Friday, December 6, 2024
முகப்புசெய்திகுரங்கிலிருந்து பிறந்தவன் - பாகம் 1

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 1

-

நண்பர்களே,

வினவின் விவாதங்களில் உங்களுக்கு அறிமுகமான நண்பர் வித்தகன் இங்கே மதங்களைப் பற்றி ஒரு குறுந்தொடர் எழுதுகிறார். இத்தொடரில் அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால்.

– முதல் பகுத்தறிவாளனும் முதல் மத குருவும்
– மனித இனத்தின் அடிப்படைக் கேள்விகள்
– உலக வரலாற்றில் மனித இனத்தின் (மிகச் சிறிய) பங்கு
– மனித இனத்தைப் பற்றிய மதவாதிகளின் தவறான பிரச்சாரங்களும் அதனால் நிகழ்ந்த வரலாற்றுக் குற்றங்களும்
– ஆப்பிரஹாம் வழி வந்த மதங்களும் பல தெய்வ வழிபாட்டு மதங்களுக்கு இணையான வரலாற்றுப் பிழைகளே
– மதம் ஏன் மனிதனுக்கு வேண்டும் (அல்லது ஏன் வேண்டாம்)?

முதலிய விசயங்களை விவாதிக்கிறார். ஓராண்டு நிறைவில் அடுத்த எழுத்தாளரை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறோம். வித்தகனை உற்சாகப்படுத்துங்கள், கேள்விகளால் விவாதியுங்கள். நன்றி!

நட்புடன்
வினவு

 

குரங்கிலிருந்து பிறந்தவன்

ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு நான் அறிஞன் இல்லை. தத்துவ விசாரணை செய்யும் அளவுக்கு சிந்தனாவாதியும் இல்லை. கண்டது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது எல்லாவற்றின் கலவைதான் இந்தக் கட்டுரை.
வித்தகன்

குரங்கிலிருந்து பிறந்தவன் – பாகம் 1

காலம்: சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்னால்
இடம்: தமிழ்நாடு தேனி மாவட்டம் மலைப்பகுதி, ஆஸ்திரேலியக் கடற்கரை, மத்திய ஆப்பிரிக்கக் காடு, வட அமெரிக்கப் புல்வெளி, டைகரிஸ் நதி ஓரம் – எல்லா இடங்களிலும் பல முறை நடந்தது இது

கதாநாயகன் வேட்டை முடிந்து குகைக்குத் திரும்பும் போது மாலை வெளிச்சம் மங்க ஆரம்பித்து விட்டது. மூட்டி வைத்த தீயின் முன் அமர்ந்திருந்த சக மனிதர்கள் மான்களையும், மாடுகளையும், குதிரைகளையும், தோலுரித்துத் தீயிலிட்டுக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சிறு குரங்குகளைத் துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். வயது வந்த பெண்களும் ஆண்களும் அவர்கள் மார்புகளும் ஆண்குறிகளும் எல்லோர் முன்னாலும் காற்றில் ஆடிக்கொண்டு இருக்க அதற்காக வெட்கப் பட்டு மூடாமல் அருகருகே அமர்ந்திருந்தனர். சாப்பிட்ட பிறகு கலவி செய்வது மட்டும் தானே வேலையே! மூடி வைத்தால் யாருக்கு என்ன இருக்கென்று எப்படித் தெரியும்?

ஆனால் உண்பது, உடலுறவு கொள்வது என்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறும் முன்னதாக அவர்களுக்கு வேண்டிய இன்னோரு சிறு தேவை, நடுநாயமாக உட்கார்ந்திருந்த அந்தப் பெருங்கிழவன் சொல்லும் கதை. இன்றும் எல்லோரும் அவனைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ள கிழவன் தன்னிடமிருந்த காட்டுப் புல்லாங்குழலை இடையிடையே ஊதியபடியே பேச ஆரம்பித்தான்.

காலம் காலமாகக்கேட்டு வரும் பழங் கதைதான். ஆனாலும் தீயில் வேகும் விலங்குகள் தயாராகும் வரை, கிழவன் தாடியைத் தடவியபடி வானில் ஒலித்த பேரிடி, மலையை மூழ்கடித்த பெரு வெள்ளம், பத்து தலை கொண்ட நாகப் பாம்பு, அதை வீழ்த்திய மாவீரன் – என்று சொல்லிக் கொண்டே போக கூட்டம் முதல் முறை கேட்பது போல் திறந்த வாய் மூடாமல் கேட்டது.

கிழவன் சமர்த்தன். மழை வந்தால் அதற்கேற்றாற் போல் ஒரு கதை. அடுத்த ஊரிலிருப்பவர்கள் சண்டையிட வந்தால் வேறு கதை. குழந்தை இறந்தால் ஒரு கதை. பிள்ளை உருவாக்க முடியாதவனுக்கு விறைப்பு வர ஒரு கதை. சிரிக்கவும் அழவும் வேறு வேறு கதைகள். எல்லாமே அவனுக்கு அத்துப் படி. இந்தக் கதை சொல்வதற்குப் பரிசாக, வயதான காரணத்தால் வேட்டையாட முடியாத அவன் தின்ன சம பங்கு மான் கறியும், தினசரி அவன் புணர ஒரு பெண்ணும் தருவது ஊர் வழக்கம். அவனது எண்ணற்ற பிள்ளைகளில் ஒருவன் கிழவன் இறந்த பின் கதை சொல்ல இப்போதே தயாராகி வருகிறான்.

வேட்டையை முடித்து வந்த கதாநாயகனுக்குக் கதையில் மனம் ஈடுபடவில்லை. தனக்கு 20 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொடுத்துள்ள ஏழெட்டு பெண்மணிகளிடமோ அல்லது வேறு ஒரு பெண்ணிடமோ செல்லவும் மனம் நாடவில்லை. பசியும் எடுக்கவில்லை. காரணம் அவன் மனதை அரிக்கும் ஒரு கேள்விதான். அதை எல்லாம் தெரிந்த அந்தக் கிழவனிடமே கேட்பது என்று முடிவு செய்தான். தன் தோளில் இருந்த மானின் உடலை இறக்கி வைத்து விட்டு சத்தமாகக் கேட்டான்.

“கிழவா! எனக்கு ஒண்ணு தெரியணுமே..”

“இதென்னடாது வம்பாப் போச்சு! 20 பிள்ள பெத்தும் ஒனக்கு சந்தேகம் தீரலியா?”

கூட்டம் சிரித்தது. ஆனால் அவன் அதில் கவனம் சிதறாமல் கேள்வியைக் கேட்டான்.

