தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.
பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்துவிடுபவர் விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்குமூட்டையை கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியை பக்கத்துவீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு செய்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் …எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன். ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பதுபோல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன், சிந்தனையில் அவர் அறியாமலேயே ஓடிக்கொண்டிருந்தது. வழக்கமான வீட்டுக் காட்சிகளையும், குடும்பத்தினரையும் ஒரு விசேசமான பாசத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்.
பற்பசையின் காரம் ஏறியதால் தும்மியவர் தினசரியையும் ஒரு உலுக்கு உலுக்க அதிலிருந்து ஆர்ட் பேப்பரில் ஒன்றுக்கு நான்கு சைசில் அழகாக அச்சிடப்பட்ட ஒரு விளம்பரப் பிரசுரம் கீழே விழுந்தது. விற்பனை, வாடகை, காப்பீடு, கடன் போன்றவற்றின் போக்கை அறிந்து வைத்திருக்க வேண்டியதை அவசியமாகக் கருதும் எல்லா நடுத்தரவயதுக்காரர்களைப் போல அவரும் நாளிதழின் விளம்பரங்களையும், வரி விளம்பரங்களையும் இரவு நேரத்தில் இம்மியளவு விடாமல் படிப்பவர்தான் என்றாலும் விழுந்த துண்டுக் காகிதம் ஏதோ ஒரு நல்ல செய்தியை தூதேந்தி கொண்டுவந்திருப்பதாக ஒரு நம்பிக்கை.
வழக்கத்துக்கு மாறாக கணவனது முகத்தில் ஒரு துளி மலர்ச்சி பூத்திருப்பதை, அது விடுமுறைக்கானதல்ல, வேறொன்றோடு தொடர்புடையதென அவதானித்த மாலதி குறுஞ்சிரிப்புடன் காபியைக் கொடுத்தாள். என்ன இருந்தாலும் நாளைக்கு இந்த முகம் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்ததால் வந்த சிரிப்பு அது. தனக்கு ஓய்வின்றி பணிவிடை செய்யும் அந்த ஜீவனுக்கு பார்வையிலேயே கணிசமான அளவில் நேசத்தைத் தெரிவித்தவர் நாற்காலியில் அமர்ந்து பருகியவாறு அந்த விளம்பரத்தை படிக்க ஆரம்பித்தார். எப்போதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காப்பியை ருசித்தவாறே விருப்பமான விளம்பரங்களை படிப்பது அமையும். காப்பியின் மணமும் விளம்பரத்தின் நம்பிக்கையூட்டும் செய்தியும் ஒன்றிணையும் போது கிடைக்கும் அந்த சுகமே அலாதியானதுதான். அதுவும் அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடிய அற்புத சுகம்.
” நீங்கள் ஒரு பெர்ஃபக்க்ஷனிஸ்ட்டா? அப்படியெனில் உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.”
“வரவுக்கும் செலவுக்கும் வழிதெரியாமல் புழுங்கிக்கொண்டிருக்கும் தோல்வியடைந்த மத்தியதர வர்கக்த்தினரின் கூட்டத்தில் செலவையும் சேமிப்பையும் புத்தாக்க உணர்ச்சியுடன், புதுமை தாகத்துடன், யாருமறியா விவேகத்துடன் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆம் நண்பரே உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.”
“ஒரு வருடத்தில் கார், இரண்டு வருடத்தில் வீடு, ஐந்து வருடத்தில் நீங்கள் ஒரு முதலாளி, பத்து வருடத்தில் பல இலட்சங்களுக்கு சொந்தமான மில்லியனர்….இவையெல்லாம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம். உங்களைப் போன்ற இலட்சியவாதிகளுக்கு இவை நிறைவேறப் போகும் நனவு, அதற்குத் தேவையான ஆற்றலும், திறமையும், துடிப்பும், வேகமும், நிதானமும், துணிச்சலும் உங்களிடம் ஏராளமிருப்பது குறித்து எங்களுக்குத் தெரியும்,”
காப்பியை மணத்துடன் பருகத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு திடீரென மூளை பிரகாசமாக எரிவது போல ஒரு உணர்வு. சிந்தனை ஒருமையடைந்து ஒரு தூயவெளிச்சத்தில் நினைத்தது பலித்ததால் வரும் பரவச உணர்வு. இப்பொது அவருக்கு காப்பி தேவைப்படவில்லை. மேலே படிக்க ஆரம்பித்தார்.
