privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்!

தனியார்மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்!

-

தனியார் மயத்தின் தோல்வி: விமான முதலாளிகளின் வேலை நிறுத்தம்! -

முதலாளிகள் வேலை நிறுத்தம்! இப்படி ஒரு சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? முதலாளிகள் எனப்படுவோர் ஆட்குறைப்பு செய்வார்கள், ஆலைமூடல் செய்வார்கள், கேள்விப்பட்டிருக்கிறோம். வேலை நிறுத்தம்? இப்படி ஒன்றை இதுவரை நாம் கேள்விப்பட்டதில்லை.ஊதியம் போதவில்லை என்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள், பார்த்திருக்கிறோம். இலாபம் போதவில்லை என்று வேலை நிறுத்தம் செய்கிறார்கள் முதலாளிகள்.

வேலை செய்பவன்தானே அதை நிறுத்த முடியும்? வேலையே செய்யாத முதலாளி எதை நிறுத்த முடியும்?” என்று தொழிலாளிகள் கேட்கக் கூடும். காசோலையில் கையெழுத்து போடுவது, பங்குச் சந்தையில் சூதாடுவது, அதிகாரிகள் மந்திரிகளுக்கு பார்ட்டி வைத்து குளிப்பாட்டுவது போன்ற வேலைகளை, ‘வேலைகள்என்ற கணக்கில் சேர்க்க நாம் மறுக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் குறுக்கு நெடுக்காகப் பறந்து இப்படியான வேலைகளை முதலாளிகள் செய்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது.

தொழிலாளிகளுடைய வேலை நிறுத்தங்களால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைகின்றது என்றும், நாடு வல்லரசாவது தள்ளிப்போகின்றது என்றும் கூறி வேலை நிறுத்தங்களைத் தடை செய்யப் பல சட்டங்களை இயற்றியிருக்கிறது அரசு. அத்தியாவசிய சேவைகளில் வேலை நிறுத்தம் செய்வதைத் தடுக்க எஸ்மா என்றொரு சட்டம் நிரந்தரமாகவே உள்ளது. ஆனால் முதலாளிகளின் வேலை நிறுத்தத்தைத் தடை செய்ய சட்டம் எதுவும் இல்லை.

சரி, விசயத்துக்கு வருவோம். ஆகஸ்டு 18 ஆம் தேதியன்று இந்தியாவில் உள்ள தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறவில்லையென்றால், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அந்த நிறுவனங்களின் முதலாளிகள் ஆகஸ்டு மாதத் துவக்கத்தில் அறிவித்தனர். கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ், கோ ஏர், ஸ்பைஸ் ஜெட், ஏர் டெக்கான், பாராமவுண்ட் ஏர்வேஸ், இண்டிகோ, ஜெட் லைட் போன்ற தனியார் விமான கம்பெனி முதலாளிகளின் தொழில் சங்கம்இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றது.இந்தத் தனியார் விமான கம்பெனிகள்தான் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 80% ஐ இன்று கட்டுப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாளிகளின் கோரிக்கைகள் என்ன? விமானத்துக்கான பெட்ரோலின் விலையைப் பாதியாகக் குறைக்க வேண்டும். விமான நிலையங்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். நட்டத்தில் நடக்கும் தங்களது கம்பெனிகளைக் கைதூக்கி விட அரசாங்கம் நிதி உதவியும் செய்ய வேண்டும். இல்லையென்றால் வேலைநிறுத்தம்.தனியார் விமானங்கள் பறக்காவிட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அரசாங்கத்துக்கும், பயணிகளுக்கும் நாங்கள் புரிய வைப்போம்என்றார் கிங் பிஷர் விமான கம்பெனியின் முதலாளியும் பிரபல சாராய ஆலை அதிபருமான விஜய் மல்லையா.