“ஏன் வெளிச்சமா இருக்கு, அப்புறம் இருட்டு வருது, திரும்பவும் வெளிச்சம் வருது?”

கிழவன் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை. கூட்டமும் எதிர் பார்க்கவில்லையென்பது அவர்கள் சிரிப்பை நிறுத்தியதில் புரிந்தது. கூட்டம் கிழவன் பக்கம் பார்வையைத் திருப்பியதில் அவனுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதும் புரிந்தது.

“என்ன கேக்குற?”

“தூங்கி எந்திரிக்கும் போது வெளிச்சமா இருக்கு, அப்பறமா திரும்ப இருட்டுது, திரும்பத் தூங்கி எந்திரிச்சதும் வெளிச்சமா இருக்கே. அது ஏன்?”

கிழவன் தன் வாழ்நாளில் “தெரியாது” என்று சொன்னதே கிடையாது. அப்படிச் சொல்லி விட்டால் தனக்கென்று இருக்கும் சிறப்பான இடம் போய்விடும் என்று அவனுக்குத் தெரியும்.

“அடப் போடா… இதெல்லாம் ஒரு கேள்வியா…. சூரியன் தொடர்ந்து இருந்துக் கிட்டே இருந்தா நாமெல்லாம் எப்பத் தூங்குறது? அதான் சாமி நம்ம மேல ஒரு பெரிய போர்வையப் போட்டு போர்த்தி விடுறாரு. இருட்டு வருது. நீ வேணுங்கிற அளவு தூங்கினதும் போர்வைய எடுத்திடறாரு. வெளிச்சம் வந்திடுது”

“ஆனா இருட்டின பெறகு மேல பாத்தா ஏதோ சின்ன சின்ன புள்ளியா நெறய வருதே! அப்பறம் பெரிசா வட்டமா ஒண்ணும் வருதே!”

“அதெல்லாம் போர்வைல இருக்குற ஓட்டைடா. இது கூடப் புரியலயா?”

கூட்டம் சள சளவென்று ஆமோதிக்க கதாநாயகனுக்கு மீண்டும் ஒரு முறை பேச வாய்ப்பே கிடைக்கவில்லை.

மெல்ல கூட்டத்திலிருந்து விலகி நடந்தான். மூட்டிய தீயின் வெளிச்சம் தீர்ந்து, காட்டின் இருள் துவங்கும் ஓரத்திற்கு வந்து தரையில் படுத்தான். வானத்தைப் பார்த்தான். தூரத்தில் கிழவன் சொல்லிக் கொண்டிருந்த கதைக்கும் அவன் கண்ணில் படும் காட்சிகளுக்கும் தொடர்பு இல்லையென்பது மெல்லத் தெரிந்தது.

இயல்பாகவே அவனுக்குள் கேள்விகள் தோன்றுவது உண்டு.

சில சமயம் ஏன் மேலிருந்து தண்ணீர் கொட்டுகிறது?
ஏன் ஆறுகள் திடீரென பொங்குகின்றன?
தூரத்து மலையிலிருந்து ஏன் நெருப்புக் குழம்பாக வடிகிறது?
தலை முடி ஏன் வெளுக்கிறது? தோல் ஏன் சுருங்குகிறது?
உடனிருப்பவர்கள் ஏன் திடீரென கண்மூடிப் படுக்கிறார்கள்? அதன் பின் எழவே மாட்டேனென்கிறார்கள்?

சாவு என்றால் என்ன? செத்த பிறகு அவர்கள் போகும் அதே இடத்திற்குத்தானா நான் கொல்லும் மானும் மாடும் போகின்றன?

கதாநாயகனுக்கு தலை வலித்தது.

அதையெல்லாம் விடு. இன்றைய கேள்வியை மட்டும் யோசி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

மேலே தெரியும் இருட்டு கருப்புப் போர்வையா? இவ்வளவு பெரிய போர்வை எங்கிருந்து வருகிறது? போர்வைக்கு வெளியில் என்ன இருக்கிறது?

சாமி என்பவர்தான் போர்த்தி விடுகிறாரா? சாமி என்பவர் யார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு வேண்டாத வேலை?

இந்த ஊரையும் மக்களையும் உருவாக்கி அவர் என்ன சாதிக்கிறார்?அவரது ஊர் என்ன? அவரை உருவாக்கியது இன்னும் ஒரு சாமியா? அந்த சாமி ஏன் இந்த சாமியைப் படைத்தார்?

இப்படிப் போயிக் கொண்டே இருந்தால் எதுதான் ஆரம்பப் புள்ளி? அந்த ஆரம்பப் புள்ளி ஏன் தோன்றியது?

இதை எல்லாம் கிழவனிடம் கேட்டுப் பயனில்லை.

கடவுள் என்பவரைப் பற்றி எதுவும் கேள்வி கேட்கக் கூடாது. கேள்வி கேட்பவர்கள் கெட்டவர்கள் என்று கிழவன் சொல்லியிருக்கிறான். நல்லவனாக வாழ்ந்து கடவுளை வணங்குபவனுக்குதான் நல்ல மான் கறியும், தினசரி புணரப் புதுப் புதுப் பெண்களும் கிடைக்கும் – கிழவனுக்குக் கிடைப்பது போல. கடவுளை மதிக்காத கெட்டவர்களை புலி தின்னும். புதை குழி விழுங்கும். செத்தபின் கூட அவர்களுக்கு தண்டனை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் கேள்விகள்.

கெட்டவன் நடந்து கொள்வது தவறென்றால் அவன் ஏன் கடவுளால் படைக்கப் படுகிறான்?
கெட்டதே நடக்காமல் கடவுளால் தடுக்க முடியாதா?
முடியாதென்றால் அவர் எல்லாம் வல்லவர் இல்லையே!

கெட்டதைத் தடுக்க முடிந்தும் தடுக்காமல் இருக்கிறாரா?
அப்போது அவரும் கெட்டவர் ஆகி விடுகிறாரே!

அவரால் தடுக்க முடியும், தடுக்க விருப்பமும் உள்ளது என்றால் ஏன் கெட்டது நடக்கிறது?
அல்லது கெட்டதை அவரால் தடுக்கவும் முடியாது, அவருக்கு அதைத் தடுக்கும் விருப்பமும் இல்லை என்றால் அவர் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?

கதாநாயகனுக்கு தலைவலி அதிகமாகி விட்டது.

