Sunday, September 15, 2024
முகப்புஉலகம்இதர நாடுகள்அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்

-

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – 12

Africa---Angola-mapஇங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் “கண்டுபிடித்தார்கள்”. சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு, அங்கோலாவின் தசாப்தகால சூடான பனிப்போர் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அங்கோலாவின் உள்நாட்டுப் போரை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒன்று, பனிப்போர் காலகட்டம். பதினைந்து வருடங்களாக நடந்த யுத்தத்தில் இருதரப்பாலும் வெல்ல முடியவில்லை. இரண்டு, உலகமயமாக்கல் காலகட்டம். இதில் அரச படைகள் இறுதியாக வெற்றியீட்டியுள்ளன. நவீன கால போரியல் வரலாறு குறித்து அறிய விரும்புவோருக்கு, அங்கோலா போர் ஒரு நல்ல பாடம்.

16 ம் நூற்றாண்டில் போர்த்துகேயர் வரும் வரை, அங்கோலாவின் தலைநகர் லுவாண்டாவில் இருந்து வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலுமாக மூன்று இராஜ்யங்கள் இருந்துள்ளன. ஒரு இராஜ்யத்தை ஆண்ட “நுகொலா (கிளுவஞ்சே)” என்ற மன்னனின் பெயரை, போர்த்துகேயர் முழு நிலப்பரப்பிற்கும் வைத்து விட்டனர். காலனிய காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் காலனி நாடுகளுடன் இரண்டு வகையான உறவைக் கொண்டிருந்தனர். ஒன்று, வர்த்தக மையம் ஒன்றை நிறுவி வியாபாரம் செய்வது. இரண்டு, அந்தப் பிரதேசத்தை தமது நேரடியான ஆட்சியின் கீழ் கொண்டுவருவது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயர்கள், அங்கோலா மன்னனுடன் சமமான இராஜதந்திர உறவை பேணி வந்துள்ளனர். இந்த நல்லுறவு காரணமாக மன்னனும் கத்தோலிக்க மதத்தை தழுவி, தேவாலயம் கட்டவும் அனுமதி அளித்துள்ளான்.

பிரேசிலுக்கு தேவையான அடிமைகளை போத்துக்கேயர்கள் அங்கோலாவில் பிடித்து ஏற்றுமதி செய்து வந்தார்கள். மன்னர்களுடன் ஏற்பட்ட வியாபாரப் பிரச்சினையை தொடர்ந்து, போர்த்துக்கேய இராணுவ நடவடிக்கைகள் அரசாட்சிக்கு முடிவு கட்டின. கரையோரப் பகுதிகளை கைப்பற்றியதுடன் நில்லாது, கனிம வளங்களை தேடி நாட்டின் உள்பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்தனர். இவ்வாறு போர்த்துகேய காலனிய காலகட்டம் ஆரம்பமாகியது. 19 ம் நூற்றாண்டில், பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகளை அடக்கக் கூடிய அளவு பரந்த நிலப்பரப்பை தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.

19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரத்தின் மீது சர்வதேச தடை வந்தது. போத்துகல்லும் அதற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அங்கோலாவை முழுமையான காலனியாக மாற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அங்கோலா கறுப்பர்களை “நாகரீகப்படுத்துவதற்காக” கிறிஸ்தவ மதம் பரப்புபவர்களை அனுப்பி வைத்தார்கள். கத்தோலிக்க மிஷனரிகள் மட்டுமல்ல, புரட்டஸ்தாந்து மிஷனரிகளும் தாராளமாக ஆட்சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு மதப்பிரிவுகளுக்கும் இடையில் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே இருந்தது. கத்தோலிக்க மதத்தை தழுவுபவர்கள் போர்த்துக்கேய மொழியை சரளமாக கற்று, மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.

