privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்இதர நாடுகள்நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

-

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 10

சூடான்ஐரோப்பிய நகரமொன்றின் சனநெருக்கமுள்ள மையப்பகுதி. பலர் கூடும் இடத்தில் நான்கு பக்கமும் கண்ணாடியிலான கூண்டு. அதற்குள்ளே ஒரு வானொலி நிலையம். வானொலி அறிவிப்பாளராக, தொழில்நுட்ப பணியாளராக சில வெள்ளை இளைஞர்கள். உறைய வைக்கும் குளிர்கால கிறிஸ்துமஸ் நாட்களில், ஒரு சிறிய கண்ணாடிக் கூண்டுக்குள், அந்த இளைஞர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

அவர்கள் ஒரு பிராந்திய வர்த்தக வானொலி சேவையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.   சூடானில் டார்பூர் மாநிலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விளம்பர நடவடிக்கை. அந்த நிகழ்ச்சி வேடிக்கை பார்க்க வரும் பொது மக்களின் அதீத ஆர்வம் காரணமாக மில்லியன் யூரோக்களை சேர்த்து விட்டிருந்தது.  இதைத் தவிர டார்பூர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு, பல உதவி நிறுவனங்கள் கூட்டாக ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டிருந்தன. ஊடக கருத்துக் கணிப்பொன்று, பெரும்பான்மை மக்கள் டார்பூர் பிரச்சினை குறித்து அதிக அக்கறைப் படுவதாக தெரிவித்தது. அப்போது தான் அமெரிக்காவும், ஐ.நா.சபையும் டார்பூரில் இனப்படுகொலை நடப்பதாக அறிவித்திருந்தன. நாஸி ஜெர்மனியில் யூத இனப்படுகொலை நடந்த பிற்பாடு, ஐ.நா.சபை மிகக் கவனமாக ஆராய்ந்த பின்னர் தான் இனப்படுகொலை அறிவிப்பு செய்வது வழக்கம். சூடான் மீது இனப்படுகொலை குற்றஞ்சாட்டுமளவிற்கு அங்கே என்ன நடக்கிறது?

நாள் தோறும் சின்னத்திரையில் காட்டப்படும் பிம்பங்கள் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. எங்கோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில், பட்டினியால் பரிதவிக்கும் மக்கள், கால்நடைகளாக இடம்பெயரும் மக்கள், முகாம்களுக்குள் அகதிகள், இவற்றை பின்னணியாக கொண்டு மனிதப் பேரவலம் பற்றி விபரிக்கும் செய்தியாளர்கள். தொலைக்காட்சி கமெராக்கள் பார்வையாளரின் மனதை நெகிழ வைக்கும் படங்களை பதிவு செய்யும்.

darfur1சூடானில் டார்பூர் போரில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை? 30 லட்சம் என்கின்றன ஐ.நா.விற்கு அறிக்கை சமர்ப்பித்த நிறுவனங்கள். இல்லை, 2 லட்சம் மட்டுமே என்று சொல்கிறது சூடான் அரசு. இனப்படுகொலையில் ஈடுபட்ட துணைப்படைக்கு சூடான் அரசு உதவி வழங்கியது என்பது ஐ.நா. குற்றச்சாட்டு. நாம் உதவி செய்யவில்லை, அவர்கள் சாதாரண கொள்ளைக்காரர்கள், என்று மறுக்கிறது சூடான் அரசு. டார்பூர் பிரச்சினையில் உலகம் இரண்டாக பிரிந்து நிற்கிறது. அமெரிக்கா போன்ற பல மேற்குலக நாடுகள் அரசுக்கெதிரான போராளிக் குழுக்கள் வழங்கும் தகவல்களை நம்புகின்றன. அரபு-இஸ்லாமிய நாடுகள் சூடான் அரசுக்கு ஆதரவாக நிற்கின்றன.

சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தேசம். எகிப்துடனான வடக்கு எல்லை முதல் உகண்டாவுடனான தெற்கு எல்லை வரை, லண்டனில் இருந்து மொஸ்கோ போகுமளவு தூரம்.  உலகின் நீளமான நைல் நதியின் பிறப்பிடம். இயற்கை அன்னை வழங்கிய கொடையான நைல் நதியில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.  வெள்ளம் வடிந்த பின்னர் தேங்கிவிடும் மணல் விவசாய விளைநிலமாக மாற்றப்படும். முரண்நகையாக நைல் நதியோர விவசாயத்தின் பலன்களை உள்நாட்டு மக்கள் அனுபவிப்பதில்லை. இங்கே பயிரப்படும் உணவுப்பொருட்களில்  பெரும்பகுதி வளைகுடா அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. பணக்கார பாலைவன நாடுகள் உணவுக்காக அமெரிக்காவில் தங்கியிருப்பதை தவிர்க்க, சூடானின் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளன.