கதாநாயகனுக்குத் தெரியாத இன்னும் ஒரு உண்மை. இதே கேள்விகள் இந்தப் பூமிப் பந்தில் பல இடங்களில் பல நாயகர்களுக்கு எழுந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கிழவனும் இருந்தான்.

தொடரும்

நன்றி: எபிகியூரஸ், கார்ல் சாகன், ரிச்சர்ட் டாகின்ஸ், பி.டி. ஸ்ரீநிவாச அய்யங்கார், பில் ப்ரைசன், ஈ.வே.ராமசாமி.

  1. குரங்கிலிருந்து பிறந்தவன்…

    ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு நான் அறிஞன் இல்லை. தத்துவ விசாரணை செய்யும் அளவுக்கு சிந்தனாவாதியும் இல்லை. கண்டது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது எல்லாவற்றின் கலவைதான் இந்தக் கட்டுரை. https://www.vinavu.com/2009/07/24/vithagan/trackback/

  2. வாழ்த்துக்கள் வித்தகன், பல பேருக்கு LKG லேருந்துதான் பாடம் எடுக்க வேண்டியிருக்கு, பூனைக்கு நீங்களாவது மணி கட்டினீங்களே ——யப்பா நாஞ்சொல்றது நெசமான மணி – பெல்லு 🙂 —–

  3. வாழ்த்துகள்.
    என் வேலை குறைந்துவிட்ட மகிழ்ச்சி!
    நிறையவும் விரிவாகவும் எழுதுங்கள்

    • வினவின் இத்தகைய முயற்சிகள் பாராட்டத்தக்கது
      வாழத்துக்கள் வித்தகன்

      டாக்டர் உங்கள் வேலை குறையவில்லை நீங்களும் தொடர்ந்து எழுதவேண்டும்
      உங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்,

  4. வித்தகன், நல்ல முயற்சி! வாழ்த்துக்கள், வினவு நல்ல வேலை நீங்கள் செய்வது, கும்மி மொக்கை பதிவர்கள் மத்தியில் நீங்கள் புதியவர்களை எழுதத்தூண்டுவது நல்ல பணி…

  5. வித்தகனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கதையில் சில விசயங்களை வித்தகன் கவனமெடுத்தால் சிறப்பாக இருக்கும்.

    #1) ஆணிய சிந்தனையில் எழுதப்பட்டுள்ளது போன்று உள்ளது.

    எ-கா:
    //தினசரி புணரப் புதுப் புதுப் பெண்களும் கிடைக்கும் – கிழவனுக்குக் கிடைப்பது போல.//

    கதையில் பெண்களை பண்டம் போல சித்தரிக்கும் சொத்துடைமை சமூக உணர்வு முன் நிற்கிறது. கதை நடைபெறும் காலத்தில் அவ்வாறன் சிந்தனை போக்கு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.

    #2) கதாநாயகனுக்கு எழுந்துள்ள கேள்வி அவனது காலத்தில் அவனுக்கு எழுந்திருக்குமா என்று தெரியவில்லை. கடவுள் என்ற ஒற்றை வடிவம், கருத்தாக்கம் குறித்து வருகிறது கதாநாயகனது சமூகத்தில் அப்படியொன்று இருந்திருக்காது.

    #3) இறப்புக்கு பிந்தைய உலகம் என்பது குறித்த கேள்வி கதை நடைபெறும் காலகட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இறப்பு என்பதை இயல்பாகவே எடுத்துக் கொண்டார்கள்.

    இந்த கேள்வி உற்சாகத்தை குறைக்கும் நோக்கத்தில் கேட்க்கப்படவில்லை. வித்தகன் எடுத்துக் கொண்டுள்ள விசயம் உண்மையிலேயே மிக முக்கியமாக இன்று பேசப்படவேண்டிய விசயமாக உள்ளது.

    இதனை ஆரம்பித்து வைத்துள்ள அவருக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் இந்த விசயத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வழங்கினால் குழப்பமின்றி இருப்பதுடன், வாசகர்களுக்கு மனித சமுதாயத்தின் வரலாறு குறித்து நல்ல அறிமுகமாகவும் இருக்கும்.

    முதல் மனித சமூகம் என்பது ஒரு அஞ்ஞான பொருள்முதல்வாதிகளாகவே இருந்தது.

    //ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு நான் அறிஞன் இல்லை. தத்துவ விசாரணை செய்யும் அளவுக்கு சிந்தனாவாதியும் இல்லை. கண்டது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சிந்தித்தது எல்லாவற்றின் கலவைதான் இந்தக் கட்டுரை.
    //

    கட்டுரை(கதை)யின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிஸ்கியை பார்த்தேன். ஆனால் நண்பரே வித்தகன், நீங்கள் இதே மாதிரி இருப்பதை எப்படி அனுமதிக்க முடியும். நீங்களும், நானும், இதனை படிக்கும் வாசகர்களும் சிறந்த சிந்தனாவாதிகளாக, தத்துவவாதிகளாக மாற வேண்டும் என்பதுதானே நமது அனைவரின் அவாவும். எனவேதான் இந்த கேள்விகள்.

    • //#3) இறப்புக்கு பிந்தைய உலகம் என்பது குறித்த கேள்வி கதை நடைபெறும் காலகட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. இறப்பு என்பதை இயல்பாகவே எடுத்துக் கொண்டார்கள்.//

      உண்மைதான். உணர்வு பூர்வமான உறவுகள் முளை விட்டிருக்கலாம். ஆனால் இறப்பின் நிரந்தரப் பிரிவை பரவலாக அலசி ஆராய்ந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தபோதும் இது குறித்த சந்தேகங்கள் அறிவாளிகளுக்குத் தோன்றியிருக்கலாம் என்றே நம்புகிறேன்.

      // #1) ஆணிய சிந்தனையில் எழுதப்பட்டுள்ளது போன்று உள்ளது. எ-கா:
      //தினசரி புணரப் புதுப் புதுப் பெண்களும் கிடைக்கும் – கிழவனுக்குக் கிடைப்பது போல.//

      கதையில் பெண்களை பண்டம் போல சித்தரிக்கும் சொத்துடைமை சமூக உணர்வு முன் நிற்கிறது. கதை நடைபெறும் காலத்தில் அவ்வாறன் சிந்தனை போக்கு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை. //

      கர்ப்பமடையும் காலத்தில் குகையோடு இருப்பதிலிருந்தே பெண்கள் ஆண்களால் அடக்கியாளத் தக்கவர்கள், உடல் வலுவில் குறைந்தவர்கள் என்பது ஆண்களுக்குத் தோன்றியிருக்கும். தவிர, வேட்டையாடாமலே கிடைக்கும் மான் கறி போலத்தான் உட்கார்ந்த இடத்தில் வந்து சேரும் பெண்ணும். யதார்த்தமாகப் பார்த்தால், போகப் பொருளாக இல்லாவிடிலும் உழைப்பில்லாத பரிசாகக் கருதிக் கொள்ளலாம்.

