privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !

-

உயர்நீதிமன்ற போலீசு தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தந்துள்ள இடைக்கால அறிக்கை, வழக்குரைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. “இதுதாண்டா போலீசு” பார்வையில் எழுதப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை ஆராய்வதுடன், இனி இப்போராட்டம் செல்லவேண்டிய திசையையும் சுட்டிக்காட்டி மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இன்று வழக்குரைஞர்கள் மத்தியில் விநியோகித்துக் கொண்டிருக்கும் துண்டறிக்கையை இங்கே தருகிறோம்.

மார்ச் 10 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இப்பிரச்சினை தொடர்பாக ம.க.இ.க நடத்தவிருக்கும் பொதுக்கூட்டத்தின் துண்டறிக்கையையும் வெளியிடுகிறோம். இக்கூட்டத்துக்கு போலீசு அனுமதி மறுத்த்தால் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தடியடிபட்ட உயர்நீதிமன்றம கருத்துரிமையை வழங்குமா? 9ம் தேதி தெரியும்.

*********************************************************

சட்டத்தின் ஆட்சி செயலிழந்து விட்டது!
போலீஸ் ஆட்சி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது!
இனி நாம் செய்யவேண்டியது என்ன?

அன்பார்ந்த வழக்குரைஞர்களே,

போராட்டத்தின் மிக முக்கியமான திருப்புமுனைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நீதிபதி ஸ்ரீகிருஷ்ணாவின் இடைக்கால அறிக்கை. இந்த அறிக்கையின் மீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களை இங்கே விவரிக்கத் தேவையில்லை. 19 ஆம் தேதி நிகழ்வு குறித்த இந்த அறிக்கையின் அணுகுமுறை மற்றும் அதன் ஆய்வுமுறையைத் தான் நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

“யாருடைய உத்தரவின் பேரில் போலீசு படைகள் உயர்நீதி மன்றத்திற்குள் நுழைந்தன? எந்த அதிகாரியினுடைய உத்தரவின் பேரில் அன்று  தடியடி நடத்தப்பட்டது?” என்ற அடிப்படையான இரு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விட்டு, போலீசு நடவடிக்கையை நியாயப்படுத்தும் ஒரு ‘திரைக்கதை’யை இடைக்கால அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா.

“பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற தடியடியைப் புரிந்து கொள்ள ஜனவரி 29 இலிருந்து தொடங்க வேண்டும்” என்று கூறி ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி நாம் நடத்திய போராட்டங்கள், அந்தப் போராட்டத்தின் போது குறிப்பிட்ட சில வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீசினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை விவரிக்கிறார். பிப் 19 அன்று முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாக சில வழக்குரைஞர்களை போலீசு கைது செய்ததாகவும், அந்தக் கைது நடவடிக்கையைப் பிற வழக்குரைஞர்கள் எதிர்த்ததாகவும், பொறுமையைக் கடைப்பிடித்த போலீசைச் சீண்டி, அவமானப்படுத்தி ஆத்திரமூட்டியதாகவும், கல்லெறிந்ததாகவும் … இத்தைகைய சூழ்நிலையில் வழக்குரைஞர் கும்பலைக் கலைக்க தடியடி அவசியமாகத்தான்  இருந்திருக்கிறது என்றும் கூறுகிறார் கிருஷ்ணா.

“அந்தத் தடியடியில் போலீசார் வரம்பு மீறிவிட்டார்கள்” என்று குறிப்பிடும்  ஸ்ரீகிருஷ்ணா, “படையினர்  அவ்வாறு வரம்பு மீறுவதைத் தடுக்க ஆணையரும் போலீசு அதிகாரிகளும் முயன்ற போதிலும் அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை” என்றும் கூறுகிறார். இவை அனைத்திற்கும் போலீசு சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களையே அவர் நம்பியிருக்கிறார். ‘அந்த வீடியோவில் நேரம் பதிவாகியிருந்தது என்றும், வழக்குரைஞர்கள் கொடுத்த வீடியோவில் நேரம் பதிவாகவில்லை’ என்றும் கூறி அதனை நியாயப்படுத்துகிறார். இறுதியாக, ‘ தலைமை நீதிபதிக்குக் கண்டனம், வழக்குரைஞர்களை ஒழுங்குபடுத்த சட்டமியற்றுதல்’ போன்ற சிபாரிசுகளுடன் முடிகிறது அவரது அறிக்கை.

