privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

-

வருடந்தோறும் காந்தி ஜெயந்தியும், நேரு ஜெயந்தியும் டெல்லி அரசியலில் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் கடைபிடிக்க வேண்டிய கர்மங்களாகும். அதே போல தமிழக அரசியலில் அண்ணா, பெரியார், காமராஜர் நினைவு நாட்களில் சமாதிகளுக்கு செல்லும் தலைவர்கள் எல்லோரும் சமீப ஆண்டுகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சமாதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற ஜெயந்திகளுக்கும் தேவர் ஜெயந்திக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு.

தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தங்கள் அரசியல் பிழைப்புக்காக கொள்கை அடையாளத்துக்காக சம்பந்தப்பட்ட தலைவர்களை சடங்கு போல நினைவுகூர்வதற்குத் தேவை இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஓட்டு எதுவும் கூடுதலாக விழப்போவதில்லை என்றாலும் வரலாற்றில் சாதனை எதுவும் செய்யாத தங்களது பங்கை மறைப்பதற்கும், குறிப்பிட்ட தலைவர்களை வைத்து சாதனை செய்ததாகக் காட்டுவதற்கும் சிலைகளுக்கு மாலை, மரியாதை செய்யும் பூஜை, புனஸ்காரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் தேவர் ஜெயந்தி மட்டும் தென்மாவட்டங்களில் தேவர் சாதி மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு பயன்படுகிறது.

அம்பேத்கார் ஜெயந்தியும் தலித் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துத்தான் கொண்டாடப்படுகிறது என்றாலும் தேவர் ஜெயந்திக்குள்ள முக்கியத்துவம் இதற்குக் கிடையாது. அம்பேத்கார் சிலைக்கு மதுசூதனனோ, செங்கோட்டையனோ மாலை அணிவிக்கச் செல்லும் போது தேவர் சமாதிக்கு மட்டும் ஜெயலலிதா படை சூழ செல்வது வழக்கம். இன்று கூட விமானத்தில் ஏறும்போது சறுக்கி விழுந்து காலில் அடிபட்டாலும் அதைவிட தேவர் சாதி ஓட்டு முக்கியம் என்று கருதி பசும்பொன்னுக்குச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஆணவ அரசி ஜெயலலிதாவுக்கே இந்த கதியென்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லாக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் தேவர் சமாதிக்கு வந்தார்களா இல்லையா என்ற கண்காணிக்கப் படுவதால் ஒருவர் விடாமல் வருடந்தோறும் உள்ளேன் ஐயா என்று பசும்பொன்னில் ஆஜர் வைக்கிறார்கள்.

தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது? தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். பசும்போன் தேவரை நினைவு கூர்வதின் குறியீடுகள் இதைத் தவிர வேறில்லை. தேவர் சாதி மக்களின் கம்பீரமான வரலாற்றை முத்துராமலிங்கம் பொதிந்து வைத்திருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள். தென் மாவட்ட அரசியலில் தேவர் சாதிப் பெருமிதத்தை அங்கீகரிக்காமல் எந்தக் கட்சியும் பிழைப்பை ஓட்டமுடியாது என்பதால் உள்ளூர் வட்டம் முதல் மாவட்டம் வரை சாதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆதிக்கம் செய்யும் தேவர் சாதிப் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் தளபதிகளாக ஆட்சி நடத்துவது மறுக்க முடியாத யதார்த்தமாகும்.

பசும்பொன் தேவரின் காலத்திலேயே நடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக தேவர் சாதி மக்கள் நடத்திய முதுகளத்தூர் கலவரமும், இம்மானுவேல் படுகொலையும் அவரது ஆதிக்கசாதி அடையாளத்தைப் பறைசாற்ற போதும். மற்றபடி அவர் நேத்தாஜியின் தளபதியாக சுதந்திரத்திற்குப் பாடுபட்டார் என்பதன் யோக்கியதையை வரலாற்றில் தேடவேண்டியதில்லை. நேத்தாஜியின் கட்சியான பார்வர்டு பிளாக் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடது சாரிக் கட்சியாக இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் தேவர் சாதிக் கட்சியாக இயங்கிவரும் கூத்தைப் பார்த்தாலே போதுமானது. பசும்பொன் தேவர் தலைவராக அலங்கரித்த கட்சி என்பதால் மட்டும் பார்வர்டு பிளாக் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் கார்த்திக் போன்ற சினிமா கோமாளிகளெல்லாம் அரசியல் தலைவராக பத்திரிகைகளின் அட்டையில் சற்று காலம் வலம் வந்த கொடுமையும் நடந்தது.

மற்ற மாநிலங்களில் இடதுசாரி அரசியல் பேசும் பார்வர்டு பிளாக்கின் தலைவர் பிஸ்வாஸ் தமிழகத்தில் மட்டும் சாதி அரசியலில் அதுவும் கார்த்திக்கோடு சேர்ந்து ஈடுபடவேண்டிய நிர்பந்தம். தேர்தல் தோறும் திராவிடக் கட்சிகள் கொடுக்கும் ஓரிரு தொகுதிகளுக்காக இந்த தேசியக் கட்சி தேவர் சாதியின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் இயங்கி வருகிறது. இது போக தேவரின் இந்துமதச்சாயலை வைத்து இந்துமதவெறி அமைப்புக்களும் அவரை மாபெரும் தலைவராகச் சித்தரிக்கின்றன.

90களில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தென்மாவட்டக் கலவரங்கள் முதுகளத்தூர் கலவரம் போல ஒருதரப்பாக மட்டும் நடக்கவில்லை. வரலாற்றில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியின் திமிரை எதிர்த்துப் போராடினார்கள். இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்பு இனிமேலும் தலித் மக்கள் காலம் காலமாக அடிபடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிவித்தது. அடி வாங்கியதால்தான் ஆதிக்க சாதியின் கலவரம் ஒரு கட்டத்தில் பின்வாங்கி சமாதனம் என்று இறங்கி வந்தது. கொடியங்குளம் போன்ற பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே தலையெடுத்தன் விளைவே இந்த மாற்றம்.

இப்படி முதல் முறையாக அடிவாங்கியதால் தேவர் சாதியின் கவுரவத்திற்கு வந்த சோதனைதான் தற்போது தேவர் ஜெயந்தியில் தன்னை மீட்டெடுப்பதற்கு முயல்கிறது. கொடியன்குளம் கலவரத்திற்குப் பிறகுதான் தேவர் சமாதிக்கு தனி மவுசு கூடி தலைவர்கள் வருவதும் தேவர் ஜெயந்திக்கு வரும் தேவர் சாதித் தொண்டர்கள் வருடந்தோறும் வரும் வழியில் பலவீனமாக இருக்கும் தலித் மக்களைத் தாக்குவதும் வழக்கமானது. இன்றும் தேவர் ஜெயந்தி என்றால் இந்த அடிதடிகளை நினைத்து பசும்பொன் ஊரைச்சுற்றி இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் திகிலுடன்தான் எதிர்கொள்கிறார்கள்.

