Sunday, November 27, 2022
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்குசேலன் உள்குத்து.... சும்மா அதிருதில்ல !

குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல !

-

கடைசியாகக் கிடைத்த தகவலின் படி சாலிக்கிராமம் (சென்னை வடபழனிக்கு அருகில் இருக்கும் சினிமாக்காரர்களின் புண்ணியத்தலம்) வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். சைக்கிள் பாஸ் கலெக்சனிலும் கூட நாயகன் குசேலனை விஞ்சிவிட்டதாம்.

குத்துப்பாட்டுக்கு தொந்தியை ஆட்டி, குளோசப் காட்சிகளில் தொங்கி வழியும் முகச்சதைகளைக் காட்டி வெள்ளித் திரையில் அமர்க்களம் செய்யும் ரித்தீஸைக் காண வேலை மெனக்கெட்டு உடனே கிளம்பி விடாதீர்கள். அந்தி மயங்கும் நேரத்தில் தமிழ்ச் சேனல்களில் ஓடும் நாயகன் ட்ரைலரைப் பார்க்கும் போது அதில் என்ன நடக்கிறது என்பது புரியாவிட்டாலும் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக ஒரு நட்சத்திரம் உருவாகி வருவது மட்டும் தெரிகிறது. தற்போது ரஜினி ரசிகர்களே மறுக்க முடியாத வகையில் வசூலில் காலி டப்பாவாகி, திரையரங்கை விட்டு வெளியேறும் குசேலனின் திரைப்படச் சுருளும் அதைத்தான் நிரூபிக்கிறது.

வையகம் முழுவதும் உள்ள தமிழ் நாக்குகளால் சூப்பர் ஸ்டாரென தன்னிலை மறந்து பக்தியுடன் உச்சாடனம் செய்யப்படும் ஒன்றின் படம் இப்படி ஊத்திக் கொண்டதற்குக் காரணமென்ன?

ஈழத் தமிழரோ, மலேசியத் தமிழரோ, சிங்கப்பூர்த் தமிழரோ, அகதித் தமிழரோ, அகலாமலிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழரோ எல்லாத் தமிழர்களின் கண்களும் ஊடகங்கள் முதல் சின்னத்திரை, வெள்ளித்திரை வரை சகலமான அயிட்டங்களிலும் பார்த்த விழி பார்த்தபடி மாறாமல் உற்று நோக்கி ஒன்றுவது தமிழ் சினிமாவில் மட்டும்தான். செஞ்சோலை, மாஞ்சோலைப் படுகொலைகள் தெரியாது என்றாலும் ஆஸ்திரேலியப் பூஞ்சோலையில் பாடும் இளைய தளபதியின் மனைவி குழந்தைகள் பெயர்கள் மனப்பாடமாய்த் தெரியும்; காய்ந்து போயிருக்கும் காவிரியாறு எந்தெந்த மாவட்டங்களில் பாய்கிறது தெரியாவிட்டாலும் நமீதாவின் பூர்வாசிரமம் அட்சர சுத்தமாய்த் தெரியும்; இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு தெரியாவிட்டாலும் உலகநாயகனின் வரலாறு களத்தூர் கண்ணம்மாவிலிருந்து தசாவதாரம் வரை தப்பாமல் தெரியும்; பீகார் மாநிலம் எங்கிருக்கிறது என்று தெரியாவிட்டாலும் பில்லா திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட் பளிச்சென்று தெரியும்.

இப்படி உலகத் தமிழர்களுக்கு கல்வியை, வரலாறை, பூகோளத்தைக் கற்றுத்தரும் தமிழ் சினிமாவிலிருந்துதான் அடுத்தடுத்து தமிழகத்தை ஆளப்போவதாய்ச் சொல்லித் திரிகிற கேப்டன்களும், நாட்டாமைகளும் சிலிர்த்தவாறு வருகிறார்கள். மொத்தத்தில் தமிழ் வாழ்வின் மேல்வாய் முதல் கீழ்வாய் வரை வாயுவாய் விரவியிருக்கும் சினிமாவில் ஒரு பிரச்சினை மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. திரைப்படங்களால் பாலூட்டி வளர்க்கப்படும் தமிழன் என்னதான் அடி முட்டாளாக இருந்தாலும் சமயத்தில் அவனுக்கே தெரியாமல் புத்திசாலித்தனமாய் ஏதாவது செய்து தொலைத்து விடுகிறான்.