போர்த்துக்கேயர்கள் ஆப்பிரிக்கர்களை “நாகரீகப் படுத்திய” பின்னரும் அவர்களுக்கு சம உரிமை வழங்கவில்லை. சமூக மேல்தட்டில் வெள்ளையர்களும், அவர்களுக்கு கீழே கலப்பின “mestiços” உயர்ந்த அந்தஸ்தில் இருந்தனர். வெள்ளையின ஆணுக்கும், கறுப்பின பெண்ணுக்கும் பிறந்த பிள்ளைகளே கலப்பினத்தவர்கள் ( mestiços). அன்றைய காலத்தில் ஒரு வெள்ளையின பெண் கறுப்பின ஆணுடன் உறவு வைப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. தடையை மீறிய உறவு கொள்ளும் வெள்ளைப் பெண்ணை அவமானப்படுத்தி ஒதுக்கி வைப்பதுடன், கறுப்பு ஆணை கொலை செய்து விடுவார்கள். போர்த்துகேய மொழி சரளமாக பேசத் தெரிந்த ஆப்பிரிக்க கறுப்பர்கள் தனது அந்தஸ்தை உயர்த்த முடிந்தாலும், அவர்கள் மூன்றாவது தட்டிலேயே வைக்கப்பட்டனர். இதனால் இந்த மூன்றாவது பிரிவை சேர்ந்தவர்கள் assimilados என அழைக்கப்பட்டனர். போர்த்துக்கேய மொழி பேசும், மேலைத்தேய கல்வி கற்ற, கத்தோலிக்க assimilados, பிற ஆப்பிரிக்கர்களை விட நாகரீகமடைந்தவர்களாக கருதப்பட்டனர்.

Antonio_Salazar1910 ம் ஆண்டு, அங்கோலா போர்த்துக்கல் நாட்டின் ஒரு பகுதியாகியது. 1932 ல் போர்த்துக்கல்லில் ஆட்சியை கைப்பற்றிய பாஸிஸ சர்வாதிகாரி சலசார் காலத்தில், வெள்ளையர்கள் அங்கோலா சென்று குடியேறுமாறு ஊக்குவிக்கப்பட்டது. அதற்கு முன்பு, போர்த்துகல்லில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதாவது பிரிட்டிஷ் இந்தியாவில் அந்தமான் தீவைப் போல, போர்த்துகல்லுக்கு அங்கோலா பயன்பட்டது. பிற்காலத்தில் திரவியம் தேட விரும்பும் போர்த்துகேய பிரசைகள் அனைவருக்கும் அங்கோலா திறந்து விடப்பட்டது. பெருந்தோட்டங்களில் மேலாளராக, மாவட்ட வரி அறவிடுவோராக பணியாற்ற ஆயிரக்கணக்கான வெள்ளையினத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக புதிய தொழில் வாய்ப்புகள் பெருகின. எண்ணை அகழ்வு, வைரக் கல் பட்டறைகள் என்பன தொழிற்துறை வளர்ச்சி கண்டன. இதைத் தவிர தாயகத்தில் வாய்ப்பற்ற வெள்ளையின உழவர்கள், அங்கோலாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரனாக முடிந்தது. அங்கோலாவில் குடியேறிய வெள்ளையர்கள், மொத்த சனத்தொகையில் 6 சதவீதமாக மாறிவிட்டிருந்தனர். 1974 ம் ஆண்டு, அங்கோலா சுதந்திரமடையும் வரை மூன்று லட்சம் வெள்ளையினத்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

அங்கோலாவின் வரலாற்றில் அசிமிலாடோஸ்(assimilados) உருவாக்கம் குறிப்பிடத்தக்கது. இவர்கள் தூய வெள்ளையரோ, அல்லது கலப்பினமோ அல்ல. கருப்பினத்தவரில் இருந்து தோன்றிய மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். எமது சமூகத்தில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கருதும் “தமிங்கிலர்கள்” என்றொரு பிரிவு உண்டல்லவா? அங்கோலாவின் அசிமிலாடோக்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். போத்துக்கேய மொழியை பேசுவதில் மட்டுமல்ல, கலாச்சாரத்தை பின்பற்றுவதிலும் பெருமை கொண்டவர்கள். தாம் இருக்க வேண்டிய இடம் ஐரோப்பா என்று நினைத்துக் கொள்பவர்கள். இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை போர்த்துக்கல்லிற்கு உயர்கல்விக்காக அனுப்பி வைப்பார்கள். பெற்றோர் தமது பிள்ளை போர்த்துக்கல்லில் படிப்பதாக ஊர் முழுக்க பெருமையடித்துக் கொண்டு திரிவார்கள்.

சனத்தொகையில் அசிமிலடோக்களின் தொகை முப்பதாயிரத்தை தாண்டி விட்டிருந்தாலும், என்னதான் போர்த்துகேய பண்பாட்டை வழுவுறாது பின்பற்றி வந்தாலும், வெள்ளையர்கள் அவர்களை சமமாக மதிக்கவில்லை. சிறந்த அரச பதவிகள் எல்லாம் ஒன்றில் வெள்ளையருக்கு, அல்லது கலப்பினத்தவருக்கே ஒதுக்கப்பட்டன. அரசின் இனப் பாகுபாட்டுக் கொள்கை அசிமிலாடோக்கள் மத்தியில் விரக்தியை தோற்றுவித்தது. இளைஞர்கள் மத்தியில் தேசியவாத சிந்தனைகள் தோன்றின. அவர்களில் ஒருவர் அகொஸ்திஞோ நேட்டோ, போத்துக்கல்லில் மருத்துவப் பட்டம் பெற்ற கவிஞர். நேட்டோவும் அவரது தோழர்களும் போர்த்துக்கல் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் போது, மார்க்சிஸ அரசியலில் ஈடுபாடு காட்டினர். போத்துகேய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆப்பிரிக்கர்களை சமமாக மதித்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஆப்பிரிக்கர்கள், தமது தாயகத்திற்கான தேசிய விடுதலைக்காக போராடுவது நியாயமானது என்று கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

