Tuesday, October 8, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

-

தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல?

80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும் கூட மறக்காமல் கொண்டு சென்றனர். அதன் விளைவாக 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது.  தமிழ் சினிமா வசூல், தமிழகத்தில் ஏ,பி.சி என்று பிரிக்கப்படுவது போல சர்வதேச அளவிலும் வினியோகம் செய்து விற்கப்பட்டது. வரவு அதிகமாகியதால் செலவும் பல கோடிகளில் செய்யலாம் என்ற நிலைமையும் உருவானது. சிவாஜி போன்ற குப்பைத் திரைப்படங்கள் இந்த சூழ்நிலையை நன்கு அறுவடை செய்து கொண்டன. இப்படி தமிழ் சினிமாவின் கலெக்ஷன் கல்லா பிரம்மாண்டமாகக் கட்டுவதற்கு ஈழத் தமிழர்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டனர்.

தமிழ்நாட்டின் மக்களெல்லாம் ஈழத்தமிழர்களை அவர்களது போராட்டங்களை வைத்து தெரிந்து வைத்திருக்கும் போது சினிமா நடிகர்கள் மட்டும் தங்கள் படங்கள் வெளிநாடுகளில் ஓடுவதற்கு இலங்கை எனப்படும் நாட்டில் வாழக்கூடிய தமிழர்கள் எனப்படும் சில ஜீவன்கள் காரணமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்பதை வைத்து கொஞ்சம் தோராயமாகவும் அறிந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் வர்த்தகம்தான் தமிழ் சினிமாவின் சமூக உணர்வைத் தீர்மானிக்கிறது என்பதை குசேலன் பிரச்சினையில், பெங்களூருவில் படம் ஓடவேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் பிரச்சினையில் தான் பேசியவற்றுக்கு ரஜினி மன்னிப்பு கேட்டதை வைத்து அறிந்து கொள்ளலாம். அதே மாதிரிதான் தங்கள் படங்களுக்கு கொட்டிக்கொடுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒரு ஆறு மணிநேரம், காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை குளிரூட்டப்பட்ட, கழிப்பிட வசதியெல்லாம் கொண்ட கேரோவான் வண்டிகளெல்லாம் இல்லாமல் நடிகர் சங்கக் கட்டிடத்தின் முகப்பில் பந்தல் போட்டு உண்ணாமல் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். இந்த ஆறுமணிநேர உண்ணாநோன்புத் தியாகம்தான் இனிவரும் ஒருவாரம் ஊடகங்களில் அடிபடப்போகிறது என்பதால் அதற்கு முன் அந்தத் தியாகத்தைப் பற்றி நாமும் நினைவு  கூரவேண்டுமென்பதால் இந்தப்பதிவு.

இந்த ஆறு மணிநேர உண்ணா நோன்புத் தியாகமும் கூட இயல்பாக முடிவெடுக்கப்பட்டு வரவில்லை. ராமேஸ்வரத்தில் பாரதிராஜாவின் தலைமையில் இயக்குநர்கள் நடத்திய பேரணியில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதை சரி செய்வதற்காக, வேறு வழியில்லாமல் ஒரு நிர்ப்பந்தத்திற்காக நடத்தப்பட்டதுதான் இந்தப் போராட்டம். ஒரு பத்திரிகையில் பாரதிராஜா சொன்னது போல இழவு வீட்டிற்கு செல்வதென்றால் பிணம் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லவேண்டுமே ஒழிய பிணம் என்னுடைய இடத்திற்கு வரவேண்டும் என ஒருவர் கோரமுடியாது.  ராமேஸ்வரம் சென்றால் தங்களுக்குரிய ஆடம்பர வசதிகள் கிடைக்காது என்பதால் நடிகர்கள் அதை புறக்கணித்தார்கள். அதனால் ராமேஸ்வரத்துக்கு தார்மீக ஆதரவு அளித்து விட்டு தங்கள் கணக்கிற்காக நடிகர் சங்கத்தில் கூடி போராட்டம் என்று அறிவித்தார்கள்.

நாயகன் நாயகியை தூக்கி ஒரு ரவுண்டு அடிப்பதற்காக ராஜஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும், ஆல்ப்ஸ் மலைக்கும் செல்லும் ஜன்மங்கள் ஈழப் பிரச்சினைக்காக ராமேஸ்வரம் செல்லமாட்டோம் என்று புறக்கணித்ததை என்னவென்று சொல்ல? இவர்களெல்லாம் போராடவில்லை என்று யார் அழுதார்கள்?

நடிகர் சங்க கட்டிடம் இருக்கும் ஹபிபுல்லா சாலை ஆறுமணிநேர உண்ணாவிரதத்துக்காக அமர்க்களப்பட்டது. நட்சத்திரத் தெய்வங்களை ரசிகர்கள் தரிசிப்பதற்காக தெரு முழுக்க சவுக்கு கம்பால் கட்டி க்யூ அமைக்கப்பட்டது. ஆறு மணிநேரமும் திருப்பதி கோவிலுக்கு நிற்பதைப் போல ரசிக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தல, தளபதி, சூப்பர் ஸ்டார், என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். யாரும் ஈழம் என்று மறந்தும்கூட உச்சரிக்கவில்லை. நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக சன் தொலைக்காட்சி தனது செய்தி அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பி சேவையாற்றியது. உலகத்திலேயே ஒரு நாள் முழுக்க சினிமாவை வைத்து நீயூஸ் சேனல் நடத்திய பெருமை சன்னுக்கு மட்டும்தான் சேரும்.