சோற்றுக்கில்லாத தொழிலாளியைக் காட்டிலும் ஆத்திரம் கொண்டு சீறுகின்றார் முதலாளி மல்லையா. இந்த ஆண்டின் துவக்கம் முதலே பெரும்பான்மையான விமான கம்பெனிகள் நட்டத்தில் நடக்கின்றனவாம். 2009 இல் மட்டும் 10,000 கோடி ரூபாய் நட்டம் ஏற்படும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களாம். அதனால்தான் இந்தக் கோபம். கட்டுப்படியாகவில்லையென்றால் கம்பெனியை மூடிவிட்டுப் போக வேண்டியதுதானேஎன்று நீங்கள் எதார்த்தமாகக் கேட்கலாம்.

அதெல்லாம் சின்ன முதலாளிகளுக்குத்தான் பொருந்தும். நம் ஊர் கடை வீதியை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு மாதமும் நான்கைந்து கடைகள் திவாலாகி இழுத்து மூடப்படுகின்றன. அப்புறம் அந்த இடத்தில் புதிதாக யாராவது கடை திறக்கின்றார்கள். பிறகு நட்டப்பட்டு மூடுகிறார்கள். எந்தக் கடைக்காரரும் என்னைக் கைதூக்கி விடுஎன்று அரசாங்கத்திடம் கேட்பதுமில்லை. அரசாங்கம் அப்படி யாரையும் கைதூக்கி விடுவதும் இல்லை. போட்டியைச் சமாளிக்க முடியவில்லை என்றோ, எதிர்பார்த்த அளவு வியாபாரம் ஓடவில்லை என்றோ, வாஸ்து சரியில்லை என்றோ ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி திவாலான கடைக்காரர்கள் தமக்குத் தாமே சமாதானமடைந்து கொள்கிறார்கள்; அவ்வளவுதான். இதெல்லாம் சின்ன முதலாளிகளின் தலையெழுத்து. ஆனால் நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் பெரிய்ய முதலாளிகளுக்கு இந்த நியாயம் பொருந்துமா என்ன?

தொழிலாளிகளை எடுத்துக் கொள்ளுங்களேன். சம்பள உயர்வு கேட்டால், “இவ்வளவுதான் சம்பளம். இதற்கு மேல் கொடுக்க முடியாது. கட்டுப்படியாகாவிட்டால் வேலையை விட்டு நின்று கொள்என்பதுதான் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் சொல்லும் பதில். தொழிற்சங்கம், குறைந்தபட்ச ஊதியம், வேலை நிறுத்த உரிமை போன்றவையெல்லாம் இருப்பதனால்தான் நம்முடைய நாட்டில் தொழில் வளர்ச்சி தாமதப்படுவதாகவும், இதையெல்லாம் ஒழித்துக் கட்டும் வகையில் புதிய தொழிலாளர் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்என்றும் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து திருவாய் மலர்ந்து கொண்டிருக்கிறார். தொழிலாளிக்குப் பொருந்தும் இந்த நீதியெல்லாம் முதலாளிக்குப் பொருந்தாதா என்று நீங்கள் கேட்கலாம். முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஒரே நீதியா, அதெப்படி?

கிங் பிஷர் விமான கம்பெனியும் மற்ற கம்பெனிகளும் பைலட்டுகள் முதல் பணியாட்கள் வரை தனது ஊழியர்கள் அனைவரின் சம்பளத்தையும் 20% அதிரடியாகக் குறைத்து விட்டன. ஜெட் ஏர்வேஸிலிருந்து தினந்தோறும் 50, 60 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள். தங்கள் விமானங்களுக்கு பெட்ரோல் போட்ட வகையில் கடந்த ஒரு ஆண்டாக இந்த விமான கம்பெனிகள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வைத்திருக்கும் கடன் 2225 கோடி ரூபாய். கடனுக்கு எண்ணெய் போட்டுப் போட்டு பணம் வராமல், “ஐயா, தவணை முறையிலாவது அடையுங்கள்என்று கேட்டு அதுவும் நடக்காமல், வேறு வழியே இல்லாமல் கடைசியாக இனிமேல் பணம் கொடுத்தால்தான் பெட்ரோல்என்று அறிவித்து விட்டன பொதுத்துறை நிறுவனங்கள். மல்லையாவின் கோபத்துக்கு இதுவும் ஒரு காரணம்.

