Wednesday, December 4, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்தசரத் மான்ஜி : மலையை அகற்றிய வீரக்கிழவன் !

தசரத் மான்ஜி : மலையை அகற்றிய வீரக்கிழவன் !

-

bihar1

முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன்.

முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு மனமிரங்கிய இரண்டு தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த மலைகளைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு பறந்து விட்டார்களாம்.

இந்த நீதிக்கதையை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குக் கூறிய மாவோ, “ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும்தான் நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் மலைகள். சீன மக்கள்தான் நம் தேவதைகள். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விடாப்பிடியாக உழைத்தால் மக்கள் எனும் தேவதைகளின் மனதைத் தொடுவோம். மக்கள் நம்முடன் இணைந்தால் அடுத்த கணமே இந்த மலைகளை நாம் தூக்கி எறிந்துவிட முடியும்”  என்றார்.

அந்தச் சீனத்துப் புனைகதையை நிஜமாக்கியிருக்கிறான் ஒரு வீரக்கிழவன். 22 ஆண்டுகள்  ஒற்றை மனிதனாக நின்று ஒரு மலைக்குன்றையே உடைத்து 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தசரத் மான்ஜி என்ற மாவீரர் சென்ற ஆகஸ்டு மாதம் மறைந்து விட்டார். வாழ்ந்த காலம் வரை அந்த 74 வயதுக் கிழவனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு மாமனிதனின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியனாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரனின் கதை.

பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும்தான் அவர்களுடைய உணவு.

1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு  மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்தாள். ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்….?

கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை.

தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.

அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்.

22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்.

ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி.  “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.

அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.

தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவன் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டான். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை.

தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகாரின் அதிகார வர்க்கம்.

1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. “இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?” என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.

தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. “நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன். அவ்வளவுதான்” அவரது உளியில் பட்டுத்தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுகின்றன சொற்கள்.

மான்ஜியின் உளி பட்டுத் தெறித்துப் பிளந்து கிடக்கும் அந்தக் கற்பாறை ஒரு நினைவுச்சின்னம். மரணத்துக்குப் பின்னும் அந்த மாவீரனை மதிக்கத் தவறிய இந்த அரசின் இரக்கமற்ற இதயத்துக்கு இது நினைவுச்சின்னம்  அதில் எந்த ஐயமும் இல்லை.

அதே நேரத்தில்  22 ஆண்டுகள் ஒரு  மலையோடு தன்னந்தனியனாக ஒரு மனிதன் மோதிக்கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இந்தச் சமூகத்தின் பாறையை விஞ்சும் ‘மன உறுதி’க்கும் இதுதான் நினைவுச்சின்னம்.

உணவும் தண்ணீரும், உளியும் சுத்தியலும் வழங்கினார்கள் மக்கள். உண்மைதான். ஆனால் அவற்றைத் தவிர வேறு எதையும் அந்தப் பாதையால் பயனடையப்போகும் மக்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாதா? தசரத் மான்ஜியுடன் கைகோர்த்திருக்க முடியாதா? மலையைப் பிளந்து பாதையைத் திறந்து காட்டிய அந்தத் தருணம் வரை  “இவன் மூடனல்ல  வீரன்” என்னும் உண்மையை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண எண்ணும்போது  நெஞ்சம் நடுங்குகிறது.

நூற்றாண்டுகளாய்ப் புதுப்பிக்கப்படும் அடிமைப் புத்தியும், சாதுரியமான விதிவாதமும், கபடம் கலந்த கருணையும் செயலின்மையில் பிறந்த இரக்கமும், அம்மணமான காரியவாதமும் சேர்ந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது மக்களின் ‘புறக்கணிப்பு’ என்னும் பாறை. இந்தப் பாறையை உளியும் சுத்தியலும் கொண்டு பிளக்க முடியாது. கரைக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து வைத்திருந்த அந்த எளிய மனிதனின் அறிவை எண்ணும் போது வெட்கம் வருகிறது.

மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே  தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று,  22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி. இந்த வீரத்தின் பரிமாணம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. சேர்ந்து ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்திருக்கிறானே, அந்தக் காதல் நம்மைக் கண் கலங்கச் செய்கிறது.

சீனத்துக் கிழவனைப் போல ‘என்றோ ஒரு நாள் இந்த மலை அகன்றே தீரும்’ என்று தன் நம்பிக்கையைக் கனவில் பிணைத்து வைக்கவில்லை தசரத் மான்ஜி. தான் வாழும் காலத்திலேயே கனவை நனவாக்கும் உறுதியோடுதான் உளியைப் பற்றியிருக்கிறது அவனுடைய கரம். உளியின் மீது இறங்கிய சுத்தியலின் ஒவ்வொரு அடியும் ‘இன்றே.. இன்றே’ என்று அந்த மலையின் மரணத்திற்கு நாள் குறித்திருக்கிறது.

உணவுக்கும் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்கி,  ‘இத்தனை ஆண்டில் இந்தப் பணி முடிப்போம்’ என்று திட்டம் போட்டுச் செயலாற்றும் ‘திறமை’யெல்லாம் எலி பிடிக்கும் சாதியில் பிறந்த அந்த ஏழை மனிதனுக்கு இல்லை.

“என்று வருமோ புரட்சி … இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்” என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின்  புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. ‘இயலாததை’ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப்  படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.

விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை,  அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயாசமாகத் துளைத்துச் செல்கிறது.

