முகப்புசமூகம்சாதி – மதம்பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !

பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !

-

சட்டக் கல்லூரிப் பிரச்சினையை ஒட்டி சில ‘பழைய’ கதைகளைப் பதிவு செய்கிறோம் – ஏனென்றால் அவை வெறும் பழங்கதைகள் அல்ல. தீண்டாமை என்பது இந்த நாடு முழுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதை.

மீண்டும் மீண்டும் சாதிப்பிரச்சினை குறித்து எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இப்படியொரு பிரச்சினை வெடிக்கும்போது மட்டும்தான் ஆதிக்க சாதியில் பிறந்த ‘நல்லவர்களின்’ கவனம் கூட இதன்பால் திரும்புகிறது. சில பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இது கொஞ்சம் அலுப்பாகக் கூட இருக்கலாம். நமக்கு மெகா சீரியல் அலுப்பதில்லை, கிரிக்கெட் அலுப்பதில்லை, அரைத்த மாவையே அரைக்கும் மசாலா சினிமாக்கள் அலுப்பதில்லை, உண்மை மட்டும்தான் சீக்கிரம் அலுத்துவிடுகிறது.

சட்டக்கல்லூரி தலித் மாணவர்களைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்திருக்கிறார்களாம். அப்பன், ஆயி, மாமன், மச்சான் எனக் கையில் கிடைத்தவர்களையெல்லாம் பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு ‘குற்றவாளிகளை’ பொறி வைத்துப் பிடிக்கிறது காவல்துறை.

“வீடியோ காமெராவின் முன் பப்ளிக்காக உலகமே பார்க்கும்படி ஒரு ‘குற்றத்தை’ செய்த குற்றவாளிகளை போலீசு பிடிக்கத்தானே செய்யும்?” என்று சிலர் மனதிற்குள் முணுமுணுத்துக் கொள்ளலாம்.

தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்பவையெல்லாம் கூட சட்டப்படி குற்றம்தான். இந்தக் குற்றங்களும் பப்ளிக்காக நாடறியத்தான் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தக் குற்றங்களுக்காக எந்தக் காலத்திலாவது தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறதா, அத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா என்பதை “வன்முறையைக் கண்டு மனம் வெதும்பியிருக்கும்” பதிவர்கள் கூறவேண்டும்.

மாறாக, தீண்டாமைக் குற்றத்தை எதிர்ப்பவர்கள்தான் பொய் வழக்குகளின் கீழ் சிறை வைக்கப்படுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் பண்ணைப்புரத்தில் ‘தனிக்குவளைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்’ குறித்த செய்தியை கீழே தந்திருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் மீது ராஜத்துரோக வழக்கு (124-A) உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

ராஜத்துரோக குற்றம் என்றால் என்ன தெரியுமா? சட்டபூர்மாக அமைந்த இந்திய அரசை, சட்டவிரோதமாக வன்முறையின் மூலம் தூக்கியெறிய முயற்சிப்பதுதான் ராஜத்துரோகம் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம்.

“தனிக்குவளையைத் தூக்கியெறிவது எப்படி இந்திய அரசைத் தூக்கியெறிவதாக ஆக முடியும்? அப்படியானால் இந்திய அரசு = தனிக்குவளை என்று ஆகிறதே!” என்று கேட்காதீர்கள்.

அது அப்படித்தான்!

தனிக்குவளை = தனிப்படை

பண்ணைப்புரம் = சட்டக்கல்லூரி

 

 

 

பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பண்ணைப்புரம் கிராமத்தில் பண்ணையாரும் உண்டு; பண்ணையடிமைகளும் உண்டு. செத்துப் போன வடிவேல் கவுண்டர் எனும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் மகன் பிரசாத் என்பவர்தான் இப்போது பண்ணைப்புரத்தின் பண்ணை.

ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் – 400 குடும்பங்கள்,  சக்கிலியர் சமூகத்தினர் – 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில குடும்பங்கள்- என்பதுதான் பண்ணைப்புரம் மக்கள் தொகையின் சாதிவாரியான சேர்க்கை.