115 மொழிகளைப் பேசும், பலவித கலாச்சாரம் கொண்டவர்களின் தாயகமாக இருந்த போதிலும், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரபு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். அரபுக்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்த பொதுவான கட்டமைப்பில் இருந்து சூடானிய அரபுக்கள் மாறுபடுகின்றனர். அவர்கள் கருநிற மேனியராக ஆப்பிரிக்கர்களைப் போல தோற்றம் கொண்டவர்கள். மொழி, பண்பாடு, மதம் என்பன மட்டுமே அவர்களை அரபுக்கள் என அடையாளப்படுத்தும் காரணிகள். இதைப் பற்றி இன்னொரு தடவை டார்பூர் பிரச்சினையில் நாம் பார்க்கப் போகிறோம். இந்தியத் தமிழரை விட, ஈழத்தமிழர்கள் தீவிரமான தமிழ் தேசியவாதிகளாக இருப்பதை அவதானிக்கலாம். அதே போல பிற அரபுநாடுகளில் வாழும் இஸ்லாமிய-அரேபியரை விட, சூடான் அரபுக்கள் மத்தியில் மதப்பற்றும், இனப்பற்றும் மேலோங்கி காணப்படுகின்றது.  உண்மையில் நவீன மத அடிப்படைவாதக் அரசியல் கருத்துகள் யாவும், 19 ம் நூற்றாண்டு மஹ்தி என்ற விடுதலைப் போராளியின் காலத்திலேயே நிறுவனமயப் படுத்தப்பட்டிருந்தன.

gold3சூடானின் வடக்குப் பகுதி 8000 வருடங்களுக்கு முன்னரே நாகரீகமடைந்த சமுதாயத்தைச் கொண்டிருந்தது. அன்று எகிப்தின் தெற்குப் பகுதியையும் (அஸ்வான்) சேர்த்துக் கொண்டு,  “நுபியர்களின் ராஜ்யம்” சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. தமக்கு அருகில் இருந்த மகிமை பொருந்திய எகிப்தில் இருந்து, மதத்தையும், கட்டடக் கலையையும் கடனாக பெற்றிருந்தனர். எகிப்தில் இருப்பதை விட நுபியாவில் அதிகளவு பிரமிட்கள் கட்டப்பட்டதாக, அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நுபியப் பாலைவனத்தில் நிமிர்ந்து நிற்கும் காலத்தால் அழியாத பிரமிட்கள் அதற்கு சாட்சி. கி.மு. 1500 ற்கு பின்னர், “மெரோயே” அரசாட்சியில் ஐரோப்பாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான சர்வதேச வர்த்தகம், தேசப் பொருளாதாரத்தை வளர்த்தது. நுபிய வியாபாரிகள் தான் முதன் முதலாக ஒட்டகங்களை சுமை தூக்கும் வாகனமாக பயன்படுத்தினர்.  “நுப்” என்றால் நுபிய மொழியில் தங்கம் என்று அர்த்தம். அன்று உலகம் முழுவதும் தங்கம் ஏற்றுமதி செய்து வந்ததால், பிறநாட்டவரால் நுபியா என அழைக்கப்பட்டிருக்கலாம். பொறாமை கொண்ட எகிப்தியரால் அடிக்கடி படையெடுப்புக்கு உள்ளானாலும், கி.பி. 324 ம் ஆண்டு வரை தனது சுதந்திரத்தை காப்பாற்றிக் கொண்டது.

அப்போது கிழக்கே எத்தியோப்பியாவில் “அக்சும்” என்ற கிறிஸ்தவ ராஜ்யம் தோன்றியிருந்தது. அக்சும் படையினரால், நுபியா போரில் தோற்கடிக்கப்பட்டது.  வெற்றிகொள்ளப்பட்ட நுபிய மக்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். கிரேக்கத்தில் இருந்த கிறிஸ்தவ சக்கரவர்த்தியும், மதம் மாற்றும் பணிக்காக பாதிரியார்களை அனுப்பிவைத்தார். கி.பி.700 ம் ஆண்டு வேறொரு மதம் கிழக்கே இருந்து வந்தது. இஸ்லாம் என்றார் புதிய மதத்தை கொண்டுவந்த அரேபியர்கள், நுபியர்களையும் முஸ்லிம்களாக மாற்றினார்கள். அன்று வந்த அரேபிய ஆக்கிரமிப்பாளருக்கு ஒரு சாம்ராஜ்யம் நிறுவுவதை விட, மதக் கருத்துகளை பரப்புவதே முக்கியமானதாகப் பட்டது. நுபியாவில் “சென்னர்” என்ற (கறுப்பின)  சுல்த்தான் ஆட்சி உருவானது. தேசங்கடந்த வியாபாரிகளிடம் வரி அறவிட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, தனது பொருளாதார சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொண்டது. 14 ம் நூற்றாண்டில் வடக்கே இருந்து படையெடுத்த “மம்மலுக்” துருக்கி வீரர்கள், சுதந்திர சுல்த்தான் ஆட்சிக்கு முடிவு கட்டினர். 19 ம் நூற்றாண்டு வருவதற்குள், சூடான் முழுவதும் துருக்கியின்   ஓட்டோமான் சாம்ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் புதிய உலக வல்லரசொன்றின் பிரசன்னம் ஆப்பிரிக்காவில் தோன்றியது. பிரித்தானியாவிற்கும், ஓட்டோமான் துருக்கிக்கும் இடையில் அப்போது நட்புறவு ஏற்பட்டிருந்தது. குறிப்பாக எகிப்தில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட முகம்மது அலி பாஷாவின் படைகளுக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வந்தனர். சூடானில் நிலை கொண்டிருந்த துருக்கியப் படைகளுக்கு உள்ளூர் மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டிருக்கவில்லை. “நாகரீகமடையாத” தெற்கு சூடான் மக்கள், அடிமை வியாபாரிகளின் மனித வேட்டையால் அதிகளவு பாதிக்கப்பட்டனர். மொத்த சனத்தொகையில் 5% அடிமைகளாக்கப் பட்டனர்.  “நாகரீகமடைந்த” வடக்கு சூடானை சேர்ந்த மக்கள், அதிக வரி கேட்டு கசக்கி பிழியப்பட்டனர். துருக்கி ஆக்கிரமிப்பு இராணுவம் வரி என்ற பெயரில் மக்களை சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருந்தது. 1880 ல் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட கிளர்ந்தெழுந்தார் மஹ்தி என்ற மாவீரன்.  துருக்கி ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்.