இரசிகப் பெருமக்களின் புரிந்து கொள்ள முடியாத இந்த உளவியல்தான் திரையுலகின் படைப்பாளிகள், முதலாளிகள் அனைவரின் மண்டையையும் ஒற்றைத் தலைவலியாய் குடைகிறது. இதைத் தீர்க்கக்கூடிய டைகர் பாம் மட்டும் இருந்திருந்தால் குசேலன் குதிரையில் பணம்கட்டிய பெருமகன்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கும்.

தமிழ் நாட்டில் கிருஷ்ண பரமாத்மா என்றொரு சூப்பர் ஸ்டார் இருந்தாராம். அவருக்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தி குசேலன் என்றொரு தோழன் இருந்தானாம். அவன் இப்போது சலூன் கடை வைத்து பிழைக்கிறானாம். இருவரும் ஒரு நாள் சந்தித்தார்களாம். அதைப் பார்த்துப் பலரும் அழுதார்களாம். குசேலனைக் குபேரனாக்கிவிட்டு அடுத்தநாள் கிருஷ்ண பரமாத்மா இமயமலைக்கு போனாராம். தோழன் சலூனுக்கு ஒரு நாள் விடுமுறைவிட்டு என்னமோ யோசித்தானாம். குமுதத்தின் லைட்ஸ் ஆன் கிசுகிசுவுக்குக்கூட தகுதியில்லாத இந்தக்கதைக்குத் தமிழர்கள் 100 கோடி ரூபாய் பீஸ் கட்டவேண்டுமாம். அப்படியென்றால் இதைவிட மட்டமான சிவாஜிக்கு மட்டும் தமிழர்கள் புற்றீசல் போல பீஸ் கட்டினார்களே என்று நீங்கள் கேட்கலாம். தமிழன் ஏமாளிதான்! இருந்தாலும் சமயத்தில் கிரியேட்டிவாக ஏதாவது செய்யக்கூடாது என்று விதி இருக்கிறதா என்ன? அரசியலில் புரட்சித் தலைவியை ஏற்றுக் கொண்ட தமிழ் மக்கள் புரட்சித் தலைவரால் கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ் கட்சி ஆரம்பித்த போது அல்வா கொடுத்து விட்டார்கள். இதையெல்லாம் ஏனென்று ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது.

கிருஷ்ண பரமாத்மா தும்மினாலும், தம் அடித்தாலும், இமயமலைக்குப் பம்மினாலும் அட்டைப்படக் கட்டுரைகளாக வெளியிடும் பத்திரிகைகள் பாபா படத்திற்குக் காகிதமே கண்ணீர் விடுமளவுக்கு அலப்பறைகள் செய்து ஊளையிட்டன. பரமாத்மா இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை படம் தந்தால் ஊடகங்கள் ஒரு மாமாங்க காலத்திற்குச் செய்தி வெளியிடும். கடைசியில் இந்த வெற்றுக் கூச்சலில் பாபா படம் கவிழ்ந்தது. பீடியை வலித்தவாறு பரமாத்மா புரூடா விட்ட ஆன்மீக அரட்டைகளை ரசிகர்களே சட்டை செய்யவில்லை, பேண்ட்டும் செய்யவில்லை. பாபா டாலர், செயின், டீ ஷர்ட் என முடிந்தமட்டும் சுருட்ட நினைத்த குண்டுக் கொழுப்பு லதா ரஜினிகாந்தின் பேராசை மண்ணைக் கவ்வியது. அப்போதும் பாபாவின் கிளைமாக்சை ஊடகங்கள் முடிக்கவில்லை. யானை விழுந்தால் எழாது, குதிரை விழுந்தால் மீண்டு எழும் என்ற பரமாத்மாவின் உளறல்களெல்லாம் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. உளுத்திருந்த இமேஜைத் தூக்கி நிறுத்த பரமாத்மா சந்திரமுகிக்குச் சென்ற கதைகள் அடுத்து வெளிக்கி வர ஆரம்பித்தன.

