Sunday, October 13, 2024
முகப்புசெய்திஉண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

-

thillai1

மார்ச்-2, 2008 தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறியது. பிப்ரவரி-2, 2009 தில்லைவாழ் அந்தணர்களின் இடுப்பிலிருந்து சிதம்பரம் கோயிலின் சாவிக் கொத்து இறங்கியது. நாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தோதாக இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் 2ம் தேதியிலேயே நடக்கும் படியாக செய்திருக்கிறான் இறைவன். எல்லாம் அந்த ஆடல்வல்லானின் திருவருள்!

தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கைகளுக்கு மாற்றும் தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி. ஏற்கெனவே ஸ்வாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் இவர்தான் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது. தீர்ப்பு கிடைத்த ஒரு வாரத்திற்குள் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

என்ன ஆச்சரியம்! 2 ம் தேதி இரவே கோயிலின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்துவிட்டது. 3 ம் தேதி விடியும் வரை தள்ளிப்போட்டால் அதற்குள் தீட்சிதர்கள் ஒரு ஸ்டே ஆர்டரை வாங்கிக் கொண்டு வந்து விடுவார்களோ என்று அரசாங்கத்துக்கு பயம்! அவாள் மேட்டர் என்றால் கோர்ட் கதவுகள் அர்த்த ராத்திரியிலும் திறக்குமே! சங்கர ராமனைப் போட்ட சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்காக ஸண்டே யில் ஸிட்டிங் போடவில்லையா சென்னை உயர்நீதிமன்றம்!

ஆனபடியினாலே, 2 ம் தேதி ராத்திரி 8.30 க்கெல்லாம் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி கோயில் வாசலில் ஆஜராகி விட்டார். ஆனால் அதற்கு முன்னமே நமது தோழர்கள் கோயில் வாசலில் வெடி வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று வஜ்ரா வேன், ஸ்டிரைகிங் போர்ஸ், வெள்ளை வண்டி, நீல வண்டி என ஒரு போலீசு பெரும்படை கோயிலை சுற்றி வளைத்தது. மொத்தம் சுமார் 600 போலீசார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் சாவியை தீட்சிதர்கள் E.O கையில் கொடுக்கவேண்டும். அதை வாங்கிக் கொடுக்கத்தான் இத்தனை ஏற்பாடு.

“எங்களுக்கு ஆர்டர் காப்பி வரவில்லை” என்று வாதாடினார் தீட்சிதர்களின் வக்கீல். “இந்த ஆர்டர் காப்பியை நீங்கள் வாங்காவிட்டால் கோயில் கதவில் ஒட்டிவிட்டு அடுத்த ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். சாவி கைமாறியது.

மறுநாள் காலை செஞ்சட்டை அணிந்த தோழர்கள் கோயில் வாசலில் திரண்டிருந்தனர். கூட சிவனடியார் ஆறுமுகசாமி. காவலுக்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி நரேந்திரன் நாயர் “சிவப்பு சட்டை போட்டவங்கள்லாம் கோயிலுக்குள் போகக்கூடாது” என்று தடுத்திருக்கிறார். “அப்படி எந்த சட்டத்தில் இருக்கிறது?” என்று கேட்டிருக்கிறார்கள் தோழர்கள். போலீசிடம் போய் சட்டம் பேசலாமா? உடனே தகராறு. அனைவரும் கைது. முழக்கங்கள்… வாசலில் காத்திருந்த டி.வி காமெராக்கள் எல்லாவற்றையும் படம் பிடிக்கவே, உடனே அனைவரையும் விடுவித்தார் ஏ.எஸ்.பி.

“யாரும் வெடி வெடிக்க கூடாது” என்று அடுத்த உத்தரவைப் பிரகடனம் செய்தார் ஏ.எஸ்.பி. “இந்த வழக்கை நடத்தியது நாங்கள். 20 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தை காதைப்பிடித்து இழுத்து வந்து நீதிமன்றத்தில் பேச வைத்தது நாங்கள். இன்று இந்து அறநிலையத்துறையின் கையில் சாவியை வாங்கிக் கொடுத்திருப்பது நாங்கள். இது எங்கள் வெற்றி. அதை நாங்கள் கொண்டாடுவோம். நீங்கள் யார் கேட்பதற்கு?” என்று முகத்தில் அடித்தாற்போலக் கேட்டார் வழக்குரைஞர் ராஜு (மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்)

“எனக்கு அதைப்பத்தியெல்லாம் தெரியாது. லா அண்டு ஆர்டர்தான் என்னுடைய பிரச்சினை” என்றார் ஏ.எஸ்.பி.