அல் மஹ்தி அல் முந்தசார்அல் மஹ்தி அல் முந்தசார் (சரியான பாதையில் வழிநடத்த தெரிவானவர்), தன்னை இறைத்தூதர் முஹம்மது நபியின் வழிதோன்றல் என அழைத்துக் கொண்டார். ஆட்சியில் இருந்த ஊழல் அதிகாரிகளுக்கு எதிரான விடுதலைப் போரை, அதாவது “ஜிஹாத்” அறிவித்தார். சூடானின் மேற்குப் பகுதி மாநிலமான டார்பூரில் பல்லாயிரம் இளைஞர்கள் ஜிஹாத்திற்கு அணிதிரண்டனர்.  துருக்கி ஆக்கிரமிப்பு படைக்கு, பிரிட்டிஷ் இராணுவ உதவி கிடைத்த போதும், மஹ்தியின் போராளிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை. அப்போது லண்டனில் இராணியில் மாளிகையில் கூட மஹ்தியை பற்றி சிலாகிக்கும் அளவிற்கு,  மஹ்தி பிரிட்டிஷாரின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தார். அன்றைய காலகட்டத்தில், “மாக்ஸிம்” என்ற இயந்திர துப்பாக்கியை கண்டுபிடித்திருந்த, ஒரு உலக வல்லரசான பிரிட்டனால் கூட, சில ஆயிரம் போராளிகளை வெல்ல முடியவில்லை. தலைநகர் கார்ட்டூம் முற்றுகையிடப்பட்டு, பிரிட்டிஷ் படைகளுக்கு தலைமை தாங்கியவரும், கவர்னருமான மேஜர் ஜெனரல் சார்லஸ் கோர்டன் உட்பட, ஆயிரக்கணக்கான அரசாங்க சார்பானவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.

இருப்பினும் சூடானின் சுதந்திரம் அதிக காலம் நீடிக்கவில்லை. நெருப்புக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மஹ்தி மரணமடைந்தவுடன் ஏற்பட்ட, பதவிக்கான போட்டி பூசல் மஹ்தி இராணுவத்தை பலவீனமாக்கியது. இதே நேரம் பிரிட்டனுக்கு சூடான் இழக்க முடியாத பொக்கிஷமாகப் பட்டது. இது 1898 ம் ஆண்டு, சுயெஸ் கால்வாய் திறக்கப்பட்டு ஆசியாவிற்கான கப்பல் போக்குவரத்து நேரத்தை வெகுவாக குறைத்து விட்டிருந்தது. சுயெஸ் கால்வாய் அமைந்துள்ள செங்கடல் பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.  இதே நேரம் ஆப்பிரிக்காவை ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் பங்கு போட்டிருந்தன. பிரான்ஸ் செனகல் முதல் சாட் வரை உரிமை கொண்டாடியது.  பிரிட்டன் அவசர அவசரமாக சூடானை பிடிக்க பெரும் பிரயத்தனப் பட்டது. இம்முறை பிரிட்டிஷ் படைகள், எகிப்தின் துருக்கிப் படைகளுடன் இணைந்து மஹ்தி இராணுவத்தை தோற்கடித்து, சூடான் முழுவதையும் கைப்பற்றின. அன்றிலிருந்து சூடான் பிரிட்டிஷ் காலனியாகியது.

sd03_00aபிரிட்டிஷ் காலனியானவுடன் பருத்தி பயிரிடும் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, பருத்தி ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியானது. பிரிட்டிஷார் சூடானிலும் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர். தெற்குப்பகுதி மாநிலங்களில் டிங்கா, நுவெர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். குடும்பம், குலம், குலத்தலைவன் இதற்கப்பால் அவர்களது சமூக நிறுவனம் விரிவடையவில்லை. 18 ம் நூற்றாண்டில் தான் அந்த மக்கள் வெற்றினத்தவரை (துருக்கியர்) பார்த்தார்கள்.  கால்நடை வளர்ப்பை தவிர வேறு பொருளாதார அபிவிருத்தி கிடையாது. குலதெய்வங்களை வழிபட்டு வந்த இவர்களை, ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவமயப்படுத்த ஆரம்பித்தனர். மிஷனரிகள் ஆங்கில வழிக் கல்வி புகட்டின. கூடவே ஐரோப்பிய கலாச்சாரத்தையும் கற்பித்தன. அதே நேரம் இந்த பழங்குடியின மக்கள் அபிவிருத்தியடைந்த வடக்கு சூடானில் வேலை தேடிச் செல்வது தடை செய்யப்பட்டது. வடக்கு சூடானியர்கள் தென் பகுதி  வருவதும் தடை செய்யப்பட்டது. வடக்கையும் தெற்கையும் ஆளரவமற்ற சூனியப்பகுதி ஒன்று பிரித்தது. பிரிட்டிஷார் இந்த பிரித்தாளும் கொள்கையை 1930 ம் ஆண்டு சட்டம் போட்டு நடைமுறைப்படுத்தினர்.

