Wednesday, September 18, 2024
முகப்புஅரசியல்ஊடகம்குமுதம்: பத்து ரூபாயில் 'பலான அனுபவம்' ஒரு ஆய்வு !

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

-

தமிழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ, சமூக அக்கறையோ எதுவாக இருந்தாலும் ஒரு மலிவான கிசு கிசு ஆர்வம் போல மாற்றித தரும் குமுதம் மக்களின் நேர்மறை மதிப்பீடுகளை அழிக்கும் ஒரு வைரஸ். அதைப் பற்றி ஆய்வு செய்யும் புதிய கலாச்சாரக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம். இந்தக் கட்டுரை வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது,  வாசகர்கள்  எண்ணிக்கை, விலை, பக்கங்கள், விற்பனை விவரம்….. முதலியன இன்று மாறியிருக்கிறது, ஆனால் குமுதம் வழங்கும் சிட்டுக்குருவி லேகியத்தில் எந்த மாற்றமும் இல்லை.

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு !

“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?

ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.

“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.

“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடரனும் உங்கள் ஆதரவுதான்.

– அன்புடன் ஆசிரியர்.

ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.

குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.

ஆசிரியர் குழு

ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.

செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர். நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.

குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து  அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ‘அடுத்தாத்து அம்புஜத்தை கவனிச்சேளா ஓய்’ என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இலாபமே துணை

வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.

குமுதத்தின் இட ஒதுக்கீடு

விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் – 5, அரசியல் – 15, சினிமா – 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு – 2, மருத்துவம் – 5, வாசகர் கடிதம் – 2, உலகச் செய்தி – 2, ஜோக் – 3, சிறுகதைகள் – 9, ஒரு பக்க கதைகள் – 4, புதிர் போட்டி – 2, தொடர் கதைகள் – 15, உணவு – 2, சுற்றுலா – 4, பேஷன் – 4, வேலை, கல்வி – 3, கவிதை – 2, வியாபாரம் சுய முன்னேற்றம் – 5, நூல் அறிமுகம் – 1, பக்தி ஆன்மீகம் – 5, அரசு கேள்வி பதில் – 2, இதரவை – 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.

இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு

படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,

செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை – பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.

இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் – ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு – லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?

புகைப்படங்கள்

குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் – கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.

ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது ‘வாரியா’ என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.

மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

விளம்பரங்கள்

‘பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! – மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.

குமுதவியல்

குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.

குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் – சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் “சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை” என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.

எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு – அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.

அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். “வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் – இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.

இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து – பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.

காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.

முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.

மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி – ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். ‘குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்’, விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் ‘பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.

பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ – பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. ‘இந்து’ உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.

பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய ‘பிசினஸ் மகாராஜாக்கள்’ குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.

பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.

இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான். வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.

தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும். மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.

குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை வளத்தையும் காப்பாற்றுங்கள் !

-புதிய கலாச்சாரம், மார்ச் – 2000

பின் குறிப்பு: இதே ஆய்வு பிற ‘குடும்ப’ பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும். டப்பா வேறு, லேகியம் ஒன்று.

  1. இளமை காலத்தில் “மாதிரியான” புத்தகங்கள் எங்கு கிடைக்கும்? எவ்வளவு? என்றெல்லாம் குழம்பிய சமயங்களில், குமுதம் தான் அருமையான வடிகால். கதையெல்லாம் காமம்.

    ஒரு குட்டிக் கதை இந்த சமயத்தில் நினைவுப்படுத்துவது குமுதத்தின் தரம் விளங்க வாசகர்களுக்கு உதவும்.

    கணவனிடம் ஒரு மனைவி, “தட தட” வென சத்தம் எழுப்பும், ஒரு பெரிய பைக் வாங்க
    நச்சரிக்கிறாள். சரி. தன் மனைவி பந்தாவாக தான் போய்வர ஆசைப்படுகிறாள் என
    அந்த அசட்டுக் கணவரும் வாங்குகிறார்.

    வாங்கிய பிறகு ஒரு நாள், அந்த கணவன் “தட தட” வென பைக்கில் தெருவில் வருகிறார்.

    அவருடைய மனைவி, வீட்டில் இருக்கும் “அவனை” சீக்கிரம் கிளம்பு என விரட்டுகிறாள்.