இதுபோக மேலவளவு படுகொலையோடு தலித் பஞ்சாயத்து தலைவர்கள் ஆங்காங்கே கொல்லப்படுவதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் தலித் மக்கள் தேர்தலில் போட்டி போட முடியாத சில ஆண்டு வரலாறும் சாதி ஆதிக்கத்தின் இருப்பை இன்றும் உறுதி செய்கிறது. தேவர் ஜெயந்தி நடைபெறும் இக்காலத்தில்தான் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகாவில் கரிவலம்வந்தநல்லூருக்கு அருகில் இருக்கும் பந்தப்புளி கிராம தலித் மக்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடுகிறார்கள்.

ஊரிலிருக்கும் கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் தலித் மக்களுக்கு வழிபடும் உரிமை இல்லை. ஆதிக்க சாதியின் குறிப்பாக தேவர் சாதியின் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து இக்கிராம தலித் மக்கள் பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள். பசும்பொன்னுக்கு வரும் எந்த தலைவரும் கட்சியும் இம்மக்களின் பிரச்சினைக்கு முகம் காட்டியதில்லை. அந்த மக்கள் சொந்த முயற்சியில் சங்கரன் கோவில் துணை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு கோவிலில் வழிபடும் உரிமையை தீர்ப்பாகப் பெற்றார்கள்.

நீதிமன்றம் அனுமதித்தால் மட்டும் இந்தப் பிரச்சினை முடிந்து விடுமா என்ன? எந்தச் சட்டம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மேல்சாதியினர் அதை மறுத்தார்கள். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகார வர்க்கமோ பல தேதிகளைக் குறித்து தள்ளிப் போட்டு வந்தது. இறுதியில் செப்டம்பர் 23ஆம் தேதி நுழையலாம் என்று அதிகாரவர்க்கமும், மேல்சாதியினர் மற்றும் தலித் மக்கள அடங்கிய சமாதானக் கமிட்டியும் முடிவு செய்தது.

அன்று தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது கோவில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். அன்றும் தலித் மக்களுக்கு மாரியம்மன் அருள்பாலிக்கவில்லை. இதன் பிறகு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி அரசு நிர்வாகம் கோவிலைப் பூட்டி சீல் வைத்தது. அப்போதும் கூட தீண்டாமைக் கொடுமை அகற்றப்பட்டு சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்படவில்லை. மாறாக கோவிலை பூட்டினாலும் பூட்டுவோமே ஒழிய தலித் மக்களை நுழைய விட மாட்டோமென திமிர் பேசும் சாதி ஆதிக்கம்தான் அரசு நிர்வாகத்தைத் தாண்டி ஆட்சி செய்கிறது.

கேவலம் ஒரு மாரியம்மனைக்கூட கும்பிடுவதற்கு பத்தாண்டு போராடி, நீதிமன்ற உத்தரவு பெற்றும் கூட ஒன்றும் நடக்கவில்லையே என சலித்துப்போன மக்களை இரவு நேரங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் கும்பலாக வந்து தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்பதோடு, வழிபடும் உரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்பதாலும் தலித் மக்களின் எழுபது குடும்பங்களும் கால்நடைகளோடு அருகாமை மலைக்கு சென்று விட்டது. அங்கு வந்த அதிகாரிகளிடம் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து என்றைக்கு எங்களுக்கு வழிபடும் உரிமை கிடைக்கிறதோ அன்று கிராமத்திற்கு வருகிறோம் என்று அறிவித்து விட்டு போராட்டத்தைத் தொடர்கிறார்கள் தலித் மக்கள்.

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சினையில் தங்களது நோக்கம் நிறைவேறவில்லை என்பதற்காக மேல்சாதி மக்கள் மலைப்பகுதிக்கு சென்று தங்கியதும் சுற்று வட்டாரத்து மேல்சாதியினரிடமிருந்து பொருளாதார உதவி வந்தோடு, எல்லா அரசியக் கட்சிகளும், அதிகாரிகளும் அந்த மக்களிடம் வந்து ஊருக்குத் திரும்புமாறு மன்றாடினார்கள். இதே போராட்ட வடிவத்தை மேற்கொண்டிருக்கும் தலித் மக்களுக்கு இத்தகைய வரவேற்பு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. இந்தப் பதிவு எழுதும் இந்நேரம் வரையிலும் இந்தப் பிரச்சினை இன்னும் முடியவில்லை.

இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் சந்திராயன் விண்கோள் நிலவுக்கு செல்வதாகப் பீற்றித் திரியும் பாரதாமாதா பக்தர்கள், தலித் சாதியில் பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு அம்மன் கோவிலுக்குள் நுழைய முடியாத இந்தக் கொடுமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்தியாவின் அளவு கோல் சந்திராயனிலா, பந்தப்புளியிலா?

 

 1. அன்பு நண்பா., வினவு என்று தலைப்பு வைத்ததற்காக இப்படி தாறுமாறாக எழுதினால் எப்படி?
  இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேவர் ஜெயந்திக்கு யார், யார்? வருகிறார், அம்பேத்கர் ஜெயந்திக்கு யார் யார்? வருகிறார், அவர்களின் நோக்கம் என்ன?, நிலைமை என்ன? என்று அரசியல்வாதிகளைப் பற்றி எழுதினீர்கள், பரவாயில்லை அது இன்றைய சமுக அரசியல் நிலைமை.
  தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது?
  என்று கேள்வி கேட்டு, நீங்களே இந்த கேள்விக்கு உங்களின் முட்டாள் தனமான பதிலாக,
  தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். — என்று எழுதி இருக்கிறீர்கள். இதில் பொய் கூட்டி எழுதிஇருப்பதால் அதை மறுத்தும், வரலாற்று தென்மையும், அடையாளங்கையும் உங்களுக்கும் இந்த உலக மக்களுக்கும எடுத்து காட்ட வேண்டியது எனது பொறுப்பு.

