காங்கிரசு கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழுமா, தேறுமா என்பதற்கான அனல் பறக்கும் வாதம் பாராளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. முடிவு செவ்வாய்க்கிழமை தெரிந்து விடும்.இதில் யார் வேண்டுமானாலும் தோற்கலாம் என்றாலும் தோற்பவர்கள் எவரும் அழப்போவதில்லை. ஏனெனில் நடப்பது மக்களுக்கான ஜனநாயக அரசியல் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இன்றைய அரசியல் கட்சிகளை நேரடியாக வழிநடத்துகின்றன.அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தினால் நாடு அமெரிக்காவுக்கு அடிமைப்படுவது குறித்த கவலை எந்த அரசியல் பேரத்திலும் வெளிப்படவில்லை. கோடிகளும், மந்திரி பதவிகளும், அடுத்த தேர்தலில் தொகுதி கிடைக்குமா என்பதும், கிடைத்தாலும் வெல்லமுடியுமா என்பதும் முதலான பல நலன்கள் நாட்டின் நலன் என்ற பெயரில் பேசப்படுகின்றன. இதில் காங்கிரசு, பா.ஜ.க போன்ற பெரிய பெருச்சாளிகளை விடுங்கள், தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, முலாயம், லல்லு, சிபுசோரன், தேவகவுடா முதலான சிறிய பெருச்சாளிகளை எடுத்துக் கொள்வோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவோம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சிகள் இன்றும் தங்களைச் சமூகநீதிக் கட்சிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
கழுதை சிறுத்து கட்டெறும்பானதைப் போல சமூகநீதி மருவி குடும்ப நீதியாக மாறிவிட்டது. மக்களுக்கு வரவேண்டிய நீதி கோடிசுவர நிதியாய் குடும்பத்தினரிடம் கொட்டுகின்றன. இந்தக் கட்சிகளெல்லாம் அதன் தலைவர்களது குடும்ப உறுப்பினர்களால்தான் நிருவகிக்கப்படுகின்றன. தி.மு.க மகளீர் மாநாட்டில் அழகிரியின் மகள் கயல்விழி உரையாற்றுகிறார், ராமதாசின் மகன் மத்திய அமைச்சர், அன்புமணியின் மனைவி சுற்றுச் சூழல் அமைப்பை நடத்துகின்றார், கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் மேடையில் அமர்ந்து கட்சி ஊர்வலத்தைப் பார்வையிடுகிறார், முலாயம் சிங்கின் மகன் அபிலேஷ் தேர்தலில் போட்டியிடுவதோடு லக்னோ முழுவதும் பண்ணை வீடுகளை வாங்கிக் குவித்து வருகிறார். தேவகவுடாவின் மகன் முதலமைச்சாராகவே பணிபுரிந்தார். இந்தப் பட்டியலில் கனிமொழியின் மகன் ஆதித்யன் என்னவாக வரப்போகின்றான் என்பது தெரியவில்லை. இந்த சமூகநீதிக் கட்சிகளின் யோக்கியதைக்கு லாலுவின் மனைவி ராப்ரி தேவியின் கதை ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு!
ராப்ரி தேவி, லாலுவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனும் வாழ்க்கை வரலாற்று நூலை பீகார் பத்திரிகையாளர் மனோஜ் சவுராசியா எழுதியிருக்கிறார்.இந்த நூலை அறிமுகம் செய்து தெகல்கா வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையில் பல சுவாரசியமான சங்கதிகள் சமூகநீதியை வழிமொழிந்து சிரித்து வழிகின்றன.
1973ஆம் ஆண்டு லாலுவைத் திருமணம் செய்தபோது ராப்ரிதேவிக்கு வயது 14. வேலையற்று சுற்றிக்கொண்டிருந்த லாலுவுக்கு சீதனமாக 5000 ரூபாயும் சில பசுமாடுகளும் ராப்ரிதேவியால் கொண்டுவரப்பட்டன. ஐந்தாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட ராப்ரிதேவிக்கு பிறகு எழுதுவதும் படிப்பதும் முற்றிலும் மறந்துவிட்டனவாம். அதாவது அவர் ஒரு எழுத்தறிவிலி. 80களில் லாலு சமூகநீதித் தலைவராகப் பரிணமித்தபோது ராப்ரிதேவி பெரிய குடும்ப மனுஷியாக மாறியிருந்தார். 7 பெண் குழந்தைகளையும், 2 ஆண் குழந்தைகளையும் பெற்று வளர்த்தார்.
