முகப்புசெய்திபெற்ற மகளை விற்ற அன்னை !

பெற்ற மகளை விற்ற அன்னை !

-

poverty_3_0146

இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர்.  நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும்  அவர்கள் தங்களது வாழ்க்கையை  ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை.

ஒரிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தின் குண்டபுட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சியாம்லால் தாண்டி; இவரது மனைவி லலிதா தாண்டி. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்தத் தம்பதியினருக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். பாசன வசதி இல்லாத அரை ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு, இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். மழையை நம்பி விவசாயம் செய்து வந்த இவர்களுக்கு வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அவ்விருமாதங்களில் மட்டும் இரண்டு வேளையாவது உணவு கிடைத்து வந்தது. மற்ற நாட்களில் அதுவும் கிடைக்க வழியில்லை. ஒரு கட்டத்தில், இனி விவசாயம் செய்தால் பிழைக்க முடியாது என்றுணர்ந்த இவர்கள், அருகிலிருந்த  இரும்பு எஃகுத் தொழிலுக்குப் பெயர்போன நகரமான பிலாய் நகருக்குக் குடிபெயர்ந்து கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

பிளாஸ்டிக் கூரையால் மூடப்பட்ட ஒரு வீட்டில் கணவன்  மனைவி இருவரும் தங்கிக் கொண்டு, அந்நகரில் நடைபெறும் கட்டிட வேலைகளில் செங்கல் சுமப்பவர்களாகப் பிழைப்பு நடத்தி வந்தனர். அங்கே கிடைத்த கூலி அற்பமானதாக இருந்தபோதிலும், அவர்களால் குழந்தைகளுக்கு வயிறார உணவளிக்க முடிந்தது. கொஞ்சம் பணத்தைக் கூட சேமித்து வைத்தனர். இதுவும் சிலகாலம் மட்டுமே நீடித்தது. அவர்களது நான்கு வயது மகன் ஹரேந்திராவுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பிலாய் இரும்பு ஆலையில் உள்ள மருத்துவமனையில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனுமதி கிடையாதென்பதால், மகனுக்கு மருத்துவம் பார்க்க வழியின்றி அவர்கள் தவித்தனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் அவர்களிடம் பணம் இல்லை. தங்களது கிராமத்திற்குத் திரும்புவதைத் தவிர  அவர்களுக்கு வேறுவழியில்லை.

கிராமத்திற்கு அருகிலிருந்த திட்லாகர் அரசு மருத்துவமனையில் ஹரேந்திராவைச் சோதித்த மருத்து வர்கள், அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இலஞ்சம் கேட்டனர்.  ஏழைகளான தாண்டி தம்பதிகளால் அவர்கள் கேட்ட பெருந்தொகையைத் தர முடியவில்லை. எனவே, அவர்கள் துக்லா கிராமத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்தாயிரம் ரூபாயை இலஞ்சமாகக் கொடுத்துத் தங்களது மகனைச் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு அந்தச் சிறுவனுக்குக் கேட்கும் திறன் முற்றிலும் பறிபோனது.

மகனைப் பார்த்துக் கொள்ள மனைவியைக் கிராமத்தில் விட்டுவிட்டு சியாம்லால் மட்டும் நகரத்திற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், இம்முறை நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டார். போதிய உணவு இல்லாததாலும், கடுமையான உழைப்பின் காரணமாகவும் அவரது உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்து வந்தது. அவரது வாய் மற்றும் கண் இமைகளில் புண்கள் ஏற்பட்டன. அவரால் தனது கண்ணை மூடக்கூட இயலவில்லை. கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். அவரது எடை மிகவும் குறைந்து போனது.

இதனால், எங்கே தனது கணவனை இழந்து விடுவோமோ எனப் பயந்த லலிதா, இம்முறை திட்லாகர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து சியாம்லாலுக்குச் சிகிச்சை பெற முடிவு செய்தார். சியாம்லாலுக்கு தினந்தோறும் ஊசிகள் போட வேண்டியிருந்தது. மருத்துவர்கள் ஒரு ஊசிக்கு நூறு ரூபாய் வேண்டும் எனக் கேட்டனர், அவர்களிடம் மன்றாடிய லலிதா, அவர்களை அறுபது ரூபாய்க்குச் சம்மதிக்க வைத்தார்.