    ஆண்டுகள் பலவாகியும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது.

    குமுதத்தை பாராட்ட வண்ணங்களில் பாராட்ட வேண்டுமென்றால், அது ஒரு “மஞ்சள்” பத்திரிக்கை.

    அதன் நடுப்பக்கங்கள் நிறைய பிரபலம். என் நண்பர்கள் அறை முழுக்க அந்த பலான
    படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அந்த படத்தில் வரும் வாசகங்கள் இன்னும் பிரபலம்.

    பின்னாளில், கொஞ்சம் திருந்தி தமிழகத்தில் மிக அதிகமாக விற்கும் புத்தகம் “குமுதம்”
    என பார்க்கும் பொழுது, தமிழ்நாடு இவ்வளவு மோசமாக இருக்கிறது என நிறைய வருந்திருக்கிறேன்.

    உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்துகிறேன். குமுதத்தை தரத்தை மாற்ற (!) முயற்சித்ததில்
    பல தமிழக முற்போக்காளர்களும் உண்டு. எனக்கு நினைவுள்ள வரையில், தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன் அவர்களின் பையன், அ.மார்க்ஸ் பொண்ணு இன்னும்
    பலர்.

  2. நான் இந்தக் கன்றாவியை எல்லாம் படிக்கிறதை விட்டு பல ஆண்டுகள் ஆய்டிச்சி.வீட்டில் இருக்கும் போது எப்போவாச்சும் புரட்டறது உண்டு. என் தம்பி விகடன், குமுதத்துக்கு அடிமை.

  3. இந்தக் கட்டுரையும் குமுதத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும்.
    தன்னை திட்டுவதையும் காசாக்கும் கலை.
    அதுதானே குமுதத்தின் சிறப்பு.

  4. //குமுதத்தை தரத்தை மாற்ற (!) முயற்சித்ததில்
    பல தமிழக முற்போக்காளர்களும் உண்டு. எனக்கு நினைவுள்ள வரையில், தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் மணியரசன் அவர்களின் பையன், அ.மார்க்ஸ் பொண்ணு இன்னும்
    பலர்.// நல்ல நினைவூட்டல். அப்பாக்களுக்கு சிறூபத்திரிக்கை பிள்ளகளூக்கு வெகுஜனப்பத்திக்கை போலும்.

  5. இந்த மாதிரி பத்திரிக்கைகளை துக்ளக் ‘துர்வாசர்’ என்ற பெயரில் ‘தமிழன் என்று சொல்லடா தலை குணிந்து நில்லடா’ என தலைப்பிட்டு சுமார் 20 வருடங்களுக்கு முன் கடுமையாக தாக்கி எழுதியது ஞாபகத்திற்கு வருகின்றது. வயற்றெரிச்சலினால் சோ இப்படி எழுதுகிறார் என்று சோ எழுதியதையே குமுதம் வெளியிட்டதும் நடந்தது. இந்த சண்டை சில காலம் நீடித்தது. 2 பத்திரிக்கைகளின் விற்பனையும் அதிகரித்தது. (யாகவா முனிவர் மற்றும் சிவசங்கர் பாபா சண்டை போல) . எப்போதும்போல ஏமாந்தது பொதுசணம்தான்.

    நித்தில்

  6. ஆக குமுதம் படித்தவன் குட்டிச்சுவராகி விடுவான் என்கிறீர்களா வினவு… ?????

    செக்ஸ் வறட்சி பிடித்த தமிழகத்தில் இம்மாதிரி பத்திரிக்கைகளும், பாலுணர்வைத் தூண்டும் படி அமைக்கப்பட்ட திரைப்படங்களும் வெற்றி பெறுவது சமுதாய சீர்கேட்டின் விளைவு என்றே நினைக்கிறேன்.