” வெள்ளமெனப் பாயும் உங்கள் முனைப்புக்கு ஒரு அணைகட்டி, தேக்கி நிறுத்தி, புதிய வேகத்தில் திறந்து விட்டு பெரும் சக்தியை உருவாக்குவதுதான் எங்கள் வேலை. நாடெங்கும் உள்ள எங்கள் கிளைகள் மூலம் பல மில்லியனர்களை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இது விளம்பரத்திற்காகச் சொல்லப்படும் பீடிகையல்ல. அந்த சாதனையாளர்களில் சிலரை நாளைய சாதனையாளரான நீங்களும் இன்றே சந்திக்கலாம். எங்கள் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் மகிமையை நேரடியாக உணர, பங்கேற்க, சாதிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். இடம்: கமலா திருமண மண்டபம். நேரம்: காலை 10.30 மணி. ” ….அப்புறம் செல், லேண்ட்லைன், மெயில், ஃபேக்ஸ், கிளைகளின் முகவரிகள், இணைய தளம் அத்தனையும் நேர்த்தியாக இடம்பெற்றிருப்பதை கவனித்த வெங்கட்ராமனிடம் ஏதோ ஒருபெரிய நல்லது நடக்கப்போவது போல உள்ளுக்குள் பட்சி கூவிக்கொண்டிருந்தது.
விளம்பரப் பிரசுரத்தை நேர்த்தியாக மடித்தவர் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசளராக இருபதாயிரம் சம்பளத்தில் பதினைந்து ஆண்டுகளாக பணி, பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் பையன், ஆறாவதில் படிக்கும் மகள், இன்னும் பத்தாண்டுகளில் இவர்களுக்கு ஆகப்போகுப் கல்விச் செலவு, திருமணச் செலவு, புறநகரில் வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்டவேண்டிய திட்டம், அவ்வளவாக வசதியில்லாத மனைவியின் வீட்டார், எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அவதி, காப்பீடு, வாகனக்கடன், என்று மாதம் விழுங்கக் காத்திருக்கும் தவணைகள், ஏதோ வாங்கிவைத்த சில பங்குகளின் பெயருக்கு வரும் கழிவுத் தொகை….. இந்த எல்லையை எப்படித் தாண்டுவது? அதிகாலையில் ஆரம்பித்த உற்சாகம் சுருதி குறைவது போல இருந்தது.
இல்லை, இந்தக் கூட்டத்திற்கு போய்த்தான் பார்ப்போமே…ஏதாவது நல்லது நடக்கலாமே…
மீண்டும் உற்சாகத்தை வரவழைத்தவர் குளித்து ரெடியானார். நிதானமாக சுவைத்து உண்ணக்கூடிய அடைத் தோசையை அந்தக் கூட்டத்தின் காட்சியை நினைத்தவாறு வேகமாக உள்ளே தள்ளினார். கணவன் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை உணர்ந்து கொண்ட மாலதி அடுத்த அடையை வைத்து வற்புறுத்தவில்லை.
பத்து மணி ஆனதும் பதட்டமடைந்தார். மண்டபம் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் நேரத்திற்கு இருக்கவேண்டுமே, இல்லையென்றால் நடக்கப்போகும் நல்லவற்றில் ஏதேனும் இழந்து விட்டால்? பீரோவில் இருந்த உடைகளில் சிறப்பானவற்றை எடுத்து அணிந்து கொண்டார். வழக்கமாக எதையாவது உடுத்திக் கொண்டு செல்பவரிடம் அந்த விளம்பரப் பிரசுரம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அறிந்திராத மாலதி குழப்பமடைந்தாள்.