  1) தமிழக அரசர்களில் தொன்மையான மாமன்னன்-ராஜ ராஜ சோழன்(கி.பி.1000) தோன்றிய முத்த தமிழ் குடி- இன்றைய தேவர் இனம். அந்த மாமன்னனிடம் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும் கண்டீர்களா?
  2) மதுரையை ஆண்டு, கண்ணகி-கோவலன்-க்கு தவறான நீதியளித்ததால் தன் உயிரை துறந்த மன்னன் நெடுந்செழியநிடமும், நீர் இந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் கண்டீரா?
  3) தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில், எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று களகம் செய்தவர்- கள்ளர்., எதிரி படையுடன் களத்தில் மரப்போர் புரிந்தவர்-மறவர்., தன்னாட்டுக்குள் எதிரி படை புகாமல் அகத்திணை காத்தவர்- அகமுடையார். இவ்வாறு மூன்றுவகை போர்புரிந்து அனைத்து இன மக்களையும் காத்த இந்த இனத்தில் நீங்கள் காண்பது-தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?
  4) மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்ட்ருக்கையில், மீனாக்ஷி அம்மன் கோவிலை சூறையாடி அழிக்கும் நோக்கத்தோடு படைஎடுத்து வந்த ஓரங்கஷீபின் தளபதியிடமிருந்து கோவிலினை காப்பாற்றிய இந்த இனத்திடம் நீங்கள் காண்பது -தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?
  5) சாதாரண நாட்களில் உணவுக்காக விவசாயம், விவசாயம் சார்த்த தொழில், ஆடு, மாடு மேய்த்தல். வயல்வெளி,கிராமம் என அனைத்து பகுதிக்கும் பகல்-இரவு காவல் என அனைத்து இன மக்கள் உடன் சமுகத்தில் வரைமுரையுடன் வாழ்த்த குடி, அண்டு முதல் இன்று வரை வழக்கில் உள்ள சொல்- ஒருத்தன் நம்பி வந்தா உயிர் கொடுக்கும் தேவன் (உ.ம) மன்னன் கட்டபொம்மன்- ஊமைத்துரை-க்காக தனது உயிர் மட்டுமல்லாது தனது தந்ததியயும் பழி கொடுத்த மாமன்னர்கள் மருதுஇருவர். இவர்களிடம் நீங்கள் காண்பது தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?
  5) இந்தியாவில் வெள்ளையன் ஆண்ட காலத்தில், தமிழகத்தில் இந்த குறிப்பிட்ட இனம் மட்டும் அடங்காமல் நேரடியாக எதிர்த்துக்கொண்டே இருப்பதைக்கண்டு, இந்த இனத்தின் குணாதிசியங்களை பட்டாணியர்கள் மூலமாக தெரிந்து கொண்டு இந்த இனத்தினை அடக்க -குற்றபரம்பறை -எனும் கொடும் சட்டதிம் மூலமாக அடக்கி திருடனாகவும், முரடனாகவும் வெளிப்படுத்தப்பட்ட இந்த இனத்தில் இன்று நீங்கள் காண்பது, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும் தானா?
  6) ஆதி தமிழ் நாட்டில் அனைத்து ஜாதி மக்களுடனும் சரியான வரைமுறையில் பழகிவந்த மக்கள் , இந்தியா முழுவதும் இந்து மதத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே ஜாதி பாகுபாடு ஏற்பட்டு தேவர் இன மக்கள் மட்டுமின்றி அனைவரும் இதில் பிரிந்து நினறனர். இதில் தேவர் இனத்தை மட்டும் குறை சொல்வதேன்? . இது இன்று அனைத்து மா வட்டத்திலும், வெவேறு ஜாதி மக்களுக்கும், தாழ்த்த பட்டவர்களுக்கும் உள்ள பிரச்சனை.
  7) சில நேரங்களில் இப்பிரச்சனை வர காரணம் இரு ஜாதி ஆண்களும் அடுத்த ஜாதி பெண்களின் மேல் கைவைப்பதால் தான். இதுவே பெரிதாக காரணம் அரசியல்வாதிகளே! இது மறுக்க முடியாத உண்மையல்லவா?, அதற்காக மொத்தமாக தேவர் இனத்தையே, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் என்பது குருட்டு தனம்.
  8) மேலும் உமது அடுத்த குற்றச்சாட்டு தேவர் திருமகன் மேல்.
  //பசும்பொன் தேவரின் காலத்திலேயே நடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக தேவர் சாதி மக்கள் நடத்திய முதுகளத்தூர் கலவரமும், இம்மானுவேல் படுகொலையும் அவரது ஆதிக்கசாதி அடையாளத்தைப் பறைசாற்ற போதும்.//
  அட பாவி, தேவர் திருமகனார்- இந்த இரு சாதிகளுக்கிடையே பிரச்சனை வராமலிருக்க நிறைய செய்திருக்கிறார். மேலும் அவருடைய பெரும்பாலான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தானமாக கொடுத்தவர். இன்று அவருடைய தம்பி வகையறா வறுமையில் இருக்கின்றனர். \
  9) இவ்வளவுக்கப்புறம் ஒரு முக்கிய சேதி. கடந்த வாரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் டாக்டர். சேதுராமன், தேவரினமும், தேவேந்திரர் இனமும் ஒன்றுதான், இனி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென பேசிருக்கிறார்.

  இதனால் இனிமேலும் ஒட்டு மொத்தமாக தேவரினம் என்று எழுதாமல், தப்பு செய்பவர் பெயரினை மட்டும் குறிப்பிட்டு எழுதவும்.
  நன்றி.

 2. தம்பி முருகேசா !

  ராஜ ராஜன் என்ற ஆண்ட பரம்பரை என்று வீண் வீராப்பு பேசுவதற்கு முன்பு, ஜாதி தமிழகத்தில் எப்போது ஏற்பட்டது என்பது தெரியுமா ?

  பார்ப்பனியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கு முன்பு இங்கே ஜாதி என்பதே இல்லை.

  ஆக, மன்னர்கள் தேவர் பரம்பரைச் சார்ந்தவர்கள் எனபதே பொய்.

  மற்றவன் உழைப்பில் வயிறு வளர்க்கும் கலையை பார்ப்பானின் கைங்கரியத்தில் பெற்ற சில அயோக்கியப் பயல்கள், மக்களாட்சி நிலவி வந்த இந்தியாவில், மன்னர்களாக முடி சூடிக் கொண்டார்கள்.

  பார்ப்பானும், அரசன் கடவுளின் பிரதிநிதி என்று கதைக் கட்டினான்.

  ஆக ராஜ ராஜனைப் பற்றிப் பீற்றிக் கொள்ள உமக்கு ஒன்றும் இல்லை.

  ராஜ ராஜனும், சதுர்வேதி மங்களம் முதலிய இடங்களில் நடந்த மக்கள் எழுச்சிகளை ஒடுக்கி பார்ப்பனிய விசுவாசத்தைக் காட்டினான்.

  இவை எல்லாம் வரலாற்று ரீதியான உணமைகள். ஆனால் மூன்று ஜாதிகளைப் பற்றிய உமது கதைக்கு எந்த விதமான வரலாற்று சான்றுகளும் இல்லை.

  மக்களை அடித்து மட்டுமல்லாமல், தன்னுடைய வியாபாரத்தையும் கெடுத்ததாலேயே, ஆங்கிலேயர் குற்றப் பரம்பரைச் சட்டத்திக் கொண்டு வந்தனர்.

  முத்து ராமலிங்க தேவரைப் பற்றி அறிய வேண்டும் என்றால், காமராசர் பற்றி அவர் சொன்ன உயர்ந்தக் கருத்துக்களை வைத்தே அவர் யோக்கியதையை அறியலாம்.

  அறிவுடைநம்பி
  http://purachikavi.blogspot.com

 3. நண்பரே இது போன்ற கட்டுரைகளை தவிருங்கள். எதற்காக எழுதுகிறீகள். இது போன்ற கட்டுரைகள் விழிபுனர்வயா தரும்? இதயங்களை மேலும் காயப்படுத்தும். இது போன்ற எழுத்துகள் உங்கள் மாற்ற எழுத்துகள் மேல் உள்ள மதிப்பை கெடுத்து விட்டது .

 4. இப்பவும் சாதிப் பெருமை கதைக்கிறாயே? எங்கே இருக்கிறாய்? சாதி இல்லாமப் போக வேண்டும் என்று சொல்லாமால் ஒவ்வொரு சாதிக்கும் பெருமை பேசுகிறாய். இன்னமும் உருப்படுற எண்ணம் இல்லையா? மதுரை இனியும் பழைய நினைப்புகளிலேயே மூழ்கி இருக்க வேண்டியது தானா? எப்பத்தான் முன்னேறுவது? மீனாட்சி அம்மன் கோவிலும் இடியப் போகுது. வைகையும் வரை படத்தில அழியுது. பின்ன மதுரைக்கு சிறப்பு தேவர் சிலை மட்டும் தானா?