1956 ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரில் பலவீனமடைந்த பிரிட்டன், சூடானுக்கு சுதந்திரம் வழங்கி விட்டு வெளியேறியது. போகும் போது ஆட்சிப்பொறுப்பை அரபு மொழி பேசும் பெரும்பான்மையினரின் கையில் ஒப்படைத்து விட்டு சென்றது. தேசியவாத, மதவாத சக்திகளின் பிடியில் இருந்த அரசியல் கட்சிகள், நாடுமுழுவதும் அரபுமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கின. தெற்கு மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் வெளியேற்றப்பட்டன. அந்த இடத்தில் மதம் பரப்புவதற்கு இஸ்லாமிய மிஷனரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தெற்குப் பழங்குடியின மக்கள் இதனை எதிர்த்து கிளர்ச்சி செய்தனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் வரட்சி, உணவுப்பற்றாக்குறை மக்களை பாதித்தது. தொழிலாளர்கள், மாணவர்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இராணுவ ஆட்சியாளர்கள் திரும்ப பாராளுமன்றத்தை இயங்க அனுமதித்த போதும் மக்கள் புரட்சி அடங்கவில்லை.

numeiry1969 ம் ஆண்டு மீண்டும் ஒரு இராணுவ சதிப்புரட்சி ஏற்பட்டது. இம்முறை ஆட்சியை பொறுப்பெடுத்த நிமேரிக்கு சூடான் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கியது.  கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக சோவியத் யூனியனின் ஆதரவு கிடைத்தது. சில சோஷலிச சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. நிறுவனங்கள்  தேசியமயமாக்கப்பட்டன. 1971 ம் ஆண்டு டார்பூர் பிராந்தியத்தில், முதன் முதலாக எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருந்த நிமேரி ஒரு கம்யூனிஸ்டோ, அல்லது சோஷலிஸ்டோ அல்ல. தேவைக்கு யாரையும் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி. நிமேரி லிபியாவுடனும், எகிப்துடனும் ஒரு பொருளாதார கூட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டங்களில் இறங்கினார். இது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எரிச்சலூட்டியது. முரண்பாடுகள் தீர்க்கமுடியாமல் போன கட்டத்தில், கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர், அல்லது கொலை செய்யப்பட்டனர். தலைவர்கள் நாட்டை விட்டோடி வெளிநாடுகளில் புகலிடம் தேடினர். இதன் விளைவாக சோவியத் யூனியன் தனது உறவை துண்டித்துக் கொண்டது.

சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்த அமெரிக்கா நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நுளைந்தது. சூடான் அரசுக்கு ஆயுத, நிதி உதவி வழங்கியது. நிபந்தனையாக தெற்குப் பகுதி கிளர்ச்சியாளருடன் பேச்சுவார்த்தையில் தீர்வு காணும்படி வற்புறுத்தப்பட்டது. சர்வதேச அழுத்தத்தின் பிரகாரம் (எத்தியோப்பிய தலைநகர்) “அடிஸ் அபெபா”வில்   கைச்சாத்திட்ட சமாதான ஒப்பந்தம் சில வருடங்கள் அமுலில் இருந்தது. கம்யூனிஸ்ட்களை விரட்டி விட்டு, மத்திய அரசில் வலதுசாரிகளோடு கூட்டுச் சேர்ந்திருந்த நிமேரி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் படுத்தினார். சிறுபான்மையினங்களுக்கு இடையில் பூசல்களை ஏற்படுத்தும் நோக்கோடு, தெற்குப் பகுதியை மூன்று நிர்வாக அலகுகளாக பிரித்தார். நாடாளாவிய ஷரியா சட்ட ஆட்சியை எதிர்த்து தென்பகுதி மாநிலங்கள் கிளர்ந்தெழுந்தன.

“பொர்” நகரில் இருந்த இராணுவ முகாம்களில் சிப்பாய்க் கலகம் மூண்டது. கிளர்ச்சியை அடக்க அனுப்பபட்ட கேணல் ஜோன் கறேங் கிளர்ச்சியாளருடன் சேர்ந்து கொண்டார். சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM)  ஆரம்பிக்கப் பட்டது.  தென் பகுதியில் டிங்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதும், ஜோன் கறேங் ஒரு டிங்கா இனத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்காவில், எதுவும் எப்போதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறும் குணவியல்பு கொண்டவை.  SPLM ஆரம்ப காலங்களில் மார்க்ஸிஸம் பேசியது. அதற்கு காரணம், அமெரிக்கா மத்திய அரசை ஆதரித்தது மட்டுமல்ல. அயலில் இருந்த (கம்யூனிச) எத்தியோப்பியாவின் உதவி கிடைத்து வந்ததும் தான்.

தெற்கில் பிரச்சினை தீர்ந்த நேரம், வடக்கில் பிரச்சினை ஆரம்பமாகியது. சமாதான உடன்படிக்கை வடக்கில் இஸ்லாமிய கடும்போக்காளர்களை தீவிரப்படுத்தியது.  “தெற்குப் பயங்கரவாதிகளிடம் தேசத்தை அடமானம் வைத்து விட்டதாக” செய்த பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகியது. மீண்டும் கார்ட்டூமில் சதிப்புரட்சி இடம்பெற்றது. பதவியில் இருந்த நிமேரி, எத்தியோப்பிய யூதர்களை இஸ்ரேலுக்கு செல்ல உதவியமை, ஐரோப்பிய அணுக்கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதித்தமை போன்ற காரணங்களும் சதிப்புரட்சிக்கு மேலதிக மக்கள் ஆதரவை கொடுத்திருந்தன. 1989 ல் , இராணுவத் தளபதி பஷீர், இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சியான தேசிய இஸ்லாமிய முன்னணியுடன்(NIF) சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார். (பிரிட்டிஷ் கால) அரசியல் நிர்ணய சட்டம் இரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக முழுமையான இஸ்லாமியச் சட்டத்தை அமுல்படுத்தியது. கடும்போக்காளரான NIF தலைவர் ஹசன் அல் துரபி, பாரிஸ் சொர்போன் பல்கலைகழகத்தில் கற்ற விரிவுரையாளர்.  அரபு-இஸ்லாமிய காங்கிரஸ் ஸ்தாபகர்களில் ஒருவர்.