பாபா படத்தை பரமாத்வே தயாரித்திருந்ததால் தன்னை வைத்துச் சூதாடிய வினியோகஸ்தர்களுக்குச் சுருட்டிய தொகையில் கொஞ்சம் கொடுத்தார். இது போக அவருக்கு எஞ்சிய தொகை பத்து கோடியைத் தாண்டும். இதுவும் முதல் பத்து நாட்களுக்கு ரசிகர்கள் வீட்டு நகைகளை அடகுவைத்து 500, 1000 என்று ப்ளாக் டிக்கெட்டில் அழுத பணம்தான். உண்மையான கட்டணத்தில் பாபா திரைப்படம் நூறு நாட்கள் ஓடியிருந்தாலும் பரமாத்வுக்கு இந்தப் பணம் கிடைத்திருக்காது. திரைப்படம் வெளியிடப்படும் முதல் வாரம், மாதத்தில் திரையரங்குகள் எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அளித்திருந்த சலுகை பகிரங்கக் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கியது. கடந்த பத்து வருடங்களாக கிருஷ்ண பரமாத்மாவும் இன்ன பிற நட்சத்திரங்களும், முதலாளிகளும் இப்படித்தான் வழிப்பறி செய்து சொத்து சேர்த்து வருகின்றனர்.

தற்போதைய பிரச்சினை என்னவென்றால் பாபா படத்திற்கு முதல் பத்து நாட்களுக்கு வந்த கூட்டம் கூட குசேலனுக்கு வரவில்லையாம். அப்படி வரும் என்று எதிர்பார்த்து குசேலனுக்கு கொட்டப்பட்ட பணம் 61 கோடி ரூபாய். இதில் ரஜினிக்கு 20 கோடி, இயக்குநர் வாசுவுக்கு 4 கோடி, படத்தைத் தயாரித்த கே.பாலச்சந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், வைஷ்ணவி மூவிஸ் அஸ்வினிதத் மூவருக்கும் தலா 7 கோடி, மிச்சமெல்லாம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தின் தயாரிப்புச் செலவாம். இதை 61 கோடிக்கு வாங்கிய பிரமீட் சாய்மீரா எனும் கார்ப்பரேட் நிறுவனம் பரமாத்மாவின் இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சுருட்டலாம் என்று சப்புக் கொட்டியது. பரமாத்மா தமிழ்க் குசேலனுக்கு மட்டும் அருள் பாலிக்காமல் தெலுங்குக் குசேலனுக்கும் பிச்சை போடும் விதமாக தெலுங்கிலும் தனியாக படமெடுத்தார்களாம். என்.டி.ராமாராவ் கிருஷ்ணனாகவும், இராமனாகவும் அவதரித்து பக்தியில் ஊறப்போட்ட மண்ணாயிற்றே!

குசேலனின் இசை உரிமையை பிக் மீயுசிக் நிறுவனம் 2.45 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமையை 5 கோடிக்கு கலைஞர் டி.வியும் வாங்கியதாம். ஒரு படத்தில் பரமாத்மாவின் போஸ்டரைக் காண்பித்தாலே பிய்த்துக் கொண்டு ஒடும் காலத்தில் பரமாத்மாவின் இசை பஜனையும், தொலைக்காட்சி திவ்ய தரிசனமும் இந்த அளவுக்கு வியாபாரம் ஆனதில் ஆச்சரியமில்லை. எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த படியால் ஒரு சுபமூகூர்த்தத்தில் 600 பிரிண்டுகள் போடப்பட்டு அமெரிக்கா, மொரிஷியஸ், பாங்காக், மலேசியா, சிங்கப்பூர், கேரளா, கர்நாடகம் என்று உலகம் முழுவதும் கோபால் பற்பொடி போல குசேலன் வெளியிடப்பட்டது. இதுதான் படத்தை போட்ட உடன் காசை எடுக்கும் பாராசூட் வணிகமாம். பத்து நாட்களுக்குப் பிறகு படத்தைப் பற்றி எதிர்மறைக் கருத்து உருவாகி வசூல் பாதிக்கலாம் என்ற அபாயம் இதில் இல்லையாம். அதனால்தான் இத்தனை அதிக பிரிண்டுகள் போட்டு இரண்டு வாரத்தில் முதலை இலாபத்தோடு எடுத்து விடுவார்களாம். சரியாகச் சொன்னால் ரசிகன் விழித்துக் கொள்வதற்குள் அவனிடம் பிக்பாக்கெட் அடித்து விடவேண்டும். தமிழகத்தில் பாதி இடங்களில் பிரமீட் சாய்மீராவே ரீலீஸ் செய்து மீதியை விநியோகஸ்தர்கள் மூலமாகத் திரையிட்டது. மொத்தத்தில் 100 கோடியைக் காணிக்கையாகப் பிடுங்குவது திட்டம்.