angolhha_lllk_klஅங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கம் என்ற MPLA (Movimento Popular de Libertação de Angola) ஸ்தாபிக்கப்பட்ட போது, சில வெள்ளையின கம்யூனிஸ்ட்களும் காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். இதன் காரணமாக அங்கோலா விடுதலைப் போராட்டம், ஒரு போதும் அனைத்து வெள்ளயினத்தவர்களுக்கும் எதிராக திரும்பவில்லை. இன்றும் பல வெள்ளையினத்தவர்கள் அங்கோலா பிரசைகளாக வாழ்வதைக் காணலாம். மார்க்சிஸ-லெனினிச தத்துவத்தை வரித்துக் கொண்ட MPLA, நகர்ப்புற ஏழை மக்கள் மத்தியில் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தது. இன்று MPLA மார்க்சிஸ சித்தாந்தத்தை கைகழுவி விட்டாலும், பொதுத் தேர்தல்களில் மாநகர சேரிகளில் MPLA க்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன.

ஒரு சாராரால், படித்த புத்திஜீவிகளின் இயக்கமாக MPLA கருதப்பட்டது. அங்கோலாவில் மேலும் இரண்டு இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டன. அங்கோலா தேசிய விடுதலை முன்னணி (FNLA) என்றொரு கம்யூனிச விரோத, பழமைவாத கட்சியொன்று இருந்தது. இழந்த மன்னராட்சியை மீட்பது அவர்களது கொள்கை. அதாவது ஆண்ட பரம்பரைக் கனவுகளை கொண்ட வலதுசாரி தேசியவாதம் பேசியது. 1975 ம் ஆண்டு, சுதந்திரம் கிடைத்த கையோடு, MPLA க்கும், FNLA க்கும் இடையில் அதிகாரத்திற்காக சண்டை மூண்டது. FNLA க்கு அயல்நாடான காங்கோ, மற்றும் சி.ஐ.ஏ., ஆகியன உதவி செய்தன. இருப்பினும் ஒரு வருட யுத்தத்தின் இறுதியில் FNLA தோல்வி கண்டது. எஞ்சிய உறுப்பினர்கள் காங்கோவில் தஞ்சம் புகுந்தனர். மூன்றாவது இயக்கமான “அனைத்து அங்கோலா சுதந்திரத்திற்குமான தேசிய கூட்டணி” (União Nacional para a Independência Total de Angola) UNITA பல தசாப்தங்களுக்கு நின்று பிடித்து சண்டையிட்டது. இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

அங்கோலாவின் விடுதலைப் போராட்டம், 1960 ம் ஆண்டு விவசாயிகளின் எழுச்சியுடன் ஆரம்பமாகியது. காலனிய அரசு பருத்தி பயிரிடுமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தியது. விவசாயிகள் இந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து கலகம் செய்தனர். அதே நேரம் இன்னொரு பக்கத்தில் கோப்பி தோட்ட முதலாளிகள் நிலங்களை அபகரித்துக் கொண்டிருந்தனர். இந்த நெருக்கடிகள் போதாதென்று, அதிகரிக்கப்பட்ட வரி வேறு விவசாயிகளை சுரண்டிக் கொண்டிருந்தது. விவசாயிகளை கிளர்ந்தெழ வைக்க ஏதுவான காரணங்கள் அங்கே நிலவின. அங்கோலாவின் வட பகுதியெங்கும் புரட்சித்தீ பற்றியது. காலனிய அரசுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருந்த இரண்டாயிரம் போர்த்துக்கேயர்கள், கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். போர்த்துக்கேய இராணுவம் பதிலடி கொடுப்பது என்ற பெயரில், கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி நசுக்கியது. குறைந்தது இருபதாயிரம் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு லட்சம் பேர் அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சம் கோரினர்.