_45087085_splm226afpபுதிய சூடானிய அரசாங்கத்தில், அமெரிக்க எதிர்ப்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் நிலவுவதை அமெரிக்கா விரும்பவில்லை. உடனடியாக மத்திய அரசுடனான உறவை துண்டித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக தெற்கில் இருந்த கிளர்ச்சியாளருக்கு (SPLM) உதவி செய்தது. அதே காலகட்டத்தில் எத்தியோப்பியாவில் கம்யூனிச அரசு கவிழ்ந்திருந்தது. அதனால் SPLM ற்கு அமெரிக்காவின் உதவி ஒரு வரப்பிரசாதம். நான் சந்தித்த முன்னாள் SPLM போராளிகள் சிலர், யார் உதவி செய்தாலும் தமது நலன்களே முக்கியம் என்று நியாயப்படுத்தினர். அதே நேரம் தாம் தென் சூடானில் கிறிஸ்தவ மதத்தை பாதுகாக்க போராடுவதாக கூறுவது கூட, மேற்குலகை கவரும் தந்திரம் மட்டுமே என ஒப்புக் கொண்டனர். இந்த முன்னாள் போராளிகள் கொடுத்த தகவல்களின் படி, SPLM தலைவர்கள் எண்ணைக் கம்பெனிகளை அச்சுறுத்தி வாங்கும் கப்பப்பணத்தில் தம்மை வளம் படுத்திக் கொள்கின்றனர். மேற்குலக மக்கள், SPLM கிறிஸ்தவ சிறுபான்மையினரின் உரிமைக்காக, இஸ்லாமிய பேரினவாத வடக்குடன் மோதிக் கொண்டிருப்பதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் போர் முழுக்க முழுக்க எண்ணை உற்பத்தியில் கிடைக்கும் வருமானத்தை பங்கு போடுவதற்காகவே நடக்கிறது.

மேற்குலக நாடுகள் சூடான் அரசிற்கும், தென்பகுதி போராளிக் குழுக்களுக்கும் கொடுத்த அழுத்தம் காரணமாக நடந்த பேச்சுவார்த்தையின் நிமித்தம், 2002 ம் ஆண்டு ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது. 2005 ம் ஆண்டு அமுலுக்கு வந்த Comprehensive Peace Agreement (CPA), தென் மாநிலங்களுக்கு 6 வருடங்கள் தன்னாட்சி அதிகாரம் வழங்கியது. தலைநகராக ஜூபாவை கொண்ட மாநில அரசு சொந்தமாக கொடி வைத்திருக்க முடியும்.  2011 ம் ஆண்டு நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் மூலம் சூடானுடன் இணைந்திருப்பதா, அல்லது சுதந்திரமாக பிரிந்து போவதா என தீர்மானிக்கப்படும். மத்திய அரசிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கிளர்ச்சித் தலைவர் ஜோன் கறேங் உப-ஜனாதிபதியானார். சமாதானமும் கண்காணிக்க ஐ.நா. மன்றம் UNMIS என்ற சமாதானப் படையை அனுப்பி வைத்தது.

Darfur-Mapஅமைதி உடன்படிக்கையின் பின்னரான காலத்தில், தென் பகுதி மக்களுக்கு மெல்ல மெல்ல மாயத்திரை விலகியது. அரசியல் சுதந்திரம், அதிகாரப் பரவலாக்கல் எல்லாம் சரி தான். ஆனால் பிரதேச அபிவிருத்திக்காக சர்வதேச சமூகம் வாக்களித்த நிதியுதவி எங்கே? இதுவரை சொற்பத் தொகை மட்டுமே வந்து சேர்ந்துள்ளது. அதைவிட தெற்கிற்கு உரிமையான எண்ணை வருமானத்தில் ஒரு பகுதி இன்று வரை கிடைக்கவில்லை. சர்வதேச சமூகம் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருபகுதியினரையும் சமாதானம் செய்து வைத்தவுடன் தமது மத்தியஸ்தம் முடிந்து விட்டதென்று ஒதுங்கி விட்டனர். அவர்களுக்கு சூடானில் இன்னுமொரு வேலை பாக்கி இருந்தது. 2003 ம் ஆண்டு மேற்கு சூடானில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் கிளர்ச்சி வெடித்தது. அது தென் பகுதி கிளர்ச்சியை விட, அதிகளவு சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

Fur இன மக்களின் உறைவிடம் என அர்த்தப்படும் டார்பூர், ஒரு மலைப்பிரதேசம். Fur இன மக்கள் ஒரு பகுதியினர் சொந்த மொழியும், ஒரு பகுதினர் அரபு மொழியும் பேசினாலும், இஸ்லாம் மதத்தை பின்பற்றும் கறுப்பின மக்கள். டார்பூரில் இனப்படுகொலை நடப்பதாக தீர்மானங்களை நிறைவேற்றிய ஐ.நா.சபையும், அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் பிரச்சினையின் பரிமாணங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. கறுப்பின இனங்களை, அரேபிய இனம் அழித்து வருவதாக சுலபமாக கூறிவிட்டுச் செல்கின்றனர். அதை நம்பி டார்பூர் சென்ற உதவி நிறுவன ஊழியர்களும், ஊடகவியலாளரும் வெளி உலகம் அறியாத உண்மைகளை கண்டுபிடித்தனர்.