” லா அண்டு ஆர்டரை சிதம்பரம் போலீசு பாதுகாக்கும் லட்சணம் எங்களுக்கு தெரியும். எவனாவது சொம்பு திருடினால் முட்டியை உடைப்பீர்கள். அம்மன் தாலியை தீட்சிதர்கள் திருடி விட்டதாக ஒரு தீட்சிதரே புகார் கொடுத்திருக்கிறார். கைது செய்திருக்கிறீர்களா? திருட்டு, விபச்சாரம், கொலை என்று எத்தனை வழக்குகள் தீட்சிதர்களுக்கு எதிராக இருக்கின்றன, ஒரு வழக்கையாவது சிதம்பரம் போலீசு நடத்தியிருக்கிறதா? உங்களுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்கு போட்டிருக்கிறோம். அதுவாவது உங்களுக்கு தெரியுமா? வெடி வெடிப்பதுதான் லா அண்டு ஆர்டர் பிரச்சினையா?” என்று வெடித்தார் ராஜு.

இதற்கு மேல் ஒரு போலீசு அதிகாரி பேச வேண்டிய வசனத்தை பேசினார் ஏ.எஸ்.பி. “வெடித்தால் கைது செய்வேன்”

“கோயில் வாசலில் நானே வெடியைக் கொளுத்துகிறேன். முடிந்தால் கைது செய்யுங்கள்” என்றார் ராஜூ.

“கோயிலுக்கு உள்ள்ளே வெடிச்சா அர்ர்ரஸ்டு பண்ணுவேன்னு சொன்னேன்” என்று உறுமி ஜகா வாங்கினார் ஏ.எஸ்.பி வடிவேலு.

வெடிகள் முழங்கின. கோயில் வாசலில் நின்று கொண்டிருந்த சிவனடியார் ஆறுமுகசாமியின் காலில் விழுந்து திருநீறு வாங்கினார்கள் பக்தர்கள் “மலையைப் புரட்டிட்டீங்க சாமி” என்று அவரைப் பாராட்டினார்கள்.

“எதுவும் என் செயல் அல்ல, எல்லாம் இந்த ம.க.இ.க கட்சி தோழர்கள், வக்கீலு தம்பி அவுங்கதான் செஞ்சது” என்றார் சிவனடியார்.

“எல்லாம் அவன் செயல்” என்ற வசனத்தை அல்லவா சிவனடியார் பேசியிருக்க வேண்டும். பேசவில்லையே, இதுவும் அவன் செயலோ!

தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆயிரமாண்டு ஆதிக்கத்தை வீழ்த்தி ஆலயத்தை அறநிலையத்துறையின் கையில் ஒப்படைத்திருப்பது அவனும் அல்ல, சிவனும் அல்ல, எவனும் அல்ல… அது ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் இளம் வழக்குரைஞர்களும்தான் என்பதை இந்து அறநிலையத்துறையின் அதிகாரிகள் அனைவரும் அறிவார்கள். இதற்காக நூறு முறை அவர்கள் நன்றியும் கூறிவிட்டார்கள்.

ஒரு பத்தாண்டுகள் பின்னே போவோம். 1997 – அதுவும் கலைஞர் ஆட்சிதான். அப்போது இதே சிதம்பரம் கோயிலில் அறநிலையத்துறையின் அதிகாரி நியமிக்கப்பட்டார். கோயிலுக்கு உள்ளே போய் அறிவிப்புப் பலகையை மாட்டினார் அந்த நிர்வாக அதிகாரி. அடுத்த கணமே அந்தப் பலகையை உடைத்தெறிந்து அவரையும் விரட்டினார்கள் தீட்சிதர்கள். அந்த அப்பாவி அதிகாரி மிகுந்த நம்பிக்கையுடன் காவல் நிலையத்திற்குச் சென்று 3 தீட்சிதர்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் கொடுத்தார். தீட்சிதர்களைக் கைது செய்ய போலீசு மறுத்துவிட்டது.

