2020ஆம் ஆண்டிற்குள் இராணுவத்திலிருக்கும் துருப்புக்களில் 30 சதவீதம் பேரை நீக்கிவிட்டு எந்திர ரோபோக்களை நியமிப்பதென அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் திட்டமிட்டிருக்கிறதாம். ஏற்கனவே ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா விமானங்கள், கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் எந்திரங்களையெல்லாம் பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய துணைச்செயல்களைத் தாண்டி இனிவரும் ரோபோக்கள் போர்க்களத்தில் இறங்கி சண்டையே போடுமாம்! வீடியோ விளையாட்டுக்களிலும், அறிவியல் புனைகதைத் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகியிருக்கும் இந்தக் கற்பனை ரோபோக்கள் உண்மையிலேயே வரப்போகிறார்கள் என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். எந்தப் பயனுமில்லாத இந்த ஆச்சரியத்தை ஒத்திவைத்து விட்டு இதன் அரசியல் பரிமாணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
இவற்றினை ரோபோக்கள் என்பதைவிட தானியங்கிக் கட்டளைகளை நிறைவேற்றும் எந்திரங்கள் என்கிறார்கள் இதன் வடிவமைப்பாளர்கள். கவச வாகனங்களை ஓட்டுவதும், வெடிகுண்டுகளைச் செயலிழக்கவைப்பதும், முன்களத் தாக்குதலில் இறங்கி போரிடுவதுமென இதன் செயல்பாடுகள் நீள்கின்றன. இது ஒருபுறமிருக்க இந்த ரோபோக்களை இராணுவத்தில் சேர்ப்பதால் வரும் அறவியல் பிரச்சினைகளைக் குறித்து மட்டும் அமெரிக்க அறிவாளிகள் கவலைப்படுகிறார்கள். அந்த அறத்தின் கவலை என்ன?
எந்திரம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் வண்ணம் செயல்படப்போகிறது. ஆனாலும் எதிரில் வருபவர் அப்பாவியா, முதியவரா, பெண்களா, குழந்தைகளா, ஆடு-மாடா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோரையும் சுட்டுத்தள்ளினால் என்ன செய்வது? இதையெல்லாம் புரிந்து கொள்ளும் தன்னறிவுடன் அவற்றை வடிவமைக்க முடியாதே? மாட்ரிக்ஸ் திரைப்படம் போல எந்திரங்கள் சுயமாக சிந்தித்து உலகை ஆளும் கற்பனையெல்லாம் நிஜத்தில் சாத்தியமில்லை. ஒரு மனிதன் எந்த அளவுக்கு புத்திசாலித்தனமாக போரிடுகிறானோ அந்த அளவுக்கு ரோபோக்களை வடிவமைப்பது சாத்தியமென்றாலும் அதன் இயக்கு விசை மனிதனிடமே இருக்குமென்பதால் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள் அதன் பொறியியலாளர்கள். சண்டையிடும் ரோபோக்களைத் தூரத்தில் ஒரு கணினித் திரையில் பார்த்தவாறு பொத்தானை அழுத்தி இயக்கப்போவது மனிதனென்பதால் இது பாதுகாப்பான போர்முறைதான், வில்லங்கம் ஏதுமில்லை என்றும் கூறுகின்றனர்.
மற்றபடி இந்த எந்திரமயமாக்கத்தால் செய்யப்படும் ஆட்குறைப்பால் பலர் வேலை இழப்பார்களே என்பது கூட அவர்களது கவலையில்லை. அந்த வசதியான கவலையாளர்கள் எவரும் ஈராக்கில் போய் சண்டையிடப் போவதில்லை. இராணுவத்தில் சேரும் பெரும்பான்மையினரில் வாழவழியற்ற கருப்பின மக்கள்தான் அதிகம். இருப்பினும் இது குறித்து நாமும் கவலைப்படத் தேவையில்லை. ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தில் மனிதன் இருந்தாலென்ன, எந்திரங்கள் இருந்தாலென்ன?