தென் பகுதி மாநிலங்கள் சுதந்திரம் கோரி போராடியதன் காரணம், தெளிவாகத் தெரியும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். நகரமயமாக்கல், தொழிற்துறை அபிவிருத்தி எல்லாம் வடக்கே மட்டும் காணப்பட்டன. தெற்கு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. தென் பகுதி ஆப்பிரிக்க பழங்குடியினரின் பின்தங்கிய நிலை காரணமாக, வடக்கில் அவர்கள் தாழ்ந்தவர்களாக பார்க்கப்பட்டனர். தலைநகர் கார்ட்டூமில் வாழும் இரண்டு லட்சம் டிங்கா பழங்குடியினர் “நாகரீகமடையாத மனிதக்குரங்குகள்”, “அடிமைகள்” என்றெல்லாம் அரபு பேசும் மக்களால் தூற்றப்படுகின்றனர். பெரும்பான்மை சமூகத்தில் இனவாதம் நன்றாக வேரூன்றியுள்ளது. இதே போன்ற பொருளாதார, கலாச்சார ஏற்றத்தாழ்வு டார்பூரிலும் நிலவுகின்றது. சூடானில் டார்பூரில் தான் முதன் முதல் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் வருவாய் முழுவதும் கார்ட்டூமில் தங்கிவிடுகின்றது. டார்பூரின் அபிவிருத்திக்காக அரசு பணம் செலவழிப்பதில்லை. தென்பகுதி SPLM இயக்கத்தின் ஆயுதப்போராட்டத்தை முன்மாதிரியாக கொண்டு, டார்பூர் விடுதலை முன்னணி தொடங்கப்பட்டது.

3306626052_07c97a7a46இதற்கிடையே ஜனாதிபதி பஷீரின் ஆலோசகர் அல் துரபி, தெற்கு சூடானில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டதை எதிர்த்து வந்தார்.  இதனால் பஷீர் துரபியை வீட்டுக்காவலில் வைத்துவிட்டார். துரபி பின் லாடனின் நெருங்கிய நண்பர் என்பது உலகறிந்த உண்மை. துரபியின் ஆதரவாளர்கள், அல் கைதாவுடன் சேர்ந்து அரசுக்கெதிரான ஆயுதப்போராட்டத்தை டார்பூரில் இருந்து ஆரம்பித்தனர். Justice and Equality Movement (JEM) என்ற இயக்கத்தை ஸ்தாபித்து, பிராந்திய போலீஸ நிலையங்களை தாக்கி கைப்பற்றினர். ஒரு சில நாள் சண்டையிலேயே 550 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். பிற அரச நிறுவனங்களும் தாக்கப்பட்டன. அதே நேரம் எரித்திரியா ஆதரவைப் பெற்ற SLM (முன்னாள் டார்பூர் விடுதலை முன்னை) அரசுக்கெதிரான போரில் இணைந்து கொண்டது. அரசு பதிலடியாக கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சு நடத்தி கிளர்ச்சியை அடக்கியது.

மத்திய அரசு ஆயுத, நிதியுதவியில் “ஜன்ஜவீட்” என்ற துணைப்படை அமைக்கப்பட்டது. இந்த துணைப்படை தான் நேரடியாக இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானது. “குதிரையில் வரும் பிசாசுகள்” என்ற பொருள்படும் ஜன்ஜவீட் கிளர்ச்சியாளருக்கு ஆதரவான கிராமங்களை தாக்குவதற்கு தடை எதுவும் இருக்கவில்லை. கண்ணில் பட்ட ஆண்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகினர், குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சில இடங்களில் மொத்த கிராமமே பூண்டோடு அழிக்கப்பட்டது.  மக்கள் அகதிகளாக அயல்நாடான சாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். சில நேரம் சாட் எல்லை கூட அவர்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. அரசாங்கம் கலாச்சார வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு, ஜன்ஜவீட் எதிர்ப்புரட்சியாளரை உருவாக்கியுள்ளது.

கொல்பவர்களும், கொல்லப்படுபவர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள், ஒரே மதத்தை பின்பற்றுபவர்கள். ஆனால் அவர்களை இரு வேறு கலாச்சாரங்கள் பிரிக்கின்றன. ஒரு பகுதி (ஜன்ஜவீட்) அரபு கலாச்சாரத்தையும், மறு பகுதி (போராளிக் குழுக்கள்)  புராதன ஆப்பிரிக்க கலாச்சாரத்தையும் பின்பற்றுகின்றனர். சில நேரம் இந்த வித்தியாசம் அவ்வளவு தெளிவாக தெரிவதில்லை. இதற்கிடையே JEM இஸ்லாமிய அடிப்படைவாத போராட்டத்தை முன்னெடுக்கின்றது. அல் கைதாவுடன் தொடர்புள்ளது. ஆனால் அதைப் பற்றி சர்வதேச சமூகம் அதிக அக்கறை கொள்ளவில்லை. JEM இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதியாக காண்பிக்கப்படுகின்றது. JEM தலைவர்கள் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்தில்,  கடும்போக்கு இஸ்லாமிய முகத்தை வெளிநாடுகளில் காட்டுவதில்லை.