அதன்பின் சட்டமன்றத்தில் காங்கிரசு கட்சியின் “சூத்திர” எம்.எல்.ஏ அழகிரி தீட்சிதர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். “தீட்சிதர்கள் கோயிலைத் தவிர வருமானத்துக்கு வேறு வழியில்லாத ஏழைகள். அவர்கள் மீது அரசு கருணை காட்டவேண்டும்” என்று கோரினார். கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்ளும் முயற்சி அத்தோடு கைவிடப்பட்டது. தீட்சிதர்களின் மீது அறநிலையத்துறை அதிகாரி கொடுத்த புகாரை “விவரப் பிழை” (mistake of fact) என்று கூறி கிழித்தெறிந்த்து போலீசு.

அதே தீட்சிதர்கள். அதே திமுக ஆட்சி.

இதோ, தில்லைக் கோயிலின் உள்ளே நிர்வாக அதிகாரியின் அலுவலகம் தயாராகி விட்டது. அடையாளமாக பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கத் தொடங்கினார் அறநிலையத் துறையின் நிர்வாக அதிகாரி. சிறிது நேரத்தில் சேர்ந்த தொகை சில ஆயிரங்கள். 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!

“பரமேஸ்வரன் ஆனந்த நடனம் ஆடறார் பாருங்கோ” என்று தமிழிலும், “தி காஸ்மிக் டான்ஸ் ஆப் லார்டு ஷிவா” என்று ஆங்கிலத்திலும், இன்னும் எல்லா உலக மொழிகளிலும் வருசம் பூரா பேசி தீட்சிதர்கள் வசூலித்த தொகை வெறும் 37,199 ரூபாய்தானாம். அதாவது தினமொன்றுக்கு 100 ரூபாய். நடைபாதை பிள்ளையார் கூட உட்கார்ந்த இடத்தில் 400, 500 வசூல் பண்ணுகிறார். நம்ம நடராசப் பெருமானோ நாள் முழுவதும் டான்ஸ் ஆடுகிறார். இருந்தாலும் தினசரி வசூல் நூறு ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா?

உண்டியலே இல்லாத தில்லைப் பெருங்கோயிலில் நேற்று உண்டியலை வைத்து விட்டது அறநிலையத்துறை. “நடராசனை எடுத்திருந்தால் கூட ஏதாவது பரிகாரம் செய்து கொள்ளலாம். உண்டியலை வைத்துவிட்டால் இதற்கு வேறு பரிகாரமே இல்லையே” என்று பதறியிருக்கிறார்கள் தீட்சிதர்கள்.

“உண்டியல் வைக்கணும்னு கோர்ட் ஆர்டர்ல இல்லை” என்று ஆட்சேபித்திருக்கிறார்கள் தீட்சிதர்களின் வக்கீல்கள்.

“கோயில் வரவு செலவுக்கு இனி நான்தான் பொறுப்பு. உண்டியல் வைப்பது எங்க அதிகாரம். எந்த இடத்தில் வைக்கலாம்னு வேணா நீங்க சொல்ல்லாம்” என்றிருக்கிறார் நிர்வாக அதிகாரி. “அப்டீன்னா இங்க வைங்க” என்று இடம் காட்டினாராம் ஒரு தீட்சிதர். “நாங்க வைக்கவே கூடாதுங்குறோம். நீ எதுக்குடா எடம் காட்றே?” என்று சொல்லி அந்த தீட்சிதரை காட்டு காட்டுன்னு காட்டியிருக்கிறார்கள் சக தீட்சிதர்கள்.