“படைகளை உள்ளே இறக்க யாருடைய அனுமதியைப் பெற்றீர்கள், தடியடி நடத்த உத்தரவிட்டது யார்?” என்ற இரு கேள்விகளையும் எந்த போலீசு அதிகாரியிடமும் அவர் கேட்டதாகக் கூட அவரது அறிக்கையில் இல்லை. மாறாக “தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்பதை வீடியோவிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை” என்று கூறி அந்தப் பிரச்சினையை அத்தோடு முடித்துக் கொள்கிறார்.

அன்றைய சம்பவம் குறித்து கிருஷ்ணாவின் அறிக்கையில் கண்டுள்ள பல விவரங்கள் பல பிழையாகவும் முரண்பாடாகவும் இருக்கின்றன. அவற்றை நாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க இயலும். இருப்பினும், அந்த விவரங்களுக்குள் செல்வதைக் காட்டிலும், இத்தகைய ஒரு தலைப்பட்சமான அறிக்கையை எழுதும்படி நீதிபதியைத் தூண்டிய சிந்தனைப் போக்கு எது என்பது குறித்துத்தான் நாம் அதிகமாக கவனம் செலுத்தவேண்டும் என்று கருதுகிறோம்.

“வழக்குரைஞர்கள் எல்லோரும் சட்டப்படிதான் நடக்கிறார்களா, அவர்கள் தவறே செய்யாதவர்களா, போலீசு மட்டும்தான் தவறு செய்ததா, போலீசை மட்டும்தான் தண்டிக்க வேண்டுமா, போலீசு – வக்கீல் இருதரப்பினரில் அதிகம் தவறு செய்தது யார் ?” என்ற கேள்விகளை விசாரிப்பதற்காக இந்தக் கமிஷன் நியமிக்கப்படவில்லை. 19ஆம் தேதி நடைபெற்ற கொலைவெறித்தாக்குதலை உலகமே பார்த்திருக்கிறது. இது சட்டவிரோதம் என்று உலகத்துக்கே தெரிந்திருக்கிறது. “அத்தகைய ஒரு சட்டவிரோத நடவடிக்கைக்கு சட்டப்படி யார் பொறுப்பு?” என்ற கேள்விக்கு விடை தேடத்தான் இந்தக் கமிஷன் அமைக்கப்பட்டது.

ஆனால் கமிஷனோ “காவல்துறை இந்த அளவு ஆத்திரம் கொள்வதற்கு வழக்குரைஞர்கள் எப்படி காரணமாக இருந்திருக்கிறார்கள்?” என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு ஆராய்ந்திருக்கிறது. இதைத்தான் இந்து, எக்ஸ்பிரஸ் முதலான பத்திரிகைகள் இத்தனை நாட்களாக இங்கே எழுதிக்கொண்டிருக்கின்றன.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையைப் பாராட்டி இன்று இந்து நாளேடு எழுதியுள்ள தலையங்கம் இப்படித் தொடங்குகிறது “சில சமயங்களில் சூழல் தான் எல்லாமுமாக இருக்கிறது. அந்த வகையில் 19 ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்களை எப்படிப்பார்க்க வேண்டும் என்பதற்கான பார்வையை உச்சநீதிமன்றத்துக்கு ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் வழங்கியிருக்கிறது”

ஊடகங்களின் பார்வையை தீர்மானிக்கும்  அரசியல் கருத்துகள் அவர்களை அவ்வாறு எழுதத்தூண்டலாம். ஆனால் ஒரு நீதிபதியும் பார்வையும் அப்படித்தான் இருக்கும் என்றால், அந்த இடத்தில் ‘சட்டத்தின் ஆட்சி’ முடிவுக்கு வந்துவிடுகிறது. இந்த அணுகுமுறைதான் நீதிவழங்கும் முறை என்று ஆகிவிட்டால், இந்திராவின் கொலையால் ஆத்திரம் கொண்ட இந்துக்கள் சீக்கியர்கள் மீது நடத்திய தாக்குதல் முதல் எல்லாத் தாக்குதல்களுக்கும் சூழலின் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளலாம்.

ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிடுவதைப் போல ஜனவரி 29 முதல் சிலவழக்குரைஞர்கள் வரம்புமீறி நடந்து கொண்டதும், அதை தலைமை நீதிபதி கட்டுப்படுத்த தவறியதும்தான் போலீசின் வெறித்தனத்துக்குக் காரணமாக இருந்தது என்பதை ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம். இந்த ‘ஆய்வு முறை’ப்படி, “ சிங்கள இராணுவம் நடத்தும் இனப்படுகொலையும்,  அதற்கு இந்திய அரசு  துணை நிற்பதும்தான் இலங்கை வங்கி மீது கல்லெறியும் அளவு கோபத்தை தமிழகத்தின் வழக்குரைஞர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது” என்ற நியாயத்தை நீதிபதி ஒப்புக் கொள்வாரா?

அப்படி நடக்கவில்லை. அந்த வழக்குரைஞர்கள் மீது எல்லா அத்துமீறல்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதுதான் சட்டபூர்வமான அணுகுமுறை. வக்கீல்கள் விசயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த சட்டபூர்வமான அணுகுமுறையை போலீசார் விசயத்திலும்  கடைப்பிடிப்பதில் என்ன தடை? சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பவர்கள் வழக்குரைஞர்களா காவல் துறையினரா? போலீசுதான் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகப் பராமரிக்கப் படுகிறது. போலீசின் விசயத்தில் மட்டும் சட்டம் இயங்க மறுக்கிறது. இதுதான் உண்மை.

முட்டை வீச்சு உட்பட வழக்குரைஞர்கள் மீது போடப்பட்டிருக்கும் எல்லா வழக்குகளையும் அவர்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளத்தான் போகிறார்கள். “100 வழக்கு இருக்கிறது, 150 இருக்கிறது” என்று ஊடகங்களில் பூச்சாண்டி காட்டுகிறது போலீசு. அந்த வழக்குகளை நடத்தவேண்டாம் என்று யார் தடுத்தார்கள்? “முட்டை வீச்சு தொடர்பாக இன்னின்ன வழக்குரைஞர்களைக் கைது செய்ய வேண்டும்” என்று தலைமை நீதிபதியிடம் போலீசு கேட்டிருக்கலாமே! உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் புகுந்து வளைத்துப் பிடிப்பதற்கு அவர்கள் என்ன ரவுடிகளா, முகவரி இல்லாத நாடோடிகளா? மிகச் சாதாரணமான இந்தக் கேள்விகளை பத்திரிகைகள் முதல் நீதிபதி கிருஷ்ணா வரையில் எல்லோரும் கேட்டிருக்க முடியும். ஆனால் கேட்கவில்லை. ஏனென்றால் மாநில அரசு, மத்திய அரசு, ஊடகங்கள், நீதித்துறையின் சிந்தனைப் போக்கு ஆகிய அனைத்தும் போலீசின் பக்கம் உறுதியாக நிற்கின்றன.

அரசியல் நடவடிக்கை, அத்துமீறல்கள் என்றெல்லாம்  புள்ளிவிவரங்களை வெளியிட்டு வழக்குரைஞர் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள். லாக் அப் கொலை, லஞ்சம் ஊழல், வழிப்பறி, மோசடி, பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்காக தமிழக போலீசார் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் எத்தனை என்பதை வெளியிடும் துணிவு போலீசுக்கு இருக்கிறதா? இத்தனை கிரிமினல் குற்றவாளிகளைத் தன்னிடம் வைத்திருக்கும் காவல் துறையிடம் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாத்தை ஒப்படைக்கலாமா என்பது குறித்து விவாதிக்க யாராவது தயாராக இருக்கிறார்களா?

“வக்கீல்கள் போலீசை ஆத்திரமூட்டினார்கள், கல்லெறிந்தார்கள் – அதன் விளைவுதான் தடியடி” என்ற போலீசு சார்பில் விளக்கம் சொல்கிறார் கிருஷ்ணா. இதே விளக்கத்தை ஆணையர் சொல்லட்டுமே. “வக்கீல்கள் இப்படி நடந்து கொண்டதால் நான்தான் தடியடிக்கு உத்தரவிட்டேன்” என்று ஒப்புக் கொள்ளட்டுமே. அல்லது “என்னுடைய ஆட்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. வக்கீல்களின் நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்டு பாய்ந்து விட்டார்கள்” என்று சொல்லட்டுமே. வெறியாட்டம் ஆடிய போலீசார் மீதும் வழக்கு போடட்டும், கல்லெறிந்த வக்கீல்கள் மீதும் வழக்கு போடட்டும். தாக்கியது யார், தற்காத்துக் கொண்டது யார் என்பதை நீதிமன்றத்தில் பேசிக்கொள்வோம். போலீசு ஏன் பம்முகிறது?