விவசாயிகள் எழுச்சி அடக்கப்பட்டாலும், விடுதலை இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியது. MPLA, FNLA, UNITA ஆகிய இயக்கங்கள் காலனிய அரசுக்கு எதிரான கெரில்லா போராட்டம் நடத்தின. காலனிய அரசினால் கெரில்லாக்களை எதிர்த்து போரிட முடியாமல் போனதால், புதிய தந்திரம் ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அங்கோலா முழுவதும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் அங்கே தங்கவைக்கப்பட்டனர். மக்கள் என்ற தண்ணீரையும், கெரில்லாக்கள் என்ற மீன்களையும் பிரிக்கும் வேலையில் போர்த்துக்கேயர் ஓரளவு வெற்றிபெற்றனர் எனலாம். 1975 ம் ஆண்டு, சுமார் 75000 போர்த்துகேய படையினரும், 20000 கெரில்லாக்களும் மீள முடியாத போர்ச் சகதிக்குள் சிக்கியிருந்தனர். அவ்வருடம் போர்த்துக்கல்லில் இடம்பெற்ற அரசியல் மாற்றம், போரில் திருப்புமுனையாக அமைந்தது.

1974portugal[1]போர்த்துகல்லில் இராணுவ இயந்திரம் சர்வாதிகாரி சலசாரின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தியது. இடதுசாரி இராணுவ அதிகாரிகள் புரட்சிக்கு தலைமை தாங்கினர். இளம் போர்வீரர்களை அரசியல்மயப்படுத்தினர். முகாம்களில் இருந்த படைகளை தலைநகர் லிஸ்பனை நோக்கி வழிநடத்திச் சென்றனர். ஒரு சில மணிநேரமே நீடித்த துப்பாக்கிச் சண்டையின் பின்னர், சலசார் நாட்டை விட்டு ஓடினான். மிகக் குறைந்த உயிரிழப்புகளுடன், போர்த்துக்கல்லில் சோஷலிச புரட்சி வென்றது. கம்யூனிஸ்ட்களும், சோஷலிஸ்ட்களும் லிஸ்பனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர். புதிய இடதுசாரி அரசாங்கம் ஆப்பிரிக்க காலனிகளுக்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அங்கோலா விடுதலைக்காக போராடிய மூன்று இயக்கங்களும், போர்த்துகேய அரசும், 15 ஜனவரி 1975 அன்று, “அல்கார்வே” என்ற இடத்தில் வைத்து, ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. 11 நவம்பர் 1975 அன்று பூரண சுதந்திரம் வழங்கப்பட்டது.

சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்ட நேரம், MPLA, FNLA, UNITA ஆகிய மூன்றும் சேர்ந்து கூட்டு அரசாங்கம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மூன்று இயக்கங்களும் தாம் மட்டுமே ஆள வேண்டுமென விரும்பினார்கள். போர்த்துக்கேய கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுதலின் பேரில், சோவியத் யூனியன் MPLA க்கு ஆதரவளித்தது. தலைநகர் லுவான்டாவும், எண்ணை வளமுள்ள கரையோர பகுதிகளும் MPLA இன கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அமெரிக்கா FNLA, UNITA வுக்கு ஆதரவளித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் உதவியை நிறுத்திக் கொண்டது. MPLA சந்தர்ப்பத்தை பயன்படுத்தி FNLA யை ஒழித்துக் கட்டியது. ஆனால் UNITA மட்டும் நிலைத்து நின்றது. எதிர்பாராவிதமாக தென் ஆப்பிரிக்காவின் ஆதரவு கிடைத்தது அதற்கு காரணம்.

அப்போது தென் ஆப்பிரிக்காவை வெள்ளை நிறவெறி அரசாங்கம் ஆட்சி செய்தது. பாசிச தென் ஆப்பிரிக்கா தனது எல்லையில் ஒரு சோவியத் சார்பு கம்யூனிச நாடு வருவதை விரும்பவில்லை. மறுபக்கத்தில் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை MPLA தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய கூட்டத் தொடரில் UNITA வுக்கு தென் ஆப்பிரிக்க உதவி கிடைப்பதை அம்பலப்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவை சார்ந்து நிற்பது மனித விழுமியங்களுக்கு எதிரானதாக கருதப்பட்ட காலத்தில், அனைத்து ஆப்பிரிக்க நாடுகளும் MPLA அரசாங்கத்தை அங்கீகரித்ததில் வியப்பில்லை. இன்னொரு பக்கத்தில் UNITA விற்கு சீனாவிடம் இருந்தும் உதவி கிடைத்து வந்தது. மாவோவின் “மூன்றுலகத் தத்துவம்” நடைமுறையில் இருந்த காலம் அது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியன இரு வேறு உலகங்களாகவும், மிகுதியுள்ள நாடுகள் எல்லாம் மூன்றாவது உலகமாகவும் பார்த்த சித்தாந்தம் பின்னர் காலாவதியாகிப் போனது. அனேகமாக MPLA க்கு சோவியத் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதால், அதற்குப் போட்டியாக சீனா UNITA வுக்கு உதவியது.