கும்மிருட்டாக இருக்கும் கருவறையில் கற்பூரத்தைக் கொளுத்தி சிறிது நேரம் சாமியின் மூஞ்சிக்கு நேரே காட்டினால்தான் “இறைவனின் திருமுகத்தை” பக்தர்களால் பார்க்க முடியும். “கோயிலே நம்ம கைய விட்டு போயாச்சு. இந்த மூஞ்சிய பக்தன் பாத்தா என்ன, பாக்காட்டி என்ன” என்ற டென்சனில் தீட்சிதர்கள் ரெண்டு நாளாக சரியாக சூடம் காட்டுவதில்லையாம். உடனே பக்தர்கள் நிர்வாக அதிகாரியிடம் புகார். “சூடம் எரிந்து தீரும்வரை காட்டுங்கள்” என்று தீட்சிதர்களுக்கு உத்தரவிடுகிறார் நிர்வாக அதிகாரி.

நந்தனை எரித்த அந்தணர் குலத்தின் வாரிசுகள் இப்போது நெருப்பே இல்லாமல் எரிகிறார்கள்.

தில்லை மக்களுக்கோ உற்சாகம். தோடுடைய செவியன் காட்சி தருவதை நம்பமுடியாமல் கண்ணைக் கசக்கிவிட்டுக் கொண்ட அப்பரைப் போல, இந்தக் காட்சிகளையெல்லாம் நம்பமுடியாமல் கண்ணைக் கசக்கி விட்டுக்கொள்கிறார்கள் கோயிலுக்கு அடிக்கடி வந்த போகும் பக்தர்கள்.

தில்லைவாழ் அந்தணர்கள் இப்போது சென்னை வாழ் அந்தணர்கள், டெல்லி வாழ் அந்தணர்களாகிவிட்டார்கள். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்திருக்கிறார்கள். வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இங்கே முடியாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போவார்கள். அமைச்சர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரையும் இந்நேரம் சந்தித்திருப்பார்கள். லாபி வேலை செய்யத் தொடங்கிவிட்டது.

இனி என்ன நடக்கும்? அப்பீல் ஜெயிக்குமா? அது எப்படி நமக்குத் தெரியும்? அதெல்லாம் அந்த ஆடல்வல்லானுக்குத்தான் வெளிச்சம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மறுபடியும் ஹை கோர்ட் படியேறத் தயாராகி விட்டார்கள். வழக்கு செலவுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாயாக மக்களிடம் நிதி திரட்டும் பணியை மறுபடியும் தொடங்கி விட்டார்கள் எங்கள் தோழர்கள்.

இன்று காலை தினமணி இரண்டாம் பக்கத்தில் இருபுறமும் தீட்சிதர்கள் புடை சூழப் பத்திரிகைகளுக்குக் காட்சி கொடுத்திருக்கிறார் அன்னை ஜெயலலிதா.

chidam

“சிதம்பரம் ஆலய நிர்வாகத்தை அரசு ஏற்றுக் கொள்ள வற்புறுத்திய சிவனடியாரும் மற்றவர்களும் தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாட ஈ.வெ.ரா சிலைக்கு மாலை அணிவித்த்தில் இருந்தே அவர்களது உள்நோக்கம் தெளிவாகிறது” என்று சாடியிருக்கிறார் பா.ஜ.க மாநிலத்தலைவர் இல.கணேசன்.

“கோயிலை மீண்டும் தீட்சிதர்கள் கையில் ஒப்படைக்க பொதுநல வழக்கு போடுவேன்” என்று பொதுநலத் தொண்டர் சுப்பிரமணிய சாமி சாமியாடியிருக்கிறார்.

அடுத்த ராமர் பாலம் தொடங்கிவிட்டது?

  1. சிதம்பரம் கோவிலில் உண்டியல்! தீட்சிதர்கள் கதறி அழுகை!

    – தினமலர் – 06.02.2008

    “வரலாற்றில்
    முதன்முறையாக”
    சிதம்பரம் கோவில்
    உண்டியல் பார்த்திருக்கிறது.

    “வரலாற்றில்
    முதன்முறையாக”
    ஜீவதார வாழ்வுரிமை
    பறிக்கப்பட்டதாக
    வாயிலும், வயிற்றிலும்
    அடித்து
    தீட்சிதர்கள் கதறி அழுகை.

    இனி –
    தீட்சிதர்களின் கொழுப்பு
    அதனால் எழுந்த திமிர்
    கொஞ்சம் கொஞ்சமாய்
    குறையும்.