இப்போது எதுவும் சொல்லக்கூடாது எல்லாம் நல்லது நடந்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்,” ஒரு வேலையா வெளிய போறேன், மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவேன்”, காலணி போட்டுக்கொண்டிருந்தவரை ராமானுஜம் மறித்தார்.
சட்டென்று ஒரு சந்தேகம்…ராமானுஜமும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பாரோ…என்ன இருந்தாலும் அவர் கூடப் போவதில் சம்மதமில்லை…இல்லையில்ல…கையில் இருக்கும் வாரமலரைப் பார்க்கும்போது சமாதானமடைந்தவர் பிறகு பேசலாமென்று நடையைக் கட்டினார். முதல் அபசகுனத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டவர் இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோமென்ற நம்பிக்கையுடன் உறுதியாக அடிகளை பதித்தவாறு நடந்தார். கண் தொலைவில் தெரிந்த மண்டபத்தில் பெரும் கூட்டம் காத்திருந்தது. அவர் அவசரமாக சென்றுவிட்டதால் அவரது வாரிசுகளை இங்கே அறிமுகம் செய்ய முடியவில்லை.
கல்யாணம் போல கூட்டம் களை கட்டியிருந்தாலும் உணர்ச்சி மங்களத்தில் ஒரு தொழிற்திறம் தூக்கலாக இருந்தது. வரவேற்புக்காக நின்றிருந்த பட்டாடை உடுத்திய மங்கைகள் வந்தோரை உற்றார் உறவினராய் பாவித்து செயற்கையாக இல்லாமல் அன்யோன்யமாக அழைத்தார்கள். ஆனால் வந்தவர்களெல்லாம் உண்மையில் அப்படி பழகியவர்கள் இல்லையென்பதால் செயற்கையாக சிரித்துவிட்டு சற்று தயக்கத்துடன் நுழைந்தார்கள். நிச்சயமாக வெங்கட்ராமன் அப்படி இருமனதாக நுழையவில்லை. தீர்மானகரமான நம்பிக்கையுடன் நேர்த்தியாக சென்று அமர்ந்தார். வந்தவர்களில் பலரகம் இருந்தார்கள். தன்னைப் போல மாத சம்பளக்காரர்கள், சில வியாபாரிகள், ஏன் சில பெண்களும் கூட கூட்டத்தில் இருந்தார்கள். தனக்கு தெரிந்தவர் யாரும் இருக்கக்கூடாது என்ற பதட்டத்துடன் நோட்டமிட்டவர் தனது நோக்கத்தில் வெற்றிபெற்றதும் இருமடங்கு அமைதியுடன் மேடையை நோக்கினார்.
அரங்கைச் சுற்றிலும் விழியை இழுக்கும் பிளக்ஸ் பேனர்களில் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் செயல் முறைகள், வென்றவர்களின் கதைகள், சாதனைகள், சில ஆண்டுகளிலேயே இலட்சாதிபதியானவர்களின் வாக்குமூலங்கள்…… சற்று முன்னால் வந்து எல்லாவற்றையும் நிதானமாக பார்த்திருக்காலாமோ …. சரி கூட்டம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம், பணவிவகாரத்தில் கிடைக்கும் எதனையும் அறிந்து ஆயத்தமாவதில் சுணக்கம் கூடாது …
அவரது விழிப்பு நிலையை மேடையிலிருந்து வந்த ஒரு இனிய குரல் வழிமறித்தது.
அந்தப் பெண்ணுக்கு 25 வயது இருக்கலாம். ஒரு நம்பிக்கையும், நிதானத்தையும் கலந்து வரும் ஆளுமைக்கேற்ற அழகு உடையுடன் தோற்றமளித்தவள் எல்லோரையும் சிரித்தவாறு வணங்கிவிட்டு பேச ஆரம்பித்தாள். ” உங்கள் எல்லோருக்கும் ஒரு பரிசை இப்பொதுதான் வழங்கியிருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் யாரும் எதுவும் தரவில்லையே” கூட்டம் என்னவென்று தெரியாமல் விழித்தது. ” என் புன்னகையை அளவில்லாமல் உங்களுக்கு வழங்கியிருக்கிறேன், பதிலுக்கு நீங்களும் தரலாமே”….இந்த அமர்க்களமான ஓப்பனிங்கில் மனதை இழந்த கூட்டம் வெகுநேரம் கைதட்டியது.
