணத்தை இவர்கள் தான் சாப்பிடுகிறார்கள். ஏராளமான தனியார் பேருந்து எம்.எல்.ஏ, அமைச்சர்களின் பினாமி பெயரில் தான் ஓடுகிறது. எதற்கும் பெர்மிட் வாங்குவது இல்லை. அதனால், அரசுக்கு ஏகப்பட்ட வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த அமைச்சரும் அதிகாரியும் தான் போக்குவரத்து துறை நஷ்டத்திற்கு காரணம். எனவே, அவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும்”  என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் 250 பேர் வரை கலந்து கொண்டனர். 200 பேர் வரை சுற்றி நின்று கவனித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பெண்கள் இது மட்டும் போதாது சாலை மறியல் செய்ய வேண்டும் எனக் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் ‘பாதுகாப்பு’க்காக நிறுத்தப்பட்டிருந்த கீழ்நிலை காவலர்கள் நாங்களும் பஸ்ல தான் வாறோம். எங்களுக்கும் கஷ்டமாத்தான் இருக்கு என்றனர்.

தனது ஏவலர்களைக் கூட திருப்தியாக வைத்துக் கொள்ள முடியாத இந்த அரசு இனியும் நீடிக்கலாமா?

தகவல்: மக்கள் அதிகாரம், திருச்சி.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க