    தீட்சிதர்களுக்கு,
    டையட்டிசனாக (Dietician)
    தொடர்ந்து
    ம.க.இ.க.,
    ம.உ.பா.மை.
    செயல்படும்.

    குறிப்பு :
    ம.க.இ.க – மக்கள் கலை இலக்கிய கழகம்
    ம.உ.பா.மை – மனித உரிமை பாதுகாப்பு மையம்.

    http://socratesjr2007.blogspot.com

  2. ஆயிரம் ஆண்டுகளாக அடிமைத்தனத்தின் சொத்தாக வ்வீற்றிருந்த பார்ப்பனீயம் தில்லையில் வீழ்த்தப்பட்டு நேற்று கூட செயாவின் வீட்டுக்கு போயிருக்கிறது,எங்களுக்கு வேற தொழில் தெரியாது என புலம்புகிறது,சிவனடியாரை பார்த்து வயிறு எரிகிறது,ராஜுவை பார்த்து மனம் குமுறுகிறது,

    இதனை நக்சல் பாரிகள் மட்டுமே சாதித்தார்கள் ஆம் பார்ப்பனீயத்துக்கும் மறுகாலனிக்கும் இந்தியாவில் உள்ள ஒரே எதிரி நக்சல் பரி.

  3. தொடர்புடைய இடுகைகள் பதிவுகள் இனணப்பதற்காக, சிதம்பரம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடுகைகள் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

  4. வினவு தோழர்களுக்கு,

    இயக்க செய்தி என்பதால், உங்களிடம் அனுமதி பெறாமலேயே இந்தச் செய்தியை எனது வலைத்தளத்தில் மீள் பதிவு செய்திருக்கிறேன்.

    தோழமையுடன்
    சூன்யம்

  5. படிக்கப் படிக்க சந்தோஷமாய் இருக்கிறது..

    //அடுத்த ராமர் பாலம் தொடங்கிவிட்டது?//

    விடுவாங்களா?? ஆன மட்டும் மோதிப்பார்த்து விடுவார்கள்; ஆக வில்லையென்றால் இருக்கவே இருக்கிறது சரணாகதித் தத்துவம்! அது ஆடல்வல்லானாய் இருந்தால் என்ன கம்யூனிஸ்ட்டாய் இருந்தால் என்ன – சரணாகதியினால் ஏதாவது ஆதாயம் உண்டென்றால் நிச்சயம் அதையே கடைசியாய் செய்வார்கள்…

    பார்ப்பனியம் இந்த முறை சந்தேகமில்லாமல் தோற்றிருக்கிறது ஆனால் இந்த தோல்வியெல்லாம் பார்ப்பனியத்தை அசைத்துவிடும் என்று தோன்றவில்லை… பார்ப்பனியம் சமூகத்தில் நிலைத்து நிற்பதற்கான சமூக பொருளாதார காரணங்கள் தொடர்ந்து இருக்கும் வரை சில விட்டுக் கொடுப்புகள் / நீக்குப் போக்குகள் ( அதாவது அஜ்ஜீஸ்மெண்டு) செய்து கொண்டு தொடர்ந்து தமது இருப்பை உறுதி செய்து கொள்ளும்…

    எல்லா கோயிலும் பாப்பான் கைய விட்டுத்தான் போகட்டுமே? அதைப் பற்றி அவன் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டான் தானே? கோயில் பார்ப்பனியத்தின் தளமாக இருந்தது மாறி, இப்போது அது மக்கள் வாழ்க்கையோடு பெருமளவு கலந்து விட்டது. வாழ்வின் சகல அம்சங்களிலும், நிலைகளிலும், சூழல்களிலும் மக்கள் படிநிலை அமைப்புக்குப் பழகி விட்டார்கள் –

    இதெல்லாம் மாறுவது எப்போ??

    ஹூம்… அன்னாந்து ஒரு மலையைப் பார்ப்பது போன்ற ஆயாசம் தான் வருது – ஆனாலும் இந்த மாதிரி வெற்றிச் செய்திகள் நம்பிக்கையளிக்கிறது..