மற்றவர்கள் போல உணர்ச்சிவசப்படாத வெங்கட்ராமன் கைதட்டாமல் அமைதியாக ஆனால் உற்சாகமாக இருந்தார்.
மேடையில் கோட்டு சூட்டு போட்ட ஒரு முன் வழுக்கைக்காரரை நிறுவனத்தின் எம்.டி என்று ஆரம்பித்து பலரையும் அறிமுகம் செய்தவள், மின்னலின் வரலாற்றை அருவியாய் மனதில் பதியும் வண்ணம் தெரிவித்தாள். அடுத்து எம்.டி, மின்னலின் செயல்முறைகளை பாதி புரிந்தது போலவும், மீதி இனிமேல் புரியும் என்று நம்பும்படியும் விளக்கினார். பத்தாயிரம் வைப்புத் தொகையுடன் உறுப்பினராக சேரும் ஒருவர் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலமென மூவரை புதிய உறுப்பினராக சேர்க்கவேண்டும்; இதில் முறையே 20,30,40 சதவீதம் கழிவாகத் தரப்படும்; இந்த மூவரும் அடுத்த ஜோடிகளை சேர்த்தால் இந்தக் கழிவில் பாதி கிடைக்கும்; ஒருவர் ஆரம்பித்து வைத்த சங்கிலி 100 நபர்களை இணைத்தால் போனசாக ஒரு லட்சம் கிடைக்கும். ஆயிரமாகப்பெருகினால் பத்து இலட்சம்.
இப்படி ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எண்களுக்கு ஏது முடிவு….கூட்டம் கணக்கில் மனதை பறிகொடுக்க வெங்கட்ராமன் மட்டும் தனக்கு தெரிந்தவர்களின் பட்டியலை நம்பிக்கையுடன் திட்டத்தில் போட்டு யோசிக்க ஆரம்பித்தார்
… தொழிலின் கட்டமைப்பு நன்றாகத்தான் இருக்கிறது…எனினும் இவர்கள் எப்படி நம்புவது?
நம்பிக்கையை ஊட்டிவிடும் வகையில் அந்த தொகுப்பாளினி விதவிதமான தோற்றத்தில் சிலரை அறிமுகம் செய்து வைத்தாள். அதில் கோட்டு சூட்டு போட்டவர், வேட்டி சட்டைக்காரர், நடுத்தரவயதில் ஒரு பெண்மணி என்று ஆளுக்கொரு விதத்தில், பெயருக்கொரு மதத்தில் கோவை, நெல்லை, மதுரை, தஞ்சை என எல்லா வகைத் தமிழிலிலும் தாங்கள் வெற்றி பெற்ற கதையை சுவாரசியம் கலந்த புள்ளிவிவரத்துடன் சொன்னார்கள். அதிலும் கோட்டு சூட்டு போட்டவர் உறுப்பினராகி இரண்டு வருடத்தில் 40 இலட்சம் சம்பாதித்திருப்பதாக கோவைத் தமிழில் சொன்னது எல்லோரையும் ஆச்சிரியப்படவைத்ததோடு நம்பிக்கையின் பிரஷரை நன்கு ஏற்றவும் தவறவில்லை.
ஒரு மண்ணின் மொழியில் ஒருவர் ஏமாற்றும் விதத்தில் பேச முடியாதே? ஏமாற்ற வேண்டும் என்று வந்து விட்டாலே மொழி செயற்கைத் தன்மை அடைந்து காட்டிக் கொடுத்து விடாதா என்று நாம் தான் கதையில் எழுதுகிறோமே அன்றி கூட்டம் அப்படி ஏதும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதோடு அந்த தேவ சாட்சியங்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.