சியாம்லால் உடல் தேறி வந்த போது, அவர்கள் கட்டிட வேலையில் கடுமையாக உழைத்துச் சேர்த்த பணம் முழுவதும் கரைந்ததுடன், 12,000 ரூபாய் கடனும் சேர்ந்திருந்தது. மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தில், அரசாங்க வேலையில் இருந்த ராம்பிரசாத் மங்கராஜ் என்ற லலிதாவின் உறவினர்தான் இவர்களுக்குப் பணம் கொடுத்து உதவினார்.

மருத்துவமனையிலிருந்து திரும்பிய சியாம்லாலால் முன்னைப் போலக் கடுமையான வேலைகள் செய்ய முடிய வில்லை. எனவே, கிராமத்திலேயே கூலி வேலைக்குச் செல்ல அவர்கள் முடி வெடுத்தனர். கிராமத்தில் அவர்களுக்கு மரம் வெட்டுதல், மாடு மேய்த்தல் போன்ற வேலைகள்தான் கிடைத்தன. அவையும் தொடர்ச்சியான வேலை களாக இல்லாமல், வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைத்தது. சில சமயங்களில் நான்கு மாதங்கள் வரை கூடத் தொடர்ச்சியாக வேலை எதுவும் கிடைக்காமல் இருந்தது. நகரத்தில் கிடைத்ததில் பாதி மட்டுமே கூலியாகக் கிடைத்தது. கிடைத்த கூலியை வைத்து வயிறாரச் சாப்பிட்டாலே அது பெரிய விஷயம்தான். வயிறு நிறைய சாப்பிடுவதைக் கடவுள் கொடுத்த வரமாக இவர்கள் கருதினார்கள். கூலி கிடைக்காத நாட்களில் அவர்களின் குடும்பத்திலிருந்தவர்கள் அனை வருக்குமான உணவு – பழைய சோறும், தண்ணீரில் ஊறவைத்த கஞ்சியும் தான் .

சாப்பிடப் போதிய அளவு உணவில் லாமல் தவித்த அவர்களுக்கு ராம்பிரசாத் தின் கடனை அடைப்பதென்பது இயலாத காரியமாக இருந்தது. இந்தச் சூழ் நிலையில்தான் அவர்களின் மூன்று வயதுப் பெண் குழந்தை ஹேமாவைத் தனக்குத் தத்துக் கொடுத்தால் அவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வதாக ராம்பிரசாத்  கூறினார்.

சியாம்லாலின் உடல் நிலை சீரடையாமலேயே இருந்த காரணத்தால் லலிதாதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டியிருந்தது. தனது மகளைத் தத்துக் கொடுக்க முடிவெடுத்த லலிதா, தன் மகள் மீது கொண்டிருந்த எல்லையற்ற பாசத்தாலும், கடன் சுமையிலிருந்து மீளவும் அப்படியொரு முடிவை எடுத்ததாகக் கூறினார். பெண் குழந்தை இல்லாத ராம்பிரசாத், ஹேமாவைத் தனது மகளாக நினைத்து வளர்ப்பார் என அவர் கருதினார். குழந்தையைத் தத்தெடுத்தது, பத்திரத்திலும் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 2001ஆம் ஆண்டில் கடனை அடைப்பதற்காக குழந்தையை தத்து கொடுத்த செயல் நகரத்தை எட்டியவுடன், அது பரபரப்பான செய்தியானது.  விரைவிலேயே மாநிலம் முழுவதும், ஏன் நாடு முழுவதும் இது பரவியது.

இதனால் நிர்ப்பந்தத்துக்குள்ளான அரசு, சபாநாயகர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்தக் குழுவும் சியாம்லாலின் கிராமத்திற்கு வந்து அத்தம்பதியினரைக் கடுமையாகச் சாடிவிட்டு, குழந்தையை வாங்கியவரைச் சிறையிலடைத்து, குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைத்தது. அதற்குப் பிறகு எல்லோரும் இவ்விஷயத்தை மறந்து விட்டனர். அப்பெற்றோர் குழந்தையை விற்கக் காரணம் என்ன என்பது பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை. நாட்டிற்கு ஏற்படவிருந்த பெரும் பழியைத் துடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லா பத்திரிக் கைகளும் அடுத்த செய்தியை பரபரப்பாகச் சொல்ல ஆரம்பித்தன.

