எந்தப் பிரச்சினையுமற்று பாதுகாப்பாக வாழ்வபவர்களுக்கு அகதி என்ற வார்த்தையும் அது தரும் ரத்தமும் சதையுமான வாழ்க்கையும் அது தரும் வலிகளையும் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியும்? ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆதிக்க காலத்தில் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்வு மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்காக உலகமெங்கும் மக்கள் அகதிகளாய் துரத்தப்படுகிறார்கள். வல்லரசு சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலத்தை புரியவைப்பதற்கான முயற்சியே இந்தப் பதிவு. நமக்கு தெரிந்த ஈழத்தின் அகதி வாழ்க்கை பற்றி வினவு தளத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு உங்களுக்கு அறிமுகமான வாசகர் ரதி இங்கே அந்த முயற்சியை தருகிறார். ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும் அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார். ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சியாகவும், வினவில் வாசகராக அறிமுகமாகும் நண்பர்களை படைப்பாளிகளாக உயர்த்த வேண்டுமென்ற எமது அவாவினாலும் இங்கே தோழர் ரதியின் நினைவுகளை பதிவு செய்கிறோம். இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம். ரதியை உற்சாகப்படுத்துங்கள், அவரது நினைவுகளை உங்கள் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வையுங்கள். நன்றி.
நட்புடன்
வினவு
……………………………………………………..
நான் அரசியல் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எங்கள் வாழ்வு எப்படி போர் என்ற சகதியில் சிக்கி சின்னாபின்னப்பட்டது என்று என் அனுபவத்தைதான் சொல்ல வருகிறேன்.
இவை என் மனக்குமுறல்கள் மட்டுமே. உலகத்தமிழ் உறவுகள் இந்த பூகோளப்பந்தில் பத்து கோடியாம். அதில் பாதிக்கு மேல், ஆறரை கோடி, தமிழ்நாட்டு உறவுகள். ஆனால், ஈழத்தில் மட்டும் நாங்கள் உயிரோடு இருப்பவர்களை எண்ணாமல், தினம், தினம் செத்துமடிபவர்களைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதுதான் ஈழத்தமிழனின் தலைவிதியா என்று யாரிடம் கேள்வி கேட்பது, ஐ.நா. விடமா அல்லது சர்வதேசத்திடமா? தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால் அந்த நாடு நிச்சயமாக தன் உறவுகளுக்கு நடந்த கொடுமைகளை சர்வதேசத்திடம் தட்டி கேட்டிருக்கும். ஆனால், உலகத்தில் தமிழன் பத்து கோடி என்றாலும் அனைவருமே இரண்டாந்தர, மூன்றாந்தர பிரஜைகளாகத்தானிருக்கிறோம். தமிழனுக்கு என்று ஒரு தாய்நாடு இல்லாமல் போனதற்கு யார் காரணம்? நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. தண்ணீருக்கு என்று ஒரு தனிக்குணம் உண்டு. அதை எந்த பாத்திரத்தில் நிரப்புகிறோமோ அதன் வடிவத்தை அது பெறும். அதேபோல்தான் ஈழத்தமிழனையும் இந்திய ஆளும் வர்க்கமும் சர்வதேசம் மற்றும் ஐ. நா. சபையும் எங்களை எந்த பாத்திரத்தை அவர்கள் விரும்புகிறார்களோ அதை நிரப்பச்சொல்கிறார்கள். எதிர்த்தால் எங்கள் நியாயமான போராட்டங்களை கூட மழுங்கடிக்கிறார்கள். எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகள், வதைமுகாம்களில் உள்ள உறவுகள் பற்றி பேசினால் அவர்கள் மெளனிகளாகி விடுகிறார்கள். சரி, ஈழத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் இனஅழிப்பு நடந்ததே, அதையாவது இந்த ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் “இனஅழிப்பு” என்றாவது ஒப்புக்கொண்டார்களா? அதுவும் இல்லை. இன்று உலக இயங்குவிதிகள் இரண்டு என்று நினைக்கிறேன், ஒன்று பணம் (மூலதனம்) மற்றது வல்லாதிக்கப்போட்டி. இன்று இந்துமாசமுத்திரத்தில் இந்த இயங்கு விதிகளில் ஒன்றான உலகநாடுகளின் வல்லாதிக்கப்போட்டியில் ஈழத்தமிழன் வாழ்வா சாவா பிரச்சனை அதை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகவே மாறிவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது. இதில் நாங்கள் முற்றாக அழிக்கப்படுவோமா அல்லது மீண்டு வருவோமா? எங்களுக்கான நீதி கிடைக்குமா?
இதையெல்லாம் தாண்டி மறுக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காக தசாப்தங்களாக நடந்த போராட்டம், எங்கள் போரியல் வாழ்வு, அதன் தாக்கங்கள் என்பவற்றைதான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். போர் என்பது பொதுவாகவும் ஒவ்வொரு தனிமனிதனையும் நிறையவே பாதிக்கிறது. போர்ச்சூழலில் மரணம், உளவியல் தாக்கங்கள், மற்றும் சமூக பொருளாதார காரணிகள் எவ்வாறு தனிமனித வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது என்பதை என் அனுபவங்கள் மூலம் சொல்ல முனைகிறேன்.
நான் உலகில் அதிகம் நேசிப்பது மழலைகள், அவர்களின் மொழி, மற்றது பூக்கள். நான் மதிப்பது பெண்களின் மானம், அவர்களின் உரிமைகள், அடுத்தவரை பாதிக்காத அடிப்படை மனித உரிமைகள். நான் அதிகம் வெறுப்பது உங்களில் அனேகமானோருக்கு தெரிந்திருக்கும், “போர்”. நான் விரும்பும், மதிக்கும் அத்தனையுமே என் மண்ணில் போரின் பெயரால் நாசமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. போர் என்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான் என்பது என் கருத்து. அதற்காக நான் என் தமிழ்சோதரர்களின் இன்னல்களை குறைத்து கூறவில்லை.பொதுவாகவே குழந்தைகள், பெண்கள் என்றால் அவர்களின் இன்னல் கண்டு மனம் இரங்குவார்கள். ஆனால், சிங்கள பேரினவாதிகளிடமும் ராணுவத்திடமும் இதையெல்லாம் எதிர்பார்த்தால், அதைப்போல் முட்டாள்தனம் உலகில் வேறொன்றுமில்லை. வன்னித்தமிழன் முழு இலங்கைக்கும் சோறு போட்டான் என்றார்கள். ஆனால், அவன் குழந்தைகள் வன்னியில் தண்ணீரின்றியே சாகடிக்கப்பட்டார்கள். அந்த பிஞ்சுகுழந்தைகள் என்ன சோறு கேட்டார்களா அல்லது தமிழீழம் கேட்டார்களா? தவித்த வாய்க்கு தண்ணீர்தானே கேட்டார்கள். இது ஒரு குற்றமா? அவர்களுக்கு கிடைத்தது என்னவோ குண்டுமழைதான். வன்னியில் அந்த பிஞ்சுக்குழந்தைகள் “தண்ணீ, தண்ணீ….” என்று அழுதது எப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சை அடைக்கிறது. இப்படி தண்ணீர் இல்லாமல் செத்துமடிந்த எங்கள் செல்வங்கள் எத்தனையோ? இதுவும் போர் விதியா? குழந்தைகளுக்கே இந்த கதி என்றால் என் சோதரிகளின் நிலை சொல்லவே வேண்டாம். சிங்களகாடையர்களாலும் ராணுவத்தாலும் காமப்பசி தீர்க்கும் சதைப்பிண்டங்களாகவே பார்க்க்ப்படுகிறார்கள், நித்தம், நித்தம் சிங்களராணுவத்தால் என் சகோதரிகள் நாசமாக்க்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் போர் முறையோ? உலகில் குழந்தைகள் பெண்களின் உரிமைகள் பேசும், காக்கும் அமைப்புகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன? அவர்களுக்கு நாங்கள் தான் சொல்லவேண்டியிருக்கிறது ஈழத்தில் எங்கள் குழந்தை செல்வங்களும் பெண்களும் உரிமைகள் மறுக்கப்பட்டு, உயிர்வாழ அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்று.
ஈழத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பதால், பூக்களுக்கு கூட நாங்கள் வேலை கொடுப்பதில்லை, ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கு. மனித உடல்களை எரித்துவிட்டோ அல்லது புதைத்து விட்டோ, அதற்கு பக்கத்தில் பதுங்குழி வெட்டி கொண்டோம். பிறகு அதிலேயே பிணங்களாயும் ஆனோம்.