வெங்கட்ராமனின் மனதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறதா, இல்லையா என்று ஊகித்தறிய முடியவில்லை. சாட்சியங்கள் அரங்கேறிய சமயத்தில் சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட உளுந்த வடையும், டிகாஷன் காபியும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. இது ஏதோ கடமைக்கு கொடுக்கப்பட்டதைப் போல இல்லாமல் அந்த வரவேற்பு அழகிகள் மனதார ஒருவர் விடாமல் கொடுத்து உபசரித்தார்கள். இந்த இனிய உபசரிப்புக்காகவே பலரும் மறுக்காமல் வாங்கிக் குடித்தார்கள். அதில் வெங்கட்ராமனும் உண்டு என்பதை ஈண்டு விளக்கத் தேவையில்லை. ஆனாலும் அப்போதும அவர் ஒரு நிதானத்துடனே யோசித்தவாறு இருந்ததால் மற்றவர்களைப்போல அவரை யாரும் ஏமாற்றி விட முடியாது என்பது போலவும் காட்சியளித்தார்.
அடுத்து, வந்திருந்த மக்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்தார்கள். பலர் பலமாதிரி, யதார்த்தமாகவும், ஊகத்தின் அடிப்படையிலும் தினுசு தினுசாகக் கேட்டார்கள். இதற்கு எம்.டி சளைக்காமல் பல கோணங்களில் பதிலளித்தார். இறுதியாக “இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் வீட்டிற்கு சென்று நிதானமாக யோசித்து விட்டு முடிவெடுக்கலாம். உங்களுக்காக நாங்கள் எப்போதும் காத்திருப்போம், வாய்ப்புக்களை தவற விடாதீர்கள்” என்று அந்த வழுக்கை மனிதர் பேசியது மட்டும் வெங்கட்ராமனுக்கு பிடித்திருந்தது.
வந்தவர்கள் உறுப்பினர் விண்ணப்பத்தை ரூ.1000 கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறும், பின்பு அவர்கள் சேரும்போது வைப்புத்தொகையில் இந்தக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் அந்த புன்னகை அழகி சொல்லி முடிப்பதற்குள் விண்ணப்பங்களை வைத்திருந்த கரங்கள் இருக்கைகளைத் தேடி வந்தன. பலரும் ஆயிரம் ரூபாய்தானே என்று வாங்க ஆரம்பித்தார்கள். வெங்கட்ராமன் இன்னமும் முடிவு செய்யவில்லை, விண்ணப்பத்தை வாங்குவதா, இல்லையா என்று.
டை கட்டிய சீருடை இளைஞர்கள் ஒவ்வொரு வரிசையாக சென்று வழங்குவதைப்போல திணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த தோரணையைப் பார்த்தால் அவர்கள் யாரிடமும் கேட்கவில்லை, சற்றே நாசுக்கான அதிகாரத்துடன் பேப்பரை நீட்டினார்கள் என்றும் சொல்லலாம். அவர் முறை வரும்போது வெங்கட்ராமன் குழம்பியவாறு ஏதோ வேண்டாமென திடீரென்று எழுந்து விட்டார். அதுவும் அவர்கள் கொடுத்த காபி, வடையை அருந்தியிருக்கிறோமே என்ற தர்மசங்கடத்தால் வந்த குழப்பம். இதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை, ரொம்ப தற்செயலாக நடந்தது . எழுந்தவரிடன் ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமோ என்ற எண்ணம் ஓடாமல் இல்லை. இருந்தாலும் வேறு ஒரு சக்தியால் இயக்கப்படுபவர் போல வாசலை நோக்கி விரக்தியுடன் நடந்தார். இறுதியடியில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவன் போலவும் அவரின் தோற்றம் இருந்தது. இதுவா, அதுவா என்று பிரித்தறியமுடியாத இருமை கலந்த ஓர்மையில் யந்திரமாய் இயங்கினார். இப்போது வாயிலில் அழகிகள் இல்லை, சபாரி அணிந்த மூன்று குண்டர்கள் வாட்டசாட்டமாய் கையில் லாக்கப் வளையம் போல விண்ணப்பங்களின் கத்தை ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.