  7. you should put the same yardstick to all the popular media in tamil.Just a 2 lines in the last will make others escape.The pictures featuring the jokes & the jokes too in ananda vikadan are irritating( intha latchanathula pokkisham vikadanu pazhya kuppai vera kelarikittu)

  8. பாவம் மிகவும் கஷ்டப்பட்டு குமுதத்தை அலசி விலாவாரியாக விமரிசனம் செய்திருக்கிறீர்கள்.
    அவர்கள் இப்போது வெப் டீவீ வேறு தொடங்கிவிட்டார்கள் காதிர்ர்க்கும்,கண்ணிற்கும் ஒருங்கே விருந்தளிக்க
    அதற்க்கு கருப்பு எலிமிச்சைபழம் வேறு பண்பலையில் குரல் கொடுத்தது கொண்டிருக்கிறது
    திரைப்படத்தில் நடித்தாலும் நடித்தார் விளம்பரங்களில் சில்லறை சேர்க்க தெரிந்து கொண்டு விட்டார்.
    திருக்குறள் படி யாரும் வாழவில்லை
    ஆனால் தோட்டி முதல் தொண்டைமான் முதல் அதை வைத்தே சில்லறைகளையும், சிலர் லகரங்களையும் சேர்க்கும் அவலம் கண்டு திருவள்ளுவர் கடலில் நின்று கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்.அலைகடல் நீர் துளிகளுடன் அவர்கண்ணீர் துளிகளும் வலைகளில் பிடிபட்டு செத்துப்போன மீன்களை அழுகவிடாமல் செய்து அதை உண்ணும் மனிதர்களை உயிரோடு வைத்துக்கொண்டிருகின்றன.
    இலங்கை ராணுவத்தினரால் கடலில் சுடப்பட்டு சாகும் மீனவர்களின் ரத்தமும் அதில் கலந்து போய்க்கொன்டிருக்கிறது.பொறுமை கொண்ட கடல் இன்னும் சிறிது காலத்தில் பொங்கி எழுந்து தன் வேலையை காட்டும் நாள் நெருங்கிவிட்டது. எச்சரிக்கை.

  9. திரு.மணி அவர்களே
    நீங்கள்தான் சொல்லிவிட்டீர்களே,நாங்கள் நிச்சயமாக படிக்கமாட்டோம்.
    பெண்கள் படங்களை பலவிதமாக போட்டு அவர்களை பற்றி கவர்ச்சியாக எதையாவது எழுதி வாசகர்களை கவரவேண்டும் ,காசு பார்க்க வேண்டும்
    அதுதான் இன்றைய வார ,மாத, தின பத்திரிகைகளின் (அ ) தர்மம்
    இதை விட இன்று புற்றீசல் போல் முளைத்து நாட்டில் வலம் வரும் ஆன்மீக இதழ்களும் தங்களுக்கு தோன்றிய வகையில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு ஏற்க்கெனவே மூட நம்பிக்கைகளில் திளைத்து போலி சாமியார்களிடம் போய் பெண்களும் ஆண்களும் கற்ப்பையும்,காசையும்,சுய புத்தியையும் இழந்து நிற்க செய்து அவைகள் மட்டும் ,கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன.
    சித்தர்கள் என்று தாடி வைத்தவர்கள் எல்லோரையும் நம்பி ஏமாறும் கூட்டம்
    வேறு தமிழ் நாட்டில் பெருகிவருகிறது. இதில் பெரும்பாலான இந்துக்கள் சிக்கிகொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை.
    அவர்களை யார் மீட்பது?
    பக்தியோடு இறைவனை ஒன்று ஆலயங்களில் தேடவேண்டும் அல்லது தன் உள்ளத்தில் தேடவேண்டும்
    இரண்டையும் விட்டுவிட்டு புத்தகங்களிலும் ,எத்தர்களிடமும்,தேடினால் எவ்வாறு அகப்படுவான்?
    தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது உண்மை
    அவ்வாறிருக்க தன்னால் தீர்த்துக்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் சாமியார்களிடம் போய் பரிகாரம் தேடுவதால்தான் இன்று அவர்கள் மக்கள் தொகையில் கணிசமான அளவிற்கு பெருகிவிட்டார்கள்.எத்தனை தடவை ஏமாந்தாலும், எல்லாவற்றையும் இழந்தாலும்,மீண்டும் மீண்டும் மக்கள் திருந்தவில்லை.
    இந்த விட்டில் பூச்சிகளை யார் காப்பாற்றுவது ?
    யாரும் முடியாது
    ஏனென்றால் விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்து மடிவதற்காகவே பிறக்கின்றன
    அதுபோல்தான் இவர்களும்.
    என்ன செய்வது,?
    அறிவுள்ளவர்கள் திருந்தட்டும்.