போர் என்ற பெயரில் வாழ்வுரிமை கூட மறுக்கப்பட்டு என் இனம் ஈழத்தில், என் மண்ணில், செத்துமடிவதுதான் விதியா என்று நினைத்தால், என் நெஞ்சுவெடித்து என் உயிர் போய்விடாதா என்றிருக்கிறது. பொதுவாகவே என்னை தெரிந்தவர்கள் சொல்வார்கள், எனக்கு துணிச்சல் அதிகம் என்று. ஆனால், என் உறவுகளின் தாங்கொணா துன்பங்களை நினைத்து நான் தனிமையில் அழாதநாட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் சொந்தமண்ணிலேயே நாங்கள் அகதிகளாய், ஏதிலிகளாய் மூன்றாந்தர பிரஜைகளாக்கூட இல்லாமல் மிருகங்கள் போல் நடத்தப்படுகிறோம். தமிழனாய் பிறந்ததால் எங்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறதா? ஏன் தமிழர்கள் என்றால் மனிதர்கள் இல்லையா?
நான் அகதியாய் ஈழத்திலும், இந்தியாவிலும் தற்போது கனடாவிலும் என் அனுபவங்களை மீட்டிப்பார்க்கிறேன். என் தன்மானம் என்னை எத்தனையோ தடவைகள் சாட்டையாய் அடித்திருக்கிறது. எதற்கு இந்த “அகதி” என்ற பெயர் என்று. கூனிக்குறுகி பலதடவை இந்த அகதிவாழ்க்கை தேவையா என்று என்னை நானே வெறுக்கிற சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் எல்லா மானிடப்பிறவிகள் போலும் என் இருத்தலை, என் உயிரை என்னால் நேசிக்கமுடியவில்லை? காரணம், நான் தமிழ் என்பதலா? அல்லது நான் சுதந்திரத்தை அதிகம் நேசிப்பதாலா? நான் சட்டப்படியான உரிமைகளோடும், தன்மானத்தோடும் என் மண்ணில் வாழ நினைப்பது ஒரு குற்றமா? நான் அகதியாய் அன்னியமண்ணில் மடிவதுதான் விதியா?
ஈழத்தில் என் பதுங்குழி வாழ்க்கை, இடப்பெயர்வு, கல்விக்கூடங்கள், வாழ்விடங்கள் எதுவும் சந்தோசம் நிறைந்தவை அல்ல. என் சந்தோசமான மாணவப்பருவம் மற்றும் பாடசாலை நாட்களில் கூட போரியல் வாழ்வின் காயங்கள் நிறையவே உண்டு. ஆனால், சுதந்திரம் வேண்டுமென்றால் இதெல்லாம் விலையோ என்று எங்களை நினைக்கத்தூண்டிவிட்டது சிங்கள அடக்குமுறை.
என் அனுபவங்கள் தொடரும்…..
-ரதி
இது எனக்கு ஒரு கன்னி முயற்சி. நான் முன்பு இப்படி நீண்ட பதிவுகள் எழுதி பழக்கமோ அனுபவமோ இல்லை. வினவு கொடுத்த தைரியத்தில் எழுத தொடங்கிவிட்டேன். ஏதாவது குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். என்னை எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்த வினவு, நண்பர் RV க்கும் என் நன்றிகள். என்னை உண்மையில் எழுததூண்டியது பொல்லாதவன்/சரவணகுமார் என்ற ஒரு தமிழ்நாட்டு சகோதரர் சொன்னதுதான். தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை எந்த ஊடகங்களும் சொல்வதில்லை என்பதுதான்.
ரதி, நீங்கள் எழுதுவது பெரு மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்கள்!
ரதி, நான் பார்த்தது இன்றுதான். எங்களுடைய ஊக்கம் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.
சிங்களப் பேரினவாத பாசிசம், இலங்கையில் இராணுவ ஆட்சியை நிறுவ முனைகின்றது
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5984:2009-07-13-19-46-32&catid=277:2009
ரதி, நீங்கள் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்
வாழ்வின் உண்மைகளுக்கு, யாரும் பொய்ப் பட்டம் கட்டமுடியாது. வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ரதி,
தொடர்ந்து எழுதுங்கள்,
ரதி,
உங்கள் நினைவுகள் வினவில் தொடர்ந்து வெளிவர வாழ்த்துக்கள்!
மறுக்கப்பட்ட உரிமைகள் கொடுக்கும் வலி, சில நேரங்களில், ஒரு சாதாரண பெண்ணை காலம் போற்றும் எழுத்தாளராக மாற்றுகிறது. வாசகர் ரதியை எழுத்தாளர் ரதியாக மாற்றிய வினவிற்கு நன்றி!
ஈழத்தின் நினைவுகள்…
இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம். ரதியை உற்சாகப்படுத்துங்கள், அவரது நினைவுகளை உங்கள் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வைய…
ரதி எழுதுவதை வரவேற்கிறேன். மிகைப்படுத்தல், பக்கச்சார்பு இன்றி எழுதினால் யாரும் ஏற்றுக்கொள்வார்கள்.
தோழர்கள் தெக்கான் மற்றம் தமிழ் அரங்கம், தனது அனுபவங்களை ஒருவர் பகிரும் பொழுது அது அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும். படிப்பவருக்கும் அப்படித்தானே? இதில் யார் என்தப்பக்கம் சார்ந்தவரோ அதன்வழியில் தானே ஒரு எழுத்து பிடிக்க, பிடிக்காமல் போகும். நடுநிலை என்று ஒன்று உண்டா? அவர் எழுதுவதில் விவரப்பிழை இருந்தால் சுட்டலாம், அவர் ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு இருந்தால் வாதிடலாம்.. ஆனால் பக்கச்சார்ப்புடன் எழுதக்கூடாது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்பது எனது கருத்து.
தோழர் ரதி,
நீங்கள் உங்கள் நினைவுகளை, அவை பதிந்தபடியே பகிருங்கள், அதுதான் சிறந்த இலக்கியமாகும்,
//ஆனால் பக்கச்சார்ப்புடன் எழுதக்கூடாது என்பது சாத்தியமில்லாத ஒன்று.//
மா.சே. இந்திய ஆளும் வர்க்கமும் சர்வதேசம் மற்றும் ஐ. நா. சபையும் பக்கசார்போடு நடந்து கொண்டது சரி என்று கூறுகிறீர்களா? தைரியமிருந்தால் உங்கள் நியாயத்தை கட்டுரையாளர் ரதியிடம் தெரிவியுங்கள்.
நீங்கள் எழுதப்போவது மகிழ்ச்சி சகோதரி. உங்கள் குரலில் ஈழத்தமிழர்கள் வாழ்வு பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
மா.செ வின் கருத்தை வழிமொழிகிறேன். வாழ்த்துகள்,ரதி!தொடர்ந்து எழுதுங்கள்
//வன்னித்தமிழன் முழு இலங்கைக்கும் சோறு போட்டான் என்றார்கள். //
உண்மை . அவர்களை இன்று ஒரு நேர சோத்துக்கு கையேந்ததும் நிலைக்கு கொண்டுவந்த புலிகளை பற்றியம் எழுத வேண்டுமே!
“தோழர்கள் தெக்கான் மற்றம் தமிழ் அரங்கம், தனது அனுபவங்களை ஒருவர் பகிரும் பொழுது அது அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும். படிப்பவருக்கும் அப்படித்தானே? இதில் யார் என்தப்பக்கம் சார்ந்தவரோ அதன்வழியில் தானே ஒரு எழுத்து பிடிக்க, பிடிக்காமல் போகும். நடுநிலை என்று ஒன்று உண்டா? அவர் எழுதுவதில் விவரப் பிழை இருந்தால் சுட்டலாம், அவர் ஒரு நிகழ்வை புரிந்து கொண்ட விதத்தில் தவறு இருந்தால் வாதிடலாம்.. ஆனால் பக்கச்சார்ப்புடன் எழுதக்கூடாது என்பது சாத்தியமில்லாத ஒன்று”
மா.சே பதில் விசித்திரமானது. இந்த வாதம் பக்க சார்பானது. இவை புலி சார்பானதாக இருக்கும் என்று கருதுகின்றேன். நான் எழுதியது என்ன? “வாழ்வின் உண்மைகளுக்கு, யாரும் பொய்ப் பட்டம் கட்டமுடியாது. வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்.”
இவர் வாழ்ந்த மண்ணில் தமிழ் மக்கள் பேரிவாத பாசிட்டுகளை மட்டும் சந்திக்கவில்லை? புலிப் பாசிட்டுகளையும் சந்தித்தனர்.
‘தனது அனுபவங்களை ஒருவர் பகிரும் பொழுது அது அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும்.” இப்படி பலி பாசிசத்ததை நியாயப்படுத்த முடியாது. தமிழனத்ததை இந்த நிலைக்கு கொண்டு வந்த புலிப் பாசிசம் தான் சொல்வதைத்தான் மனித வாழ்வாக காட்டி, மனித முட்டாள்களை உருவாக்கியது. இதை’தனது அனுபவங்கள்” என்று கூறி நியாயப்படுத்த முடியுமா?