” என்ன சார், கூட்டம் இன்னம் முடியலையே, முடிச்சுட்டு போகலாமே” அதட்டலாக கேட்டவன் அவர் கையில் ஒன்றைத் திணித்தான். வயிற்றில் பதட்டமும், பயமும் மேலெழும்ப …”இல்ல வேணாம்.. இருக்கட்டும் ‘என்றெல்லாம் முயன்றவர் வேறு யாராவது தன்னைப் போல வருவார்களா அவர்களை அணிசேர்த்து வெளியேறிவிடலாம் என்று திரும்பிப்பார்த்தவரை ஒரு சபாரி கனைத்தவாறு புருவத்தை சுளித்தான். மறுபேச்சு இல்லாமல் பர்ஸை எடுத்தவர் இரண்டு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டு பிழைக்கத் தெரியாத ஒரு பிள்ளையப் போல தேங்கித் தேங்கித் நடக்க ஆரம்பித்தார்.
பலரும்தான் விண்ணப்பத்தை வாங்கியிருக்கிறார்கள்…ஏன் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும்….இருக்கையிலேயே தெளிவாக வாங்கியிருக்கலாமே… இல்லையில்லை…சிலர் வாங்காமலும் சென்றார்கள்…அதுதான் சரியானதா…திரும்பிச் சென்று பணத்தை திருப்பிக் கேட்கலாமா…ஆயிரம் ரூபாய்க்காக விதவிதமான வீட்டுச் செலவுகள் காத்திருக்குமே…மண்டபத்தில் நம்மைத் தவிர மற்றவர்கள் இன்னமும் நம்பிக்கையை அறிவிக்கும் வண்ணம் சப்தமாய் பேசிக் கொண்டிருக்கிறார்களே….ஒருவேளை சேர்ந்துதான் பார்ப்போமே…நம்பிக்கையில்லாதவன் பணத்தை எந்தக் காலத்திலும் சம்பாதித்ததே இல்லை…
அந்த குறுகிய தருணத்தில் இருதரப்பு வாதங்களும் அவரை அமைதியடையச் செய்யவில்லை. எல்லாவற்றையும் விட ஆயிரம்ரூபாயை கொடுத்துவிட்டோம் என்ற உண்மை வழியை மறிக்கும் எமன் போல நினைவூட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் இழந்ததுதான் மிச்சமென குற்ற உணர்வு மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. மண்டபத்தின் வெளியே வந்தவர் யாரும் தெரிந்தவர்கள் நம்மை பார்த்துவிட்டார்களா என்று அலசத் தொடங்கினார்.
ஒருக்கால் தெரிந்தவர்களுடன் வந்திருந்தால் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாமோ…விண்ணப்பத்தின் கட்டணத்தை 500 ரூபாயாக வைத்திருக்கலாம்..ஒரேயடியாக ஆயிரம் என்பதுதான் இவ்வளவு யோசிக்கவைக்கிறது….
அந்த ஞாயிற்றுக் கிழமையின் இனிய ஆரம்பம் மின்னல் போல சட்டென முடிவுக்கு வந்தது. இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணுஅணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது. இனி அவரது வாழ்வில் கமலா திருமண மண்டபத்தை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை, அதற்கு துணிவில்லை என்பதுபோல அவரது முகம் வாடிவிட்டது. காலையில் இருந்த தெளிவான மனநிலையின் மேல் இப்பொது வகைதொகையில்லாமல் கோபம் பீறிட்டு வந்தது. அது அநேகமாக மாலதியிடம் மட்டும் வெடித்து விட்டு அடங்கும் வல்லமை கொண்டது. எதையும் கோர்வையாக சிந்திக்கும் ஆற்றலை இந்த துயரமான தருணத்தில் இழந்தவர் ஏதோ ஒரு சுவரொட்டியில் ஒரு எண்ணைப் பார்த்ததும் கனவில் விழித்தவனைப் போல தலையை உலுக்கி விட்டு யோசிக்க ஆரம்பித்தார்.