    வாழ்த்துக்கள் நன்பர்களே…. பார்ப்பானோடு அவனது ட்ராக்கில் போய் ( சட்டம்/கோர்ட்டு…இத்தியாதி இத்தியாதி..) ஜெயிப்பது ஒன்றும் சாதாரணமான விஷயமல்ல.. அவன் அந்த நடைமுறையிலேயே ஊறி பழம் தின்று கொட்டை போட்டவன்… நீங்கள் செய்திருப்பது சந்தேகம் இல்லாமல் பெரும் சாதனை தான்!!!!!

  6. தீட்சிதர் காண்டுக்கு முன்னாடி சீபீஎம் காண்டு தம்மாதூண்டு!

  7. //தீட்சிதர் காண்டுக்கு முன்னாடி சீபீஎம் காண்டு தம்மாதூண்டு!//

    இது சூப்பரு… ஏம்பா அர டிக்கட்டு அந்த பய புள்ளைகள வம்பிழுக்காம இருக்கவே முடியாதாய்யா உன்னால 🙂

  8. ஜெவுடனான படத்தில் நடுவில் உட்காந்திருக்கும் தீட்சிதரின் இமோசனுக்கு ஏற்ற வசனத்தை எழுதினால் பரிசு உன்டா?

    • //ஜெவுடனான படத்தில் நடுவில் உட்காந்திருக்கும் தீட்சிதரின் இமோசனுக்கு ஏற்ற வசனத்தைஎழுதினால் பரிசு உன்டா? //

      வசனம் :சாமீ நீங்க பார்த்து எதுன செய்தேல்னா புண்யமா போகும்.

      ஓய்… இந்த வசனம் தரும் ஆனந்தத்தை விட ஒரு பரிசு வேண்டுமா உமக்கு?

  9. மிகச் சிறந்த படைப்பு தோழர்களே… உங்கள் உழைப்பின் பெருமிதம் எள்ள்ளிலும், துள்ள்ளிலும் வெளிப்படுகிறது. இது போன்றதொரு மகிழ்ச்சியான பதிவை படித்து பலநாளாயிற்று. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் பதிவு!

  10. ம க இ க வின் வெற்றிக்கு வாழ்த்துகள். அது என்ன “தில்லைவாழ் அந்தனர்கள்”. தயவு செய்து தில்லைவால் (ள்) (ழ்) பார்ப்பனர்கள் என்று எழுதவும் .

    //ஜெவுடனான படத்தில் நடுவில் உட்காந்திருக்கும் தீட்சிதரின் இமோசனுக்கு ஏற்ற வசனத்தை எழுதினால் பரிசு உன்டா?//

    கட்டாயமா, பாஸ் !!!

  11. ஒரு அனானியின் கேள்வியும்
    குருத்தின் பதிலும்.

    //ஒரு மனிதனின் அழுகையில் சுகம் காண்பதில் எனக்கு உடன்பாடில்லை.தீட்சிதர்களுக்கு மாற்று வாழ்க்கை வழிகளை அமைப்பது அரசின் கடமை.//

    மனிதன் என பொதுமைப்படுத்துவது சரியல்ல!

    தீட்சிதர்கள் இதுவரைக்கும் கோவிலுக்கு முதலாளிகளாக இருந்தார்கள். இனி, பூசாரியாக மட்டும் இருப்பார்கள்.

    தீட்சிதர்களுக்கு சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டு, அரசால் கொடுக்கப்படும் அவ்வளவு தான்.

    அந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு, ஏற்கனவே வாழ்ந்த மாதிரி, ஆடம்பரமாய் வாழ முடியாது. அதையெல்லாம், இழக்கப்போகிறோமே என்பதால் தான் இவ்வளவு கதறல்கள்.

    என்னைப் பொறுத்தவரையில், தீட்சிதர்களுக்கு இந்த கதறல்கள் அவர்களுக்கே நல்லது தான் செய்யும்.

    இதுவும், “ஆடல்வல்லானின் திருவிளையாடல்” என மற்றவர்களுக்கு போதிப்பது மாதிரி, தாங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். தீட்சிதர்கள் ஆத்திகர்கள் தானே! நாத்திகர்கள் இல்லையே!