விமானப் பெட்ரோலின் விலையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. விமானப் பெட்ரோலின் இன்றைய விலை என்ன தெரியுமா? லிட்டர் 36 ரூபாய். அதாவது இரு சக்கர வாகனங்களுக்கு நாம் போடும் பெட்ரோலின் விலையை விட மலிவு. பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், மண்ணெண்ணெய்க்கும், எரிவாயுக்கும் மானியம் கொடுத்தே அழிந்து போவதாக அழுது கொண்டிருக்கும் அரசு, விமான கம்பெனிகளுக்கு வழங்கியிருக்கும் மானியம்இது. நடப்பவனை விடப் பறப்பவனுக்கு அதிக மானியம் கொடுத்தால்தான் நாடு வேகமாக வல்லரசாகும் என்பது மன்மோகன் சிங் கொள்கை. முதலாளிகளுக்கோ இந்த மானியமும் போதாதாம். விமானப் பெட்ரோலின் விலையை 18 ரூபாயாகக் குறைக்க வேண்டுமாம்.

டீசல் விலை ஏறினால் உடனே பேருந்துக் கட்டணத்தை உயர்த்துகிறது அரசு. அதே போல விமான கட்டணத்தையும் முதலாளிகள் ஏற்றிக் கொள்ள வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம்.பறக்கிற விமானங்களில் 100 க்கு 40 சீட்டுகள் காலியாகக் கிடக்கின்றன. இந்த இலட்சணத்தில் டிக்கெட் விலையை ஏற்றினால் அப்புறம் எவன் விமானத்தில் ஏறுவான்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறார் ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயல்.

100 கிலோ தக்காளி வாங்கிக் கொண்டு வந்து கடை விரித்து, 40 கிலோ விற்காமல் அழுகிப் போனால் அந்த வியாபாரி அரசாங்கத்திடம் நிவாரணம் கேட்கிறாரா? வியாபாரம்னு வந்தா லாபமும் நட்டமும் சகஜம்தான் என்று அந்த நட்டத்தை அவர் சகித்துக் கொள்கிறார். இந்த ரூட்டில் டிக்கெட் ஏறவில்லை. வண்டி ஃபுல் ஆகவில்லை. எனவே டீசல் விலையைக் குறைக்க வேண்டும்என்று எந்த பஸ் முதலாளியாவது கேட்பதுண்டா? ஆனால் விமான கம்பெனி முதலாளிகள் இதைத்தான் கேட்கிறார்கள்.

இவர்கள் இஷ்டத்துக்கு விமானம் வாங்கிப் பறக்க விடுவார்களாம்; அந்த விமானங்களில் டிக்கெட் ஏற்றி ஃபுல்லாக்குவதற்கு, ‘டில்லி, மும்பய், கல்கத்தேய்..என்று முண்டாசு கட்டிக் கொண்டு அரசாங்கம் கூவ வேண்டுமாம். இல்லையென்றால், இவர்களுக்கு இலாபம் வருவதை உத்திரவாதம் செய்யும் வகையில், மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் மானியம் வழங்க வேண்டுமாம்.இலாபமோ, நட்டமோ அதற்கு நான் பொறுப்பு என்று ரிஸ்க்எடுத்து, முதல் போட்டுத் தொழில் நடத்துவதனால்தான் எங்களுக்குப் பெயர் – முதலாளிஎன்று தொழிலாளி வர்க்கத்திடம் தெனாவெட்டாகப் பேசுகிறதே முதலாளி வர்க்கம், அதன் உண்மையான முக விலாசம் இதுதான்.