வேறொன்றுமில்லை, இருபது வருடங்களாக எண்களோடு புழங்குவதையே வேலையாகக் கொண்டவர் ஆயிற்றே….கணக்குப் போட்டுப்பார்த்தார். 500 தலைகளை ஆயிரம் ரூபாயினால் பெருக்கினால் மொத்தம் 5,00,000 ரூபாய். மண்டபத்துக்கு 30,000, சரவணபவனுக்கு அதிகபட்சம் ரூ.20 வைத்தால் கூட 10,000, அப்புறம் அழகிகள், சபாரிகள், விளம்பரங்கள் எல்லாவற்றையும் கழித்துப் பார்த்தால் ஒரு இரண்டு அல்லது மூன்று இலட்சம் தேறுமே. அதில் அவரது ஆயிரமும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது தொண்டை துக்கத்தை அடக்க முடியாமல் கனக்க ஆரம்பித்தது. சரவணபவன் காப்பியின் சுவை அடிநாக்கில் மறக்க முடியாத கசப்பாய் கசியத் தொடங்கியது. கண் தொலைவில் இருந்தாலும் வீடு தெரியாமல் மங்கலாக வழிந்து நின்றது.
// வயிற்றில் பதட்டமும், பயமும் மேலெழும்ப …”இல்ல வேணாம்.. இருக்கட்டும் ‘என்றெல்லாம் முயன்றவர் வேறு யாராவது தன்னைப் போல வருவார்களா அவர்களை அணிசேர்த்து வெளியேறிவிடலாம் என்று திரும்பிப்பார்த்தவரை ஒரு சபாரி கனைத்தவாறு புருவத்தை சுளித்தான். மறுபேச்சு இல்லாமல் பர்ஸை எடுத்தவர் இரண்டு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டு பிழைக்கத் தெரியாத ஒரு பிள்ளையப் போல தேங்கித் தேங்கித் நடக்க ஆரம்பித்தார்.//
யூ டூ வினவு!
இது பற்றி நான் போட்ட பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2008/05/blog-post_07.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Good effort but could have been a bit more better !!! neelathai konjam thavirthirukalaam !!! nalla kathai karu !!!
நன்றாக உள்ளது இந்த உண்மை கதை. வேலையில்ல இளைஞர்களையும், சீக்கிரம் கோடீசுவரனாக வேண்டும் என நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினை சுரண்டும் நவீன தத்துவம் தான் இந்த சங்கிலி தொடர் மார்கெட்டிங்.
// இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணுஅணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது. //
Very nice……….
என்னோட இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் இது ஒரு பாடமா இருக்கட்டும்.
இப்படி ஏமாற்றுபவர்களை என்ன பண்ணினால் தகும்..
MLM இப்போ நைஜிரியாவிலேயும் மிக வேகமா பரவிட்டு இருக்கு…
In a multi level marketing it is a very well know mathematical fact that expect for the first six people no one else benefits from the scheme.
இராகவன் சார் நீங்க அதுல மாட்டிக்காதீங்க. உங்க சேவை தமிலிஷுக்கு தேவை
கதை அருமை வினவு.
Amway, Modicare போன்ற MLM கம்பனிகள் –
லட்சங்களுக்கு ஆசை காட்டி 5 ஆயிரம், 10 ஆயிரம் என முன் தொகை பெற்று கொண்டு பொருளை கையில் கொடுத்து விடுவார்கள். வேறு வழியில்லாமல் போட்ட காசை வெளியே எடுப்பதற்கு நாயாக சுற்றுவார்கள். முதலில் நண்பர்கள், சொந்தகாரர்களிடம் விற்பார்கள். போக போக பொருளை விற்கமுடியாமல் விழி பிதுங்குவார்கள். பின்னர் அந்த பொருட்களை தான் மட்டும் பயன்படுத்துவார்கள். இந்த சங்கிலி தொடர் மார்கெட்டிங் பற்றி பிரசாரம் செய்து நொந்து நூடுல்ஸ் ஆகி சில வருடங்கள் கழித்து தான் அதைவிட்டு வெளியே வருவார்கள்.