எந்திரப் பொம்மைகள் அப்பாவிகளைச் சுட்டுக்கொல்வது குறித்து அவர்கள் கவலைப்படுவது ஆடுகளுக்காக ஓநாய்கள் அழுவது போலத்தான். இப்போது பல நாடுகளிலிருக்கும் உயிருள்ள வீர்ர்களைக் கொண்ட அமெரிக்க இராணுவம் அப்பாவிகளைச் சுடாமலா இருக்கிறது? ஜப்பானில் அணுகுண்டு போட்டு இரண்டு நகர மக்களைக் கூண்டோடு அழித்தது எந்திரமா என்ன? வியட்நாமில் முழுநாட்டையே ஏஜெண்ட் ஆரஞ்சு வெடிமருந்தினால் அழித்தார்களே, அது யாருடைய வேலை? கிராமம் கிராமமாக வியட்நாமியப் பெண்களைப் பாலியல் வன்முறை செய்து, ஆண்களைச் சித்திரவதை செய்து கொன்றதையெல்லாம் வரலாறு குறித்திருக்கிறது.
இவையெல்லாம் நேற்று நடந்த கதையென்றால் ஆப்கானிலும், ஈராக்கிலும் என்ன நடக்கிறது? அப்பாவி மக்களைக் கொன்ற கணக்கு சில இலட்சங்களைத் தாண்டும். அமெரிக்க ஏவுகணைகளும், கிளஸ்டர் குண்டுகளும் மக்கள் குடியிருப்புகளைத் தாக்கி அழிக்கும் ஒவ்வொரு முறையும், இராணுவத் தளபதிகள் தெரியாமல் நடந்து விட்டதென போகிறபோக்கில் சப்புக்கொட்டினர். ஒரு வேளை ரோபோக்கள் வந்துவிட்டால் இந்த அட்டூழியங்கள் குறையத்தானே செய்யும்?
அபுகிரைபில் செய்த வக்கிரங்களை படம் பிடித்து மகிழ்ந்தது போல ரோபோக்கள் நிச்சயம் செய்யாது எனலாம். குவான்டனாமோ சிறையிலும், டீகோகார்சியா தீவிலும், எண்ணற்ற போர்க்கப்பல்களிலும், எல்லையற்ற சித்திரவதையால் துன்பப்படும் ஆயிரக்கணக்கான கைதிகளையெல்லாம் ரோபோக்கள் துன்புறுத்தப் போவதில்லை. ஆனால் ரோபோக்களையும் அப்படி வடிவமைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.
விண்வெளி ஆய்வுகளுக்கு நிகரான செலவு பிடிக்கும் இந்த ரோபோக்களை வடிவமைக்கும் திட்டத்தில் அமெரிக்கா இறங்கியதற்கு சில காரணங்கள் இருக்கலாம். என்னதான் அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் போரென்று வரும்போது அமெரிக்காவும் தனது வீர்ர்களைப் பலிகொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. வியட்நாமிலிருந்தும், ஈராக்கிலிருந்தும் வீர்ர்களின் சவப்பெட்டிகள் நூற்றுக்கணக்கில் வந்திறங்கியது, அமெரிக்க மக்களிடம் போரெதிர்ப்பு உணர்வைத் தூண்டியது உண்மை. வியட்நாமிலிருந்து அமெரிக்கா தோல்வியுற்று பின்வாங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த உள்நாட்டு எதிர்ப்பை தவிர்க்க வேண்டுமெனில் வீர்ர்களின் இறப்புக் கணக்கை குறைத்துக் காண்பிப்பது அவசியம். அதற்கு ரோபோக்கள் உதவுமென்பது ஒரு எதிர்பார்ப்பு. ரோபோக்கள் அழிக்கப் பட்டால் யாரும் கண்ணீர் விடமாட்டார்கள் என்பதோடு சென்டிமென்ட் அரசியலும் எழாது.