 5. நண்பர் முருகேசன், நீங்கள் குறிப்பிடும் சம்பவங்கள் எல்லாம் குறைந்த பட்சம் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.. “ஒருந்தன் நம்பி வந்தா ஒயிர் கொடுக்கும் தேவன்” என்று எழுதி உள்ளீர்… ஆனால் இன்னமும் ஏன் மேல் சாதிய்னரால் உயிர் எடுக்கப் படுவோர் மிக பெரும்பான்மையோர் தாழ்த்தப் பட்டவர்களாகவே உள்ளனர்..
  200 வருடங்களுக்கு முன்பு வெள்ளையன் நம்மை ஆண்டான், பல கொடுமைகளை இழைத்தான்.. அதனால் இன்றும் அவனை நம் எதிரியாக கருதலாமா? வெள்ளையன் என்பதற்காகவே அவனை கண்ட இடத்தில் வெட்டிக் கொள்ளலாமா?
  உங்களின் “தேவர்” இன மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை செய்தனர் , அதை செய்தனர் என்று இன்றும் தேவரின் சாதி வெறியை பொறுத்துக் கொள்ள சொல்கிறீர்களா?
  பல வருடங்களுக்கு முன் பலரும் எதிருக்கு எதிராக போரிட்டு மாண்டனர்.. கட்ட பொம்மனின் வீரத்தை மதிக்கும் அதே வேளையில் அவனது படையில் இருந்தது போரிட்டு உயிர் நீத்து எல்லாம் தேவரோ? உங்களின் பதிலை பார்த்தல் மாற்ற சாதி மக்கள் எல்லாம் கோழைகள், எங்களின் தேவர் சாதி மட்டும் தான் பல போர்களில் போரிட்டது என்று மார் தட்டுகிறீர்.. இதுவே மற்ற மக்களின் பங்களிப்பை மறுத்து “நான் தேவன்” என்ற ஆணவமாக பேசுவது… உங்களுக்கும் இட்லருக்கும் என்ன வேறுபாடு ?
  மனிதனை மனிதனாக பார்க்க தெரியாத உங்களின் முட்டாள் தனமான சாதி வெறிதான் பல வடிவங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை காவு வாங்குகிறது..
  உங்களின் பாதை காந்தியின் பாதைக்கு நிகரானது.. காந்தி எப்படி தீண்டாமையை ஒழிக்காமல் தலித் மக்களை அரிசணன் என்று பிரித்து துரோகம் இளைத்தாரோ அதைப் போலவே.. நீங்களும் பழம் பெருமை பேசி மனித நேயத்தை வளர்க்காமல் சாதி வெறியை வளர்க்கிறீர்

  //ஆதி தமிழ் நாட்டில் அனைத்து ஜாதி மக்களுடனும் சரியான வரைமுறையில் பழகிவந்த மக்கள் , இந்தியா முழுவதும் இந்து மதத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே ஜாதி பாகுபாடு ஏற்பட்டு தேவர் இன மக்கள் மட்டுமின்றி அனைவரும் இதில் பிரிந்து நினறனர். இதில் தேவர் இனத்தை மட்டும் குறை சொல்வதேன்? . இது இன்று அனைத்து மா வட்டத்திலும், வெவேறு ஜாதி மக்களுக்கும், தாழ்த்த பட்டவர்களுக்கும் உள்ள பிரச்சனை.//
  இது எல்லாரும் தான் குற்றம் செய்கின்றனர் ஏன் என்னை மட்டும் சொல்கிறாய் என்று பதுங்கும் பதில்… எங்களை போன்றோர் எதிர்ப்பது எல்லா சாதி வெறியையும் தான்… ஆனால் எல்லா தலைவர்களின் பிறந்த தினமும் அரசியல் ஆக்கப்படுவது இல்லை… பசும்பொன் முத்து ராமலிங்கரின் விழாவிற்கு மட்டும் எல்லா அரசியல் கட்சியும் வரிசையில் வருவது ஏன்? அதனால் தான் இதனை குறிப்பிடுவது மிக முக்கியமாகிறது.. நீர் சாதி வெறியன் இல்லை என்றால் முத்து ராமலிங்கம் என்று குறிப்பிட வேண்டியது தானே “தேவர் திருமகன்” என்றும் குறிப்பிடுவதே உங்களின் சாதி வெறிக்கு அடையாளம்…

  பெரியார், பகத் சிங், அம்பேத்கார், பாரதிதாசன் போன்ற சமூக போராளிகளை யாரும் அவர்களின் சாதியால் அடையாளப் படுத்துவது இல்லை.. ஆனால் உங்களை போன்ற அடி முட்டாள்கள் மட்டும் இன்றும் சாதி வெறிக்காக மட்டுமே முதுராமலிங்கரின் பெயரை பயன்படுத்துகிறீர்கள்…

  மதுரை ஒரு காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து ஆனால் இன்று உங்களைப் போன்ற சாதிவெறியர்களை பல சாதிக் கட்சிகளைக் கொண்டு வளர்க்கிறது…

  வெட்கி தலை குனிகிறேன்..

 6. நண்பர்கள் அறிவுடை நம்பி, ஆட்காட்டி மற்றும் பகத்- பதில் விமர்சனங்களுக்கு நன்றி.
  நான் பதிலளித்தது வினவு அவர்களின் தேவரினத்தை பற்றிய முட்டாள் தனமான கருத்திற்குத்தான்.

  அது, // தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது? தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். பசும்போன் தேவரை நினைவு கூர்வதின் குறியீடுகள் இதைத் தவிர வேறில்லை//

  இப்போது நண்பர் அறிவுடை நம்பி,

  //முத்து ராமலிங்க தேவரைப் பற்றி அறிய வேண்டும் என்றால், காமராசர் பற்றி அவர் சொன்ன உயர்ந்தக் கருத்துக்களை வைத்தே அவர் யோக்கியதையை அறியலாம்.//

  நண்பா… ஒருமுறை காமராஜரை அவருடைய விருதுநகரிலெ எதிர்கட்சியினர் கடத்தி சென்றுவிட்டனர். காமராஜரின் நண்பர்கள்- கட்சிகாரர்களெல்லாம், முத்து ராமலிங்க தேவரிடம் சென்று புகாரளித்தனர். உடனே விருதுநகர் சென்ற தேவரவர்கள், ஒரு இரவு பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, கூட்ட ஆரம்பத்தில் மைக்-இல் “இந்த கூட்டம் முடிவதற்குள் காமராஜரை கடத்தியவர்கள் அவரை விடுவிக்க வேண்டும்” என கடுமையான குரலில் எச்சரிக்கை விடுத்து கூட்டத்தை நடத்தினார். அவர் சொன்னது போல் காமராஜரை கடத்தியவர்கள் காமராஜரை அதே பொதுக்கூட்டத்தில் விட்டு சென்றனர். இதிலிருந்து காமராஜர் மேல் தேவரவர்கள் எவ்வளவு அன்பாக இருந்தார் என்று அறியலாம்.