இந்த ஆறு மணிநேர உண்ணாவிரத அறப்போராட்டம் எவ்வளவு பிரச்சினைகள், இழப்புகள், தியாகங்களோடு நடக்கிறது என்பதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தனது உரையில் தெரிவித்தார். இதற்காக பல படபிடிப்புக்கள் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதாம். நடிகை திரிஷாவிற்கு பெங்களூருவில் ஒரு முக்கியமான ஷூட்டிங்க இருந்ததால் வர இயலாது என்றாராம். பிறகு ராதாரவி வற்புறுத்தியதன் பேரில் அதை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். நயன்தாராவும் கூட அப்படித்தான் வந்திருக்கிறாராம். இந்த தாரகைகளும் ஃபுல் மேக்கப்போடு கண்ணாடிகளைத் தூக்கிவிட்டவாறு இடையில் கரைந்து விட்ட அரிதாரத்தை  ஈடுகட்ட முடியவில்லையே, உண்மை முகம் அம்பலமாகிவிடுமோ என்ற சோகத்தோடு குந்தியிருந்தார்கள்.

சேர்ந்தாற் போல நாலு வார்த்தை தமிழலில் பேசத் தெரியாமல் அதற்கும் டப்பிங் வைத்திருக்கும் த்ரிஷா போன்ற அக்மார்க் தமிழ் நடிகைகளெல்லாம் ஈழத்திற்காக ஒரு கிழமையை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பது ஈழத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகப் போகிறது என்றால் ஈழமே நீ செய்த பாவம்தான் என்ன?

பேசிய பல நடிகர்களுக்கு பிரச்சினை என்னவென்றே தெரியவல்லை. ஒன்பது சென்டிமெண்ட் கதைகளை மட்டும் மாற்றி மாற்றி பன்றிக்குட்டிகளைப் போன்ற படங்களாய் எடுத்தும், அதற்கு ஒன்பது பெருக்கல் இரண்டு உணர்ச்சிகளை மட்டும் காட்டத் தெரிந்த நடிகர்களின் உலகம் எவ்வளவு சிறியது என்பது அவர்கள் பேச்சில் தெறித்தது. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஈழத்துப் பிரச்சினைக்காக ஏதோ ஒரு வெட்டி வாரியத்தின் பதவியை ராஜினாமா செய்தாராம். அதை வெளிநாட்டுப் படப்பிடிப்புகளுக்குச் சென்ற போது பல ஈழத் தமிழர்கள் பாராட்டினார்களாம். அதன் பிறகுதான் சிம்பு தன் தந்தையிடம் இலங்கையில் என்ன பிரச்சினை என்று கேட்டாராம். அப்பாவும் முப்பது ஆண்டு வரலாற்றை மூன்று நிமிடத்தில் விளக்க ஈழப் பிரச்சினை என்றால் என்ன என்று சிம்புவுக்கு தெரிந்ததாம்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையை சிம்பு பேசிய போது அனைவரும் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை சன் டி.வியின் ஆன்லைன் எடிட்டர், நயன்தாரா அந்தப் பேச்சை எப்படிக் கவனித்துக்கொண்டிருந்தார் என்பதைக் காட்டியதன் மூலம் புரியவைத்தார். ஈழம் மறைந்து அந்த ஜோடியின் காதல், ஊடல், நெட்டில் வளைய வந்த காட்சிகள் எல்லாமும் பார்ப்பவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்பதை சன் டி.வியின் புண்ணியத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. கிசுகிசுவில் மட்டுமே செய்தியாக அடிபடுவதற்குத் தகுதி கொண்ட இந்த புண்ணியவான்கள் ஈழத்திற்காக குரல் கொடுக்கிறார்கள் என்றால் எந்த மடையானவது  நம்புவானா என்பதுதான் அந்த எடிட்டர் அப்படிக் காட்டியதற்குக் காரணம். இதை அவர் அறிந்தே செய்யாவிட்டாலும் உண்மை அதுதானே? ஒகேனக்கல் பிரச்சினையில் சிம்புவின் அருகில் நயன்தாரா அமர்ந்திருந்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேதியை எல்லா நிருபர்களும் தங்கள் பத்திரிகைகளில் பதிவு செய்ததை ஈண்டு நினைவு படுத்திக்கொள்வது ஈழத்திற்கு நல்லது.

ஆவேசமாகப் பேசிய ராதாரவி இலங்கைப் பிரச்சினைக்காக கிரியேட்டிவாக ஒரு யோசனையை முன்வைத்து அது அமல்படுத்தப்பட்டால் ஈழப் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார். அது ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைத்தால் இந்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்துடன் அதைக் கவனிக்குமாம். இலங்கையில் இருக்கும் எல்லாத் தமிழர்களும் இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் என்பது ராதாரவியின் அன்டர்ஸ்டேன்டிங். இந்த முட்டாள் தனத்தை அடுத்துப் பேசிய விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் மலையகத்தில் இருப்பவர்கள்தான் இந்தியத் தமிழர்கள் மற்றவர்கள் அங்கேயே தோன்றிய மண்ணின் மைந்தர்கள் என்று நாசூக்காகப் புரிய வைத்தார்.

