Wednesday, July 24, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் இரண்டு : மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் இரண்டு : மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்

-

vbf2

அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

முன்னுரை

மும்பை தாக்குதலை ஒட்டி வினவு இணைய தளத்தில் ஆறு பகுதிகளாக வெளிவந்த கட்டுரைகளை இங்கே தொகுத்து வெளியிடுகிறோம். இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தலைநகரில், அதன் ஆன்மீக வாசஸ்தலங்களான  ஐந்து நட்சத்திர விடுதிகள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளான காரணத்தினால், அவமானத்திற்கும் ஆத்திரத்திற்கும் ஆட்பட்டு, இந்தியாவின் மேட்டுக்குடி வர்க்கம் சாமியாடிக் கொண்டிருந்த அந்த நாட்களில் எழுதப்பட்டவை இந்தக் கட்டுரைகள். ஏற்கெனவே பல மாநகரங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஊடகங்களும், இந்து மதவெறி பாசிஸ்டுகளும் இசுலாமிய துவேசத்தை பரப்பி வந்த தருணத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல வந்தது மும்பை தாக்குதல்.

” இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கான் மீதும் ஈராக் மீதும் போர் தொடுத்த அமெரிக்க வல்லரசைப் போலவே, ‘இந்திய வல்லரசும்’ பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்க வேண்டும், அரசாங்கம் லாயக்கில்லை, அரசியல்வாதி ஒழிக, ராஜிநாமா செய், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்துத் தாக்கு, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்து, பொடாவைக் கொண்டு வா” என விதம் விதமான வெறிக்கூச்சல்களால் ஊடகங்களும் இணையமும் அதிர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில், இந்தக் கூச்சல்களுக்கு அஞ்சிப் பின்வாங்காமல் உண்மையை நிதானமாகவும் தைரியமாகவும் இக்கட்டுரைகள் முன்வைத்தன. இது பயங்கரவாதம் என்ற பிரச்சினை குறித்த அனைத்தும் தழுவிய ஆய்வல்ல. அத்தகையதொரு ஆய்வை வெளியிடுவதற்கான தருணமும் அதுவல்ல.

இன்று கூச்சல்களும் தொடைதட்டல்களும் அடங்கிவிட்டன. பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தீர்வல்ல என்றும்  அவ்வாறு போர் தொடுக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை என்றும் மன்மோகன்சிங் பேசுகிறார். அமெரிக்காவால் அறிவூட்டப்பட்ட ஆளும் வர்க்கங்களும் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றன. எனினும் எதுவும் செய்ய இயலாத கையறுநிலையால் ஆளும் வர்க்கங்கள் பல்லை நறநறவென்று கடிக்கும் சத்தம் மட்டும் இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இது ஆளும் வர்க்கங்களின் மனநிலையாக மட்டும் இல்லை. பாகிஸ்தான் கையால் அடிவாங்கி, திருப்பி அடிக்க முடியாத ஆத்திரத்தில் குமுறும் ஒரு சராசரி இந்தியனின் மனநிலையாகவும் இது மாற்றப்பட்டிருக்கிறது. வெகுளித்தனமான தேசிய உணர்ச்சியும், இந்து வெறியின் கறைபடாத நியாய உணர்ச்சியும் கூட ஒரு விதமான கையறுநிலையால் துடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்நூலில் வெளியிடப்பட்டுள்ள வாசகர் கடிதங்களிலும் (பின்னூட்டங்கள்) இத்தகைய மனநிலையின் தாக்கத்தை நீங்கள் பார்க்க முடியும்.

பாகிஸ்தானைத் தனிமைப் படுத்திவிட்டு அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இந்தியா மாறிக் கொள்வதன் வாயிலாகத்தான் பயங்கரவாதப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கருத்து நயவஞ்சகமான முறையில் இப்போது மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும், அணுசக்தி ஒப்பந்தமும் மன்மோகன் அரசால் நிறைவேற்றப் பட்டன. ஆயினும் அவை ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து’ இந்தியாவைக் காப்பாற்றவில்லை. மாறாக அதனை அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்காவை நெருங்கிச் செல்கிறதோ, அதே அளவுக்கு அது இசுலாமிய பயங்கரவாதத்தின் குறியிலக்காக மாறும் என்பதே உண்மை. இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற பெயரில் அமெரிக்கா தொடுத்திருக்கும் உலக மேலாதிக்கத்துக்கான போரில், இந்தியாவைத் தனது காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அமெரிக்க வல்லரசின் திட்டம். இதற்கு உட்படுவதன் மூலம் அமெரிக்கச் சதுரங்கத்தின் பகடைக்காய்களாகச் சிக்கிச் சீரழிவதற்கு மேல் இந்தியாவும் பாகிஸ்தானும் பெறப்போவது எதுவும் இல்லை. வளைகுடாவுக்கு அடுத்து உலகின் பதட்டப்பகுதியாக தெற்கு ஆசியா மாறுவதற்கும் அமெரிக்காவின் மேலாதிக்கம் இங்கே நிலைப்படுவதற்கும் மட்டுமே இது வழிவகுக்கும். சீனாவையும் ரசியாவையும் கட்டுக்குள் வைக்கும் அமெரிக்காவின் யுத்த தந்திரத் திட்டத்துக்கு உகந்த இந்த ஏற்பாட்டை இந்திய ஆளும் வர்க்கங்களும், காங்கிரசு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் விரும்பி வழிமொழிகின்றன. இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பொருளாதார நலன்களே இக்கொள்கையை வழிநடத்துகின்றன.