      //#2) கதாநாயகனுக்கு எழுந்துள்ள கேள்வி அவனது காலத்தில் அவனுக்கு எழுந்திருக்குமா என்று தெரியவில்லை. கடவுள் என்ற ஒற்றை வடிவம், கருத்தாக்கம் குறித்து வருகிறது கதாநாயகனது சமூகத்தில் அப்படியொன்று இருந்திருக்காது.//

      பணிவுடன் மறுக்கிறேன். இடி, மின்னல், கிரகணம், காட்டுத்தீயை வணங்க ஆரம்பித்த காலத்திலேயே (சுமார் கி.மு. 15,000 த்தில்) தன்னை மீறிய ஒன்று, தவறுகளை தண்டிக்கும் சக்தியாகவும் பணிபவர்களைக் காப்பாற்றும் துணையாகவும் இருப்பதாக மனிதன் நினைக்க ஆரம்பித்து இருப்பான். இந்தக் கருத்து ஆழமாக வேரூன்ற ஆரம்பித்த போதே, இந்த விளக்கத்தில் இருக்கும் ஓட்டைகளும் தெரிய ஆரம்பித்து இருக்கும்.

      //இந்த விசயத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வழங்கினால் குழப்பமின்றி இருப்பதுடன், வாசகர்களுக்கு மனித சமுதாயத்தின் வரலாறு குறித்து நல்ல அறிமுகமாகவும் இருக்கும்.//

      மிகப் பெரிய ஆராய்ச்சி தேவைப்படும் முயற்சி அது. என் தமிழ் எழுத்தும், சிந்தனையும் பண்பட்ட பிறகுதான் அதை ஆரம்பிக்கும் தன்னம்பிக்கை வருமென்று நினைக்கிறேன். அது மட்டுமல்ல, நுண்ணிய தகவல்களையும் நிகழ்வுகளையும் தவறின்றி பட்டவர்த்தனமாக சொல்வதன் மூலமே அத்தகைய படைப்பை உருவாக்க முடியும். அது எனது இப்போதைய சூழலில் சாத்தியமாகாதது. நான் புனைகதை வடிவத்தை தேர்ந்தெடுத்தது கதைக் களம் உருவாக்க அல்ல (I am not going to follow a plot driven narrative). எதை எப்படி எவ்வளவு தூரம் யார் மூலமாக சொல்லலாம் என்பதில் எனக்கு நானே சுதந்திரம் தந்து கொள்ளத்தான்.

      //நீங்களும், நானும், இதனை படிக்கும் வாசகர்களும் சிறந்த சிந்தனாவாதிகளாக, தத்துவவாதிகளாக மாற வேண்டும் என்பதுதானே நமது அனைவரின் அவாவும். எனவேதான் இந்த கேள்விகள்.//

      உங்கள் மறு மொழிக்கு நன்றி. மிகவும் கூர்மையான கேள்விகள் கேட்டுள்ளீர்கள். நான் திருவிளையாடல் படத்தில் வரும் நாகேஷ் போல. எனக்கு கேள்விகள் கேட்க மட்டும்தான் தெரியும். பதில்கள் மற்றவர்களிடம்தான் உள்ளன. மற்றபடி டாக்டர் ருத்ரன் அறிவுருத்தியிருப்பது போல “நிறையவும் விரிவாகவும்” எழுத முயற்சிக்கிறேன்.

      இந்த முறை சின்னக் குழந்தையிடம் பலப் பரீட்சை செய்து, வேண்டுமென்றே தோற்று, அவனது பலத்தைக் கண்டு வியந்து, குழந்தையை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது போல எல்லோருமே என்னை விட்டுப் பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது. அடுத்த வாரம் சேர்த்து வைத்துத் திட்டு விழலாம். இப்போதெ குடை வாங்கி விட்டென், துப்பல் மழையில் நனையாதிருக்க.

      • //கர்ப்பமடையும் காலத்தில் குகையோடு இருப்பதிலிருந்தே பெண்கள் ஆண்களால் அடக்கியாளத் தக்கவர்கள், உடல் வலுவில் குறைந்தவர்கள் என்பது ஆண்களுக்குத் தோன்றியிருக்கும்.//
        வித்தகனின் விடுகதை விவாதங்கள் தன்னை சிந்திக்கவும், எழுதவும் தூண்டுகிறது..இருப்பினும் எழுதத் தெரியவில்லை!…விரைவில் பதிவேன்….
        //அடுத்த வாரம் சேர்த்து வைத்துத் திட்டு விழலாம். இப்போதெ குடை வாங்கி விட்டென், துப்பல் மழையில் நனையாதிருக்க.//

  6. என்னுடைய கேவலமான நடவடிக்கைகளையும்., வக்கிரமான புத்தியையும் கைவிட்டுட்டு புதியதொரு மாற்றத்திற்க்காக‌ தன்னை தாயார்படுத்திக் கொள்ள தூண்டும் விதமாய் தங்களது பதிவு அமைந்துள்ளது.

    விரைந்து செயல்பட ஆக்கப்பூர்வமான பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்..

  7. வினவு பல புதிய படைப்பாளிகளை
    உருவாக்கியுள்ளது.
    வாழ்த்துக்கள் வினவுக்கும் வித்தகனுக்கும்.

    மணியடிப்பவர்களும் அறிவியல் பேசுகிறார்கள்
    அய்யோ.. அய்யோ

  8. தொடக்கமே அருமை….
    தொடர்ந்து எழுதுங்கள் இது மக்கள் மத்தியில் வெகுவாக பரவ வேண்டிய, பரவக்கூடிய நூலாக வெளிவர வேண்டும்…

  9. அன்று…
    வால்காவில் இருந்து கங்கை வரை..
    இன்று…
    வினவில் இருந்து வித்தகன் வரை…

    வாழ்த்துக்கள் வித்தகன் அவர்களே, உங்களைப்போன்று பலரும் மனித சிந்தனையின் இருண்ட பகுதிகளை ஒளிரூட்ட முன் வரவேண்டும்…

    தொடரின் சுருக்கம் கருதி சில விடயங்களை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டு எழுதியிருப்பது போல தெரிகிறது… கட்டுரையின் ஆரம்பம் அருமை இது எந்த திசையில் இனி பயணிக்க போகிறது என்பதை அறிய, அடுத்த பாகங்களுக்காக காத்து இருக்கிறோம்..