  12. //ஒரு அனானியின் கேள்வியும்
    குருத்தின் பதிலும்.

    //ஒரு மனிதனின் அழுகையில் சுகம் காண்பதில் எனக்கு உடன்பாடில்லை.தீட்சிதர்களுக்கு மாற்று வாழ்க்கை வழிகளை அமைப்பது அரசின் கடமை.//

    மனிதன் என பொதுமைப்படுத்துவது சரியல்ல!

    தீட்சிதர்கள் இதுவரைக்கும் கோவிலுக்கு முதலாளிகளாக இருந்தார்கள். இனி, பூசாரியாக மட்டும் இருப்பார்கள்.

    தீட்சிதர்களுக்கு சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டு, அரசால் கொடுக்கப்படும் அவ்வளவு தான்.

    அந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு, ஏற்கனவே வாழ்ந்த மாதிரி, ஆடம்பரமாய் வாழ முடியாது. அதையெல்லாம், இழக்கப்போகிறோமே என்பதால் தான் இவ்வளவு கதறல்கள்.

    என்னைப் பொறுத்தவரையில், தீட்சிதர்களுக்கு இந்த கதறல்கள் அவர்களுக்கே நல்லது தான் செய்யும்.

    இதுவும், “ஆடல்வல்லானின் திருவிளையாடல்” என மற்றவர்களுக்கு போதிப்பது மாதிரி, தாங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். தீட்சிதர்கள் ஆத்திகர்கள் தானே! நாத்திகர்கள் இல்லையே!//

    எல்லாம் வல்ல சர்வேசுரன் சிவபெருமானின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று

  13. I find this constant attack on Brahmins is getting out of hand.

    Government taking over the temple is fine. It is rubbish to say that one can’t sing in Tamil, especially in a temple within Tamilnadu. One should be able to praise God in the language they want.

    But making a mockery out of a community is not really needed. I have read that Brahmin community is the fundamental reason for India’s social attrocities. But then, instead of giving importance to raising the oppressed and poor from their living standards, I think too much time and money is wasted on hitting back at them. Improve the base society that makes up 90% of the population. Let them learn about great people, politics, economics, social responsibilities, awareness of population issues, health issues, and so much more. Only then, will we not have people cine people dominating in politics. Where in developed countries, degrees and experience in economics, law, business, international relationship is required, we have ‘kutthu’ dancers, so-called Tamil worshippers, actresses and all, vying for spotlight, fame and money through politics. How will society become better in such a scenario?

    Karunanidhi’s true face came long back. The man insults hindu practices, but his wife cleans the feet of ‘so-called’ divine people, so that her husbands faults are forgiven. Who knows if government will keep the temples well? So many great architectures are rotting away while these politicians swindle money.

    Most important thing is for all Temples to be free for access, cleanliness should be practiced by upkeepers and public, and it should be a place of equal worship for everyone.

    -Kajan

    06 February, 2009

  14. //அவர்களுடன் ஒரு நாள் இருந்து பாருங்கள். அவர்கள் செய்யும் வேலைகளைப் பாருங்கள். அப்புறமா சொல்லுங்கள் வாரத்தில 7நாளும் லீவே இல்லாம உங்களால் அப்படி உழைக்கமுடியுமான்னு.

    எல்லாமே இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்.//

    சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சுத்தம் செய்வதில்,
    கட்டுமான தொழிலில் மேலிருந்து விழுந்து, தொழிற்சாலைகளில் இயந்திரத்தில் சிக்கி, வெல்டிங் பட்டறையில் ஷாக் அடித்து பல ஆயிரம் தொழிலாளர்கள் தினந்தோறும் உயிரிழக்கிறார்கள்.

    ஒரு பார்ப்பன பூசாரி வாழ்வில் இப்படி செத்ததுண்டா! 7 நாளும் லீவு இல்லாமல் பார்க்கும் அந்த மிகச் சிரமமான பூசாரி வேலையை மற்றவர்கள் செய்யட்டும். நீங்கள் கொஞ்சம் வேறு வேலை பாருங்கள்.

    இந்தக்கரையில் சிரமம், துன்பங்கள், துயரங்கள்.