தற்போதே ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் அறிவியல் தொழில் நுட்ப உதவியினால் நேரடி கள மோதலின்றி பாதுகாப்பான போரைத்தான் நடத்துகிறது. போராளிகள் நெருங்க முடியாத அதி உயர் குண்டு வீசும் விமானங்கள் மூலமும், பாரசீக வளைகுடாவில் பாதுகாப்பான தொலைவில் இருக்கும் போர்க்கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளும், ஈராக்கை சின்னா பின்னாமாக்கிய பிறகே அமெரிக்க வீரர்கள் எதிர்ப்பதற்கென்று ஆளில்லாமல் ஈராக்கில் இறங்கினார்கள். தற்போது வட்டியும் முதலுமாய்ச் சேர்த்து வாங்குகிறார்கள் என்பது வேறு விசயம். இங்கே நாம் சொல்ல வருவது பாசிஸ்ட்டுகள் தங்கள் நிழலைக் கண்டு கூட அஞ்சுவார்கள் என்பதைத்தான். எவ்வளவு வசதி இருந்தாலும் ஒரு ஆக்கிரமிப்பு படைக்கு நேரிட்டு போரிடும் தைரியம் நிச்சயம் இருக்காது. இந்த அணுகுமுறைக்கு ரோபோக்கள் பொருத்தமாய் இருக்கின்றன.
ஒரு ஆக்கிரமிப்பு போரை முழுவதும் ரிமோட் கண்ட்ரோலிலேயே நடத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இன்னும் எத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் இறக்கவேண்டுமோ தெரியவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் அரசியலை நிறைவேற்ற மனிதர்கள் அடங்கிய துருப்புக்கள் என்ன செய்தனவோ அவற்றைத்தான் ரோபோக்களும் செய்யப் போகின்றன. இதைத்தாண்டி இதில் அறவியல் பிரச்சினை ஏதுமில்லை.
கடைசியாக ஒரு விசயம். அடுத்த அதிபர் தேர்தலில் புஷ் வேண்டுமா, ஒரு ரோபோ வேண்டுமா என்று அமெரிக்க மக்களைக் கேட்டால் யாரைத்தெரிவு செய்வார்கள்? புஷ்ஷை விட ஒரு ரோபோ முட்டாள்தனமாக செயல்படாது என்பதால் பொம்மையைத்தான் தெரிவு செய்வார்கள்!
_________________________________________
I, Robot என்ற ஆங்கில திரைப்படத்தில் அமெரிக்க அரசியலில் நடக்கபோகிற இந்த நிகழ்வை ஒரு முன்னோட்டமாய் காட்டியிருந்தனர். நமது ஊர்களில் அதுவும் மேட்டுக்குடி மக்கள்தான் சொந்தமாக கணிப்பொறியில் இவ்வாறான விளையாட்டுக்கள் ஆடிமகிழ ஆரம்பித்திருக்கும் வேளையில், இவற்றின் ஆசானான அமெரிக்கனின் திமிர் உலகத்தை விளையாட்டு களமாக்கி அதில் தனது இயந்திரமனிதர்களை (ROBOT) வைத்து ஆட முடிவு செய்துள்ளது. அமெரிக்க திமிர் எல்லை மீறி எங்கோ திக்கின்றி செல்கிறது.
சரியாய் சொன்னீர்கள் கதிர்,
இனி போரும் வீடியோ கேம்ஸ் போல பொழுதுபோக்காய் மாறலாம்.
ரோபோக்களில் கதாநாயகன் உறுவாக்கப்பட்டு ரேடியோ மிர்சி முதல் ஹாலிவுட் வரை விழா எடுக்கலாம்
சிறந்த ரோபோக்களின் பொம்மைகள் உலகெங்கிலும் விற்பனையில் சக்கை போடு போடலாம்
அமெரிக்க சிறுவர்கள் பென்டகன் சுட்றுலா சென்று ரிமோட் கண்ட்ரோல் மூலம்
போர் புரியலாம்.
நம்மூர் சிறுவர்கள் அதை டீவியில் பார்த்து பக்கத்து வீட்டு பையனை கொன்று போடலாம்
ஆனால் ஒன்று
அவர்கள் போரிடப் போவது இன்னொரு ரோபோவிடமல்ல மனிதனிடம்
மனிதனை இயந்திரங்கள் வென்றதாக வரலாறே இல்லை!
An interesting article. You are a talented writer. The progressive people like you must come forward to write more articles like this. Well done.
போரில்லா உலகம் வேண்டும்.