  10. அனைவரையும் அரவணைக்கும் வினவின் பணி பாராட்டுக்குரியது. இது தான் பல்லாயிரம் பேர்களிடம் வினவை கொண்டு சென்றது.
    மிகச்சிறப்பான நடை,

    வாழ்த்துக்கள் வித்தகன் தொடருங்கள்…….. முதல் முதல்லா ஆரம்பிச்சு இருக்குறதால இன்னைக்கு எந்த கேள்வியும் இல்லை.அப்புறம் வட்டியும் முதலுமா உங்ககிட்ட இருந்து தகவல்களை கறந்துக்குறோம்.

    கலகம்

  11. முதலில் வினவு தளத்திற்கு வாழ்த்துக்கள் . உங்களுடைய தளத்தை தொடர்ந்து படிக்க முடியவில்லை எனினும் நேரம் கிடைக்கும் போது படித்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய குழு முயற்சியால் இன்று ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறீர்கள்.

    வித்தகன் அவர்கள் எழுதும் இந்த தொடர் கட்டுரையின் முதல் பகுதி கற்பனை கதையாக இருப்பதால் இதைப்பற்றி எந்த ஒரு கருத்தையும் இங்கு நாம் சொல்ல போவதில்லை. அவருடைய கட்டுரை பேசுபொருளை (குரங்கிலிருந்து பிறந்தவன் ) பற்றி பேசும்போது அவருக்கு நாம் அறிவியல் பூர்வமான மறுப்பை தக்க ஆதாரத்துடன் தருவேன். அவருடன் விவாதிக்க நான் ஆவலாகவே இருக்கிறேன்.

    • வாருங்கள் அத்திக்கடையான்,

      உங்கள் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை(!) எதிர்கொள்ள ஆயத்தமாகவே உள்ளோம்

      செங்கொடி

  12. மிகவும் தேவையான காலகட்டத்தில்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
    விரிவடைந்துவ்ரும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் ஆகியவற்றினால் சிக்கலில் இருக்கும் மக்கள், அதற்கு தீர்வாக கோயில்,மசூதி,சர்ச் என்று சுற்றிக்கொண்டிருக்கின்றனர். மீடியாக்கள் கூட புதிதுபுதிதாக சோதிடர்களையும், சாமியார்களையும் அறிமுகம் செய்கின்றன. இக்காலகட்டத்தில் நீங்கள் எழுதுவது பொருத்தமானதே

  13. //“அடப் போடா… இதெல்லாம் ஒரு கேள்வியா…. சூரியன் தொடர்ந்து இருந்துக் கிட்டே இருந்தா நாமெல்லாம் எப்பத் தூங்குறது? அதான் சாமி நம்ம மேல ஒரு பெரிய போர்வையப் போட்டு போர்த்தி விடுறாரு. இருட்டு வருது. நீ வேணுங்கிற

    அளவு தூங்கினதும் போர்வைய எடுத்திடறாரு. வெளிச்சம் வந்திடுது”//

    அந்த கிழவன் சொன்ன பதிலுக்கும், ரங்கநாதன் சிலையை கடல்ல போட்டதனால்தான் சுனாமி வந்ததுன்னு கத பண்ணுனவங்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்ல. மிகவும் விவாதவங்களை ஈர்கக்கூடிய தலைப்பில் எழுத ஆரம்பித்திருக்கும் வித்தகன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  14. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா இல்லை ஆதாம் ஏவாள் வளி வந்தானா என்பது இன்னும் நிருபிக்கப்படாமலேயே இருக்கிறது.. இத்தனை வருடங்களாக புத்தகங்களும் சொற்பொளிவுகளும் நம்மை மென்மேலும் குழப்பியதை தவிர தீர்வு தரவில்லை…

    ஆதாமுக்கு முந்தைய மனிதன் பாதிக்கு மேல் மிருகமாகத்தான் இருந்திருக்கிறான் கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்… கிரகங்கள் மோதியதில் இன்று நாம் கானும் பல்லாயிரகனக்கான ஆன்டுகளுக்கு முந்தைய பாறைகள் பூமியில் மேல் விழுந்ததில் டைனொசர்கள் ம்ற்றும் மிருக மனிதர்கள் இறந்து போனர்கள்… பூமியானது வெறுமையும் ஒழுங்கின்மையுமாயிருந்தது… கடவுள் மனிதனை படைத்தார்… இரண்டாயிரம் ஆன்டுகளுக்குப்பிறகு ஆபிரகாமை படைத்தார்… மீன்டும் இரண்டாயிரம் ஆன்டுகளுக்குப் பிறகு எசு… அல்லா போன்றவர்களை மனிதனை நெரிப்படுத்த படத்தார்… இன்றைய மனிதன் தோன்றி 6000 ஆன்டுகளுக்கு மேல் ஆகவில்லை என்பது எனக்கு போதிக்கப்பட்டது…

    எனது இந்த நம்பிக்கைக்கு நீங்களோ இல்லை வேறு ஒருவரோ நம்பத்தகுந்த விளக்கமளித்தால் குறங்கிலிருந்து பிறந்தவனைபற்றிய தொடறை தொடர்ந்து தொடற வசதியாக இருக்கும்…..

    • //மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா இல்லை ஆதாம் ஏவாள் வளி வந்தானா என்பது இன்னும் நிருபிக்கப்படாமலேயே இருக்கிறது.. இத்தனை வருடங்களாக புத்தகங்களும் சொற்பொளிவுகளும் நம்மை மென்மேலும் குழப்பியதை தவிர தீர்வு தரவில்லை…//

      உங்கள் குழப்பங்களையெல்லாம் மொத்தமாக கேட்டு விடுங்கள். அடுத்த பாகம் எழுத உதவியாக இருக்கும்.

    • மனிதன் பரிணாம வளர்ச்சியின் மூலம் குரங்கிலிருந்துதான் வந்தான் என்பது டார்வினால் நிருபிக்கப்பட்ட ஒன்று. ஆதாம் ஏவாள் வழி வந்தவன் என்ற கருத்துதான் நிருபிக்கப்படாதது.

  15. வீத்தகன்,

    வாழ்த்துக்கள். மனிதன் தான் கடவுளை உருவாக்கினான் என்பது என் கருத்து. நீங்க்ள் என்ன சொல்கிறீர்கள் என அறிய ஆவலாக உள்ளேன்.