  10. புது விளையாட்டு!
    தொப்புலிள் பம்பரம் விடுவது:
    தேவையான பொருட்கள்
    அரை /அல்லது முக்கால் கிழம்
    பழய பம்பரம்
    தொப்புல்(அ)சுகன்யா
    பழய அரை ஙான் கவுறு
    னாட்டு/வெளினாட்டு சரக்கு

  11. உண்மை!
    வலைக்குல் வீழ்ந்த மீன்கலாய்,சின்கல ரானுவம்-தமிழ் ஈழம்,உள்ளது!
    உலகின் பணக்கார நாடுகலில் தமிழ் ஈழமும்

  12. தரம் .இதனை எல்லாவற்றிலுமே நாம் தொலைத்து விட்டோம்.மீட்பது எப்படி?

  13. நம்முடைய எண்ணங்கள் தரம் தாழ்ந்துவிட்டதால் நாம் தரம் கெட்ட பத்திரிகைகளை தேடி பிடித்து வாங்கி நம் எண்ணங்களுக்கு தீனி போடுகிறோம். எனவே தவறு நம்முடையதுதான்

  14. i remember reading an article in puthiya kalacharam some years ago, titled’ kaadu azhigirathu-kumudam kozhikkiradu'(forest dies,kumudam thrives)!

  15. Thavaraana karuthaaga irunthaal mannikkavum

    oru patthirikkai than viyapara ukthiyaka sila visayangalai kai alukirathu

    pidithaal vaagni padiyungal illayel vittu vidungal . Etherkku ithanai periya “moral sorpozhivu”?

    kumduam never claimed they are doing a “samooha sevai” or “thamizh sevai”

    they sell theirs. and going on the way it sells it looks like the society likes it. who shold be blamed?

    it is just a magazine for 10 rupees and i guess it should be left there

    my 2 cents worth of comments.

    Thanks
    Unmai Sudum

    • I agree with what u say. The wafer thin difference perceived between the ‘rights’ & the ‘wrongs’ of the public is very disturbing & alarming. This needs to be corrected atleast with the coming generation and that too at war footing. Will you pls “bell the right cat?” instead of making hollow noises? “Eithavan irukka ambai novathu een?”

  16. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பத்திரிக்கை என்று அறிவிக்கட்டும். விற்பனை குறையும் என்று செய்ய மாட்டார்கள்.
    சமுதாயத்தில் குழந்தைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.

  17. Kuzhanthaikalai patriya yosanai viyaparikalidam mattum ethirparpathu enna niyayamo?

    Petror kuzhanthayai sariyaga valarkkum patchathil ithu pondra prachnaikal ezha vaipillai

    do we have any statistics as to how many went haywire after reading Kumudam?

  18. There are lot of studies in the West of the influence of media on adolescents.
    You can search for them yourself. We are living in an age where parents cannot devote a lot of time for their children. Media has a role in shaping in our views
    about the world we live in. I have more issues with kumudam. I will respond to you later in tamil.

  19. Unmai sudum – I’m sorry. I am going to give my response in English. It’s taking me forever to type in tamil

    http://mathimaran.wordpress.com/2009/04/
    Along with Vinavu this blogger has also said it better than I could ever say!
    Kumudam is the kind of business that exploits and panders to the basest emotions of people. Making
    money comes first. They try to please every section of society. Just a few examples.
    *They invited the Kanchi mutt people to grace the second anniversary celebrations of their Jothidam magazine. People who were worried that Hinduism is losing ground were appeased. I’m sure they will be present during the trial to offer their opinions as well.
    *The writeup about castes in society will ensure
    followers from every corner of the society.
    *The writeup about movie stars and their exploits
    will cater to the base instincts of people
    interested in the life of others.
    I can go on and on about the way they run their business.
    They are very smart, in a wrong way!
    Young people are vulnerable to form opinions based on what they see and read. Kumudam can atleast
    declares themselves as magazine with adult content!
    That will keep many families from buying their magazine.Wishful thinking on my part! Just as Kumudam has the right to do what they want, bloggers have the right to expose their true intent.

  20. வினவு, ‘பலான அனுபவம்-ன்னு ஒரு ‘பலமான ஆய்வு’ பண்ணி எழுதியிருக்கீங்க, அதுக்காக உங்களுக்கு ஒர் டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்

  21. Yes everyone has views and it is just that i “agree to disagree”

    Still you have put the whole “moral responsibility” tag to kumudam which i disagree.