அப்போதெல்லாம் MPLA இராணுவம் பலமானதாக இருக்கவில்லை. MPLA அரசின் நிர்க்கதியான நிலைமையை பயன்படுத்தி, தென் ஆப்பிரிக்கா அங்கோலா மீது படையெடுத்தது. அங்கோலாவின் தெற்கு எல்லையில் இருக்கும் நமீபியா, அப்போது நிறவெறி தென் ஆப்பிரிக்காவினால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. தென் ஆப்பிரிக்க படையெடுப்பை சமாளிக்க முடியாமல் MPLA இராணுவம் பின்வாங்கிக் கொண்டிருந்தது. தக்க தருணத்தில் பிடல் காஸ்ட்ரோ தலையிட்டு இருக்காவிட்டால், தென் ஆப்பிரிக்கா அங்கோலாவை ஆக்கிரமித்திருக்கும். காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் அன்றைய சோவியத் அதிபர் குருஷோவுடன் தொடர்பு கொண்டு, ஆயுதங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். MPLA அரசை தூக்கி நிறுத்துவதற்காக 250 கியூபா வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கியூபா படையினர் சோவியத் ஆயுதங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி அளிப்பதிலும், இராணுவ ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

தென் ஆப்பிரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை கியூபர்கள் விரட்டியடித்த பிறகு அமெரிக்கா விழித்துக் கொண்டது. கியூபா படைகளை வெளியேற்றினால், நமீபியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வழிவகுப்பதாக இராஜதந்திர நகர்வை மேற்கொண்டது. அதே நேரம் அமெரிக்கா UNITA வுக்கு சாம்பியா ஊடாக ஆயுதங்களை வழங்கி வந்தது. பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. MPLA வும், UNITA வும் சமபலத்துடன் போரிட்டு வந்தார்கள். போரில் யாரும் வெல்லமுடியாது என்ற எண்ணம் நிலவியது. MPLA கரையோர பிரதேசங்களில் பலமாக இருந்தது. உள் நாட்டுப் பகுதிகள் பல UNITA வின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கோர்பசேவ் காலத்தில் கள நிலைமை வேகமாக மாறியது.

1991 மே முதலாம் திகதி, அமெரிக்கா, சோவியத், ஐ.நா., மேற்பார்வையின் கைச்சாத்தான சமாதான உடன்படிக்கை போரை முடிவுக்கு கொண்டுவருமென அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் இறுதியில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன. அனைத்து அந்நியத் துருப்புகளும் வெளியேற வேண்டும். UNITA போராளிகள் தேசிய இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும். ஆயுதங்கள் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இவற்றை கண்காணிக்க Unavem என்ற ஐ.நா. சமாதானப்படை நிறுத்தப்படும். அதே ஆண்டு சோவியத் யூனியனும் மறைந்து போனதால், அமெரிக்கா உலகின் ஒரேயொரு வல்லரசாக மாறி விட்டிருந்தது. ஒப்பந்தப் படி கியூப படைகளை வெளியேற்றிய MPLA அரசு, அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியது. ஏற்கனவே அங்கோலாவின் எண்ணைக் கிணறுகளை அமெரிக்க கம்பெனிகள் நிர்வகித்து வந்தன. அங்கோலா எண்ணை முழுவதும் இனி தனக்குத்தான் என்ற மகிழ்ச்சியில், அமெரிக்கா MPLA அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. பகைவர்கள் நண்பர்களான இன்னொரு கதை இது.

இதற்கிடையே UNITA இயக்கம் சர்வதேச அரசியல் மாற்றங்களை கவனிக்காமல் தப்புக்கணக்கு போட்டது. UNITA போரை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாகவே கருதியது. தனது பலத்தில் கொண்ட அசாத்திய நம்பிக்கையினால் மட்டுமல்ல, அமெரிக்க செனட் சபையில் இருந்த நண்பர்களையும் கருத்தில் கொண்டு, அமெரிக்க ஆதரவு தொடரும் என்று கருதியது. இதற்கிடையே 1992 ம் ஆண்டு, பொதுத் தேர்தல் இடம்பெற்றது. சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற சர்வசன வாக்குப் பதிவு, எந்த வித அசம்பாவிதமும் இன்றி நடந்தேறியதாக சான்றிதழ் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 220 ஆசனங்களில், MPLA 129 ஆசனங்களை கைப்பற்றியது. எதிர்பார்த்த படி பெரும்பான்மை கிடைக்காத UNITA, இந்தத் தேர்தல் ஒரு மோசடி என்று பிரேரித்தது. தேர்தலை கண்காணித்த ஐ.நா. உயரதிகாரி UNITA வின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்த உயரதிகாரி “வைரக் கடத்தல்காரர்” என்று தூற்றப்பட்டார். உண்மையில் UNITA இயக்கத்தின் முக்கிய வருமானம் வைர விற்பனையால் கிடைத்து வந்தது. போரின் இறுதிக் காலங்கள், வைரச் சுரங்கங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டது.