நடிகர் சங்கத்தின் செயலாளரின் அறிவே இந்த இலட்சணத்தில் இருக்கும் போது நாம் மும்தாஜ்ஜின் புரிதல் எப்படியிருக்கும் என்பதை எடிட்டிங் இல்லாமலே புரிந்து கொள்ள முடியுமே? போகட்டும், சினிமாக்காரர்களின் போராட்டத்தில் சிறுத்தைகளுக்கு என்ன வேலை என்ற கேள்வி நமக்கு எழுந்தது. எல்லாம் ஈழத்துக்காக வரும் எந்த ஆதரவையும் விட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்தான்.  இப்படி எல்லோரையும் முடிந்த அளவு பயன்படுத்துவது நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் பிரபாகரனே நினைக்கக் கூடும். எதிரி, நண்பன் குறித்த பாகுபாட்டிற்கு இடமில்லாமல் போராட்டம் தேங்கியிருக்கும் போது  இத்தகைய பயன்படுத்தும் சிந்தனை யாருக்கும் இயல்கபாகத் தோன்றத்தானே செய்யும்?  இந்திய அரசு தங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதோ, சினிமாக்காரர்களின் ஆதரவு தங்களுக்கு தேவை என்று நினைப்பதோ வேறுவேறல்ல.

நடிகர் ஷாம் பேசும்போது வெளிநாடுகளுக்கு செல்லும் போது தங்களை ஈழத்தமிழர்கள்தான் பார்த்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். இது உண்øமையெனும் பட்சத்தில் இதற்காக நாம் ஈழத்தமிழர்களை  மன்னிக்கத் தயாராக இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் சினிமாவின் ஆட்சியில் எக்கச்சக்கமான பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு, பாசிசமும், கோமாளித்தனமும் கலந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை சகித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இதை விட ஈழத்தமிழ் மக்கள் இடையூறு செய்ய முடியாது. ஈழத்தமிழர்கள் சினிமாவுக்காக இறைக்கும் ஒவ்வொரு காசும், ஒவ்வொரு விநாடியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆப்பு வைக்கப் பயன்படுகிறது என்பதை தயவு செய்து புரிந்து கொண்டு அவர்கள் சினிமா மோகத்தைக் கைவிடும் வேலையைப் பார்ப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஈழத்துக்கும் நல்லது.

மலையாளத்திலும், தமிழிலும் ஒரு சேர வண்டியோட்டும் ஜெயராம் என்ற நடிகர் பேசும் போது தான் ஒரு இந்தியன் என்ற தகுதியில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஜெய் ஹிந்த் என்று முடித்தார். ஏற்கனவே இந்தியத் தகுதி ஈழத்தின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக ஆயுதங்களையும்,  பயிற்சியையும் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்திருக்கும் போது  இந்தியன் என்ற உணர்வுள்ள இந்தியர்கள் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அதை விட ஆபத்து என்ன இருக்கிறது?

கமலஹாசன் பேசும்போது தமிழன் என்ற குறுகிய உலகிலிருந்து இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை என்றார். பிரச்சினை என்னவென்றால் கமல் அவர்கள் என்ன அடிப்படையில் இருந்து இதைப் பார்க்கிறார் என்பதல்ல, ஈழத் தமிழ் மக்கள் என்ன பிரச்சினையில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதுதான். என்னவிருந்தாலும் அவர் உலக நாயகனாயிற்றே. யுனிவர்சல் ஹீரோ உள்ளூர் உணர்வில் இருக்கமாட்டார் என்பதற்காக ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசு இனவெறியை விட்டுவிடப்போகிறதா என்ன? தன்மீது தமிழ்க் கறை படிந்து விடக்கூடாது என்பதற்காக கமல் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பேசுகிறாராம். இவர் அளவுக்கு ஞானமில்லாவிட்டாலும் சராசரித் தமிழன் இலங்கைப் பிரச்சினையை எந்த சிக்கலுமில்லாமல்தான் புரிந்து வைத்திருக்கிறான்.

சூப்பர் ஸ்டார் பேசும்போது கொஞ்சம் ஆன்மீகம் கலந்து அடித்தார். அதாவது ஒரு நாட்டில் பாமர மக்கள் குருதி சிந்தும்போது அந்த நாடு விளங்கவே விளங்காது என்று சாபம் கொடுத்தார் ரஜினி. இப்படி சாபம் கொடுத்தே ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை தீர்த்து விடலாம் என்றால் ஈராக் மக்களுக்கு இந்த எளிய ஞானம் ஏன் தெரியாமல் போனதென்று தெரியவில்லை.  அடுத்து சிங்கள அரசை சினிமா பாணியில் -சாடிய ரஜினி, முப்பது ஆண்டுகளாக போரில் வெல்லமுடியவில்லை என்றால்,  சரியான ஒரு ஆம்பிளையாக இருந்தால் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே என்று ஏதோ ஒரு குழாயடிச் சண்டைக்கு பஞ்சாயத்து செய்வது போல பேசினார். இந்தக் குழாயடித் தத்துவத்தையே இலங்கைப் பிரச்சினைக்கான மாபெரும் தீர்வாக அடுத்தநாள் தினசரிகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டது நல்ல வேடிக்கை. ஒகேனக்கல் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ பேசி பின்னர் பிரச்சினை ஆனதால் இங்கு ஜாக்கிரதையாக பேசினார் என்றாலும் எதிர்காலத்தில் ஷங்கர் படம் கொழும்புவில் ஷூட்டிங் செய்ய நேரிட்டு அதற்கு இலங்கை அரசின் அனுமதி வேண்டும் பட்சத்தில் இந்தப் பேச்சுக்கும் மன்னிப்பு கேட்பாரா என்பது தெரியவில்லை.

இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கெல்லாம் நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று தானும், அஜித்தும் பேசியதாக சில பத்திரிகைகளில் வந்த வதந்தி தன்னைச் சங்கடப்படுத்தியதாக பேசிய அர்ஜூன் 23 ஆண்டுகளாக தமிழ் உப்பைச் சாப்பிட்டுக் கொண்டிப்பவன் எப்படி அப்படி பேசுவேன் என்று புலம்பினார். அஜித் பேசும் போது இவையெதுவும் வதந்தி இல்லை என்பதுபோல சினிமா இன்டஸ்ட்ரியை, சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள் என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக் கொண்டார்.  இதன் பொருள் சினிமா உலகிற்கு எதற்கு அரசியல் எல்லாம் என்பதுதான். இந்த அளவுக்கு வெளிப்படையாக இருப்பதால் அஜித்தைப் பற்றி நாம் விமரிசிக்க ஏதுமில்லை.

ஜெயம் ரவி பேசும்போது ஏதோ சினிமா உலகால்தான் ஈழத்து தமிழர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் என்றார். இதை புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். அதே சமயம் அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக போராடும் ஈராக்கின் மக்கள் பொழுது போக்கிற்காக ஹாலிவுட் படங்களைப் பார்த்து மகிழ்வதில்லை என்ற உண்øமையையும், வன்னிக் காடுகளில் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் என்பதையும் புலம் பெயர்ந்தவர்கள் பரிசீலிக்கவேண்டும்.

ராமேஸ்வரத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியதற்காக அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டதை சிலர் குறிப்பிட்டாலும் பலர் குறிப்பிடவில்லை என்பதோடு என்ன பேசவேண்டும் என்பதில் உஷாராக இருந்தனர். மேலும் இந்திய- இலங்கை நாடுகளின் இறையாண்மைக்கெதிராகவோ, மத்திய மாநில அரசுகளுக்கெதிராகவோ எதுவும் பேசக்கூடாது, ஏன் அதிபர் ராஜபக்க்ஷேவைப் பற்றிக் கூட பேசக்கூடாது என்று நடிகர் சங்கம் தடையுத்தரவு போட்டிருந்ததை மன்சூர் அலிகான் போட்டுடைத்தார். இவற்றைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றால் ஈழத்தின் போராட்டத்தில் என்ன எஞ்சியிருக்கும்? பல நடிகைகள் சன்னின் செய்தியாளர்களிடம் தனியாக பேசும் போது ஏதோ இலங்கையில் உள்ள மக்கள் உணவு, உடை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காகவும் அதற்காக உதவி செய்யும் பொருட்டே இந்தப் போராட்டம் நடக்கிறது என்றார்கள். அதாவது ஈழத்தின் தமிழ்மக்கள் பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டு தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக ஏதோ பிச்சை போல யாசகம் கேட்கிறார்கள் என்ற புரிதலில்தான் பல நடிகர்கள் பேசினார்கள். இதை விட ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்த முடியுமா என்ன?

திரைப்படங்களில் சாகசம் செய்யும் இந்த ஹீரோக்கள் நிஜத்தில் எவ்வளவு கோழைகளாக இருந்தால் இப்படி ஒரு தடை உத்தரவு போட்டு அமல்படுத்தியிருப்பார்கள்? பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கே அவ்வளவு அச்சம் இருந்தால் இவர்கள் அல்லல் படும் அந்த மக்களுக்காக என்ன கிழிக்க முடியும்? இல்லை அப்படிக் கிழித்துத்தான் ஆகவேண்டும் என்று யார் அழுதார்கள்?  திரைப்படத்தில் மட்டுமல்ல நாங்கள் நிஜத்திலும் ஹீரோக்கள்தான், தேவைப்பட்டால் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கோமாளி கார்த்திக் பேசும்போது அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.

தனது படங்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் ஆபாசத் தலைப்புக்களை வைத்து ரசிகர்களைத் தந்திரமாக இழுக்கும் எஸ. ஜே. சூர்யா பேசும்போது தான் ஒரு ஈழத்தமிழரின் குடும்பத்தை தத்து எடுத்து வளர்ப்பதாக முழங்கியவர் அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி ஏற்பாடு செய்து கொடுத்தாலும் இவரது படத்தை அந்தக் குடும்பம் குடும்பத்தோடு பார்க்கமுடியாது என்பது ஒருபுறமிருக்க தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்,  அங்கு சென்று ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே அதற்கு எதற்கு மத்திய அரசு? உண்மையில் இங்கு ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்வது கூட இந்த படைப்பாளிக்கு தெரியவில்லை.