நிலங்கள் மற்றும் சிறிய, நடுத்தர எஸ்டேட்டுகளும் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒக்கலிக கவுண்டர்கள். தாழ்த்தப்பட்டோரில் ஆகப்பெரும்பான்மையினர் நிலமற்ற கூலி விவசாயிகள் அல்லது எஸ்டேட் தொழிலாளிகள். பெரும் பண்ணையாரான பிரசாத்தின் பண்ணையில் சக்கிலியர், பறையர் சமூகத்தைச் சேர்ந்த பலர் பண்ணையடிமைகள். பறையர் சமூகத்தில் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் விவசாயம் தவிர சாதி ரீதியான அடிமைத் தொழில்களெதுவும் செய்வதில்லை. மேலும் பறையர் சமூகத்தில் ஓரளவு படித்தவர்களும் உள்ளனர்.

இருப்பினும் பண்ணைப்புரம் தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தேநீர்க் குவளைதான்; சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ கடைக்ககு வெளியே ஒதுங்கி உட்கார்ந்துதான் தேநீர் குடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளூர் சலூனில் முடி திருத்த முடியாது; துணியும் சலவைக்குப் போட முடியாது. பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுதான் நிலைமை.

இந்த இழிவைச் சகிக்க முடியாத தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலர் தேநீர்க் கடைக்குள் போவதில்லை; அல்லது தேவைப்படும்போது யாரையேனும் அனுப்பி வாங்கிவரச் செய்து குடித்துக் கொள்வார்கள்.

உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல; சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்டவர் வீட்டுத் திருமணத்துக்கு வந்த உறவுக்கார இளைஞர்கள் தேநீர் குடிக்கச் சென்றபோது அவர்களுக்கும் தனிக்குவளை தரப்பட்டது. டாக்டர் படிப்பு போன்ற உயர்கல்வி கற்ற அந்த இளைஞர்கள் மனம் குமுறி தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாகக் காசைக் கொடுத்து விட்டு தேநீர் குடிக்காமல் சென்றிருக்கின்றனர்.

உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி ஒடுக்கும் சாதி வெறியர்களுக்கு அருகாமையிலுள்ள மீனாட்சிபுரத்து இளைஞர்கள் என்றால் மட்டும் நடுக்கம். சுமார் 8 மாதங்களுக்கு முன் தங்களுக்குத் தனிக்குவளை என்று புரிந்து கொண்ட மீனாட்சிபுரத்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கூட்டமாகத் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சீரங்கன் என்பவர் தனிக்குவளை தந்தால் உடனே வேல்கம்பால் பாய்லரை ஓட்டை போட்டுவிட்டுப் போய்விடுவார் என்றும் பழைய சம்பவங்களை மக்கள் நினைவு கூர்கின்றனர்.

1956, 57 வாக்கில் இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராசன், சாமுவேல், கருப்பண்ணன், சின்னையா போன்ற ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து  ” ராயல் உணவு விடுதி ” என்ற கடையில் சாதி ஒதுக்கலும் தீண்டாமையும் கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடியுள்ளனர். அது பாவலர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்த காலம். அதன்பின் 1972 வாக்கில் நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளராக மாறிய பாவலர், தனது இறுதிக் காலத்தில் தி.மு.க.வில் இணைந்தார்; பின் 1976-இல் மரணமடைந்தார்.

தனித் தேநீர்க் குவளைக்கெதிராக யாராவது குரல் கொடுத்தால் பிரச்சினை பெரிதாகும் எனத் தெரிந்தால் உடனே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கண்ணாடி கிளாஸ் வைப்பது, ஆனால் அதில் லேசாக ஆணியால் கீறி அடையாளம் செய்து கொள்வது – பிறகு சிறிது நாளில் பழைய வடிவத்துக்கே திரும்பி விடுவது என்பதுதான் பண்ணைப்புரத்தில் நடந்து வருகிறது.