பக்தர்களைச் சோதனைக்குள்ளாக்கிக் கடைத்தேற்றும் பரமாத்வுக்கே அப்போதுதான் சோதனைகள் வரலாயிற்று. ஒகேனக்கல் பிரச்சினையில் தப்புச் செய்பவர்களை அடிப்பேன், உதைப்பேன் என்று பரமாத்மா வீரவசனம் பேசியதை வைத்து கர்நாடகத்தில் குசேலன் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோமென எதிர்ப்புக் கிளம்பியது. பரமாத்மா எந்தவிதக் கூச்சநாச்சமின்றி மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தார். பரமாத்மாவின் பல்டியை கர்நாடகம் ஏற்றுக்கொண்டு வழி விட்டாலும், தமிழ் ரசிக பக்தர்களிடையே ஒரு நெருடல் ஏற்பட்டது. என்னடா நம்ம தலைவர் சுண்டுவிரலசைவில் நூறு பேரைப் புரட்டி எடுப்பாரே, இப்படி தீடீரென்று பணிந்து விட்டாரே, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்த தமிழகத்தை நட்டாற்றில் விட்டுவிட்டாரே என்று பக்தர்களிடம் சற்று மனக்கிலேசம் பற்றியது.

இது ரிலீசுக்கு முந்தைய நாள் நிலவரம். பரமாத்மா ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்ததன் கூடவே அவரது இமேஜூம் உப்பியது என்பதை இந்த முக்கியமான தருணத்தில் நினைவு படுத்திக் கொள்ளவேண்டும். பரமாத்மாவினால் இமேஜ்! இமேஜினால் பரமாத்மா! இமேஜைப் பராமரிப்பது இரசிக பக்தர்களின் வேலை. திரையில் இமேஜாகவே விசுவரூபமெடுக்கும் பரமாத்மா நிஜவாழ்விலும் அதைப் பராமரிக்கவேண்டுமல்லவா! ஆனால் உண்மையில் முரண்படும் இந்த இரு துருவங்களை ஒத்திசைவாக கொண்டுசெல்வதற்கு அந்த நிஜ பரமாத்மாவே வந்தாலும் சாத்தியமில்லை. மாயைக்கும், உண்மைக்குமான சண்டையில் வியாபாரத்துக்கும், இமேஜுக்குமான மோதலில் பரமாத்மா தனது மகிமையைச் சற்ற சுருதி குறைத்துக்கொண்டார். வினை தொடங்கிவிட்டது.

அடுத்த குசேலன் படம் முழுவதும் சுமார் 55 நிமிடக் காட்சிகளில் வரும் பரமாத்மாவின் பண்பு நலன்கள், பழகும் தன்மை, எளிமை, சுறுசுறுப்பு, வேகம், விவேகம், வாழ்க்கையைப் பற்றி அவர் என்ன நினைக்கறார், அவரைப் பற்றி வாழ்க்கை என்ன நினைக்கிறது, இமயமலையில் அவர் பெற்ற ஆன்மீகம் எல்லாம் புண்ணிய நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த இமேஜ் பில்டப்பில் ஒரு விசயம் மட்டும் பிழையாகிவிட்டது. அரசியலுக்கு தான் வருவதாக திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் பேசியதெல்லாம் தனது சொந்தக் கருத்தல்ல, இயக்குநர் எழுதிக் கொடுத்ததைத்தான் பேசினேன் என்று பரமாத்மா குசேலனில் வசனம் பேசியது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது அரசியல் இமேஜ் ஒரு மாயை என்கிறார் பரமாத்மா. பக்தர்களோ அது மாயை என்று தெரிந்தாலும் தங்களை அந்த மாயையில் வைக்குமாறு வற்புறுத்துகிறார்கள். இது பக்தர்களின் பிழையல்ல. ஏனெனில் அவர்கள் அந்த மாயையை நம்பித்தான் பரமாத்மாவுக்கு சூப்பர் ஸ்டார் பட்டமும் கூடவே வட்டிக்கு வாங்கிய காணிக்கையையும் கொடுத்து பூஜை செய்கிறார்கள். காணிக்கையை வாங்கி கல்லாவை நிரப்பிவிட்டு தான் ஒரு எளிய மனிதன் என்று புரூடா விட்டால் அதை நம்புவதற்கு பக்தர்கள் என்ன மாங்காய் மடையர்களா?