  அடுத்து ஆட்காட்டி,

  //இப்பவும் சாதிப் பெருமை கதைக்கிறாயே? எங்கே இருக்கிறாய்? சாதி இல்லாமப் போக வேண்டும் என்று சொல்லாமால் ஒவ்வொரு சாதிக்கும் பெருமை பேசுகிறாய். இன்னமும் உருப்படுற எண்ணம் இல்லையா?//

  நண்பா என் அப்பா புத்திசாலி, திறமைசாலி, நல்லவர் எனபதில் எவ்வளவு பெருமை படுவேமோ, அதே பெருமைதான் எனக்கு என் ஜாதி மேல். நான் விரும்புவது என் ஜாதியின் திறமை, வீரம், ஆண்மை ( பேராண்மை உட்பட) . இவற்றினாலே நான் நல்வனகவும், ஒழுக்கமாகவும் வாழ விரும்புகிறேன். இதை சொல்லி நான் அடுத்தவரை இதுவரை புன்படுதியதில்லை. எனக்கும் அனைத்து ஜாதியிலும் நண்பர்கள் உண்டு. நாங்கள் ஒரு தட்டில் சாப்பிடுவதும் உண்டு. உனக்கு உன் வீடு., எனக்கு என் வீடு.

  அடுத்து ஸ்பெஷல் நண்பர் பகத்…

  //நீங்கள் குறிப்பிடும் சம்பவங்கள் எல்லாம் குறைந்த பட்சம் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.. “ஒருந்தன் நம்பி வந்தா ஒயிர் கொடுக்கும் தேவன்” என்று எழுதி உள்ளீர்…//

  நண்பா, நான் என் வாழ்விலேயே என் நண்பர்களை மிக பெரிய ஆபத்துகளிலிருந்து உயிரை கொடுத்து காப்பாற்றி இருக்கிறேன்.

  //எங்களின் தேவர் சாதி மட்டும் தான் பல போர்களில் போரிட்டது என்று மார் தட்டுகிறீர்..//

  நண்பா.. இன்றும் போலீஸ்-ல் இருப்பவரில், தமிழ்நாட்டிலிருந்து ஆர்மி-ல் இருப்பவர்களில் பெரும் பகுதி எங்கள் தேவரினம் தான்.

  //உங்களின் பாதை காந்தியின் பாதைக்கு நிகரானது.. காந்தி எப்படி தீண்டாமையை ஒழிக்காமல் தலித் மக்களை அரிசணன் என்று பிரித்து துரோகம் இளைத்தாரோ அதைப் போலவே.. நீங்களும் பழம் பெருமை பேசி மனித நேயத்தை வளர்க்காமல் சாதி வெறியை வளர்க்கிறீர்//

  நண்பர் பகத்ற்கு, மகாத்மா காந்தியின் கொள்கையிலே உடன் பாடு இல்லை
  என தெரிகிறது. நண்பா இந்த ஜாதி அமைப்பு தெரிந்தோ தெரியாமலோ நமக்குள் வந்த ஒரு மனோவியாதி, இதை நீங்கள் நினைப்பது போல் உடனடியாக நீக்க முடியாது. 100 வருடங்களுக்கு முன் ஒரு தாழ்த்தப்பட்டவர் மேல் ஜாதி மக்கள் குடிஇருக்கும் தெருவுக்குள் வர முடியாது. 80 வருடங்களுக்கு முன் கோவிலுக்குள் போக முடியாது. 50 g வருடங்களுக்கு முன் பள்ளிக்கூடம் போக முடியாது. 30 வருடங்களுக்கு முன் அடுத்தவர் வீட்டிற்குள் போக முடியாது. இது பரவலான முறை ஆனால் இன்று. இவற்றில் பெரும்பாலும் மாறி இருக்கின்றது. இன்னும் ஒன்றிரண்டு இடங்களில் இவை மாறாமல் இருப்பது வருந்த தக்கது தான். இன்று என் வீட்டில் என் நண்பர்கள் வந்தால் அனைவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுகிறேன். இது அடுத்த தலைமுறைகள் திருமணம் செய்யும் அளவுக்கு ஒன்றாவார்கள் என நன்புகிறேன், அதற்காக என்னால் ஆனதை செய்வேன்.

  நண்பா பகத் நான் ஒன்றும் நீங்கள் குறிப்பிட்டதை போல் ஜாதி வெறியன் அல்ல. அதற்காக தவறு இருந்தால் ஆள் பெயரை, ஊர் பெயரை குறிப்பிட்டு எழுத வேண்டும், பொதுவாக ஜாதியை பற்றி யாரேனும் பொதுவாக குறிப்பிட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

 7. i read this so long i feel that , we need do give up and support all people in nation. now i dame sure, no use how much u support these people never change.. yes i assure you you,,,i will support the cast system… i return to india.. to support my thevars,,, you ignited me.. thanks… until you people keep on flame us.. we get united strong … and we retain our power politics..soon.. thanks again.. i want more article likes this then only i can make my nuetral people to get awake against you stupids..
  Rajan Grand son of Arulmozithevan alias Rajaran

 8. என்னுடன் பணிபுரிந்த தேவர் இனத்தை சேர்ந்த நண்பர் கூறியது. பாண்டியன் என்ற பெயர் அவர் இனத்துக்கான (அடையாலம்) பெயர் என்றும் தாழ்த்தப்பட்டவர் என அவர்களாள் கருதப்படும் சாதியினர் அப்பெயரை வைத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டார்களாம். மீறினால் அடி, வெட்டு, குத்துதானாம்.

  இது உண்மையா? இல்லையென்றால் நண்பர் முருகேசன் மறுத்து கூறட்டுமே.

  நட்புடன் – நித்தில்

 9. Not only thevar,

  Nam nattil ithu pol anaithu sathi inarum sathi veri pidithavarea.

  P,M.K. enum Jathi katchi muthalil Vanniyar katchi aha irunthu, aha ithu velaikkaahthu endru therinthu indru viduthalai chiruthaihalil ullor en thambihal endranar.

  eanendral Jathi koru katchi nadathubhavarhal ellamea thannudiya kulathukku ethuvum saiyyavillai, thangaludiya kudumbathukku than anaithu vasathikalaiyum saihindranar.

 10. நண்பா நித்தில்,

  //என்னுடன் பணிபுரிந்த தேவர் இனத்தை சேர்ந்த நண்பர் கூறியது. பாண்டியன் என்ற பெயர் அவர் இனத்துக்கான (அடையாலம்) பெயர் என்றும் தாழ்த்தப்பட்டவர் என அவர்களாள் கருதப்படும் சாதியினர் அப்பெயரை வைத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டார்களாம். மீறினால் அடி, வெட்டு, குத்துதானாம். //

  இல்லை, எல்லோரும் பாண்டியன் என்ற பெயரை பயன் படுத்துகிறார்கள், இதில் ஜாதி வித்தியாசம் இல்லை. ( உ.ம, ஜான் பாண்டியன், கணேச பாண்டியன்…)

  இதற்கும் மேல் பதில் எழுதினால், என்னை ஜாதி வெறியன் என முத்திரை குத்துவார்கள். அதனால் இத்துடன் விடை பெறுகிறேன். ஆனால் ஆரோக்கியமான கட்டுரைகளுக்கு, பதில் எழுதுவேன்.