p155374-Angola-Children_of_warபனிப்போர் காலத்தில், அமெரிக்க, சோவியத் எதிர் வல்லரசுகள் தமது பதிலிப் போர்களை மூன்றாம் உலக நாடுகளில் நடத்திக் கொண்டிருந்தன. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான ஒரு துருவ உலக ஒழுங்கின் கீழ் பதிலிப் போர்கள் தேவையற்றுப் போயின. அங்கோலா அரசாங்கமே அமெரிக்காவின் கைகளுக்குள் வந்த பின்னர், UNITA என்ற போராளிக் குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் அங்கிருக்கவில்லை. ஆயினும் UNITA இந்த உண்மையை உணரவில்லை. அமெரிக்கா அதரவு நிலையானது என்ற இறுமாப்பில் யுத்தத்திற்கு தயார் படுத்தியது. மறு பக்கத்தில், MPLA அரசும் இறுதிப்போருக்கு தயாராகவே இருந்தது. தனக்கு சார்பான பொது மக்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது. தேர்தல் நடந்த அதே ஆண்டு, அக்டோபர் மாதம் மீண்டும் யுத்தம் வெடித்தது. இரகசியத் திட்டமொன்றின் படி, தலைநகர் லுவான்டாவில் UNITA ஆதரவாளர்கள் அனைவரும் ஒழித்துக் கட்டப்பட்டனர். போரினால் நாடு முழுவதும் சுடுகாடாக்கியது.

அங்கோலாவின் மத்தியில் அமைந்துள்ளது “குய்த்தோ” நகரம். பொதுத் தேர்தலில் UNITA விற்கு ஆதரவாக இந்தப் பகுதியில் பெருமளவு வாக்குகள் கிடைத்தன. பொதுத் தேர்தலில் UNITA விற்கு வாக்களித்த அத்தனை பேரும் ஆதரவாளர்கள் என்று சொல்ல முடியாது. தசாப்த கால யுத்தத்தினால் மக்கள் வெகுவாக கலைத்து போயிருந்தனர். குய்த்தோ போன்ற UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள், எப்படியாவது UNITA சமாதானமாகப் போனால் நல்லது என்ற எதிர்பார்ப்பில் வாக்களித்துள்ளனர். UNITA மக்களின் அபிலாஷைகளை மதிக்கத் தவறியதும், அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும். இறுதியாக நடந்த போரில் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த குய்த்தோ நகரை, UNITA போராளிகள் சுற்றி வளைத்தனர். 9 மாதங்களாக நான்கு சதுர மைல் நிலப்பரப்பிற்குள் முப்பதாயிரம் மக்கள் அடைபட்டுக் கிடந்தனர். கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

போர்க் காலத்தில் ஐ.நா. சமாதானப் படையின் கைகள் கட்டப்பட்டிருந்ததை உணர முடிந்தது. ஐ.நா. அதிகாரிகள் கோரிய சர்வதேச உதவி கடைசி வரை கிட்டவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், எப்படியாவது போரில் ஒருவர் வெல்லட்டும் என்று வாளாவிருந்து விட்டனர். UNITA சமாதானமாகப் போகாமல் முரண்டு பிடிக்கின்றது என்ற ஏமாற்றத்தால் விளைந்த ஓரவஞ்சனை காரணமாக இருக்கலாம். சர்வதேச நாடுகளின் மௌனம் அரசுக்கு சார்பாக அமைந்தது. UNITA தலைவர் சாவிம்பி, அரச படைகளின் திடீர் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர், போர் முடிவுக்கு வந்தது.