இதை லேட்டாகத் தெரிந்து கொண்ட படக்குழுவினர் அந்த வசனத்தை வெட்டி விட்டு பரமாத்மாவின் காட்சிகளை அதிகப்படுத்தி படத்தை புத்துருவாக்கம் செய்தார்கள். அப்போதும் படம் பிக்கப் ஆகவில்லை. பக்தர்களின் பிச்சையால் ஒரு பில்லியனராக விசுவரூபமெடுத்திருக்கும் பரமாத்மா அன்றாட வாழ்வில் எளிமையாக இருக்கும் ஒரு ஆன்மீகவாதி என்று தன்னை வெளிப்படுத்துவதெல்லாம் ஊடகங்கள் முதல் பக்தர்கள் வரைக்கும் பிரபலமான ஒரு சங்கதி. அதையே திரைப்படமாக எடுத்தால்? ஊற்றிக் கொள்ளும் என்பதையே பாபா, குசேலனின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் போட்டுடைக்கிறது. படையப்பா, பாட்சா, அருணாச்சலம், அண்ணாமலை எல்லாம் ஒரு கணக்கில் பரமாத்மாவின் இமேஜுக்குப் பொருத்தமாக இருப்பதால் ஓடியது. பாபாவில் பரமாத்மாவின் ஆன்மீக உபன்னியாசங்களை பக்தர்கள் சீண்டவில்லை. என்ன கேட்டாலும் கிடைக்கும் வரம் பெற்ற பாபாவிடம் வினியோகஸ்தர்கள் தாங்கள் போட்ட காசையாவது திருப்பிக் கொடுங்கள் என்று வரம் கேட்டனர்.

குசேலினிலும் அதுவே ஆக்சன் ரீப்ளேவாக ஓடுகிறது. நிஜக்கதையில் குசேலனை குபேரனாக மாற்றுவார் பரமாத்மா. எங்களை குபேரனாக்காவிட்டாலும் பரவாயில்லை பிச்சைக்காரர்களாக மட்டும் மாற்றி விடாதீர்கள் என்று பரமாத்மாவுக்காக மூதலீடு செய்த பணத்தை கேட்கிறார்கள் தியேட்டர் அதிபர்கள். ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் குசேலனை வெளியிட்ட வினியோகஸ்தர்கள் திரைப்படப் பெட்டியை சென்னைக்கு அனுப்பிவிட்டு நட்டகணக்குடன் தயாரிப்பாளர்களை முற்றுகையிட்டிருக்கிறார்கள். இதில் பரமாத்மா தலையிட்டு பிச்சை போட்டாலும் பெற்றுக் கொள்வோம் என்கிறார் ராயலசீமா பிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சங்கத்தைச் சேர்ந்த சசிதர் பாபு. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வமோ பரமாத்மாவை நேரில் சந்தித்து தாங்கள் நிழல் குசேலனால் நிஜ குசேலனாக்கப்பட்டதை எடுத்துக் கூறி நிவாரணம் கேட்டிருக்கிறார்.