ஈழத்து மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தந்தி கொடுத்தால் மட்டுமே தனது ரசிகர்களாக இருக்கமுடியுமென இளைய தளபதி விஜய் பேசும்போது கேட்டுக்கொண்டார். இதே தந்தியை கருணாநிதி கொடுக்கச் சொல்லியதும் அப்படி அனுப்பப்பட்ட தந்திகள் டெல்லியின் குப்பைக்கூடைக்குள் சென்றுவிட்டதும் இந்தப் பச்சைப்பிள்ளைக்கு தெரியாது போலும்! மற்றவர்களை விட வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்திருப்பவர் தான் படிக்கும் தினத்தந்தியில் சினிமா செய்திகளை மட்டும் படிப்பார் போலும். இல்லையேல் கருணாநிதி தன்னை முந்திக்கொண்டது குறித்து தெரிந்திருக்கும். தெரிந்திருந்தால் தந்திக்குப்பதில் ஃபேக்ஸ் அல்லது மின்னஞ்சல்  அனுப்புமாறு கோரியிருக்கலாம். பெரும்பான்மையினரிடம் இந்த வசதிகள் இல்லையென்பது கூட இந்த நடிகர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

நடிகர் சங்க மேடையில் அரசியல் பேசமுடியாது என்று சலித்துக்கொண்ட கேப்டன் விஜயகாந்த் தனியாக செய்தியாளர்களிடம் பேசும் போது மக்கள் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காகவே தி.மு.க அரசு ராமேஸ்வரம் போராட்டம், மனிதச் சங்கிலி, ராஜினாமா மிரட்டல், நடிகர்களை வைத்து உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவதாக எகிறியவர், இலங்கைப் பிரச்சினைக்காக இவர்களிடம் தீர்வு இல்லை என்று ஏதோ அந்தத் தீர்வு இவரது சட்டைப் பையில் பத்திரமாக இருப்பதுபோல சீறினார். நடிகர்களின் உண்ணாவிரதம் ஒரு ஸ்டண்ட் என்று தெரிந்திருக்கும் போது இவர் மட்டும் என்ன வெங்காயத்துக்கு அங்கே வந்து வீரவசனம் பேசிவிட்டு செல்லவேண்டும்?

திருமண விருந்தில் ஒலிபெருக்கியின் மூலம் மொய் எழுதியவர்களின் பெயரையும், தொகையையும் அறிவிப்பது போல யார் யார் எவ்வளவு மொய் அழுதார்கள் என்பதை இந்த அரிய உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் அறிவித்தார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரிரு இலட்சங்களில் தங்களது மனிதாபிமானத்தைக் காட்டினார்கள். மொத்த கணக்கும் 45 இலட்சத்தோடு முடிந்து போனது. ஒரு லோ பட்ஜட் படம்கூட ஐந்து கோடி ரூபாயைத் தயாரிப்புச் செலவாகக் கோரும் தமிழ் திரையுலகில், ஒரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஒரு கோடியை அள்ளிவீசும் வள்ளல்கள் இருக்கும் தொழிலில் ஈழத்துக்காக ஒரு கோடியைக்கூட தேற்ற முடியவில்லை என்றால் இவர்களது யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். முக்கியமாக இந்தத் தருமப்பணத்துக்காகவா ஈழத்து மக்கள் அங்கே துயரத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்? அவர்கள் கோருவது அரசியல் ரீதியான ஆதரவை, குறைந்த பட்சம் இலங்கை ராணுவத்திற்கு உதவும் இந்திய அரசு அதை நிறுத்த வேண்டும் என்பதைத்தான். அதைப் பற்றி பேசுவதற்கு அஞ்சும் வீரர்கள் வீசி இறைத்த பணத்தின் மூலம் தங்களது பங்களிப்பை மாபெரும் சாதனையாகக் காட்டிக்கொண்டார்கள்.

இதை நேரடியாக ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சி நடிகர்கள் அல்லாத சினிமா தொழிற்சங்கத்தினர் பேசும் போதும், அல்லது பிரபலமாகாத நடிகர்கள் பேசும் போதும் கொஞ்சும்கூட சுரணையின்றி விளம்பரங்களைப் போட்டு கல்லாக் கட்டியது. காலையில் காமரா முகப்பில் அமர்ந்திருந்த நடிகர்களுக்கு ஆளுக்கொரு தினகரன் பேப்பரை கொடுத்து புரட்டுவதைக் காண்பித்த சன், மாலையில் அவர்களது படத்தை வண்ணத்தில் போட்டு தமிழ் முரசில் பதிப்பித்து அதையும் கொடுத்து புரட்டுவதைக் காண்பித்தது. ஈழத்தின் தயவில் மலிவான இந்த விளம்பரத்தை மேற்கொள்வதற்கு அவர்கள் வெட்கம் ஏதும் கொள்ளவில்லை.

நடிகர் வினுச்சக்கரவர்த்தி பேசும் போது நடிகர்கள் ஐந்து ரூபாய் கொடுத்தால் அவனது ரசிகர்கள் ஐந்து கோடி கொடுப்பார்கள் என்றார். உண்மைதான். அப்படித்தான் தமிழ்நாட்டின் பண்பாட்டுத்தரம் இருக்கிறது. ஆனால் காட்சிக்கொரு வண்ண ஆடைகளை மாற்றியும், படத்துக்குப் படம் வித்தியாசமாய் குத்துப்பாட்டு ஆடியும்,  புழுதி பறக்கும் வகையில் சண்டைக்காட்சிகளில் தூள் பரப்பியும் சமூக சேவை செய்யும் இந்த ஜிகினாக்காரர்களை வைத்துத்தான் தமிழக மக்கள் ஈழத்திற்காக உதவவேண்டுமென்றால் அதற்குப் பதில் ஈழத்து தமிழர்கள் சிங்கள அரசிடம் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகலாம்!