‘அடித்தால் திருப்பி அடி’ என்ற உணர்ச்சிபூர்வமான பேச்சு ஒரு நாட்டின் அரசியல் இராணுவ முடிவுகளைத் தீர்மானித்துவிட முடியாது. அவ்வாறு ‘திருப்பி அடிப்பதற்காக’ ஆப்கானிஸ்தானுக்குப் போன அமெரிக்க சிப்பாய்கள்  8 ஆண்டுகளுக்குப் பிறகும் நாடு திரும்ப முடியவில்லை. அதிபர் புஷ் நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அமெரிக்காவை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் தம் அனுபவத்தில் கண்டுவிட்டார்கள். பொருளாதார திவால் நிலை, உள்நாட்டில் ஜனநாயக மறுப்பு என்பதுதான் அவர்களுக்குக் கைமேல் கிடைத்த பலன். இந்தப் பாதை அதனினும் கொடிய விளைவுகளைத்தான் இந்திய மக்களுக்கும் வழங்க முடியும். எனினும் இத்தகையதொரு மாற்று ஒன்றைத்தான் காங்கிரசும், பாரதிய ஜனதாவும், இந்திய ஆளும் வர்க்கங்களும்  மக்களிடையே முன்வைக்கின்றன. ஏகாதிபத்திய உலகமயமாக்கமும், மறுகாலனியாக்கமும் உழைக்கும் மக்கள் மீது ஏவிவிடும் சுரண்டல் மற்றும் அடக்குமுறையிலிருந்து திசை திருப்புவதற்கு இந்த ‘பயங்கரவாத எதிர்ப்புப் போர்’ ஒரு கருவியாக அவர்களுக்குப் பயன்படும். ‘இந்திய எதிர்ப்பு’ என்னும் முழக்கத்தை வைத்து பாகிஸ்தான் மக்களை அந்நாட்டு ஆளும் வர்க்கங்களும், இராணுவ அதிகார வர்க்கமும் திசை திருப்ப முடியும். கூடுதலாக, ‘அமெரிக்காவின் கையாள்’ என்ற அந்தஸ்தை இந்தியா அடையும் பட்சத்தில்,  உலக இசுலாமிய மக்கள் அமெரிக்காவுக்கு எதிராகக் கொண்டிருக்கும் நியாயமான எதிர்ப்புணர்ச்சியின் விளைவுகளையும் இந்தியா அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம்.

எமது தோழர்களால் நடத்தப்படும் ‘வினவு’ என்ற இந்த இணையத் தளம், மிகக் குறுகிய  காலத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறது. வாசகர்கள் அனைவரும் வினவு முன்வைக்கும் கருத்துகளை வழிமொழிபவர்கள் அல்ல. அதில் மாறுபடுபவர்களும், எதிர்த்து வாதாடுபவர்களும் உண்டு. அத்தகைய மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் அதே தளத்தில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே சுருக்கித் தந்திருக்கிறோம். வாசகர்களின் ஒவ்வொரு மாற்றுக் கருத்துக்கும் வினவு தோழர்கள் பதிலளிக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை. எனினும் இந்தக் கட்டுரைகளையும், அதன் எதிர்வினைகளையும் ஒரு சேரப் படிப்பவர்கள் ஒரு பிரச்சினையைப் பரிசீலிக்கும் பல கோணங்களையும், அந்த அரசியல் பார்வைகளின் பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் புரிந்து கொள்ள இயலும். இது தமிழில் புதிய முயற்சி. பார்ப்பனிய இந்து மதவெறி பாசிசத்திற்கும், அமெரிக்கபயங்கரவாதத்திற்கும் எதிரதான சமரில் இந்நூலும் உங்களுக்கு ஒரு ஆயுதமாய்ப் பயன்படும்  என்று நம்புகிறோம்.