  16. //கெட்டவன் நடந்து கொள்வது தவறென்றால் அவன் ஏன் கடவுளால் படைக்கப் படுகிறான்?
    கெட்டதே நடக்காமல் கடவுளால் தடுக்க முடியாதா?
    முடியாதென்றால் அவர் எல்லாம் வல்லவர் இல்லையே!
    கெட்டதைத் தடுக்க முடிந்தும் தடுக்காமல் இருக்கிறாரா?
    அப்போது அவரும் கெட்டவர் ஆகி விடுகிறாரே!
    அவரால் தடுக்க முடியும், தடுக்க விருப்பமும் உள்ளது என்றால் ஏன் கெட்டது நடக்கிறது?
    அல்லது கெட்டதை அவரால் தடுக்கவும் முடியாது, அவருக்கு அதைத் தடுக்கும் விருப்பமும் இல்லை என்றால் அவர் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன?//

    12000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித சமூகம் இயற்கையின் நீட்சியாக வாழந்து கொண்டிருந்த காலத்தில் அந்த கதாநாயகன் மனதில் இத்தகைய காரண காரிய பகுத்தறிவுபூர்வமான எண்ணங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை. வேறு ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னால் அதாவது அப்போது உள்ள மனிதர்கள் தங்கள கை விரல்களை வைத்துத்தான் எண்ணிக்கையை புரிந்திருப்பார்களே அன்றி இலட்சம்,ஆயிரம் முதலான நேரிட்டு உணரமுடியாத அரூபமான எண்ணிக்கைகளை தெரிந்திருக்க முடியாது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கதாநாயகன் நிலையான விவசாயம் செய்த காலத்தில் வேண்டுமானால் அப்படி சிந்தித்திருக்க முடியும். புராதான கால மனித வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும் சமூக நடவடிக்கைகள் ஏதுமில்லை. விலங்குகளை விட சற்று முன்ன்றிய விலங்காகத்தான் மனித சமூகம் இருந்த்து.

    புராதான காலத்தில் இருந்து மனிதனிடம் மந்திரம், கலை, அறிவியல், மொழி, பின்னர் மதம் முதலானவையெல்லாம் எப்படி அவன் சமூக நடவடிக்களிலிருந்து தோன்றியது என்பதை மிக அழகான நூலாக இங்கிலாந்து மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் விளக்கியிருக்கிறார். நூலின் பெயர் “மனித சாரம்”, விடியல் பதிப்பக வெளியீடு. இது கீழைக்காற்று, நியு புக்லேண்ட் கடைகளில் கிடைக்கும். இந்த புத்தகம் உங்கள் தொடருக்கு மிகுந்த பயனளிக்கும். படித்துப் பாருங்கள். ஆங்கிலத்தில் இந்நூலின் பெயர்

    HUMAN ESSENCE.

    இவை உங்கள் தொடர்பற்றிய மெல்லிய விமரிசனங்களே. இதனால் நீங்கள் குழப்பமோ, சோர்வோ அடைய வேண்டாம். நாத்திக பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அறிவியலை நூல் பிடித்து பார்த்து எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் சமூக ஆய்வு நோக்கில் எழுதப்படும் போது அதன் வீரியம் அதிகமாவதோடு, வாசகரை அது இன்னும் பண்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கும். நன்றி

  17. நான் Human Essence படித்ததில்லை. கண்டிப்பாகப் படிக்கிறேன்.

    ஆனால் Tobias Dantzig எழுதிய The Language of Science படித்திருக்கிறேன். எண்ணிக்கை, எண்கள் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் (உதா: மூன்று விரல்களும், மூன்று பறவைகளும், மூன்று கற்களும் சம எண்ணிக்கை உடையவை) நாயை வீட்டு விலங்காக்கும் முன்பே மனிதனுக்குப் புரிபட்டுவிட்டது என்று சொல்கிறார். இடது பெருமூளைச் சிந்தனையின் அடிப்படையில் வரும் கணிதம், மொழிக் கட்டுமானம் (வார்த்தைத் தேர்வு அல்ல) போன்றவற்றின் நீட்சிதான் பகுத்தறிவு என்பது என் புரிதல். இந்த இடத்தில் நான் பகுத்தறிவென்று analytical ability யை மொத்தமாகவே குறிக்கிறேன். எனவே பரிணாம வளர்ச்சியில் பகுத்தறிவென்பது, கடவுள் மறுப்பையும் சேர்த்து, நாம் வழமையாகக் கருதும் காலத்திற்கு – ஒருவேளை கி.மு.6000 என்று நீங்கள் நினைக்கிறீர்களா? – முன்பே வித்திடப் பட்டிருக்கலாம்.

    அதோடு கி மு 10000 என்பது முதல் முதலாக சமூகக் கூட்டங்கள் அமைக்கப் பட்ட காலமென்று கருதப் படுகிறது. முதல் சமூகக் கூட்டத்தின் ஒன்றின் பெயர் “ஊர்”. இதை விடவும் கூட பழைய “ஊர்”களின் ஆதாரம் கிடைத்திருப்பதாக நிரூபிக்கப் படாத தகவல்கள் உலாவுகின்றன. என் கருத்து என்னவென்றால் இறை வழிபாடும், சமூக அமைப்பும், மொழிக்கட்டுமானமும், எண் கணிதமும் புழங்க ஆரம்பிக்கும் போதே பிறப்பு, இறப்பு, இயற்கை, கடவுள் சம்பந்தப் பட்ட கேள்விகள் தோன்றியிருக்கலாம் என்பதே. இது தவறாகவும் இருக்கலாம். முதல் பகுத்தறிவாளான் யாரென்று திட்டவட்டமாக வரையறுக்க முடியாவிட்டாலும் அவன் எப்போது உருவாகியிருப்பான் என்பது குறித்து படித்ததை யாரேனும் சுட்டிக் காட்டினால் அல்லது எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    • ஒரு சிறு விளக்கம்

      “எண் கணிதமும் புழங்க ஆரம்பிக்கும் போதே” என்று நான் குறிப்பிட்டிருப்பது அக்கால வாழ்வின் அன்றாடத் தேவைகளில் கணிதத்தின் பங்கைத்தான். கையிலுள்ள ஒரு ஈட்டியை ஒரு புலியின் மேல்தான் எறிய முடியும். இரண்டு புலிகள் எதிர் வரும் கணத்தில் ஓடிவிடுவது நல்லது என்பது போல வாழவா சாவா என நிர்ணயிக்கும் முக்கியமான முடிவுகளுக்கான கணிதத்தின் பயன்பாடைத்தான் குறிக்கிறேன்.