பகுத்தறிவுள்ள மனிதன் தன்னை சுற்றி நிகழ்வுகளை பகுத்தறிவுடன் புரிந்தனா இல்லை என்பதே இங்கு அடிப்படையான கேள்வி. இங்கு எழுத்தாளன் இதில் முட்டாளாக இருக்க முடியாது. இது நடுநிலையல்ல. மனிதர்களைப் பற்றி உண்மைகளைப் பற்றி பேசுகின்றாத அல்லது அதை மூடிமறைக்கின்றதா என்பதே கேள்வி. மூடிமறைப்பதையும் ‘தனது அனுபவம்” என்று கூற முடியும்.
புலிகளின் பாசிசம் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மக்களுக்கு மறுத்து, எந்த மக்கள் விரோத்தை இதன் மூலம் பாதுகாக்க முனைந்ததோ, அதையும் ரதி பேசுகின்றரா என்பதை பொறுத்திருந்த பார்ப்போம். உண்மைகனின் பக்கத்தில் நிற்கின்றரா? அல்லது ஒரு பக்க உண்மையை புலி சார்ந்து பேகின்றரா என்று பார்ப்போம்?
தமிழரங்கம் தோழர் இராயகரனுக்கு,
மா.சே சொல்லியிருப்பது எளிய உண்மை. அதிலேயே எழுதப்படும் பார்வை தவறென்றால் சுட்டிக்காட்டலாம் என்று கூறியிருக்கிறார். அதற்குள் அந்தக் கருத்து புலிசார்பானது என முத்திரை குத்துவது எதற்காக? அவர் புலிசார்பா, எதிர்ப்பா என்பதை இந்த பின்னூட்டத்தை வைத்தே முடிவு செய்வீர்களா? புலிகளின் அரசியல் தவறுகளை உணராத மக்கள்தான் புலத்தில் அதிகம் வாழ்கின்றனர். இவர்களெல்லாம் புலிகளது தவறுகளை தெரிந்தே மறைப்பதாக எண்ணுவது சரியல்ல. அப்படி செய்பவர்கள் நிச்சயம் சிறுபான்மையாகத்தான் இருப்பார்கள். தமிழகத்திலும் புலிகளை எதார்த்தமாக ஆதரிக்கும் இளைஞர்களே அதிகம். இவர்களெல்லாம் மோசடிப் பேர்வழிகளல்ல. ஈழப்போராட்டத்தில் புலிகள் தவறுகள் செய்திருப்பதாக நாம் சொல்வது வெளியே ஒட்டுமொத்தமாக ஏற்கப்பட்ட கருத்தல்ல. அப்படி ஏற்கச் செய்வதற்கு நாம் தொடர்ந்து விடாப்பிடியாக போராடுவது வேறு. மாறாக அகநிலையாக நாம் வைத்திருக்கும் கருத்தை புறத்தில் ஒருவர் ஏற்கவில்லை என்றால் உடனே அவருக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டுவது எந்த விதத்தில் சரி. இந்த உலகில் பகுத்தறிவுடன் சிந்தித்து அதாவது வர்க்க கண்ணோட்டமின்றி பார்வை கொண்டவர் எவரும் இல்லை. பகுத்தறிவே குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்துதான் வெளிப்படும். கடவுகளையும், மதத்தையும் தி.க.வினர் எதிர்ப்பது போல ஒரு கம்யூனிஸ்டு வறட்டுத்தனமாக எதிர்க்க மாட்டார். இந்த இரண்டிலும் பகுத்தறிவு இருக்கிறது, ஆனால் வர்க்கம் சார்ந்து வெளிப்படுகிறது.
வினவில் புலிகளைப் பற்றிய விமரிசனங்களை இந்தக் கண்ணோட்டத்தில் வைத்துத்தான் மக்களிடம் கொண்டு செல்கிறோம். இங்கே ரதி தனது அனுபவங்களை ஒரு பெண் என்ற முறையிலும், அகதி என்ற உண்மையிலும் பகிர்ந்து கொள்கிறார். இந்தத் தொடரின் நோக்கம் ஈழப்போராட்டத்தின் சரி தவறுகளை அரசியல் ரீதீயாக பரிசீலீக்கின்ற விசயங்களை பேசுவதற்காக அல்ல. எமது முன்னுரையில் குறிப்பிட்டது போல பாதுபாப்பான வாழக்கை வாழும் பலருக்கும் ஒரு அகதியின் துயரத்தை அனுபவத்தின் மூலம் தெரிவிப்பதே. அதில் கூட ரதி என்ன விதத்தில் புரிந்து கொண்டாரோ அந்த அரசியல் பார்வையின் சாயம் இருக்கும். அதில் வேறுபாடு இருந்தால் யாரும் அதை விவாதிக்கலாம். ஆனால் அதற்குள் அவர் எழுதுவதற்கு முன்னரே அவரை குழப்புவது போன்ற அல்லது எனக்கு இதுதான் வேண்டுமென்று முன்னரே கட்டளையிடுவது போன்ற கருத்துக்கள் என்ன விதத்தில் சரி எனத் தெரியவில்லை.
நட்புடன்
வினவு
//சரி, ஈழத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் இனஅழிப்பு நடந்ததே, அதையாவது இந்த ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் “இனஅழிப்பு” என்றாவது ஒப்புக்கொண்டார்களா?//
இன அழிப்பு சம்பந்தமாக நீங்கள் திரட்டி வைத்துள்ள ஆதாரங்களையும், சாட்சியங்களையும் கொண்டுவாருங்கள். உங்கள் பக்கம் தான் உருத்திரகுமார் போன்ற உலகத்தரம் வாய்ந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு எங்காவது ஒரு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யுங்கள். இன அழிப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பு சொல்லட்டும்.
//அந்த பிஞ்சுகுழந்தைகள் என்ன சோறு கேட்டார்களா அல்லது தமிழீழம் கேட்டார்களா?// தமிழீழம் கேட்டவர்களை சாகடிப்பது நியாயம் என்று சொல்ல வருகிறாரா?
உண்மையை கூறும் tamilcircle கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்.
புலிப்பாசிச, புலிப்பினாமிய அப்படிங்கிற வார்த்த இருந்தா போதுமே TSri வழிமொழிஞ்சுடுவாரு…அண்ணாத்த இந்து ராமையும், ‘சோ’ மாறியையும் கூட வழிமொழிஞ்சத ஞாபகப்படுத்தறேன்…அத tamilcircle வழிமொழியுவாறா?
அண்ணே MamboNo8, நீங்கள் எல்லாம் யார்? எதற்காக புலியை ஆதரிக்கிறிக்கிறிங்க? உங்கள் உண்மையான நோக்கம் என்ன? என்பதை இப்போ தான் நண்பர்கள் முலம் புரிஞ்சுகிட்டேன். தொடருங்கோ.
தோல்வி நிச்சயம். வாழ்த்துக்கள்.
புலிப்பாசிச புலிப்பினாமிகள் என்ற வார்த்தைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை காரணம் நீங்கள் புலிப்பினாமியாக மாறி பணம் பண்ண விரும்புகிறீர்கள். ஆல் த பெஸ்டு! Mes meilleurs vœux !
போயா டுபுக்கு, உன்ன மாதிரி புத்தகத்த மட்டும் வச்சிகிட்டு புரச்ச்சி பண்ண முடியாது — சுயஇன்பம்தான் பண்ண முடியும்.. அதான் உன் ஆராய்ச்சி முடிவுல தெரியிதே. நடத்து நடத்து tous mes vœux!
சாரி ரதி..சொல்ல மறந்திட்டேன்.. ஆல் த பெஸ்டு!