தோழமையுடன்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.
ஜனவரி, 2009

பக்கம் – 88, விலை ரூ.35
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்  vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்

 1. வாழ்த்துகள் வினவு…

  இப்படி இனைய விவாதங்களை வெளியிடுவது கூட ஒரு புதுமையான முயற்சி தான் – பொதுவாக புத்தகம் என்றாலே எதிர் குரல் இல்லாத ஒற்றைத் தன்மை கொண்டதாக இருக்கும்.. ஆனால் இப்படி வலைத்தளங்கள் வழங்கும் சுதந்திரமான “எதிர் வாதம்” என்பதையும் உள்ளடக்கி உமது கருத்தையும் முன் வைக்கிறீர்கள் என்றால் உங்கள் தைரியம் பாராட்டத் தக்கது – பாராட்டுகிறேன்!!!

  பொதுவாக எந்த புத்தகங்களின் மேலும் சொல்லப்படும் விமர்சனம் என்னவென்றால் – எழுதுபவன் தான் நினைக்கும் / பார்க்கும் கோணத்தை வாசிப்பவன் மேல் திணிக்கும் ஒரு முயற்சி என்பதாகும். ஆயின் உங்களது உங்கள் முயற்சி மெய்யாகவே துனிச்சலானது. பொதுவான வாசகன் ஒருவன் ஒற்றைத் தன்மையில் பார்ப்பதை விடுத்து கட்டுறை ஆசிரியரின் கருத்து Vs எதிர்வாதக்காரர்களின் கருத்து என்று வெவ்வேறு கோணத்தில் இருந்து படிக்க முடியும். இதில் ஒருவேளை உங்கள் கருத்து அவனை கன்வீன்ஸ் செய்ய முடியாமல் கூட போகலாம் – எதிர்வாதக்காரனின் கருத்தை சரியானது என்று நினைக்கும் அபாயமும் இருக்கிறது.. அதையும் மீறி இத்தனை செலவு செய்து நீங்கள் இந்தப் பதிவுகளை / மறுமொழிகளை புத்தக வடிவுக்குக் கொண்டு வருவது நல்ல முயற்சி..

  கம்யூனிஸ்ட் என்றாலே புதுமை / புரட்சி என்பதை செயலால் காட்டியிருக்கிறீர்கள்.. அலுப்பூட்டும் பழமையான நடைமுறைகளை ( ஆசிரியர் தனது அஜீரனத்தை வாசகன் முகத்தில் வாந்தியெடுக்கும் ) மாற்றியமைக்கும் இந்த புது முயற்சிகள் தொடரட்டும்

 2. சொல்ல மறந்தது – குறுகிய காலத்தில் இந்த தளம் ஒரு லட்சம் தடவைகளுக்கு மேல் திறக்கப் பட்டிருக்கிறது. அதற்கும் ஒரு பாராட்டு.

 3. வாழ்த்துக்கள் வினவு !. அதிகாரம் மேலிருந்து கீழாக இல்லை, மாறாக கீழிருந்து மேலாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது, உங்கள் இந்த புதிய முயற்சியின் மூலம் – வாசகரின் மதிப்பீட்டில் எழுத்தாளர் என்பது – செயலாக்கம் பெறுகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது.

  அறிவுடைநம்பி.
  http://purachikavi.blogspot.com

 4. //வாசகர்கள் அனைவரும் வினவு முன்வைக்கும் கருத்துகளை வழிமொழிபவர்கள் அல்ல. அதில் மாறுபடுபவர்களும், எதிர்த்து வாதாடுபவர்களும் உண்டு. அத்தகைய மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் அதே தளத்தில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே சுருக்கித் தந்திருக்கிறோம். வாசகர்களின் ஒவ்வொரு மாற்றுக் கருத்துக்கும் வினவு தோழர்கள் பதிலளிக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை.//

  உண்மையை தெளிவாக ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  // எனினும் இந்தக் கட்டுரைகளையும், அதன் எதிர்வினைகளையும் ஒரு சேரப் படிப்பவர்கள் ஒரு பிரச்சினையைப் பரிசீலிக்கும் பல கோணங்களையும், அந்த அரசியல் பார்வைகளின் பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் புரிந்து கொள்ள இயலும்.//

  சீரிய முயற்சி. வாழ்த்துக்கள்

 5. மும்பை தாக்குதல் பற்றி உடனுக்குடன் வினவு தளத்தில் தெளிவான கட்டுரைகள் வந்தன. இணையத்தை தாண்டி தமிழக மக்களிடம் சேர்க்கும் பணி தொடரட்டும்.

 6. வாழ்த்துக்கள் தோழர்களே,

  மும்பை தாக்குதல் குறித்த கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டபோதே அவைகளை படியெடுத்து இங்கு வினியோகித்துவந்தேன். விரிவான வரவேற்புகளையும் எதிர்ப்புகளையும் ஒருங்கே தந்த நிகழ்வுகள் அது. இப்போது விரிந்த தளத்தில் அது எடுத்துச்செல்லப்பட்டுள்ளது அவசியமான பணியாகும்.

  தோழமையுடன்
  செங்கொடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க