இது கதையல்ல என தெளிவாக இருக்கும் பலரும், நேரடியாக ஒரு பிரதிநிதி தன்னை சந்தித்து இதுபற்றி விளக்கி கனவுப்பலன்களை அடுக்கினால் பணம் கொடுக்கவே முயல்வர். பணம் சேர்க்கும் வெறி மக்களை அந்த அளவிற்கு மயக்கி தன்வசப்படுத்தியிருக்கிறது.
கதையாகக் கூடாத கதை
தோழமையுடன்
செங்கொடி
புஷ்,ஏகாதிப்பத்தியம்,பார்பனியம் இந்த மூன்றும்தான் MLMன் ஊற்றுக்கண் என்று
புரட்சிகரமாக ஏன் எழுதவில்லை, தோழரே?.
மேலே உள்ள நபர் போலி கோட்சில்லா……..!!!!!!!!
நான் தான் உண்மையான கோட்சில்லா……..!!!!!!!!
நீங்க என் டவுசர கழட்டின அதிர்ச்சிலேர்ந்து மீஈஈஈஈஈஈஈண்டு இப்பத்தான் வந்தேன்….
ஸ்டார்ட் மீஜிக்……….!!!!!!!!!!!
இப்படிக்கு
A SAD MIDDLE CLASS MORON
RAVI SRINIVAS எனப்படும் PERIYAR CRITIC எனப்படும் GODZILLA
எக்ஸலண்ட் வினவு !!!!! அற்புதமான நடை !!!! அருமையான கருத்துக்கள்…
அங்கே அங்கே தூவினாற்போல எட்டிப்பாக்கும் எழுதாளரின் திறமை சூப்பர் !!!
//அது அநேகமாக மாலதியிடம் மட்டும் வெடித்து விட்டு அடங்கும் வல்லமை கொண்டது///
///சரவணபவன் காப்பியின் சுவை அடிநாக்கில் மறக்க முடியாத கசப்பாய் கசியத் தொடங்கியது. கண் தொலைவில் இருந்தாலும் வீடு தெரியாமல் மங்கலாக வழிந்து நின்றது.////
///இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணுஅணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது///
மிகவும் ரசித்த வரிகள் !!!
கலக்கலான கதை, உண்மையும் கூட…நானும் இது போன்ற ‘கூட்டத்திற்கு’ சென்று வந்திருக்கிறேன். அழைத்துச் சென்றவர் அதில் உறுப்பினராக இருப்பதால், அவர் முகத்துக்காக ஒரு முறை பணம் கட்டியதுடன் சரி, அதன் பிறகு அந்த நண்பர் கண்ணில் படவே இல்லை.
arummai
ஐயா,சமிபகாலமாக ஆம்வே என்கிற அரக்கன் மிகவேகமாக ஊடுருவுகிறான். ஆம்வே என்றால் என்ன? அது எப்படி மக்களை கொள்ளை அடிக்கிறது என்று தெரிந்தால் கூறவும். ஆம்வேவில் சேர சொல்லி தினமும் வர்ப்புருத்துகிறார்கள். பணத்தாசை காட்டி காட்டி ஆட்களை சேர்க்கிறார்கள். அதைப்பற்றி பேசமுடியவில்லை. நம்முடைய வெளியீடுகள் எதிலும் அதைப்பற்றி இல்லை. உங்க அமைப்புக்கெ ஆம்வேவ பத்தி நல்லா தெரியும் அதனாலதான் அவங்களாளையும் இதப்பத்தி எதுவும் எழுத முடியல என்று இதையும் ஒரு காரணமாக சொல்றாங்க… இந்த கட்டுரையில் கூட மல்டி லெவல் பிசினசைப் போல் ஒரு போலியான பிசினசை தான் சொல்கிறார்கள். ஆனால் மல்டிலெவல் பிசினசே போலி என்று சொல்லவில்லை…
ஆம்வேவை தவறு என்று எவராலும் பேசமுடியாது என்று கொக்கரிக்கிறார்கள்.தயவு செய்து அதைப்பற்றி எதாவது வெளியீடுகள் இருப்பின் கூறவும்….