All The Best Rathi… My wishes for writing more…
//மா.சே சொல்லியிருப்பது எளிய உண்மை. அதிலேயே எழுதப்படும் பார்வை தவறென்றால் சுட்டிக்காட்டலாம் என்று கூறியிருக்கிறார். அதற்குள் அந்தக் கருத்து புலிசார்பானது என முத்திரை குத்துவது எதற்காக? அவர் புலிசார்பாஇ எதிர்ப்பா என்பதை இந்த பின்னூட்டத்தை வைத்தே முடிவு செய்வீர்களா? புலிகளின் அரசியல் தவறுகளை உணராத மக்கள்தான் புலத்தில் அதிகம் வாழ்கின்றனர். இவர்களெல்லாம் புலிகளது தவறுகளை தெரிந்தே மறைப்பதாக எண்ணுவது சரியல்ல. அப்படி செய்பவர்கள் நிச்சயம் சிறுபான்மையாகத்தான் இருப்பார்கள். தமிழகத்திலும் புலிகளை எதார்த்தமாக ஆதரிக்கும் இளைஞர்களே அதிகம். இவர்களெல்லாம் மோசடிப் பேர்வழிகளல்ல. //
புலிகளின் தவறுகளை தெரிந்தே மறைப்பவர்களால் தான் இவர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். அதனால் தான் இச்சிறுபான்மையானவர்களுக்குள் ரதியும் அடங்கிவிடக் கூடாது (நீங்கள் குறிப்பிட்ட அதே வார்த்தைகளிலேயே சொன்னால் தெரிந்தே மறைப்பவர்களாக இருப்பவர்களில் ரதியும் இருக்கக்கூடாது) என்பதும் நீங்கள் குறிப்பிடும் எதார்த்தமாக ஆதரிக்கும் இளைஞர்களுக்கு சரியான நிலபரங்கள் சொல்லப்பட வேண்டும் என்பதும் இன்றைய காலத்தின் தேவை. உண்மையில் ஈழப் போராட்டத்தின் இன்றைய நிலைமைகளுக்கு இனவெறி அரசுக்கு எதிர்நிலையில் புலிகளின் போராட்ட நெறிமுறைகளும் பாசிச வலதுசாரி நடைமுறைகளும் ஒடுக்குமுறைகளை மக்கள் மேல் ஏவிய அவர்களின் சீர்செய்ய விரும்பாத போக்குகளும் காரணம் என்பது உண்மையிலும் உண்மை. தலைமை அணியின் காரணமாக தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள் கூட தங்கள் பார்வைகளை சீர் செய்ய வேண்டிய காலகட்டம் இது. வரலாற்றின் விதி தவறுகளை களையும். அந்த தவறுகளை களையும் வரலாற்றின் விதிக்குள் ரதியும் அடங்க வேண்டாமா?
நாம் வலியுறுத்த வேண்டிய ஒன்று- மக்களுக்கு உண்மைகளை அறிவதற்கான உரிமையுண்டு என்று “புதிய ஜனநாயக கட்டுரை குறிப்பிடுவது போல- இன்னும் மக்களை அறியாமையில் வைத்து சாகசம் செய்யும் நிலைமைகளிலிருந்து நாம் மாற வேண்டும். எனவே தான் அதை மக்கள் அறிய வேண்டும் என்ற இரயாகரனின் கோரிக்கை மிகச்சரியானது.
// ஈழப்போராட்டத்தில் புலிகள் தவறுகள் செய்திருப்பதாக நாம் சொல்வது வெளியே ஒட்டுமொத்தமாக ஏற்கப்பட்ட கருத்தல்ல. அப்படி ஏற்கச் செய்வதற்கு நாம் தொடர்ந்து விடாப்பிடியாக போராடுவது வேறு. //
இதற்காகத்தான் இரயாகரன் போராடுகின்றார்.
// மாறாக அகநிலையாக நாம் வைத்திருக்கும் கருத்தை புறத்தில் ஒருவர் ஏற்கவில்லை என்றால் உடனே அவருக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டுவது எந்த விதத்தில் சரி. //
உண்மைகள் அகநிலையானவையல்ல . அவை புறநிலையானவை. அந்தப் புறநிலைமைகளையே நேர்மையுடன் தரிசிக்குமாறு நாம் வேண்டுகின்றோம்.
அகநிலைமையான கருத்தை ஏற்றுக் கொள்ளுமாறு யாரும் கோரிக்கை வைக்கவில்லை. புறநிலை உண்மைகளை புதைக்க வேண்டாமென்பதே கோரிக்கை. அத்தோடு எந்தப் பெயரும் அவர்கள் பேசுவதை, எழுதுவதை வைத்து அவர்களாகவே தேடிக் கொள்வது. யாரும் சூட்டத் தேவையில்ல. தானாகவே வரலாநு அதை செய்யும்.
//இந்த உலகில் பகுத்தறிவுடன் சிந்தித்து அதாவது வர்க்க கண்ணோட்டமின்றி பார்வை கொண்டவர் எவரும் இல்லை. பகுத்தறிவே குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்துதான் வெளிப்படும். கடவுகளையும்இ மதத்தையும் தி.க.வினர் எதிர்ப்பது போல ஒரு கம்யூனிஸ்டு வறட்டுத்தனமாக எதிர்க்க மாட்டார். இந்த இரண்டிலும் பகுத்தறிவு இருக்கிறது ஆனால் வர்க்கம் சார்ந்து வெளிப்படுகிறது.
வினவில் புலிகளைப் பற்றிய விமரிசனங்களை இந்தக் கண்ணோட்டத்தில் வைத்துத்தான் மக்களிடம் கொண்டு செல்கிறோம். இங்கே ரதி தனது அனுபவங்களை ஒரு பெண் என்ற முறையிலும்இ அகதி என்ற உண்மையிலும் பகிர்ந்து கொள்கிறார். இந்தத் தொடரின் நோக்கம் ஈழப்போராட்டத்தின் சரி தவறுகளை அரசியல் ரீதீயாக பரிசீலீக்கின்ற விசயங்களை பேசுவதற்காக அல்ல. எமது முன்னுரையில் குறிப்பிட்டது போல பாதுபாப்பான வாழக்கை வாழும் பலருக்கும் ஒரு அகதியின் துயரத்தை அனுபவத்தின் மூலம் தெரிவிப்பதே. //
கறாராகப் பார்த்தால் எல்லாமே அரசியல் தான் தோழரே. எனவே சரி தவறுகள் பேசப்பட வேண்டும். பரிசீலிக்கப்பட வேண்டும். இதை மக்களுக்கு மறுப்பதற்கு என்ன பெயர்?. சர்வதேசியத்துக்கெதிரான போக்குகளுடன் சமரசம் செய்ய முடியுமா
//அதில் கூட ரதி என்ன விதத்தில் புரிந்து கொண்டாரோ அந்த அரசியல் பார்வையின் சாயம் இருக்கும். அதில் வேறுபாடு இருந்தால் யாரும் அதை விவாதிக்கலாம். ஆனால் அதற்குள் அவர் எழுதுவதற்கு முன்னரே அவரை குழப்புவது போன்ற அல்லது எனக்கு இதுதான் வேண்டுமென்று முன்னரே கட்டளையிடுவது போன்ற கருத்துக்கள் என்ன விதத்தில் சரி எனத் தெரியவில்லை. //
இது குழப்புவதாகவோ கட்டளையிடுவதாக பார்க்கப்படுவது விவாதத்துக்கு மறுப்பு தெரிவிப்பதாகாதா?
எழுதுவதை நிறுத்து என்று யாரும் சொல்லவில்லை. எல்லாவற்றையும் நேர்மையாக தரிசிக்கும்படியான ஒரு வேண்டுகோள்.
தோழமையுடன் சிறி
தோழர் சிறி
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. புலிகளைப் பற்றிய விமர்சனங்களை எதிர்கொள்வதில் பொதுவில் மக்களிடம் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையே நீடிக்கிறது. அதே போல புலிகளை விமரிசப்பவர்களிடம் ( உங்களையோ, இராயகரனையோ, அரசியல் ரீதியாக இதை அறிந்துள்ள மற்ற தோழர்களையோ அல்ல) கூட உணர்ச்சிவசப்பட்ட மனநிலைதான் இருக்கிறது. இங்கே பின்னூட்டம் இட்டுள்ள Tsri கூட தோழர் இராயகரனை புலிகளை விமரிசப்பதற்காக அவரை இந்துராம், துக்ளக் சோ முதலானவர்களின் பட்டியலில் சேர்த்து பாராட்டுகிறார். இந்த அறியாமையை, அப்பாவித் தனத்தை என்னவென்று அழைப்பீர்கள்? இதனாலேயே இவரை நாம் கிழத்துவிடுவதில் பயனில்லை.
ஈழப்பிரச்சினையில் யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கத்தின் பண்புகளே பல முனைகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் புலிகள் மட்டுமல்ல, ஈழத்தமிழரின் பல்வேறு தரப்புகளில் இருக்கும் விசயம் தெரிந்தவர்களும் கூட இந்த சிந்தனையை கொண்டிருக்கிறார்கள். இவர்களை வர்க்க அரசியிலின் பால் அறிமுகம் செய்வதும், போராடுவதும் நடைமுறையூனாடக செய்யவேண்டிய பணி.
இங்கே நாம் வலியுறுத்த விரும்புவது புலிகளின் பால் பற்று கொண்டிருக்கும் இதயங்களை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வோம். அப்போதுதான் புலிகளின் பெயரால் ஈழம் கண்ட பின்னடைவை நாம் அவர்களுக்கு எடுத்து சொல்ல முடியும். மாறாக இதுதான் எமது நிலைப்பாடு இதை ஏற்காதவர்கள் தவறானவர்கள் என்று நமக்கு நாமே பேசிக் கொள்வதில் பயனுண்டா? இந்த விமர்சனங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு அணுகுமுறையை புரிந்து கொள்வதற்காக சொல்கிறோம்.