குழந்தைகள், குடும்பம் என்பதைத்தாண்டி அவருக்கு அரசியலில் அனா, ஆவன்னா … கூடத்தெரியாது. லாலுவுடன் ராப்ரிதேவி அரசியல் பேசிய ஒரே தருணம் 95ஆம் ஆண்டு தனது சகோதரன் சாது யாதவுக்கு எம்.எல்.ஏ சீட்டு கேட்டு சிபாரிசு செய்ததுதான். அதை லாலு மறுத்து விட்டதால் ராப்ரி கடுங்கோபம் அடைந்தாராம். அதே சாது பின்னாளில் எம்.பி ஆனது வேறுகதை. இதைத் தவிர அரசியலுக்கும் ராப்ரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்தச்சூழ்நிலையில் 1997ஆம் ஆண்டு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலு சி.பி.ஐ விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்குச் செல்லவேண்டி வருகிறது. விடிந்தால் சிறை எனும் நெருக்கடியில் ராஷ்ட்ரீய ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் லாலுவின் தலைமையில் நடக்கிறது. அடுத்த முதலமைச்சராக யாரைத் தெரிவு செய்வது என்று லாலுவுக்கு குழப்பம். அப்போது 20 சட்டமன்ற உறுப்பினர்கள் அருகில் வந்து ராப்ரியின் பெயரை உச்சரித்தனர். தெளிந்த லாலு யுரேகா என்று கத்தியவாறு மகிழ்ச்சியடைந்தார். பிறகென்ன? அடுத்த நாள் லாலு சிறைக்குச் செல்ல ராப்ரி முதலமைச்சராக பதவியேற்றார்.
வீட்டுச் சமையலறையிலிருந்து முதலமைச்சர் அறைக்கு வந்த ராப்ரி அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சில மாதங்கள் பிடித்தது. பலநாட்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இந்த அப்பாவிப் பெண்மணிக்கு எதுவும் பிடிபடவில்லை. யாரிடம் என்ன பேசுவது, கோப்பில் என்ன இருக்கின்றது என்றெல்லாம் தெரியாமல் தவித்து சோர்ந்து போயிருக்கிறார். அப்புறம் அதிகாரிகளின் உதவியால் என்ன செய்யவேண்டும் என்று சிறிதளவு தெரிந்து கொண்டார். சில அதிகாரிகள் அவருக்கு இந்தி வகுப்பெடுத்து குறைந்த பட்சம் கோப்பில் கையெழுத்திடவும், பெரிய எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கவும் கற்றுத் தந்தனர். ஏதாவது கூட்டங்களில் பேசவேண்டுமென்றால் உரை தயாரிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்படுவார்களாம். எளிமையாக மனப்பாடம் செய்து ராப்ரி தேவியைப் பேசவைப்பதற்குத்தான் அந்தச் சிரமம். சுதந்திர தினத்தில் கொடியேற்றி ராப்ரி பத்து நிமிடம் பேசுவதற்கு பலநாள் ஒத்திகை நடக்குமாம்.
ஒருமுறை சுதந்திரதினத்திற்காக தூர்தர்ஷன் அணியினர் ராப்ரி தேவியை 20 நொடிகளில் ஒரு வாழ்த்து செய்தியை பேசவைப்பதற்கு ஒரு மணிநேரம் போராடினார்களாம். அதிலும் இறையாண்மை, சுதந்திரம் என்ற இரு வார்த்தைகளையும் அவரால் உச்சரிக்கவே முடியவில்லையாம். இத்தகைய நிருவாகச் சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் பலமுறை அழுது, சிலமுறை கோபமடைந்து திடீரென்று வீட்டிற்கும் சென்றுவிடுவாராம்.ஒரு முறை எதிர்க்கட்சித் தலைவர் சுசில்மோடி இவரை ராஜினாமா செய்யவேண்டும் என்று சட்டசபையில் பேசியபோது செருப்பால் அடிப்பேன் என்று ராப்ரிதேவி கத்தினாராம். அரசியலிலோ, நிருவாகத்திலோ தனக்கு பிடிக்காததை யாராவது கூறினால் ராப்ரிதேவி விவாதிக்க மாட்டாராம். மாறாகத் தனது கைவளையல்களைக் கழற்றி போட்டுக்கொள்ளுமாறு கிண்டல் செய்து, சாபமுமிடுவாராம்.