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையொட்டி பண்ணைப்புரத்தில் தனி தேநீர்க் குவளை ஒழிப்புப் போராட்டத்தை அறிவித்தது விவசாயிகள் விடுதலை முன்னணி ( மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பு ). தனித் தேநீர்க் குவளை வைப்பது சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

பண்ணைப்புரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கவுண்டர், கள்ளர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ” 31.10.97 அன்று போராட்டம் ” என்று அறிவிக்கும் தட்டியைப் பார்த்தவுடன் சாதி வெறியர்களிடையே சூடு பரவத் தொடங்கியது. பண்ணையார் பிரசாத் வீட்டில் சாதிவெறியர்களின் சதியாலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இரவோடிரவாகத் தட்டிகள் எரிக்கப்பட்டன.

தட்டி எரிக்கப்ட்டது பற்றி புகார் கொடுக்கப் போன பண்ணைப்புரம் வி.வி.மு தோழர் ( கள்ளர் சாதியில் பிறந்தவர் ) காவல் நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் கோம்பை நகரில் குத்தகை விவசாயியை வெளியேற்றிய டி.இ.எல்.சி பாதிரியாருக்கு எதிராக வி.வி.மு போராடிக்கொண்டிருந்தது. சமரசப் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று தோழர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து சுமார் 11 பேர் மீது பாதிரியாரைக் கொல்ல முயன்றதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

இதுவன்றி கம்பம் வட்டாரம் முழுவதும் வி.வி.மு. தோழர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். முன்னணியாளர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விட்டதால் போராட்டம் நடைபெறாது என்று பிரச்சாரத்தையும் போலீசே கட்டவிழ்த்துவிட்டது.

இருப்பினும் 31.10.97 காலை பண்ணைப்புரம் நேநீர்க்கடை வாயிலில் போலீசு இறக்கப்பட்டுவிட்டது. சாதிவெறியர்கள் சுமார் 300 பேர் கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் தயாராக நின்று கொண்டிருந்தனர். வரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வந்தார்கள்; கையில் கொடியுடன் தீண்டாமைக்கெதிராக முழக்கமிட்டபடியே வந்தார்கள்; முன்னணியாளர்கள் சிறை பிடிக்கப்பட்டாலும் சோர்ந்து முடங்கிவிடாத தோழர்கள் வந்தார்கள்; எதிரில் கொலை வெறியுடன் நின்று கொண்டிருந்த சாதி வெறியர்களையும், கோபத்தால் துடித்துக் கொண்டிருந்த போலீசாரையும் சட்டை செய்யாமல் நேநீர்க் கடையை நோக்கி வந்தார்கள்; சாதி வெறியர்கள் வீசிய கற்கள் தலையில் பட்டுத் தெரித்த போதும் பார்வை சிதறாமல் தேநீர்க்கடை நோக்கி வந்தார்கள்.

தனிக்குவளையைப் பாதுகாப்பதற்காகவே தருவிக்கப்பட்டிருந்த போலீசு அவர்களைப் பாய்ந்து மறித்துப் பிடித்தது. போராட வந்த வி.வி.மு. தோழர்களில் பாதிப்பேர் தேவர் சாதிக்காரர்கள் என்பதை அங்கே கூடிநின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொஞ்சம் ஆச்சரியத்துடன் கவனித்தார்கள்; அதுவும் அவர்கள் சாதிவெறிக்கும், வெட்டு குத்துக்கும் பேர் போன கூடலூரிலிருந்து வந்தவர்கள் என்பதை உள்ளூர் மறவர்களும், கவுண்டர்களும் அதிர்ச்சியுடன் கவனித்தார்கள்.

கைது செய்து கொண்டு போன தோழர்களை கோம்பை நகரத் தெருவில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கிக் குதறின காவல் நாய்கள். ” திமிரெடுத்த பள்ளன் – பறயனையும், அவனுடன் கூடப்போகும் மானங்கெட்ட கள்ளனையும்” வாய்க்கு வந்தபடி ஏசவும் செய்தார்கள்.

போராட்டத்தில் பங்கு கொண்ட பண்ணைப்புரத்தைச் சேர்ந்த தேவர் சாதியிற் பிறந்த தோழர்களின் குடும்பங்களைச் சார்ந்த சாதிவெறி கொண்ட பெண்கள் சாடை பேசினார்கள். ” கொண்டு போய் மகளைப் பள்ளனுக்குக் கட்டிக் கொடு ” என்று வைதார்கள். கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களை இந்த ‘வசவு’ ஆத்திரப்படுத்தாது என்பது கூட சாதிவெறி கொண்ட அந்த மண்டைகளுக்கு உரைக்கவில்லை.