  18. //பிறப்பு, இறப்பு, இயற்கை, கடவுள் சம்பந்தப் பட்ட கேள்விகள் தோன்றியிருக்கலாம் என்பதே. இது தவறாகவும் இருக்கலாம்.//

    பிறப்பு, இறப்பு குறித்த கேள்விகள் தனிச் சொத்துடமைக்கு பிற்பாடே தோன்றியிருக்கும். பார்ப்பன வேதங்கள் பத்தில் கடைசிப் பகுதிகளில்தான் பிறப்பு ஆன்மா குறித்த விவாதங்கள் வருகின்றன. இவை இந்தியாவில் அவர்கள் நுழைந்த பிற்பாடு, தமது நாடோடி சமூக வாழ்வை விட்டொழித்த பிற்பாடு உருவான கருத்தாக்கங்கள் ஆகும்.

  19. கடவுள் என்கிற விசயத்தில் தனக்கு மேலான பல இயற்கை சக்திகளை தனக்கு சாதகமாக செயல்படச் செய்தல் என்கிற அளவிலேதான் புராதான சமூகங்கள் அணுகியிருக்கும். சுத்தமான பயன்பாட்டு கண்ணோட்டம். என்னை துன்புறுத்தாதே, உணவு கொடு, மழையே வா, சரிசமமாக வேட்டைப் பொருளை பங்கிடும் ஆற்றலை கொடு என்பது போல. (இன்றைக்கு இருப்பது போல போதையூட்டும் நுகர்வு அடிப்படையிலான ஆன்மீக பயன்பாட்டு கண்ணோட்டம் அல்ல).

    இதனை மழை வருவதற்கும், விலங்குகளை விரட்டுவதற்கும் அந்த கால மனிதன் பயன்படுத்திய ‘போலச் செய்தல்’ போன்ற நடைமுறைகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

    இன்றைக்கு கடவுள் என்று சொல்லுகிற கருத்துரு, பிறப்புக்கு பிந்தைய வாழ்வு, ஆன்மா முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது. எனவே கடவுள் மறுப்பு என்கிற ஒற்றை கருத்தாக்கம் அந்த கால மனிதனுக்கும், ஆன்மா குறித்து கேள்விகள், விவாதங்கள் உருவான தனிச்சொத்து காலத்திற்க்கும் ஒரே மாதிரி பொருந்தாது. இதனை குறிக்கும் முகமாகத்தான் எனது பின்னூட்டத்தில் அஞ்ஞான பொருள்முதல்வாதியாக ஆதி கால மனிதனை குறிப்பிட்டேன்.

    அவனது (சரியாகச் சொன்னால் அவர்களது) கேள்விகள் அனைத்துமே அவனது வாழ்க்கைப் போராட்டத்திலிருந்துதான் உருவாகியிருக்கும் என்றே கருதுகிறேன்.

    தொடர்ந்து எழுதுங்கள். விவாதங்களில் மாற்றுக் கருத்துக்கள் வருவதைக் கொண்டு தேவையற்ற மனக்குழப்பத்திற்க்கு ஆளாகி எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள். ஒரு பக்கம் விவாதம் செல்லட்டும் இன்னொரு பக்கம் தொடர்ந்து எழுதுங்கள்.

  20. சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் வினவிற்கு முதலில் நன்றிகள்.

    உற்சாகமாய் எழுத துவங்கியிருக்கும் வித்தகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    சில ஆலோசனைகள் :

    எழுதும் பொழுது ‘அறிவாளிகளை’ மனதில் கொண்டு எழுதாதீர்கள். பிறகு, எழுதுவது ஆய்வுக்கட்டுரையாக மாறிவிடும்.

    எப்பொழுதும் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கும் என்னைப் போன்ற எளிய பாமரர்களை மனதில் கொண்டு எழுதுங்கள்.

    துவக்கத்தில் சில பிழைகள் கூட வரலாம். தொடர்ச்சியான தேடலில், பிறர் எழுப்பும் கேள்விகளில் பிழைகளை சரி செய்து விடலாம்.

    துவக்கத்திலிருந்தே சரியாய் எழுதிவிட வேண்டும். சரியாய் பேசிவிட வேண்டும், சரியாய் செய்திடல் வேண்டும் என நினைத்து நினைத்து எழுதாமல், பேசாமல், செய்யாமல் போனவர்கள் நம் நாட்டில் அதிகம்.

    வாழ்த்துக்களுடன்

    குருத்து

    • //எழுதும் பொழுது ‘அறிவாளிகளை’ மனதில் கொண்டு எழுதாதீர்கள். பிறகு, எழுதுவது ஆய்வுக்கட்டுரையாக மாறிவிடும்.//

      கண்டிப்பாக மாட்டேன். அந்த அளவிற்கு நான் அறிவாளி இல்லை என்பதே காரணம். இப்போதே பாருங்கள் “பெல்லுக்கு பெல்லு கட்டுறவன்” எழுதியிருப்பது எவ்வளவு சுவாரசியமான கேள்விகளை ஆரம்பித்து வைக்கிறது என்று.

      //எப்பொழுதும் கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கும் என்னைப் போன்ற எளிய பாமரர்களை மனதில் கொண்டு எழுதுங்கள். //

      இந்தத் தொடரை கிட்டத்தட்ட ஒரு கலந்துரையாடலாகத்தான் நான் பார்க்கிறேன். சும்மா நீங்களே பாமரன் கீமரன்னெல்லாம் சொல்லி நமக்குள்ள திரை போட்டிடாதீங்க.