_________________________________

 

  1. //இந்தியத் தகுதி ஈழத்தின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக ஆயுதங்களையும், பயிற்சியையும் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்திருக்கும் போது இந்தியன் என்ற உணர்வுள்ள இந்தியர்கள் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அதை விட ஆபத்து என்ன இருக்கிறது?//

    //கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரிரு இலட்சங்களில் தங்களது மனிதாபிமானத்தைக் காட்டினார்கள். மொத்த கணக்கும் 45 இலட்சத்தோடு முடிந்து போனது. ஒரு லோ பட்ஜட் படம்கூட ஐந்து கோடி ரூபாயைத் தயாரிப்புச் செலவாகக் கோரும் தமிழ் திரையுலகில், ஒரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஒரு கோடியை அள்ளிவீசும் வள்ளல்கள் இருக்கும் தொழிலில் ஈழத்துக்காக ஒரு கோடியைக்கூட தேற்ற முடியவில்லை என்றால் இவர்களது யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். முக்கியமாக இந்தத் தருமப்பணத்துக்காகவா ஈழத்து மக்கள் அங்கே துயரத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்?//
    ……………………………………………………………………….
    ………………………………………………………………………..
    அனைத்தும் உண்மை.
    யாருக்கு போடுகிறாய் பிச்சை ?????

  2. நல்லதொரு பார்வைத் திரட்டு.. கூரிய விமர்சனங்கள்.. ஆனால் இவர்களையெல்லாம் நம்பியா ஈழப் போராட்டம் ஆரம்பித்தது? அவரவர் ஒவ்வொரு காரணங்களுக்காக கலந்து கொண்டார்கள்.. செய்தவற்றுக்கு நன்றி சொல்லி விட்டு நடையைக் கட்டுவோம்..

  3. pirichu menjuttenga!Intha maykanunga summa irundala pothun,wat way these guys are eligible to organize any protests.They are business man and tamilnadu ennakkavudu thirundanam

  4. Well Said…

    Silar pesum poothu erichal than vanthathu…..

    yenna solli yenna puniyam…

    anga avanga kastapadarathu thinnam… anthai vaithu inge evanga arithaaram poosi poliyaai mulanguvathum thinnam….

  5. //நல்லதொரு பார்வைத் திரட்டு.. கூரிய விமர்சனங்கள்.. ஆனால் இவர்களையெல்லாம் நம்பியா ஈழப் போராட்டம் ஆரம்பித்தது? அவரவர் ஒவ்வொரு காரணங்களுக்காக கலந்து கொண்டார்கள்.. செய்தவற்றுக்கு நன்றி சொல்லி விட்டு நடையைக் கட்டுவோம்..//

    லோஷன் கருத்தை ஒத்துப் போகிறேன். எதோ ஒரு கட்டுபாட்டின் பெயரிலேயே நடந்ததே ஒழிய உணர்வுப்பூர்வமாக நடக்கவில்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்

  6. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு விளம்பரமே. இதனால் லாபம் அடைந்தவர்கள் நேரடி ஒளிப்பரப்பு என்ற போர்வையில் சுரணையின்றி விளம்பரங்களைப் போட்டு கல்லாக் கட்டிய சன் தொலைக்காட்சிதான். Shame on you Maran…

    நட்புட்ன் நித்தில்

  7. ஐயோ பாவம் 8 மணி நேரம் (புர்ச்சி தலைவர் காவிரி பிரச்சனைக்காக 8 மணி நேரம் சாப்டாம இருந்தமாதிரி) போராட்டத்த!!! 6 மணி நேரம்னு எழுதிட்டீங்கனு வினவு அவர்களை வினவலாமா.

    நட்புடன் நித்தில்

  8. thamil pada herokkalaiyum avarkalin padankalaiyum sakasankalaiyum thinam thinam poorippudan peasum nammavarkal, namathu mannin viduthalaikkaka thileepan millar enru 20,000 thai kadanthu sellum emathu veerarkalukku avarkalin manathil ninaippathatku idam irukkiratha enru sinthikka vendum

  9. ஒன்றை ஆக்க இருக்கும் கடினம் அழிக்கத் தேவையில்லை. உங்கள் கருத்துகள் எழுந்து வரும் ஆதரவை இல்லாமல் செய்வதற்கே துணை போகும். அவர்களை விட தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் நல்லது. நன்றி.

  10. ஒரு மின் ஊழியர்,ஒரு பொற்கொல்லர், ஒரு ப்ரொக்ரம்மெர், ஒரு தாசி,
    எல்லோரும் எப்படி அவரவர்கள் வேலையை செய்கிறார்களோ அதை
    போல்வே நடிகர் தன்னுடைய வேலையை செய்கிறார். இதற்கு ந்ம்
    ஓவர் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. எலலோரும் ( நஆம்) காட்டும்
    கிரேஸ் நம்முடைய தாழ்வு மனப்பான்மையே !

