Thursday, September 19, 2024
முகப்புஉலகம்அமெரிக்காவாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!

வாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!

-

cariobama2அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்களும், அதிபர் தேர்லின் போது ஜான் மெக்கைனின் ஆதரவாளர்களும் வெள்ளை  நிறவெறியை வெளிப்படையாக பேசிவந்தனர். தற்போதைய வாக்கு விகிதத்தில் கூட வயதான வெள்ளையர்கள் மெக்கைனுக்கும், இளவயது வெள்ளையர்கள் கணிசமாக ஒபாமாவுக்கும் வாக்களித்தாகச் செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மையான கருப்பின மக்களும், ஹிஸ்பானிய மக்களும் ஒபாமவை ஆதரித்திருப்பதில் வியப்பில்லை. இப்படி அமெரிக்க சமூகத்தில் வலுவாகக் கருக்கொண்டிருக்கும் நிறவெறியை மீறி ஒபாமா வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான். எனினும் இந்த வெற்றி அமெரிக்க அரசின் செயல்பாட்டை எந்த அளவு மாற்றும் வல்லமை கொண்டிருக்கும் என்பது நமது கேள்வி. ஒபாமாவின் பிரச்சார பீரங்கிகள் மாற்றம்தான் நம்முடைய தேவை, நம்மால் முடியும் என்பதையே தேர்தலின் முழக்கமாக முன்வைத்தார்கள். கீழ்க்கண்ட கேள்விப் பட்டியிலிலிருந்து அந்த மாற்றம் குறித்த பெரிய கேள்வியையும் அதற்கான பதிலையும் புரிந்து கொள்ளலாம்.