போலீசாரின் சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து கூடலூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார் ஆண்டிப்பட்டி வி.வி.மு. தோழர் செல்வராசு. ” சூத்திரன் என்றால் பாப்பானின் வைப்பாட்டி மகன் என்ற மனுதர்ம ரகசியத்தை பெரியார் அம்பலப்படுத்தினார். தமிழக போலீசில் எத்தனை பேர் ‘தேவடியா மக்கள் ‘ என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஊரில் இன்னின்னார் இருக்கிறார்கள் ” என்று பேசினார் செல்வராசு.

ஆத்திரம் கொண்ட போலீசு அதிகாரிகள் நள்ளிரவில் வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டினர். ராஜத்துரோக (124-ஏ) குற்றத்தில் அவர்மீது வழக்குப் போட்டனர்.

வசவுகள், தாக்குதல்கள், வழக்குகள் …. அனைத்தும் ஒருபுறமிருக்க பண்ணைப்புரத்தில் தனிக்குவளை எடுக்கப்பட்டு விட்டது. பண்ணைப்புரத்தில் பண்ணையாருக்கும் சாதி வெறியர்களுக்கும் அடங்கி மவுனமாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். “இந்த ஊரில் தீண்டாமை இல்லை ” என்று ஊர்க் கூட்டம் போட்டு எழுதிக் கையெழுத்து வாங்க பிரசாத் முயன்றபோது “முடியாது ” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள் தாழ்த்தப்ட்ட மக்கள்.

தனிக்குவளை எடுக்கப்பட்டதைக் காட்டிலும் முக்கியமான வெற்றி இதுதான்.

– புதிய கலாச்சாரம், மார்ச் – 1998 இதழிலிருந்து.

பின்னுரை

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொடியங்குளம் கலவரம் முடிந்து தென்மாவட்டங்களில் நிர்ப்பந்தமாக அமைதி வந்த நேரத்தில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினை தமழிகம் முழுவதும் நடத்தினர். அந்தச் சமயத்தில் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி வெறியைக் கண்டித்து இயக்கம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மை என்பதாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பான்மை என்பதாலும் தீண்டாமை இயக்கத்திற்கெதிராக இரு பிரிவிலிருந்தும்  உழைக்கும் மக்களை திரட்டுவது அவசியம். மேல்சாதியனரை ஜனநாயகப்படுத்துவது, நடைமுறையில் அவ்வளவு சுலபமானதல்ல. இந்த முள் நிறைந்த பாதையில் இன்றும் வி.வி.மு போராடிக் கொண்டிருக்கிறது. பண்ணைப்புரம் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

பத்தாண்டுகளுக்கு பின்னரும் பண்ணைப்புரத்தின் வழக்குகளுக்காக  தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த தேநீர்க்கடை உரிமையாளரும் இறந்து விட்டார். இன்று இவ்வட்டாரத்தில் அனைவருக்கும் யூஸ் ஓன் த்ரோ பிளாஸ்டிக் குவளை கொடுக்கப்படுகின்றது.

இதன் மூலம் சமத்துவம் வந்து விட்டது என்பதல்ல. தீண்டாமையை பாதுகாப்பதற்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது என்பதுதான். பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆதிக்கசாதியினர் கேட்டுக் கொண்டால்  கண்ணாடி குவளையும், தலித் மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிளாஸ்டிக் குவளைகளும் கொடுக்கப்படுவதாக தோழர்கள் கூறுகின்றனர். வி.வி. மு இன்னமும் போராடி வருகிறது.

__________________________________________________

 

 1. ///
  தலித்துகளை அடிப்பதாக படம் பிடித்திருந்தால் இன்று இந்த பதிவில் இரத்த மையால் எழுத மாட்டீர்களா என்ன ? இதைத் தானேயா கேட்கறாங்க ? உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்துவனுக்கு ஒரு நியாயமா ?