தனியார் முதலாளிகளின் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு ஒரு பிளாக் மெயில் நடவடிக்கைஎன்று கூறி, இந்தப் பிரச்சினையின் பின்புலத்தை விளக்குகிறது ஏர் இந்தியா ஊழியர் சங்கம். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளை நடத்தி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மய தாராளமயக் கொள்கைகள் மூலம் படிப்படியாக முடக்கி விட்டது இந்திய அரசு. இன்றுஇந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளில் 82% ஐ பன்னாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கைப்பற்றி விட்டன. உள்நாட்டு விமான சேவையிலும் 80% ஐ தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. பயணிகள் வரத்து அதிகம் இல்லாத நகரங்களுக்கு தனியார் விமானங்கள் செல்வதில்லை. ஏர் இந்தியாதான் அத்தகைய நகரங்களுக்கு விமான சேவையை அளித்து வருகிறது.

இப்படி அரசாங்கத்தின் கொள்கைகளால் திட்டமிட்டே திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். நிறுவனத்தை இழுத்து மூடினால் அரசாங்கத்தின் யோக்கியதை அம்பலமாகி விடும் என்பதால், ஏர் இந்தியாவுக்கு கொஞ்சம் நிதி உதவி கொடுத்து கைதூக்கி விட முடிவு செய்திருக்கின்றது மன்மோகன் அரசு. இந்த நிதி உதவியைத் தடுத்து, ஏர் இந்தியாவை இழுத்து மூட வைப்பதன் மூலம், உள்நாட்டு விமான சேவையில் தங்களுடைய முழு ஏகபோகத்தை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதுதான் விமான கம்பெனி முதலாளிகள் அறிவித்திருக்கும் வேலை நிறுத்தத்தின் உண்மையான நோக்கம்என்கிறார்கள் ஏர் இந்தியா ஊழியர்கள்.

ஏர் இந்தியாவுக்கு நிதி உதவி செய்து கைதூக்கி விடும் அரசாங்கம், தனியார் விமான கம்பெனிகளை மட்டும் கைதூக்கி விட மறுப்பது ஏன்?” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஆத்திரமாகக் கேள்வி எழுப்பினார் கிங் பிஷர் விமான கம்பெனியின் முதலாளி விஜய் மல்லையா. உன் பெண்டாட்டிக்கு மட்டும் சேலை எடுத்துக் கொடுக்கிறாயே, என் பெண்டாட்டிக்கு ஏன் எடுத்துத் தரவில்லை?” என்பதைப் போன்ற கேள்வி இது.

ஐயா, அது அரசாங்க நிறுவனம். அதில் இலாபம் வரும்போது அரசாங்கத்துக்குப் போகின்றது. எனவேதான் நட்டம் வரும்போது அரசாங்கம் உதவி செய்கின்றது. உங்கள் விமான கம்பெனி என்பது உங்களுடைய தனிப்பட்ட சொத்து. அதை எதற்கு அரசாங்கம் கைதூக்கி விட வேண்டும்? நீங்கள் இலாபம் சம்பாதிக்கும் போது அரசாங்கத்திடமா கொடுக்கின்றீர்கள்?” என்று தொலைக்காட்சி பேட்டியாளர் எதிர்க்கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். எழுப்பவில்லை. எழுப்பவும் மாட்டார்கள்.

விமான கம்பெனி முதலாளிகளின் பிரச்சினையை அரசாங்கம் புரிந்து கொண்டிருக்கின்றது. இருந்தாலும், இதற்கு வேலை நிறுத்தம் தீர்வல்லஎன்றார் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல். முதலாளிகளின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, கிங் ஃபிஷர் விமான கம்பெனிக்கு மேலும் 9 புதிய வெளிநாட்டுத் தடங்களில் சேவையைத் தொடங்க அனுமதி வழங்கி, ஏர் இந்தியாவை காவு கொடுத்திருக்கின்றது மத்திய அரசு.

இது மட்டுமல்ல, பெட்ரோல் பில் கட்ட முடியாத கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் கடனும் கொடுத்திருக்கிறது பாரத ஸ்டேட் வங்கி. மற்ற முதலாளிகளுக்கு வேறு என்னென்ன திரைமறைவு உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது இதுவரை வெளிவரவில்லை.