வருடங்கள் உருண்டோடிவிட்டன, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை எப்படியிருக்கிறது எனப் பார்க்க விரும்பிய ஹர்ஷ் மந்தர் எனும் பத்திரிகையாளர், அண்மையில் அந்த கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது, குழந்தை ஹேமா அங்கே உயிரோடு இல்லை.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடம் கழித்து, அந்தக் குழந்தை மஞ்சள் காமாலை நோய்த் தாக்கி இறந்து விட்டது. சரியான உணவு இல்லாததால், நோஞ்சானாக இருந்த குழந்தையால் மஞ்சள் காமாலை நோயை எதிர்த்துப் போராட முடியவில்லை. “அந்தக் குழந்தை ராம் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், இன்று அவள் உயிரோடு இருந்திருப்பாள். ராம்பிரசாத்திடம் வசதியிருப்பதால், அவர் குழந்தையைக் காப்பாற்றி வளர்த்திருப்பார். ஆனால், எங்களிடம் எந்த வசதியும் இல்லாததால், எங்கள் அன்பு மகளைப் பறிகொடுத்துவிட்டோம்” என்று வேதனையில் விம்முகிறார், லலிதா. சியாம்லாலும், லலிதாவும் இன்னமும் அதே குடிசையில் தினமும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்துவிட்டு, நோஞ்சானாகக் கிடக்கும் மற்ற குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது எனத் தெரியாமல் போராடிக் கொண்டி ருக்கின்றனர்.

“தி ஹிந்து” நாளேட்டில் (நவ.30, 2008, ஞாயிறு பதிப்பு) ஹர்ஷ் மந்தர் எழுதியுள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயகம், பிப்’09

 

 1. எல்லாவற்றையும் விற்றாயிற்று கிட்னியை கூட அடமானம் வைத்தாயிற்று இனி பென்டாட்டி பிளைளகளையும் விற்றுதான் வாழ வேண்டிய நிலை. வல்லரசாம்…செருப்பால அடி

 2. சொந்தநாட்டு மக்களுக்கு கஞ்சி ஊத்த முடியல இந்த அழுகுல அடுத்த நாட்டுக்கு நாட்டாமைக்கு போவுது இந்த நாயி!

 3. விவசாயம் அழிக்கப்பட்டு வருவதால் இது போன்று ஒரு புறம் வறுமையில் குழந்தைகள் இறந்து போகின்றன மறுபுறம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு என தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒட்டு கட்சி அரசியல் வாதிகள் – அதிகாரிகள் கோப்புகளில் எழுதிகொண்டிருக்கும் இந்த நேரத்தில் பல குழந்தைகள் கொத்தடிமைகளாக ஒரு தினத்திற்கு பதினான்கு முதல் பதினெட்டு மணி நேரம் வேலை செய்துகொண்டிருப்பதுதான் எதார்த்தம். மக்கள் எழுச்சி பெற்று மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வர வேண்டும். -சித்ரகுப்தன்

 4. மக்களது வரிப்பணத்தை எடுத்த சிறீலங்காவுக்கு, தமிழரைக் கொல்லக் கொடுக்கும் கோடிக்கணக்கான பணத்தை இந்தியவினது ஏழ்மையைப் போக்கப் பயன்படுத்த முன்வரலாமே. பத்திரிகைகள் இவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். அது சரி ஏழைகளால் பத்திரிகை வெளியிட முடியுமா? பணக்கார வர்கத்தின் கைகளில் ஆட்சியும் பத்திரிகைகளும் இருக்கும்போது இது போன்ற வாழ்க்கையே வாக்களிக்கும் மக்களுக்குப் பரிசாகும்.