போலீசின் நியாயத்தை கிருஷ்ணா பேசுகிறார். அரசு பேசுகிறது. ஊடகங்கள் பேசுகின்றன. ஆனால் போலீசு அதிகாரிகள் மட்டும் பேச மறுக்கிறார்கள். “போலீசை  நாங்கள் அனுமதிக்கவில்லை” தலைமை நீதிபதி கூறிவிட்டார். “வேறு யாரிடம் அனுமதி பெற்றீர்கள்?” என்ற கேள்வியை தன் முன் ஆஜரான ஆணையரிடம் கேட்க வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணாவுக்குத் தெரியவில்லயாம்!  நாடகம் என்றாலும் மிகவும் தரம் தாழ்ந்த நாடகம் இது.

நீதிமன்றப் புறக்கணிப்பு, ஊச்சநீதி மன்றத்தில் முறையீடு ஆகிய எல்லாம் முடிந்த பின் ஒரு எளிய உண்மை நமக்கு இப்போது விளங்குகிறது. “போலீசைப் பொருத்தவரை சட்டத்தின் ஆட்சி என்பதெல்லாம் கிடையாது. போலீசு வைத்ததுதான் சட்டம். அவர்கள் மீது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடியாது” என்பதுதான் அந்த உண்மை.

இந்தப் போராட்டத்தை நாம் தொடங்கவில்லை. இது நம் மீது திணிக்கப்பட்ட போராட்டம். போராட்டத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை இப்போது ஊடகங்கள் வெளியிடத்தொடங்கி விட்டன. ‘சமூகத்துக்கு எதிராக அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கும் ஒரு கும்பல் போல’ வழக்குரைஞர்களைச் சித்தரிக்கும் முயற்சி தொடங்கி விட்டது. இனிமேலும் நாம் பேசாமல் இருக்கக் கூடாது. பேசாமல் இருந்தால் நாம் மக்கள் மன்றத்தில் குற்றவாளிகளாக்கப் படுவோம்.

இதுவரை நீதிமன்றத்திடமும், அரசிடமும் முறையிட்டுப் பார்த்து விட்டோம். பயனில்லை. இனி மக்கள் மன்றத்துக்கு செல்வோம். “தவறு செய்த போலீசு மேல் நடவடிக்கை எடு” என்று அரசிடம் கேட்பதில் இனி அர்த்தமே இல்லை.  தாங்கள் போலீசின் பக்கம்தான் என்பதை அரசு தெளிவு படுத்தி விட்டது. ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை அரசின் அணுகுமுறைக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

போலீசு அத்துமீறல்களுக்கு எதிராக மக்கள் பலருக்கு நாம் நீதி பெற்றுத் தந்திருக்கிறோம். இப்போது நம் மீதே தாக்குதல். இதனை நாம் எதிர்கொண்டு நீதியையும், சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டாவிட்டால், நாளை யார் மீது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போலீசு பாயலாம் என்பது எழுதப்படாத விதியாகிவிடும். காவல்துறை இரத்தம் சுவைத்த மிருகமாகிவிடும். இது ஒரு அறிவிக்கப்படாத போலீசு ராச்சியமாகிவிடும். இந்த நிலைமையை மக்களுக்குப் புரிய வைப்போம். ‘இது போலீசு வக்கீல் பிரச்சினை அல்ல, பொதுமக்கள் அனைவரின் பிரச்சினை’ என்பதை எல்லாத் தரப்பு மக்களுக்கும் விளக்கிச் சொல்வோம்.

“நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல. போலீசு ஆட்சி. அரசியல் சட்டம் இங்கே செயலிழந்து விட்டது” என்ற உண்மையை நாம் மக்கள் மன்றத்தில் வைப்போம். தேர்தலுக்காக களத்தில் நிற்கும் கட்சிகள் இதற்குப் பதில் சொல்லட்டும். நமக்குத் தேவை கட்டைப்பஞ்சாயத்தோ சமாதானமோ அல்ல. நமக்குத் தேவை நீதி. குற்றவாளிகள் கோட்டு சூட்டு போட்டிருந்தாலும், கறுப்பு அங்கி அணிந்திருந்தாலும், காக்கிச் சட்டை போட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்பது மட்டும்தான் நம் கோரிக்கை.