    அந்தக்கரையில் சொகுசு, பவுசு, பகுமானம்.

    இக்கரைக்கு அக்கரைப் பச்சை – எப்பொழுதும், எங்கும் பொருந்துவதில்லை!

    06 February, 2009

  15. தில்லை வீழ்ந்தது சரியல்ல தில்லை சுதந்திரம் அடைந்தது.
    இருள் மறையட்டும்,
    ஒளி பிறக்கட்டும்…..

  16. தமிழ் தொலைக்காட்சிகளில் மக்கள் தொலைக்காட்சி வாரவாரம் சனிக்கிழமைகளில் மறுபக்கம் என்ற குற்றப்பிண்ணனி நிகழ்சி ஒளிப்பரப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் கொஞ்ச நேரம் முன்பு இந்த தில்லை கோயில் விடுதலை பெற்றது தொடர்பாக ஒளிபரப்பினார்கள். ஆனால் எந்த இடங்களிலும் ம.க.இ.க தோழர்களின் பங்களிப்பு பற்றி ஒரு வரி செய்திகூட சொல்லவில்லை. தோழர்களின் தொடர் உழைப்பு, அதற்கான போராட்டம், போர்முனை அதற்கு கிடைத்த வெற்றி பற்றி சொல்ல இவர்களை எது தடுக்கிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை தேர்தலில் கூட்டு என்று வரும் போது எதரிகாலத்தில் போலி கம்யுனிஸ்டுகளுடன் உறவாட வேண்டி வரும். அவர்கள் கோபித்து கொள்வார்கள் என்று அரசியல் விபச்சாரர் மருத்துவர் நினைக்கிறாறோ!!!!!

  17. ஒருபிரச்சனையும் இல்லை பூசாரி வேலையை மற்றவர்கள் செய்யட்டும்.
    ( பார்ப்பனர்கள் ) நந்தனை எரித்த அந்தணர் குலத்து நாய்கள் வெளியபோகட்டும்.

    மக்கள் கலை இலக்கிய கழகம் வாழ்க.

    உண்டியலே இல்லாத தில்லைப் பெருங்கோயிலில் நேற்று உண்டியலை வைத்து விட்டது

  18. சிதம்பரம் கோயிலை பார்ப்பானா கட்டினான். தமிழன்தானே கட்டினான். அவன் கட்டிய கோயிலில் அவன் பூசை செய்யாமல் அண்டி பிழைக்க வந்த உன்னை மாதிரி பார்பன கூட்டம் மட்டுமா பூசை செய்யணும். நல்ல இருக்குது கதை.

    கோயிலை கட்ட தமிழன் ஆனா அதில் குந்தியிருந்து சுரண்டி தின்னுவது பார்பான்.

  19. “கோயிலுக்கு உள்ள்ளே வெடிச்சா அர்ர்ரஸ்டு பண்ணுவேன்னு சொன்னேன்” என்று உறுமி ஜகா வாங்கினார் ஏ.எஸ்.பி வடிவேலு”

    வேணாம் வேணாம் நான் அழுதுடுவேன் (வடிவேலு)

  20. “தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறையின் கைகளுக்கு மாற்றும் தீர்ப்பை வழங்கியவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி. ஏற்கெனவே ஸ்வாமி பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் இவர்தான் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.”

    இந்தியாவில் ஒரு துணிச்சலான மனசாட்சி உள்ள நீதிபதிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் ஒரு துணிச்சலான மனசாட்சி உள்ள நீதிபதிக்கு வாழ்த்துகள்.

  21. […] சிதம்பரம் நடராசர் கோயில் விசயத்தில் … கோயில் சொத்துகளை கொள்ளையிடும் தீட்சிதர்களை வெளியேற்றிக் கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வைத்தன மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மக்கள் கலை இலக்கியக் கழகமும். நடராசன் சொத்துகளை நடராச தீட்சிதர் என்று கையெழுத்துப் போட்டு விற்றிருப்பதற்கான சான்றுகளும், நகைத் திருட்டு தொடர்பாக தீட்சிதர்கள் மீது உள்ள கிரிமினல் வழக்குகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றம்,கோயிலை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துவிட்டது. […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க