 5. சல்மா ஹாயேக் பால் கொடுத்தை பெரிய ஸ்கூப்ப ஆக்கும் ஊடகங்களே உங்கள் நாட்டில் வறுமையில் சாகும் என்னிலடங்கா பிஞ்சுகளின் உயிரை காக்கும் சமூக பொருப்பு உங்களுக்கு இல்லையா? பாகிஸதானுக்கு எதிராக முன்டா தட்டுவது இருக்கட்டம், ஒரிசா பக்கம் போ

 6. இந்தியாவின் பலவீனமே இதுதான். பணக்காரர்கள் மேலும் மேலும் பணத்தை பேங்க் இல் திரட்டிக்கொண்டிருக்க ,பாவம் ஏழைகளின்வாழ்வு மேலும் மேலும்
  கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்படுகிறது. உலகில் எல்லா மனிதருமே புத்திசாலிகளாகவும் அதிஷ்டசாலிகளாகவும் இருக்க முடிவதில்லை .அதற்காகத்தான்
  அரசாங்கம் என்று ஒரு தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் .ஒரு அரசாங்கம் ஆனது இதற்காகவே சமூக நல உதவிப்பணங்களை மாதாமாதம்
  ஒவ்வொரு பிரசையிட்கும் அவர்களின் நிலையை அறிந்து அவர்களின் தேவைகளிற்கு ஏற்றவாறு உதவுகிறது
  அமெரிக்கா கனடா ஐரோப்பா போன்ற நாடுகளில் தமது மக்களுக்கும் பிறநாடுகளில் இருந்து வதிவிட வசதி தேடி வரும் மக்களுக்கும் எந்தவித பாகுபாடும் காட்டாமல்
  அவர்களின் நலத்தில் அரசாங்கமே முதலில் அக்கறை எடுக்கின்றது .இங்கே ஒரு தமிழ் பழமொழி நினைவுக்கு வருகிறது .”அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி “

 7. சற்றேறக்குறைய அந்தத்தாய் தன் மகளை நோய்க்கு பரிகொடுத்த அதே நேரத்தில் தான், தன் தோட்டத்து மயில் நோவுக்கு வைத்தியம் பார்த்து சுகமாய் திரும்பி வரும் வரை தன்னால் சாப்பிட இயலாது என்று உண்ணாவிரதம் இருந்தார் அரசவைக்கோமாளி அப்துல் கலாம்.
  அதிரவைக்கும் முரண்தொடை.

  தோழமையுடன்
  செங்கொடி

 8. சமீபத்தில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது…

  இந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தினசரி வருமானம் ரூ. 20 தான் வருமானம் ஈட்டுகிறார்கள் என அரசு தரப்பிலிருந்தே தகவல்கள் வருவதை நம்ப மறுத்தார்.

  இன்னொரு அரிய கண்டுபிடிப்பையும் அவரே சொன்னார்.

  குழந்தை தொழிலாளர்களுக்கு காரணம், சோம்பல் காரணமாய், உதிரி தொழிலாளிகள் வேலை செய்யாமல் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதுதான் காரணம் என்றார்.

  இந்த கட்டுரை அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

  சில ஜென்மங்கள் காந்தி குரங்குகள் போல நடந்து கொள்கிறார்கள்.

  வறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.

 9. //வறுமையைப் பார்க்க, வறுமையைப் பற்றி கேட்க, பேச மறுக்கிறார்கள். பேசினால் நெகட்டிவான சிந்தனையாம்.//

  இந்த நெகடிவ் சிந்தனைக்காரங்க தொல்ல தாங்கல…

  இந்த கட்டுரை நல்ல அதிர்வலையை கிளப்பியுள்ளது. பலரையும் சிந்திக்க தூண்டியுள்ளது. பொதுவாகவே அல்பவாத உணர்வு முன்னோங்க இருக்கும் பெண்கள் இந்த கட்டுரையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நடுத்தர வர்க்கத்தின் போலி மனிதாபிமானம் தனது மனிதாபி மான அரிப்பை சொறிந்து கொள்வதுடன் கடனை முடித்துக் கொள்கிறது. அதற்கு விலை மனித உயிர்களாய் இருந்தாலும் அதன் மனசாட்சி அலட்டிக் கொள்வதில்லை.

 10. விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி இல்லை…ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்கும் அரசாங்கம்…மது தொழிற்சாலை முதலாளிகளை காக்கவே அரசே தவிர விவசாயிகளை அல்ல. விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்யும் நிலை வந்தால் போதும் அவர்களுக்கு கடன் தள்ளுபடியோ இலவச மின்சாரமோ தேவை இல்லை. இதை செய்ய எவனுக்கும் துப்பு இல்லை, ஆனா விவசாயிக்கு அதை செஞ்சோம் இதை செஞ்சோம் என்று பீற்றல். தூ…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க