  நன்றி

 11. நண்பர் முருகேசனின் தகவலுக்கு நன்றி. என்னுடன் பணிபுரிந்தவர்க்கு சாதிப்பற்று சிறிது அதிகமாக இருந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ அவருக்கு சிரிப்பு நடிகர் விவேக் அளவிற்கு வடிவேலுவை பிடிக்காமல் இருந்தது. எது எப்படியோ சாதிப்பற்றை அடுத்த தலைமுறைக்காவது கொண்டுபோகாமல் இருந்தால் நல்லது.

  நட்புடன் – நித்தில்

 12. //நண்பா இந்த ஜாதி அமைப்பு தெரிந்தோ தெரியாமலோ நமக்குள் வந்த ஒரு மனோவியாதி, இதை நீங்கள் நினைப்பது போல் உடனடியாக நீக்க முடியாது.//

  இப்படி சொல்கிற நண்பர் முருகேசன்… அடுத்த பத்தியில் சொல்வது..

  //நான் ஒன்றும் நீங்கள் குறிப்பிட்டதை போல் ஜாதி வெறியன் அல்ல. அதற்காக தவறு இருந்தால் ஆள் பெயரை, ஊர் பெயரை குறிப்பிட்டு எழுத வேண்டும், பொதுவாக ஜாதியை பற்றி யாரேனும் பொதுவாக குறிப்பிட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.//

  சாதி என்பது மனோ வியாதி என்ற அளவிற்கு தெளிவாக பேசும் நண்பர்.. சாதி மறுப்பை ஆதரிக்கிறார் என்று நினைக்கும் பொழுது , தானது சாதியை ஒருவர் விமர்சிக்கும் பொது வெகுண்டு எழுகிறார்… மனோவியாதியை அவர் நேசிப்பது மட்டும் அல்லாமல்.. நமக்கும் அதனை கற்பிக்கிறார்.. அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிலப்பதிகாரம் என்ற கதையையும், ராஜ ராஜன் என்ற கதையையும் சொல்லி.. அதற்கு, நண்பர் அறிவுடைநம்பி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார்.. ?
  இது வரை தோழர் வினவு அவர்கள் குறிப்பிட்ட தென் மாவட்டங்களில் தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் சாதிப் பிரச்சினையில் மேல் சாதியினரின் குறிப்பாக தேவர் சாதியினர் பங்கு இல்லை என எங்கும் நிறுவ முயலவில்லை.. அதற்க்கு மாறாக எங்கள் சாதிதான் காவல் துறையிலும், ராணுவத்திலும் அதிகமாக உள்ளது என்று மீண்டும் சாதிப் பெருமையை பேசுகிறார்… இப்படிப்பட்ட சாதி வெறி உள்ள எந்த ஒரு நபரும் காவல் துறையில் இருந்தால்… ஒரு தலித், தேவரால் தாக்கப்படும் பொது.. யாரை ஆதரிப்பார்..?
  பல தேவர்கள் காவல் துறையில் உள்ளனர் என்று பெருமையை விளக்கும் நண்பர்.. பல தேவர் சாதியினர் குற்றவாளிகளாக சிறைக்கு உள்ளும், சிறைக்கு வெளியேயும் இருப்பதை பற்றி என்ன சொல்ல விரும்புகிறார்..?
  //எனக்கும் அனைத்து ஜாதியிலும் நண்பர்கள் உண்டு. நாங்கள் ஒரு தட்டில் சாப்பிடுவதும் உண்டு. உனக்கு உன் வீடு., எனக்கு என் வீடு. //
  இது கேட்க மிக சரியாகத் தோன்றினாலும் உனக்கு உன் வீடு எனக்கு என் வீடு என்று சொல்வது.. உனக்கு உன் கோவில் அதனால் என் கோவிலுக்குள் வராதே… உனக்கு உன் வீதி அதனால் என் வீதிக்குள் வராதே.. என்ற வாதத்திற்கு ஆணிவேராக இருக்கிறது..
  தனது சாதி வீரமும், ஆண்மையும் உள்ளது என்று கூறும் வேளையில், மறைமுகமாக மாற்ற சாதிகளை கோழைகள் என்று கூறுகிறார்..

  எவ்வளவுதான் நாம் சொன்னாலும் அந்த மதுரை மண் அளவுக்கு அதிகமான ரத்தத்தை வீணாக இது போன்ற சாதி வெறியில் இழந்து உள்ளது… இன்னும் அந்த கொடுமை நடந்து கொண்டு உள்ளது.. மக்களின் எழுட்சி இவர்களின் சாதி வெறியை வென்று எடுக்கும்.. பெரியார், அம்பேத்காரின் கனவு மெய்ப்படும்…

 13. தென் தமிழ் நாட்டில் தேவர்களும் தேவரினதவரும் வெட்டிக்கொண்டும அடித்துக்கொண்டும் சாகிறீர்கள்… அதை பார்த்து கர்நாடகத்து காரன் ‘தமிழன் ஒரு காட்டுமிராண்டி’ என்கிறான். வட நாட்டவனோ ‘south indian’ ஐ கேவலமாக பார்க்கிறான் … அவனை பிரிடிஷ்காரன் ‘paaki’ என்று கேவலமாக பேசுகிறான்… அதே ப்ரிடிஷ்காரனின் கலாச்சாரத்தை தமிழனாகிகய நாம் கேவலமாக பேசுகிறோம்… இதில் யார் தான் மூத்த/பெரிய குடி?
  முருகேசன் அவர்கள் தங்களின் குலத்தின் பெருமையை பற்றி பெருமையாக நினைத்துக் கொள்வது தவறில்லை… அனால் எவ்வளவு நாள் தான் பெருமை அடித்து கொள்ள போகிறீர்கள்? தங்களால் என்ன சிறப்பு தங்களின் இனத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கின்றது ?

  https://www3.nationalgeographic.com/genographic/

  [If you want to know your origins, send your gene sample… probably your forefathers would have come from present Iran]

  இதில் உள்ள research data வின் படி இவ்வுலகின் அணைத்து மக்களும் ஒரே குரங்கினதினில் இருந்து தான் வந்தனர்.[irrespective of european, american, indian, hindu, muslim, oc, bc, mbc] அப்படியிருக்க நாம் அடித்து கொள்வது அர்த்தமே இல்லை.

  அதே சமயம் வட தமிழ் நாட்டில் உள்ள எனக்கு தேவரைப்பற்றி பாட புத்தகத்தில் படித்ததை தவிர வேறெதுவும் தெரியாது. அவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று இங்கு வந்த எனக்கு இப்படியொரு வலைப்பதிவு. சாதியினை மறந்து நமது ஒற்று மொத்த சமுதாயத்தின் உயர்வை எப்போது எண்ண போகிறோம் என்று தெரியவியால்லை.