இப்படிப்பட்ட இரத்தக்காவுகள் கொடுக்கப்பட்ட பிறகு, “பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமத்தைக் கணக்கில் கொண்டு வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்என்று மலையேறியிருக்கிறது விமான கம்பெனி முதலாளிகள் சங்கம்.

முதலாளிகளின் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு முதலாளி வர்க்கத்தின் உண்மையான முகத்தை அம்பலமாக்கியிருப்பது மட்டுமின்றி, தனியார்மயக் கொள்கை தோற்றுவிக்கக் கூடிய அபாயத்தையும் முன் அறிவித்திருக்கிறது. தங்களுக்கிடையிலான போட்டியில், கொள்ளை இலாபம் பார்க்க வேண்டுமென்ற வெறியில், தேவைக்கு அதிகமான விமானங்களை வாங்கிப் பறக்க விட்டது அவர்கள் குற்றம். அதனால் ஏற்பட்டு வரும் நட்டத்தை மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அரசாங்கம் ஈடுகட்ட வேண்டும் என்று கோருகின்றார்கள் முதலாளிகள். இலாபம் தனியுடைமை, நட்டம் பொதுவுடைமைஎன்பதுதான் முதலாளிகள் கூறும் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் முதல் ஏ.ஐ.ஜி இன்சூரன்சு, லே மான் பிரதர்ஸ், பாங்க் ஆப் அமெரிக்கா போன்ற திவாலான பன்னாட்டு கம்பெனிகளை அமெரிக்க அரசாங்கம் கைதூக்கி விட்டது. அதே மாதிரி நீயும் செய்என்று இந்திய அரசைக் கோருகிறார் மல்லையா.

இல்லையென்றால்? இல்லையென்றால் 80% விமான சேவையைக் கட்டுப்படுத்தும் தனியார் முதலாளிகள், நாட்டின் விமான போக்குவரத்தையே நிறுத்தி விடுவதாக மிரட்டுகின்றார்கள். 1992 இல் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் செய்த போது அதையே முகாந்திரமாக வைத்து, விமான சேவையில் தனியார் முதலாளிகளை நுழைத்தது இந்திய அரசு. ஆனால் இப்போது தனியார் முதலாளிகளின் இந்த வேலை நிறுத்த மிரட்டலுக்குப் பின்னரும், விமான சேவையை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று அரசோ, ஊடகங்களோ முணுமுணுக்கக் கூட இல்லை. எண்ணெய், எரிவாயு, மின்சாரம், அணுசக்தி, வங்கி, காப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்குவதில்தான் அரசு தீவிரம் காட்டுகின்றது. கேந்திரமான துறைகளை தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரை வார்ப்பதன் மூலம் இந்த வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு பிச்சுவாக் கத்திகளை விநியோகம் செய்கின்றது அரசு.

முதலாளிகளின் இந்த வேலை நிறுத்த அறிவிப்பில் தொழிலாளி வர்க்கம் கற்றுக் கொள்வதற்கும் ஒரு பாடம் இருக்கின்றது. பெட்ரோல் விலை ஏறினால் மண்ணெண்ணெயை ஊற்றி விமானத்தை ஓட்ட முடியாது. ஆனால் அரிசி விலை எறினால் ஒரு ரூபாய் அரிசிக்கு மாறிக் கொண்டு அதே உழைப்பை முதலாளிகளுக்கு வழங்குகிறார்கள் தொழிலாளர்கள். அரிசி விலையைக் குறை, பேருந்து கட்டணத்தைக் குறை, வீட்டு வாடகையைக் கட்டுப்படுத்துஎன்று தொழிற்சங்கங்கள் கேட்பதில்லை. விலைவாசி உயர்வால் கடன் பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மானியம் வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேட்க நினைத்ததும் இல்லை. இதோ, முதலாளிகள் கேட்கிறார்கள். தொழிலாளி வர்க்கத்துக்குத்தான் கேட்கத் தெரியவில்லை.

____________________________________________

புதிய கலாச்சாரம் ஆகஸ்டு  2009
____________________________________________