தோழமையுடன்
வினவு
ரதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒருவர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் பொழுது, அதில் தன்னுடைய வாழ்க்கையில் தான் சார்ந்திருந்த, பாதிக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொண்டவற்றின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அதில் தவறிருக்கும் பட்சத்தில் அதை நாம் விமர்சனமாக வைக்கவேண்டும். இதனை அவரும் சுயவிமர்சனமாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய கருத்தை திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கும். மேற்படி அவரை நாம் குழப்பினால் அவருடைய பார்வையை நமக்கானதாக திருப்புவது போல் அமைந்திடும். திரு. இராயகரன் அவர்களின் கட்டுரைகளில் கூட அவர் புலிகளினால் பாதிக்கப்பட்டதின் சாரம் இருக்கும். திரு இரயாகரன் அவர்கள் வறட்டு தனமாகவே எழுதுவார். அவர் கூற்றுகள் சரியானவைதான். ஆனால் அவர் கூறும் முறை பக்குவமாக இல்லை. அதனால்தான் அவரின் கட்டுரைகளுக்கு மறுமொழிகள் அதிக வன்முறையாக உள்ளன.
இனி இரயாகரன் அவர்கள் ஈழம் சென்று புரட்சியை ஆரம்பிப்பாரா?
நக்கல், நையண்டி, அஸ்கர் கத்திக்கொண்டிருப்பவருக்கு,
தோழர் இரயாகரனை பற்றி அரசியல் ரீதியான விமர்சனம் தான் தேவை.
அவரின் வாழ்க்கையை பற்றி கொஞ்சமாவது படித்து இருக்கிறீர்களா? குருட்டுத்தனமாக அல்ல அரசியல் ரீதியான விமர்சனத்தைதான் வினவு வைத்தார்கள். உடனே சந்திலே சிந்து பாட கிளம்பக்கூடாது.
neri,
சிங்கள பேரின வாதத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் சரியாக விமர்சிப்பவர் தோழர் ரயாகரன்.
அதை விட்டுவிட்டு ரயாகரன் வறட்டுத்தனமாக எழுதுவார் எனில் சரியாக எப்படி எழுதவேண்டும் என தாங்கள் சொன்னால் சரிதான்.
அது சரிதான் தோழரே, ஆனால் இராயகரன் எழுத்தை வைத்து யாரையாவது வென்றெடுக்க இயலுமா? தவிர அஸ்கர் நமது நண்பர்தானே அவர்மேல் ஏன் கோபம். இதுதான் இராயாவின் அனுகுமுறை, என்று வினவு விமர்சனம் செய்தது
கண்டிப்பாய் எழுத்தின் தொனி மாறித்தானிருக்கும். அவர் ஒரு புலம் பெயர் தமிழர். அவரின் எழுத்துக்கள் மிகச்சிறப்பானவையாக இருக்கவே செய்கின்றன.
வென்றெடுக்க முடியுமா முடியாதா என்பதெல்லாம் அடுத்தக்கட்டம். ரயாகரன் குறித்த மாசேவின் பதிலும் வினவின் பதிலும் அரசியல் ரீதியிலானவை .ஆனால் பல வியாதிகள் சொல்வதையே எங்கெ நீ போய் சண்டை போடு பார்க்கலாம் என்பது எப்படி இருக்கிறது? அரசியல் ரீதியிலா இருக்கிறது? எந்த ஒரு தோழரையும் மிக அதிகமாவே மதிக்கிறேன்.
ஆனால் அஸ்கரின் பதில் தோழர் ரயாகரனின் அரசியலை கொச்சை படுத்துவது போலல்லவா இருக்கிறது.
அவரின் அரசியலை நொடியில் சிறுமை படுத்துகிறது.
எங்கே நீ போய் சண்டை போடு என்பது எப்படி தெரியுமா இருக்கிறது? ஈழத்துல சண்டை போட்டுகிட்டு இருக்காங்க இங்க ஒக்காந்துகிட்டு பாசிசம்ன்னு சொல்லாத ஒரு ஆள்தான் போராடறாங்க? உனக்கு தகுதி கிடையாதென சில வியாதிகள் புலம்புவதற்கும் வேறுபாடிருக்கிறதா தோழர். கண்டிப்பாய் தவறிருந்தால் திருத்திக்கொள்கிறேன். பதில் சொல்லுங்கள்.
தோழர் கலகம் அவர்களுக்கு,
நான் தோழர் இரயாகரனின் சித்தாந்த க்ருத்துகளிலே எந்தக் குறையும் சொல்லவில்லை. அவரின் எழுத்துக்கள் மிகச்சிறப்பானவையே. ஆனால் அவை அறிவுஜீவிகளின் மட்டத்தினால் மட்டுமே புரிந்துகொள்ளப்ப்டும். அது மட்டும் போதும் என்கிறீர்களா? யாருக்காக எழுதுகிறோம்? மக்களை வென்றெடுக்காத வெறும் எழுத்துக்களினால் என்ன பயன்! தோழர்.ரயாகரனின் கட்டுரைகளையும் பு.க. வையும் படித்துப் பாருங்கள். இதனால் தோழர்.ரயாகரனை குறை சொல்வதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
ஒருவேளை எனக்கு மட்டும் தான் அவ்வாறு உள்ளதோ என்றே சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்,வினவில் கருத்து தெரிவிக்கும் மற்ற தோழர்கள் நான் கூறியதில் தவறிருந்தால் விமர்சியுங்கள் திருத்திக் கொள்கின்றேன்.
தோழர் நெறி,
உங்களுக்கு பதில் தர தயாராக இருந்தாலும் . இங்கு இவ்விவ்வாதம் கட்டுரையை தாண்டி போய்விட்டது. தேவையற்ற வியாதிகள் புகுந்து இம்சை செய்யவும் வாய்ப்பிருக்கிறது. தேவையெனில் உங்கள் மின்னஞ்சல் அதில் தெரியப்படுத்துங்கள் தொடரலாம் . கலகத்தின் மின்னஞ்சலுக்கு வாருங்கள். காரணம் .வேறு ஒரு கட்டுரை பதிவிட்ட பின்னரும் இங்கு இதை விவாதிப்பது சரியாக இருக்காதென கருதுகிறேன்.
kalagam.nation@gmail.com
வணக்கம், வினாவு தோழருக்கு
நாம் யரையும் புலி முத்திரை குத்த இங்கு வரவில்லை. விவாதிப்பவர்கள் ஈழத்தவர்கள். கடந்த காலத்தில் பல வே~த்தில், தமிழ் மக்களை இழிவுபடுத்தி ஒடுக்கியவர்கள். அவர்கள்தான் இன்று இங்கு எந்த சுயவிமர்சனமமின்றி இங்கு விவாதிக்கின்றனர். மாசே உட்பட.
இங்கு அனுபவம் கூட வர்க்க சார்பானது. குறிப்பாக சொல்லப் போனால், மக்களுக்கு எதிரானதாக அல்லது சார்பானதாக கூட அமைகின்றது. இங்கு இவர்களின் அரசியல் நோக்கு என்ன என்பதே எமது மையக் கேள்வி.
ரதி பற்றி நாம் எதையும் சொல்ல முற்படவில்லை. அவர் இன்னமும் எழுதவில்லை. மா.சே கருத்துதான் இங்கு பிரச்சனை. “மா.சே சொல்லியிருப்பது எளிய உண்மை” என்பது கூட சார்பானது. மக்களுக்கு சார்பானதாக இருந்தால் அது எளிய உண்மை. இல்லையென்றால் அது எளிய உண்மையல்ல, நஞ்சு.
“வாழ்வின் உண்மைகளுக்கு, யாரும் பொய்ப் பட்டம் கட்டமுடியாது. வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்” இங்கு மா.சே இதை மறுப்பது பக்க சார்பில்லையா? இதில் மா.சே எதோ ஒன்றை முண்டு கொடுத்து பாதுகாக்க முனைகின்றார். ஆது என்ன? ஆனால் உண்மையையல்ல. நாங்கள் இங்கு உண்மையைக் கோருகின்றோம்.
அதை நான் “இவை புலி சார்பானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்” என்று எழுதினேன். இங்கு நாம் யாரையம் புலி முத்திரை குத்தவில்லை. புலியாக சிந்தித்து, அதனுடாக அனுகினால் அதை புலி என்கின்றோம். அதுவொரு அரசியல்.