bashir2006 ம் ஆண்டு,  சர்வதேச அழுத்தம் காரணமாக, டார்பூர் போராளிக் குழுக்களுக்கும், சூடான் அரசுக்குமிடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் போடப்பட்டது. அத்துடன் பிரச்சினை முடிந்தது என்று யாரும் நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. இம்முறை குட்டையைக் குழப்பியது சர்வதேச சமூகம் (மேற்கத்திய நாடுகள் என்று திருத்தி வாசிக்கவும்). சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் டார்பூர் போர்க்கால குற்றங்கள் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டன. அதன் பிரகாரம், சூடான் அதிபர் பஷீர் குற்றவாளியாக காணப்பட்டு, கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. சூடான் அரசு சர்வதேச நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை என்று அறிவித்தது. நீதிமன்றத்திற்கு சவால் விடுவது போல பஷீர் அரபு நாடுகளிற்கு விஜயம் செய்தார். சர்வதேச நீதிமன்ற விசாரணைகள் சூடானில் அமைதியைக் கெடுக்கும் என்று அரபு நாடுகளின் சங்கம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதே நேரம், தமது பங்காளி  குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு விட்டதால், தாம் இனிமேல் சமாதான ஒப்பந்தத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கிளர்ச்சிக் குழுக்கள் அறிவித்துள்ளன.

உலக நாடுகளால், டார்பூர் யுத்தம் ஒரு இனப்படுகொலை என்று புரிந்து கொள்ளப்பட்டாலும், அது தண்ணீருக்காக நடந்த யுத்தம் என்றும் கருதப்படுகின்றது. மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே இயற்கை வளத்தை கைப்பற்றுவதற்கான போட்டியால் விளைந்த யுத்தங்கள், வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கின்றன. டார்பூர் பிராந்தியத்தில் உள்ள நீர் நிலைகள், மக்கள் பெருக்கத்தினால் ஏற்பட்ட தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை. இதனால் கிணறுகள், குளங்களை கைப்பற்றுவதற்காக இனக்குழுக்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழமை. இதனால் “ஒரு இனம் மற்ற இனத்தினை கொன்று  குடியிருப்புக்களை எரித்து, நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கை”, நவீன அரசியல் அகராதியின் படி இனப்பிரச்சினை என்று கூறப்படுகின்றது. டார்பூரில் அபரிமிதமான  நிலத்தடி நீர் காணப்படுவதாகவும், இதை பாவனைக்கு கொண்டுவரும் வேளை இனங்களுக்கிடையிலான பூசல்கள் மறையும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் இடையிலான பனிப்போர் காரணமாகவும் சூடான் மக்கள் தொடர்ந்து இரத்தம் சிந்தி வருகின்றனர். மேற்குலக எதிரிகளின் பட்டியலில் முதன்மையான இடம்வகிக்கும் சூடான், சீனாவுடன் சிறந்த வர்த்தக உறவுகளைப் பேணி வருகின்றது. மேற்குலகம் பொருளாதார திட்டங்களுக்கு, மனித உரிமை பிரச்சினையை நிபந்தனைகளாக விதிப்பதைப் போல, சீனா நடந்து கொள்வதில்லை. சீனா உள்நாட்டு பிரச்சினையில் தலையிடாத போக்கை கடைப்பிடிக்கின்றமை, சூடானிய அரசுக்கு அனுகூலமானது. சூடானில் உள்ள என்னைக் கிணறுகள் யாவும் சீன நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அமெரிக்கா என்ன தான் மனித உரிமைகளுக்காக பாடுபடுவதாக வெளி உலகிற்கு காட்டிக் கொண்டாலும், சூடான் எண்ணை வளத்தின் மீது கண் வைத்திருப்பதை மறைக்க முடியாது. நைல் நதியின் நீர்வளத்தை வர்த்தக நோக்கோடு பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. மனித உரிமை மீறல்களை காரணமாக காட்டி, சீனா சூடானுடனான இராஜதந்திர உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என, அமேரிக்கா ஐ.நா.சபை மட்டத்தில் அழுத்தம் பிரயோகித்து வருகின்றது. ஆனால் இப்போதெல்லாம் சீனாவோ மனித உரிமை மாய்மாலங்களுக்கு ஏமாறும் வகையாக தெரியவில்லை.

(தொடரும்)

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

 1. மிக சிறப்பான ஆய்வும், தகவல்களும்…இந்த 10 பகுதிகளும் தமிழ் மொழியில் ஒரு வரலாற்று களஞ்சியம்… நன்றி தோழர் கலையரசன்..

 2. உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்

  உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

  இதில் குறிப்பாக
  1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
  2-ஓட்டளிப்புப் பட்டை
  3-இவ்வார கிரீடம்
  4-சிறப்புப் பரிசு
  5-புத்தம்புதிய அழகிய templates
  6-கண்ணை கவரும் gadgets
  ஒரு முறை வந்து பாருங்கள்
  முகவரி http://tamil10.com/tools.html

 3. வங்காளம் சிவந்தது…..