இழுத்தடிப்பதன் மூலம் நம்முடைய போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து பிசுபிசுத்துவிடும் என்பதுதான் இப்போதைக்கு அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.  தேர்தல் சத்தத்தில் நாம் போடும் சத்தம் யார் காதுக்கும் கேட்காமல் போய்விடும் என்பதுதான் அவர்களின் கணக்கு.

உயர்நீதி மன்றத்தில் சட்டம் அடித்து நொறுக்கப் பட்டிருக்கிறது. ஜனநாயகம் கொலை செய்யப்பட்டிருக்கிறது.  இந்தப் படுகொலைக்குப் பதில் சொல்லிவிட்டுத்தான் தேர்தல் ஜனநாயகம் குறித்து யாரும் பேசமுடியும் என்ற நிலையை உருவாக்குவோம்.
ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை எதிர்த்து நாம் தொடங்கிய போராட்டத்தால் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை. மாறாக இன்னொரு படுகொலை நடந்திருக்கிறது. நீதித்துறை படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி படுகொலை செய்யப்பட்டிருக்கிறது.

இதோ,  நீதித்துறை பிணமாகக் கிடக்கிறது. இந்தப் பிணத்துக்குப் பதில் சொல்லி விட்டு ஓட்டு கேளுங்கள்! இந்தப் பிணத்துக்கு பதில் சொல்லிவிட்டு வாக்களிக்கச் செல்லுங்கள் என்று முழங்குவோம்.  அசாதாரணமான இந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்வோம்.   அதற்குப் பொருத்தமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்!

சென்னை,
07.03.09

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
நிர்வாக அலுவலகம்: 702, ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு: வழக்குரைஞர் சி. ராஜு,  94432 60164

***********************************************************

உழைக்கும் மக்களே, இது போலீஸ் – வக்கீல் பிரச்சினை அல்ல!

போராடும் மக்கள் அனைவரின் பிரச்சினை!

பொதுக்கூட்டம்

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்

10.3.09 செவ்வாய்க் கிழமை
மாலை 6 மணி

தலைமை: தோழர் முகுந்தன்,
தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை: தோழர் மருதையன்,
பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மற்றும்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள்,
மனித உரிமை அமைப்பினர்.

கலை நிகழ்ச்சி
ம.க.இ.க கலைக்குழு

அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

***************************************************************

விடை தெரியாக் கேள்விகளுக்கு விடை காண வாருங்கள் !
பிப்ரவரி 19 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது-
வக்கீல் – போலீசு மோதலா?
அல்லது போலீசின் திட்டமிட்ட தாக்குதலா?
“நான் வைத்ததுதான் சட்டம்” என்று நடப்பவர்கள் யார்?
போலீஸ்காரர்களா, வழக்குரைஞர்களா?
ஈழப்பிரச்சினைக்காக வழக்குரைஞர்கள் நடத்திய போராட்டத்துக்கும்
இந்த போலீசு  தாக்குதலுக்கும் என்ன தொடர்பு?
சுப்பிரமணியசாமி மீதான முட்டை வீச்சு
போலீசின் தாக்குதலுக்கு முழுக் காரணமா?
அல்லது … அது ஒரு முகாந்திரமா?
அரசாங்க முட்டை அம்மியை உடைக்குமாம்!
ஒரு அழுகிய முட்டை அரசாங்கத்தையே உடைக்குமா?
நீதிபதிகள் அடிபட்டனர்..
வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன..
நீதிமன்ற அறைகள் சூறையாடப்பட்டன ..
அனைத்தையும் தொலைக்காட்சிகள்  ஒளிபரப்பின.
ஆதாரம் இருந்தும் ஒரு காவலரைக் கூட
அரசாங்கம் பணிநீக்கம் செய்யாத காரணம் என்ன?
வாருங்கள்!
“தடி” ஆட்சித் திமிருக்கு முடிவு கட்ட ..
குடியாட்சி உரிமைக்குக் குரல் கொடுக்க ..
அணி திரண்டு வாருங்கள்!

தொடர்புக்கு;
அ.முகுந்தன் ; 94448 34519
வினவு : 97100 82506