  1. அமெரிக்க நகரங்கள், குடியிருப்புகள், உணவு விடுதிகள், காவல் துறை, வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முதலான ஒட்டு மொத்த அமெரிக்காவில் வேர் கொண்டிருக்கும் வெள்ளை நிறவெறி இனிமேல் இல்லாமல் போய்விடுமா?
  2. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்காகத் தரப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை இனிமேல் பொருளாதார அளவு கோலின்படி செய்யலாம் என்று ஒபாமா பேசியிருப்பதற்கும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை அதேபோல மாற்றியமைக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பேசிவருவதற்கும் என்ன வேறுபாடு?
  3. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அமெரிக்கர்களில் பெரும்பான்மையினரும், அமெரிக்கச் சிறைகளில் மெஜாரிட்டியாகவும் இருக்கும் அமெரிக்க – ஆப்ரிக்க மக்களின் யதார்த்தம் இனிமேல் மாறிவிடுமா?
  4. திவாலான அமெரிக்க நிறுவனங்களால் வாழ்விழந்து, வீடிழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சில அமெரிக்கர்களை இந்த வெற்றி எந்த வகையில் எதிர் கொண்டு ஆறுதல் சொல்லும்?
  5. வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தமது வருமானத்தில் பெரும்பகுதியை வீட்டிற்கும், காப்பீட்டிற்கும் ஒதுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை ஒபாமாவின் வருகை மாற்றி அமைத்து விடுமா?
  6. திவாலாகி வரும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை, மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றும் புஷ்ஷின் நடவடிக்கைகள் இனிமேல் நிறுத்தப்படுமா?
  7. ஆண்டுதோறும் பல நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் வேலையிழந்து தவிக்கும் அமெரிக்க மக்களுக்கு அளவிடற்கரிய வேலை வாய்ப்புக்களை ஒபாமா அரசு உருவாக்குமா?
  8. அமெரிக்காவின் சமூக வன்முறைகளுக்குக் காரணமான தடையற்ற துப்பாக்கிகளின் சுதந்திரம் ஒபாமாவால் தடை செய்யப்படுமா?
  9. மேல்நிலைக் கல்வி கற்கவேண்டுமென்றால் ஒரு அமெரிக்க மாணவன் பத்து இலட்ச ரூபாயைக் கடன் வாங்கித்தான் செய்ய முடியும் என்ற நிலைமை இனிமேல் மாறுமா?
  10. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் உலக அளவில் முன்னணியில்  இருக்கும் அமெரிக்காவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?
  11. கிளிண்டனில் தொடங்கி புஷ்வரை ஈராக்கையும், ஆப்கானையும் ஆக்கிரமித்து நடத்தப்படும்  போரைஒபாமா நிறுத்துவாரா? அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுமா?
  12. இசுரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் நயவஞ்சகத்துடன் பின்பற்றப்படும் அமெரிக்காவின் மத்திய கிழக்கின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுமா?
  13. வளைகுடாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரபு நாடுகளை அவை சர்வாதிகார நாடுகளாக இருந்தாலும் தனது செல்வாக்கில் வைத்திருக்கும் அமெரிக்காவின் தூர கிழக்குக் கொள்கைகள் இனிமேல் அரபு நாட்டு மக்களின் நலனுக்காக மாற்றப்படுமா?
  14. அணுஆயுதம் தயாரிக்க முயற்சி செய்வதாகக்கூறி ஈரானை மிரட்டி வரும் அமெரிக்காவின் அணுகுமுறை இனிமேல் ஜனநாயகப்பூர்வமாக அவதாரம் கொள்ளுமா?
  15. பால்கன் நாடுகளில் செர்பியாவை மிரட்டுவதற்காக மற்ற சிறிய நாடுகளை ஆதரிக்கும் கொள்கைகள் இனிமேல் எப்படி பார்க்கப்படும்?
  16. ஆப்பிரிக்க நாடுகளில் கனிமவளங்களைத் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்காக பின்தங்கிய இனக்குழுக்களின் உள்நாட்டுப்போரை மறைமுகமாக ஆதரிக்கும் அமெரிக்க அரசின் ஆப்பிரிக்க சூதாட்டம் இனிமேல் நிறுத்தப்படுமா?
  17. பொருளாதாரத் தடைகளால் கியுபாவையும், வட கொரியாவையும் தொடர்ந்து மிரட்டி வரும் அமெரிக்காவின் ரவுடி அணுகுமுறைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
  18. இந்தியா, பாக்கிஸ்தானை தொடர்ந்து ஒரு ஆயுதப் போட்டியில் வைத்திருப்பதற்காக இரண்டு நாடுகளையும் கூட்டாளிகளாக நடத்தும் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
  19. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை தனது செல்வாக்கில் சிறைபிடிக்கும் புஷ் அரசாங்கத்தின் இந்தியக் கொள்கை ரத்து செய்யப்படுமா?
  20. விடுதலைப் புலிகளைத் தடை செய்ததோடு ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் வருமா?
  21. தென் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழக் குடியரசுகளை உருவாக்குவதற்காக தனது கைக்கூலிகளின் அரசுகளை ஏற்படுத்த எல்லா சதிகளிலும் ஈடுபடும் அமெரிக்க அரசின் தென்னமெரிக்க கொள்கையில் ஏதேனும் மாற்றம் வருமா?
  22. உலக அளவில் அமெரிக்க நலனுக்காக சாம, தான, பேத, தண்ட என எல்லா முறைகளிலும் செயல்பட்டு வரும் சி.ஐ.ஏ உளவு அமைப்பு ஒபாமாவின் காலத்திலாவது சைவப் புலியாக மாறுமா?
  23. ஆயுத ரீதியில் வல்லரசாகவும், பொருளாதார ரீதியில் தற்போது வலுவடைந்து வரும் ரசியாவுக்கு எதிராக முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சதுரங்கக் காய்களை நகற்றி வரும் அமெரிக்காவின் நாட்டம் இனிமேல் தலைகீழாக மாறுமா?
  24. உலகமெங்கும் இருக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், கப்பற்படைகள் எல்லாம் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுமா?
  25. அமெரிக்கா முதலாளிகளின் நலனுக்காகவும்  ஏழை நாடுகளைச் சுரண்டுவதற்காகவும் டாலரை உலகச் செலவாணியாக பயன்படுத்துமாறு நிர்ப்பந்தித்து, அதன் மதிப்பை தேவைக்கேற்றபடி கூட்டியோ குறைத்தோ பொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா?

முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது என்பதே!