  லால் சலாம் இன் லால்கார்……

  துணை ராணுவப் படையுடன் மோதிக் கொண்டுள்ளனர் புரட்சியாளர்கள்…

  West Bengal govt begins offensive against Maoists
  Press Trust of India, Thursday June 18, 2009, Lalgarh
  http://www.ndtv.com/news/india/lalgarh_violence_soft_operation_today.php

  The West Bengal government has finally begun its offensive against the Maoists in Lalgarh near Kolkata with a large contingent of police and CRPF personnel.

  But the Maoists are determined to put up a tough fight. They have felled trees around Lalgarh to use as roadblocks against the advancing police and CRPF forces.

  It’s Day 4 since NDTV broke the news about the Maoist anarchy in Bengal, the violent takeover of what was a CPM bastion for 30 years.

  The Centre has told the state government that the offensive must be led by its own police force and that Central forces will only assist them.

  Meanwhile, a 12-hour bandh has been called by the CPM.

  Lalgarh, the epicentre of the Maoist campaign of violence and intimidation, is just 170 kilometers from Kolkata. The Maoists have killed many CPM activists, vandalised the police station and also set fire to CPM offices.

  Security forces begin ops to free Lalgarh from Maoists
  http://timesofindia.indiatimes.com/Ops-begin-to-free-Lalgarh-from-Maoists/articleshow/4670043.cms
  18 Jun 2009, 1041 hrs IST, Times Now
  Print Email Discuss Share Save Comment Text:
  Central forces on Thursday began their operations to flush out Maoists from villages in Lalgarh in West Bengal. Fifty villages in and around
  Lalgarh in West Midnapore district have been captured and declared a ‘free zone’ by Maoists.

  Setting up their base camps around Lalgarh, central forces along with state police began closing in on Lalgarh early on Thursday morning. Four to five base camps at strategic locations have been set up with the objective not to concede any more areas to the Maoists. Maoists have formed a three-tier human shield with women and children in the vanguard, men behind them and armed naxals forming the rearguard, according to a senior police official. Sources say the forces want to minimize casualties and will thus move slowly.

  Conceding to pressure from the centre the state government had ordered the police to lead the operation with assistance from the central forces. Five companies of CRPF and 8 companies of BSF will help the state police in this operation. The elite Cobra force is also on standby.

  * Reds vs Reds: Bengal in state of uncivil war
  * Bengal rewinds to bloody ’60s
  * Maoists put up human shields against forces in West Bengal’s Lalgarh
  * Maoists turned tribal resentment into anti-CPM weapon
  * ‘Our aim is to break CPM shackles’
  * Law and order situation: Bengal now comes under Central attack
  * Bengal violence: Buddha orders crackdown
  * Three CPM workers shot dead in West Midnapore

 4. சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.

  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5717:2009-05-07-20-28-39&catid=278:2009&Itemid=27

  Tribals on warpath in Lalgarh; say can work better than govt
  http://timesofindia.indiatimes.com/Tribals-on-warpath-in-Lalgarh-say-can-work-better-than-govt/articleshow/4670594.cms

  18 Jun 2009, 1246 hrs IST, PTI
  Print Email Discuss Share Save Comment Text:
  LALGARH (WB): Hinting at a state within a state, tribal leader Chhatradhar Mahato said his organisation could build infrastructure in just eight
  months in restive Lalgarh, which the state government could not do in 32 years.

  “If the state government had done 10 per cent of the work we did, the situation would have been different,” Mahato, Convenor of the People’s Committee Against Police Atrocities (PCAPA) said.

  “We have laid at least 50 km of gravel path, dug tanks and tube wells and revived irrigation canals with the help of villagers,” he said.

  Mahato claimed the PCAPA built a 60-feet-deep reservoir at Barapelia, where its headquarters is situated, and planned to revive a canal for irrigation.

  A health centre with a doctor was also functioning at Kantapahari, he said.

  Though the government built the road to Midnapore town, all link roads were constructed by the PCAPA, he said, claiming that this saved villagers from walking for miles through forests.

  Maoists are on the rampage in Lalgarh, in Midnapore district of West Bengal bordering Orissa, targetting CPM cadres and party offices protesting against police “atrocities”.
  Click here to comment on this story.

 5. கலை! வழக்கம் போலவே அருமையான பதிவு. ஏராளமான தகவல்களை உள்வைத்து எழுதும் உங்கள் உழைப்புக்கும் தகவல் சொல்லும் தெளிவிற்கும் வந்தனம்.

 6. ஈழத்து பிரச்சனைகளுக்கு உலகம் பூராவும் தந்தியடிக்கும் சகோதர சகோதரிகளே இதோ உங்கள் கண்முன்னே சூடானிலும், ருவாண்டாவிலும் இனப்படுகொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது… தேசங்கள் வேறு பிரச்சனை ஒன்று. தேசிய வேஷம் போடும் கோமாளிகளின் பின்னே செல்லாதீர். நமது பிரச்சனைக்களுக்கான விடை ஈழத்தில் மட்டுமல்ல ஈராக்கிலும் கிடைக்கும்

 7. மிகவும் பயனுள்ள தகவல்.
  மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
  கிழக்கு ஆசியா நாடுகள் பற்றிய தவல்களும் எங்களுக்கு சொல்லுங்கள்.

 8. மிகவும் பயனுள்ள,அற்புதமான செய்தித்தொகுப்பு.நன்றி கலை! ஈழத்து அழிவு மட்டுமே பெரிதென்று எண்ணிய எமக்கு,அதைவிட பாரிய இன அழிவை படித்த போது நெஞ்சம் கனத்தது.வுலகம் முழுவதுமே இன அழிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சியே வுள்ளனர் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க