    Not sure how may of the young generations can read Tamil properly , then the question of reading Kumudam and then get spoilt by that. (may be we have to devise a new probability theory here)

    Assume Kumudam stops publishing today, tomorrow some “makudam” may come with same contents and after that some “kadumam” might come. It is not gointg to stop.

    i doubt that kumudam declaring themselves as “adult magazine” is going to solve all the society woes and make all children to go in the righteous path.

    So if our aim is really to take on the media which is exploiting the society, let us take on the entire media. why single out Kumudam? Why not Kungumam? ? How about Kalignar TV programmes? Sun TV ? (Did u see their religeous serials like Raja Rajeswari which was the eptiome of superstition… i bouthg this since you talked about Kumudam Jothidam)?

    Regards
    Unmai Sudum

  22. I grew up in India in a different time period. Kumudam was the pioneer
    in tabloid journalism! I do not watch tv. Kumudam still finds ingenious ways to stay on top! It still irritates me to see them glorifying caste divisions. Writing
    about the sexual exploits of movie stars is a new low. I am not sure if other
    magazines have followed suit. I am not sure any other media outfit invited
    Kanchi Seer to preside over their functions. We have to keep in mind that
    a prominent women Journalist had something to say about the Seer!

    • The woman writer who wrote about the seer was just doing a command performance at the behest of JJ.Why she could not follow it up with a case?.These are all wishful thinking of the antagonists that there would be some fools in the general public who would repeat the charge without any basis..The agenda was to besmirch the mutt and HH which even the persons who levelled knew to be untrue

  23. தரம் கெட்ட பத்திரிக்கைகள் பற்றி நல்லதொரு தெளிவு வர வைக்கும் கட்டுரை..

    இத்தனை புள்ளி விவரங்களையும் நிச்சயம் எந்த குமுதம்,ஆ.வி வாசகரும் எதிர்க்கத் துணிவிருக்காது..

    இது பற்றி நன்கு புரிந்ததாலோ என்னவோ என் தந்தை சிறு வயது முதலே இவ்வகை பத்திரிக்கைகள் படிப்பதைத் தடை செய்திருந்தார்.. அது எந்த அளவுக்கு நன்மையாக இருந்தது என்பதை அனுபவ ரீதியாக பிற்காலத்தில் நான் உணர்ந்தேன்..

    தன் குழந்தைகள் இளமை காலத்தில் வழி மாறாமல் இருக்க இவ்வகை பத்திரிக்கைகள் படிக்காமல் தடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையும் கூட.

    நல்ல கட்டுரை.. வினவுக்கு பாராட்டுகள்.

  24. My last comments on this topic.

    Initially i thought the topic is to bring about the maladies that affect the society by media ( in this particular case, for reasons unkonwn Kumudam has been selected-targettted)

    But then i feel, that is not the reason the “true intent” of the article seems something else.

    Neverthless.. I grew up with kumudam. We used to buy in our household (both in my grandparents house and my house also). So we used to read from our young ages. Both my parents are working parents.

    Inspite of that i guess they taught us how to take good and bad and how to deal things “in perspective”
    All brothers and sisters in my family are doing well by God’s grace and living life morally and ethically. And i still read Kumudam. I am neither proud nor ashamed of this. In my view, it is a time pass journal for 10 ruppees and i leave it to that.

    I am sure once you are out in the world, kumudam is not the only thing that will spoil/destroy but there are many.

    Not in defense of Kumudam but against hypocracy which we practice

    As i said previously, everyone has the right to express and i agree to disagree with this article just for one point “Selective target of Kumudam for unkown intent”
    whereas we should be targetting the entire Media.

    Regards
    Unmai Sudum (Always).

  25. Ungalai paaraatta Vaarthaigale Illai Vinavu…Aanal makkal than thirunda matengiraanga…Thodarattum Ungal Makkal Pani. Ungal Aalnda Arivu Mei Silirkka Vaikkiradu…Nan kadanda 22 varundangalaga Pudiya kalachaaram parkkiren. Adilirundu oru immi alavu kooda mara villai….What nice & Sturdy Organisation.Wow.