மக்கள் மீது கொண்ட காதலில் தோய்ந்து தன் இளமையைக் கொண்டாடிய அந்தக் கிழவனின் வாழ்க்கை, நம் இளைஞர்களுக்குக் காதலைப் புதிதாய்க் கற்றுக் கொடுக்கிறது.

ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன்  ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது. நெருங்க நெருங்க கனத்துக் கவியும் சோக இசையாய் அழுத்துகிறது. அந்தக் கணமே  ஒரு அறைகூவலாய் மாறி நம்மைச் செயலுக்கு  இழுக்கிறது.  தேவதைகளின் இதயத்தை இளக்கி,  கருணையைப் பிழிந்தெடுத்த அந்தக் கிழவனின் ஆவி மெல்ல நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.

– புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 2007

  1. வணக்கம்

    இதுதான்யா வீரம்,
    இதுதான்யா வாழ்கை,
    இதுதான்யா உயிரின் அர்த்தம்

    நன்றி
    உழைக்க உத்வேகம் கோடுத்த பதிவுக்கு

    இராஜராஜன்

  2. Do you have any idea how to recomend this to this as one of the world wonders? If you know please raise this to them and I shall support it by what ever means I can.

    Please write to me at diwakarn@rediffmail.com

    PS: Currently I do not have access to this mail address and I shall respond to you after 20th Dec, 2008.

  3. // இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம். ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி. “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.//

    Really Great Man

  4. வினவும் மிக மிக அற்புதமான பதிவு. எனது பத்திரிகைப் பணியில் எளிய மனிதர்களின் கதைகளை பதிவு செய்வதையே நான் எப்போதும் விரும்பி வந்திருக்கிறேன். உண்மையில் இமமதிரி கதைகளைக் கண்டடைவதும் அதை எழுதுவதும் நாம் எழுதுகீற அந்தக் கட்டுரைக்கு பத்திரிகையில் கிடைக்கிற முக்கியம் என பல விஷயங்களுக்காக நாம் போராட நேரலாம். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் விரும்பிப் படித்த பதிவு இது வாழ்த்துக்கள்.

  5. Fact, I think we can this article to English..
    Then may be we can take a signature campaign to UNESCO ask them to announce that place as a world
    heritage site…What do you think…?
    Vinavu can also comment on this idea!!!!!

  6. நண்பர்களே,
    இந்தக் கட்டுரை உணர்வுப்பூர்வமாய் உங்கள் சிந்தையில் கலந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. யுனஸ்கோவின் அங்கீகாரத்தை பெறுமளவுக்கு நமக்கு செல்வாக்கு இல்லையென்றாலும் குறைந்த பட்சம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பல்லாயிரம்பேரிடம் கொண்டு செல்லலாம். ஒருவேளை அந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் அந்தக் கனவு நனவாகவும் மாறலாம். ஆங்கிலத்திலும், ஆங்கில இணைய உலகிலும் பரிச்சயமுள்ள வாசகர்கள் இதற்குத் தோள் கொடுக்கலாம் என்று கருதுகிறோம்.

    வினவு

  7. “என்று வருமோ புரட்சி … இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்” என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின் புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. ‘இயலாததை’ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப் படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.”

    இக் கட்டுரையை படித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருந்தாலும் இப்போது படித்தாலும் தோன்றும் ஒரு கேள்வி
    “என்ன செய்து விட்டோம் மக்களுக்காக”

    கலகம்
    http://kalagam.wordpress.com/

  8. மிக அருமையான பதிவு….
    இந்த நீண்ட பதிவில் உங்கள் ஆதங்கம் மட்டுமே எனக்கு தெளிவாக தென்படுகிறது… ஆம் மக்கள் அனைவரும் ஒரே சிந்தனை, ஒரே இலக்கு என சமுக, தேச நலனை கருத்தில் கொண்டு செயல்படுவார்களானால், நாம் இத்தனை இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலையே இல்லை… ஆனால் இதை தவிர நம் மக்கள் எப்போதும் அரசை குற்றம் சொல்வதிலும், அடுத்தவர்களின் பணிகளிலும் அதிக கவனம் செலுத்துவதிலும்தான் எப்போதும் முழுமையாக செய்து வருகிறார்கள் என்பதற்கு இதோ இன்னுமொரு சாதனை தொகுப்பு… இப்படி பல தசரத் மான்ஜி’களை நாம் இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்… இந்த நிகழ்வை செய்த உங்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்,
    ஆனந்த்

  9. Muthu, Yes that would be an excellent option, also the other suggestion (if we could not attain UNESCO) is to translate this in English and take to many of them is also a really good.

    But unfortunately I am not good in writing article with appealing nature and my wiritng will become a plain translation.

    Any body suggest a good person who can translate this article in English?

    Also CNN iReport allow us report our articles there. May be after a proper translation we can upload this there. Also request all of you to suggest various websites which support these kind of facilities and upload the article. Before that please ensure the article convey the emotion and the message properly as written above in tamil.

    http://edition.cnn.com/ireport/

  10. புக வில் இக்கட்டுரையை படிக்கும்போது எழுந்த உணர்வுகளைவிட இப்போது இங்கிருக்கும் பின்னூட்டங்களுடன் சேர்த்து படிக்கும்போது புது எழுச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

    அந்த வீரக்கிழவன் தசரத் மான்ஜி நமக்கு காதலை மட்டுமல்ல எப்படி வாழவேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்லித்தந்திருக்கிறான்.

    தோழமையுடன்
    செங்கொடி
    http://www.senkodi.wordpress.com

  11. சாகாவரம் கொண்ட தசரத் மான்ஜி!
    உங்களின் பிள்ளைகளை நகரத்துக்கு அனுப்புங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க