  மருத்துவர் ருத்திரன் –

  செத்த பாம்ப அடிக்கர மாதிரி அடிக்கராங்க அந்த காட்டுமிராண்டி பசங்க, இன்னும் பல பேர் சேர்ந்து அடிக்கலையா என்று கேள்வி கேட்பது உங்களது தடுமாறிய மனநிலைக் காட்டுகிறது
  .///

  சென்ற பதிவில் முரளியின் பின்னூட்டத்திற்கு.

  பத்து பேர் ஒருவனை அடிப்பதை விட இதுவல்லவா ஆறாத காயம்.
  பாரதிகண்ணனின் காயங்கள் சில நாட்களில் சரியாகி விடும் ஆனால் இந்த வடுக்கள் மறையுமா?

  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தின‌மும் கிடைக்கும் செருப்ப‌டிக‌ளை முர‌ளி அவ‌ர்க‌ள் அறிவாரா?
  அவற்றுக்கெல்லாம் எப்போது விடிவு?

  எனவே இது வரை நீங்கள் பேசிய தலித் பக்க நியாயத்தை சொல்ல முடியுமா,தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட‌ பொழுதுகளில் நீங்கள் ஆற்றிய எதிர்வினைகள் என்னென்ன என்பதை அடுக்க முடியுமா ஏனென்றால் ஒருமுறை ஒரே ஒரு முறை விதிவிலக்காக‌ அடிபட்ட தேவனுக்காக மனுதாபிமானம் பற்றியெல்லாம் அங்கலாய்க்கும் உங்கள் நியாயம் கடந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டாமா ?

 2. கடந்த இரண்டு பதிவுகளையும் வாசித்தேன்.வாசிப்பு முடிந்த தருணத்தில் எனக்குள் ஏற்பட்ட கோபத்தையும்,கசப்புணர்ச்சியையும், முட்டிக்கொண்டு வெளியேறக்காத்திருந்த‌ அழுகையையும் யார் என்னோடு பகிர்ந்து கொள்ள முடியும் ?

  ஆதிக்க சாதி இந்துவின் மனம் இந்த உணர்ச்சிகளை சாதிய உணர்வாகதான் பார்க்கும்.எம‌து ம‌க்க‌ளுக்கு எப்போது தான் சுதந்திர‌ம் கிடைக்கும்?
  ப‌த்தாண்டுக‌ளுக்கு பிற‌கும் இது தான் நிலை என்றால் இந்த‌ நாட்டை வ‌ல்ல‌ர‌சு என்று சொல்ப‌வ‌ர்க‌ளுக்கு வெட்க‌ம் வேண்டாம்?

  என்னை போன்றவர்கள் கிராமம் என்கிற அந்த நரகத்திலிருந்து நகரத்திற்கு கரை ஒதுங்கி விட்டாலும் அந்த தாத்தாவை போன்ற எனது மனிதர்கள் இன்னும் ‘சாதி’ ப்பேய்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது.
  ந‌க‌ர‌மும் சாதிய‌ போர்வையை தன் மீது போர்த்துக்கொண்டு தான் வாழ்கிறது ஆனால் அது இங்கே மெல்லிய‌தாக‌ இருப்ப‌து ம‌ட்டும் தான் ஒரே வேறுபாடு.

  இது போன்ற‌ ஒடுக்குமுறைக‌ளுக்கு எதிரான‌ உங்க‌ள் எழுத்துபோர் தொய்வில்லாம‌ல் தொட‌ர‌ வேண்டும்.

  வாழ்த்துக்க‌ள்.
  க‌விதா

 3. சட்டக்கல்லூரி பிரச்சனையில் தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ள இரண்டு பதிவுகளும் மிகமிகச் சரியானது, முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து,
  அதிலும் குறிப்பாக இரண்டாவது பதிவான

  “சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!”

  கட்டுரை சரியான தருணத்தில் சாதி இந்துவின் மனதை சுரண்டி பார்க்கும் பதிவு, இதை ப‌ர‌வ‌லாக‌ ம‌க்க‌ளிட‌ம் கொண்டு சேர்க்க‌ வேண்டும்.