பிறகு சிறையில் இருக்கும் லாலு என்னென்ன செய்யவேண்டும்- செய்யக்கூடாது என்பதையெல்லாம் ஒவ்வொரு நாளும் ராப்ரிக்கு அதிகாரிகள் மூலம் உத்தரவு அனுப்புவாராம். இப்படித்தான் ஏழை மாநிலமான பீகாரை ஒரு அப்பாவிப் பெண்மணி முதலமைச்சராய் ஆண்டு வந்தார். இப்போது ராப்ரி எவ்வளவோ மாறிவிட்டார். அவரது திடீர் அரசியல் பிரவேசமும் முடிந்து விடவில்லை. கணவர் மத்திய அமைச்சராக டெல்லியில் பணியாற்றும்போது மனைவி மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகக் கடமையை ஆற்றுகின்றார்.
இதுதான் சமூகநீதிக் கட்சிகளின் யோக்கியதை. மக்களை எவ்வளவு அடிமுட்டாள்களாகக் கருதினால் லாலு இந்த நடவடிக்கையின் துணிந்து இறங்கியிருக்க முடியும்? ஐந்துக்கும் பத்துக்கும் வழியில்லாமல் இந்தியா முழுவதும் பிழைக்கச் செல்லும் பீகாரின் ஏழை மக்களுக்கு சமூகநீதித் தலைவர் லாலு காட்டிய மரியாதை இதுதான். நடிகை ஜெயலலிதாவை தீடிரென்று அரசியல் வாரிசாக இறக்கிய பாசிச எம்.ஜி.யார் நமக்கு காட்டிய மரியாதையும் அதேதான். ஆனாலும் நம்மைப் பொறுத்தவரை ஜெயலலிதாவை விட ராப்ரி தேவி ஒரு நல்ல பெண்மணி !
___________________________________________
Once again a fantastic piece…can’t wait for mornings to see your Articles.
Why don’t you translate them to English too…Your issue is national, wouldn’t it be better if its circulated widely..
🙂
இந்தியா மிகப்பெரிய சனநாயக நாடாக இருக்கலாம். ஆனால் இங்கு சனநாயகம் சீரழிக்கப்பட்டு கொன்டிருக்கிறது. நம் தலைமுறையில் இதையெல்லாம் மாற்ற முடியுமா என்ற ஆதங்கத்தோடு வாழும் பல்லட்சக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். உங்கள் பதிவிற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
நட்புடன்
நித்தில்
I was expecting your comments on UPA Horses 275 & NDA-LEFT Mules 256 and Sensex 818 points.
keep going. i look forward to more.
லாலுவின் மனைவி ராப்ரிதேவி ஆபீசில் அழுத கதை! | வினவு!…
ராப்ரி தேவி, லாலுவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனும் வாழ்க்கை வரலாற்று நூலை பீகார் பத்திரிகையாளர் மனோஜ் சவுராசியா எழுதியிருக்கிறார்.இந்த நூலை அறிமுகம் செய்து தெகல்கா வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையில் பல சுவாரசியமான சங்கதிகள் சமூகநீதியை வழிமொழிந்து சிரித்து வழி…
ஜனனாயகதில்நாம் பிரதிநிதிகலை தெர்ந்து எடுப்பதில் எஙொ தவரு இருப்பது புலபடுகிரதல்லவா இதனை கலைய வழிகலை க்ன்டுபிடிக்க வென்டும். பிரதிநிதியை/னிராகரிக்கும் உரிமை மக்கலுக்கு தருதல் வென்டும் .