  11. //அது ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைத்தால் இந்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்துடன் அதைக் கவனிக்குமாம்//

    சிங்கள கடற்படையினால் கொல்லப்ப்டும் மீனவர்கள் எந்த நாடு என்பது ராதாரவிக்கு தெரியாதா? நடுவண் அரசுக்கு எல்லா தமிழனும் ஒன்றுதான் போல

  12. நீங்க வேற இப்படி எழுதிப்போட்டிங்க. இங்கே புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் திரையுலகத்தின் கடைக்கண் பார்வை பட்டதே பெரிய வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அறிவற்ற கூத்தாடிகளைக் கண்டு இந்திய நடுவண் அரசோ, அல்லது இலங்கை அரசோ மிரளப் போவதில்லை என்பது சிறிது காலம் போன பின்பு தான் புரியும்.

  13. Hello Puthiyavan,

    There are millions of Srilankan Tamils who are against the Tamil Tigers (Tamil fascists) are not belongs to EPDP, Karuna group or any other paramilitary group. Please don’t underestimate the strength of Srilankan Tamils against the Tamil Tigers. One way or other way these democratic will defeat the Tamil Tigers.

  14. வினவு கலக்கலா கூறி இருக்கீங்க..

    பதிவு பெரிதாக இருந்தாலும், அருமையாக எழுதி இருக்கிறீர்கள். ஒருத்தர் விடாம அனைவரையும் போட்டு பின்னி பெடலெடுத்துட்டீங்க 🙂

    ஈழ தமிழர்களுக்கு ஆதரவு தருகிறோம் பேர்வழி என்று அவர்களை அசிங்கப்படுத்தாமல் இருந்தாலே போதும் என்று நினைக்கிறேன்.

  15. I am not accept this articale and most of the comments.we are suffering Eelam tamil problom from long times.lot of peoples support from deferent community in the past.after long times Tamilnadu return to support us.the tamilnadu peoples controlled by few ways, the Cinema and actors are one of them.so please let them to support us on their ways,don’t look every thing with the laser eyes,then we can’t find anything right in the world.you blamed all actors,actress and directors.please take this all are in starting point.actors done lots for eelam tamils in the past.if you are young, ask some one more than 40 years old persons.If any actors read this page, what will they thing about us?.yes, they are living in luxury life, becouse they have money and they spend it. thats all their own problum,why they want give all their money for us?.maybe they will give more in future.45 lakhs is not a small amount in wanni.it is more than 1cr.do you know how many eelam tamils drive £90000.00 value vehicles in EUROPE AND CANADA?.some houses have more than two cars like this?why you can’t ask them drive a NISSAN MICRA or ford fiasta? come on, write with sencible in futures.

  16. பிழைக்கப்போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா எனக்கூறுகின்ற வெண்ணெய் அறிவுக்களஞ்சியங்களை போல ராதாரவி பேசியதற்கு , இந்த எழவு உண்ணாவிரதத்தை நடத்தாமல் இருந்திருக்கலாம் . நல்லவேலை திருமா வந்தார் .

    மசாலா படங்களில் ஹீரோவை அடிக்கமுடியாமல் வருகின்ற அடியாடகளை பார்த்து வில்லன் கேட்கும் வசனத்தை ( நீங்க ஆம்பளைகளாடா?) , இங்கே சூப்பர ஸ்டார் , இலங்கை ராணுவத்தை பார்த்து கேட்கிரார் .

  17. ஐயா, இராஜேஸ்வரி சண்முகம்போன்ற இந்திய அடிவருடிகள் (வீரகேசரியில் மேதகு வேலுப்போடி என்று தலைவரைப்ப்ற்றி கதை எழுதியவர், மிகச்சிறந்த தமிழ்ப் போராளி ஆனந்த சங்கரிக்கு தொடர்பு கொடுக்கும் (i mean link from this web) தேனி தளத்திற்கு உங்கள் பதிலிடுகளில் அனுமதித்திருப்பதன் முலம் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்??

  18. நண்பர்களே!
    ஈழம் குறித்து தொடர்ந்து எமது தளத்தில் எழுதி வருகிறோம். அந்தப் பதிவுகளில் இருந்து ஈழம் குறித்த வினவின் நிலைபாட்டை யாரும் புரிந்து கொள்ளலாம். இந்திய அடிவருடிகளை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். அதே சமயம் புலிகள் குறித்தும் எமக்கு சில விமரிசனங்கள் உண்டு. ஆனால் தற்போது இந்தியா ஈழ மக்களுக்கு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்தியே எழுதி வருகிறோம். பின்னூட்டங்கள் போடுபவர்களில் பல அரசியல் சாய்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அதை தடை செய்வதோ அல்லது அவர்களின் கருத்தை எங்களது கருத்தாக புரிந்து கொள்வதோ சரியல்ல என்று கருதுகிறோம். ஈழம் தொடர்பான எமது பழைய இடுகைகளை நீங்கள் படிப்பதன் மூலம் எமது அரசியலைச் செவ்வனே தெரிந்து கொள்ளலாம்.
    நன்றியுடன்
    வினவு.

  19. சபாஷ்.. சரியான செருப்படி..