அடுத்த ஆறு மாதங்களில் எஞ்சிய போராளிகள் அனைவரும் சரணடைந்தனர். போர் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், UNITA தளபதி ஒருவரும் அவரது ஆதரவாளர்களும், அரசுடன் சேர்ந்து கொண்டார்கள். “புதிய UNITA” என்ற கட்சியை ஸ்தாபித்து, அரச இராணுவத்தின் துணைப்படையாக செயற்பட்டனர். UNITA வின் வீழ்ச்சிக்கு முன்னாள் தளபதியின் துரோகம் மட்டும் காரணமல்ல. யுத்தம் தொடங்கிய நேரம், UNITA கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இயங்கிய சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களை அரசு வெளியேற்றியிருந்தது. UNITA சில தொண்டர்களை வெளியேற விடாமல் பணயக் கைதிகளாக வைத்திருந்தும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

அங்கோலா யுத்தம் ஒரு வழியாக முடிவுற்று, சமாதானம் நிலவினாலும், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. அங்கோலா ஆப்பிரிக்காவின் மிகவும் வறிய நாடுகளில் ஒன்று. பல இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படாததால், விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதைத் தவிர பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக எஞ்சிய காலத்தை கழிக்க வேண்டிய பரிதாப நிலை. நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் எதோ ஒரு வகையில் போரினால் பாதிக்கப் பட்டுள்ளது. போரினால் ஏற்பட்ட ஆழமான வடுக்கள் காரணமாக, மக்கள் மத்தியில் சமாதானத்திற்கான ஏக்கம் அதிகரித்து வருகின்றது. இன்று அனைவரும் அரசை ஆதரிக்கிறார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. நீண்ட கால போரின் விளைவாக, அரசிற்கெதிரான எதிர்ப்பு மழுங்கிப் போயுள்ளது. இதனால் வறுமை கூட சகித்துக் கொள்ளப் பட வேண்டிய ஒன்றாகி விட்டது.

angola_oilfield_service_oil_field_sticker-p217709700012365669qjcl_400இன்று அங்கோலா அமெரிக்காவிற்கு எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. இதன் காரணமாக இரு நாடுகளிற்கும் இடையில் சிறந்த நட்புறவு நிலவுகின்றது. ஒரு காலத்தில் இருந்த சோஷலிசப் பொருளாதாரம் கைவிடப்பட்டு, முதலாளித்துவ மயமாகி விட்டது. MPLA தலைவர்கள் கூட எண்ணை விற்று கிடைத்த லாபத்தில் பணக்காரர்களாக வாழ்கின்றனர். இவையெல்லாம் அமெரிக்காவிற்கு உவப்பான செய்திகள் தான். இருப்பினும் அங்கோலாவின் அசைக்க முடியாத இராணுவ பலமும், காங்கோவில் அதன் சாகசங்களும் அமெரிக்காவின் கண்ணை உறுத்துகின்றது. இன்று உலகம் எவ்வளவோ மாறி விட்டது. மூன்றாம் உலக நாடுகள், மேற்குலகம் விதிக்கும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு அடங்கிக் கிடந்த காலம் ஒன்றிருந்தது. ஆனால் இன்று அங்கோலா போன்ற சில நாடுகள் தேசிய அரசியல், பொருளாதாரத்தை தாமே தீர்மானிக்க வேண்டுமென விரும்புகின்றன. அங்கோலா நிலையான ஆட்சி, பலமான இராணுவம் போன்ற அரசியல் ஸ்திரத் தன்மையும், பெற்றோலியம், வைரம் போன்ற அதிக வருவாய் ஈட்டித் தரும் பொருளாதார வளங்களையும் ஒருங்கே கொண்டது. இவையெல்லாம் அங்கோலா மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உதவுமா?

அங்கோலாவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. ஆரம்பத்தில் MPLA க்கும், UNITA விற்கும் இடையிலான போரில் சில இன வேற்றுமைகள் தொக்கி நின்றன. அசிமிலாடோஸ் என அழைக்கப்பட்ட போர்த்துகேய மயப்பட்ட கறுப்பர்கள், கலப்பினத்தவர்கள், வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் MPLA இற்கு ஆதரவளித்தனர். அதற்கு மாறாக உள்நாட்டில், பாரம்பரிய ஆப்பிரிக்க சமூக கட்டமைப்பை பேணி வரும் இனங்களின் வாழ்விடங்கள், UNITA வின் ஆதரவுத் தளமாக இருந்தது. போருக்குப் பின்னான காலத்தில், அரசுடன் ஒத்துழைக்கும் முன்னாள் UNITA பிரமுகர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டாலும், அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்திய மக்களின் குறைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இன்று வரை அரசாங்கம், கண்ணிவெடி இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் பிரச்சினை குறித்து மட்டுமே பேசி வருகின்றது.