  ‘நானெல்லாம் இப்ப‌ சாதி பார்க்கிறதில்லைன்னு’
  சொல்ற ஒவ்வொரு யோக்கியனும்
  ‘அடேயப்பா’
  என்கிற வினவின் இந்த இந்த கேள்விகளுக்கு
  நேர்மையாக ஆஜராகி பதில் சொல்லியிருக்க வேண்டும்.
  ஆனால் இங்கே என்ன நடக்கிறது. காட்ஸில்லா என்கிற நபர்,
  அனேகமாக இவர் பார்ப்பன‌ராக இருக்க வேண்டுமென்று கருதுகிறேன்
  [ஏனென்றால் தொடந்து பெரும்பாலான பதிவுகளில் பார்ப்பன கருத்துக்களை நிலை நாட்ட‌ சலிக்காமல் போராடிவருகிறார், நம்பாளுங்க கருத்தியல் ரீதியாக ரொம்ப நேரம் நிக்க மாட்டாய்ங்க அதான் சந்தேகமாயிருக்கு]
  தொடர்ந்து சாதி வெறியை தூண்டி விட முயலும் வகையில் பின்னூட்டமிட்டு வருகிறார். என‌வே தோழ‌ர் வின‌வு இந்த ஆளுக்கு பதில் கூறிக்கொண்டிருக்காமல் புறக்கணிக்க வேண்டுமென்று கருதுகிறேன்.‌

 4. Dear Mr. Vinaue.

  I strongly encourge to publish ariticles like this. This Higher caste Barbariens will never realise that they are “Thaliths” for Brahmins. We have to do some thing to stop this nonsense, but, i don’t think it will be that easy. I wish i had some thing to destroy the whole caste system. Unfortunatly, the English didn’t do any thing to stop the castiesm. Good luck to you and continue the Good work.

  • I appriciate that you have a good thoughts to destory the castiesm. But do not blame other caste saying like babarians.
   Most of the higher caste people indirectly are still helpiing lower caste people through goverment like “more offer” in vaious way & they (higher caste) themselves are getting down because of lower caste people.

   If you really want to destroy the “castiesm” …ask goverment to stop asking the “caste” beginning from school..etc….stop giving them “offer” & ask government to treat everyone is same.

   you guys take all the offers & getting a good position all over employments…
   Still blaming the other people.

   Whoever talks against the higher caste ,just tell us from your heart ..you have got the good position by your own knowledge…..i accept 5 % of bright people have got good position with their own knowledge.

   Who wrote this article …..Do not write this type chit article never ever….

   Do not mention particular caste

   Do not encourage the ” castiesm ” again as it’s getting changed now a days…you cant change the someone’s thought easily…..

   If someone treats you badly, why you go there & take something …just repeat the same to someone who insulted you…..for that you will have to have a good position in socaity.

   I do not want to hurt anyone from my writing …let me give an example

   one of my friend from upper caste who has got more cut-off marks
   above 290 out of 300….

   one of my another friend (lower caste) who got just 210 out of 300 ….

   What do you think who got the medical sheet..

   my another friend (lower caste) has go the sheet finally by using the offer.

 5. ///பத்தாண்டுகளுக்கு பின்னரும் பண்ணைப்புரத்தின் வழக்குகளுக்காக தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த தேநீர்க்கடை உரிமையாளரும் இறந்து விட்டார். இன்று இவ்வட்டாரத்தில் அனைவருக்கும் யூஸ் ஓன் த்ரோ பிளாஸ்டிக் குவளை கொடுக்கப்படுகின்றது.///

  வெட்கக்கேடு,வெட்கக்கேடு.
  கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்துகொண்டு சாதி பெருமை பேசும் காட்டுமிராண்டிகளே இனியாவது மனிதனாக மாறுங்கள்.