எம்முடன் தொடர்பில் உள்ள அதே மா.சேதான் இவர் என்று நாம் கருதுகின்றோம். அவர் தான் இவர் என்றால், எம் கருத்து மிகச் சரியானது. புலத்தில் இவர் தோழராக இருந்து, பின் புலி பாசிசத்தை நியாயப்படுத்தி இதன்பின் சென்றவர். அண்மையில் கூட எம்முடன் புலியாக, புலிக்காக விவாதித்தவர்.
இவர்களுக்கும் ஆயிரக்கணகான அப்பாவி புலிக்கு வேறுபாடு உண்டு. அதை நாம் மறுக்கவில்லை. அதை கருத்தில் கொண்டு தான், ரதியின் எளிய உண்மைக்காக அந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்தோம்.
‘புலிகளது தவறுகளை தெரிந்தே மறைப்பதாக எண்ணுவது சரியல்ல.” இது உண்மை. அப்படி ஆயிரகணக்கானவர்கள் உள்ளனர். “தெரிந்தே மறைப்ப”வர்கள் உள்ளனர். இவர்கள் ‘நிச்சயம் சிறுபான்மையாகத்தான் இருப்பார்கள்” உண்மை. ஆனால் இவர்கள்தான் சமூகத்தை ஆட்டிபடைக்கும் மிகவும் ஆபத்தான அறிவுத்துறையினர். இந்த வகையில் வினவிலும் உலவுகின்றனர்.
“ஈழப்போராட்டத்தில் புலிகள் தவறுகள் செய்திருப்பதாக நாம் சொல்வது வெளியே ஒட்டுமொத்தமாக ஏற்கப்பட்ட கருத்தல்ல. அப்படி ஏற்கச் செய்வதற்கு நாம் தொடர்ந்து விடாப்பிடியாக போராடுவது வேறு. மாறாக அகநிலையாக நாம் வைத்திருக்கும் கருத்தை புறத்தில் ஒருவர் ஏற்கவில்லை என்றால் உடனே அவருக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டுவது எந்த விதத்தில் சரி” இப்படிச் செய்தால் சரியில்லை. ரதியை அப்படி என்று நாம் கூற வரவில்லை. மா.செயை நாம் அப்படிக் கூறுவோம். அவரின் கடந்த கால எழுத்துகள் (வினாவில் கூட) தனிப்பட்ட ரீதியில் அவரின் அரசியல் செயல்பாட்டை நாம் அறிவோம்.
“இங்கே ரதி தனது அனுபவங்களை ஒரு பெண் என்ற முறையிலும், அகதி என்ற உண்மையிலும் பகிர்ந்து கொள்கிறார். இந்தத் தொடரின் நோக்கம் ஈழப்போராட்டத்தின் சரி தவறுகளை அரசியல் ரீதீயாக பரிசீலீக்கின்ற விசயங்களை பேசுவதற்காக அல்ல. எமது முன்னுரையில் குறிப்பிட்டது போல பாதுபாப்பான வாழக்கை வாழும் பலருக்கும் ஒரு அகதியின் துயரத்தை அனுபவத்தின் மூலம் தெரிவிப்பதே” இதை நாம் மறுக்கவில்லை. உண்மைகள் உண்மையாக எழுதும்வரை சரியானது. இல்லை என்றால், இந்த அகதி எதார்த்தம், அரசியல் போர்வையாகிவிடும். இங்கு ரதி குறித்து, இதை இந்த இடத்தில் ரதிக்கு அழுத்திக் குறிப்பிட விரும்பவில்லை. உண்மையான எந்த வாழ்வின் அனுபத்ததையும், நாம் மறக்கவில்லை.
“அதில் கூட ரதி என்ன விதத்தில் புரிந்து கொண்டாரோ அந்த அரசியல் பார்வையின் சாயம் இருக்கும்” சரியான வாதம் தான். அதை நாம் இங்கு எச்சரிக்கையுடன் விவாதிக்கின்றோம். “அரசியல் பார்வையின் சாயம்” அது மக்கள் விரோதத் தன்மையுடன் இருக்கும். அதைத்தான் நாம் “வாழ்வின் உண்மைகளுக்கு, யாரும் பொய்ப் பட்டம் கட்டமுடியாது. வாழ்வின் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்” என்றுதான் எழுதினோம். இதில் என்ன தவறு.
இதில் எங்கே கட்டளை உண்டு. உண்மைகளை புதைப்பது இன்னமும் ஈழத்தவனின் எழுத்து முறையாக வாழ்வுமுறையாக உள்ளவரை, நாம் அதிPதமான எச்சரிக்கையுடன் ஒவ்வொன்றையும் அனுகுகின்றோம்.
//ரதி, நீங்கள் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்//
தோழர் மாசேவுக்கு மேற்கண்டவாறு tamilcircle சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?
இது வரையில் வினவில் வந்த கருத்துக்கள் தெளிவானவை .
சகோதரி ரதி அவர்கள் கம்யூனி்சவாதி அல்ல அவர் அகதியாய் துயரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர் அந்த வகையில் அவர் தனது
அகதி வாழ்வின் இன்னல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்வது நமக்கு நல்லவாய்ப்பு, தோழர் ரயாகரன் அவர்களும் ஈழத்தில் வாழ்ந்தவர் புலிகளின்
உண்மையான அணுகுமுறையை தெரிந்தவர் [நாம் எப்படி போலி கம்யூனிட்டுகளை பற்றி தெரிந்து கொண்டுள்ளோமோ அப்படி] ,ஆனால் தமிழகத்தின் நிலை வேறு நமக்கு புலிகள் புனிதர்களாக மட்டும் சித்தரிக்கப்பட்டார்கள் எனவே ஒட்டுமொத்தமாக குழப்பிவிடக்கூடாது,
என்பதற்காகதான் //ரதி, நீங்கள் உண்மைகளை பக்க சார்பின்றி எழுத வாழ்த்துகள்//,,,எனவே சகோதரி ரதி தனது அனுபவங்களை அப்படியே எழுத வேண்டும் கருத்துக்களை தனது அனுபவங்கள் மூலமாக சீர்தூக்கி பார்த்து எழுதவேண்டும் என்பதற்காகதான் tamilcircle ன் கருத்து, இதில் முரண்படுவது நியாயமாகுமா? //நடுநிலை என்று ஒன்று உண்டா?//
ஆம் கண்டிப்பாக உண்டு . அதற்கு மற்றெரு பெயர் நியாயம். தோழரின்[மாசே] கருத்து குழப்பத்தை விளைவித்து விட்டது என்று கருதுகிறேன்,
வினவுக்கு
பொதுவாக இங்கே போலி கம்யூனிட்டுகளுக்கு ஆதரவாக யாரவது வந்தால்
நமக்கு நியாயமான கோபம் வருகிறது அது சரியானதே அது போன்றுதான் tamilcircleம் தன் அனுபவத்தில் விமர்சிக்கிறார் இதை அவர் //எனக்கு இதுதான் வேண்டுமென்று முன்னரே கட்டளையிடுவது போன்ற கருத்துக்கள் என்ன விதத்தில் சரி எனத் தெரியவில்லை.// என்று தாங்கள் குற்றம் சாட்டுவதை சரியானதா?//தமிழகத்திலும் புலிகளை எதார்த்தமாக ஆதரிக்கும் இளைஞர்களே அதிகம். இவர்களெல்லாம் மோசடிப் பேர்வழிகளல்ல. ஈழப்போராட்டத்தில் புலிகள் தவறுகள் செய்திருப்பதாக நாம் சொல்வது வெளியே ஒட்டுமொத்தமாக ஏற்கப்பட்ட கருத்தல்ல. அப்படி ஏற்கச் செய்வதற்கு நாம் தொடர்ந்து விடாப்பிடியாக போராடுவது வேறு//
இது100% உணமைதான் அதற்காக tamilcircle-ம் தமிழகத்திற்கேற்ப கருத்தை பதிவிட வேண்டும் என்று நாம் சொல்ல முடியுமா? இல்லை நாம்தான் tamilcircleன் சூழலில் இருந்து எழுத வேண்டும் என்பதும் நியாயமாகுமா.
தமிழரங்கம் பதிவு செய்த {பழைய / புதிய}கருத்துக்களை படித்து பாருங்கள் அவர் சொன்ன ஒரே வார்த்தையை பிடித்துக்கொண்டு விமர்சிப்பது சரியல்ல என்பது எனது கருத்து , புதிய நபராக, அறிமுகம் இல்லாதவராக இருந்தால் விமர்சிப்பது சரி ,ஆனால் சாதாரண விசயத்திற்கு விமர்சனம் செய்து வாயை கிளறுவது சரியல்ல.
தோழர் விடுதலை,
மா.சேயின் கருத்து எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. உங்கள் விளக்கம்தான் குழப்பம் உங்களிடம் இருப்பதைக் காட்டுகிறது.