_____________________________________________

 

  1. நல்ல அருமையான கேள்விகளின் தொகுப்பு.இது அமெரிக்க அதிபருக்க எட்டுமா? என்பது நமக்கு தெரியாது. ஆனால், நம் நாட்டு மரமண்டை அமெரிக்க அடிவருடிகள் உணர்வார்களா?என்பது இதோடு சேர்த்து கேட்கப்படவேண்டிய கேள்வி?

  2. ஒரு சில கருப்பினத்தவரோ, தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம். சொல்லப்போனால் அடிமைகளை ஆசுவாசப்படுத்துவதற்கே இந்த நியமனங்கள் பயன்படுகின்றன. நடப்பில் நிறவெறியும், சாதிவெறியும் வர்க்கப்பிரிவினை என்ற பொருளாதாரக் கட்டுமானங்களால் பாதுகாக்கப் படுகின்றன.

    அமெரிக்காவிலும் அப்படித்தான். ஒபாமா, கிளிண்டன், மெக்கைன் எவரும் தங்களது பிரச்சார உரைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பை நெருடும் வண்ணம் பேசுவதில்லை. ஈராக் போரோ, பாலஸ்தீனப் பிரச்சினையோ, உள்நாட்டில் வரிவிலக்கோ எதையும் அந்த ஆடுகளத்தின் விதிகளுக்கு உள்பட்டுதான் பேசமுடியும். ஒருவேளை ஒபாமா வென்றுவிடுவதாக வைத்துக் கொண்டாலும், அமெரிக்காவின் வெள்ளை நிறவெறி வீழ்ந்து விட்டதாகப் பொருளில்லை.

    அமெரிக்கச் சமூகத்தின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் நிறவெறியானது தோலின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல. அது சமூகக் கட்டுமானம் குறித்த பிரச்சினை. உலகமயத்தின் விளைவால் அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தைக் குவித்துவரும் வேளையில் அங்கு ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். ஏழைகளில் பெரும்பான்மையினர் “இயல்பாகவே’ கருப்பின மக்கள்தான் என்பதால் அங்கே நிறவெறியும் இயல்பாகத்தான் இருக்கிறது

    இப்படி எல்லாத் துறைகளிலும் வேர் கொண்டிருக்கும் நிறவெறிதான் அமெரிக்காவின் இயக்கத்திலேயே கலந்திருக்கிறது. ஒருசில கருப்பினத்தவர் மேல் நிலைக்கு வந்து விடுவதனால் மட்டுமே நிறவெறி எந்த விதத்திலும் அங்கே முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்து வெட்டப்படும்போதுதான், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கருப்பின மக்களின் விடுதலையும் சாத்தியம்.

    அதுவரை கன்டலீசா ரைஸ், காலின் பாவெல், பாரக் ஓபாமா, மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர்டான், மாஜிக் ஜான்சன், டைகர் வுட்ஸ், டென்சில் வாஷிங்டன் முதலிய கருப்பின மேன்மக்கள் துரோகிகளாகவோ, ஒத்தூதிகளாகவோ, அல்லது கோமாளிகளாகவோ அமெரிக்க மக்களின் பொழுதைச் சுவாரசியமாக்குவதை மட்டும்தான் செய்யமுடியும்.

  3. ஓபாமா! உனக்கு இனி நிம்மதியே இருக்காது! உனக்கு எப்போ வைக்கிறாங்க ஆப்பு? ஆப்பு கண்ணுக்கு தெரியாதுப்பா!

  4. பாரக் ஒபாமா அமெரிக்காவின் அப்துல் கலாம் மட்டுமே. ஒட்டுமொத்த கருப்பின மக்களும் நிறவெறியில் பொசுங்குகையில், இசுலாமிய மக்கள் வேட்டையாடப்படுகையில், ஒபாமா, அமெரிக்க அரசின் face saver-ஆக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார். இந்திய ஊடகங்களின் ஆர்ப்பாட்டமும், அடிமைக் கொண்டாட்டம்தான் அருவறுப்பாக இருக்கிறது.

  5. arumaiyaana kelvikal. anaithu mutivukalum pura choolal nilaikalai charnthey athikaara varkkaththinaraal edukkap padukinrana.. america purach choolal vellaiyarkalaal vativamaikka pattirukkum poluthu antha purach choolal kattukalai thakartheinthu maatru nilaikalai OBAMA naaduvaara enbathu chanthekame..