  21. ////கெட்டவன் நடந்து கொள்வது தவறென்றால் அவன் ஏன் கடவுளால் படைக்கப் படுகிறான்?
    கெட்டதே நடக்காமல் கடவுளால் தடுக்க முடியாதா?
    முடியாதென்றால் அவர் எல்லாம் வல்லவர் இல்லையே!
    கெட்டதைத் தடுக்க முடிந்தும் தடுக்காமல் இருக்கிறாரா?//

    //இடது பெருமூளைச் சிந்தனையின் அடிப்படையில் வரும் கணிதம், மொழிக் கட்டுமானம் (வார்த்தைத் தேர்வு அல்ல) போன்றவற்றின் நீட்சிதான் பகுத்தறிவு என்பது என் புரிதல். இந்த இடத்தில் நான் பகுத்தறிவென்று analytical ability யை மொத்தமாகவே குறிக்கிறேன். எனவே பரிணாம வளர்ச்சியில் பகுத்தறிவென்பது, கடவுள் மறுப்பையும் சேர்த்து, நாம் வழமையாகக் கருதும் காலத்திற்கு – ஒருவேளை கி.மு.6000 என்று நீங்கள் நினைக்கிறீர்களா? – முன்பே வித்திடப் பட்டிருக்கலாம்.//

    அன்றைய மனிதன் பல சக்திகளை வணங்கினான். ஒற்றை கடவுளை அல்ல. நல்லது கெட்டதுகளைப் பொருத்தவரை அந்தந்த பிரச்சினைக்கான சக்தி, தெய்வம் கோபம் கொண்டுள்ளது அல்லது மகிழ்ச்சியாக உள்ளது என்ற அடிப்படையிலேதான் அனுகினான். எல்லாம் வல்லவர் என்று ஒரு கருத்து உருவாகியிருக்குமா என்று தெரியவில்லை. எனவே, கடவுள் என்ற ஒன்றே இல்லாத காலத்தில் மறுப்பு என்பது உருவாகியிருக்காது. பொதுவாக மூடநம்பிக்கைகள் இருந்திருக்கும், பல தெய்வ சடங்குகள் இருந்திருக்கும்.

    மனிதனிடம் உருவான பகுத்தறிவு என்பது அறிவியல் கண்டுபிடிப்புகள், மூடநம்பிக்கைகளை மீறி சிந்தித்து புதிய விசயங்களை உருவாக்குதல் போன்றவற்றில் வெளிப்பட்டிருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.

    • கருத்துக்களுக்கு மிக்க நன்றி. அடுத்த பாகத்தை முடித்து வினவிற்கு அனுப்பும் வேலை நடந்து வருகிறது. தொடரை நிறுத்தும் எண்ணம் எதுவும் வரவில்லை.

  22. //இந்த விசயத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து வழங்கினால் குழப்பமின்றி இருப்பதுடன், வாசகர்களுக்கு மனித சமுதாயத்தின் வரலாறு குறித்து நல்ல அறிமுகமாகவும் இருக்கும்.//

    மிகப் பெரிய ஆராய்ச்சி தேவைப்படும் முயற்சி அது. என் தமிழ் எழுத்தும், சிந்தனையும் பண்பட்ட பிறகுதான் அதை ஆரம்பிக்கும் தன்னம்பிக்கை வருமென்று நினைக்கிறேன். // ராகுல் சாங்கிருத்தியரின் “மனித சமுதாயம்” புத்தகம் இப்படிப்பட்ட ஒரு மனித சமூக வளர்ச்சிப் பற்றிய மற்றொரு புத்தகமாகும். ஜார்ஜ் தாம்சனின் “மனித சாரம்” மற்றும் Tobias Dantzig எழுதிய The Language of Science பற்றி அறிமுகப்படுத்திய தோழர்களுக்கு நன்றி.

  23. //கருத்துக்களுக்கு மிக்க நன்றி. அடுத்த பாகத்தை முடித்து வினவிற்கு அனுப்பும் வேலை நடந்து வருகிறது. தொடரை நிறுத்தும் எண்ணம் எதுவும் வரவில்லை.//

    ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இந்த கட்டுரைத் தொடரை மின் அஞ்சல் தொடராக அனுப்பி வருகிறேன்.

    • கட்டுரையின் நோக்கம் சிறப்பானது ஆனால் ராகுல்ஜியை ஞாபகபடுத்துகிறது
      இதை தவிர்த்து நீங்கள் எழுத விரும்பும் சாரத்தை உங்களுக்கான நடையில்
      எழுத முயற்சியுங்கள், அப்போதுதான் இணையத்தை தாண்டி செல்ல வாய்ப்பிருக்கிறது.

      • அப்படியா? நான் வால்கா முதல் கங்கை வரை படித்ததில்லை. Reference காகப் பார்க்கலாம் என்று இருந்தேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்தத் தொடர் முடியும் வரை படிக்காமல் இருப்பது நல்லதோ என்று தோன்றுகிறது. என் தொழில் ஆங்கிலத்தில் எழுதி சம்பாதிப்பது. எனவே ஆங்கில சிந்தனையின் தமிழ் மொழி பெயர்ப்பு உங்களுக்கு “ஒரு மாதிரி” தோன்றலாம். தானாகவே அடுத்த அத்தியாயத்தில் என் நடை வெளிவரும், அல்லது எனக்கும் உங்களுக்கும் பழகிவிடும் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன், செந்தமிழும் கீ போர்டு பழக்கம் தானே…

  24. One of the 16 pillars of the almighty is Adharma.
    So the so called good person & bad person are relative words. Almighty is equal to each and every living and non-living entity.

    Anyways I will also read ur bullshits and comment on it(If at all I get time.)

  25. matham adipadaiel than manitha samuthayam uruvanathu enra thavarana gannotathil erunthu ?

    manithanudaiya poratathin. adipadaielthan samugam uruvanathu. enrue ek katturai unarthum.

    raguljien (valgavilerunthu gangaivairai ) navalaipola sirapadaiyum.

  26. குரங்கிலிருந்து பிறந்தவன் என்ற தலைப்பு குறித்து ஒரு விளக்கம்.

    குரங்கிலிருந்து பிறந்தவன் என்பது டார்வினை கேலி செய்வதற்காக அன்றிருந்த மதவாதிகளும், எதிர்ப்பாளர்களும் கூறியது. உண்மையில் குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையிலிருந்து வந்தவர்கள் என்பதே சரியானது.

    தோழமையுடன்
    செங்கொடி

  27. அரசியலிலும் சினிமாவிலும் மட்டும் வாரிசுகள்தான் அதிக இடம் பிடிக்கிறார்கள் என்று இனி யாரும் புலம்பாதீர்கள் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் வித்தகன் .கிழவனின் எண்ணற்ற பிள்ளைகளில் ஒருவன் இப்போதே கதை சொல்ல தயாராகி வருகிறான் என்று .அதனால் இந்த வழக்கம் ௧௨௦௦௦ வருடகளுக்கு முன்பே இருந்துள்ளது .

  28. சத்தியத்தை அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். எல்லாம் வல்ல கடவுள் உங்களுக்கு அருள் புரிவாராக.

  29. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது அறிவியலுக்கு முரணானது. அதற்கான ஆதாரம் இல்லை. நடந்தது இல்லை. நடப்பதும் இல்லை. நடக்க போவதும் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க