போலிக் கம்யூனிஸ்டுகளை நாம் தமிழகத்தில் நன்கு அறிந்துள்தைப் போல தோழர் இராயகரன் புலிகளை நன்கு அறிந்தவர் என்ற முறையில் இருவரும் இரு களத்தில் சரியாக செயல்படுவதாகவும். நாம் புலிகளைப்பற்றி விமர்சனம செய்வதற்கும், தோழர் இரயாகரன் விமர்சனம் செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு என்று நீங்கள் கருதுவது மிகவும் தவறு.
முதலில் ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருவரிடமும் புலிகளைப் பற்றிய கேள்விக்கிடமற்ற ஆதரவு இயல்பாக இருப்பதை தோழர் இராயகரனே இங்கு தெரிவித்திருக்கிறார். அடுத்து ஒரு கம்யூனிஸ்டு ஒரு பிரச்சினையப் பற்றி பேசவேண்டுமென்றால் அந்த நாட்டில் வாழ்ந்தால்தான் சரியாக பேசமுடியும் என்பது அனுபவவாதமே அன்றி மார்க்சிய லெனினிய அணுகுமுறை அல்ல.ஒரு நாட்டில் நாம் வாழ முடியாமல் போனால் நமக்கு சில விவரங்கள் தெரியாமல் போகலாம். ஆனால் நமது விமர்சனம் விவரங்களிலிருந்து உண்மையை வர்க்க கண்ணோட்டம் கொண்டு கண்டுபிடிப்பதுதான் என்பதால் இந்த வாழ்க்கை அனுபவம் கம்யூனிஸ்டுகளுக்கு பொதுவில்பொருந்தாது. இந்த கருத்தையும் அந்த நாட்டின் மையமான ஜீவாதாரமானஅரசியல் பிரச்சினைகளுக்கு மட்டும்தான் சொல்கிறோம். இதையே இரண்டாம் பட்ச மூன்றாம் பட்ச வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக சொல்லவில்லை.
புலிகளைப் பற்றி மட்டுமல்ல, ஈழப்போராட்டம் இந்திய உளவுத்துறையின் ஊடாக ஊழல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து நமது தோழர்கள் இதை விமரிசனம் செய்துள்ளார்கள். இதை தோழர் இராயகரனும் அறிவார்.
அடுத்து போலிகம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்தால் நம்க்கு கோபம் வருகிறது என்று நீங்கள் சொல்வதையும் அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்குதான் பொருத்த முடியும். மாறாக அந்த கட்சியில் அரசியல் தெரியாத அணிகளிடம் பேசும் போது நாம் பொறுமையாகத்தான் பேசி புரியவைக்க முயலவேண்டும். போலிக் கம்யூனிஸ்டுகள் என்றில்லை, மாற்று கருத்து உள்ள பலரையும் அவர்களது வர்க்கம், பின்புலம் முதலியனவற்றை கணக்கில் கொண்டுதான் விவாதிப்பது சரியாக இருக்கும். எல்லோருக்கும் ஒரே அணுகுமுறையை வைத்தால் நாம் பேசுவதைக் கேட்பதற்கு காதுகள் இருக்காது. நம் காதே நமது குரலை கேட்பதாக ஆகிவிடும்.
அடுத்து இந்த உலகில் நடுநிலை என ஒன்று இல்லை. எல்லாம் வர்க்கம் சார்ந்துதான் இருக்கும். அதில் ஒடுக்கப்படும் மக்களுக்கான வர்க்கங்களது கருத்தும் ஒடுக்கப்படும் வர்க்கங்களது கருத்து என இரண்டுதான் இருக்கும். இதில் நடுநிலைமைக்கு இடமேது. அதே சமயம் இந்த இரண்டின் சாயல்களைக் கொண்டு எது எந்தக் கருத்து என புரியாமல் இருப்பதும்ம நடக்கும். அதைக் க்ண்டுபிடிப்பதுதான் நமது வேலை. அதில் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டால்தான் நமது விவாதம வறட்டுவாதமாக மாறிவிடுகிறது.
தோழமையுடன்
வினவு
தோழர் வினவு,
குழப்பம் விளைவிப்பதற்காக நான் என் கருத்தை பதிவு செய்யவில்லை,//போலிக் கம்யூனிஸ்டுகளை நாம் தமிழகத்தில் நன்கு அறிந்துள்தைப் போல தோழர் இராயகரன் புலிகளை நன்கு அறிந்தவர் என்ற முறையில் இருவரும் இரு களத்தில் சரியாக செயல்படுவதாகவும். நாம் புலிகளைப்பற்றி விமர்சனம செய்வதற்கும், தோழர் இரயாகரன் விமர்சனம் செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு என்று நீங்கள் கருதுவது மிகவும் தவறு.//
கண்டிப்பாக நான் அப்படி சொல்லவில்லை, புலிகளை பற்றிய நம்முடைய கருத்தும் தோழர் இரயாகரன் கருத்தும் ஒன்றாகவே இருக்கிறது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் மக்களிடம் இதை கொண்டு போகும் அணுகுமுறை
மாறுபடுகிறது, அவருக்கு இந்திய மேலாதிக்கம், ஏகாதிபத்தியம் இவற்றோடு புலி பாசிசமும் பிரதானம் ஆனால் இங்கு அப்படி அல்ல
ஏகாதிபத்தியம்,போலிகள், பார்ப்பனியம்…. ஒரு நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்டுக்கு யார் எதிரியோ அதுதான் சர்வதேச கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரி என்பதில் மாற்று கருத்து இல்லை ஆனால் பிரதான எதிரிகள் மாறுபடுகிறான் இல்லையா? அதை வைத்துதான் தமிழகத்து நிலைக்கு ஏற்றார்போல் தோழர் இரயாகரன் எழுதமுடியாது என்று கூறினேன்,
நடுநிலைமை என்பதை நான் அப்படியே புரிந்தகொள்ளவில்லை நடுநிலைமை
என்றால் நியாயத்தின் பக்கம் என்றே கருதினேன்,
நான் ஒரு காலத்தில் புலி ஆதரவாளன் தோழர் இரயாகரன் ,பு்.ஐ போன்றவைதான் என்னை தெளிவுபடுத்தியது அதிலும் மகஇக தோழர்கள் மூலமாக கிடைத்த தோழர் இரயாகரன் நூல்கள்தான் உண்மையை கூறியது,
மேலும் தோழர் இரயாகரனின் “தேசியம் எப்போதும் முதலாளித்துவ கோரிக்கையே தவிர பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல” போன்ற அற்புதமான
படைப்புகள் எழுதிய தோழரை தேவையில்லாமல் சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம்
வாயை கிளறுவது தேவையற்றது என்று நினைக்கிறேன்,
பக்கசார்பின்றி எழுதுங்கள் என்பது எப்படி கட்டளையிடுவதாகும்,
தோழர் வினவு,
என்னுடைய கருத்தை மட்டுமே நான் பதிவு செய்துள்ளேன்
இதற்கும் தாங்கள் பதில் சொல்லவேண்டிய தேவை இல்லை,
கட்டுரையை சார்ந்த விவாதங்கள் மட்டுமே தொடருவதே சரியானதாக இருக்கும்,
தங்களை விட எமக்கு அரசியல் அறிவு குறைவாககூட இருக்கலாம்
அதனால் தங்களுக்கு சிரமம் எதாவது ஏற்படுத்தியிருக்கலாம், அதற்கு
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி தோழர்
விடுதலை
//[நாம் எப்படி போலி கம்யூனிட்டுகளை பற்றி தெரிந்து கொண்டுள்ளோமோ அப்படி]//
ஆர்.
எஸ்.எஸ். பற்றி
தெரிந்து கொண்டீர்களா? ஈழத்தில் அதற்கு மற்றொரு பெயர் புலிகள்.
தோழர் இராயகரன்,
நீங்கள் குறிப்பிடும் நபர் அல்ல இந்த மா.சே. இவர் தமிழ்நாட்டில் இருக்கும் ம.க.,இ.க ஆதரவாளர். வினவின் பல விவாதங்களில் அப்படித்தான் கலந்து கொண்டிருக்கிறார். இவரை நீங்கள் தவறாக வேறுயாரோ என எண்ணிக்கொண்டு விமர்சனம் செய்கிறீர்கள்.