  வயதில் சிறியவனாக இருந்தாலும் ‘rajan’ ஐ பற்றி special ஆக குறிப்பிட விரும்புகிறேன். ‘ass hole’ என்பதின் அர்த்தம் அவருக்கு அருமையாக பொருந்தும். He is a typical example of a person with short sighted crooked vision.

 14. I born as Thevan ..but i want to live as Human..
  I treat everyone as my brother …everyone has to change …..soo don’t blame others ..let we change ourself first and make others to change.don’t hurt others ..
  vasupandian

 15. தான் சாதி வெறியன் இல்லை என்று கூறி கொண்டு, தன்னுடைய சாதிக்காக வக்காளத்து வாங்க இத்தனை பின்னூட்டங்கள். இது தமிழ்நாட்டின் கேவலமான நிலையை எடுத்து காட்டுகின்றது. ஒரு வலைப்பதிவு கட்டுரைக்கே இத்தனை எதிர்ப்பு என்றால், களத்திலுள்ள நிலைமையை பற்றி என்ன சொல்ல…

 16. பகத் தின் பின்னூட்டங்கள் கலக்கல்.

  சாதிகளையே தவிருங்கள் என்று போராடி வரும் வேளையில் பார்பனர்களைப் போலவே தேவர்களும் சாதிப் பெருமை பேசுவது தமிழர்களிடையே பிரிவினையையே வளர்க்கும்.

  எல்லோரும் மனிதர்கள்தான் இந்த சாதிக்காரனின் மகளை மற்ற சாதிக்காரனின் மகன் மணந்தாலும் கண்டிப்பாக பிள்ளைப் பிறக்கும். இது தெரிந்தே அறிவீனர்கள் சாதிப் பெருமை பேசுகிறார்கள்.

  எந்த ஒரு தனிமனிதனின் நற்செயலையுமே சாதியின் குணமாக பார்பது அந்த மனிதருக்கு இழுக்குதான். எனவே எங்கள் சாதியில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பது சாதிக்கு ஆள்பிடிக்கும் வேலையே அன்றி மனிதனாக சாதிக்கும் வேலை அல்ல.

 17. நண்பர்களே ..நாம் எல்லோரும் தமிழர் என்ற உணர்வே போதும் ..ஜாதிவெறி வேண்டாம் …
  நெல்லை ப. பழனி ராஜ்

 18. சாதி ஒழீய வேண்டுமானால்,சமுக கட்டமைப்பை ஓழீக்கவேண்டும், கட்டமைப்பை ஒழிக்க, புதிய ஜனநாயகப் புரட்சி வேண்டும், சாதி வெறியர்களுக்கு புரியாது?????

 19. இங்குள்ள எல்லோருடைய கருத்தையும் படித்தேன் சில விஷயங்கள் புரிந்து கொண்டேன் நான் ஒரு தேவர் இனத்தை சார்ந்தவன் ஆனால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் பல ஜாதியை சேர்ந்தவர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் ஜாதி மதம் என்பதெல்லாம் ஒரு அடையாளம் அவளவுதான் அதை நாம் பொண்ணு குடுக்கவும் பொண்ணு எடுக்கவும் மட்டும் பயன்படுத்தினால் போதும் மற்றபடி எல்லோரும் நண்பர்களே அவரவர் வேலையை அவரவர் செய்தால் ஒரு பிரச்சினையும் இல்லை அடுத்தவர் வேலையில் தலையிடும்போதுதான் பிரச்சினை உருவாகிறது இங்கு பிரச்சினை என்னவென்றால் எப்பொழுதும் நம்பர் 1 க்கும் நம்பர் 2 க்கும்தான் போட்டி அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது தேவரின மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் அவர்கள் அராஜகம் செய்கிறார்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் இவர்கள் அராஜகம் செய்கிறார்கள் மற்றபடி இதற்கும் பசும்பொன் தேவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது மற்றபடி தேவர் ஜெயந்தி அன்று அட்டூழியங்கள் செய்வது மறுக்க முடியாத ஒன்று அவர்களை நாங்களே வெறுக்கிறோம் அவர்களை நாங்கள் திருத்துவோம் விழாவை அமைதியாக நடத்தி எல்லோரையும் அவர்களாக வர வைப்போம் மற்றபடி எனக்கு இம்மானுவேல் மேல் எந்த ஒரு அபிப்ராயமும் கிடையாது கரணம் அவர் ஒன்றும் சாதிக்கவில்லை அதே நேரத்தில் மாவீரன் சுந்தரலிங்கம் கக்கன் தற்பொழுது திருமாவளன் மற்றும் ஒருவர் அவர் பெயர் தெரியவில்லை மாவீரன் பூலித்தேவன் படையில் பணி செய்தவர் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு காரணம் அவர் ஒரு ஒற்றன் ஒரு முறை அந்நிய நாடு படை எடுத்து வருவதை உளவறிந்து தன் நாட்டுக்கு சொல்ல போகும்பொழுது அந்நியரால் கைது செய்யப்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டு விட்டார் தன் கையை வெட்டிவிட்டு அந்த சேதியை கொண்டு சேர்த்து தன் நாட்டை காத்தவர் இவர் போன்ற தியாகிகளை நாங்கள் மறக்கவில்லை அதே நேரத்தில் கிருஷ்ணசாமி, கணேசபாண்டியன் போன்ற கலவரக்காரர்களை நாங்கள் வெறுக்கிறோம் இது எனுடைய கருத்து மட்டுமல்ல பொதுமக்களின் கருத்து 

  • சாதி பெண் கொடுக்க மட்டும். ஏன் அதுமட்டும்? எந்த சதியில் திருமணம் செய்தால் என்ன?

   என்ன ஒரு சாதி வெரி…..பிரகு என்ன ஒட்ருமை வழுது….!

 20. summa thevari pattri kurai solluvadhileye kalathai ottamal konjam ulaithu munnera valiyai parungal.itthanai naalum immanuel birthday kondadamal ithanai naal kalithu thidir yanodhyam engirundhu vandhadu.poti thane.

 21. //தமிழக அரசர்களில் தொன்மையான மாமன்னன்-ராஜ ராஜ சோழன்(கி.பி.1000) தோன்றிய முத்த தமிழ் குடி- இன்றைய தேவர் இனம். அந்த மாமன்னனிடம் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும் கண்டீர்களா?//

  //hello mr. murugesan don’t give falls news, the great raja raja chozhan and nedunchzian are belongs to devendra kula vellar community so that only the govt and your pepole never show any interest in this kings.//

  ஹஹஹா ……..why all are giving falls news…. still the descendants of chola kings are living in chidambaram… they comes under vanniya kula kshathriyas…