 6. சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையின் பின்ன்னி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது, தொலைக்காட்சிகளிருந்து மறைந்தாலும், வீடியோவாக கணிணி நிறுவன மின்னஞ்சல்களில் ஆங்கில முன்னுரையோடு உலவி் சாதி ஆதிக்கத்திற்கு தார்மீக ஆதரவைப் பெறவும் தலித்துக்களுக்கு எதிராக ஒரு பொதுகருத்தை உறுவாக்கும் சூழ்ச்சி நடைபெருகின்றது அதை முறியடிக்க மருத்துவர் ருத்ரனின் ” dalit fury? ”ஆங்கிலக் கட்டுரையை அனைவருக்கும் சுற்றுக்கு விடுங்கள். பொய்மையின் பேரிரைச்சலை தான்டி உண்மையின் அதிர்வுகளை உணரச் செய்வோம். படியுங்கள் dalit fury?
  http://rudhran.wordpress.com/2008/11/17/dalit-fury/

 7. “இதன் மூலம் சமத்துவம் வந்து விட்டது என்பதல்ல. தீண்டாமையை பாதுகாப்பதற்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது என்பதுதான். பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆதிக்கசாதியினர் கேட்டுக் கொண்டால் கண்ணாடி குவளையும், தலித் மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிளாஸ்டிக் குவளைகளும் கொடுக்கப்படுவதாக தோழர்கள் கூறுகின்றனர். வி.வி. மு இன்னமும் போராடி வருகிறது.”

  சாதிக்கெதிராய் செய்யப்படும் போரட்ட்ம் அனைத்தும் அரசை எதிர்த்தே நடத்தப்படவாண்டும்.மக்களின் சாதி ஆதிக்கத்துக்கெதிரான போராட்டம்
  அரசை எதிர்க்கும் போராட்டமாக மாறும் போது தான் வெற்றி கிடைக்கும்.
  ஏனெனில் அரசு தான் சாதிஆதிக்கத்தின் கேந்திர கண்ணி

  கலகம்

  http://kalagam.wordpress.com/

 8. Where are the black-hats of that beard-man? Why are they keeping quiet this time? For a change, instead of blaming brahmins, can they be real ‘MEN’ and fight this cause?

  I tell you, they never will, because they are mere cowards and need political benefits by shouting the names of Brahmins.

  They are the true nasty bastards.

 9. //பண்ணைப்புரம் = சட்டக்கல்லூரி//
  மூலங்காலுக்கும் தலைமூடிக்கும் மூடிச்சி போடாதீர்….

  //இன்று இவ்வட்டாரத்தில் அனைவருக்கும் யூஸ் ஓன் த்ரோ பிளாஸ்டிக் குவளை கொடுக்கப்படுகின்றது.

  இதன் மூலம் சமத்துவம் வந்து விட்டது என்பதல்ல. தீண்டாமையை பாதுகாப்பதற்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது என்பதுதான். பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆதிக்கசாதியினர் கேட்டுக் கொண்டால் கண்ணாடி குவளையும், தலித் மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிளாஸ்டிக் குவளைகளும் கொடுக்கப்படுவதாக தோழர்கள் கூறுகின்றனர்//

  கண்டிக்கத்தக்கது!!!!

  உங்கள் பதிவு மிக அருமையான பதிவு….
  ஆனால், உங்கள் பதிவு சட்ட கல்லூரியில் நடந்த சம்பவத்தை
  ஒப்பிட்டு அதை ஞாயம் கற்பிக்க முயல்வது வேதனைக்குறியது, வெட்கத்துக்குறியது!!!!

 10. Nice Post, Since the Media’s are supporting Devar Community…pattiyal Inathavar always depressed by them.The Caste hindus never wants to lead or do anything .The real story should be bring out to the public as the mistake lead only by the Bharthi kannan and not by Pattiyal Inathavar . We should avoid tellig SCs and need to tell as Pattiya inathavat

 11. Saromama has arrived to entertain and to educate your kids.
  it has huge massive collections of tamil,telugu,kannada,malayalam cartoons,ryhmes, poems,short stories,bumba collections,dora collections,disney collections,Mr bean, educational videos.

  More than 700 kids videosssssss

  Stay with us , Entertain and Educate your kids

  Saromama.com in Partnership with SCS Matriculation School,chennai going to offer you Online education for Tamil,English and Maths.

  Saromama.com Joining Hands with Goodlife centre chennai for the welfare of orphan kids.

  -Saromama Team
  (http://www.saromama.com)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க