நமக்கு மாறான கருத்து சொல்லப்படும்போது அதை காது கொடுத்து கேட்பதும், அதற்கு பொறுமையாக பதிலிளிப்பதும் சரியாக இருக்கும். நீங்கள் அப்படி கருத்து வரும்போதே அவர் இந்த வகையறா என அவசரப்பட்டு முடிவை அறிவித்துவிடுகிறீர்கள். இது எந்த விவாதத்தையும் ஜீவிக்க விடாமல்பட்டென்று மூடிவிடும். இதை நீங்கள் அதிக எச்சரிக்கை என நியாயப்படுத்துகிறீர்கள். இப்படிப்பட்ட சுயபாதுகாப்பு எதை சாதிக்கப்போகிறது? மாற்று கருத்துள்ளவர்களை வென்றெடுப்பதற்காகத்தான் நமது எச்சரிக்கை பயன்படவேண்டும். மாறாக எந்த கருத்து வந்தாலும் இதுதான் எனது கருத்து என சுயகவசம் போன்று அந்த எச்சரிக்கை இருப்பதில் பயனில்லை.
இத்தனை காலமும் அரசியல் ரீதியாக ஈழத்திற்காக துளிக்கூட சலிப்போ, விரக்தியோ இன்றி இன்னமும் தீவிர செயல்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற புரிதலோடும், ஆதங்கத்தோடும், தோழமையோடும்தான் இந்த விமரிசனங்களை முன்வைக்கிறோம். வரிக்கு வரி என்ன தவறு என்று பதிலளிப்பதற்கு பதில் ஒட்டுமொத்தமாக நாங்கள் வைக்கும் விமரிசனங்களின் மையப்பிரச்சினைக்கு பதிலளித்தால் வசதியாக இருக்கும்.
நம்மிடம் இருப்பது கருத்துரீதியான வேறுபாடுகளல்ல, ஒத்த கருத்தை எப்படி சொல்லவேண்டும் என்ற அணுகுமுறை பற்றிய பிரச்சினைதான் என்பது எமது கருத்து.
தோழமையுடன்
வினவு
என் எழுத்து முயற்சிக்கு ஆதரவும் வாழ்த்துகளும் சொல்லி என்னை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என் நன்றிகள்.
நான் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். ஆனால், மறந்துவிட்டேன். என் அனுபவத்தொடரில் அரசியல் அல்லது புலிகள் பற்றியோ எழுதுவது என் நோக்கம் கிடையாது. அரசியல் பேசும் அளவுக்கு எனக்கு அதில் ஞானம் கிடையாது. புலிகள் பற்றிய கருத்துகள் என் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. அதை யார் மீதும் திணிக்கும் எண்ணமும் எனக்கு கிடையாது. எழுதலாம் என்ற முடிவெடுத்தபின் நான் தீர்மானமாக நினைத்துக்கொண்டேன், அரசியல் மற்றும் புலிகளை பற்றி பேசுவதில்லை என்று. இங்கே ஆரம்பத்தில் நான் சொன்னது என் மனக்குமுறலகள் மட்டுமே.
நான் என் அனுபவத்தொடரை எழுதுவதன் மூலம் எங்கள் போரியல் வாழ்வின் சிரமங்களையும், அகதிவாழ்வின் அவலங்களையும், சாவோடு போராடி நாம் செத்து செத்து பிழைத்ததையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதுதான்.
இங்கே மா_சே சொன்னது போல் என் அனுபவங்களை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அதன் பிரதிபலிப்பாகத்தான் என்னால் சொல்லமுடியும். ஒருவேளை நான் விவாவதத்திற்குரிய விடயங்களை சொன்னால் தாராளமாக விவாதிக்கலாமே.
நன்றிகளுடன்
ரதி
ரதி சரியான அனுகுமுறை. வாழ்த்துக்கள். வினவு உங்கள் பணி சிறப்பானது வாழ்த்துக்கள்
ரதி அவர்களுக்கு,
அடக்குமுறைகளும், போரும் ஏற்படுத்துகிற வலிகள் ரணமானவை. தன்னளவில் நினைவலைகளில் எழும் உணர்வுகள் இரக்கத்தை தான் உண்டுபண்ணும். இப்படி பொது அரங்கில் எழுதுவது, விவாதிப்பது,
பலரையும் தட்டி எழுப்பும். உங்களுக்கும் ஒரு உத்வேகத்தைத் தரும். உற்சாகாமாய் தொடருங்கள்.
நீங்களே ஏற்கனவே பல பதிவுகள் (பத்தி பத்தியாக) பின்னூட்டங்களில் எழுதியிருக்கிறீர்கள். பதிவாக எழுதுவது முதல்முறை என்று வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளலாம்.
Rathi,
Your article here is very interesting. please continue writing your experiences in this regard.
my best wishes to you all the time. Please, please continue writing until Tamil Eelam is installed very soon!!!
வணக்கம் தோழர்
1.மா.செ ம.க.இ.க த்தின் அமைப்பில் நேரடி தொடர்ப்பில் உள்ள தோழர் என்றால், எம்முடன் தொடர்பில் உள்ளவருடாக பார்த்த பார்வை தவறானது.
கருத்தின் தன்மையில் உள்ள ஒற்றுமை, பெயர் எம்மை இப்படி பார்க்கவைத்தது. அந்த வகையில் அவர் வெளியிட கருத்தை இந்த கட்டுரையின் பின்னோட்டத்தில் பார்க்க. அ0தை இதில் இணைத்துள்;ளோம்.
எங்களுக்குள் இருப்பதும் ஒரு குட்டிப் புலிதான்…
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5403:2009-03-08-07-26-31&catid=295:2009-02-27-20-39-07&Itemid=50
2.மா.செ எம் கருத்து தொடர்பாக சொன்னவை தவறானது, மிகக் குறுகிய ஒரு பார்வை.
3.இலங்கையில் அகதி வாழ்வு பற்றி அனுபவங்கள் ஒரு தலைபட்சமானதல்ல. அதாவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல. 20 வருடத்துக்கு முன் புலிகள் எல்லாவற்றையும் புடுங்கி துரத்தபட்ட முஸ்லீம் மக்களுக்கும் உண்டு. அதே போல் புலிகளால் துன்புறுத்தப்பட்ட மக்களின் துயரமும், இந்த அகதி வாழ்வுடன் வேர்ந்துள்ளது. ரதியின் எல்லாக் குறிப்புகளும் மீளப் படிக்கின்றோம்.
4.”இங்கே நாம் வலியுறுத்த விரும்புவது புலிகளின் பால் பற்று கொண்டிருக்கும் இதயங்களை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வோம். அப்போதுதான் புலிகளின் பெயரால் ஈழம் கண்ட பின்னடைவை நாம் அவர்களுக்கு எடுத்து சொல்ல முடியும். மாறாக இதுதான் எமது நிலைப்பாடு இதை ஏற்காதவர்கள் தவறானவர்கள் என்று நமக்கு நாமே பேசிக் கொள்வதில் பயனுண்டா? இந்த விமர்சனங்கள் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஒரு அணுகுமுறையை புரிந்து கொள்வதற்காக சொல்கிறோம்.”
இந்த வகையில் தொடர்ந்து இந்த விவாதத்தில் இருந்து நாம் விலகிக்கொள்வது நல்லதாகப் பாடுகின்றது.
நீங்கள் புலியுடன் போய் புலியை திருத்த முனைகின்றீர்கள். நாங்கள் அதை எதிர்த்து அம்பலப்படுத்திதான் இதைச் செய்ய முடியும் என்று கருதுகின்றோம். உங்கள் வழி தமிழ் நட்டுக்கு பொருந்தலாம். எமக்கு பொருந்தது.
//நீங்கள் புலியுடன் போய் புலியை திருத்த முனைகின்றீர்கள்.//
ரதிகள்
வினவுகளை
திருத்தி புலிகளாக மாற்ற முனைகின்றனர். இது எங்கே போய் முடிகிறது பார்ப்போம்.
சகோதரி ரதிக்கு…. என் வாழ்த்துக்கள்… அன்று எட்ட நின்று பார்த்தவர்கள் இதோ இன்று உங்களுக்கு ஆதரவாக…. “எல்லைகள் அற்றவன் தமிழன்”
சகோதரி ரதி அவர்களுக்கு வணக்கம்.
ஈழத்து மக்களின் இந்த நிலைமைக்கு தமிழ்நாட்டு மக்களும் ஒரு காரணம் என்பதால் முதலில் உங்கள் பாதம் தொட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் (மக்கள் சாகும் போது அதைப் பார்த்து மௌனமாக இருப்பதும் அவர்களுக்கு இழைக்கும் துரோகமே). உங்களின் நினைவுகளை தொடர்ந்து எழுதுங்கள். ஈழத்தில் என்ன நடக்கிறது என்ன நடந்தது என்று பெரும்பாலான தமிழக மக்கள் அறிந்திருக்கவே இல்லை. ஈழ மக்களின் நிலைமையை வெளி உலகிற்கு எடுத்துரைக்க நீங்கள் எடுத்த இந்த முயற்சிக்கு உங்களுக்கும் அதற்கு தளமாக விளங்கும் வினவிற்கும் பாராட்டுக்கள்.