பரமாத்மாவும் உரியவர்களிடம் பேசி முதலீட்டில் 33 சதவீதத்தை திருப்பித் தர ஆவன செய்வதாகக் கூறினாராம். இதை பன்னீர் செல்வம் ஏற்றுக் கொள்ளாததோடு தாங்கள் 80 சதவீதம் நட்டமடைந்திருப்பதாகவும் அதில் 70 சதவீதமாவது திரும்பத் தரவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பரமாத்மாவை வைத்து பணத்தை டபுளிங் (இரண்டு மடங்கு கள்ளநோட்டை ஒரு மடங்கு நல்ல நோட்டாக மாற்றுவது) செய்து விடலாம் என்று மனப்பால் குடித்த பிரமீட் சாய்மீரா நிறுவனம் இது குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. திரைப்படத்தை பார்த்து விட்டுத்தான் வாங்கினார்கள் எனவே பணத்தை திருப்பித் தரும் பேச்சே இல்லை என்று கே.பாலச்சந்தர் கறாராக கூறிவிட்டாராம். இப்படி சகல தரப்பிலும் குசேலனுக்கான உள்குத்து ஆரம்பித்து விட்டது. ஒரு நூறு கோடி ரூபாயை பக்தர்கள் மட்டும் உண்டியலில் செலுத்தியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது.

பரமாத்மா என்றொரு இமேஜை வைத்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கலாம் என்று பரமாத்மா, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் ஆணித்தரமாக நம்பி இறங்கினர். இதில் பரமாத்விற்கும், தயாரிப்பாளர்களுக்கும் உரியது கிடைத்து விட்டது. மற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள். மாட்டிக் கொண்டவர்களும் அப்பாவிகளல்ல. பரமாத்மா என்றொரு மூடநம்பிக்கையை வைத்து முட்டாள் ரசிகர்கள் ஆராதிக்கும் வரை கவலையில்லை என்று நம்பிக்கையுடன் தொழிலில் இருந்தவர்கள்தான். அந்த முட்டாள்கள் இப்போது படத்தைப் பார்ப்பதற்குத் தயாரில்லை. என்ன செய்யலாம்?

பரமாத்மாவின் திருவிளையாடலை பக்திப் பரவசமின்றி பக்தர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். பரமாத்மாவின் 20 கோடி சம்பளத்தை குறைக்க முடியுமா? அவரது சந்தை மதிப்பு அதிகம் என்பதால் இந்தக் கூலியைக் கொடுத்துதான் ஆக வேண்டும். பரமாத்மாவின் படத்தை சுப்பிரமணியபுரம் மாதிரி லோ பட்ஜட்டில் எடுக்க முடியுமா? அவரது இமேஜுக்காக படம் பார்க்க வரும் பக்தர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் ரிச்சாகத்தான் எடுக்க முடியும். அவரது படத்தை ஒரு நியாயமான விலைக்கு விற்க முடியமா? பந்தயத்தில் இந்தப் பரமாத்மா குதிரை ஓடி ஜெயித்து விட்டால் ஜாக்பாட் அடிக்குமென்பதால் அநியாய விலைக்குத்தான் விற்க முடியும். பரமாத்மாவின் படத்தை உரிய திரையரங்க கட்டணத்தில் பார்க்குமாறு செய்தால் இந்தப் பிரச்சினை தீருமா? அப்படி வருசம் முழுவதும் ஓட்டினாலும் கூட பணம் கைக்கு வராது என்பதால் பிளாக்கில் 500,1000 என்றுதான் விற்க முடியும். கிருஷ்ண பரமாத்மா என்ற இந்த சூப்பர் ஸ்டாரின் இமேஜும், வர்த்தகமும் இணைந்து நடத்தும் இந்த சூதாட்டம் இப்படித்தான் இயங்க முடியும்.

இந்த சூதாட்டத்தில் பக்தர்கள் நினைத்தால் ஜாக்பாட்டும் கொடுப்பார்கள், மொட்டையும் அடிப்பார்கள். இரண்டையும் எப்போது எப்படி செய்வார்கள் என்பது பரம்பொருளுக்கே பிடிபடாத மர்மம். ஆனாலும் ஒவ்வொரு சூதாட்டத்திலும் பரமாத்மாவுக்கு மட்டும் நட்டம் வராது. வெற்றி பெறும் ஒவ்வொரு சூதாட்டமும் மக்கள் தாலியறுத்த பணத்தில்தான் நடக்கிறது என்பதுடன் பரமாத்மாவின் புராணத்தை முடித்துக் கொள்வோம்.

_____________________________________________