இதற்கிடையே கபிண்டா மாகாணத்தின் பிரச்சினை, சர்வதேச கவனத்தைப் பெறாவிட்டாலும், அதுவும் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கோலாவின் பெரு நிலப்பரப்புடன் சேராமல், கொங்கோ எல்லையிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தனியான மாகாணம் கபிண்டா. சுருக்கமாக அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துடன் ஒப்பிடலாம். அங்கோலாவிற்கு சொந்தமான 3000 சதுர மைல் நிலப்பரப்பு, பிராசவில்-கொங்கோவிற்கும், கின்சாசா கொங்கோவிற்கும் நடுவில் அமைந்துள்ளது. மாகாணம் சிறிதாக இருந்தாலும் அதன் மகாத்மியம் பெரிது. அங்கோலாவின் 70 வீதமான எண்ணை கபிண்டாவில் இருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. அதாவது அங்கோலாவின் பெருமளவு அந்நிய வருமானத்தை கபிண்டா வழங்குகின்றது.

FLEC என்ற ஒரு ஆயுதமேந்திய இயக்கம் கபிண்டாவின் விடுதலைக்காக போராடி வருகின்றது. 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தியும், அங்கோலா அரசுக்கு தலைவலியை தவிர வேறெந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. FLEC இன்று சிறு குழுக்களாக பிரிந்துள்ளதால், அவர்களது போராட்டம் இனியும் வெல்லுமா என்பது சந்தேகமே. கபிண்டாவில் அங்கோலா படையினர் பல்வேறு மனித உரிமை மீறல் குற்றங்களை புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கபிண்டா விடுதலை இயக்கத்தினருக்கு உள்ள ஒரேயொரு சர்வதேச ஆதரவு, ஐ.நா.சபையின் “பிரதிநிதித்துவப் படுத்தாத நாடுகளின் மன்றம்”(UNPO). எந்த வித அரசியல் அதிகாரமும் இல்லாத இந்த மன்றத்தில், திபெத், மேற்கு சஹாரா, போன்ற சுதந்திர தேசத்திற்காக போராடும் பல அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.

FLEC தனது தேசியவாதத்திற்கு இன அடிப்படை இருப்பதாக கூறுகின்றது. காங்கோலிய இனத்தை சேர்ந்த “பகொங்கோ” மக்களின் தாயகமாக கபிண்டாவை வரையறுக்கின்றனர். அங்கோலா அரசு இந்த தேசிய இனக் கருத்தியலை நிராகரிக்கின்றது. வட அங்கோலா மாகாணமான ஸயரிலும் பகொங்கோ இனத்தவர்கள் வாழ்வதை சுட்டிக் காட்டி, கபிண்டர்களின் போராட்டம் வெறும் பொருளாதாரக் காரணத்தை மட்டும் கொண்டுள்ளதாக பதிலளித்து வருகின்றது. கபிண்டா விடுதலை இயக்க தலைவர்களும் பெற்றோலிய வருமானத்தை பங்கிடுவதை தமது பிரதான கோரிக்கையாக முன்வைக்கின்றனர். செல்வத்தை சமமாகப் பங்கிடாவிட்டால் அங்கோலாவின் பிற பகுதிகளும் எதிர்காலத்தில் கொந்தளிக்க வாய்ப்புண்டு.

(தொடரும்)

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

தொடர்புடைய பதிவுகள்:

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா –
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை !
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் !
கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் !
அகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
சிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு!
நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு

தோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com

  1. “மாவோவின் “மூன்றுலகத் தத்துவம்” நடைமுறையில் இருந்த காலம் அது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆகியன இரு வேறு உலகங்களாகவும், மிகுதியுள்ள நாடுகள் எல்லாம் மூன்றாவது உலகமாகவும் பார்த்த சித்தாந்தம் பின்னர் காலாவதியாகிப் போனது…. ” என்று தோழர் கலைஅரசன் எழுதியுள்ளார் .மாவோ இந்த “மூன்றாம் உலக தத்துவ்த்தை எந்த ஆண்டு ,எந்த கட்சி மாநாட்டில் அறிவித்தார் என்று விளக்கம் பெற விருபுகிறேன்.

    • மூன்றுலகத் தத்துவம் என்பது டெங்கால் நிறுவப்பட்டதாகும். இது மாவோவினுடைய தத்துவம் அல்ல. டெங்கை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இந்தத் தத்துவத்தை பரப்பினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பெரும்பாண்மையானவை இந்தத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்கள். இந்தத் தத்துவம் குருச்சேவின் இன்னொரு பரிமாணம், வளர்ச்சி.

  2. பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் அங்கோலாவின் அலங்கோலங்களை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்… தெளிவினை தந்தது… நன்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க