  6. எதுவும் நடக்கலாம் என்பதை இந்தத் தேர்தல் சொல்லுது. நீங்கள் கேட்பவற்றில் சிலதும் நடக்கலாம். ஜனநாயகத்தின் அடிப்படையே இந்த நம்பிக்கைதான். நம்பிக்கை கொள்ளுங்கள்.

  7. ஓபாமா வந்து விட்டார் உலகத்துக்கே விடுவி வந்து விட்டது என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மவர்களை என்ன சொல்ல! காங்கிரஸ் கட்சியில் கூட கக்கன் இருந்தார்,கஞ்சி குடித்தார்,தெருவில் படுத்தார். அதே மாதிரி காமராஜர் இருந்தார், இப்படி எல்லாம் கதை சொல்வார்களில்லையா? அப்படியா ஒரு பிம்பம் ஓபாமாவுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, உங்கள் கேள்விகளும் கட்டுரையும் அருமை.வினவு

  8. எனக்கு எதுவும் வேண்டாம் ஈழம் அமைய உதவி புரியவேண்டும் செய்வாரா?

  9. For many years I was under an impression like other Indians that the Democratic are support of Indians and India related issues. But I was surprised to see the way the Senate recently voted for the Nuclear agreement.
    All 13 NO votes came from Democratic members!!!!!?!!!!
    see below for the details…

    http://www.senate.gov/legislative/LIS/roll_call_lists/roll_call_vote_cfm.cfm?congress=110&session=2&vote=00211

    Question: On Passage of the Bill (H.R. 7081)
    Vote Number: 211
    Vote Date: October 1, 2008, 08:32 PM
    Required For Majority: 3/5
    Vote Result: Bill Passed
    Measure Number: H.R. 7081 (United States-India Nuclear Cooperation Approval and Nonproliferation Enhancement Act )
    Measure Title: A bill to approve the United States-India Agreement for Cooperation on Peaceful Uses of Nuclear Energy, and for other purposes.

    Vote Counts:
    YEAs 86
    NAYs 13
    Not Voting: Kennedy (D-MA); due to health problem

    NAYs —13 members (state wise)

    Boxer (D-CA)

    Akaka (D-HI)

    Harkin (D-IA)

    Brown (D-OH)

    Conrad (D-ND)
    Dorgan (D-ND)

    Bingaman (D-NM)

    Reed (D-RI)
    Whitehouse (D-RI)

    Leahy (D-VT)
    Sanders (I-VT)

    Feingold (D-WI)

    Byrd (D-WV)

  10. ஒபாமா எந்த மேடையிலும் அவரை ஒரு கருப்பு இன மனிதன் அல்லது
    கருப்பு இன மக்களின் தலைவன் என கூறியது கிடையாது. கருப்பு நிறத்தைக் காட்டி பரிதாப வாக்குகளைக் கேட்கவும் இல்லை.

    ஒரு அமெரிக்கனாக தேர்தலில் நின்றார். வெற்றி பெற்றார். அவ்வளவுதான். அவருடைய தகுதி போதும் என அமெரிக்க மக்கள் நம்புகின்றார்கள்.

    இதில் நாம் ஏன் கருப்புத் தலைவர் என கேள்விகளைத் தொடுக்க வேண்டும்?

    மனிதனை மனிதனாகப் பார்க்கும் மனப்பக்கும் தேவை.

  11. McCain வந்திருந்தாலும் இந்தக் கேள்விகளில் பல பொருந்தும். அதாவது நிறத்தைத் தவிர.

    ஏனெனில் us-President எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் McCain/Obama ரெண்டு பேருக்குமே பொது.

  12. //ஆக்கிரமித்து நடத்தப்படும் போரைஒபாமா நிறுத்துவாரா? அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுமா? //
    Chicago meeting நீங்க பார்க்கலைன்னு நினைக்கிறேன். Watch Here if not

  13. இது என்ன காமெடிக் களமா? இவ்வளவு நகைச்சுவைத் துணுக்குகளையும் ஒரேயடியா, தொடர்ந்து சொல்லி முதல் இடத்துக்கு வருகிறீர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க