    ஆனா செருப்பால அடிச்சாலும் சினிமா காரனுக்கு புத்தி வராது… ரொம்ப நல்லது அண்ணேன்னு சொல்லிட்டு போயிடுவானுங்க…

    இதெல்லாம் ஒரு பிழைப்பா…..

    சூர்யா

  20. சுய நலமில்லாமல் நடிகவேள், கலைவாணர் போன்று கொள்கையோ உதவும் குணமோ தற்போது எவனுக்கும் கிடையாது..

    அதுவும் சன் ஆட்டம் ரொம்ப ஒவர்.. ஏண்டா உங்களுக்கு எல்லாமே காசுதானா..??

    இதெல்லாம் ஒரு பிழைப்பா ….???????????

  21. கடலில் தத்தளிப்பவன் கடல் நுரையைக்கூட எட்டிப் பிடிப்பானாம். ஈழத்து தமிழர்கள் யார் ஆதரவளித்தாலும் விமர்சனம் இல்லாமல் ஏற்கவேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.
    ஜெயலலிதாவின் கபட அறிக்கைகளைக்கூட நம்பினார்கள். என்ன செய்வது மூழ்கிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மிதவை தேவை என்பது உண்மை.

    கரையில் இருந்து விமர்சிப்பது வேறு ஒரு பார்வை.

    ஒரு ஈழத் தமிழன்

  22. nalla adi kuduththiddingal. sila nadikarkal meethu kopamaakaththan ullathu. aanaal antha saniyankalin padankalai kavaddukka thookki vachchirukkira enkada sanaththin meethu thaan enathu muthalaavathu aaththiram. kanda idankalil ellaam meyira antha sila nadikaikalukku eelaththup penkalin maanam patti enna theriyum. antha nadikaikal penmai illatha verum alaku yadangal enpathu thaan unmai. sila per unnaa viratham irunthu viddu veeddukku poy mookku mudda koddikkiddathaka arinthen. aththodu ajith enra manitha unarvillatha saniyan nallaa thinnuddu nimira mudiyamal vanthathaam. ivankal ellam oru herovaam. pirapakaran annanin oru mayirukku thaanguvaankalaa. naan ellaraiyum kurai sollavillai. ithai parthapiraku yaarukku kopam varutho avangalaippattiththaan solluren. ithuvellaam enathu aathangaththin pirathipalippuththaan.ithuvarai naan yaaraiyum kurai sollip palakkam illai. ivangalin pichchai kaasai vaangum nilamai engalukke vanthuviddathe. pallikkudam pora pillai saappaadu kaddikkondu pokaamal iruppathum intha unnavirathamum onruthaan. thileepanin maana unarvil oru veethamaavathu intha sila nadikar nadikaikalukku irukkirathaa.

  23. This is not the forum for pro-LTTE or anti-LTTE platform. Look at the writers view. Rajini is going to spend 120 crore [ 1200million indian rupees] for his ROBO [Enthiran] film. Eelam tamils know who is there leader and what is their aim. Only millimeter [not Million] of the people against LTTE.

  24. யோ! யாருயா அது நம்ம சினிமா ஸ்ராருகளை திட்டுறது? ஈழத்தமிழனின் உயிர் போகுதோ இல்லையோ! ஏன் நமக்கு சோறு இருக்குதோ இல்லையோ! நமக்கு சினிமா முக்கியம்!

  25. my first question?
    1) who is good and who is bad?
    2) then second one wat are u coming to say?
    3)you are scolding evry one tat is good..i didnt tell that nothing but,
    Tell us clearly wat is the solution and wat is wrong how solve like that, because a good writer must say both bad and then the solutions.
    i think vinavu is a good writer so tell us clearly the solution of this topic..

  26. சமகால நிகழ்வுகளை பதிவு செய்வதற்க்கு நன்றி.

    மிக கேவலமாக முன் இருக்கையில் யாரை உட்காரவைப்பது என்ற போராட்டமும் நீண்ட நேரமாக நடந்துகொண்டே இருந்தது. பெறியவர் ரஜினியும், கமலும் வரும் வரை தொடர்ந்து.

  27. சரத்குமார் பேசியதை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

    அவர் ஈழத்தின் இன்றைய நிகழ்வுகளை விவரிக்க “மிகவும் கவனமாகக் கேளுங்கள்” என்று விட்டாரே ஒரு உளரல்…

    ஈழத்தின் நிலமையை ஒரு திரைப்படக்கதையின் பாணியில் ஏதோ சொல்ல விளைந்து… தடுமாறி.. உளரி… முடிக்கும் போது ஒன்று கதை புரிந்ததோ இல்லையோ, ஈழத்தின் நிலவரம் இவர்களுக்கு துளியேனும் தெரியவில்லை என்பது மட்டும் புரிந்தது.

  28. என்னையா? இது 150 கோடியில ஒரு படத்தை எடுக்கிறாங்க.வெறும் 45 லட்சம் பிரிந்தது என்றால் இவர்களை திட்ட மனம் வரவில்லை.கேடு கெட்ட இந்த தமிழ் மக்களைதான் திட்ட வேண்டும்.மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள நார்வே,சுவீடன் நாடுகளில் கூட எந்திரன் போன்ற கேவலமான படம் 4 நாட்கள் ஓடியது ஈழத்தமிழர்களின் உதவியால்தான். உண்மையை சொல்லப் போனால் திட்டக் கூட வார்த்தைகள் வரவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க