  சோழர்களின் நேரடி வாரிசுகள் அவர்களின் கடைசி தலை நகரான கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகாமையிலும் பிச்சாவரத்திலும் வசிக்கின்றனர். அவர்கள் வன்னியகுல க்ஷத்ரிய குலத்தின் கீழ் பட்டியளிடப்பட்டுள்ளனர். முக்குலத்தோர் வசிப்பது தென் தமிழ்நாட்டில். இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுவது எந்த விதத்தில் என்று புரியவில்லை. தேவர் என்ற பட்டத்தை சில சோழ அரசர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ராஜராஜ சோழன் உடையார் என்ற பட்டம் கொண்டிருந்தான். அதற்காக சோழர்கள் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியுமா? உடையார் என்று தனி சமூகம் உள்ளது. வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உடையார் என்ற பட்டபெயர் உள்ளது. மழவரையர், பழுவேட்டரையர், கச்சிராயர் ( பல்லவர்கள் ) போன்ற பட்டப்பெயர்கள் வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் சோழர்களும், பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்திய வட தமிழகத்தில் உள்ளனர். தென் தமிழகத்தின் கள்ளர் சமூகத்தில் சிலருக்கு இந்த பட்ட பெயர் வழங்குவதற்கு காரணம், சோழர்கள் அந்த இடங்களை கைப்பற்றியபோது தங்கள் நெருங்கிய சொந்தங்களை அங்கு பிரதிநிதிகளாக நியமித்தனர். அவர்களே இப்போது முக்குலத்தோர் சமுதாயத்தில் பட்டியளிடப்படுகின்றனர். இவை எல்லாவற்றையும் விட சோழர்கள் தமிழர்கள். தமிழர்களின் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையே. அதை விடுத்து சோழர்களை சாதி அமைப்புக்குள் அடைப்பது சரியல்ல. நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.

 22. தஞ்சையில் வன்னியர்களை கனடிய தேவர் என்று அழிப்பார்கள் .. இவர்களுக்கும் தேவர் பட்டம் உண்டு … மறவர் பாண்டியர் மட்டுமே … சோழர்கள்., சேரர், பல்லவர் வன்னியர் குல க்ஷத்ரியர் …. வரலாறை மாற்றாதீர்கள்….சோழர்களின் நேரடி வாரிசுகள் அவர்களின் கடைசி தலை நகரான கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகாமையிலும் பிச்சாவரத்திலும் வசிக்கின்றனர். அவர்கள் வன்னியகுல க்ஷத்ரிய குலத்தின் கீழ் பட்டியளிடப்பட்டுள்ளனர். முக்குலத்தோர் வசிப்பது தென் தமிழ்நாட்டில். இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுவது எந்த விதத்தில் என்று புரியவில்லை. தேவர் என்ற பட்டத்தை சில சோழ அரசர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ராஜராஜ சோழன் உடையார் என்ற பட்டம் கொண்டிருந்தான். அதற்காக சோழர்கள் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியுமா? உடையார் என்று தனி சமூகம் உள்ளது. வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உடையார் என்ற பட்டபெயர் உள்ளது. மழவரையர், பழுவேட்டரையர், கச்சிராயர் ( பல்லவர்கள் ) போன்ற பட்டப்பெயர்கள் வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் சோழர்களும், பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்திய வட தமிழகத்தில் உள்ளனர். தென் தமிழகத்தின் கள்ளர் சமூகத்தில் சிலருக்கு இந்த பட்ட பெயர் வழங்குவதற்கு காரணம், சோழர்கள் அந்த இடங்களை கைப்பற்றியபோது தங்கள் நெருங்கிய சொந்தங்களை அங்கு பிரதிநிதிகளாக நியமித்தனர். அவர்களே இப்போது முக்குலத்தோர் சமுதாயத்தில் பட்டியளிடப்படுகின்றனர்.
  வன்னியருக்கு மும்முடி சோழனார் , சழனார், தொண்டைமான், சோழனார், சேரனார் , படையாட்சி , பாண்டியனார், அஞ்சாத சிங்கம் போன்ற என்னில் அடங்காத பட்டமும் உண்டு …. அது மட்டுமில்லை க்ஷத்ரியர் பட்டம் கொண்ட ஒரே இனம் வன்னிய இனம் மட்டுமே …. இன்றும் சிதம்பரம் கோவிலில் வன்னியர் இனம் வந்த சோழ குல பாலயகாரகளுக்கு மட்டுமே முடி சூட்ட படுகிறது .. அங்கு வன்னியர் அன்றி வேறு யாருக்கும் முடி சூட்ட படாது .. அந்த உரிமை சோழர் வம்சத்துக்கு மட்டுமே உண்டு … உங்களால் முடிந்தால் கள்ளர்களுக்கு அங்கே முடி சூட்ட முடியுமா ?

 23. கடாரம் வென்றான் ராஜேந்திர சோழன் என்பார் .. அந்த படையை வழி நடத்திய கருணாகர தொண்டைமான் வன்னியர் … அதனால்தான் கம்பர் சிலை எழுபது என்ற நூல் எழுதினார் … அதில் வன்னியரான கருணாகர தொண்டைமான் என்று எழிருப்பார் … ராஜேந்திரா சோழன் கடாரம் வென்ற போதும் , வன்னியர் படை கொண்டே வென்றார் … அதனால்தான் கங்கை கொண்ட சோழபுரத்தை , ஜெயம் கொண்டம் என்னும் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டினார் … அது முழுக்க வன்னியர்கள் வாழும் இடம்….வன்னியர் பெருமை நிலைத்து நிற்கவே , ராஜேந்திரன் அந்த கோவிலை அங்கே கட்டினான்… தேவர் சதி வாழும் இடத்தில் இல்லை …. பாண்டியனை தவிர, வேற யாருக்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது …. சேரர், பல்லவர் அக்னி குல க்ஷத்ரியர் …. அதே போல் தமிழ் நாட்டின் சாதி பட்டியலில் கூட வன்னியர் அல்லது அக்னி குல க்ஷத்ரியர் என்று உள்ளது .. தேவர்க்கு க்ஷத்ரியர் பட்டம் உள்ளதா ?

  தேவர்ப் பட்டம்:
  சங்க காலச் சோழர்கள் முதல் விஜயாலய சோழன், ஆதித்யச் சோழன், பராந்தகச் சோழன் வரை தேவர் பட்டதை யாரும் பயன் படுத்தியதில்லை. பராந்தகச் சோழனின் வாரிசுகளே தேவர் பட்டதைப் பயன்படுத்தியுள்ளனர். பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத் தேவர் வம்சத்தை சேர்ந்தவர். இந்தக் கண்டியத் தேவர்கள் இப்பொழுதும் தஞ்சாவூரில் வசிக்கின்றனர். இவர்கள் வன்னியகுல க்ஷத்ரியாவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

  thevar are coming onlu under pandaya kings

 24. pallavarum, சேரரும் அக்னி குல க்ஷத்ரியர் ….இதுவும் தமிழக சாதி பட்டியல் படி வன்னியர் குல க்ஷதியரில் வருகிறது ….எதை வைத்து நீங்கள் ஆண்ட பரம்பறை என்கிறீர்கள் ….சேதுபதி மன்னரும், மருது பாண்டியர் மட்டுமே தேவர் …..

  அந்த சேதுபதி மன்னர் கூட, சிவகிரி வன்னிய குல பாளையக்காரர் முன் உட்க்கார்ந்து கூட பேசமாட்டார் … நின்று கொண்டுதான் பேச வேண்டும் … இதை பற்றி ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ..

  இருப்பினும் ராஜராஜனை ஒரு தமிழனாக நினைத்து பெருமை பட வேண்டுமே தவிர, அவரை சாதியின் வட்டத்துக்குள் அடைக்க கூடாது …அதுவும் தவறான தகவலை தர கூடாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க