‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடியவிடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது.
ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.
அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?
பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.
“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்க பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”
“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”
“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா, நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”
“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”
சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?
ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.
“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally)ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதைவைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.
எம்முடைய முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:
“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”
“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”
“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”
“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”…
இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.
“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.
ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை.
எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.
தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு, போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.
இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.
மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள்.
ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.
அது போலவே, “எஸ்.சி – பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப் பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.
வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது.
உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும்.
ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.
பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக் காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?
திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?
தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்லவைக்கப் பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?
அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறியை விட நீதிமன்றத்தின் சாதிவெறி கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?
எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும்.
ஒளிபரப்பப் பட்ட ஒரு வன்முறை – ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!
மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான் தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும், ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?
“ஏனென்றால் இவை ஒளிபரப்பப் படவில்லை” என்று சொல்லி சமாதானமடைந்து கொள்வோமா? மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனச்சாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா?
அத்தகைய ‘நியாயம்’ ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?
இவையெல்லாம் ஒளிபரப்பப் படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப் பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப் பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.
ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்கவேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது.
தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.
அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?
“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – – இதுதான் காந்தியின் பதில்.
எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்ட போது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.
காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார்.
அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர் சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.
இப்படியொரு பச்சைப் பொய்யைச் சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால் “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால், இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.
தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை.
ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.
அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.
இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம்.
போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?
“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?
நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!
“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை.
இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?
இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ பெயரிடப் படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’.
அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.
சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள்.
தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.
சாதித் தலைவரான தேவரை தேசியத்தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித்தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது.
மிகத் தந்திரமாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.
“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப் படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.
ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது!
எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.
டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.
காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் – டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.
கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்.
“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.
“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.
கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.
“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.
“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.
“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.
“சார் வெளியூர் போல… நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.
என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?
தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.
அவர்கள் பத்து பேர் – நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.
“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன். நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.
இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை.
பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.
ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும்.
ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.
பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.
பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை – அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித் தனமானது!
____________________________________