அதற்காகவாவது நிச்சயம் ஒரு போர் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதைப் பற்றி நண்பர் ராஜ நடராஜன் என்ன சொல்கிறார்.
இந்த பதிவு வெளிவந்த உடனே படிச்சேன். ஆனா என்ன சொல்லவறீங்கனு சுத்தமா புரியலை…
பெயருக்கு இதயம் இருந்தும், ஒரு கல் நெஞ்சு உடையவனாய் உலகத்தை ஆட்டிப்படைக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய திமிர், அதன் கட்டளைகளை ஏற்று நிறைவேற்றுகிற இயந்திரமனிதனை(Robot) போர்ப்படையில் சேர்க்கும் போது எந்த அளவிற்கு மனிதம் இருக்கும், மனிதர்கள் மிஞ்சுவார்கள் என்பதன் நோக்கத்திலேயே இக்கட்டுரை வந்துள்ளது என்பதை bmurali80 இப்பின்னூட்டத்தில் அறிவாரா?
I second Elango and ‘Tamil Anand’ on this.
I would encourage bmurali80 to ask what he wants to know
or share his differences so that
we all can come to an understanding about the issue.
thodarnthu padikkirén
இயந்திர மனிதனுக்கும், அமெரிக்கர்களுக்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை
எத்தனை போர்கள், எத்தனை கொடுமைகள், எவ்வளவு ஆக்கிரமிப்புகள், என்னென்ன வஞ்சகங்கள்,மனித இனமே பூண்டோடு அழிந்தாலும் லாபவெறி தவிர வேறொன்றுமில்லை.
ஆனாலும், வெறி பிடித்த மிருகமென்றாலும் தனக்கு வலிக்குமே
http://english.aljazeera.net/news/americas/2008/08/200881315044821961.html
மேலே உள்ள சுட்டி, ஈராக் போரில் தனியார் அமெரிக்க ஒப்பந்த நபர்களுக்காக 80 பில்லியன் டாலர் 2003 ஆம் ஆண்டில் இருந்து 2007 வரை செய்யப் பட்ட செலவு. இதில் முக்கியமான விடயம் என்ன வென்றால் இந்த தனியார் நிறுவனங்களை நடுத்துவது உலகத்தை காக்க போராடும் புஷ் போன்ற முதலாளிகள் தான்.
1. ஈராக் போரின் மூலம் எண்ணை வழங்களை தான் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்வது.
2. ஈராக் போரை காரணம் காட்டி தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் பெரும் மக்கள் வரிப் பணத்தை சூரையாடுவது.
மேல் சொன்ன இரு வழிகளிலும் உலக பெரும் முதலாளிகள் பயன் பெறுகின்றனர். ஒரே கல்லில் இரு மாங்காய்.
தோழர் கட்டுரையில் குறிப்பிட்டது போல் வருங்காலத்தில் இயந்திர மனிதர்கள் அமெரிக்க படையில்
இருந்தால் அந்த இயந்திர மனிதர்களை உற்பத்தி செய்யும் தனியார் முதலாளிகளாய் இவர்கள் இருப்பார்கள்.
//இங்கே நாம் சொல்ல வருவது பாசிஸ்ட்டுகள் தங்கள் நிழலைக் கண்டு கூட அஞ்சுவார்கள் என்பதைத்தான். எவ்வளவு வசதி இருந்தாலும் ஒரு ஆக்கிரமிப்பு படைக்கு நேரிட்டு போரிடும் தைரியம் நிச்சயம் இருக்காது. இந்த அணுகுமுறைக்கு ரோபோக்கள் பொருத்தமாய் இருக்கின்றன//
இந்த வரிகள் அருமை. சிறந்த கருத்துக்களுடன் வந்துள்ள கட்டுரை. உங்கள் முடிவு அதைவிட அருமை. மக்கள் எந்திரத்தை தேர்ந்தெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
தோழர் பகத் முன்வைக்கும் பிரச்சனைதான் இதன் மூலம்.
உங்கள் கட்டுரைகள் ஆழமான பார்வைக்கொண்டதாக உள்ளது.
வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜமாலன்.