  26. காசாசையில் அலையும் பத்திரிக்கைகள், நிச்சயம் திருந்த மாட்டான்கள்

  27. என்னத்தை சொல்லி….!! என்னத்தை எழுதி.. .!! இது ஒன்னும் திருந்தர கூட்டம் இல்லப்பா

  28. sila peru ninaikkiranga thangal solvathu than sari enru. vinavu koottamum appadithan. sari 53 varudangalaga kumutham varugirathe thamizhlakam enna kettu vittatha?. emathu munnorgalum kaviyangalin kamaaththai munnilaippaduththiyirukkirargal. athu sari kamam illai enral neeyum illai. naanum illai.purinchutha?

  29. I am reading in kumadam past one decade. later past year i stop the kumdam reading. i felt one decade reading kumudam. your point out is very true. kumudam reading for students it is very dangerous. i dedicate to this article for every parents and kumadam readers. thanking you

  30. மிகச் சரியான கட்டுரை. குமுதத்தைப் பற்றிய எங்களை போன்றோரின் எண்ணங்களை நீங்கள் மிக விலாவரியாக பக்கம் பக்கமாக பிரித்து மேய்ந்துவிட்டீர்கள். உண்மையில் தமிழ் சமுதாயத்தை “எதையும் சகித்துக் கொள்ளும் ஜடமாக” மாற்றியதில் செட்டியாரின் பங்கு அலாதி. புத்திசாலி பத்திரிக்கை என்று தன்னை தானே பாராட்டிக் கொள்ளும் இந்த கருமத்தில் இன்னும் ஊழல் மிக அதிகம். உள்ளே இருப்பவர்களின் மனமும் அப்படியே.

  31. சிறுவயதில் மறைத்து வைத்து படித்த விருந்து,இந்து நேசன், சரோஜாதேவி போன்ற பலான புஸ்தகங்களை விட மிகக் கேவலமான புச்தகங்கல்தான் ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள்..
    குமுதம் ஆனந்த விகடன், தினகரனின் வசந்தம், கள் – ஒவ்வொரு வாரமும், புது நடிகை ஒருத்தியை போட்டு, அவளுடைய உடை, செய்கைகள், பிடித்த நடிகன், பெட்ரூம் வார்த்தை எனப்போட்டு நேரடியாகவே மாமா தொழில் பண்ணுகின்றன..கிழட்டு ரஜினி ஒரு படம் புக் ஆகிவிட்டால் அவனுக்கு முன்பே இளம் நடிகைகளை கூட்டிக்கொடுப்பதிலும் போட்டி போடுகின்றன..இவைகளை விபச்சார தடுப்பு சட்டத்தில் கைது பண்ண முடியாதா?

  32. ஆசிரியர் எஸ் எ பி, எம்ஜிஆருக்கு ஜால்ரா போட ஆரம்பிக்கு முன் அதன் கவர்ச்சியில் மயங்கித்தான் போனோம். காரணம் அன்றைய நையாண்டி பத்திரிகைகளின் (ஆங்கிலத்தில் Punch இதழ் ) மகுடமாய் வெளிவந்தது குமுதம். பின் எம்ஜிஆரை துதி பாட ஆரம்பித்ததும் அதன் தரம் குறைய ஆரம்பித்தது என்பது என் எண்ணம். அது கலை சேவைக்காய் அல்லது சமூக சீர்திருத்தத்துக்காக ஆரம்பிக்கப்படவில்லை. வணிகம் தான் அதன் நோக்கம். ஆனாலும் அதன் (அன்றைய ) வசீகரத்தை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. பெரும் எழுத்தாளர்கள் அல்லது பின்னால் பெரிய ஆட்களாய் வந்தவர்கள் எல்லாருக்கும் அது அடித்தளம் போட்டுக் கொடுத்தது. எல்லாரும் நல்லவராகிவிடுங்கள் என்று வினவு ஆசைப் படுவது நல்ல நோக்கம். ஆனால் கொஞ்சம் சில்மிஷமும் இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும். இன்றைய குமுதம் ஆன்மீக கட்டுரைகள் செருகப்பட்டு வரும் ஒரு சராசரி மஞ்சள் பத்திரிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதெல்லாம் அந்தக் காலம். அதன் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்தோம். சிரித்தோம். இனி அது வராது.

  33. இந்த செஇதி அனைது தமிழ் மக்கலயும் சென்ரு அடைய வென்டும்.தர்கல தமிழ் மக்கலுக்கு தெவயனது சமுகதை பட்ரிய சிந்தனை மட்ரும் விழிப்புனர்வு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க